காலை எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் கழுவி, மனைவி தந்த சூடான காபியைப் பருகியபடி கம்ப்யூட்டரை ஆன் செய்து இன்டர்நெட்டுக்குள் நுழைகிறீர்கள். சூடான காபியை அருந்துகையில் பின்னணியில் உங்கள் மனைவி ஒலிக்க விட்டிருந்த வெங்கடேச சுப்ரபாதம் ஒலிக்க, ஒரு புகழ்பெற்ற திரட்டியினுள் நுழைகிறீர்கள். இன்று யாரெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள் என்று பார்க்கும் உங்களின் கண்களில் முதலில் படுகிறது அந்தச் சூழலுக்குப் பொருத்தமாக ஒரு ஆன்மீகப் பகிர்வு. யோகம் என்ற தலைப்பில் வீரட்டான யோகத்தைப் பற்றிச் சொல்லியிருப்பதை ரசித்துப் படிக்கிறீர்கள். கருத்திடுகிறீர்கள்.
தொடர்ந்து திரட்டியில் இன்று வேறு யாரெல்லாம் இன்று பதிவிட்டிருககிறார்கள் என்று பார்த்து இன்னொரு பதிவினுள் நுழைகிறீர்கள். ‘வவ்வால்ன்னு பேரை வெச்சுக்கிட்டிருககான். ஏன், ஆந்தை, கோட்டான்னுல்லாம் வெச்சுக்கப்படாதா’ என்று மனதினுள் கேலி செய்தபடியே நுழையும் நீங்கள் அணுஉலை பற்றிய விரிவான தகவல்களைப் படங்களுடன் அந்தத் தளத்தில் தந்திருப்பதைக் கண்டு அசந்து போகிறீர்கள். வேறென்ன எழுதியிருக்கிறார் இவர் என்று பார்க்க... சதுரங்க விளையாட்டைப் பற்றி நுணுக்கமாக, விளக்கமாக அவர் வழங்கியிருக்கும் பதிவைப் படிக்கிறீர்கள். ரசித்துக் கருத்திடுகிறீர்கள். ‘அடாடா... பெயரை வைத்தும். உருவத்தை வைத்தும் யாரையும் எடைபோடக் கூடாதுப்பா' என்று தலையில் குட்டிக் கொள்கிறீர்கள்.
இடையிடையே முகநூலில் நண்பர்கள் பகிர்வதற்குத் தவறாமல் லைக் இடுகிறீர்கள். அங்கே உங்கள் பகிர்வுக்கு வரும் கமெண்ட்டுகளுக்கு பதில் சொல்கிறீர்கள். இப்போது திரட்டியில் மீண்டும் பார்வையைப் பதிக்க தலைப்பைக் கண்டு ஃபைனான்ஸ் பற்றிய பகிர்வோ என்றெண்ணி உள்ளே நுழைகிறீர்கள். அது கிரிக்கெட் விளையாட்டு பற்றிய அருமையான அலசல் அடங்கிய கட்டுரையாக இருப்பதைப் படித்து ரசிக்கிறீர்கள். ‘இன்றைக்கு வெரைட்டிவாரியாகப் பதிவுகள் படிக்கக் கிடைக்கிறதே. இன்றென் அதிர்ஷ்டதினம் போலும்’ என்றொரு எண்ணம் உங்களின் மனதில் ஓடுகிறது. அந்தப் பகிர்வை ரசித்ததை கருத்தாக நீங்கள் எழுதும்போதே உங்கள் மனைவியின் குரல் குறுக்கிடுகிறது. ‘‘என்னங்க... கொஞ்சம் எதிர்த்த தெரு கடைக்குப் போய் கால்கிலோ சீனியும், ரவையும், கொஞ்சம் பச்சை மிளகாயும் வாங்கிட்டு வந்திடுங்களேன்..." எரிச்சலாக வருகிறது உங்களுக்கு, ‘கொஞ்ச நேரம் நிம்மதியா கம்ப்யூட்டர்ல உக்கார விடமாட்டாளே இவ...' என்று மனதினுள் முனகியபடி எழு முனைகையில், ‘‘நான் போய் வாங்கிட்டு வர்றேம்மா" என்று குறுக்கிடும் உங்கள் மகனை கன்னத்தில் தட்டி கடைக்கு அனுப்புகிறீர்கள். மீண்டும் வலை உலகினுள் நுழைந்து மேய முற்படுகிறீர்கள்.
‘ஊதாப்பூ இனி கண் சிமிட்டாது’ என்கிற தலைப்பே உங்களை இழுக்க, அதைக் ‘கிளிக்’குகிறீர்கள். சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை பற்றிய நினைவலைகளுடன் கூடிய அஞ்சலிக் கட்டுரையாக அது இருக்கக் காண்கிறீர்கள். ஒரு எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரைப் பற்றி உருகி எழுதியிருப்பதைப் படித்ததும் உங்களின் இதயமும் நெகிழ்கிறது. அதில் உங்களின் கருத்தையும் பதிவு செய்கிறீர்கள்.
‘‘என்னங்க..." என்று குரல் கேட்டு நிமிர்கிறீர்கள். அருகில் மீண்டும் வந்து நிற்கிறாள் உங்கள் மனைவி. ‘‘என்னம்மா" என்கிற உங்களிடம், ‘‘இன்னிக்கு என்ன டிபன் பண்ணட்டும்?" என்று கேட்கிறாள். ‘‘அஞ்சு நிமிஷம் கழிச்சுச் சொல்றேம்மா" என்க, அவள் உள்ளே போகிறாள். உடனே உங்களுக்கு யோசனை பளிச்சிட, திரட்டியில் சமையல் என்கிற தலைப்பைத் தேர்வு செய்து உள்நுழைகிறீர்கள். உங்களின கண்களில் படுகிறது ஸ்வர்ணா பகிர்ந்த ‘பலாமோஸ் மசாலா' என்கிற வித்தியாசமான சமையல் குறிப்பு. முழுவதும் படிக்கிறீர்கள். அந்தத் தளம் முழுமையும் சமையல் குறிப்புகளால் நிரம்பியிருப்பதை வியக்கிறீர்கள். பின் கருத்திட்டுவிட்டு ‘இப்போ இது வேண்டாம்' என்று மனதில் நினைத்தபடி அடுத்த பகிர்வினுள் நுழைகிறீர்கள். மேனகா பகிர்ந்த ‘நாண் + பிஸ்ஸா = நாணிஸ்ஸா' என்கிற தலைப்பே ஈர்க்கிறது. முழுவதும் படித்து முடித்தபின் ‘இது விடுமுறை தினத்தில் சுவைக்க வேண்டியது' என்று முடிவெடுக்கிறீர்கள். வேறு என்ன கிடைக்கிறது என்று தலைப்புகளை மேயும் உங்கள் பார்வையில் படுகிறது ‘எங்க வீட்டு சமையல்-ஸ்டஃபட் சப்பாத்தி' என்கிற தலைப்பு. உடன் உள் நுழைகிறீர்கள். கவிதா பகிர்ந்த அதை முழுவதும் படித்து முடித்ததும் ரசித்ததை கருத்திட்டு விட்டு, ‘இன்றைய டிபன் இதுதான்’ என்று முடிவெடுக்கிறீர்கள். உடனே அதை காப்பி செய்து பிரிண்ட் அவுட் எடுத்து மனைவியிடம் தருகிறீர்கள்.
அடுத்து என்ன படிக்கலாம் என்று யோசித்தபடி லிஸ்ட்டைப் பார்வையிடும் நீங்கள், காலில் ஏதோ பட்டது போன்ற உணர்வில் திரும்புகிறீர்கள். உங்கள் மகன்! ‘‘அப்பா... இதுல கையெழுத்துப் போட்டுத் தாங்க...’’ என்று நீட்டுகிறான். பார்க்கிறீர்கள். ராங்க் கார்ட்! ஆர்வமாய் முன்வந்து கடைக்குப் போய்வந்த மகனின் தந்திரத்தைப் பார்த்து, உங்கள் சிறுவயது ஞாபகம் வர புன்னகைக்கிறீர்கள். பேசாமல் கையெழுத்திட்டு விட்டு, ‘‘அடுத்த தடவை இம்ப்ரூவ் பண்ணிக்கணும். என்ன?" என்று கன்னத்தில் தட்டி அனுப்புகிறீர்கள். மீண்டும் மானிட்டரில் உங்கள் பார்வை பதிய ‘என்ன ஒரு வில்லத்தனம்?' என்கிற தலைப்பு நிச்சயம் ஏதோ நகைச்சுவைப் பகிர்வாக இருக்கும் என்று எண்ண வைக்கிறது. அதைத் திறந்து படிக்கிறீர்கள். நீஙகள் நினைத்தது போலவே உங்களை ஏமாற்றாமல் சிரிக்க வைக்கிறது பகிர்வு. ரசித்துச் சிரித்தபடியே உங்களின் கருத்தினை இட்டு சமூகக் கடமையையும் ஆற்றுகிறீர்கள்.
இப்போது தோளில் பலமான ஒரு தட்டல் எழவும் திடுக்கிட்டு நிமிர்கிறீர்கள். ‘‘என்னங்க... இதுக்குள்ள பூந்துட்டா உலகமே மறந்துடுமே... மணி எட்டரையாச்சு. இப்ப குளிக்கப் போனீங்கன்னாதான் டிபன் சாப்பிட்டு ஆபீஸ் புறப்பட சரியா இருக்கும். இன்னிக்கு எதும் லீவு போடற உத்தேசமா என்ன?" என்று முறைக்கிறாள். அதற்கு மேலும் அஙகிருந்தால் ஆபத்து என்று உங்களின் உள்மனம் அனுபவத்தின் காரணமாக எச்சரிக்க, ‘‘இதோ ரெடியாயிடறேம்மா..." என்றபடி கணினியை ஷட் டவுன் செய்கிறீர்கள். கணினித் திரை சிருஷ்டிக்கும் ஆனந்த உலகத்தைத் துறந்து, உங்களுக்காகக் காத்திருக்கும் வழக்கமான அன்றாட உலகத்தினுள் நுழைகிறீர்கள்.
சூப்பர் கணேஷ் சார்
ReplyDeleteபாராட்டிய முரளிக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅருமை சார்.. தொகுத்து வழங்கி டயர்டா இருக்கு.. அப்பால வர்றேன்.. ஹிஹிஹி..
ReplyDeleteதெம்பா நாலு கப் பூஸ்ட் குடிச்சுட்டு வாங்க ஆவி...! ஹா... ஹா... ஹா...!
Deleteமின்னல் டி.வியை எதிர்பார்த்து வந்தா இப்படி போங்காட்டம் ஆடிட்டிங்களே.... இருந்தாலும் உண்மையைச் சொன்னீங்க...பதிவுகளை பார்வைவிட்டுக்கொண்டே முக நூலிலும் லைக் இட்டுக்கொண்டு.... சாப்பாட்டுப் பதிவுகள் ரொம்ப பார்க்க மாட்டேன்..இருக்கற ஐட்டம்களை செய்து சாப்பிடவே நேரமில்லை இதுல இது வேறான்ன்னு...ஆனா பேரெல்லாம் படிக்கற ஆசையை தூண்டி விட்டுடுச்சு... ஆனாலும் உங்க ஆணாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்துட்டுத்தான் போவேன் அதென்ன கஷ்டப்பட்டு சமையல் செய்யறது பெண்கள், மெனு நீங்க கொடுப்பீங்களோ?.... நாளை சந்திப்போமா.... உங்க மின்னல் டி.வி தந்த எபெக்டு.....
ReplyDelete‘டிபன் இன்னிக்கு பண்ணலை, கேன்டீன்ல சாப்பிட்டுக்கங்க’ன்னு அவங்க சொன்னா பேசாம போறதும், ‘நீங்களே ஏதாச்சும் இன்னிக்குப் பண்ணிடுங்க’ன்னா மறுக்காம பண்றதையும் மறைச்சு, நெட்லயாவது ஆண்சிங்கமா பந்தாவா உலா வரலாம்னா இப்படிக் கேள்வி கேட்டு மானத்த வாஙகப் பாக்கறீங்களே எழில் மேம்! அவ்வ்வ்வ்! இருந்தாலும் மகிழ்வு தந்த உங்கள் வருகைக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteமின்னலு டி.வி காண்டி இப்புடிக்காலாம் சீரிலு போடுது...? பருவால்லபா... ஒம்பது வாட்டிதான் அட்டுவடேசுமண்டு போடுது... அல்லாமே செம்ம சோக்கா கீதுபா...
ReplyDeleteஅல்லாமே சோக்கா கீதுன்னு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப டாங்ஸுப்பா!
Deleteநன்றி
ReplyDeleteஉஙகளுக்கு நான் சொல்ல விரும்புவதும் அதுவே தோழி!
Deleteதங்களின் அறிமுகத்திற்கு நன்றி அய்யா1
ReplyDeleteமகிழ்வு தந்த உங்களின் வருகைக்கு மனம் நிறைய நன்றி!
Deleteகணினித் திரை சிருஷ்டிக்கும் ஆனந்த உலகத்தை காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteஆனந்த உலகத்தைக் கண்டு பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteஅருமை தொடர்கிறோம்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு உளம்கனிந்த நன்றி ரமணி ஸார்!
Deleteஅருமையான சித்தரிப்பு.தொடருங்கள்.
ReplyDeleteஊக்கப்படுத்தும் தங்கைக்கு உளம் கனிந்த நன்றி!
Delete//எரிச்சலாக வருகிறது உங்களுக்கு, ‘கொஞ்ச நேரம் நிம்மதியா கம்ப்யூட்டர்ல உக்கார விடமாட்டாளே இவ...' என்று மனதினுள் முனகியபடி //.................
ReplyDeleteஆமா....உங்களின் மேய்ச்சல் மைதானம்னுட்டு நீங்க(ஆண்கள்) தூங்கி எழுந்த உடனே நிம்மதியா கம்ப்யூட்டர்ல உட்கார்ந்துடுவீங்க... நாங்கல்லாம் வீடு,வேலை...ன்னு எல்லா பொறுப்பையும் சுமந்து இதுக்கு நடுவுல இணையபக்கமும் வந்து வாசிக்கிறதும், எழுதறதும் எவ்வளவு பெரிய விஷயமாக்கும்... அதுனால நீங்கதான் எங்களை நிம்மதியா விடனும்.... நாளையிலர்ந்து காபியிலர்ந்து லஞ்ச் கட்டி கொடுக்கிற வரை நீங்க(ஆண்கள்) செய்யுங்க ....
அதெல்லாம் அப்பப்ப செஞ்சுட்டுதான் இருக்கோம் உஸா மேடம்...! நீங்கல்லாம் ஆபீஸ்ல பதிவு எழுதறதும், பேஸ்புக் லைக் போடறதும் பண்ணலாம். நாங்க அலுவலகத்துல நெட்ல நுழைஞ்சா ஒரு வழி ஆக்கிருவாங்க...! அதேங்... காலைல ரெண்டு மணி நேரம் மட்டும் உலவறோம். வீ பாவம்ஸ்!
Deleteவித்தியாசமான தொகுப்பு... அருமை!
ReplyDeleteதொகுப்பிலுள்ள அனைத்தையும் ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீங்கள் பாக்காத, தொடராத தளம்னு எதும் உண்டா திண்டுக்கல்லாரே...! உங்களை வியந்து அனைவரையும் வாழ்த்திய உங்களுக்கு உளம்கனிந்த நன்றியை நவில்கிறேன்!
Deleteஅறிமுகமான நண்பர்களுக்கும், அறிமுகபடுத்திய விதத்தில் வித்தியாசம் காட்டி நிற்கும் எங்கள் பால கணேஷ் வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநண்பர்களையும், வாத்தியாரையும் வாழ்த்திய குடந்தையூராருக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteநீங்கள் எழுதிய விதத்தை ரசித்தேன்...என்னையும் அறிமுகபடுத்தியத்திக்கு மிக்க நன்றி சகோ....அறிமுகபடுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநான் எழுதிய விதத்தை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் ஸ்பெஷல் நன்றிகள் தோழி!
Deleteஇன்றும் இன்னுமோர் விதமாகப் பதிவர்களை அறிமுகம் செய்துள்ளதும் நன்றாக இருக்கிறது சகோதரரே!
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
இந்த பாணியையும் நீங்கள் ரசித்ததில் எனக்கு கொள்ளை மகிழ்ச்சி சிஸ்! மிகமிக நன்றி!
Deleteஇன்றைய நிலையை விவரிக்கும் நறுக் பதிவு ..(பதிவர்களை சொன்னேன் ) என் போன்ற சிறுவர்களுக்கு மனைவி தொந்தரவு இல்லை , காலையில் எழும்ப வேண்டிய அவசரமுமில்லை சார் ... சோ நான் இந்த பதிவை பொறுத்தவரை ஒரு வேடிக்கையாளன் மட்டுமே .. தொடரட்டும் உங்கள் பாய்ச்சல் ...(மேய்ச்சல் அல்லவா அதான் பாய்ச்சல் )
ReplyDeleteசீக்கிரமேவ விவாஹப் பிராப்தி ரஸ்து அரசா! (யான் பெற்ற துன்பம்..... நீங்க பெற வேண்டாமா? ஹி... ஹி...!) பாய்சசலுக்கு வாழ்த்திய உனக்கு என் உளம்கனிந்த நன்றி!
Delete//‘‘என்னங்க... கொஞ்சம் எதிர்த்த தெரு கடைக்குப் போய் கால்கிலோ சீனியும், ரவையும், கொஞ்சம் பச்சை மிளகாயும் வாங்கிட்டு வந்திடுங்களேன்..." // இது பரவாயில்லை "இல்லன்ன வயரை எல்லாம் புடுங்கி வீசிடுவேன்னு" சொன்னா ? அவ்...
ReplyDeleteவயரை எல்லாம் பிடுங்கி வீசினா பரவால்ல நண்பா... வயிறை இல்ல பல நாள் காயப் போட்டுடறாங்க. அவ்வ்வ்வ!
Deleteஅப்பப்ப சமையல் டிப்ஸ் எடுத்து காட்டி சமாளிக்க வேண்டி இருக்கு.... அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteகரீக்கட்டு! ஏதோ சமாளிச்சு வண்டி ஓட்றோம். அனைவரையும் ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteபிரமாதம்...காலையில் எழுந்து கணினி முன் .... எங்களுக்கெல்லாம் சான்சே இல்லை....:))
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்...
நிஜந்தான் தோழி! சும்மா தமாஷுக்காக ஆம்பளைங்க பக்கம் பேசறேனே தவிர, பெண்கள் கஷ்டம் புரியாதவங்க இல்ல நாங்க. தொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!
Deleteபுதியவர்கள் பலர் இருக்காங்க. என்னன்னு போய் கண்டுக்கிட்டு வரேன்
ReplyDeleteஅல்லாத்தையும் கண்டுக்கினு ரெண்டு வரி கருத்துப் போடறேன்னு சொன்ன என் தங்கைக்கு மகிழ்வோட என் நன்றி!
Deleteநல்ல அறிமுகங்கள் கணேஷ்......
ReplyDeleteமேய்ச்சல் மைதானத்தில் உலவும் இன்னுமொருவன்! :)
என் சக மேய்பவருக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅடுத்து மின்னல் - ல என்னவா இருக்கும் -ன்னு யோசித்து வைக்கும் போதே - அரங்கை மாற்றி அசத்தி விட்டீர்கள்!..
ReplyDeleteநல்லதொரு அறிமுகங்கள்!.. வளர்க உங்கள் பணி!..
ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஎதுவொன்றையும் எப்படி வித்தியாசமாகச் செய்யலாம் என்று யோசிக்கின்ற உங்கள் எண்ணமும் சரி, அதனை மிகவும் இயல்பாக செய்திருக்கும் உங்கள் பாணியும் சரி பாராட்ட வைக்கின்றது.
ReplyDeleteஎன்னுடைய தளத்தைச் சுட்டியிருப்பதற்கும் நன்றி பாலகணேஷ்.
என் பாணியைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸார்!
Deleteபால கணேஷர்,
ReplyDeleteதொகுப்புக்கு தொகுப்பு வித்தியாசமாக தொகுத்து வழங்கி அசத்துறிங்களே!
நம்ம பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி! அடுத்தடுத்து இருமுறை வலைச்சரத்தில் இடம் கிடைச்சிருக்கு,அப்போ நானும் வளர்துட்டேனோ அவ்வ்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி!
வித்தியாசம்னு சொல்லி எனக்குத் தெம்பூட்டின உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி நண்பரே!
Deleteபால கணேஷர்,
ReplyDelete//‘வவ்வால்ன்னு பேரை வெச்சுக்கிட்டிருககான். ஏன், ஆந்தை, கோட்டான்னுல்லாம் வெச்சுக்கப்படாதா’ //
ஹி...ஹி மேற்சொன்னாப்போல ஆந்தை ,கோட்டான்,கழுகு, காண்டாமிருகம், என பலப்பெயர்களை பரிசீலித்துப்பார்த்து விட்டு, எந்தப்பேரும் கவர்ச்சியா இல்லைனு , வவ்வால்னு தேர்வு செய்துக்கிட்டேன், இந்த பேருக்கு பெரிய இணைய சரித்திரமே இருக்குங்க்ணா, அது வேற ஒன்னுமில்லை ஒரு காலத்தில வவ்வால்னு யாஹூ சாட் ஐடி வச்சிருந்தேன் :,அதையே தூக்கி பிலாக்கில போட்டுக்கிட்டேன் ஹி...ஹி!
முதல் தடவை உங்க தளத்துக்கு வந்தப்போ என் மனசுல தோணினதை மறைக்காம அப்படியே எழுதினேன். அதன்மூலமா இப்ப பெயர்க்காரணம் தெரிஞ்சுட்டதுல டபுள் குஷி!
Deleteவணக்கம்
ReplyDeleteமிக அருமையாக தொகுத்து வழங்கியுள்ளிர்கள் இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி ரூபன்!
Deleteசுவாரசியமான தொகுப்பு அறிமுகங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி நேசன்!
Deleteஉண்மையிலேயே எனக்கு விடிவதே இணையத்தில்தான் வாத்தியாரே, காலை போனில் அலாரம் அடித்ததும் மெயில் ஏதும் வந்திருக்கிறதா என்று பார்ப்பது முதல் இரவு முகநூலில் வணக்கம் சொல்லும் நண்பர்களின் நிலைத்தகவல்களுக்கு "விருப்பம்" தெரிவிப்பதுடன் நாள் முடிகிறது....
ReplyDeleteவவ்வாலின் சதுரங்கம் நேற்றுதான் படித்தேன், வெகு சுவாரஸ்யம், பெயர்க்காரணமும்.
நாம ஸேம் பிளட் ஸ்.பை.! வவ்லால் அவசியம் படிக்க வேண்டிய ஒருத்தர்! மிக்க நன்றி!
Deleteஎன்னங்க அப்படியே லைவ்-வா தந்திருக்கீங்க...
ReplyDeleteகேமரா எதுவும் வச்சிருக்கீங்களா?
[சூப்பர் பாணி உங்கள் பணி.]
என் பாணியைப் பாராட்டின உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!
Deleteவவ்வால் வாயால் பாராட்டு பெற்றுவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவவ்வால் நல்ல ஞானஸ்தர்; ரசிகர்! பாராட்டுப் பெற்றதற்காக வாழ்த்திய உங்களுககு என் உளம்கனிந்த நன்றி!
Deleteஅருமையான தொகுப்பு கணேஷ் ஐயா.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தொகுப்பை ரசித்து, அறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர் ஐயா இப்போது எமது நாட்டில் தமிழைக் கற்கத் துடிக்கும்
ReplyDeleteபிஞ்சு உள்ளங்களுக்குப் பரீட்சை நடை பெறும் நேரம் ஆதலால்
இந்த அணிலும் அங்கே பிரசன்னமாகி பிஞ்சுக் குழந்தைகளின் நெஞ்சில்
தமிழை ஊட்டி விடும் பணியில் இருப்பதால் தங்களின் இந்த வலைச்சர
வரத்தையே மறந்து விட்டது .முதலில் இதற்காக மன்னிக்க வேண்டும் .
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் இங்கே அறிமுகமான
அனைத்து உள்ளங்களுக்கும் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படியுங்கள் சிஸ்1 எதற்கு மன்னிப்பெல்லாம்...? உங்களின் வருகையும் கருத்துமே எனக்கு மகிழ்வு தருபவை. அந்த மகிழ்வைத் தந்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி!
Deleteநல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்களை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!
Deleteஉங்கள் அறிமுகத்தின் மூலம் திரு அமுதவன் தளத்திற்குச் சென்றேன். புஷ்பா தங்கதுரை பற்றி நீங்கள் சொல்லியிருப்பது போலவே உருகி உருகித் தான் எழுதியிருக்கிறார். நல்ல நல்ல தளங்களை தெரிந்து கொண்டேன் உங்கள் அறிமுகங்கள் மூலம். நன்றி கணேஷ்!
ReplyDeleteதிரு.அமுதவனின் தளத்தில் உங்களின் அருமையான கருத்தினைப் படித்தேன்மா! மகிழ்வு தரும் உங்களின் ஆதரவுக்கு மனம் நிறைய நன்றி!
Delete