கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து உற்சாகத்துடன் இயங்கிவரும் வலைச்சரம் மற்றும் பொறுப்பாசிரியர் குழுவினருக்கு ம் வலையுலக தோழமைகளுக்கும் உற்சாகமான வணக்கங்கள். வலைச்சரத்திற்கு ஆசிரியாராவது எனக்கு இரண்டாம் முறை. முதல் முறை பணியாற்றிய போது ஏதோ குறை வைத்துவிட்டது போன்ற உணர்வு. அதனால் தானோ என்னவோ இந்தமுறை நிறைவாய் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. நிச்சயம் செய்ய முயல்கிறேன்.
இதுதான் பதிவுலகம், இப்படித்தான் இருக்கும் என்ற எவ்வித புரிதலுமே இல்லாமல்தான் பதிவுலகினுள் எனது முதலடியை எடுத்து வைத்தேன். வலையுலகம் எவ்வளவு பெரியது? என்னால் தொடர்ந்து எழுத முடியுமா? எனது எழுத்தை யார்யாரெல்லாம் படிப்பார்கள்? இப்படி எதுவுமே எனக்குத் தெரியாது. அதே சமயம் என் கெட்டநேரமோ என்னவோ நான் அடியெடுத்து வைத்த சமயம் பதிவுலகம் தன்னை பேஸ்புக் நோக்கி நகர்த்திக் கொண்டிருந்த ஒரு தேய்பிறைக் காலமாக இருந்தது.
சிறுவயதில் அப்போதுதான் கணினி எனக்கு அறிமுகமாகி இருந்த சமயம், கோயமுத்தூரில் இருந்து தென்காசி வந்திருந்த அசோக் அண்ணன் தற்செயலாய் என்னிடம் 'ப்ளாக்ஸ்பாட் பத்தி உனக்குத் தெரியுமாடா?'என்று கேட்டார். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது என்னுள் ப்ளாக் என்ற வார்த்தையை முதன்முதலில் விதைத்தவர் அசோக் அண்ணன்தான். 'தெரியாதுண்ணே, அப்படின்னா' என்றவனிடம் 'அது கிட்டத்தட்ட ஒரு டைரி மாதிரிடா, இதான் எழுதனும்னு கிடையாது, உனக்கு புடிச்சது எல்லாம் எழுதலாம், அத யாரு வேணும்னாலும் படிக்கலாம்' என்றபடி அறிமுகம் செய்தார். அதன்பின் அவ்வப்போது கூகுள் தேடலில் ஏதாவது ப்ளாக் என்முன் வந்து விழும் போதெல்லாம் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும்.
கல்லூரியில் சேர்ந்திருந்த சமயம் எனது அண்ணன் மாவட்ட அளவிலான சிறுகதை போட்டி ஒன்றில் வாசிக்க வாசிக்க வானம் வசப்படும் என்ற சிறுகதைக்கு முதல் பரிசு வென்றிருந்தான். அவனைப் பார்த்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் அதிகமாய் வளர்ந்த சமயமது. விகடனின் மாணவ பத்திரிக்கையாளர் திட்டதிற்கு அவனும் அவனது நண்பன் கணேசனும் முயல, கணேசன் அண்ணன் அதில் தேர்வானார். அதற்கு அடுத்த வருடம் என்னையும் முயன்று பார்க்கச் சொன்னான் என் அண்ணன். அவனே தேர்வாகவில்லை நான் எமாத்திரம் என்ற எண்ணமும், கொஞ்சம் சோம்பேறித்தனமும் மேலிட இருமுறை கிடைத்த வாய்ப்பை தவறவிட்டிருந்தேன்.
எழுத வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் எப்படி எழுதுவது? என்ன எழுதுவது என்று எதுவும் தெரியவில்லை. பத்திரிக்கைகளுக்கு அனுப்பினால் நம் எழுத்தையெல்லாம் மதித்து பிரசுரிப்பார்களா? பிரசுரிப்பார்கள் என்றால் அவர்களை அணுகுவது எப்படி? இப்படி பல்வேறு எப்படிக்கள் இணைந்து ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியை வரைய தற்செயலாய் கிடைத்த பதில் ப்ளாக்.
ஹாய் கங்கிராட்ஸ் என்ற எனது முதல் சிறுகதையுடன் திடங்கொண்டு போராடத் தொடங்கினேன். முதல் கதையை எழுதி அதை இணையத்தில் பார்த்ததும் உற்சாகம் தாளவில்லை. பேஸ்புக்கில் எனது அத்தனை நண்பர்களுக்கும் அனுப்பி, அவர்களது நண்பர்களின் நண்பர்களுக்கும் அனுப்பி படிக்கும்படி உயிரை வாங்கினேன். சிலர் படித்தார்கள், சிலர் படிக்கிறேன் என்றார்கள் சிலர் 'தமிழ்ல்லாம் கஷ்டம் ப்ரோ' என்றபடி விலகிவிட்டார்கள். முதல்கதையை படித்தவர்களும், படிக்கிறேன் என்றவர்களும் எனது அடுத்தடுத்த தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் ஓடியேவிட்டனர்.
ஏதோ ஒரு உற்சாகம் கொடுத்த உந்துதலில் எழுத ஆரம்பித்தாயிற்று, ஒரே பாடலில் பெரியாளாகிவிடலாம் என்ற எனது சிறுபிள்ளைத்தனமான எண்ணமா என்று தெரியவில்லை, யாருமே என்னுடைய கதைகளைப் படிக்கவில்லை பின் யாருக்காக எழுத வேண்டும் என்ற மனநிலைக்கு என் இரண்டாம் மூன்றாம் பதிவுகளிலேயே தள்ளபட்டிருந்தேன். இருந்தாலும் எழுத்து என் கனவு, சிறுவயது முதல் என்னைத் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் ஒரு பேர்-ஆசை. அவ்வளவு எளிதில் தளர்ந்து விட முடியுமா என்ன?
சரி. கடையைத் திறந்தாயிற்று தாக்குபிடிக்க வேண்டுமே. அப்போதுதான் என் நண்பன் செல்வமணி திரட்டிகளை பற்றிக் கூறினான். இன்ட்லி, உடான்ஸ் முதலான திரட்டிகளில் இணைத்ததும் முன்புக்கு கொஞ்சம் பரவாயில்லை. எனது நண்பர்களைத் தவிர்த்து முதன்முதலில் எனது வலைபூவிற்கு வேறு சிலரும் வரத் தொடங்கியிருந்தனர். அப்படி வந்தவர்களில் முதாலாமானவர் தமிழ்மொட்டு என்னும் தளத்தில் எழுதி வரும் சங்கத்தின் தீவிரவாதி சதீஷ் செல்லத்துரைதான். கிட்டத்தட்ட நானும் சதீஷ் அண்ணனும் மூன்று நாட்கள் இடைவெளியில் எழுத ஆரம்பித்தவர்கள். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் அவரது வலைப்பூவிற்கு இன்று மூன்றாவது பிறந்தநாள்... வாழ்த்துக்கள்ன்னே.
சதீஷ் அண்ணனை எப்படிக் கண்டுபிடித்தே ன் என்று தெரியவில்லை, கூகுள் தேடலிலா அல்லது திரட்டியின் மூலமா என்று நியாபகம் இல்லை. ஆனால் அவரிடம் என்னைக் கவர்ந்த விஷயம், அவர் எல்லை பாதுகாப்புப்படையில் பணிபுரிந்துகொண்டே பதிவெழுதுவதுதான். என்னால் ஆர்மியில் வேலை செய்ய முடியவில்லையே தவிர அவர்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. அந்த வகையில் இவர்மீதும் ஒரு தனி மரியாதை கலந்த ஈர்ப்பு ஏற்பட்டது, போதாக்குறைக்கு நெல்லைக்காரர் வேறு. என்னுடைய ஒவ்வொரு கதைகளை எழுதி முடித்ததும் இவரிடம் இருந்து வரபோகும் பின்னூட்டத்தை எதிர்பார்த்துதான் காத்திருப்பேன். எதுவாயிருந்தா லும் நேரிடையாக கூறிவிடுவார். ஆரம்பகாலம் முதல் என்னை மிக அதிகமாக உற்சாகபடுத்தி வருபவர்.
சதீஷ் அண்ணன் புரட்சி சார்ந்த பதிவுகளாக அதிகம் எழுதினாலும் இவரிடம் இருந்து நான் எதிர்பார்த்தது எல்லைப் பாதுகாப்பு படை குறித்த பதிவுகள் தான். என்னதான் உணர்ச்சி பொங்க சீரியசாய் எழுதினாலும் இவர் நகைச்சுவையாய் எழுதிய இந்தக் காதல் கடிதத்தை நீங்கள் என்ன மனநிலையில் எத்தனை முறை படித்தாலும் அலுக்காமல் உங்களை சிரிக்க வைப்பார் என்பதற்கு நான் உத்திரவாதம். கருத்துரீதியாக எங்களுக்குள் மிகுதியான சண்டைகள், அடிதடிகள் ஏற்பட்டிருந்த போதும் பதிவர் சந்திப்பின் போது ஆரத்தழுவி அன்பை வெளிபடுத்திய விதம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத நெகிழ்ச்சியான தருணம்.
என்னுடைய வலைப்பூவை இரண்டாவதாக கண்டறிந்து வந்தவன் சின்னமல. காமடிகும்மி என்னும் சங்கம் உருவாகக் காரணமாய் இருந்தது சின்னமலதான். என்னுடைய வலைப்பூவை, எழுத்துகளை சக பதிவர்களிடம் கூறி அவர்களையும் படிக்கும்படி பணித்தது சின்னமலதான். தான் எழுதிவந்த தலபோலவருமா வலைப்பூவில் சிலபல காரணங்களால் தற்போது எழுதாமல் இருந்தாலும் மீண்டும் எழுத ஆரம்பிக்க வேண்டுமென்பது காமடிகும்மியின் பெருத்த அவா.
முதல்மூவர் எப்போதுமே சிறப்பு என்பதால் மூன்றாமவரையும் கூறிவிடுகிறேன். இன்ட்லியில் எனது கர்ணனின் பதிவு பார்த்துவிட்டு வந்தவர் ஸ்ரீராம் ஸார். பின்னூட்டத்தில் ஸ்ரீராம் என்ற பெயரைப் பார்த்ததும் எங்க ஏரியா அண்ணன் ஸ்ரீராமோ என்றுதான் முதலில் நினைத்தேன். நூல்பிடித்துப் போனபோது நான் சென்று சேர்ந்த இடம் எங்கள்பிளாக். சுவாரசியமான மனிதர். சிறுவயதில் இருந்தே புத்தகம் படித்துப்படித்து வளர்ந்தவர். மிக சிலருக்கு மட்டுமே தெரிந்த விஷயம், இவரது அப்பாவும் ஒரு எழுத்தாளர். என்னுடைய நீண்ட நாள் அவா இவரை சந்தித்தே தீருவது என்பது, சமீபத்தில் G.M.B அவர்கள் வேளச்சேரி வந்திருந்த போது ஸ்ரீராம் சாரின் தரிசனம் கிடைத்ததில் யான் தன்யவானானேன் ஸ்ரீராம் சார் :-) அனுபவக் கட்டுரைகளையும், கதை கவிதைகளையும் எழுதிவரும் ஸ்ரீராம் சாரின் சமீபத்திய சாதனை அவருடைய கவிதை கல்கி இதழில் பிரசுரமானதுதான். வாழ்த்துகள் சார்.
ஒரு நல்ல தேய்பிறைக் காலத்தில் பதிவுலகம் தேடி வந்தவன் என்று ஏற்கனவே கூறினேன் அல்லவா. நான் இங்கு வந்த நேரம் பெரும்பாலான பதிவர்கள் பேஸ்புக் தேடி ஓட, நானோ பேஸ்புக்கில் ஒருவருடமாக பழம் தின்று கொட்டைபோட்டு விட்டுத்தான் பதிவுலகம் தேடியே வந்தேன் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இன்றைய புதிய பதிவர்:
எழுதுவதே ஒரு ஆத்மதிருப்தி என்ற நிலையில் அதைவிட வேறு என்ன பிரதிபலன் கிடைத்துவிட முடியும் என்ற எண்ணத்தில் ஒரு சிலர் மட்டுமே எவ்வித பிரதிபலனையும் பாராமல் எழுதிக் கொண்டிருப்பர். அப்படியொருவர் தான் ரெங்கசுப்ரமணி. முழுக்க முழுக்க புத்தக விமர்சனம் மட்டுமே எழுதிவரும் இவர் எடுத்தவுடன் புத்தக விமர்சனத்தை ஆரம்பித்து விடாமல், தான் விமர்சனம் செய்யப்போகும் புத்தகம் தன்னை எப்படியெல்லாம் பாதித்தது, அவை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்ற தனது அகன்ற பார்வையை ஒவ்வொரு புத்தக விமர்சனத்தின் போதும் பதிவு செய்வது இவரது தனிச்சிறப்பு.
வலையுலகிற்கு இவர் புதியவர் இல்லை என்றாலும், பெரும்பாலான பதிவர்களால் அறியபடாதவர். வெகுசமீபத்தில் அறிமுகமான இவரது தளத்தின் பெரும்பாலான புத்தக விமர்சனங்களை படித்துவிட்டேன். அவ்வளவு சுவாரசியமாக எழுதிவருகிறார். ரெங்கா சார் தயவு செஞ்சு பாலோவர்ஸ் விட்ஜெட் வைக்கவும்.
பதிவுலகம் குறித்து தொடர்ந்து பேசுவோம்...
இன்றைய சுய அறிமுகமே அட்டகாசமாக உள்ளது ! வாழ்த்துக்கள் சகோதரே இந்த வாரம்
ReplyDeleteமுழுவதும் சிறப்பெய்தி விளங்கிட .
மிக்க நன்றி சகோ, தங்களுடைய முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்
Deleteவலைச்சரத்தில் எல்லோரும் இரண்டாவது ரவுண்ட் வர ஆரம்பித்து விட்டீர்களா ?
ReplyDeleteபதிவுலகம் புகுந்த கதை சுவாரஸ்யமாக இருந்தது. என்னுடைய கதையும் கிட்டத்தட்ட இதைப் போன்றது தான். நானும் ஆரம்ப காலத்தில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ், ஆர்குட் என லிங்க் அனுப்பி தொல்லை செய்திருக்கிறேன். (அப்போது ஃபேஸ்புக் பிரசித்தியில்லை). திரட்டி என்று ஒன்று இருப்பது சில மாதங்களுக்கு பின் தான் தெரிய வந்தது. அதன்பிறகு நண்பர்களுக்கு தொல்லை கொடுப்பதை படிப்படியாக நிறுத்திக்கொண்டேன். இப்போது தொல்லை கொடுக்காமலேயே சில பதிவுலகம் சாராத நண்பர்கள் விரும்பி வந்து படிக்கிறார்கள், வாழ்த்துகிறார்கள். அவர்களும் எழுத முனைகிறார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
Deleteவணக்கம் பிரபா..
கிட்டத்தட்ட பதிவெழுத ஆரம்பிக்கும் ஒவ்வொருக்கும் இதே போல் ஒரு சுவாரசியமான பிளாஷ்பேக் இருக்கும் என நினைக்கிறன்... சில வருடங்கள் கழித்து அதை நியாபகப்படுத்திப் பார்க்கும் போது ஏற்படும் புன்முறுவலை ஏதோ ஒரு விதத்தில் ரசிக்க முடிகிறது...
வலைச்சர இரண்டாவது ஆட்டத்துக்கு வாழ்த்துக்கள் சீனு ஐயா! அறிமுக புதிய பதிவருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றி நேசன்...
Deleteவாழ்த்துக்கள் சகோ..
ReplyDeleteமிக்க நன்றி சீனி...
Deleteஅன்பின் சீனு - அருமையான துவக்கம் - பதிவு நன்று - த.ம 3 ; நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteமிக்க நன்றி சீனா அய்யா...
Deleteஆரம்ப வலைத்தள பயணம் சுவாரஸ்யம்...
ReplyDeleteசுய அறிமுகம் சூப்பர் என்று சொல்ல முடியாது...! அண்ணனின் பகிர்வு ஒன்று... ஹாய் கங்கிராட்ஸ் பகிர்வு ஒன்று...
வலையுலகத்தை கலக்கிய காதல் கடிதம் (http://www.seenuguru.com/2013/06/love-letter-contest.html) பற்றிய பகிர்வு குறிப்பிடவில்லையாதலால், நான் கோபித்துக் கொள்கிறேன்... ஹா... ஹா...
அதற்குப் பதிலாக இனிய நண்பரின் காதல் கடிதத்தையும் குறிப்பிட்டதும், நம்ம ஸ்ரீராம் ஸாரின் சிறப்புகளை சொன்னதற்கும் பாராட்டுக்கள்... சதீஷ் அவர்களுக்கும் + அவரின் தளத்திற்கும் வாழ்த்துக்கள்...
முதல் நாளே வலைத்தள அறிமுகமா...? நல்லது... அறியாத தளம்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
மேலும் அசத்துங்க சீனு...! வாழ்த்துக்கள்...
வணக்கம் டிடி..
Deleteஇதனை நான் சுயஅறிமுகமாக எழுத முனையவில்லை, அதனால் தான் நானும் சக பதிவர்களும் என்ற தலைப்பையே வைத்தேன்... இன்னும் தொடர்ந்து விவாதிக்க வேண்டியது உள்ளது, அதில் இனி வரும் காலங்களில் காதல் கடிதப் போட்டியையும் குறிப்பிடலாம் என்று நினைத்தேன்... விரிவான ஒரு பின்னூட்டத்திற்கு நன்றி டிடி
மிகத் தெளிவாக வலையுலகப் பயணம் துவங்கித் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் குறிப்ட்டது வெகு அழகு. நல்லதொரு அறிமுகமூம் இன்று. சிறப்பான தொடக்கத்தினைக் கண்டு மகிழ்வான நல்வாழ்த்துகள் சீனு. (G.V.K. அல்ல நாம் பார்த்தவர்... G.M.B. அவர் பெயர். அதை மட்டும் உடனே மாற்றிவிடு.)
ReplyDeleteநல்லவேளை வாத்தியாரே.. இதோ திருத்திவிடுகிறேன்...
Deleteவாழ்த்துகள் சீனு
ReplyDeleteமிக்க நன்றி ஜோதிஜி...
Deleteவாழ்த்துகள் சீனு.
ReplyDeleteமிக்க நன்றி வெங்கட் சார்...
Deleteஅது என்னவோ தெரியலை பலரும் ,நான் பஸ் ஸ்டாப்பில நின்ன போது டயரடக்கர் பார்த்துட்டு வாய்ப்பு கொடுத்தார்னு கதை சொல்லுறாப்போலவே "பதிவு" எழுத வந்த கதைய சொல்லுறாங்க அவ்வ்!
ReplyDeleteமுகநூல் எல்லாம் வந்த "ரொம்ப பின்ப்பட்ட காலத்தில் கூட ,ஒரு வருசம் முகநூலிலில் "பழம் தின்னதா" சொல்லிட்டு பிளாக் அறிமுகம் ஆனதுனு சொன்னால் ரொம்ப செயற்கையா இருக்கே :-))
சரி விடுங்க யாராவது பக்கத்து வீடு இதான் சொல்லும் வரையில் கூடசன்னலை தொறந்து பக்கத்துல வீடு இருக்கானு கூட பார்க்காமலே ,ஏரியாவில நாம மட்டும் தனியா இருக்கோம்னு வாழும் மக்கள் இப்பலாம் அதிகமாகிட்டாங்க தானே :-))
வலைப்பதிவுகள் தேய்ப்பிறையான காலத்தில் வந்ததா நினைக்கிறாப்போல "வலைச்சரம் கூட தேய்ப்பிறையாகி அமாவாசையாகிவிட்ட காலமான காலத்தில் தான் "ஆசிரியராக" எழுதினேன் என பிற்காலத்தில் சொல்வீர்களோ அவ்வ்!
# நல்லா எழுதுறிங்க(உள்ளடக்கம் சுமாராக இருப்பினும்), வாழ்த்துக்கள்!
வணக்கம் வவ்வால்
Deleteவிரிவான உங்கள் கருத்துக்களுக்கு(அனுமானத்திற்கு) முதலில் நன்றி
//முகநூல் எல்லாம் வந்த "ரொம்ப பின்ப்பட்ட காலத்தில் கூட ,ஒரு வருசம் முகநூலிலில் "பழம் தின்னதா" சொல்லிட்டு பிளாக் அறிமுகம் ஆனதுனு சொன்னால் ரொம்ப செயற்கையா இருக்கே :-))// நான் கூறிவது சரியென்றால் முகநூல் பரந்துபட்ட பரப்பில் மிக வேகமாக பரவத் தொடங்கியது 2009-10 முதல். நான் 2010-ன் பாதியில் இருந்து 2012 வரை முழுக்க முழுக்க அதாவது 24 மணிநேரமும் பேஸ்புக்கில் தவம் கிடப்பேன். இதை என் வீட்டில் கூறி குறைபடாதவர்களே கிடையாது.. அப்படியிருக்க உங்களுக்குள்ளாக ஏதோ ஒரு அனுமானத்தில் கூறியிருப்பது தான் எனக்கு கொஞ்சம் செயற்கையாக இருக்கிறது...
//வலைப்பதிவுகள் தேய்ப்பிறையான காலத்தில் வந்ததா நினைக்கிறாப்போல "வலைச்சரம் கூட தேய்ப்பிறையாகி அமாவாசையாகிவிட்ட காலமான காலத்தில் தான் "ஆசிரியராக" எழுதினேன் என பிற்காலத்தில் சொல்வீர்களோ அவ்வ்!// இங்கும் எனக்கு ஒன்று புரியவில்லை வவ்வால்... நான் தேய்பிறைக் காலம் என்று கூறினால் எப்படி கூறுகிறேன், ஏன் கூறுகிறேன் என்றெல்லாம் கேட்க மாட்டீர்களா? நீங்களாக ஒரு அனுமானத்திற்கு வருவது வியப்பாய் உள்ளது...
தேய்ப்பிறை என்று நான் கூற முனைந்ததை தவறு என்று கூற உங்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் என் கருத்துக்களைக் கேட்கும் முன்னே உங்கள் அனுமானம் மூலம் தவறு எனக் கூறவிழைவது ஆச்சரியமாய் உள்ளது...
உங்கள் மீது ஒரு பெருத்த அபிமானம் உள்ளது வவ்வால்.. தொடர்ந்து வாருங்கள்.. தொடர்ந்து பேசுவோம்...
வளர்பிறை, தேய்பிறை, அமாவாசை, பெளர்ணமி.... ஒரு சொல்லாடலுக்காக சீனு எழுதி இருக்கலாம். அதில் உள்ளர்த்தம் காண வேண்டும் என்பது எனக்கும் தோனல.... வெளவால் சொல்வதும் ஒரு நகைச்சுவைக்குத் தான்னு நான் புரிஞ்சிக்கிடேன். தமிழர் வரலாறு மாதிரி இருண்ட காலம்ன்னு ஒன்னு இருந்திச்சா?...அவ் இதுக்கு பதில் வெள்வால் சொல்வாருன்னு நினைக்கிறேன். வலையில் நாம் எழுதப் புகுந்த காலத்துக்கு முன்னாடி இருந்து அவர் எழுதி வருகிறார். அப்போது அவரோடு தொடர்பில் இருந்த பலரும் இப்ப எழுதுவது இல்லை என்பது என் அனுமானம் சீனு.
Deleteசீனு,
Deleteநாம எல்லாமே அனுமானத்தினை தானே "கருத்து" என சொல்கிறோம் :-))
வலைப்பதிவுகள் தேய்ப்பிறை என்பது ஒரு அனுமானம், 2010-12 இல் தான் முகநூல் பரந்துப்பட்டது என்பதும் ஒரு அனுமானம் தானே?
// 2009-10 முதல். நான் 2010-ன் பாதியில் இருந்து 2012 வரை முழுக்க முழுக்க அதாவது 24 மணிநேரமும் பேஸ்புக்கில் தவம் கிடப்பேன். //
அதனால் தான் அப்படி சொன்னேன், ஏன் எனில் முகநூலில் பொதுவாக ஸ்டேட்டஸ் போடுவது ,ஷேரிங் ரெண்டும் தான் செய்றாங்க , ஒரு வாரம் முகநூலில் தொடர்ந்து வந்தாலே சில பல "வலைப்பதிவுகளை" ஷேரிங்கில் படிக்க நேரிட்டுவிடும், ஒரு வேளை அப்படி ஷேரிங்கில் கொடுக்கப்படும் சுட்டிகளை எல்லாம்ம் வாசிச்சதில்லை என்றால் ,வலைப்பதிவுனா என்னானே தெரியாமலே தான் இருக்கும், அப்படி முகநூலில் இருந்தால் "பழம் தின்னு" கொட்டைப்போட்டதாக சொல்லிக்கொள்வதில் பொருளே இல்லை :-))
//நான் தேய்பிறைக் காலம் என்று கூறினால் எப்படி கூறுகிறேன், ஏன் கூறுகிறேன் என்றெல்லாம் கேட்க மாட்டீர்களா? நீங்களாக ஒரு அனுமானத்திற்கு வருவது வியப்பாய் உள்ளது... //
பலரும் அப்படி "அனுமானத்தில்" தேய்ப்பிறைனு நினைத்து சொல்லிக்கொள்வதை கேட்டுவிட்டதால் ,நானும் நேரடியாக அனுமானத்தினை சொல்லிவிட்டேன் அவ்வ்!
உண்மையில் சொல்லப்போனால் வலைப்பதிவுகள் அதிகரித்து வருகின்றன, ஆனால் எழுதும் "ஃபிரிக்குவெண்சி" குறைந்து வருகிறது.
தினம் ஒருப்பதிவு போட்டவங்க ,வாரம் ஒன்றாகிட்டாங்க, வாரம் ஒன்று என எழுதியவர்கள் மாதம் ஒன்று என ஆகிட்டாங்க, மாதம் ஒன்று எழுதுனவங்க ஆறுமாதத்துக்கு ஒருக்கானு ஆகிட்டாங்க அவ்வளவே.
இதில் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற "இடப்பெயர்ச்சியும்" நடக்கிறது.
கலாகுமரன் சொன்னது போல நான் முன்னர் இருந்தே பதிவுலகில் நடமாடிக்கிட்டு இருப்பதால் , இந்த தேய்ப்பிறைக்கூற்றை பல முறை கேட்டுவிட்டேன் , நீங்களாம் வரும் முன்னர் கூட புதுசா வருவாங்க,ஆறு மாதத்தில் முன்ன மாதிரி வலைப்பதிவுகள் இல்லை தேய்ஞ்சுப்போச்சுனு "ஜட்ஜ்மெண்ட்" எழுதுவாங்க :-))
எல்லாருக்குமே கொஞ்ச காலம் ஆனதும் , எதையுமே முன்ன மாதிரி இப்ப இல்லனு சொல்லும் ஆசை வந்துடும் ...ஹி...ஹி எனக்கும் அப்படியான ஆசை வரும், நானும் சொல்லுவேன் உதாரணமா அப்போலாம் சொக்காய கிளிச்சுக்கிற அளவுக்கு "பின்னூட்டங்களில்" விவாதங்கள் ஓடும், இப்போ போல "நல்ல பகிர்வு ,பதிவாக்கி அறிய தந்தமைக்கு நன்றினு, 100 பதிவுல ,ஒரே கமெண்டை காபி பேஸ்ட் அடிக்கிற வேலைகள் இருக்காது(என் அனுமானம் இப்படி சொல்ல சொல்லுது)
ஆனால் அப்பவும், வடை எனக்கு, மீ த ஃபர்ஸ்ட் , அப்புறம் வரேன் என அட்டெண்டன்ஸ் போடுவதும் உண்டு அவ்வ்!
//ஒரு பெருத்த அபிமானம் உள்ளது வவ்வால்//
நன்றி!
நான் எப்பொழுதுமே "நல்லவன்" என பேர் வாங்க எண்ணி கருத்தினை சொல்வதேயில்லை, அப்போ என்ன மனசுல தோன்றுதோ அதையே சொல்வேன்,பல நேரங்களில் கெட்டப்பேரு தான் கிடைக்குது,ஆனால் அதனால் ஒன்னும் குடிமுழுகிடாது என்பதால் கவலையில்லை தட்ஸ் ஆல்!
----------------------
கலாகுமரன்,
#//தமிழர் வரலாறு மாதிரி இருண்ட காலம்ன்னு ஒன்னு இருந்திச்சா?...அவ்//
நான் அப்படிலாம் ஒரு இருண்டக்காலமே இல்லைனு தானே சொல்வேன் :-))
#//அப்போது அவரோடு தொடர்பில் இருந்த பலரும் இப்ப எழுதுவது இல்லை என்பது என் அனுமானம் சீனு.//
ஒரு வகையில் சரி ,ஒரு வகையில் தவறு பாதிக்கு பாதி இல்லை,அல்லது எப்போவாது என எழுதிக்கிட்டு இருக்காங்க.
எனவே 50% மக்கள் உலாவிட்டு இருப்பதே பெரிய விடயமில்லையா?
இப்படி 50% இடப்பெயர்ச்சி எல்லா துறையிலும் நடப்பது சகஜமே.
ஹி...ஹி நாம சொல்வது எல்லாமே நகைச்சுவை தான் !
நன்றி வெளவால். இருண்ட காலம் வலைப் பதிவில் இல்லை என்றே நானும் சொல்ல வந்தேன். மனதின் சலிப்பு அந்த மாதிரி நினைக்க வைக்கலாம். அவ்ளோ தான்.
Deleteஅன்புள்ள வவ்வால்
Deleteமீண்டுமொருமுறை வணக்கம்... பதிவை ஒருமுறை முழுமையாக படித்தீர்களா.. இல்லையென்றாலும் பரவாயில்லை இங்கே சொல்கிறேன்..
நான் எப்போது எனக்கு பேஸ்புக் தான் ப்ளாக்கை அறிமுகம் செய்தது என கூறினேன்...
1. கணினி எனக்கு அறிமுகமாகி இருந்த சமயம், அசோக் அண்ணன் தற்செயலாய் என்னிடம் 'ப்ளாக்ஸ்பாட் பத்தி உனக்குத் தெரியுமாடா?'என்று கேட்டார். எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது என்னுள் ப்ளாக் என்ற வார்த்தையை முதன்முதலில் விதைத்தவர் அசோக் அண்ணன்தான்.
2. அவ்வப்போது கூகுள் தேடலில் ஏதாவது ப்ளாக் என்முன் வந்து விழும் போதெல்லாம் ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும், ஏதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும்.
இவ்வளவு தெளிவாக கூறியிருக்க நீங்கள் என்ன அனுமானத்தில் //வலைப்பதிவுனா என்னானே தெரியாமலே தான் இருக்கும், அப்படி முகநூலில் இருந்தால் "பழம் தின்னு" கொட்டைப்போட்டதாக சொல்லிக்கொள்வதில் பொருளே இல்லை :-))// இப்படி கூறினீர்கள் என்று புரியவில்லை..
அடுத்ததாக நான் வந்த நேரம் தேய்பிறைக் காலம் என்று உவமைப்படுத்தினேனே ஒழிய இன்றளவிலும் எப்படியிருக்கிறது என்ற பார்வையை பதிவு செய்யவே இல்லை... இனிவரும் நாட்களில் பதிவு செய்வதாய் உத்தேசம் :-)))))
அனுமானங்கள் அத்தனையும் கருத்துக்கள் இல்லை :-)))))
கருத்துக்கள் அத்தனையும் அனுமானங்கள் இல்லை :-)))))))
உங்கள் மீது அபிமானம் என்பது நீங்கள் எழுதிய விஸ்வரூபம் படம் குறித்து எழுதிய பதிவின் மூலம் வந்தது.. அசந்து படித்த பதிவு அது..
தொடர்ந்து வாருங்கள் வவ்வால்..
நன்றி
சீனு,
Deleteவணக்கம்!
//நான் எப்போது எனக்கு பேஸ்புக் தான் ப்ளாக்கை அறிமுகம் செய்தது என கூறினேன்...//
நானும் முக நூல் தான் ,வலைப்பதிவை அறிமுகப்படுத்தியது என சொல்லவில்லையே?
பழம் தின்னதா சொன்னீங்களே , அப்போ முகநூலில் பகிரப்பட்ட சுட்டிகள் மூலம் வலைப்பதிவுகளை காணவில்லையா ,அறிமுகம் ஆகியிருக்குமே ,ஆனால் அப்படி இல்லாமல் யாரொ சொல்லி தற்செயலாக அறிமுகம் ஆனதாக சொன்னீர்களே என்றே கேட்டேன்.
அப்போ முகநூல் எப்படி அறிமுகம் ஆச்சு அவ்வ்? முகநூலுக்கு உள் போயிட்டாலே வலைப்பதிவுகள் தன்னால அறிமுகம் ஆகிடும் என்பது பொதுவான இயல்பு.
#//வந்த நேரம் தேய்பிறைக் காலம் என்று உவமைப்படுத்தினேனே ஒழிய இன்றளவிலும் எப்படியிருக்கிறது என்ற பார்வையை பதிவு செய்யவே இல்லை... //
நீங்க சொன்ன தேய்ப்பிறைக்கு மட்டும் தான் நான் பதில் சொன்னேன். அந்த தேய்ப்பிறைக்காலத்தில் எப்படி இருந்தது என்பதையே சொல்லி இருக்கேன்,அது தேய்ப்பிறை காலமல்லனு.
//இனிவரும் நாட்களில் பதிவு செய்வதாய் உத்தேசம் :-)))))//
இனி வரும் நாட்களில் நானும் பதில் சொல்வதாய் உத்தேசம் :-))
ஒரு வேளை தேய்பிறையில் வந்தேன் ,இப்போ வளர்பிறையாகிடுச்சுனு சொல்ல வரிங்களோ அவ்வ்!
#ஹி...ஹி நான் கூட தமிழ் வலைப்பதிவுலகமே தொய்வடையும் போதெல்லாம் உய்விக்க மீண்டும் வருவதாக "மனப்பால்" குடிச்சிருக்கேன் :-))
காசா,பணமா ,நாம நினைப்பது தான்!!!
வலைச்சரத்திற்கு ஆசிரியாராவது இரண்டாம் முறை. //
ReplyDeleteஇனிய வாழ்த்துகள்..!
மிக்க நன்றி அம்மா...
Deleteஇனிய அறிமுகம்.. நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக பணியாற்ற இருக்கும் திரு சீனு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அய்யா
Deleteநல்லதோர் இனிமையான ஆரம்பம்! ஆரம்ப அறிமுகமே மிக நுணுக்கமான அமைதியானத் தெள்ளத் தெளிவான நடையில் இருகிறது சீனு!
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு!
மிக்க நன்றி துளசிதரன்...
Deleteதெளிவான எழுத்து நடையில் முதல் நாள் பதிவு அட்டகாசமாய் இருந்தது. ரெங்கு சார் புதியவர். வாழ்த்துகள் சீனு.
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு. எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் வலையுலகிற்கு வந்தது தேய்பிறை காலம் என்றால், நான் வந்தது என்ன காலம்?
ReplyDeleteஇரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துகள், சீனு.
ReplyDeleteதிரு ரெங்கசுப்பிரமணி அவர்களின் வளைத்தளம் மிகவும் சுவாரஸ்யம். இனி தொடர்ந்து படிக்கிறேன் அவரது எழுத்துக்களை.
தொடர்ந்து புதிய, புதிய அறிமுகப்படுத்தவும்.
வாழ்த்துகள் சீனு!
ReplyDeleteநல்ல துவக்கம் அண்ணா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கலக்குங்கண்ணே!!
ReplyDeleteவளர்பிறை தேய்பிறை எல்லாம் நிலவுக்குக் கிடையாது என்று ஒரு பாடல் உண்டு (படம் : கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன) :)))
ReplyDeleteஉங்களோடு அலைபேசியில் பேசும்போதெல்லாம் என்னைக் கவர்வது உங்களின் சிரிப்புதான் சீனு. என்னைப் பற்றிக் குறிப்பிட்டதற்கும், 'எங்களை'ப் பற்றிக் குறிப்பிட்டதற்கும் நன்றி. உங்களைச் சந்தித்ததில் எனக்கும் மகிழ்ச்சி. உங்கள் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
கிட்டத்தட்ட என் சுய வாழ்வின் கதையை படிப்பதைப் போன்ற உண்ர்வு. என்றென்றும் எழுத வேண்டும். எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
ReplyDeleteவாழ்துக்கள்.
வாழ்த்துக்கள் சீனு
ReplyDeleteரெங்கசுப்பிரமணி வாசகர் கூடத்தில் பெயர் பார்த்த ஞாபகம். அவரது தளத்துக்குச் சென்றதில்லை.
ReplyDeleteஇரண்டாவது முறையாக வலைச்சரம் தொடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...
தங்களைப் பற்றியும் தங்கள் உற்ற நண்பர்கள் பற்றியும் அறிமுகக் கட்டுரை சுவாரஸ்யமாயிருந்தது. தொடர்வோம்...
ReplyDeleteவாழ்த்துகள் சகோ!
ReplyDeleteஅறிமுகம் அருமை! ஆசிரியப் பொறுப்பு சிறப்புற வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துக்கள் சீனு! :) கலக்குங்க...
ReplyDeleteஅறிமுகங்களுடனான வித்தியாசமான சுய அறிமுகப் பக்கம் வாழ்த்துக்கள் சீனு
ReplyDeleteதங்களின் அறிமுகங்களை வரவேற்கிறேன்.
ReplyDeleteCongrats Seenu SIR.
ReplyDelete