இன்றைய பதிவு பிரபலங்கள் பற்றியது :)
________________________________________________________________________________________________________________________
அருளினியன்
பதிவுகள்
இந்த முறை நான் பகிரவிரும்புவது
ஏற்கனவே பத்திரிக்கை துறையில் இருப்பவர்களைப்பற்றியது. எழுதுவதை
தொழிலாகக்கொண்டவர்களின் வலைப்பூக்களைப்பற்றியது. முதலாவதாக நான் பகிர விரும்புவது
‘அருளினியன் பதிவுகள்’ என்ற அருளினியன் மஹாலிங்கம் என்ற எனது நண்பரின் வலைப்பூ.
நேரில் சந்தித்த இலக்கியக்கூட்டங்களில் அழகு யாழ்த்தமிழில் உரையாடுவார்.
தொடர்ந்தும் தமது வலைப்பூவை புதுப்பித்துக்கொண்டேயிருப்பார்.
ஆங்கிலம் கலக்காத நல்ல தமிழ்
இவருடையது. அவர்களின் வட்டாரவழக்கில் பதிந்த பல பதிவுகள் எனக்கு மிகவும்
பிடித்தவை. நகைச்சுவை எங்கும் இழையோடுவது இவரது இடுகைகளில் எப்போதும் காணலாம்.
"கன நேரமா கட்டி வைச்சிருக்கிறாங்களடா பெடி, இந்த அலுக்கோசுகள் வண்டியை எப்படா ராசா
எடுப்பாங்கள்?
'ஆச்சியாண தெரியாது'
'ஆச்சியாண தெரியாது'
'சலம், மலம் போறதுக்கு வழியில இறக்குவாங்களோடா
பெடி?'
'ஓமோம், நீ சலம் போறதுக்கு ஒரு மணித்தியாலப் பிரயாணத்தில 4 வாட்டி இறக்குவான். அரியண்டம் கொடுக்காத ஆச்சி'
'ஓமோம், நீ சலம் போறதுக்கு ஒரு மணித்தியாலப் பிரயாணத்தில 4 வாட்டி இறக்குவான். அரியண்டம் கொடுக்காத ஆச்சி'
சிரிப்பு தாங்க முடியவில்லை இதைப்படிக்க
நேர்ந்ததும்,இன்னமும் தொடர்வார் இப்படி...
'முதல் ராத்திரியோ கடைசி ராத்திரியோ நான்
இதில தான் படுப்பேன்'. கடுப்பின் உச்சிக்குப் போன ஆச்சி 'வம்பில பிறந்த சனியன், எருமை மாட்டு மூதேசி, மூதேசிவாலாயமாய் தினவெடுத்துப்போய்
நிக்குது" என என்னைத் திட்டி, என்னை அல்லையில் நாலு மிதி மிதிக்க அழுதுகொண்டு போய் ஹாலில்
படுத்தேன்.”
பிறகு அந்த
மாமாவின் முதலிரவு என்னவாயிற்று.. இங்கே சொடுக்கி மிச்சத்தை வாசியுங்கள்.
அன்புள்ள ரிசானா , தனுஷ் ஆச்சரியக்குறி, அம்மா
மெஸ் இந்தப்பதிவுகள் அவரின் மிகச்சிறப்பான பதிவுகள் நான் விரும்பி வாசித்தவை.
சினிமா, கட்டுரைகள், பேட்டிகள் , சிறுகதை, சில
அவரின் அனுபவங்கள் என இவரின் பதிவுகள் எல்லாமே வாசிக்க இனியவை , ஈழத்தமிழ்ச்சுவை
கூடியவை.
எங்கள் எல்லோர் வாழ்விலும்
ஒரு பால்யகாலசகி [சிறு வயது தோழி ] இருந்திருப்பாள், எனக்கும்
இருந்தாள், இன்றும்
இருக்கிறாள். என்னவென்று புரியாத சிறு வயதில் ஆவளுடன் பேசும்
போது நான் அடைந்த ஆனந்தத்தை சும்மா ஜஸ்ட் லைக் தட் வார்த்தைகளில்
சொல்ல முடியாது. நான் வாழ்க்கையில் வெற்றியாளனாக
இருக்க வேண்டும் என்பதற்காக
அவளால் முடிந்த அனைத்து ரிஸ்கும் எடுத்தாள்.
பஷீரின் ‘பால்யகாலசகி’ பற்றிய நூல்விமர்சனம் ,
மேலும் வாசிக்க
மேலும் இவரின் பதிவுகளைத்தொடர
_____________________________________________________________________________________________________________________
‘சந்தனார்’
மிகச்சிறந்த ஓவியர்,
எழுத்தாளர். பின்னதை முதலில் சொல்லியிருக்கவேணூம் என்று எப்போதும் சண்டை பிடிப்பவர்.
தமிழகத்தின் முதன்மைப்பத்திரிகை ஒன்றில் பணியிலிருப்பவர். எத்தனை கருத்துகள்,
எத்தனை ஓவியங்கள், கட்டுரைகள் சினிமா குறித்தும் , சமுதாயப்பிரச்னைகள் குறித்தும்
என இவரின் பதிவுகள், முகநூல் தகவல்கள் தொடரும். இடவிடாது இவரின் பதிவுகள்
வந்துகொண்டேயிருக்கும். ஆழ்ந்த இளையராஜாவின் ரசிகர். அவரின் எழுத்து எப்போதும்
எளிய தமிழில் யாவருக்கும் புரியும் வண்ணம் அமைந்திருக்கும்.
“சில மாதங்களுக்கு முன் வெளியாகி தமிழகத்தில்
கண்ணீர் வெள்ளம் பொங்க செய்த 'தெய்வ மகள்' ஷான் பென்
நடித்த 'அயாம் ஸாம்' ( I am Sam) என்ற ஆங்கிலப்படத்தின் மலிவிலும் மலிவுப்பதிப்பு
என்பது பலருக்கு தெரிந்திருக்க
வாய்ப்பு
இல்லை. அதே படம் ஹிந்தியிலும் அஜய் தேவ் கன் நடித்து Main Aisa Hi Hun என்று
வந்தது..ஷான் பென்னின் சிகையலங்காரம் முதல் நடை உடை பாவனைகள் வரை டிவிடி பார்த்தே நகலெடுத்த நடிகர்
விக்ரம் 'இதற்காக குழந்தைகளிடமே பழகி நடிப்பை மெருகேற்றிக்கொண்டேன்' என்று
கூசாமல் சொன்னார். சக தமிழ் அறிவுஜீவி இயக்குனர்கள் வரிசையாக
நாற்காலிகளில் அமர்ந்துகொண்டு படம் பார்த்து கண்ணீர் விட்டழுதேன் என்று மிகச்
சிறந்த நடிப்பாற்றல் வெளிப்பட
சேனல்களில்
பேசினார்கள்.”
இது அவர்
எழுதிய ‘களவாடும் கலையா சினிமா’ என்ற பதிவிலிருந்து ஒரு பகுதி. முழுதும் வாசிக்க
“கவுண்டமணியின்
பெயர் காரணங்களில் ஊர்க்
கவுண்டர் என்று அவர் நடித்த பாத்திரமும் யார் என்ன பேசினாலும் உடனுக்குடன் முரண் கேள்விகளை முன்வைத்த
பாத்திரத்தில் நடித்ததால் counter மணி என்று பெயர் பெற்று அது மருவி
கவுண்டமணியானது என்றும் இருவேறுக்
கருத்துகள் நிலவுகின்றன. 'காட்ட வித்து கள்ளு குடிச்சாலும் கவுண்டன் கவுண்டன் தான்' என்று சலம்பினாலும் அவர் உண்மையில் கவுண்டர் இல்லை என்று சொல்பவர்கள் உண்டு.”
கவுண்டமணி :
கோபக்காரக்கோமாளி என்ற பதிவிலிருந்து ஒரு பகுதி , முழுதும் வாசிக்க,
லூஸ்மோகன் குரலால் வாழும்
நடிகன், இன்று போய் நாளை வா –ஒரு மீள் பார்வை, போன்றவை இவரின் மிகப்பிடித்த
பதிவுகள் எனக்கு,
தொடர்ந்தும் வாசிக்க இங்கே
தொடருங்கள்
________________________________________________________________________________________________________________
மணல் வீடு
அழிந்து வரும் தெருக்கூத்து,
தோற்பாவைக்கூத்து, போன்ற அரிய கலைகளை இந்த இளம் சமுதாயத்திற்காக மீளக்கொண்டு வந்து
கொடுக்க பெருமுயற்சி எடுத்துவரும் மு,ஹரிகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூ ‘மணல்வீடு’.
இது போன்ற கலைநிகழ்ச்சிகளை ஊரெங்கும் ஏற்பாடு செய்து இந்தக்கலைளை தம்மால் இயன்றவரை
பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். மணல்வீடு என்ற சஞ்சிகையையும்
நடத்திவருகிறார். சில நிகழ்ச்சிகளை நேரில் சென்றும் பார்த்திருக்கிறேன்.
அரிச்சந்திரன் என்ற தோற்பாவைக்கூத்து நான் கண்டு ரசித்த ஒன்று.
இதோடு மட்டுமல்லாது, வட்டார
வழக்கில் அவர் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் , சிறு கதைகள் யாவும் வாசிக்க
வாசிக்க நம்மை வசீகரிப்பவை.
இதைக்கொஞ்சம்
வாசித்துப்பாருங்க, சிறிது முயற்சி எடுத்து புரிந்துகொள்ளவேண்டிய மொழி.
ஈட்டத் தின்னுப்புட்டு
தொரத்தொரன்னு நத்தத்த ஒழுக்கிக்கிட்டு வந்த மாப்ள ஆரோவொரு பண்டாரங்குடுத்தான்னு சூரணந்தின்னுக்கிட்டு கெடயிலியே குளுருக்காச்சலோட கெடந்துட்டு இப்பிடி முக்கிலியமான காரியத்த மின்ன இருந்துச் செய்யனுமின்னு வந்தரலியா? பாவம்!. பிரமனுக்குங்
கயிட்டந்தான். மூளக்காரப்பொறப்புக்கு உருவு பண்டறதுல
அவனுக்கென்னாவோ இஸ்காரு! ச்சேரி கடவுளயாச்சும் பாத்து வெவரங்கேக்கலாமுன்னு ஈச்பரமூட்டுக்கு போயிருக்கான். அன்னிக்கிங்கறபெட்டுக்கு ஈச்பரஞ்சாமி வூட்ல
இல்ல. ஈச்பரி பிள்ளத்தான் இருநதுக்கிறா.
ரவுசு’ என்ற சிறுகதையின்
ஒரு பகுதி இது, முழுதும் வாசிக்க. இங்கே சொடுக்கலாம்.
காமம் சற்றூத்தூக்கலாக
இருப்பினும் அவர் பதிவுகள் சுவாரசியமானவை. பாசாங்கில்லாத அந்த மொழி.
அவர் எழுதிய “திறக்கும் மூன்றாம் கண் – பேய்க்காமன்” கவிதை ஒன்று உங்களுக்காக,
அங்கங்கள் தீயில்
கருகி
பிடி சாம்பலென உருமாறும் தருணம்
தானியங்களின் வெடித்த சதைகளை
சுடுகாட்டின் கருங்காக்கைகளுக்கு
இரையென எறிகையில்
பிரேதங்கள் தொலைத்துவிடுகின்றன
பிடி சாம்பலென உருமாறும் தருணம்
தானியங்களின் வெடித்த சதைகளை
சுடுகாட்டின் கருங்காக்கைகளுக்கு
இரையென எறிகையில்
பிரேதங்கள் தொலைத்துவிடுகின்றன
முழுதும் வாசிக்க
இங்கே சொடுக்கலாம்.
இப்போது தொடர்ந்து அவர்
பதிவுகள் இடுவதில்லை. முகநூலில் தீவிரமாக இயங்குகிறார்.முகநூலில் அவரைத்தொடர இங்கே
சொடுக்கலாம்.
அவர் பதிவுகள், முன்னர்ப்பகிர்ந்தவை
இங்கே
___________________________________________________________________________________________________________________
கௌதம சித்தார்த்தன்
இன்னொரு சீரியஸான பதிவர்
ஒருவரைப்பற்றி இப்போது பேசப்போகிறேன். சினிமா விமர்சனங்களை வாசிக்கத்தொடங்கிய நான்
, அவரது தமிழ் கண்டு அவரின் வலைப்பூவை பின்தொடரத்தொடங்கினேன்.
நூலகங்களுக்குச்சென்று நூல்களைத்தேடி எடுத்து அவற்றில் உள்ள பொருள் கண்டுணர்ந்து
என அத்தனை லெங்க்த்தி ப்ராஸஸ் ஏதுமின்றி , இவரின் இடுகைகளை சுட்டினால் போதும்.,
அத்தனையும் ஒருங்கே கிடைக்கப்பெறலாம். விடாது ஒவ்வொரு பதிவையும் வாசிப்பவன் என்ற
முறையிலே இவரது வலைப்பூவை அனைவரும் பின்தொடர விழைகிறேன்.
சினிமா மட்டுமல்ல, உலக
இலக்கியங்கள், தமிழ் எழுத்துரு, சாதி அரசியல், இசை சிறுவர் இலக்கியம் என எல்லாத்
துறைகளிலுமென இவரின் எழுத்து பரிணமிக்கும். கொஞ்சம் சீரியஸ்தான் , எப்போதும் நம்
வாழ்க்கையும் சிரிப்பும் கும்மாளமுமாக கழிவதில்லையே. சிரத்தை எடுத்து
வாசிக்கத்தொடங்கினால் உள்ளுக்குள் செல்வது சுலபம்.
‘திராவிட அலைத்திரைப்படங்களின் காலகட்டம்’ என்ற
ஒரு கட்டுரையின் ஒரு பகுதி.
இந்தக்காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் தமிழ் மொழியின் அடையாளத்தை உள்வாங்கிய,
தமிழ்மொழி,
தமிழரின் வாழ்வியல், தமிழரின் பண்பாடுகள் என்று மிகவும் சுயத்தன்மையுடன் இருந்தன.
தற்போதைய திரைப்பட வளர்ச்சியைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அன்றைய சூழலை மனதிலிறுத்தி இந்த விஷயத்தைப்பரிசீலிக்க வேண்டும்.
முழுக்க முழுக்க புராண இதிகாசபாணியை அடியொற்றிவந்த படங்களின் போக்கிலிருந்து விலகி,
மேலைநாட்டுத்தன்மையை நிராகரித்து சுயஆளுமையுடன் இயங்கியவை இப்படங்கள். இக்காலத்தை தமிழ் சினிமாவின் பொற்காலம் என்று எவ்விதத்தயக்கமுமின்றி அடையாளப்படுத்தலாம்.
கட்டுரையை முழுமையாக வாசிக்க
இது ஒரு ‘ஓநாய்: இசை அரசியல்’
என்ற இசை விமர்சனத்தின் ஒரு பகுதி.
“எளிய மக்களைத் துன்புறுத்தி இன்பம் காண்பவன். தன்வீட்டில் ஒரு பாம்பை வளர்த்துக் கொண்டிருப்பவன். அதே சமயம் பீத்தோவனின் 9வது சிம்பொனியை சதா கேட்டு ரசிப்பவன். அந்த இசையைக் கேட்கும் போதெல்லாம் ஒரு உன்மத்த நிலைக்குப் போய், யாரையாவது கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் எழ கொலைகள் செய்பவன். “
முழுமையாக வாசிக்க
சமீபத்தில் மிகவும் ரசித்த வாசித்த ஒரு
கட்டுரையின் ஒரு பகுதி
கவிஞர் பாஷோ தனது தோட்டத்தில் செர்ரிப் பழங்களைப் பயிரிட்டு வந்தார். அவைகளை அபகரிக்க நினைத்த தந்திரக்கார நரி ஒன்று யமா புஷி என்ற துறவியாகத் தன்னை மாற்றிக் கொண்டு அவரிடம் சென்றது. வழியில் ஃபுகா ஆற்றில் மின்னிய சில கூழாங்கற்களை எடுத்துத் தனது மந்திரத்தால் தங்கக்காசுகளாக மாற்றிக் கொண்டது. ஜப்பானில் உள்ள நரிகள் எல்லாமே மாய வித்தை தெரிந்தவை. பாஷோவிடம் அந்தக் தங்கக் காசுகளைக் கொடுத்து அனைத்து செர்ரிப் பழங்களையும் வாங்கிக்கொண்டு போய்விட்டது.
முழுப்பதிவையும்
வாசிக்க
ஒவ்வொரு
கட்டுரையும், ஒரு ஆய்வுக்கட்டுரை போல, திறனாய்வுக்குட்பட்டதாகவே இருக்கும். பொறுமை
அவசியம் முழுக்கட்டுரைகளையும் வாசிக்க.!
________________________________________________________________________________
சில ரோஜாக்கள்
தலைப்பே கவர்ந்திழுக்கிறது. 'லதாமகன்' ஐத்தெரியாதவர்கள் யாருமில்லை. புகழ்பெற்ற கவிஞர், கவிதை விமர்சகர், சிறுகதைப்புனைவர்
என்னவெல்லாம் சொல்லலாம்.? திடீரென எனது ஒரு கவிதையைப் பற்றியும் விமர்சனம்
எழுதியிருந்தார். புத்தக வெளியீட்டில் உள்ள ஏகப்பட்ட அரசியலையும்,தேவையற்ற
காலதாமத்தை தவிர்க்கவும் மின்னூல்களை வெளியிடலாமே என ஒரு சங்கதியை வெகுவாக
பரவவிட்டவர். ஏற்கனவே இருப்பதுதான் என்றாலும் பலரால் பேசப்பட வாய்ந்தது. தமது சில
கவிதைகளைத் தொகுத்து மின்னூலாக வெளியிடவும் செய்தார். அவரது தளத்தில் எப்போதும்
தரவிறக்கிக் கொள்ளும்படியாக அதற்கான சுட்டிகள் இருக்கின்றன.
தன்னைப்பற்றி இப்படிக்கூறிக்கொள்வார்
குழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.
முகநூல்,ட்வீட்டர் வலைப்பூவென பரபரப்பாக
காணப்படுவார்.இவரது கவிதைகளை தேடிப்பிடித்து வாசிப்பேன்.
பெருவளைவின் எதோ ஒரு தடுமாற்றத்தில்
என்னை தார்ச்சாலையில்
இழுத்துச் செல்கிறது எனது
இருசக்கரவண்டி
இந்த குரூரக் கனவுக்காரனிடம்
எந்த நம்பிக்கையில்
உங்கள் குழந்தைகளை அடுத்த தெருவில்
இறக்கிவிட்டுவிடும்படி
ஒப்படைக்கிறீர்கள்?
கவிதையை முழுதுமாக வாசிக்க. இங்கே சொடுக்கலாம்.
http://silarojakkal.wordpress.com/2014/01/09/3poems/
குடி பற்றி இவர்
எழுதிய ஒன்று நான் ரசித்து வாசித்தது
“சில்வர்டம்ளர்தான் இவன் இப்பொழுது உபயோகிப்பதும். என்னவோ ஒரு பழைய நியாபகத்தின் மிச்சம் என்றுதான் தோன்றுகிறது. மெல்ல ஒவ்வொரு சிப்பாக நக்கிக் குடிப்பவர்களைக் கண்டால் கடுப்பு ஏறுகிறது. அதிகபட்சம் இரண்டே மடக்கு. அல்லது ஒரே மடக்கில் எடுத்து மெதுவா டம்ப்ளரை எடுக்காமல் உறிஞ்சும்போது, ஒரு கிளாஸின் எதோ ஒரு நொடியில் வாயிலிருந்து அடிவயிறுவரை மொத்த குடலிலும் ஆல்கஹால் பயணிக்கும் நொடிதான் இவனுக்கான ஆசை. மிச்சம் இருக்கும் கால்வாசியை ஒரே மிடறில் விழுங்கிவிட்டு அந்த இரவிற்கு எடுத்துவைத்திருக்கும் முட்டை பொடிமாஸ் அல்லது ஊறுகாய் அல்லது சிக்கன் 65 அல்லது வேறு எதோ ஒன்று. பிறகு ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து ஆழ உறிஞ்சினால்.. யார் அது… ஹ்ம்ம்! காலன். அவனை அருகில் அழைத்து முத்தம் குடுத்ததைப்போன்ற ஒரு உணர்வு எழும். ஒரு ரவுண்ட் என்பது இவ்வளவுதானா?”
ஆல்கஹால் சில
குறிப்புகள்
‘தினம் ஒரு கவிதை’
என்ற ஒரு கவிதை விமர்சனத்தளம் ஒன்றை அமைத்து தொடர்ந்து அவர் ரசித்த நல்ல
கவிதைகளைக்குறித்தான விமர்சனங்களை எழுதிவருகிறார். கவிதைகளை விளக்குவது என்பது
வேறு. அவற்றை இப்படி எழுதியிருக்கலாம் அப்படி எழுதியிருக்கலாமென விமர்சிப்பது
என்பது வேறு. இரண்டின் புள்ளிகளைத்தொடாமல் தாம் உணர்ந்தவற்றை எழுதிச்செல்வது
எனக்கு ரொம்பப்பிடித்தம் இவரிடம்.
இங்கே சொடுக்கி
ஒவ்வொன்றாக வாசித்து இன்புறலாம்.
_________________________________________________________________________________________________________
நாளை இன்னும் சுவாரசியமான பதிவர்களின் பதிவுகளோடு உங்களைச்சந்திக்கிறேன்.
சில தளங்கள் அறியாதவை...அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுதிய அறிமுகங்களைக் கண்டேன். நன்றி.
ReplyDelete