Saturday, April 5, 2014

மதுவாகினி






இன்றைய தெரிவுகளாக நான் கொண்டுவருவது எழுத்துலகில் தமக்கென ஒரு இடத்தை உறுதி செய்துகொண்டு புதினங்கள்,சிறுகதைகள், கட்டுரைகள், திறனாய்வுக்கட்டுரைகள்,ஆராய்ச்சிகள் என பலவேறு பரிமாணங்களில் பரிணமிப்பவர்களைப்பற்றியது. முதலாக நான் எடுத்துக்கொள்வது ஐயா பெருமாள் முருகன் தளத்தை.

கவிதையில் தொடங்கிச் சிறுகதை, புதினம், கட்டுரைகள், அகராதி, பதிப்பு, தொகுப்பு என எதையெதையோ செய்து கொண்டிருப்பவன். மாணவர்களின் மனங்கவர்ந்தவனாக இருக்க விரும்பும் தமிழ் இலக்கியம் பயின்ற அரசுக் கல்லூரி ஆசிரியன். என்ற எளிய அறிமுகத்துடன் இவரது தளம் வரவேற்கிறது நம்மை.

நவீன வரலாற்றுக்குறிப்புகள், தமிழ் அறிக என்ற தொடர்கள் எப்போதும் தவறவிடக்கூடாத வாசிப்புக்கும் புரிதலுக்கும் உட்பட்டவை. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் அன்றாடச்சொற்களின் தோற்றம் அவை மருவியவை என விரிந்து செல்லும். எடுத்துக்காட்டிற்கு ஒன்று.

அணி + கலன் = அணிகலன் என்றாகும். இதில் அணி என்னும் முதல் சொல் வினை. அணிந்த, அணிகின்ற, அணியும் என விரியும் வகையிலானது. ஆகவேஅணிகலன்என்பதில் ஒற்று மிகாது. வினைத்தொகையில் ஒற்று மிகுவதில்லை. வழக்கமான உதாரணம்: சுடுசோறு, ஊறுகாய். இவை போன்றதே அணிகலன். ஆனால் அறை + கலன் என்பதில் அறை என்பது வினையல்ல. வினையாக எடுக்கலாம். ஆனால் பொருள் வராது. கன்னத்தில் அறைதல், பறையறைதல் ஆகியவற்றில் அறை என்பது வினைதான். அவ்வாறு வினைத்தொகையாக எடுத்தால் அறைந்த கலன், அறைகின்ற கலன், அறையும் கலன் என்றாகும். கொதிகலன் என்பது வினைத்தொகை. கொதித்த கலன், கொதிக்கின்ற கலன், கொதிக்கும் கலன் என விரியும்.  பொருள் பொருத்தம் உண்டு.

முழுக்கட்டுரையையும் வாசிக்க இங்கே சொடுக்கலாம்,



மாதொருபாகன், ஆளண்டாப்பட்சி ( இந்தப்பெயரை உச்சரிக்கவும் , எழுதவும் தெரியாது தவித்த பெரிய பத்திரிக்கைகளைப்பற்றிய ஒரு செய்தியைச்சொல்லி குறைப்பட்டுக்கொண்டார் ) ,போன்ற நூல்களை வெளியிட்டிருக்கிறார். நிறையக்கற்றுக்கொள்ளலாம். ஒருமுறை தளத்தில் உலவிச்சென்றால் போதும்.வாக்கிய அமைப்பு, சொற்தேர்வுகளில் இருக்கும் எல்லாவித ஐயங்களும் தீரும். புதிதாக எழுத வந்துள்ளவர்களுக்கு, ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்பவர்களுக்குமான ஒரு கலைக்களஞ்சியம் இவரது வலைப்பூ.

தமிழகத்தின் அத்தனை சிற்றிதழ்களிலும் இவரது படைப்புகளைக்காணலாம். அம்மாவைப்பற்றிய காலச்சுவடு பத்திரிக்கையில் வெளிவந்த இந்தப்பதிவு எனக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று.

நான் முழுமையாக அம்மா பையன். கூச்ச சுபாவியாகவும் தைரியம் அற்றவனாகவும் இருந்தேன். ஆகவே அப்பனின் முரட்டுத்தனமான அணுகுமுறை எனக்கு ஒத்து வரவில்லை. அம்மாவின் அர வணைப்பே பிடித்திருந்தது. பதினைந்து வயது வரைக்கும் அம்மாவுடன் படுத்துத்தான் தூங்குவேன். அம்மாவின் வயிற்றுக்குள் சுருண்டோ அம்மாவின் கால் மேல் என் கால்களைப் போட்டோ இறுகக் கட்டிக்கொண்டு படுத்தால்தான் தூக்கம் வரும். நடுஇரவில் சிறுநீர் கழிக்கப் போக வேண்டும் என்றாலும் அம்மா உடன்வர வேண்டும். பதினைந்தாம் வயதின்போதுஇன்னமே தனியாப் படுத்துக்கஎன்று சொல்லித் தனக்குப் பக்கத்திலேயே தனிக்கட்டில் போட்டுப்படுக்கப் பழக்கியதும் அம்மாதான். அம்மாவும் உடன் வந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடித்திருக்கிறேன். மூன்றுகல் தொலைவில் இருந்த பள்ளிக் கூடத்திற்குத் தினமும் கூட்டி வந்து விட்டுப்போனார். பையன்கள் கேலிசெய்வார்கள். அப்படியும் அம்மாவை விட எனக்கு மனமில்லை. காட்டுக்குள் இருந்த எங்கள் வீட்டிலிருந்து சாலை வரைக்கும் வந்து அனுப்புவதைப் பழக்கமாக்கினார். கண்ணுக்கு எட்டாத தொலைவுக்கு நான் செல்லும்வரை சாலையிலேயே அம்மா நிற்பார். புளியமரங்கள் அடர்ந்த சாலையோரத்தில் என்னைப் பார்த்தபடி நிற்கும் அம்மாவின் தோற்றம் எனக்குள் இன்னும் பத்திரமாக இருக்கிறது.

முழுமையாக வாசிக்க



தவறவிடக்கூடாத வலைப்பூக்களில் ஒன்று, மேலும் தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுகிறது. இங்கே சொடுக்கி வாசிக்கலாம்.


________________________________________________________________________________________________________________________

எழுத்தாளர் பைரவன் (இசைக்கருக்கல்)

தமிழகத்தின் முன்னணி :) எழுத்தாளர்களில், கவிஞர்களில் ஒருவர் இசைஎன்கிற இந்த சத்தியமூர்த்தி.
கவிதைக்களஞ்சியம் இவர். வாசிக்கலாம், அனுபவிக்கலாம், உணரலாம் இன்னும் எத்தனையோ லாம்களை சொல்லிக்கொண்டே செல்லலாம். அத்தனைக்கும் உரியவர். நான் எப்போதும் இவரது தளம் புதுப்பிக்கப் படும்போது சென்று பார்த்து வாசித்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பது வழக்கம்.
கவிதைகள், கட்டுரைகள், இன்ன பிற ஆக்கங்களயும் தொடர்ந்து செய்தாலும் கவிதை தான் இவருக்கு கைவந்த கலை. எனக்குப்பிடித்தது.

இதுவரை வெளிவந்திருக்கும் இவரின் நூல்கள்: காற்று கோதும் வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்) உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) , சிவாஜிகணேசனின் முத்தங்கள் ( கவிதைகள்) , அதனினும் இனிது அறிவனர் சேர்தல்- கட்டுரைகள்

நான் ரசித்த கவிதை ஒன்று

அப்போது என் முன்னே
இரண்டு விரல்கள்  நீட்டப்பட்டன.
ஒன்று கொலை
மற்றொன்று தற்கொலை
நான் இரண்டுக்கும் நடுவே நீண்டிருந்த
அந்த அரூபவிரலைப் பற்றினேன்.
இந்த வரிகளை
அந்த விரல்கொண்டே எழுதுகிறேன்.


இன்னொரு பைத்தியம் பிடிக்கவைக்கும் கவிதை

தற்கொலைக்கு தயாராகுபவன்
பித்து நிலையில்
என்னென்னவோ செய்கிறான்
அவன் கையில்
குடும்ப புகைப்படமொன்று
கிடைக்கிறது .
அதிலிருந்து தனியே தன்னுருவை
பிரித்தெடுக்கும் முயற்சியில்
கத்தரிக்க துவங்குகிறான்
எவ்வளவு நுட்பமாக செயல்பட்டும்
கைகோர்த்திருக்கிற
தங்கையின் சுன்டுவிரல் நுனி
கூடவே வருவேனென்கிறது


தொடர்ந்தும் வாசிக்க்கிறேன், நீங்களும் வாசிக்கலாம் இங்கே


__________________________________________________________________________________________________________________

தூரன் குணா

ஒருமுறை இங்கு நடந்த ஒரு புத்தகவெளியீட்டு விழாவில் சந்தித்தேன் தூரன் குணாவை. அதிகம் பேசவில்லை. விழா மும்முரத்தில் , பின்னர் வீடு திரும்பும்போது கூடவே பேருந்தில் பயணித்தார். இத்தனை காலமும் எனது வீட்டிற்கு அடுத்த நிறுத்ததில் தான் வசித்திருக்கிறார். தெரியவேயில்லை J
இப்படித்தான் அறிமுகம் ஆனது. கல்லூரிக்காலங்களிலிருந்து எழுதிக்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
வாசிக்க, புரிந்துகொள்ள என கொஞ்சம் நேரம் ஒதுக்கி உட்செல்ல முனைந்தால் இவரைப்புரிந்து கொள்ளலாம்.

மொழிபெயர்ப்புக்கவிதைகள், சிறுகதைகள்,புதினம், கட்டுரைகள் என எல்லா ஏரியாக்களையும் கட்டி இழுப்பவர்.

முழுமையை விரும்பும் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு நுணுக்கமான கவனத்தைக் கோரும் மொழியாக்கம் நிச்சயம் சவாலானதே. ஒவ்வொரு நிலமும் அதன் மொழியும் அச்சமூகத்தின் வாழ்வியலால், கலாச்சாரத்தால், அதன் வரலாற்றுப் பின்புலங்களால் கட்டுமானம் செய்யப்பட்ட தனித்துவ திரள்கள் என்றால் மொழியாக்கக் கலைஞன் இத்திரள்களுக்கு இடையேயான இணைப்பை இடறலற்ற வகையில் நிர்மாணிக்க வேண்டியிருக்கிறது. வாசகனின் நினைவுத்தொகுப்பு மூலமொழியால் கட்டமைக்கப்படாத நிலையில் இயல்பாகவே மொழியாக்கங்களில் கூடிவரும் ஒருவித அந்நியத்தன்மையை குறைக்கும் பொறுப்பு மொழிபெயர்ப்பாளனிடமே இருக்கிறது. நிற்கபல வருடங்களுக்கு முன்னால் kicked the bucket என்பதை அவன் பக்கெட்டை எட்டி உதைத்தான் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்படும் நகைச்சுவை இவ்விடத்தில் நினைவிற்கு வருகிறது. இது போன்று கவனக்குறைவாலும் அறியாமையாலும் நிகழும் பிழைகளைத் தவிர்க்கவேண்டியது இலக்கிய மொழிபெயர்ப்பாளனின் மிக முக்கியக் கடமை. 

முழுக்கட்டுரையையும் இங்கே வாசிக்கலாம்



சுவரெங்கும் அசையும் கண்கள்,கடல்நினைவு போன்ற கவிதைத்தொகுப்புகளையும், திரிவேணி என்ற சிறுகதைத்தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

பிரார்த்தனையின்
பழமையான நூலகத்தில்
ஒரே ஒரு
நூல் மட்டும் மிச்சமிருக்கிறது
அதன்
ஒற்றைத்தாளில் இருக்கும்
ஒரெயொரு சொல்லின்
இறுதி இரண்டு எழுத்துக்கள்
உதிர்ந்துவிட்டன
மிச்சமிருக்கும்
ஒரேயொரு எழுத்தின் பலத்தில்தான்
இப்பரந்த பெருவெளி
தொங்கி
கொண்டிருக்கிறது.



புகைப்பதைக் கைவிடுதல்என்ற இவரின் கட்டுரை அதிகம் வாசிக்கப்பட்ட ஒன்று. அதிலிருந்து ஒரு துளி.

இது எங்கு போய் முடிந்தது என்றால் ஒரு தனித்த கணத்தை எதிர்கொள்ளும்போது, அது மகிழ்ச்சியோ அல்லது துயரமோ, சிகரெட் இல்லாமால் அந்த அனுபவம் பூரணமடைவதில்லை என்று நம்ப ஆரம்பித்துவிட்டேன். ஏதாவது ஒரு புதிய ஊருக்குச் சென்றால் பேருந்திலிருந்து இறங்கியவுடன் முதல் வேலையாக ஒரு டீயும் தம்மும் அடித்து முடிக்கவேண்டும். அதுதான் நான் அந்த ஊருடன் பந்தத்தை ஸ்தாபிக்கும் நிகழ்வு. யாராவது ஸ்ரீவில்லிப்புத்தூர்க்காரர்களை வெளியூரில் எங்கேனும் சந்தித்து அவரின் ஊரை அறியவந்தால் , நான் ஊர் கோவிலின் கோபுரத்தைப் பார்த்துக்கொண்டே கிங் சைஸ் புகைத்திருக்கிறேன் என்று சொல்லக்கூடும்.ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான கற்பிதங்கள் ஒரு விதமான மனநோயோ என்று அஞ்சினேன். ஆனாலும் இந்த மனப்போக்கைப் பற்றி தைரியமாக ஆராய்ந்து கொள்ள முடிந்ததால் நிச்சயம் இவை மனநோயின் அறிகுறியல்ல என்றும் தட்டையான வாழ்க்கையை புனைவாக்கிக் கொள்ள என் மனம் செய்யும் தந்திரங்கள் என்றும் நினைத்துக்கொண்டேன்.



அவர் தளைத்தை தொடர


_________________________________________________________________________________________________________________________

மதுவாகினி

எல்லோரையும் எழுதிவிட்டு இவரை எழுதாமல் விட்டால் நாளைப்பின்ன ஒரு இலக்கியக்கூட்டத்துக்குப் போகமுடியாது. சும்மா சொன்னேன். அந்த மதுவாகினி என்னதான் தருகிறாள் என்றே எனக்குப் புரியவில்லை. கவிதை மழையாகப்பொழிகிறது. பெரியசாமி என்ற பெயரையே மாற்றி மதுவாகினிஎன வைக்குமளவிற்கு அத்தனை மதுவாகினிக்கவிதைகள்.!

இறுக மூடிய பின்னும்
சொட்டும் துளிகள்
நிரம்பி வழிகிறது
ஒன்றை மறந்து
பிரிதொன்றை கேட்டபடி இருக்கும்
மகனின் ஆசைகளும்


முழுதும் இந்தக்கவிதையை வாசிக்க இங்கே சொடுக்கலாம்



ஒரு நூல் விமர்சனத்திற்கென எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும் மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார்குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்கவிதையில்.

முழுதும் வானவில்லான மோகப்பரிபூரணியை வாசிக்க

http://naperiyasamy.blogspot.in/2013/03/blog-post_26.html

சினிமா பாரடீஸொ கொஞ்சம் இங்கும்.. :)

அடுத்த பீடியோடு நின்று பார்த்துக்கொண்டிருப்பார் போஸ்டரை சரியாக இருக்காவென. சிறிதாக பிசிறு தட்டியிருந்தாலும்  மீண்டும் பிரித்து ஒட்டுவார். சுவற்றிலிருந்து எத்தனைமுறை பிரித்தாலும் அவருக்கு மட்டும் அந்த போஸ்டர் கிழியவே கிழியாது. மீண்டும் கன்னம்தட்டி சிரிப்பை கையில் அசைத்து பறப்பார். பசைமண மகிழ்வில் வீடு திரும்புவேன். ஒரு நாளும் பெயரைக் கேட்டதே இல்லை. அவரும்தான். கண்ணாவென கூப்பிடுவார். நானும் போஸ்டரண்ணே என்பேன். மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் செல்வோம் தியோட்டருக்கு. வரும்போதும் நடந்தேதான். பஸ்சிற்கு காசு தரமாட்டார்கள். சினிமாவிற்கு மட்டும்தான் காசுகொடுப்பார்கள். மழைக்காலத்தில் மட்டும் பஸ்சிற்கும் கொடுப்பார்கள். போஸ்டர் அண்ணாதான் டிக்கெட் கிழிப்பவராக இருப்பார். நான் விரும்பும் இடத்தில் எனை ஒக்கார வைப்பார். ஆப்ரேட்டர் ரூமுக்கு அழைத்துச் செல்வார். இடைவேளையின்போது அங்கு போய் பிலிம் ரோலை சுற்றிக்கொண்டிருப்பேன். கல்கோணாவோ, முறுக்கோ தவறாமல் கிடைத்துவிடும். தியேட்டரில் ஒரு மூலையில் சிறியதாக இருந்த கடை கை கால் முளைத்து பெரும் உருவமாய் மாறிக்கொண்டிருக்க அதன் பசிக்கு தியேட்டரே பலியாகிட அவ்விடங்களில் பெரிய கடை மட்டுமே இப்போது... எனது ஹீரோ எங்கு இருப்பாரோ... எப்படி இருக்காரோ...

முழுக்கட்டுரையை வாசிக்க 




இவரை இங்கே பின் தொடரலாம்


_________________________________________________________________________________________________________________________


நாளை இன்னும் சில பிரபலங்களின் வலைப்பூக்களுடன் உங்களைச்சந்திக்க வருகிறேன்.

3 comments:

  1. முடிவில் உள்ள தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. புதிய வலைப்பூக்களைப் பார்த்தேன், ரசித்தேன்.நன்றி.

    ReplyDelete
  3. வித்தியாசமான அறிமுகங்கள் ...
    நன்றி!

    ReplyDelete