Saturday, September 20, 2014

சென்றிடுவீர் எட்டுத்திக்கும்


நம் வாசிப்பின் தளத்தை விரிவு படுத்துபவை புனைவிலக்கியங்களும் மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் என்றால் மிகையில்லை.  வாசிப்பு என்றால் என்ன? வாசிப்பின் உண்மையான பொருளை நமக்கு விளக்குகிறார் சுந்தர ராமசாமி அவர்கள்.

வாசிப்பு என்பது மற்றொருவர் உரையாட, நாம் கேட்டுக் கொண்டிருப்பது. உரையாடக்கூடியவர் அங்கில்லை. ஆனால் அவரது உரையாடலை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நம்முடன் அவர் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதுகூட அவர் அறியாத காரியமாக இருக்கும்; அப்போதும் அந்த உரையாடல் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்து பல நூற்றாண்டுகள் ஆயிருக்கும். அப்போதும் அவர் நம்மைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தைத் தரும் இந்த வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறபோது இது மனித குலத்திற்குக் கிடைத்த ஒரு பெரும் வாய்ப்பாக எனக்குப்படுகிறது என்கிறார் அவர்.

வாசிப்புமுறையில் நிகழும் வளர்ச்சிதான் எழுதத் தூண்டும். எழுதுவதற்கு வாசிப்பே முக்கியம். அப்படி வாசிக்கும்போது சில புரிதல்கள் நமக்கு வேண்டும். பேச்சு வழக்குப் படிமங்கள் எழுத்தில் நுழைந்து கலாச்சாரமாய் மாறி இலக்கியமாக வடிவம் கொள்கிறது. இந்தப் புரிதலோடுதான் வாசிப்பு அமைய வேண்டும் என்கிறார் பாவண்ணன் அவர்கள்.


நம்முடைய வாசிப்பு அந்தப் புரிதலோடு அமைந்திருக்கிறதா என்பதை நாம்தான் ஆராய்ந்து தெளியவேண்டும். இன்றைய பதிவில் சில புனைவுகளையும் மொழிபெயர்ப்புப் படைப்புகளையும் காண்போம்.

1. பல பிரபல எழுத்தாளர்களின் வலைப்பூக்களின் முகவரியை அறிந்துகொண்டு உங்கள் வாசிப்பை விசாலமாக்க விருப்பமா? இதோ வழிகாட்டி உதவுகிறார் சசிதரன் அவர்கள். புத்தக விமர்சனங்கள், திரைப்படங்கள் குறித்த ஏராளத் தகவல்களைப் பற்றி அறிய அவரது தளத்துக்கு அவசியம் வாருங்கள்.

2. இரா.முருகன் அவர்களின் தளத்தில் கிடங்கு சிறுகதை. சுட்டுவிரலும் தொடமுடியாத ஒரு சதிராட்டக்காரியின் உடல் சவக்கிடங்கில் கிடக்க நேரிடும்போது எழும் அவலம் எழுத்துக்களின் வார்ப்பில் அடிவயிற்றைச் சுண்டுகிறது

3. சின்ன சம்பவம் என்று ஒன்றும் உலகத்தில் கிடையாது என்ற முன்னுரையுடன் துவங்குகிறது .முத்துலிங்கம் அவர்களின் சின்ன சம்பவம் என்னும் சிறுகதை. டொரண்டோவில் வாடகை டாக்ஸி ஓட்டுபவனின் அனுபவத்தொகுப்புகள் ஒரு சுவாரசியமிக்க கதையாக.. முடிவில் தொக்கும் கொக்கியுமாக..

4. மீன்பிடிக்கும் விஷயத்தில் தாத்தாவுக்கும் பேரனுக்கும் இடையிலுண்டாகும் உளச்சிக்கல்களை, அடிபடும் ஆளுமையுணர்வை, மனப்போராட்டத்தை அழகாக எடுத்துரைக்கும் கதை சா.கந்தசாமி அவர்களின்  தக்கையின் மீது நான்கு கண்கள். சிறுகதைகள்.காம் தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன இன்னும் நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின்  சிறுகதைகள்.  

இரண்டாம் நிலைக் குடிமகன் என்பது போல மொழிபெர்ப்புகளை இரண்டாம் நிலைப் படைப்புகளாகத்தான் கருதுகிறார்கள். இந்த நூல்களை இரண்டாம் தட்டில்தான் வைப்பார்கள்.ஆனால் மகத்தான இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு மூலம்தான் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்கிறார் அசோகமித்திரன்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் என்கிறார் பாரதியும்.                 
  
5. நவீன ஆப்பிரிக்க இலக்கியத்தின் தந்தை என்று போற்றப்படும் உலகப் புகழ் பெற்ற நாவலாசிரியர், கவிஞர், சிறுகதையாசிரியர்  மற்றும் திறனாய்வாளரான சினுவா ஆச்சிபியின் சிதைவுகள் என்னும் கதையை தமிழில் அழகாய் மொழிபெயர்த்த திரு.என்.கே.மகாலிங்கம் அவர்கள் பூரணி என்னும் சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.  உச்சரிக்கச் சிரமப்படுத்தும் ஆப்பிரிக்கப் பெயர்களையும், அவர்களின் ஆச்சரியமூட்டும் விநோதமான சடங்குகள், சம்பிரதாயங்களையும் கொஞ்சமும் அந்நியமாக உணராத வகையில் தமிழையும் வாசகர்களையும் படுத்தாமல்  வெகு அழகாய்த் தமிழ்ப்படுத்தியிருக்கிறார் என்று புத்தக விமர்சனத்தை வெகு அழகாய் முன்வைக்கிறார் தோழி காயத்ரி சித்தார்த் தன் பாலைத்திணை தளத்தில்.

6. கலாநிதி. கே. எஸ் சுப்பிரமணியன் அவர்கள் Tamil poetry today என்கின்ற பெயரிலே 106 தமிழ்க் கவிதைகளை தொகுத்து ஆங்கிலத்திலே அவற்றை மொழிபெயர்த்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக் கூடாக வெளியிட்டிருக்கின்றார். அந்நூல் குறித்து ஊரோடி தளத்தில் இன்றைய தமிழ்க் கவிதைகள் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள  விமர்சனம்.

7. ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி எழுதிய நெஞ்சை நெகிழவைக்கும் அற்புதமான கதையை ஆங்கிலம்  வழியே கிறிஸ்துமஸ் மரமும் ஒரு திருமணமும் என்ற தலைப்பில் தமிழாக்கித் தந்துள்ளார் முனைவர் எம்.ஏ.சுசீலா அவர்கள்.

8. ஆங்கிலத்தில் ஜான் சீவர் எழுதிய விநோதமான வானொலிப் பெட்டியைப் பற்றியும் அதனால் எழுந்த மனச்சீர்கேடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள விருப்பமா? தமிழில் ப்ரமாண்ட வானொலிப்பெட்டி என்ற பெயரில் தோழி பத்மா எழுதி கல்குதிரையில் வெளியான கதையை வாசிக்க வாருங்கள்.
      
9. ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரதியில் உள்ளார்ந்து காணப்படும் உணர்வுநிலையை, அதன் கலாசாரப் பின்புலத்தை, அது உணர்த்தி நிற்கும் அரசியலை, அம்மொழி சார்ந்த குறியீட்டுப் படிமங்களை அல்லது உவம உருவகங்களை எல்லாம் கவிதைக்கே உரிய அழகியல் அம்சங்கள் கெடாத வகையில், மற்றொரு மொழிக்குக் கொண்டுவருதல் என்பது மிகப் பெரும் சவால்தான் என்கிறார் கவிஞர் லறீனா அப்துல் ஹக் தனது நிலாப்பெண் தளத்தில். கவிதை மொழியாக்கம் குறித்து கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச இலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரையை இங்கு காணலாம்.

10. தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைதான் யார் அறிவார் என்ற பாடலைக் கேட்டிருக்கிறோம். மீன்கள் அழுமா? அப்படி அழும் என்றால் ஏன் அழுகின்றன? ஜப்பானியக் கவிஞர் மட்சுவோ பாஷோ எழுதிய கவித்துளிகளை அழகு தமிழில் பருகத் தருகிறார் தோழி ராமலக்ஷ்மி முத்துச்சரத்தில்.

11. பூத்தாலும் காய்க்காத மரங்கள் பற்றியும் பாத்தி கட்டி விதைத்தாலும் முளைக்காத விதைகள் பற்றியும் சிறுபஞ்சமூலப்பாடல் என்ன சொல்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடிவது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் அதை ஆங்கிலத்திலும் அறிய முடிவது இரட்டை மகிழ்ச்சி அல்லவா? சங்க இலக்கியப் பாடல்களை தமிழறியாதோரும் ரசிக்கும் வண்ணம் நேர்த்தியாய் ஆங்கிலமாக்கம் செய்யும் தோழி தேமதுரத் தமிழ் கிரேஸின் முயற்சி பெரிதும் பாராட்டுதற்குரியது.

12. ஷ்ரபணி பாசு எழுதிய விக்டோரியாவும் அப்துலும்  நூல் விமர்சனத்தை உஷா.வை அவர்களின் வரிகளில் வாசிக்க சொல்வனத்துக்குள் நுழையுங்கள். விமர்சனத்திலிருந்து சில வரிகள் கீழே

மகாராணி விக்டோரியாவை அதிகாரத்தால் திடப்படுத்தப்பட்ட ஓர் அரசியாய் அல்லாமல், ஒரு சுவாரசியமான பெண்ணாய், அவருடைய பலவீனங்கள், பிடிவாதங்கள், தாபங்களுடன் பார்க்கமுடிகிறது. 19 வயதில் முடியேற்று, 60 வருடங்களுக்கு மேல் ராணியாய் வாழ்ந்தவருக்கும் சராசரி மனிதர்களுக்கிருக்கும் பாசத்துக்கான ஏக்கம், நட்புக்கான தேடல், அவருடைய பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும் தேவைப்படாத தாய்மைக்கான ஒரு வடிகால் இவையெல்லாம் தேவை எனப் புரிகிறது.




இன்றைய பதிவுகளை அனைவரும் ரசித்து மகிழ்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி. வணக்கம். 



29 comments:

  1. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ஐந்தாவது இணைப்பு மற்றும் சரி செய்ய வேண்டும் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. சரிசெய்துவிட்டேன். சுட்டியமைக்கு மிகவும் நன்றி தனபாலன்.

      Delete
  2. இன்றைய பதிவுகள் எல்லாம் மிக சிறப்பானது. அனைவருக்கும் வாழ்த்துக்கள். அனைத்தையும் படித்து தேர்ந்து எடுத்து கொடுத்த உங்கள் உழைப்புக்கு வாழ்த்துக்கள் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  3. வாசித்தல்
    சுவாசித்தலுக்கு சமமாம்...
    நம்மை நாமே அறிந்துகொள்ளவும்
    நம் உணர்வுகளை புரிந்துகொள்ளவும்...
    நமதான பண்பாட்டினை
    நயமோடு காக்கவும்
    வாசித்தல் அவசியமே..
    மேன்மையான பதிவர்களின் அறிமுகம்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசனையான பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      Delete
  4. வாசித்தலே சுவாசித்தலுக்கு அர்த்தமாகின்றது....வாழ்த்துகள் மா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கீதா.

      Delete
  5. என் தள அறிமுகத்திற்கு மனங்கனிந்த நன்றி கீதமஞ்சரி..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      Delete
  6. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் யாவும் தமிழில் படைத்திட விரும்பினார் பாரதி. அந்த முண்டாசுக் கவிஞரின் தாசர்களாய் இன்று வலையுலகில் வலம் வரும் எம்போன்ற பலருக்கும் இன்று நல்விருந்தளித்தீர் கீதா. வாழி நீ நீடூழி..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கணேஷ்.

      Delete
  7. மிக சுவாரஸ்யமான தளங்கள். பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி மேடம்.

      Delete
  8. வாசிப்பு குறித்த பகிர்வோடு தொகுத்து வழங்கிய சரத்தில் எனது பதிவும் இடம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. நன்றி கீதா.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ராமலக்ஷ்மி.

      Delete
  9. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  10. வாசிப்பு பற்றிய சுவாரஸ்யமான முன்னுரையும், இன்றைய அறிமுகங்களும் மிகவும் அருமை. அனைவருக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.

      Delete
  11. தங்களின் தேடுதலின் கடினஉழைப்பை பார்த்து அதிசயிக்கின்றேன் சகோதரி, அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  12. இன்றும் உங்கள் அறிமுகங்கள் யாவும் அருமை!
    அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி இளமதி.

      Delete
  13. வாசிப்பின் முக்கியத்துவத்தை உங்கள் முன்னுரை உணர்த்துகின்றது சிறப்பான அறிமுகங்கள் இன்றையதினத்தில் பாராட்டுகள்.
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பதிவை ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி ப்ரியசகி.

      Delete
  14. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. இப்பொழுது தான் பார்த்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete