Sunday, November 30, 2014

அன்புச் சகோதரி மஞ்சு பாஷினி வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்களிடம் ஒப்படைக்கிறர்.

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் (30.11.2014 ல்)  முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைத் தங்கை திருமதி மஞ்சு பாஷினி  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - மகிழ்ச்சியுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 131
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 184
பெற்ற மறுமொழிகள் : 274
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 38
வருகை தந்தவர்கள்      : 1866



அன்புச் சகோதரி மஞ்சு பாஷினியினைப் பாராட்டி நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்பி வைப்பதில் பெருமையுடன் கூடிய பெரு மகிழ்ச்சி  அடைகிறேன்.



01.12.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து ஒரு வார  காலத்திற்கு ( 07.12.2014  ) ஆசிரியப் பொறுப்பு ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  இணக்கம் தெரிவித்த உயர்திரு பழனி கந்த சாமி ஐயா அவர்கள்   நாளை ( 01.12.2014 ) காலை முதல் தான் ஏற்ற பணீயினைச் சிறப்பாகச் செய்யும் வண்ணம் - அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை   சரி வர முழு மனதுடன் நிறைவேற்ற  சம்மதித்து இருக்கிறார்.

இவருடைய வாழ்க்கைக் குறிப்பு. :

இவர் 1935 ம் வருடம் கோவைக்கு அருகிலே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தகப்பனார் சிறு வயதிலேயே கோவை நகரத்திற்கு குடி பெயர்ந்தவர். இவர் தன்  சிறு வயது  முதல் இன்றுவரை இவருடைய வாசம் கோவை நகரமே.

இவரது  படிப்பு ஒன்றாம் வகுப்பிலிருந்து பி.எச்.டி. வரை கோவையிலேயே முடித்தார்.. விவசாய இலாக்காவில் 1956 ம் வருடம் சேர்ந்து பல பதவிகளில் வேலை பார்த்து 1994 ம் ஆண்டு பணி நிறைவு பெற்றார். பணிக் காலத்தில் ஸ்வீடன், நெதர்லாந்து, இஸ்ரேல், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா ஆகிய வெளி நாடுகளுக்குச் சென்று  வந்திருக்கிறார்,

இவருடைய பொழுது போக்குகள், கர்னாடக இசை கேட்டல், புத்தகங்கள் படித்தல், சுற்றுலா செல்தல் ஆகியவை ஆகும். இவருடைய நண்பர் ஒரு பதிவு வைத்திருந்ததைப் பார்த்து இவரும் பதிவுலகில் 2009 ம் ஆண்டு அடிஎடுத்து வைத்தவர்.  இது வரை சுமார் 700 பதிவுகள் பதிந்திருக்கிறார்.

உயர்திரு பழனி கந்த சாமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்று நாளை முதல் துவங்கும் வலைச்சர வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார் 

நல்வாழ்த்துகள் பழனி கந்த சாமி

நட்புடன் சீனா 

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்

விடுமுறை நாளின்... அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே....



உதவி செய்ய சந்தர்ப்பம் இருந்து அந்த உதவி செய்தோம் என்றால் செய்த உதவியின் பலன் நம்மை பின் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.... நமக்கு அவசியமான நேரத்தில் சரியாக நாம் செய்த உதவியின் நற்பலன் நமக்கு உதவியாக திரும்ப கிடைக்கும்..  என் அனுபவத்திலே இது பலமுறை நடந்திருக்கிறது. உதவி என்று கேட்டு வரும்போது அவர் நம் நட்பா விரோதியா உறவா, பதிலுக்கு வேறு ஏதாவது திரும்ப கிடைக்குமா இந்த உதவியால்  என்று பாராமல், உதவி செய்ய முற்படுவது தான் ஆத்மார்த்த உதவி. 

இன்னைக்கு இன்னும் சுருக்க எழுதிட்டேன் பார்த்தீங்களா?? படிக்க பொறுமை இருக்கனும்ல உங்களுக்கும்.. அதான் குட்டி குட்டியாவே எழுதிடறேன்...

இன்னைக்கு வெற்றிகரமான ஏழாம் நாள்... எனக்கு கொடுத்த பொறுப்பை நான் சரிவர செய்தேனா என்பதை வலைச்சர ஆசிரியர் குழு தான் சொல்லவேண்டும். 

மனம் கவர் பதிவர்கள் - ஏழாம் நாள்
1.  கானகம்
இவர் வலைதளத்துக்கு இந்த பெயர் வைத்ததற்கான காரணத்தை மிக அருமையாக எழுதி இருக்கிறார். விவசாயத்தை பாடமாக படித்ததாலும், காடுகளின் மீது கொண்ட தீராக்காதலும் தான் இந்த பெயர் வைக்க காரணமாக இருந்தது என்றும், ஆனால் இவருடைய எழுத்துகள் எல்லாவற்றையும் சுற்றி வந்து எழுதும் எழுத்துகள் என்று சொல்லி இருக்கிறார்.
ஆதிக்காலத்து ஒரிஜினல் நாகப்பட்டிணம் நெய் மிட்டாய்க்கடை

2.  என் ராஜப்பாட்டை
ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர். குடந்தையூர் சரவணன் எடுத்த குறும் படம் பற்றிய அருமையான விமர்சனம் எழுதி இருக்கிறார்.
சில நொடி சிநேகம் குறும்பட விமர்சனம்

3.  வெங்கட் நாகராஜ்
ஊர் ஊராய் சுற்றிய பயணங்களை சுவாரஸ்யமாக எழுத்தில் படமாக்கி கொண்டு வந்து பகிர்ந்து, சிந்தித்தவை எல்லாம் பதிவாக்கி, போன வாரமும் அதற்கு முன் வாரமும் வலைச்சர ஆசிரியர் களத்தில் சிறப்பாய் எழுதிய வித்தகர் இவர்.
ஃப்ரூட் சாலட் 

4.  கவிச்சோலை
களைப்பை போக்கி இளைப்பாரவைக்கும் கவிச்சோலை இவருடைய வலைதளம்..
மீண்டு வருமோ

5.  மூங்கில்வனம்
மூங்கில்வனம் மிரட்டவில்லை... மாறாய் அனுபவங்களை சொல்லி செல்கிறது.
பயணம்

6.  குரல்
இவருடைய குரல் இவர் விரும்பி ஏற்ற தொழில் பேச்சு... இவருடைய எழுத்து இவர் நேசித்த ஊற்று...
அபி உலகம்

7.  புதியவன் பக்கம்
நெஞ்சுரமும் நேர்மையும் பாரதியின் வரிகளை தன் வலைதளத்தில் முகப்பாக வைத்திருக்கும் கம்பீர எழுத்தாளர். மனதில் பட்டதை தைரியமாக எழுதும் திண்மையான எழுத்தாளர்.
கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க

8.  எனது கவிதைகள்
இவருடைய எழுத்துகள் யாவுமே கவிதைகளின் காதலனாகவும் குழந்தையின் ரசிகனாகவும் சொல்லி செல்கிறது... வாசிக்கும் நமக்கும் பிரமிப்பு ஏற்படுவது உண்மை.
கோடிக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் குழந்தைகள்

9.  வித்யாசாகரின் எழுத்துப்பயணம்
கால ஏட்டில் கண்ணீராகவேனும் கரையத்துடிக்கும் ஒரு இதயத்துடிப்பு இவருடைய எழுத்துகள் என்று சொல்லும் இந்த வித்தகரின் ஒரு நூலுக்கு அணிந்துரை எழுதிய சந்தோஷம் எனக்குமுண்டு.. நிறைய புத்தகங்கள் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அழகிய கவிதைகள், மனம் கவரும் பகிர்வுகள் என்று ஏராளம் உண்டு.
வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்

10. கடற்கரை
இவருடைய எண்ண அலைகள் சங்கமிக்கும் கரை என்று சொல்லும் இந்த எழுத்தாளரின் கைவண்ணத்தில் தீபாவளி என்ற சிறுகதை மிக அருமை.
நாளைக்கு தீபாவளி ( தீபாவளி சிறப்பு சிறுகதை)

11. சிலிர்க்கும் சிந்தனை
நேர்க்கொண்ட சிந்தனை, எழுத்துகளில் தெறிப்பதுண்டு... சமூக அவலங்களை சாட்டையடியாக தன் எழுத்தில் கொண்டு வந்ததும் உண்டு. இதை தவிர இன்னும் மூன்று வலைதளமும் இவருக்கு உண்டு.
எந்தமிழே

12. கணிணி மென்பொருட்களின் கூடம்
இவருடைய எழுத்துகள், இவருடைய தீராக்காதல் எல்லாமே கணிணியை சார்ந்ததாகவே இருக்கும்.. நிறைய கணிணி சம்மந்தப்பட்ட விவரங்களை வலைதளத்தில் அசத்துகிறார் இவர்.
பெண்டா ஷோ - ஆபிசு 2013 இலவசமாக

13. நாஞ்சில் மனோ
இவருடைய பகிர்வை படித்துவிட்டு சிரிக்காமல் இருக்கவே முடியாது. அத்தனை தத்ரூபமாய் நகைச்சுவை இருக்கும் இவர் எழுத்தில்.. சுவாரஸ்யத்தை கூட்டி எழுதும் வித்தகர் இவர்.
கத்தி திரைப்படம் நாஞ்சில் மனோ விமர்சனம்

14. நிலவோடு ஒரு நெடும் பயணம்
நிலவோடு பயணிக்கும்போது உலகத்தையே மறக்கிறேன் என்று சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்... இவருடைய பகிர்வை வாசிக்கும் நமக்கோ இவருடைய வலைதளத்தை விட்டு நகரமுடியாதபடி விஸ்தரிக்கிறார். அருமையான எழுத்தாளர்.
என் பள்ளி ஆசிரியர்கள்

15. KASU SOBANA
எல்லோருக்கும் பயனுள்ள நல்ல விஷயங்களை பகிரும் வலைதளத்துக்கு சொந்தக்காரர்.
எறும்பு

16. DR. PRAKASH
நிறைய நல்ல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
இந்தியாவின் பட்டினியை போக்கியவர்

17. அண்ணாமலையின் கவிதைகள்
காதலைப்பற்றி எழுதி சோர்ந்து போகாத எழுத்துக்கு சொந்தக்காரர்.
காதல் கற்றவன்

18. இளையநிலா ஜான் சுந்தர்
மெல்லிசை கலைஞரான இவர் எழுதியவை எல்லாம் மெல்லிசை கலைஞனின் நினைவு குறிப்புகளும், வற்றாத கவிதை பிரவாகமான எழுத்துகளும்...
தெருவில் அலையும் தேவதைகள்

19. STUDENTS TALENTS
இந்த வலைதளத்தில் எல்லா குட்டீசுடைய வரையும் திறனை வெளிக்கொணர்ந்து அதை உற்சாகப்படுத்தி வரவேற்கிறார்கள். இந்த வலைதளத்தில் என் மகன் இபானுக்கும் ஒரு முறை அவனுடைய வரைதல் திறமைக்கு முதன்மையாக வந்தான். இதோ சசிகாந்த் என்ற  ஒரு குழந்தை சாதித்ததை கொடுத்திருக்கிறேன் பாருங்கள்
SASIGANTH'S BEN 10

20. காணாமல் போன கனவுகள்
நம்ம ராஜியோட வலைதளத்தை குறிப்பிடாமல் நான் வலைச்சரத்தை முடித்துவிட்டால் சாமி வந்து என் கண்ணை குத்திவிடும்.. அட்டகாசமான பேசும்போதே டைமிங் கௌண்டர் கொடுத்து அசரவைக்கும் இவருடைய எழுத்துகள் மிக மிக வீரியம் பெற்றவை.. அது சுவையான சமையலானாலும் சரி, அனுபவ பகிர்வு கோப்பானாலும் சரி, கோயிலுக்கு சென்று ஒவ்வொரு கோயில் பற்றிய தொகுப்பானாலும் சரி. ஐஞ்சுவை அவியலானாலும் சரி. அனாயசமாக எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
கோதுமை வடை - கிச்சன் கார்னர்


என் மனம் கவர் கவிதைகள் நிறைய முகநூலில் பார்த்து வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். அவர்களும் ப்ளாக் தொடங்கி எழுதவேண்டும் என்பது என்னுடைய  பேராசை பேரன்பு மிக்க பேராசை. ஏனெனில் முகநூலில் மூழ்கி இருக்கும் இவர்களுடைய தொகுப்புகள் அப்படியே போய்விடாமல் ப்ளாக் தொடங்கி அதில் பதிந்தால் தன் சொந்தவீட்டில் பதிந்தது போன்றதொரு மனதிருப்தியை தரும்.  நிறைய பேருடைய பகிர்வுகள் வாசித்திருந்தாலும் என்னால் அத்தனையும் பகிர இந்த ஒரு நாள் போறாது. நேரமும் இல்லை. அதனால் ஒரு சிலருடைய பகிர்வை மட்டும் பகிர்கிறேன்.

(முகநூலில் இருந்து)

யதார்த்த வரிகளில் அழகிய கவிதை பூத்துவிடும் இவர் எழுத்தில்....


தேவதைகள் புடைசூழ
ஆடுகளத்திற்கு வந்தார்
கடவுள்
போட்டியின் துவக்கத்திலிருந்து
சாத்தானின் கையே ஓங்கியிருந்தது
அவரின் சாதுர்ய வியூகத்திற்கு
ஈடு கொடுக்க முடியா
கடவுள்
நடுவருடன் ஒப்பந்தித்தார்
இந்தமுறை
கடவுள்
வெற்றிப் பெற்றதாய்
அறிவிக்கப்பட்டது
சாத்தான் வசம்
அதிகமாகிக்கொண்டிருந்தது
தேவதைகளின் எண்ணிக்கை.
யாழி

நிகழ்வுகள் கவிதையாகிவிடும் அற்புதம் இவர் எழுத்துகள்....


வடை கதைகளை 
தனியே 
புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் 
பாட்டிகள். 
ச்சோட்டா பீமின் 
லட்டுகளை கவனித்துக்கொண்டிருக்கின்றன
காக்கைகள்.
ஊர் புகுந்து
வடை கடைகளை
துவங்கிவிட்டன
நரிகள்.

மனம் நெகிழவைக்கும், உருகவைக்கும், சிரிக்கவும் வைக்கும் இத்தனை ஜனரஞ்சகமான எழுத்துக்கு சொந்தக்காரர்..




அழுக்கு அன்னப்பூரணி

புன்னகையுடன் 

மீன்களுக்கு உணவிட்டவள்
யாருமறியாமல்
தவளைகளுக்கும் உணவிடுகிறாள்.

உணவுண்டு கிளிகள் பறந்தபின்
காகங்களுக்கென 
தண்ணீர் வைக்கிறாள்

அச்சமின்றி 
தெருநாய்களுக்கு 
முத்தம் கொடுக்கிறாள்

வெகு கவனமாக
தளும்பாமல் தண்ணீர் கொண்டு
பேப்பர் பொறுக்குபவருக்கு
தருகிறாள்

நாட்டி கேர்ள் 
அல்லது
டர்ட்டி கேர்ள் என்கிறார்கள்
எல்லோரும்

நானோ லோக நாயகி 
அன்னபூரணி என்கிறேன்.!


4.  கனிமொழி.ஜி
கனிய கனிய மழலை மொழியும் குரல்... ஆனால் எழுத்திலோ ஆணித்தரமான கருத்துகளுடன், இனிமையான மென்மையான கவிதைகளுடன் இவருடைய எழுத்துகள் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது..

மெல்லிய கயிரால் பிணைக்கப்பட்டு
உறங்கிக் கொண்டிருக்கிறது
உள்ளே என் மிருகம் ....
உறுதியான கொம்புகளோ
வளைந்த கூர்நகங்களோ 
நீண்டு குதறும் பற்களோ
கொலைக் குரூரமோ இல்லவே இல்லை....
ஆனாலும்
முட்டிபிராண்டிகவ்வி
மூர்க்கம் செய்யும் அதை
மிருகம் என்கிறான் வருடிக்கொடுத்தவாறு.....

எழுத்துகளில் சில சமயம் மென்மையும், சில சுமயம் சூறாவளியும் காணலாம் இவர் தொகுப்பில்.


தாயாக உனை மடியேந்தவில்லை
தந்தையாகத் தோள் சுமக்கவில்லை
முன்பிறந்து வழி நடத்தவில்லை
பின்பிறந்து பின் நடக்கவில்லை
கரம் பற்றித் துணை ஆகவில்லை
உன் சேயாய் உலகு புகவில்லை
இத்தனை வாய்ப்புகள் மறுதலிப்பு
இறைவனின் அகம் என்னவோ...
தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தேவையெனில் உயிர் கொடுக்க
இறையளித்த அனுமதிப் பத்திரம்
நட்பெனும் அட்சயப் பாத்திரம்..!!
தினா.


இவருடைய பக்கம் போய் பார்த்தால் அத்தனை சுவாரஸ்யம் இவருடைய எழுத்துகள்.. சுவாரஸ்யம் மட்டுமில்லை... மனசுக்கே றெக்கை கட்டி பறக்க வெச்சிரும்.. அத்தனை உற்சாக வரிகள் இவருடைய எழுத்துகள்.

அழகான காலைப்பொழுது


இன்று உழவர் சந்தையிலே நடந்த சுவாரஸ்யமான விஷயம்...
கீரைக்காரப் பாட்டியிடம் மணத்தக்காளிக்கீரை கேட்க,
"எல்லாம் தீந்துடுச்சு கண்ணு.. இந்த உதிரிக் கீரைதான் இருக்கு....அஞ்சு ரூபா குடு சாமி.... "
என்று இரண்டு கைப்பிடி கீரையைக் காட்ட,
நான் .. "குடுங்க பாட்டி, அது ஒரு துவையலுக்கு ஆகும்ல .." என்று வாங்கிப் பையில் வைத்தேன்.

பக்கத்துக் கடை அம்மிணி வாழைப்பூ, தண்டு எல்லாம் விற்பவர்..அதைக் கேட்டதும்,
"என்னது....? இந்தக் கீரைலே துவையலா ?? அது எப்படி....?? கசக்காது ...? "
என்று கேட்கவும்....
"ஆஹா.... !!! சிக்கீட்டாண்ய்யா சேகரு" என்று.... நான் கையிலே வைத்திருந்த காய்கறிக்கூடையைக் கீழே வைத்து விட்டு,
சுற்றிலும் நான்கைந்து பேர் நின்று ஆவலோடு கேட்டுக் கொண்டிருக்க..
"உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ,மல்லி விதை, வர மிளகாய் வறுத்து, சின்ன வெங்காயம் வதக்கி, கூட இந்தக் கீரையையும் நல்லா வதக்கிட்டு, கொஞ்சம் தேங்காய் , உப்பு புளி வச்சு அரைச்சா .... துவையல் ரெடி..." என்று சொல்லி, இதே போல கரிசலாங்கண்ணி , பொன்னாங்கண்ணி , முருங்கைக்கீரை.. முசுமுசுக்கை என்று
என்னென்ன கீரையில் துவையல் அரைக்கலாம்... எப்படி சமைக்கலாம் என
வகுப்பெடுக்க ஆரம்பித்து விட்டேன்.
அங்கிருந்த பிரண்டைக்கட்டைக் காட்டி ஒரு இளம் தம்பதி..
"இதை என்ன செய்ய...?" என்று கேட்க ..
"அதே போலத் துவையல் செய்யலாம்ங்க.. கீரைக்குப் பதிலா ..பிரண்டையை நல்லா சுத்தம் செஞ்சு, நல்லெண்ணை விட்டு நல்லா பொன்னிறமா வதக்கி... அதே பொருட்களோட சேர்த்து அரைங்க.
ஆனா, இதை சுத்தம் பண்ணறது கொஞ்சம் கவனமா செய்யணும். கைய்யிலே எதாவது எண்ணெயைப் பூசிட்டு, இல்லன்னா மெலிசான கையுறை போட்டுட்டு தோல் எடுக்கணும் இல்லேன்னா கையெல்லாம் அரிக்கும் " என்று தொடர்ந்தது என் வகுப்பு.
ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு மேல்... அங்கே ஒரு அருமையான கலந்துரையாடல்...!
"கண்டிப்பா நாமளும் பிரண்டை சட்னி செய்யணும்.. " என்றபடி ஒரு கட்டுப் பிரண்டையை வாங்கிக் கொண்டு தம்பதியர் நகர,
"அக்கா இனிமே கையிலே கிடைக்கற கீரையை வதக்கித் துவயலா அரைச்சிட வேண்டியதுதான் ... " என்று வாழைப்பூக் கடைத் தங்கை சந்தோஷிக்க ....
பை நிறையக் காய்கறிகளும் மனம் நிறைய திருப்தியுமாய்.....
புன்முறுவலோடு வீடு திரும்பினேன் . அழகானது என் காலைப் பொழுது.. 


இந்த ஏழு நாட்களும் ஊர் ஊராக சென்று ஒவ்வொருடைய பதிவுகள் வாசித்து அதை வலைச்சரத்தில் பகிர எனக்கு மூன்றாம் முறையாக வாய்ப்பு கொடுத்த சீனா அண்ணாவுக்கும் பொறுமையாக நான் எழுதிய முன்னுரை, பகிர்ந்த வலை முகவரிகள், அறிமுகப்படுத்திய பதிவர்கள் சென்று வாசித்து, வாசித்தற்கு கருத்தும் ஊக்கமும் உற்சாகமும் தரும் பின்னூட்டங்களும் கொடுத்து உடன் பயணித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்....

ஒரு சிலரிடம் பணம் இருக்கும் ஒரு சிலரிடம் பணம் இருக்காது, ஒரு சிலரிடம் பணம் அதிகமாக இருக்கும், பொருள் இருக்கும், வசதிகள் இருக்கும், ஒரு சிலர் அன்றாட தேவைகளுக்கே தினம் தினம் போராடிக்கொண்டு இருப்பார்கள். இப்படி இயந்திரமயமாகிவிட்ட உலகில் ஒருவருக்கொருவர் பகிரக்கூடிய அன்பு மனதில் பெருகி இருக்கும்போது அதை பகிர தவறாதீர்கள்... வாழ்க்கை இனிமையானது... ஒவ்வொரு நாளும் அற்புதமாவது அன்பின் புன்னகையை தவறாமல் முகத்தில் ஒட்டிக்கொள்வது...அன்பை பகிர்வது...

டிசம்பர் 1 முதல் அடுத்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்க வரும் அடுத்த வலைச்சர ஆசிரியருக்கு மனமார்ந்த அன்பு வாழ்த்துகள் !!!

மனம் நிறைந்த அன்பு நன்றிகள் !!







Saturday, November 29, 2014

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்

சிலு சிலு சாரல் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...



நம்மால் முடியாததை வேறு யாராவது சாதித்தால் மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோமா? அல்லது அவர் சாதித்ததை நம்மால் சாதிக்க முடியவில்லையே என்று மனம் வெதும்புகிறோமா? எங்க ஆபிசுல இதைப்பற்றி ஒரு சர்ச்சையே நடந்தது. நமக்கில்லாததை நம்மால் முடியாததை இவரால் நடத்தி காட்ட முடிந்ததே என்று மனம் நிறைந்து பாராட்டும் மனப்பாங்கு நம்மில் எத்தனைப்பேருக்கு இருக்கிறது. நேர்மையாக சொல்லவேண்டும் என்றால் நம்மில் இப்படி ஒரு எண்ணம் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கிறது.

நம்மைக்கண்டு கற்று வளரும் குழந்தைகள் முன்பே நாம் ஒரு ரோல் மாடலாக திகழ வேண்டாமா? பிள்ளைகளுக்கு இப்படி ஒரு நல்லவை சிறுவயதில் இருந்தே சொல்லிக்கொடுத்து வளர்ப்போமா?  தம்பி நீ செய்யாததை அந்த குழந்தை செய்து காட்டிடுத்து பார்.. நீயும் அதைப்போல் செய்யவேண்டும் என்ற உத்வேகத்தை அந்த குழந்தை உனக்கு உதாரணமாய் காட்டி இருக்கான் பார் என்று பாசிட்டிவாகவே சொல்லி வளர்ப்போம். அவன் ஜெயிச்சிட்டான்.. பாரு என்று குத்தி குத்தி பிள்ளையை குதறும்போது பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுகிறது.

அந்த பிள்ளை வளர்ந்தப்பின்னரும் ஜெயிப்பவரை பார்த்து மனதில் பொறாமை உணர்வை வளர்த்துக்கொண்டு சாதித்தவரை மனம் நிறைந்து பாராட்டும் குணத்தை வளர்த்துக்கொள்ள தவறிவிடுகிறது. இந்த மனப்பான்மை நம்மில் வராமல் இருக்க, நாமும் நல்லவை காணும்போதும் திறமைகளை பிறர் சாதித்து காட்டும்போது பாராட்டும் நற்குணத்தை நம்முள் வளர்த்து கொள்வோமாக.

என்ன இன்னைக்கு ரொம்ப இழுக்காம சுருக்க முடிச்சிட்டேனா முன்னுரையை ?

மனம் கவர் பதிவர்கள் - ஆறாம் நாள்

1.  மனவிழி
கண்ணால் பார்ப்பதெல்லாம் பார்க்கும் பார்வையில் இல்லை, எப்படி பார்க்கிறோம் மனம் கொண்டா அல்லது கண் கொண்டா என்று சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். மனதுக்கு விழி இருந்தால் அது கண்டிப்பாக எப்படி செயல்படும், மனசாட்சி ஒருபோதும் தன் நிலை மாறி தவறு பாதையில் செல்லாது என்பதை அடித்துச்சொல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் எளிய கவிதையி  அர்த்தங்கள் ஆழ்ந்து இருக்கும்.
நதிமூலம்

2.  ஷீநிசி கவிதைகள்
மதத்தின் பெயரைச்சொல்லி அடித்துக்கொள்ளும் மனிதரிடையே மதங்களை மறந்து மனிதத்தை நேசிக்கும் நாள்  தான் மனிதம் பிறந்த நாள் என்று அழுத்தமாய் சொல்லி செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர். குட்டி குட்டி நாலு வரி கவிதையில் கூட நம்மை இழுத்து நிற்கவைத்துவிடும் வலிமையான கவிதைகளின் சொந்தக்காரர். பல வருடங்களுக்கு முன்பே இவருடைய நான்கு வரிகளின் கவிதைகளில் சாராம்சத்தை நச் என்று சொல்லிவிடும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்த ஒரு விஷயம்.
உதிராத நினைவுகள்

3.  செல்வா ஸ்பீக்கிங்
ஹலோ மைக் டெஸ்டிங் செல்வா ஸ்பீக்கிங்... ஒன்... டூ... த்ரீ...  நான் ஜஸ்ட் பகிர்கிறேன் அவ்வளவே என்று சொல்லி எழுதும் எழுத்துக்கு சொந்தக்காரர்..
போலாம் ரைட்டு கடவுள் நேரில் வர வேண்டாம்

4.  அவர்கள் உண்மைகள்
இந்த மதுரை தமிழனின் எழுத்துகள் அரசியல் சமூகம் தொழில்நுட்பம் நகைச்சுவை எல்லாமே சுவாரஸ்யமாக எழுதி படிக்கவும் ரசிக்கவும் வைப்பவை.
கவலைகளும் கண்ணீர் துளிகளும்

5.  எளியவை
எளியவை என்று வலைதளத்துக்கு பெயர் வைத்திருந்தாலும் இவருடைய எழுத்துகள்  நேர் சிந்தனைக்கோட்டில் சென்று சிந்திக்க வைக்கிறது.
காசிருந்தால் இங்கிருக்கவும்

6.  ஷண்முகப்ரியனின் படித்துறை
மனம் என்ற நதி ஓடிக்கொண்டே இருக்கிறது அதன் படித்துறையில் என்ற வாசகத்துடன் இவருடைய வலைதளம் மிளிர்கிறது. சிறுகதைகள் சொல்லும் பாடம் மிக அற்புதம்.
ஒரு நாயும் ஒரு சன்னியாசியும்

7.  மனசு
சிறகை விரிக்கும் சிந்தனைகள் ரெக்கை கட்டி பறக்கும் மனம் போல் எழுத்துகள் எல்லோரையுமே சென்று அடையும் வகையில் மிக அருமையாக எழுதுகிறார்.
பந்தயம்

8.  மன அலைகள்
ரிட்டையர்மெண்ட் வாழ்க்கையை மிக பயனுள்ளதாக பிறருக்கு பயன்படும் வகையாக எழுத்து பூஞ்சோலை ஒன்றை அமைத்து அதை எல்லோருக்கும் பகிர்கிறார். எழுத்துகள் ஒவ்வொன்றும் நேர்மை சொல்லும் உச்சம்...
இயேசுவின் கடைசி யாத்திரை

9.  கரை சேரா அலை...
எண்ணத்தூறல்களின் சங்கமம் எப்படி இருக்கும்?? இவருடைய எழுத்தின் அலைகள் ஓய்வதே இல்லை.. கரை சேர்வதும் இல்லை. ஆனால் வாசிப்போர் மனதில் அழகாய் சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொள்கிறது இவருடைய பகிர்வுகள்.
வேரோடும் வேரடி மண்ணோடும்

10. ஆறாவது பூதம்
சின்னக்குழந்தைகள் சாப்பிடலன்னா உடனே அம்மாக்கள் பயன்படுத்தும் ஆயுதம் பூதம் கிட்ட புடிச்சு கொடுத்துருவேன்.  ஆனால் இந்த ஆறாவது பூதம் இருக்கே.. இதை கூப்பிட்டிருந்தால் குழந்தையை பயமுறுத்தி இருந்திருக்காது. அதற்கு பதில் அழகிய  சுவாரஸ்யமான பகிர்வுகளை கதைப்போல் சொல்லி வாசிப்போரை ரசிக்கவும் வைக்கும்.
ஒரு இனிய அனுபவம்

11. பேரண்ட்ஸ் கிளப்
குழந்தை வளர்ப்பும் குழந்தை கல்வியையும் எத்தனையோ பேர் சொல்லி வைத்தாலும் இந்த வலைதளம் பெற்றோர்களுக்காகவென்றே உருவாக்கி, குழந்தை வளர்ப்பு பற்றி மிக அருமையாக தன் எழுத்தில் சொல்லி இருக்கிறார்.
புரிந்துக்கொள்வோம் வாருங்கள்... குழந்தையை !!

12.  மகிழ்நிறை
இவர் குரலில் இருக்கும் அன்பும் உற்சாகமும் துளி கூட குறையாமல் எழுத்து பிரவாகத்தில் கொண்டு வரும் வித்தகர் இந்த இனியவர்.  இவர் பகிர்ந்த கத்தரி கைகள் ஆங்கில படம் நானும் முன்பு பார்த்து வியந்திருக்கிறேன். அதே படத்தை பற்றி இவர் கண்ணோட்டத்தில் எழுதிய பகிர்வை கண்டிப்பாக வாசித்து பாருங்கள்.
கத்தரி கைகள்

13. உண்மையானவன்
உண்மையானவன் என்று தனது தளத்துக்கு பெயர் வைத்து தனது எழுத்துகள் சத்தியம் உரைப்பவை என்ற எழுத்துக்கு சொந்தக்காரர்.
சைவ சித்தாந்த செல்வர் சொக்கலிங்க ஐயா (1856 - 1931)

14. நிகழ்காலம்
செல்லும் இடமெல்லாம் கேமராவை கொண்டு செல்வோம் புகைப்படம் எடுத்துக்கொள்ள, இவரோ தான் பார்த்துவிட்டு வந்ததை எல்லாம் எழுத்துப்படம் எடுத்துக்கொண்டு வந்து கோர்வையாக படத்துடன் பகிர்ந்துவிடுகிறார்ள் தன் தளத்தில்.
நம்பிக்கை மனுஷிகள்

15. சேம்புலியன்
ஒருவரின் அனுமதியில்லாது அவரது வீட்டுக்குள் செல்லக்கூடாது. ஆனால் இவரின் அனுமதிக்காக வேண்டியிராமல் இவர் தளத்துள் சென்று இவர் பதிவுகளை படிக்க சுவாரஸ்ய தேன் மிட்டாய்களை அழகாய் அடுக்கி வைத்திருக்கிறார். படித்து பாருங்களேன். உத்தரவுக்காக காத்திருக்காமல் உள்ளே வா என்ற சொல்லுடன் இவர் எழுத்துகள் தொடர்கிறது.
தி.நகர் ஆடி ஸ்பெஷல்

16. துளசிதளம்
துளசி இல்லாத வீடே இல்லை அப்போதெல்லாம். இப்போதோ துளசிதளத்தில் பகிர்ந்தவை வாசிக்காதவரே இருக்கமுடியாது. இவர் எழுத்தை அறியாதவர் இருந்திருக்கவே முடியாது.
கொடுமையில் இருந்து தப்பிப்பிழைச்ச பிள்ளையார்

17. குடந்தையூர்
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்பவரின் எழுத்துகள் வீரியம் மிக்கவை. எழுத்துகளோடு நின்றுவிடாமல் குறும்படமும் இயக்கிவிட்டார் இந்த எழுத்தர்.
திருமண ஒத்திகை - 5

18. மனத் தோட்டம்
இவருடைய மனத்தோட்டத்தில் பூக்கும் எழுத்து பூக்கள் எல்லாமே அன்பின் மை தோய்த்து எழுதியவை போலும். ஏனெனில் அருமையான கவிதைகள் எல்லாமே அன்பின் வாசத்துடன் இவருடைய வலைதளத்தில் மிக அருமையான எழுத்துகளில் எழுதி இருக்கிறார்.
ஆயிரம் தவறுகள் செய்தாலும்

19. பாண்டியனின் பக்கங்கள்
ஜனரஞ்சக கவிதைகள், சிறுகதைகள் என்று நிறைந்திருக்கும் அருமையான வலைதளம் இவருடையது.
பேசுதலின் நிமித்தம்

20. காரிகன்
இசையும் எண்ணங்களும் இவருடைய விருப்பங்களும் என்று எழுதிய எழுத்துகள் பழைய இனிமையான பாடல்களைப்பற்றி இவருடைய எழுத்தில் வாசிப்பது சுகம்.
இசை விரும்பிகள் - எழுபதுகள்: நினைவுகளின் நீட்சி

இனிமையான புன்னகையும், அன்பையும் நிரப்பிய அக்‌ஷய பாத்திரமாய் இன்றைய நாள் எல்லோருக்கும் நலம் தரும் நன்னாளாய் அமைய வேண்டுகிறேன்.

நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு வருகிறேன் நண்பர்களே

அன்பு வணக்கங்கள் !!






Friday, November 28, 2014

வலைச்சரம் - மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்

விடுமுறை நாளின் அன்புக்காலை வணக்கங்கள் நண்பர்களே...



நம்முடைய நிறைவேறாத ஆசைகளை கனவுகளை நம் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறோமா? அப்படி செய்தால் அது சரியா?  பெரிய டான்ஸராகனும் என்பது என் கனவு.. ஆனால் என் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. அதனால் என்ன? நான் சாதிக்காததை என் பிள்ளை சாதிக்கும்.. நடனத்தில் சாதிக்க வைப்பேன்.

இப்படியாக தன் கனவு நிறைவேறாத ஒவ்வொரு பெற்றோரின் துடிப்பான வரிகள். இங்கே நிறைய இஞ்ஜினியர்கள். அவர்களுடைய பிள்ளைகளும் இஞ்ஜினியரிங் தான் படிக்கவேண்டும் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள். டாக்டரின் மகன் டாக்டர் தான் ஆகவேண்டுமா? பெற்றோர் பிள்ளையின் பக்கம் நின்று பிள்ளையின் ஆசை அவன் கனவு என்னவென்று அறிய முயன்றால் நலம்.

பிள்ளைக்கும் தன் பெற்றோரின் கனவை நாம் நனவாக்குவோம் என்று முயன்று சாதிக்க முன்னேறுவது இயல்பான விஷயம். அப்படி இல்லாமல் போய், பிள்ளையின் கனவு வேறு மாதிரியாக இருந்துவிட்டால்? இஞ்ஜினியருக்கு தான் படிக்கவேண்டும் என் பிள்ளை.. அதனால் அந்த பிள்ளையை படி படி படி என்று சிரமப்படுத்துவது சரியல்லவே. அந்த பிள்ளைக்கு வேறு எதுவாகவோ ஆக விருப்பம்..

அதன் லட்சியம் வேறு ஏதாவதாக கூட இருந்திருக்கலாம்.. அதனால் பெற்றோர் தன் கனவை தன் பிள்ளைகள் மூலம் நிறைவேற்றிக்கொள்ளுமுன், பிள்ளையின் கனவு லட்சியம் என்னவென்று அறிந்து அதில் முன்னுக்குக்கொண்டு வர பிள்ளைக்கு துணையாக நின்று அவன் சாதனையில் பங்கேற்றுக்கொண்டால் பிள்ளையின் லட்சிய பெற்றோர் ஆவார். அது நிச்சயம்..

காலங்கார்த்தால ஆரம்பிச்சிட்டியா என்று கேட்டுவிடுமுன் சுருக்க முடித்துக்கொள்கிறேன் என் பிரதாபத்தை.. பதிவர்கள் அறிமுகத்துக்கு போய்விடுவோமா?

மனம் கவர் பதிவர்கள் - ஐந்தாம் நாள்


1.  தனி மரம்
தனிமரம் என்று சொல்லிக்கொள்ளும் வலைதளத்துக்கு சொந்தக்காரரான இவரின் எழுத்துகள் மசாலா சேர்த்த வேர்க்கடலை சாப்பிட எத்தனை சுவையோ அதுபோல் இவரின் விமர்சன வரிகள் அத்தனை ரசனை.
கையறு நிலை

2.  கலா தென்றல்
தென்றலின் வலைதளத்தில் சென்று சற்றே இளைப்பாறலாம். எழுத்துகள் அங்கே கவிதையாய் மிரட்டும், குழந்தையாய் கொஞ்சும், தாய்மையாய் கனிவை பொழியும். எழுத்துகள் இங்கே ஜனரஞ்சகமாய் மிளிரும்.
மூச்சை தின்று தின்று

3.  ஆயுத எழுத்து
ஆங்காங்கே நிகழ்பவைகளை, நிகழ்த்துபவர்களை, சக, சுக, சிநேக மனிதர்களைப் பற்றியும் சுவாரஸ்யமாய் படைக்கும் பல்சுவை பரிணாம எழுத்துக்கு சொந்தக்காரர்.
சந்தேகமும் நம்பிக்கையும்

4.  பயணம்
முகமும் புன்னகையும் வெள்ளந்தியாய். ஆனால் எழுத்துகள் அனாயசமாய். குறும்படம் இயக்கும் அளவுக்கு முன்னேற்றம். உலக சினிமாக்கள் பார்க்க ஒரு குவாலிஃபிகேஷன் வேண்டும் என்று சொல்லுபவர் பல சினிமாக்களின் விமர்சனம் மிக தத்ரூபமாய் எழுதி இருக்கிறார்.
IFFI 2014 - A SHORT GLANCE

5.  தில்லையகத்து
தன்னைப்பற்றிய சுய அறிமுகம் கூட் ஆங்கிலத்தில் எழுதி உள்ள வலைதளத்துக்கு சொந்தக்காரரான இந்த ஆங்கில ஆசிரியர் வலைச்சர தொகுப்பினை மிக அழகாய் எழுதி இருக்கிறார். வாசித்து மகிழ்ந்தேன். அதையே பகிர்கிறேன்.
தில்லையகத்தின் அறிவுச்சுரங்கம்

6.  ஆர். உமையாள் காயத்ரி
சுவையான சமையல் குறிப்புகள் முதல் தீராக்காதல் கொண்ட கண்ணன் வரை எழுதி  வசீகரித்த வலைதளத்துக்கு சொந்தக்காரர். கண்ணனைப்பற்றி எழுதிய ஒரு பகிர்வை பார்த்து சொக்கிப்போனேன். அதையே பகிர்கிறேன்.
மனமீர்த்த மாதவா பதில் சொல்

7.  கோவை 2 தில்லி
திருவரங்கத்து தேவதையின் வலைதளத்துக்கு சென்றால் அங்கே பல்சுவை விருந்தாய் அனுபவங்கள், சமையல் என்று அசத்தி இருக்கிறார். புதிய முயற்சியாய் செய்த சிறுதானிய பொங்கல் பற்றிய பகிர்வும் தந்திருக்கிறார்.
சிறுதானிய பொங்கல்

8.  அமைதிச்சாரல்
அமைதிச்சாரலின் எழுத்துகள் பெயருக்கேற்றார்போலவே அமைதியாய் தன்மையாய் இதமாய் பொழியும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். மென்மையின் வடிவமாய் அங்கு கவிதைகள் அழகு.
தேங்குதல் தவிர்ப்போம்

9.  பறத்தல் பறத்தல் நிமித்தம்
இவருடைய சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற சொல்லும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். இவர் எழுதும் விமர்சன வரிகளின் ரசிகை நான் முன்பே. நிலாமகளின் விமர்சன எழுத்தே இப்படி என்றால் இவருடைய படைப்பு இன்னும் எத்தனை அழகாக இருக்கும். வாசித்து பாருங்கள்.
அப்புறம் என்னாச்சு?

10. கவியாழி
இடையறாது பொழியும் கவிதை பிரவாகத்தில் சுகமாய் வாசகர்களை மிதக்க வைக்கும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
இறைவா எங்கே நீ இருக்கின்றாய்?

11. ஊமைக்கனவுகள்
கனவுகள் வேண்டுமானால் ஊமையாக இருக்கலாம். ஆனால் இந்த எழுத்தரின் சிந்தனை எப்போதுமே எதையாவது சிந்திப்பதும் எழுதிக்கொண்டிருப்பதும் இவருடைய பகிர்வில் தெரிகிறது.. என்ன ஏன் எது என்று தெரிந்துக்கொள்ள விழையும் ஒரு மழலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எத்தனை சுவாரஸ்யமும் அழகோ அத்தனை சுவாரஸ்யமும் அழகும் இவர் வலைதளத்தில் இருக்கும் பகிர்வுகள்.
பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு

12. ரிலாக்ஸ் ப்ளீஸ்
படிச்சுப்பாருங்க ஏமாறமாட்டீங்க என்ற உத்தரவாதத்துடன் தொடங்கும் அற்புதமான எழுத்துக்கு சொந்தக்காரர்..
உங்க வள்ளி அத்தைக்கு சாமி வருமாமே?

13. அரட்டை
காபி என்றால் அது ஃபில்டர் தான் என்பது போல அரட்டை என்றாலும் அதில் ஆக்கப்பூர்வமாக கருத்து மிக்கதாக எழுதிக்கொண்டு செல்லும் எழுத்துக்கு சொந்தக்காரர்.
ஹள்ளி மனேயும் டைப்ரைட்டரும்

14. ஆறுமுகம் அய்யாசாமி
எழுதும் விஷயத்தை சுவாரஸ்யத்துடன் நகைச்சுவையை மிதமாக கலந்து பகிர்வதில் முதன்மையானவர் இந்த எழுத்தர். இவருடைய பகிர்வை படித்ததும் சிரிப்பு வந்தாலும் யோசிக்கவும் வைத்தது.  சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த எழுத்துகளின் சொந்தக்காரர்.
கொள்ளையோ கொள்ளை

15. செய்தாலி
அடர் மழை அடாது பெய்துவிட்டு மழை ஓய்ந்தாலும் சிலுசிலுப்பும் சாரலும் எப்படி தொடர்ச்சியாக இருந்துக்கொண்டிருக்குமோ அதுபோல் கவிதை மழையில் சுகமாய் நனையவைத்துக்கொண்டே இருப்பதில் வித்தகர். கவிதையும் ஜனரஞ்சகமாக, சமூக சிந்தனைகள், அனுபவங்கள், காதல் கவிதைகள் என்று எல்லாவற்றிலும் முத்திரை பதித்தவர்.
சலாவுதீன் காக்கா

16. சைக்கிள்
இவர் எழுதும் கவிதை வாசிக்கும்போதே வாசிப்போரின் சுவடு எங்கோ அதில் பதிந்திருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை தரவைக்கும் எழுத்துக்கு சொந்தக்காரர். கவிதையின் வரிகள் மட்டுமல்லாது அதற்கு வைக்கும் தலைப்பே வெகு அழகாக ரசனை மிக்கதாக இருக்கும் இவர் வலைதளத்தில்.
களிச்சிற்றலை

17. டாக்டர் பி.ஜம்புலிங்கம்
இன்றைய மாணாக்கர்கள், இளைஞர்கள், இளைஞிகள் அறிய வேண்டிய அவசியமான பழைய கால பொக்கிஷத்திலிருந்து நிறைய அரிய விஷயங்களை கண்டுப்பிடித்து ஆராய்ச்சி செய்து அதை அப்படியே நமக்கும் பகிரும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.
தஞ்சை பெரிய கோயில் சோழர் கால ஓவியங்கள்

18. எனது எண்ணங்கள்
ஓய்வு வேலைக்கும், உடலுக்கும் மட்டும் தானே அன்றி மனசுக்கோ எழுத்துக்கோ சிந்தனைக்கோ அல்ல என்று நிரூபித்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர். ஆத்மார்த்த எழுத்துகளை வரைவதில் நிகர் இவரே. இவருடைய பகிர்வுகள் உணர்வுப்பூர்வமாகவும் இருக்கும், உருக்கமாகவும் இருக்கும். யோசிக்க வைக்கும்படியாகவும் இருக்கும்.
மார்ச் மாதம் சம்பளம் இல்லை

19. குழல் இன்னிசை
இவருடைய எழுத்து நடை மிக எளியதாக எல்லோரையும் சென்று அடையும் விதமாக மிக அருமையாக இருக்கும். ஆனால் அதே சமயத்தில், சொல்ல நினைத்த கருத்துகளை ஆழமாய் அழுத்தமாய் நெஞ்சுரத்தோடு எழுதும் எழுத்துகளுக்கு சொந்தக்காரர். வலைதளத்தின் பெயர் குழல் இன்னிசை என்ற பெயர் வைத்ததில் இருந்தே இவர் கண்ணனுடைய நேசத்துக்குரியவர் என்பதும் அறிய முடிகிறது.
பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்

20.  ஆயிஷா ஃபாரூக்
எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது ஒரு வகை. இப்படித்தான் வாழவேண்டும் என்பது ஒரு வகை. இந்த எழுத்தரின் ஒவ்வொரு பகிர்வும் இவர் வாழும் வாழ்க்கையை பற்றியும், இவருடைய போராட்டம்  நல்லதை நாடறிய செய்யவேண்டும் என்பதில் இருக்கும் உறுதியை பற்றியும் இருக்கும். சமூக சிந்தனையுள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் நெருப்பில் தோய்த்து சாட்டையால் அடிப்பது போன்ற  கம்பீர வரிகளுக்கும் எழுத்துக்கும் சொந்தக்காரர்.
மாற்றுத்திறனாளிகள் பாக்கியவான்கள்

வழியில் அவசரமாய் வேலைக்கு செல்லும்போது ரோடில் யாராவது மயங்கி விழுந்துவிட்டால்  மயக்கம் போட்டு விழுந்தவரை முகத்தில் நீர் தெளித்து குடிக்க நீர் கொடுத்து பக்கத்தில் இருக்கும் ஆஸ்பிடலில் சேர்த்துவிட்டு செல்வீர்களா? அல்லது ஐயோ ஆபிசுக்கு லேட்டாறதே மேனேஜர் கடுவன் பூனை லேட்டானால் மெமோ கொடுத்துடுவாரே என்று கண்டுக்கொள்ளாமல் ஓடுவீர்களா?

மனிதம் எப்போது உயிர்த்திருக்கும்???  கண் முன் யாராவது துன்பப்படும்போது பார்த்தும் பார்க்காதது போல் செல்லாமல் சட்டென்று ஓடி போய் சகாயம் செய்ய முனைவோம்.. மனிதம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதரிடையே உயிர்த்தே இருக்கிறது என்பதின் அடையாளம் இதுவாக இருக்கும்.

இன்றைய நாள் எல்லோருக்குமே  அற்புதத்தை தரும் நாளாக அமைய வேண்டிக்கொள்கிறேன் !!

நாளை மீண்டும் மனம் கவர் பதிவர்களோடு சந்திக்கிறேன்.

அன்பு நன்றிகள் வணக்கம் !!