Wednesday, January 28, 2015

வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்!


இயற்கையை நேசிப்போம்!
இயற்கையோடியைந்து வாழ்வோம்!

விடிந்தும் விடியாத கருக்கலில், பனித்துளி முத்துக்கள் பட்டுச் சிலிர்த்து நின்று, விரிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன், ஒன்றிரண்டு இதழ்களை மட்டும் மெல்ல அவிழ்த்து, ஒரு பக்க அழகைக் காட்டும் ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா நீங்கள்?

ஆங்காங்கே வைர மணிகள் ஜொலிக்க, ஆரஞ்சுக் கம்பளம் விரித்துக் கதிரவனைத் தினந்தினம் வரவேற்கத் தயாராகும், கீழ்வானைக் கண்டு சிலிர்த்ததுண்டா என்றாவது?

அதிகாலையிலும், அந்திமாலையிலும் புள்ளினங்களின் ஒருங்கிணைந்த இனிய கானம் செவிமடுத்து மெய்மறந்ததுண்டா?  

குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் நாள் முழுக்க குஞ்சுக்கு இரை எடுத்து வந்து ஊட்டும் தாய்மையின் சிறப்பு கண்டு அதிசயித்ததுண்டா? 



அன்றாட வாழ்வில், நம் வீட்டைச் சுற்றிலும் பணங்காசு செலவின்றி இயற்கையை ரசிக்க செடி,கொடி, மரம், மலர், பறவை, வண்ணத்துப் பூச்சி, விண்மீன், நிலா, மழை என எத்தனையோ விஷயங்கள் உள்ளன.  தேவை ரசனையும், ரசிக்கக்கூடிய மன நிலையும், ஓரிரு நிமிடங்களும் மட்டுமே


மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியுடன் வாழ்வைக் கழிக்க நகைச்சுவை உணர்வு மிகவும் முக்கியம் என்று நேற்றுப் பார்த்தோம் அல்லவா?

அடுத்ததாக இயற்கையில் மனமொன்றி ரசிப்பதும், அதனுடன் இயைந்து வாழ்வதுமே நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மனநோய்களுக்கும் மறதி நோய்க்கும் மாற்று மருந்தாகத் தோட்ட வேலை திகழ்வதாகவும் அதை ஹார்டிகல்சர் தெராபி (Horticultural therapy) என்று அழைப்பதாகவும் சொல்கிறார் மணிமிடைபவளம் மேகலா இராமமூர்த்தி. மனமே மகிழ்ச்சி கொள் என்ற கட்டுரையில்.

அமெரிக்க டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி, தோட்ட வேலை செய்பவர்கள், செய்யாதவர்களை விட அதிக திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்களாம். 

வீட்டுத் தோட்டம் ரொம்ப ரொம்ப ஈஸி தான் என்ற இப்பதிவில் மனதோடு மட்டும் கெளசல்யா தோட்டம் போடுவது பற்றி அருமையாக விளக்குகிறார். 
உடலையும் மனதையும் ஒரு சேர மகிழ்விக்கிற, உற்சாகப்படுத்துற, ஆரோக்கியம் கொடுக்கிற ஒண்ணு  இருக்குனா, அது தோட்டம் போடுவது தான்...காய்கறிகள், பூக்களைப் பறிக்கும் போது  நம் கை வழியே கடத்தப்படும் உற்சாகம், மனதைச் சென்றடைவதை அனுபவத்தில் உணரமுடியும்...!!என்று  இவர் சொல்வதை நானும் அனுபவ பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். 


வாங்க பறிச்சிக்கிலாம் தோட்டம்  என்ற தலைப்பில் முத்துச்சரம் ராமலெஷ்மி வெளியிட்டிருக்கும் புகைப்படங்களைப் பார்க்கும் போது, சமைக்க வேணாம்; அப்பிடியே  சாப்பிடலாம் என்று ஆசையாக இருக்கிறது. நிழற்பட கலைஞரான இவர் வலையில் அவ்வப்போது வெளியிடும் மலர்கள், வண்ணத்துப்பூச்சிகள் புகைப்படங்களைக் காணக் கண்கோடி வேண்டும்! 

தோட்டம் பற்றிய அரிய தகவல்களைப் பதிவிடுகிறார் சிவா தோட்டம் என்ற தம் வலைப்பூவில்.  
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேளாண்மை தகவல்கள் அடங்கிய களஞ்சியமாகத் திகழ்கிறது பசுமை தமிழகம்

மாடித்தோட்டம் அமைப்பது பற்றியும், இயற்கை பூச்சிக்கொல்லிகளைத் தயாரிப்பது பற்றியும் விரிவாக விளக்குகிறது நான்கு பெண்கள் தளம்.  


ஜன்னலில் கூட காய்கறி வளர்க்க முடியும் என்கிறது இயற்கை வரம்

எங்கள் தோட்டத்துப் பறவைகள் என்ற தலைப்பில் கீதமஞ்சரி கீதாமதிவாணன் ஆஸ்திரேலிய பறவைகளின் அருமையான படங்களோடு, அவற்றின் வித்தியாசமான குரல்களையும் ஒலிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது மிகவும் அருமை!

அவற்றில் காக்கட்டூவின் குரல் கர்ண கடூரமாக ஒலித்துக் காதுகளைப் புண்ணாக்க, அடுத்து வரும் மேக்பையோ இன்னிசை மழை பொழிந்து காதுகளில் இன்பத் தேனைப் பாய்ச்சுகிறது!


ஊர்க்குருவிகள் என்ற கட்டுரையில் திருமதி பக்கங்கள் கோமதி அரசு சிட்டுக் குருவி பற்றிய அருமையான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அலமாரி கண்ணாடி ஜன்னலைக் கொத்தும் குருவிக்கு, அலகு வலிக்குமே எனக் கவலைப்பட்டு அவர் அம்மா, அது அடுத்த முறை வருவதற்குள் திரைச்சீலை தைத்து மாட்டி விட்ட செயல், மனதை நெகிழ்விக்கிறது.  

சில அரிய வகைப் பறவைகளின் சென்னை பித்தன் புகைப்படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கின்றன.  அவசியம் பார்க்க வேண்டிய பதிவு:- பறவைகள் பலவிதம் அரியவை

மலர்களில் வெள்ளைப் புறா,குரங்கு, வெளவால், உதடு, நடனமாடும் பொம்மை போன்ற உருவங்களை நீங்கள் பார்த்ததுண்டா?  இதுவரை பார்த்திராத வித்தியாசமான உருவங்களில் எவ்வளவு அழகான மலர்கள்? 

உள்ளம் கொள்ளை போகுதே! உனைக் கண்ட நாள்முதல்!,’ என்று பாடத்தோன்றுகிறது மணிராஜ் (திருமதி இராஜராஜேஸ்வரி) வலைப்பூவின் அழகு மலர்களின் அணிவகுப்பைப் பார்த்து! 'அழகு மலர்களின் கொண்டாட்டம்'


இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், தாவரம், மரங்கள், பறவைகள் பற்றிய பல பதிவுகளை கொண்ட வலைப்பூ கூவலப்புரம்.
  
வலைப்பூவின் பெயரே ரம்யமாயிருக்கிறது. பனி விழும் மலர்வனம்  ‘பூ பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை,’ போன்ற அருமையான திரையிசைப் பாடல்களின் தலைப்புக்களில் வெளியிட்டுள்ள மலர்களின் படங்கள் அழகு!  

தமிழில் இயற்கை எழுத்து (Nature writing) எனும் தலைப்பில் மு.வி. நந்தினி எழுதியுள்ள கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது.  இதன் மூலமே காட்டுயிர் எழுத்தாளர் ப.ஜெகநாதன் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன். 

நந்தினி கூறுவது போல் இயற்கையை நேசிக்கும் ஒருவரால் மட்டுமே சிறந்த இயற்கை எழுத்தை உருவாக்க முடியும்.  இப்பதிவைப் படித்தவுடன் ஜெகநாதன் அவர்கள் எழுதிய க்ரியாவின் பறவைகள் அறிமுகக் கையேடு என்ற நூலை சென்னை புத்தகக் காட்சியில் வாங்கிவிட்டேன்.  அருமையான புகைப்படங்கள்! நம்மூர் பறவைகளைப் பற்றி அறிந்து கொள்ள நல்லதொரு வழிகாட்டி! 

ப.ஜெகநாதன் அவர்களின் வலைத்தளத்தில் உயிரியல் பற்றி இயற்கை ஆர்வலர்கள் தெரிந்து கொள்ள ஏராளமான செய்திகள் உள்ளன.  எடுத்துக் காட்டுக்கு நீங்களும் விஞ்ஞானி தான் என்ற பதிவைப் படித்துப் பாருங்கள்.  இயற்கைக்கும் தமிழுக்கு அரிதான இயற்கை எழுத்துக்கும் அவரது மகத்தான பங்களிப்பு புரியும்.  


“சாலையில் விரிந்து கிடக்கிறது
ரத்தினக் கம்பளம்
வசந்த காலம்”
என்ற அழகான மொழிபெயர்ப்பு  ஹைக்கூவுடன் துவங்கும் ஒரு மாநகரில் வசந்த கால ஆசுவாசங்கள் என்ற கட்டுரை வாகை மலர் பற்றி நாம் அறியாத தகவலைச் சொல்கிறது.  போரில் வெற்றி பெறும் மன்னர்கள் வாகை மலர் சூடுவது மரபு.  அதையொட்டித் தான் வெற்றி வாகை சூடினான் என்ற சொற்றொடர் உருவானதாம்! 

முடிவாக புலவர் சா.இராமநுசம் அவர்களின் காலச்சுவடுகள்என்ற கவிதையிலிருந்து சில வரிகள் சொல்லி இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்:- 
“இயற்கைக் காட்டும்
இணையில் காட்சி-கண்
இமைக்க மறக்கும் தகையதன் மாட்சி
செயற்கை மிகமிக செழிப்பினை அழிக்கும்-என
செப்பியும் கேளார் சந்ததி பழிக்கும்
இயற்கை தம்முடன் இணைந்த வாழ்வே-நாம்
ஏற்றிட மறுப்பின் வருவது தாழ்வே…”
 

சரி நண்பர்களே!  எனக்குப் பிடித்த இன்றைய பதிவுகள், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன்.   அவசியம் உங்கள் கருத்துக்களை நான் அறியத் தாருங்கள்.

எனக்குப் பிடித்த வேறு சில பதிவுகளின் அறிமுகத்தோடு நாளை சந்திப்போம்!

நன்றியுடன்,

ஞா.கலையரசி.  

(முதல் படம் மட்டும் இணையத்திலிருந்து எடுத்தது.)

43 comments:

  1. ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்! என்ற அழகான தலைப்பும் தலைப்புக்கேற்க படத்தேர்வுகளும் மிக அருமையாக உள்ளன.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. முதல் பின்னூட்டத்தக்கும், அருமை எனப்பாராட்டியதற்கும் நன்றி கோபு சார்!

      Delete
  2. ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா?
    கீழ்வானைக் கண்டு சிலிர்த்ததுண்டா என்றாவது?
    புள்ளினங்களின் ஒருங்கிணைந்த இனிய கானம் செவிமடுத்து மெய்மறந்ததுண்டா?
    குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் நாள் முழுக்க குஞ்சுக்கு இரை எடுத்து வந்து ஊட்டும் தாய்மையின் சிறப்பு கண்டு அதிசயித்ததுண்டா?

    மிகவும் நியாயமான கேள்விகள். :)

    // தேவை ரசனையும், ரசிக்கக்கூடிய மன நிலையும், ஓரிரு நிமிடங்களும் மட்டுமே! //

    கரெக்ட்டாகச் சொல்லியுள்ளீர்கள்.

    ரசனையும் ரசிக்கக்கூடிய மன நிலையும் எல்லோருக்கும் எப்போதும் அமைவதில்லை. அமைந்தவர்கள் மட்டுமே பாக்யவான்கள். :)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. “ரசனையும் ரசிக்கக்கூடிய மன நிலையும் எல்லோருக்கும் எப்போதும் அமைவதில்லை. அமைந்தவர்கள் மட்டுமே பாக்யவான்கள்."
      மிகவும் சரி. கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!

      Delete
  3. Replies
    1. அருமையான பதிவுகளையும், பெருமையான பதிவர்களையும் அடையாளம் காட்டி அசத்தியுள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

      இன்று வலைச்சரத்தில் தொடுக்கப்பட்டுள்ள அழகிய (வலைப்)பூக்கள் அனைத்துக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள்.

      >>>>>

      Delete
    2. பாராட்டுக்கும். வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி சார்!

      Delete
  4. காலச்சுவடுகள் என்ற கவிதையிலிருந்து சில வரிகள் சொல்லி இன்றைய பதிவை நிறைவு செய்தது மனதுக்கு நிறைவாக உள்ளது.

    நாளை சந்திப்போம் ..... அதுவரை நாளைக்கு யார் யாராக இருக்கும் என சிந்திப்போம் !

    நன்றியுடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. தொடர்ச்சியான வாழ்த்துக்கும் நிறைவு எனப் பாராட்டியதற்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  5. இயற்கையை போற்றிய இன்றைய பதிவுகள் யாவும்
    (வலைச்சரம் மூன்றாம் நாள் – ‘இயற்கையோடியைந்து வாழ்வோம்! )
    யாழிசை தரும் இன்பமாய் இனித்தது.
    இனிய தொகுப்பு!

    இன்றைய அறிமுகப் பதிவாளர்களுக்கு
    குழலின்னிசையின் வரவேற்பும், வாழ்த்துகளும்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. இனிய தொகுப்பு எனப் பாராட்டியதற்கும், தொடர்ந்து வந்து தரும் ஊக்கத்திற்கும் மிகவும் நன்றி சார்!

      Delete
  6. அன்பின் கலையரசி

    இரவு பகல் பாராமல் நள்ளீரவில் பதிவுகள் இடுவது தங்களீன் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

    அதே நள்ளிரவில் உறங்காமல் எப்பொழுது மறுமொழிகள் இடலாம் எனக் காத்திருந்து மறுமொழி இடும் அருமை நண்பர் வை.கோ அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.

    பாராட்டுகள் கலையரசி மற்றும் வை.கோ

    நல்வாழ்த்துகள் கலையரசி மற்றும் வை.கோ

    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. cheena (சீனா) Wed Jan 28, 05:06:00 AM

      //அதே நள்ளிரவில் உறங்காமல் எப்பொழுது மறுமொழிகள் இடலாம் எனக் காத்திருந்து மறுமொழி இடும் அருமை நண்பர் வை.கோ அவர்களின் கடமை உணர்ச்சி புல்லரிக்க வைக்கிறது.//

      வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே !
      வணக்கம். ஐயா.

      நான் நள்ளிரவு வரை, ஏன் ... அதிகாலை வரைகூட விழித்திருப்பது என்பதும், அதன் பிறகு தூங்க ஆரம்பித்து காலையில் மிகவும் தாமதமாக எழுவது என்பதும் சகஜமே. இது உலகறிந்த விஷயமே. தங்களுக்கும் இது மிக நன்றாகவே தெரியும் என்பது எனக்கும் தெரியுமே, ஐயா.

      நான் பரிந்துரை செய்து வலைச்சர ஆசிரியரானவர்களை, நானே ஊக்கமும் உற்சாகமும் அளிக்க வேண்டியது என் கடமையல்லவா ! :)))))

      //அன்பின் கலையரசி

      இரவு பகல் பாராமல் நள்ளிரவில் பதிவுகள் இடுவது தங்களின் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.//

      இந்த வார வலைச்சர ஆசிரியர் திருமதி கலையரசி அவர்கள் .... பாவம் .... காலை எழுந்ததும், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, மிகவும் பொறுப்புள்ள பணிக்குச் செல்ல தன்னையும் தன் கணவரையும் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

      மாலை நீண்ட நேரம் கழித்து சோர்வுடன் வீடு திரும்பி, மீண்டும் வீட்டு வேலைகள், சமையல் சாப்பாடு, கணவரை கவனித்தல் முதலிய ROUTINE வேலைகளையும் முடித்த பிறகு, நமக்காக ஏற்றுக்கொண்டுவிட்ட பொறுப்புக்காக, வலைச்சரத்திற்கு ஓர் புதிய பதிவு, நள்ளிரவு தன் தூக்கத்தையும் தியாகம் செய்து, வெளியிட வேண்டும். ஏற்கனவே பின்னூட்டமிட்டவர்களுக்கு மறுமொழியாக பதில்கள் தர வேண்டும். புதிதாக அறிமுகம் செய்து அடையாளம் காட்டப்படும் பதிவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் .... எல்லாமே நள்ளிரவில் .... அடடா ஒரு பெண்மணிக்குத்தான் எத்தனை எத்தனைப்பொறுப்புகள் .... பாருங்கள் ஐயா. தாய்க்குலம் வாழ்க !

      நல்லவேளையாக இவர்கள் பதவி ஏற்ற முதல் இரண்டு நாட்கள் 25th & 26th January விடுமுறை நாட்களாக அமைந்து போனதில், அவர்களுக்கும் எனக்கும் சற்றே நிம்மதியாக இருந்தது. ஓரளவு PREPARATIONS செய்துகொள்ள ஏதுவானது.

      //பாராட்டுகள் கலையரசி மற்றும் வை.கோ
      நல்வாழ்த்துகள் கலையரசி மற்றும் வை.கோ
      நட்புடன் சீனா//

      இந்த ஒரு உற்சாக பானம் [வார்த்தைகள்] போதும் ஐயா, எங்களுக்கு. புதிய கிக் [தெம்பு] வந்தது போல உணர்கிறோம். :)

      [ பின்குறிப்பு: ‘என் வீட்டுத்தோட்டத்தில்.....’ அன்பின் திரு. சீனா ஐயா அவர்களின் வருகையில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், என் வீட்டுத் தோட்டமே மலர்ச்சி இல்லாமல் வாடிப்போய்விடும் பேராபத்துக்கள் உள்ளது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், ஐயா. என் வீட்டுத் தோட்டத்துப் பக்கம் அடிக்கடி வந்து எட்டிப்பார்க்கும்படி அன்புடன் அழைக்கிறேன், ஐயா ]

      அன்புடன் VGK

      Delete
    2. “இரவு பகல் பாராமல் நள்ளிரவில் பதிவுகள் இடுவது தங்களீன் கடமை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.”

      தங்களின் மனந்திறந்த பாராட்டுக்கு மிகவும் நன்றி சீனா சார்.

      ஓர் உண்மையை இன்று நான் சொல்லியாக வேண்டும். கோபு சார் என்னிடம் ஜனவரியின் நான்கு வாரத்தையும் கொடுத்து எனக்கு வசதிப்படும் வாரத்தைத் தேர்ந்தெடுக்கச் சொன்னார்.

      அதன்படி பொங்கல் முடிந்த பிறகு கடைசி வாரம் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தேன். ஏற்கெனவே பதிவுகளைப் படித்துவைத்து எழுதிவைத்துக் கொண்டால் காப்பி & பேஸ்ட் பண்ணலாம் என்ற அவரது யோசனை சரியென்று பட்டது.

      அதன்படி நான் வலைப்பூக்களுக்குச் சென்று நான் தேர்வு செய்யும் தலைப்புகளில் உள்ள பதிவுகளை வாசித்துக் குறிப்பு எடுக்கலானேன்,

      ஆனால் பொங்கல் முடிந்த மறுநாள் 17/01/2015 திடீரென்று அலுவலகத்தில் ஆண்டுக்கொரு முறை வரும் ஆடிட்டிங் வந்து வேலைச்சுமை அதிகமாகி வீட்டுக்குத் திரும்புவது மிகவும் தாமதமாகி விடுகிறது. 31/01/2015 அன்று தான் ஆடிட்டிங் முடியும்.

      இந்த வாரம் முடியாது என்று கோபு சாரிடம் சொல்லிவிடலாமா என யோசித்தேன்.

      ஆனால் ஒரு தேதியை ஒப்புக்கொண்டு விட்டுக் கடைசி நேரத்தில் மாட்டேன் என்று சொல்லி எல்லோரையும் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. எனவே ஒப்புக்கொண்டபடி செய்துவிடலாம் என முடிவெடுத்தேன்.

      ஏற்கெனவே முதல் மூன்று நாட்களுக்கு எழுத வேண்டியதைத் தேர்வு செய்து வைத்திருந்தாலும், கடைசி நேரத்தில் திருத்த வேண்டியதைத் திருத்தி வெளியிட நேரமாகிவிடுகிறது. அதனால் தான் தினமும் இரவு ஒரு மணிக்கு மேல் என் பதிவை வெளியிடுகிறேன்.

      என் வியப்பு என்னவென்றால் நள்ளிரவில் என் பதிவைப் படித்து விளக்கமாக அடுத்தடுத்துப் பின்னூட்டம் போடுவதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.

      பதிவுலகில் பிரபலமாகாத எனக்குப் பின்னூட்டங்கள் அவ்வளவாக வராது என்ற காரணத்தால், என்னை ஊக்கமளித்து உற்சாகம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே தம் பொன்னான நேரத்தைச் செலவழித்து பின்னூட்ட மழை பொழிந்து வருகிறார் கோபு சார்.

      அவருக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தான் தெரியவில்லை.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இயற்கையை நேசிப்பவன் தன்னையே நேசிக்கிறான். இயற்கையில் மனது ஒன்றும்போது கிடைக்கும்போது மன நிறைவுக்கு ஈடு இணை எதுவுமில்லை. நல்ல கருவினைப் பதிவாக எடுத்துக்கொண்டு பகிர்ந்தமைக்கு நன்றி. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளைக்காகக் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இயற்கையை நேசிப்பவன் தன்னையே நேசிக்கிறான். அருமையான கருத்து. தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  9. அருமை!

    பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியதற்கு மிக்க நன்றி துளசி!

      Delete
  10. இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கை அமையப்பெறுவது ஒரு வரம். அப்படி அமைந்தாலும் தாங்கள் குறிப்பிடுவது போல் அதை ரசிக்க மனமும் நேரமும் சூழலும் சாதகமாக அமையவேண்டும். அவசர யுகத்தின் இயந்திரத்தன்மையிலிருந்து கொஞ்சமாவது விடுபட்டு இசை, இயற்கை, குழந்தைகள் போன்று மனத்துக்கு இதமானவற்றை ரசிப்பதே மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் உபாயம். இன்றைய அறிமுகப் பதிவுகள் பலவும் பயனுள்ளவை. எங்கள் தோட்டப்பறவைகளும் இங்கு இசைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிகவும் நன்றி. அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ளவை என்று அறிந்து மகிழ்கிறேன் கீதா! கருத்துக்கு மிக்க நன்றி!

      Delete
  11. இயற்கையின் அற்புதங்களை எழுதும் தளங்கள் இவ்ளோ இருக்கின்றனவா என ஆச்சர்யப் படுகிறேன்...அத்தனை தளங்களையும் புக் மார்க் செய்துவிட்டேன், தேவைப்ப்படும் போதெல்லாம் குறிப்புகள் எடுக்கவேண்டுமென ! :-)

    அருமையான தளங்களின் நடுவில் எனது தளத்தையும் அறிமுகம் செய்துவைத்த தங்களின் அன்பிற்கு மகிழ்கிறேன்...மிக்க நன்றி கலையரசி.

    புலவர் ஐயாவின் கவிதை சிறப்பு .

    அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் + பாராட்டுகள் !!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கெளசல்யா!

      Delete
  12. அறிமுகமாகியிருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள். எனது பதிவையும் இணைத்திருப்பதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ராமலெஷ்மி!

      Delete
  13. தொடரும் அனைத்து தளங்களும் சிறப்பானவை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பு எனப் பாராட்டியதற்கு நன்றி தனபாலன் சார்!

      Delete
  14. //ரோஜாவின் தரிசனம் கிடைத்துப் பரவசப்பட்டதுண்டா?
    கீழ்வானைக் கண்டு சிலிர்த்ததுண்டா என்றாவது?
    புள்ளினங்களின் ஒருங்கிணைந்த இனிய கானம் செவிமடுத்து மெய்மறந்ததுண்டா?
    குட்டிக் குட்டி அலகுகளில் ஓயாமல் நாள் முழுக்க குஞ்சுக்கு இரை எடுத்து வந்து ஊட்டும் தாய்மையின் சிறப்பு கண்டு அதிசயித்ததுண்டா? //

    இவற்றையெல்லாம் தவற விட்ட வாழ்வில் அர்த்தமே இல்லை!..

    இனிய தொகுப்பு!..

    ReplyDelete
    Replies
    1. இவற்றையெல்லாம் தவற விட்ட வாழ்வில் அர்த்தமே இல்லை!..

      நல்லதொரு கருத்துக்கு நன்றி சார்!

      Delete
  15. அழகான பூக்கள் - அருமையான தளங்களின் அறிமுகங்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்!

      Delete
  16. இயற்கையை ரசிப்பது இதமான ஒன்று. இத்தனை இயற்கை பதிவுகள். அருமையிலும் அருமை. சென்று அனைத்தையும் காண வேண்டும். படங்கள் அழகு. நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. அருமை எனப் பாராட்டியதற்கு மிகவும் நன்றி காயத்ரி!

      Delete
  17. இயற்கையுடன் ஒன்றிப்போய் அழகுற பதிவிட்டதும் இயற்கையோடு ஒன்றிணைந்த தளங்களை அறிமுகம் செய்திருப்பதும் அருமை கலையரசி! தோட்டம் போடுவது சார்பான தளங்கள் மிகவும் உபயோகமானவை!

    ReplyDelete
    Replies
    1. தளங்கள் மிகவும் உபயோகமானவை என்றறிய மிகவும் மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மனோ!

      Delete
  18. அன்பின் வெளிப்பாடாக , என்னை, வலைச்சரத்தில் அறிமுகப்படித்தி, அதனை எனக்கும்
    அறிவித்த பண்பு கண்டு மகிழ்ந்தேன! வயதாகி விட்டதால் முதுமையும் இயலாமையும் வாட்ட அதிகம் எழுதுவதோ வலைவழி வருவதோ , குறைந்து விட்டது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களது கவிதைகள் சிறப்பாயிருக்கின்றன். விரிவஞ்சி அதில் ஒன்று மட்டும் எடுத்துக்காட்டினேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  19. தங்களுடைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் அவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அக்கா !!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

      Delete
  20. பதிவர்களைத் தொகுத்த விதம் வலைத்தளத்தில்
    தங்கள் பரந்துபட்ட வாசிப்பினைப்
    பறைசாற்றுவதாக உள்ளது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது வ்ருகைக்கும்,பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!

      Delete
  21. இயற்கையில் மனமொன்றி ரசிப்பதும், அதனுடன் இயைந்து வாழ்வதுமே நம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.//

    உண்மை நீங்கள் சொல்வது.
    எனக்கும் இயற்கையை ரசிக்க பிடிக்கும். வெளியூரில் இருப்பதால் தொடர்ந்து உங்கள் வலைசரத்திற்கு வர முடியவில்லை.
    என் தளத்தையும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி. தகவல் தெரிவித்த உங்களுக்கும், யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி.
    அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றி கோமதி!

      Delete