வலைப்பதிவுகளில் சொற்களை விளையாட விட்டு , ஞான முத்துக்களையும் , அறிவென்னும் பொக்கிஷங்களையும் நித்தமும் பெறும் , அன்பினால் ஆன நம் தமிழ் சமூகவலைப்பதிவர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் .
வலைப்பதிவுகளுக்கு புதுமுகமாகிய நான் இங்கு அறிமுகமானது Dr. சுந்தரி கதிர் அவர்களால் . சுந்தர நேசத்தை வார்த்தைகளால் குழைத்துத் தரும் இனிய தோழி , அவர் என்னையும் , என் வலைப்பதிவுகளையும் இங்கே அறிமுகப்படுத்த , அதன் பின் பட்டாம்பூச்சியாக சிறகடித்து , நம்முடன் இனிய சொல் பேசிச் செல்லும் தங்கை காயத்ரி தேவி , வலைச்சரத்தின் ஆசிரியராக இருக்க முடியுமான்னு கேட்டார் . யோசித்தேன் ..
நம்மால் இப்போது முடியுமான்னு .. பிறகு , செய்து தான் பார்ப்போமே என ஏற்றுக்கொண்டேன் , நல் முயற்சியாக இறங்கியும் விட்டேன் ! நன்றி தமிழ்வாசி பிரகாஷ் . :)
திருச்சியைச்சேர்ந்தவளாகிய நான் , மதிப்பெண்களுக்களுக்காக பள்ளியில் சமஸ்கிருதம் எடுத்து , தமிழ் இலக்கண இலக்கியங்களுக்கு குட் பை சொல்லியவதற்கு பெருந்தண்டனையாக 2001 ல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ல் வந்திறங்கி , தமிழ் சொல்கேட்பதற்கு ஏங்கித்தவிக்க ஆரம்பித்தேன் ..
அப்போது ஆரம்பித்தது தமிழ் தாகம் . வற்றினால் தானே ! , ஊற்றாக , கங்கு கனலாக கனன்றது , அது பற்றிக்கொண்டது பேஸ்புக்கால் .
அடிப்படையில் கம்ப்யூட்டர் பட்டம் பயின்றவள் , ஆசிரியப்பணியில் 2005 வரை இருந்தவள் , சற்றே அட்மின் துறையில் பணியில் நுழைந்தாலும் , சிறு சிறு கவிதைகள் , உணர்வின் விளிம்புகளில் அரும்பியதை கவனித்து குறித்தும் கொண்டேன்.
‘ஐயோ உங்கப்பொண்ணா ! .. கொஞ்சம் பேசாமல் இருந்தாப்போதுமே ! , வாயாடியா இருக்காளே ! ’ என்ற நல்ல பெயர் அப்பா அம்மாவிற்கு அடியேன் பள்ளியில் பெற்றுத்தந்த வாய்ப்பேச்சு , விசுவின் அரட்டை அரங்கம் வரைக்கொண்டு சென்றது , அப்போது முதன் முறையாக இயக்குனர் திரு. விசு , உரத்த சிந்தனை ராம் அவர்கள், தம் குழாமும் துபாயில் முகாமிட பல ரவுண்டுகள் படு ஆக்ரோஷமாய் பேசி கணவரை மெய் மறக்க செய்தேன் .
( அப்ப , வீட்ல இல்லயா ந்னு நீங்க கேக்கற்து ..புரியுது :)
ஒரு சர்பிகேட்டும் , வால் கிளாக்குடனும் மேடையிலிருந்து இறங்கினேன் .
பல பட்டிமன்றங்களில் பேச அழைப்பு வந்தாலும் ஆர்வம் காட்டமல் தவிர்த்தேன் , ஆன்மீக நாட்டத்தால் .
இந்தப்பேச்சே என்னை , தமிழ் குஷி என்ற இணைய வானொலியில் ஆர். ஜேவாகவும் அவதாரம் எடுக்க வைத்தது.முதல் நிகழ்ச்சியே கணவருடன் வீட்டுக்கு வீடு வாசப்படிதான் .. !
இல்லத்தரசியாக இருந்தப்படியே , பேஸ்புக்கில் கவிதைகள் , கட்டுரைகள் , சிறு சிறு துணுக்குகள் எழுத ( சரி..சரி .. படுத்த) ஆரம்பித்தேன் . எல்லாப்பெண்களையும் போல கணவர் , நம் குடும்பம் என்பதையும் தாண்டிய என் சமுதாயப்போக்கும் , தார்மீக எழுத்தும் உணர ஆரம்பித்தேன் (இதெல்லாம் , உனக்கே ஓவரா இல்லையா ந்னு கேட்கப்படாது .. ;) )
நிகழ்ச்சி தயாரிப்பு , எடிட்டிங் , மேற்பார்வை என ஆன்லைனில் ஆக்குபை செய்துக்கொண்ட எனக்கு ஒரு வருஷம் பறந்தது அறியாமல் போனது . ஒரு பெண்கள் மாதமிரு முறை வரும் இதழில் , பக்கம் தயாரிக்கும் பணியும் , அவர்கள் கேட்டபடியே வலைப்பூவும் ஆரம்பித்தேன்.
தற்சமயம் சிறிது ரேடியோவேலைகளில் பிரேக் எடுத்தப்படியே ,பிரபல எழுத்தாளர், நாவலாசிரியை திருமதி . வேதா கோபாலன் அவர்களது வழிகாட்டலுடன் சிறுகதை எழுத்தாளராக புது அவதாரம் எடுத்துள்ளேன்.
சில உடல் பிரச்சனைகளாலும் , இ-புக் வாசிப்பின் ருசியறியாமலும் , படிப்பதை தற்காலிகமாக விட்டிருந்தவள் பிரபல பத்திரிக்கையாளர் , திரு. சுதாங்கன் அவர்களின் மூலம் பல புத்தகங்கள் பரிந்துரைக்கப்பட்டு , படித்தும் , அதைப்பற்றியும் எழுதி வருகிறேன்.
இசையுடன், சினிமா பார்ப்பதிலும் உள்ள ஆர்வம் .. ( அப்ப , எங்களுக்கெல்லாம் இல்லையான்னு கேக்கற உங்க மைண்ட் வாய்ஸ் , கேக்குதே !) சுமி_சினிமாஸ் என்ற டேக்குடன் விமர்சிக்கவும் வைத்தது பேஸ்புக்கில் .
ஏன் பேஸ்புக்கில் எழுதுவது , கவிதை , கதை , இப்படி கிறுக்குவதைத்தவிர வேற ஆர்வமில்லையா இல்ல எதுவும் தெரியாதா என்ற உங்க கேள்விக்கும் வந்துட்டேனே ..
ரங்கோலி , சமையல் , க்ளாஸ் பெயிண்டிங் , பாட் பெயிண்டிங் , பேபரிக் பெயிண்டிங் ,போட்டோகிராபி இப்படி பல வேலைகளும் அப்பப்ப ஓடிட்டே இருக்கும்.
என் முதல் விமானப்பயணம் என்று நான் எழுதியது பேஸ்புக்கில் .. இன்றும் பலரும் பேசப்பட்டதாக உள்ளது . அதை இங்கும் பகிர உள்ளேன்.
பலக்கவிதைகள் எழுதி வெளிவந்தாலும் , மனதில் ஆழமாக ஊடுருவிய ஆன்மீகத்தேடல் ஆண்டாள் , ஆழ்வார்கள் என்று நாலாயிர திவ்யபிபந்தத்தில் இருக்கிறது . தொண்டரடிபொடியாழ்வார் இயற்றிய திருமாலை என்ற பக்தி இலக்கியத்திலிருந்து தொடராக எழுதி வருகிறேன்.
எழுத்தில் அரிச்சுவடிமட்டுமே தொடங்கியுள்ளவள் ,
வீடு தோறும் வரவேற்கும் துணி மலைகள் ,
என்ற பதிவு ஒரு முடியாதப்பொழுதில் எழுதிட மங்கையர் கவர் மலராக சே .. பதிவாகி விட்டது . ( கொஞ்சமா .. சொல்லிக்கிறேனே .. ! )
ஒரு நாள் மொட்டை வெயிலில் பால்கனியில் வந்தமர்ந்தப்பறவை கூடு கட்டி , பிள்ளைப்பேறுப்பார்த்து , சரி, சரீ... , குஞ்சுப்பொரிச்சு ..மீண்டும் பறந்தக்கதையை எழுத அது புதிய தலைமுறை இதழில் வெளிவந்தது .
(இந்த ஜப்பானில் ஜாக்கி சான் கூப்பிட்டாங்க ... அமெரிக்காவில் அர்னால்ட் கூப்பிட்டாங்க கதையெல்லாம் இல்லீங்கோ..சும்மா ..ஒரு வெளம்பரம் தர சொன்னாங்க அதான் )
கூடான வீடு அதான் இது.
திருச்சியில் எம் ஆர் ராதா அவர்களது குடியிருப்பில் வசித்த எபெக்ட் ஒரு நாள் நினைவலைகள் சுனாமியாக ..அதையும் பதிவாக்கி நடிக வேள் நினைவுத்துளிகள் என்று எழுதி வச்சேன் .
வசிப்பது துபாய் ஆகையால் , பலப்பல ஊர் சுற்றல்கள், அதிலொன்று அம்மா , அப்பா இங்கு வந்திருந்த போது எழுதிய அபுதாபி கிராண்ட் மாஸ்கும் அம்மாவும் , எனக்குள்ளிருந்து பல உணர்வுகளை எழுத்தாக்க முடியும் என்று நிரூபித்தது .
பல வருடங்கள் , அயல் நாட்டு வாழ்க்கை பலப்பல அனுபவங்களுக்கு பஞ்சமா .. இனி பகிர உள்ளேனே .. உங்களுடனும் .
தொடர்வோமா ..இனி வரும் பதிவுகளில் ..