Monday, August 3, 2015

என் ஊரும் பேரும் சீரும்



வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்

என் ஊரும் பேரும் சீரும்!

உலகம் போற்றும் உயர்ந்த தமிழின்
திலக மாகத் திகழும் புதுவை!
நான்கு திசையும் நற்றமிழ் மேன்மையை
ஊன்றி வளர்க்கும் ஒப்பில் புதுவை!
புலமைக் கோயில்! பொதுமை வாயில்!
வளமை வாழ்வை வழங்கும் புதுவை!
ஆலை நலமும் சோலை வளமும்
சாலை அழகும் சமைத்த புதுவை!
சந்தம் வண்ணம் சிந்துக் கவிகளை
எந்தப் பொழுதும் இசைக்கும் புதுவை!
இலக்கணம் சூடி இலக்கியம் பாடித்
தலைமை பெற்றுத் தழைக்கும் புதுவை!
குயில்போல் பாரதி கூவிக் களித்தே
உயிர்போல் தமிழை ஓதிய புதுவை!
பாட்டின் வேந்தன் பாரதி தாசன்
மீட்டிய பாக்களால் மின்னும் புதுவை!
சித்தர் பூமி! முத்தர் பூமி!
கத்தும் கடலால் கமழும் புதுவை!
சீரிய முறையில் நேரிய பாதை
பாரீசு நகரைப் பார்க்கும் சன்னல்!
புண்ணியப் புதுவையில் புலவன் யானும்
தன்னிக ரில்லாத் தமிழைக் காக்க
வந்து பிறந்தேன்! சிந்தை மணக்கத்
தந்து சிறந்தேன் தண்டமிழ் மரபை!

இரண்டாம் பாரதி தாசனாய் என்னைத்
திரண்ட அன்பால் செப்புவார் புலவோர்!

தனித்தமிழ் சாற்றல் தமிழினம் போற்றல்  
கனித்தமிழ் நாட்டைக் காத்தல் கடனே!

என் ஆசிரியர்கள்

அந்தாதி அரசர் பா.சு. அரியபுத்திரனார்!

அந்தாதி அரசர் அளித்த தமிழால்
செந்தமிழ் பாடும் திறனைப் பெற்றேன்!
யாப்பின் நுட்பம் யாவும் எனக்குக்
காப்புறத் தந்த கடவுள் அவரே!

ஏந்தூர் சடகோப இராமானுசனார்

சடகோப இராமா னுசரைச் சார்ந்தேன்
வடமொழி வேத வகைகளை உணர்ந்தேன்!
அத்தன் அருளைச் செப்பும் நூல்களில்
சித்தம் கொள்ளச் செய்தவர் அவரே!

இயலிசைப் புலவர் இராச. வேங்கடேசனார்

பாட்டுக் கலையில் பயிற்சி அளித்தே
ஏட்டில் என்னை எழிலுறச் செய்தவர்!
இயலிசைப் புலவர் இராச. வேங்கடர்
உயர்நலம் ஊட்டி உவந்தவர் அவரே!

இலக்கணச்சுடர் முனைவர் 
இரா. திருமுருகனார்


கொள்கைத் தமிழைக் குழைத்துக் கொடுத்துத்
துள்ளும் சந்தத் துறைகள் காட்டி
ஓங்கச் செய்தார் ஒண்திரு முருகனார்
தாங்கும் வலிமை தந்தவர் அவரே!

பாவலர்மணி சித்தன்
 
சித்தன் என்னும் சிறந்த புலவர்
நித்தம் என்றன் நெஞ்சுள் நிற்பவர்!
பாட்டின் நுண்மை! படைப்பின் தன்மை
ஊட்டும் தாயாய் உவந்தார் அவரே!

சந்தக் கவிஞர் தே. சனார்த்தனனார்

எந்தை சனார்த்தனர் என்ற கிருட்டினர்
சந்தக் கவிஞர்! தங்கத் தமிழைத்
துள்ளி யாடித் தொடரும் அகவையில்
அள்ளி அள்ளி அளித்தவர் அவரே!

என் வலைப்பூ

மரபுத் தமிழின் மாண்பைப் பரப்ப
விரவும் அன்பால் விளைந்த என்வலை!
கவிதை பாடும் கலையை வழங்கும்!
சுவையைச் சொல்லச் சொற்கள் இல்லை!
பற்றாய் நாளும் படித்து வந்தால்
முற்றும் மனத்துள் முத்தமிழ் யாப்பே!

சென்று பாரீர்! செந்தமிழ்க் கனிகளைத்
தின்று பாரீர் தெரியும் நன்மையே!


85 comments:

  1. வலையுல ஆசானே வருக
    இவ்வார வலைச்சரம் மணக்க
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      முல்லை மணமாக முன்வந்து சீருரைத்தீர்!
      எல்லை இலாத இனிப்புற்றேன்! - வல்லகவி
      பாடும் கவியே! பகர்கின்றேன் என்..நன்றி!
      ஆடும் மகிழ்வை அணிந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  2. வாணக்கம் !

    இந்த வார வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற வந்திருக்கும்
    தங்களின் ஆற்றல் கண்டு அனைவரும் வியந்து பாராட்ட என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா !

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அம்பாள் அடியாள் அளித்திட்ட வாழ்த்துரை
      செம்பால் இனிமையைச் சேர்த்துாட்டும்! - .இம்மண்ணில்
      அன்னைத் தமிழ்காக்கும் ஆற்றல் தமிழச்சி!
      என்னை மகிவித்தார் இங்கு!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  3. புதுமை பல படைத்திட, வலைச்சரம் சிறக்க வந்த, பிரெஞ்சுக் கவிஞர் புதுவை கி.பாரதிதாசன் அவர்களை அன்புடன் வருக வருக என
    வரவேற்கிறேன்.
    த.ம.4

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      புதுவைக் கவிஞன்நான்! பொங்கும் உணர்வால்
      பொதுமைக் கவிஞன்நான்! போற்றும் - புதுமைத்
      தமிழிளங்கோ தந்த எழுத்தெல்லாம் இன்ப
      அமிழ்தெனக்கு ஊட்டும் அணைத்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  4. வணக்கம் ஐயா !
    வாழ்க்கை சரிதம் முழுதும் கவிதையிலே
    வீழ்ந்து மிளிர்கிறது நன்று!

    அருமை அருமை ! வெற்றிநடை போடவென் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அணியாய்க் கவிதை அளிப்பேன்! உயிரின்
      பணியாய்க் கவிதை படைப்பேன்! - மணக்கும்
      கனியாய் வலைச்சரம் கண்டு களிப்பேன்!
      இனியா அளித்தாய் இனிப்பு!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  5. வணக்கம்! கவிஞரே! தங்களாளாலும், தங்களின் மணம் கமழ் தமிழினாலும் வலைச்சரம் இவ்வாரம் முழுவதும் மணக்க, அதை நுகர நாங்கள் காத்திருக்கின்றோம். தொடர்கின்றோம்...வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வலைச்சரம் ஆக்கம் கலைச்சரம் காண
      நிலைவரம் வேண்டிநான் நின்றேன்! - மலைச்சீர்
      உளமுறும் வண்ணம் உயர்தமிழ் மின்னத்
      துளசிதரன் என்றன் துணை!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  6. வருக.. வருக..
    தங்களுக்கு அன்பின் இனிய நல்வரவு!..

    இனி நாளும் நாளும் கவிமழையில் நனையலாம் என்பதில் மகிழ்ச்சி!..

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வருக வருகவென வாயார வாழ்த்தித்
      தருக தருகவெனக் கேட்டார் - அருந்தமிழைச்
      சீரார் துரை.செல்வ ராஜீயார்! வாழ்த்துகிறேன்
      தாரார் தமிழால் தழைத்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  7. வாருங்கள் ஐயா... மேலும் ரசிக்க காத்திருக்கிறேன்... வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வல்ல குறள்நெறியை வார்க்கும் வலைச்சித்தர்!
      நல்ல மனத்தர்! நனிபண்பர்! - சொல்லரும்
      திண்டுக்கல் பாலர் செழுந்தமிழை மின்வலையுள்
      கொண்டு..செல் வேந்தரெனக் கூறு!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  8. வணக்கம் அய்யா!
    யாவரும் போற்றி வணங்கும்
    மாபெரும் மங்கலத் துவக்கம்
    சீர்பெறும் சிறந்தே! கவியே
    பாருக்கு நல் விருந்தே!
    நன்றி!
    த ம 5
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பாருக்கு நல்ல விருந்தளிக்க வா..என்றீர்!
      சீருக்கும் வாழ்வின் சிறப்புக்கும் - பேருக்கும்
      அன்னைத் தமிழடியில் ஆழ்ந்து தொழுகின்றேன்
      முன்னை வினையை முடித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  9. வலைச்சரத்திற்குள் வந்ததுபோலத் தெரியவில்லை. ஏதோ ஒரு பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததுபோல உள்ளது. அறிமுக முறையும் அருமை. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      ஆசிரிய நன்மக்கள் அள்ளி அணைத்தென்றன்
      மாசகற்றி வாழ்வோங்க மாண்பளித்தார்! - வீசும்பூங்
      காற்றாய்.இன் சம்புலிங்கம் சாற்றும் தமிழ்கண்டேன்!
      போற்றும்என் நெஞ்சம் புகழ்ந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  10. அனைவரும் வியந்து நோக்கும் விதம் தங்களின் அறிமுகம் அமைந்திருக்கிறதுங்க ஐயா.
    கலக்குங்க வாரம் முழுதும். வாழ்த்துக்கள் ஐயா.
    செந்தமிழ்ப் பாடியே சிந்தை நிறைந்திடும்
    உந்தன் புலமையின் ஊற்று.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வணக்கம்!

      தென்றல் சசிகலா தேனார் கவிபாடி
      என்றன் உளம்கவர்ந்தார்! என்நன்றி! - என்றென்றும்
      பாட்டுக் கலைபயின்று நாட்டும் எழுத்தெல்லாம்
      கூட்டும் புகழைக் குவித்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  11. வணக்கம் ஐயா!

    மண்ணும் மணக்கும் சொல்லும் சுடராகும்
    சுந்தரமாய் அகவல் பாடிச் சுய அறிமுகம் செய்தீர்கள்!
    எத்தனை அறிஞர்களின் அற்புதப் படைப்பாக
    அகிலத்தில் வந்துதித்துள்ளீர்கள்! பெருமையாக இருக்கின்றதையா!

    வலைச்சர வாரம் சிறப்பாக அமைய வேண்டி வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பொன்மனம் மின்னும் புலமை இளமதியார்
      என்னினம் ஓங்க எழுதுபவர் - இன்வனப்
      பூக்கள் அனைத்தும் பொலியும் அவர்நெஞ்சப்
      பாக்கள் படைக்கும் படர்ந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  12. சும்மாவா தமிழ்த்தேன் சொட்டுகிறது உம் எழுத்துக்களில்
    கற்று வந்த பாதை அப்படி. நமக்கெல்லாம் எளிய உரைநடைதான் சாத்தியம் வலைச் சர ஆசிரியராக வரவேற்கிறோம்

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வந்தஎன் பாதை வளர்தமிழ்ப் பூஞ்சோலை!
      தந்தஎன் ஆக்கம் தமிழ்அருளே! - சிந்தையைச்
      சந்தக் கவிமாது சொந்தம் எனக்கொண்டாள்!
      முந்தும் சுவையை மொழிந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    2. மொழிகின்ற தெல்லாமும் முத்தமிழ் தேனாய்ப்
      பொழிகின்ற தெல்லாம்வெண் பாக்கள் - அழிகின்ற
      ஊற்று மரபுகடல் ஊறு மழிழ்தெடுத்துங்
      காற்றுங் கவிபாடு தே!

      Delete

    3. வணக்கம்!

      காற்றுங் கவிபாடும் கன்னல் புதுவைமகன்
      ஆற்றும் கடமை அழகுறவே - போற்றுகிறேன்
      கண்ணன் திருவடியை! காதலால் தீட்டுகிறேன்
      வண்ணம் ஒளிரும் வலை!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    4. வலைமீன்கள் கண்கள் வியக்கின்ற வண்ணம்
      அலையாழ முத்துக்கள் யாவும் - விலையில்லை
      எல்லாப் புகழுக்கும் ஏகன் துணைசெய்தான்
      வல்லானை நெஞ்சேநீ வாழ்த்து.

      நன்றி ஐயா.

      Delete

    5. வணக்கம்

      இற்றைப் பொழுதை இனிக்கின்ற வண்ணத்தில்
      கற்றைச் சடையன் கருணைதரப் - பெற்றோமே
      காலம் கமழும் கவிதைகளை! கற்றொளிரும்
      ஞாலம் புகழும் நமை!

      Delete
  13. தமிழ்க் கடல் பாரதிதாசன் அவர்கள் வலைசரத்தை அலங்கரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது மனம் கவர்ந்த பதிவுகளை ரசிக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      ஏற்ற பணிசிறக்க இங்கே எழுதுகிறேன்!
      ஆற்றல் அனைத்தும் அவனருளே! - போற்றும்
      முரளிதரன் மூங்கில் தருமிசைபோல் வேண்டும்
      விரல்தரும் வெண்பா விருந்து!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
  14. ஐயா வணக்கம்.

    கடலொன்றின் சின்னக் கரைநின்று பார்க்கும்
    உடலம்போல் உம்பதிவில் உள்ளம் - திடவெண்பாப்
    பூட்டுமலை ஓட்டுமெனைக் காட்டுதமிழ் மீட்டலிசை
    வாட்டல கற்றவரு மே!

    ஆசிரியப் பணிக்கு வணக்கமும் வாழ்த்தும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      சின்ன குயிலாக மின்னும் கவியென்னை
      இன்னும் எழுத இனிப்பளித்தீர்! - மன்னுபுகழ்
      ஊமைக் கனவுகளை ஓதிக் களிப்பவன்நான்
      ஆமை அடக்கம் அணிந்து!

      Delete
    2. சொல்லச் சுகம்கொடுக்கும்! சொல்லாத வாய்கடுக்கும்!
      வெல்ல விருந்துண்டு வாவென்னும் - நல்லதமிழ்
      சூடுமும் பாக்கள் சுவைத்தோனாய் வேண்டுமெனப்
      பாடுமிப் பாடல் பசி.

      தொடர்கிறேன் ஐயா.

      நன்றி

      Delete

    3. வணக்கம்!

      பாடல் பசிகொண்டோம்! பண்டைத் தமிழாண்ட
      கூடல் அமைத்திடுவோம்! கூத்திடுவோம்! - வாடல்
      இனியில்லை! இன்பத் தமிழுக்கே தெல்லை?
      கனிக்கொல்லை நம்மின் கவி!

      Delete
    4. உம்மின் கவியாவும் ஓங்க லிடைப்பட்டே
      எம்மின் மரபாக்க எண்ணுவதால் - செம்மாந்து
      வந்த மொழிகற்க வாய்மூடா நிற்பவனின்
      கந்தல் பழம்பாட லே!

      நன்றி ஐயா

      Delete

    5. வணக்கம்!

      பழம்பாடல்! ஆம்..ஆம் பழுத்தபழம் பாடல்!
      தொழும்பாடல்! துாயத்தமிழ்ப் பாடல்! - அழகாய்
      எழும்பாடல்! இன்ப இசைப்பாடல்! யாப்பை
      உழும்பாடல் என்பேன் உணர்ந்து!

      Delete
    6. உழுதகளம் உம்போல ஒவ்வொருவர் பாடல்
      தொழுதகளம் என்றன் துணையாய் - பழுதிருக்கும்
      பார்த்துத் திருத்துங்கை பாராட்டி வாழ்த்துங்கை
      சேர்த்துப் பணியும் சிரம்

      நன்றி.

      Delete

    7. வணக்கம்!

      என்ன எழுதிடுவேன்? இம்மென்னும் முன்னெழுந்து
      மின்னக் கவிதை விளைக்கின்றீர்! - சொன்னயம்
      கண்டுநான் சொக்குகிறேன்! காலமெலாம் காதல்மனம்
      கொண்டுநான் சொக்குகிறேன் கூர்ந்து!

      Delete
    8. கூர்த்த அறிவுமதி கூனல் இருள்விளக்கிப்
      பார்த்த விழிநடுங்கப் பாலொளியாய் - ஆர்ப்பரித்த
      வெள்ளத் தமிழருவி வேகத் தெனைநனைக்க
      உள்ளச் சிமிழ்நடுங்கு தே!

      நன்றி ஐயா!

      Delete

    9. வணக்கம்!

      அன்பின் நடுக்கம் அளவிலா இன்பன்றோ?
      பண்பின் பெருக்கெடுத்துப் பாடுகின்றீர்! - வண்ணமுடன்
      தீட்டும் எழுத்தெல்லாம் செந்தேன் மழைபொழிந்து
      காட்டும் கவிதைக் கலை!

      Delete
    10. கலைகின்ற எண்ணக் கனவெல்லாம் கொல்லன்
      உலைபோல தீச்சிந்தும் ஓயா! - மலைமேவும்
      ஒற்றை விளக்குலகம் உற்றே அறிவதுபோல்
      கற்றவர்நீர் சொல்லும் கவி!

      நன்றி ஐயா.

      Delete

    11. வணக்கம்!

      கற்ற கவிஞானம்! உற்ற கலைஞானம்!
      பெற்ற புலவரே! பேணுகிறேன் - உற்றஉம்
      வெண்பா விளக்கை! வலைச்சரம் மின்னுதே
      ஒண்பா விளக்கால் உயர்ந்து!

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. வணக்கம்.

      கற்ற கலையொன்றும் கைகொடுக்கா விட்டாலும்
      உற்ற தமிழென்னில் ஓயாதே ! - அற்பனுமே
      பெற்ற பெரும்பேறு பேரறிவோர் உம்போன்றோர்
      நற்றுணையாய் நான்பெற் றது!

      நன்றி ஐயா.

      Delete

    14. வணக்கம்!

      தொடுத்தெழுதும் வேகம்! சுடர்த்தமிழ் ஆக்கம்!
      எடுத்தெழுதச் சொற்கள் இலையே! - விடுக்கின்ற
      வெண்பா அனைத்தும் விருந்தை எனக்கூட்டும்
      பண்பாய் அமுதைப் படைத்து!

      Delete
    15. வணக்கம்.

      கண்காட்டி வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்
      தண்ணார் தமிழாம் திருநுதலாள் - மண்தேயும்
      சின்னப் புழுவெடுத்து வண்ணம் பலசேர்த்து
      மின்னும் படிசெய்வாள் மேல்!

      நன்றி ஐயா

      Delete

    16. வணக்கம்!

      அன்னைத் தமிழின் அருள்பெற்றால் நம்வாழ்வு
      பொன்னை நிகர்த்த பொலிவேந்தும்! - என்னையும்
      ஓர்பொருட்டாய் எண்ணி உயர்கவி தந்தவளைச்
      சீர்தொடுத்துக் காத்தல் சிறப்பு!

      Delete
  15. வணக்கம் அய்யா,
    தமிழ் அன்னையின் தவப்புதல்வர்கள் தங்கள் ஆசானாய்,
    தாங்கள் எங்கள் ஆசானாய்,,,,,,,,,,
    இவ்வாரம் வலைச்சரம் கவி மழையில் நனையட்டும்,
    வாருங்கள் அய்யா,
    நன்றி,

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அன்னை அளித்த அருள்கொண்டு பாடுகின்றேன்!
      என்னை வெறும்பொருளாய் எண்ணுகவே! - உன்னைப்
      பணிகின்றேன் ஓங்குதமிழ்ப் பற்றால்! ஒளிர
      அணிகின்றேன் பாடும் அணி!

      கவிஞர் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    2. வணக்கம்.

      பாடு மணிகலனே பார்க்கும் விழியழகே
      தேடு தமிழ்சேர்த்த தேன்கூடே! - ஈடில்
      மரபென்னும் ஆற்றில் மகிழ்ந்தேறத் தோணி
      சிரங்கொண்டு செய்தீர் சிறப்பு.

      நன்றி.

      Delete

    3. வணக்கம்!

      அப்பப்பா அந்தமிழ் பாடி அசத்துகிறீர்!
      எப்பப்பா உம்போல் எழுதுவது - தப்பாமல்
      நாளும் வருகைதர வேண்டுகிறேன்! நல்வரவால்
      மூளும் கவிதை முகில்!

      நனிநன்றி--- நனிநன்றி.... நனிநன்றி

      Delete
    4. எப்போதும் வானிருக்கும் எம்கண் விளக்குதற்குத்
      தப்பாது வந்து தமிழ்கொடுக்கும் - முப்பாலில்
      சொன்ன தளைபிடித்துச் சொக்கவைக்கும் உம்பணியைச்
      சின்னப் பயல்தொடர்கி றேன்.

      நன்றி ஐயா.

      Delete

    5. வணக்கம்!

      மின்னும் கவியே! வியக்கின்ற வெண்பாக்கள்
      பின்னும் கவியே! பெருமையுடன் - இன்னும்..நீ
      பாக்கள் படைத்திடுவாய்! பண்டை நெடுமால்..நீ!
      பூக்கள் பொழிந்தேன் புகழ்ந்து!

      Delete
    6. மின்னல் ஒருநொடியில் மேனி சிலிர்த்தடங்கும்!
      கன்னல் விருப்புண்ணக் காய்ந்தடங்கும்- என்மனமோ
      வண்ணத் தமிழ்வசமே வாடாமல் நிற்பதற்(கு)
      எண்ணம் எழுதிவைத் தேன்!

      நன்றி ஐயா.

      Delete

    7. வணக்கம்!

      ஊறும் உணர்வுகளால் கூறும் மொழிகேட்டே
      ஏறும் இனிமைக் கிணையுண்டோ? - ஆறுபோல்
      ஓடும் நடைகண்டேன்! உங்கள் கவிக்கன்னி
      சூடுமடை உண்டேன் சுவைத்து!

      Delete
  16. ஆறு கடலடங்கும்! ஆறா உடலடங்காச்
    சேறு வினையென்றால், செந்தமிழோ - ஊறும்
    உணர்விற்கும் இந்த உலகிற்கும் உண்மைப்
    புணர்விற்கும் நல்ல புலம்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கவிதைக் கடலே! கனித்தமிழ்த் தோப்பே!
      புவியைப் புரட்டும் புயலே! - குவிக்கின்றேன்
      என்றன் இரு..கைகள்! எப்பிறப்பும் வேண்டுகிறேன்
      உன்றன் கவிதை உறவு!

      Delete
    2. பழுமரங்கள் நாடாப் பறவையினை என்றும்
      விழுபசியால் புள்ளினமே வேண்டும்! - எழுத்தெடுத்(து)
      உங்கள் மரம்நாடி ஓயா தடைக்கின்றேன்
      எங்கும் தமிழே இருப்பு!

      நன்றி ஐயா.

      Delete

    3. வணக்கம்!

      தமிழே இருப்பாய்த் தழைத்த புலவர்!
      அமுதே அகமாய் அடைந்தார்! - குமுதமலர்க்
      காடாய்க் கவிதைக் களங்கண்டார்! இங்கிவர்
      ஈடாய் இருப்பார் எவர்?

      Delete
    4. வணக்கம்

      ஓடும் நதிமருங்கில் ஓங்கியுயர் நன்மரம்போல்
      பாடும் எனிற்பாயும் பாவலரே! - நாடும்
      நறுங்கவிதை பூக்கள் நகரும்‘உம் வெள்ளக்
      குறுஞ்சுழலில் பாயும் குதித்து.

      நன்றி.

      Delete
    5. கவிஞா் கி. பாரதிதாசன்Mon Aug 03, 06:08:00 PM


      வணக்கம்!

      புலிபாயும் வண்ணத்தில் பொங்குதமிழ் பாய
      மலர்பாயும் வண்டுமனம் உற்றேன்! - பலர்பாய்ந்து
      பாட்டுக் கலைகற்கப் பாரில் வழிசெய்வோம்!
      காட்டு மலராய்க் கமழ்ந்து!

      Delete
    6. வணக்கம்.

      நீட்டம் நிறுத்துகிறேன்! நல்ல தமிழ்படிக்க
      வாட்டம் கலைய வலைவருவேன் - ஊட்டமளிக்
      கின்ற உமதொளியின் கீற்றால் நனைந்திடுக
      வென்ற வலைச்சரத்தின் வேர்!

      நன்றி ஐயா விடைபெறுகிறேன்.

      Delete

    7. வணக்கம்!

      தண்பா மனங்கொண்டு தங்கத் தமிழோங்க
      வெண்பா விதையை விதைத்தோமே! - ஒண்பா
      மணியே! மணக்கின்ற வண்ணம் கவிதைப்
      பணியே புரிந்தோம் பணிந்து!

      Delete
  17. வலைச்த்தை அலங்கரிக்க வந்திருக்கும் கவிஞருக்கு வாழ்த்துகள் எமது

    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வாழ்த்தி வணங்கி வரவேற்றார்! என்தலை
      தாழ்த்தி வணங்கித் தமிழ்தருவேன்! - சூழ்புகழ்
      சேர்தேவ கோட்டையார்! செந்தமிழின் சீரினைப்
      பார்மேவச் செய்வார் படர்ந்து!

      Delete
  18. வலைச்சர ஆசிரியப்பொறுப்பேற்றிருக்கும் கவிஞர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள்! ஆசிரியர்களை முன்னிறுத்திய உங்கள் அறிமுகம் சிறப்பாக இருந்தது. உங்கள் ஆசிரியர்களுள் தெளிதமிழ் நடத்திய திருமுருகன் ஐயாவை அறிவேன். நீங்களும் ஊமைக்கனவுகள் சகோவும் பெய்த கவிதை மழையில் நனைந்து இன்புற்றோம். வாரமுழுதும் தொடர்ந்து நனைய ஆவலுடன் காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கலையரசி தந்திட்ட கன்னல்மொழி! அந்த
      மலையரசி தந்தவரம் என்பேன்! - வலையுலகில்
      வண்ணத் தமிழோளிரக் கண்ணன் அருள்தருவான்!
      எண்ணம் நிறையும் இனி!

      Delete
  19. அய்யா...

    தாங்கள் ஏற்ற வலைச்சர பணி மிகச் சிறப்பாக அமைந்து, உங்கள் அழகுதமிழ் அலங்காரங்களால் வலைச்சரம் மேலும் பொலிவுற மனமார்ந்து வாழ்த்துகள்.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      அழகு தமிழுடனே அல்லும் பகலும்
      பழகும் புலவன்..நான்! பண்பின் - விழுதுற்றுப்
      பாரில் செழிக்கின்றேன்! பாடும் படைப்பெல்லாம்
      வேரில் மணக்கும் விளைந்து!

      Delete
  20. கவிஞரை,
    வாழ்த்தி,
    வரவேற்கிறோம்...!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      எங்கும் தமிழ்மொழியை ஏத்திப் பரப்புவதால்
      பொங்கும் இனிமை புவியெங்கும்! - சிங்காரச்
      சொல்லாட்சி செந்தமிழைச் சூடி வலைச்சரத்தை
      நல்லாட்சி செய்தல் நலம்!

      Delete
  21. தங்களின் அறிமுக கவிதை பதிவே எம்மை கவர்ந்துவிட்டது. வரும் நாட்களையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      செந்தில் குமாரின் சிறப்பு வருகைக்குத்
      எந்தம் இனிய வணக்கம்! - எந்நாளும்
      வந்திடுக! வார்க்கும் வலைபடித்து நற்கருத்துத்
      தந்திடுக இன்பம் தழைத்து!


      Delete
  22. புதுவை ஊருக்குப் புதுமை சேர்த்த...
    பாரதியின் சாரதியான பாரதிதாசனின்
    வரிசையில் வந்த...
    இரண்டாம் பாரதிதாசனே...!
    புகழேந்தி வரும் வெண்பாவே...!!
    புரட்சிக்கவிகளைப் போட்டி போட்டு
    ஊமையின் கனகளை உரக்கச் சொலலி
    வலைச்சரம் சிறக்க வருக! வருக!
    அலைச்சரம் போல் தமிழ்க்கடலில் பள்ளி கொள்ள,,,
    உள்ளம் கொள்ளை கொள்ள... தருக ... பருக... உருக,,,
    தமிழ்ப்பால்...! கவிப்பால்...! களிப்பால்...! உவப்பால்...!

    நன்றி.
    த.ம.11

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      மணவை எழுத்தாளர் மா..தமிழில் செய்யும்
      உணவை பருகும் உளத்தார்! - குணத்தார்!
      வருகையைப் போற்றி வரவேற்றேன்! என்றன்
      இரு..கையை நன்றே இணைத்து!

      Delete
  23. வணக்கம் ஐயா!
    வலைச்சரம் தங்கள் தமிழால் மணக்க இருப்பதறிந்து மகிழ்ச்சி. முதல் பதிவே இனிமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தேமதுர ஓசை தெருவெல்லாம் ஓங்கிடவே
      பாமதுர பாரதி பாட்டளித்தான்! - மாமதுரப்
      பாக்களைப் பாடிப் படைக்கிறேன்! தாய்அணியும்
      பூக்களைத் தேடிப் புனைந்து!

      Delete
  24. இம்ம்ம்ம் சரியான போட்டி. பின்னூட்டப் பாக்களும் மறு மொழிகளும் . ஒரு அறிமுகப் பதிவுக்கு ஏறத்தாழ 15 பின்னூட்டங்கள் ஒருவரிடமிருந்தே. அதற்குச் சளைக்காத மறு மொழிகள். எல்லாம் கவிதை வடிவிலே. பார்க்கும் போது இது என் ஏரியா அல்ல என்று தெளிவாக விளங்குகிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      சங்க நெறிமணக்கத் தங்க மனமுவக்க
      எங்கும் தமிழின் எழில்பரப்பப் - பொங்கலென
      எங்கள் கவிகளை ஏந்தும் வலைச்சரம்
      உங்கள் இடமென ஓது!

      Delete
  25. வணக்கம் ஐயா. இரண்டு நாட்கள் ஊரில் இல்லாதததால் வலைச்சர ஆசிரியராக தாங்கள் பொறுப்பேற்க இருப்பது குறித்து அறியவில்லை. தங்களை வருக வருக என வரவேற்று, இவ்வார வலைச்சரத்தை அருமையாய் தொடுக்க மனமார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      ஓடியே வந்திங்கு உரைத்த கருத்திற்குப்
      பாடியே நன்றி படைக்கின்றேன்! - தேடியே
      வந்து குடிப்பீர் வளர்தமிழை! சிந்தனையைத்
      தந்து வளர்ப்பீர் தமிழ்!

      Delete