Thursday, August 6, 2015

பாரதியின் பாதையில்...



பாரதியின் பாதையில்........

காவடிச் சிந்து 

1.
புதுவைப் பூங்குயில் போன்று..நீ பாடு! - துள்ளி
                               யாடு - மகிழ்
                               வோடு - நம்
பொற்றமிழ் காத்திடப் போர்நடை போடு - நற்
புகழேபெறப் பொலிவேவுறப் புவியேயுனைப் பணிந்தேதொழப்
பொங்கும்த மிழ்போற்ற நீ..தினம்   கூடு! - தெரு
வெங்கும்த மிழ்பூக்க நல்வழி    தேடு!

பொதுமை பொன்னெறி பூத்தபூங்   காடு - தமிழ்
                               நாடு - தேன்
                               கூடு - அதன்
பொய்யாமொ ழிக்குற ளுக்கிலை ஈடு - உயர்
பொன்னேயெனப் பூவேயெனப் பாவேதரப் பேரேயுறப்
போட்டியி டும்வல்ல பாவலர்    பீடு - சிந்து
ஊட்டிவி டும்தமிழ்த் தாயுற்ற    வீடு!

2.
பாரதி பாடிய பைந்தமிழ்க்       கோட்டை - தமிழ்
                               நாட்டைக் - கவிக்
                               காட்டை - நீ
பற்றுடன் ஓதிவ ளர்மனக்       கூட்டை - நம்
பண்டைநலம் கொண்டுவரும் பண்புதரும் இன்பமுறும்
பாக்களைக் கற்றுளம் ஓங்கிட   வேண்டும் - கொடும்
மாக்களை மாற்றிட நெஞ்சினைத் துாண்டும்!

கூருடை அம்பென நற்கவி      பாயும்! - பகை
                               சாயும் - இருள்
                               மாயும் - பொய்
கொட்டும்சா திப்பேயின் ஆட்டங்கள் ஓயும் - உயர்
கூத்துக்கலை பூத்துப்படர் பாட்டுக்கலை சேர்த்துக்கமழ்
கோலம்மி கும்வண்ணம் கொண்டதெம் ஊரே! - வரும்
ஞாலம்பு கழ்வண்ணம் செந்தமிழ்த் தேரே!

3.
மின்வலை மின்னிடும் பொன்வலை    ஆக்கும் - நமை
                               ஈர்க்கும் - புகழ்
                               சேர்க்கும் - வாழ்வில்
வெற்றித ரும்அரும் பாக்களைப் பூக்கும் - அன்னார்
விந்தைமிகு சந்தநடை தந்தகொடை சிந்தையுற
வேண்டியே இன்றைய நற்பதி    விட்டேன் - மண்
சீண்டியே சிந்துப்பா நல்விதை   நட்டேன்!

இன்கவி வாணர்தம் ஆற்றலைச்   சொல்லி - மனம்
                               துள்ளிச் - சுவை
                               அள்ளி - உண்டு
இங்குநான் வைத்தனன் நற்கவிப் பள்ளி - உலகில்
என்றுமுள தொன்மைமொழி எங்குமுள அன்பர்பெற
இங்கேஇ வர்தீட்டும் மாட்சியைக் கண்டேன் - குளிர்
நுங்கேஇ வர்என நான்எடுத்      துண்டேன்!


-------------------------------------------------------------------------------------------------------


கவிஞர் இரமணி - மதுரை

வலைப்பூ: தீதும் நன்றும் பிறர் தர வாரா...


வல்லமை உள்ளவர்   இரமணி - அறியும்
                      தரணி - படித்தால்
                      சரண்நீ - இவர்
வார்த்தபா போர்ப்படைப் பரணி - நாளும்
வண்ணத்தமிழ் சந்தச்தமிழ் சிந்துத்தமிழ் இன்பத்தமிழ்
மண்ணிடை ஓங்கிட   நெய்தார்! - நம்
கண்ணிடை தேங்கிடச்          செய்தார்!

நல்லவை யாவுமே    கூறும் - தமிழ்
                      ஆறும் - உயர்
                      பேறும் - கொண்டு
நாட்டில்மின் னும்இவர்          பேரும் - வாழ்வில்
நன்றும்வர என்றும்வர நன்மைநெறி எங்கும்வர
நாட்டிடும் பாக்களைப் பாரீர்! - மகிழ்
வூட்டிடும் தேனுண்டு வாரீர்!



------------------------------------------------------------------------------------------------------- 


புலவர் சா. இராமாநுசம்

வலைப்பூ: புலவர் கவிதைகள்


சிந்துப்பா பாடிடும்     புலவர் - கவி
                      நிலவர் - தமிழ்
                      உழவர் - இவர்
சீரினைப் போற்றுவார்           தமிழர் - வாழ்வின்
செம்மைதரும்! நன்மைதரும்! சிந்தையுறும் உண்மைதரும்
செந்தமிழ் நல்கிடும்   நல்லார் - உயர்
சிந்தனை நல்கிடும்    வல்லார்!

முந்தைப்பா பற்பல    நெய்வார் - புகழ்
                      கொய்வார் - நலம்
                      செய்வார் - தினம்
முத்தமிழ் பாடியே     உய்வார்! - நம்
முன்னைப்புகழ் தம்மைத்தொழ அன்னைத்தமிழ் அன்பைத்தர
முத்தாய் இவர்கவி    கண்டேன் - மலர்க்
கொத்தாய் நறும்மது   உண்டேன்!



------------------------------------------------------------------------------------------------------- 


கவிஞர் சிவகுமாரன் - ஆலங்குடி

வலைப்பூ: சிவகுமாரன் கவிதைகள்


வெண்பா படைக்கின்ற          வீரன் - எழில்
                      மாரன் - கவி
                      சூரன் - தமிழ்
வேல்படை சேர்காவல்          காரன்! - காதல்
மின்னும்விழி பின்னும்மொழி உண்ணும்மனம் பண்ணில்விழும்
மின்வலை கொண்டுள          ஆக்கம் - நம்
துன்னிலை யாவையும்          போக்கும்!

பண்பை விளைக்கின்ற          நெஞ்சம் - தமிழ்
                      தஞ்சம் - புகழ்
                      விஞ்சும் - பாடும்
பாட்டில் அணிச்சுவை விஞ்சும் - என்றும்
பணிவேதரும் மனமேயொளிர் இனமேவளர் செயலேதரும்
பாங்குடன் தீட்டிய     வலை..பார்! - அது
பூங்குயில் மீட்டிய     மலை..பார்!



------------------------------------------------------------------------------------------------------- 


திருமிகு அப்பாதுரை

வலைப்பூ: நசிகேச வெண்பா


ஒண்பாவில் ஓர்நுாலைப் படைத்துச் - சீர்
                        புடைத்துப் - புகழ்
                        தொடுத்து - நாளும்
வெண்பாவின் யாப்புத்தேன் குடித்துத் - தந்து
ஓங்கும்கவி தாங்கும்தமிழ் தேங்கும்சுவை நீங்கும்துயர்
ஒப்பில்அப் பாதுரை      வாழ்க - கலை
செப்பும்அப் பாமரை      சூழ்க!

தண்பாவின் நுட்பங்கள்          கண்டு - பசி
                        கொண்டு - தமிழ்
                        உண்டு - இவர்
தந்திட்டார் நற்றமிழ்த்   தொண்டு - நன்றே
தழைத்தேவளர் நிலத்தேநிகர் வளத்தேதரும் மனத்தேஇவர்
சாற்றிய மின்வலை      செல்வீர் - மது
ஊற்றிய இன்சுவை      கொள்வீர்!




------------------------------------------------------------------------------------------------------- 


இனியா - கனடா

வலைப்பூ: காவியக்கவியின் கவிச்சாரல்


காவிய மங்கை..நம்    இனியா - பழக்
                      கனியா - மின்
                      அணியா - தினம்
கட்டும்பா ஓங்கிடும்   தனியா - வளர்
காட்டின்மணம் பாட்டில்தரும் நாட்டின்நலம் ஏட்டில்வரும்
கற்பனைக் கில்லையோர் அணையே! - கவி
ஒப்பனைக் கில்லையோர் இணையே!

ஓவியப் பாவை..நம்   தோழி - நலம்
                      வாழி - கவி
                      யாழி - நீந்த
ஊக்கம் தரும்நற்சீ     காழி - தன்
உயிரேதமிழ் உடலேகவி உணவேகலை உணர்வேவலை
ஒன்றியே வாழ்க்கைத்தேர் செல்லும் - செய்ந்
நன்றியே நெஞ்சின்வேர் சொல்லும்!




-------------------------------------------------------------------------------------------------------  

51 comments:

  1. வணக்கம் ஐயா !

    எண்ணத்தில் தேன்சிந்தும் இன்கவிதைச் சோலைகளின்
    வண்ணத்தைக் காட்டினீர் வாழ்த்துகின்றேன் !-கண்முன்
    வலம்வந்த என்குருவின் வல்லமையும் கண்டேன் !
    உலகத்தில் ஒங்கப் புகழ் !

    சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை ஐயா தங்களின் புலமையைக்
    கண்ட பின்னர் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
    நான் இன்னும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கின்றது! மிக்க மகிழ்ச்சி
    ஐயா தங்களின் மாணவி என்ற அந்த ஒரு பெருமையே போதும் எனக்கு !
    சிறப்பான அறிமுகங்கள் இவர்களை வாழ்த்தும் அளவிற்கு எனக்கு வயது
    போதாது ஆதலால் அனைவரையும் பாராட்டி வணங்குகின்றேன் .

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பற்றுடன் பைந்தமிழைக் கற்றுக் களித்திட்டாள்
      பொற்புடன் பாக்கள் பொலிந்தாடும்! - நற்றவம்
      பாட்டுக் கலையென்பேன்! பாங்காய் மனமொன்றித்
      தீட்டும் கவிகளைத் தேர்ந்து!

      Delete
  2. பெரும் பாக்கியம் செய்துள்ளேன்
    தங்கள் வாழ்த்தே எனக்குப்
    கிடைத்தற்கரிய பெரும் பேறு
    கரம் கூப்பி
    சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
    வாழும் பாரதியே
    நீ வாழிய வாழியவே

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பாரார் பயனுறும் பாக்கள் படைக்கின்றீர்!
      சீரார் தமிழின் செழிப்பேந்தி! - தாரார்
      மணங்கண்டு தந்தேன் வளர்கவிதை! வல்ல
      குணங்கண்டு தந்தேன் குறிப்பு!

      Delete
  3. கவிதை நடையில் உங்களது எழுத்தில் பதிவுகளைப் படிக்கும்போது சற்றே வித்தியாசமாகவும், நிறைவாகவும் உள்ளது. பதிவர்கள் அறிமுகத்திற்கு நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வண்ணத் தமிழோங்க வாழும் இவர்களை
      எண்ணம் இனிக்க இசைத்துள்ளேன்! - திண்ணமுடன்
      காவடிச் சிந்துவின் பாவடியை நம்முடை
      நாவடி நண்ணல் நலம்!

      Delete
  4. ஐயா வணக்கம்.


    வண்ணத்தி னைக்கொஞ்ச மள்ளியே – கவி
    வார்க்குமுங் கைத்திற னுள்ளியே – தினம்
    வேண்டுத மிழ்மகள் பள்ளியே – சொலின்
    வனமேயுனில் தினமேமனம் வருமேமது பெறுமேயது
    வாக்கில டக்கிடத் துள்ளுமே – மட
    வானுனுக் கேனென எள்ளுமே!

    தங்களின் சிந்துக்கள் அருமை.

    நான் பெரிதும் மதிக்கின்றவர்களின் இன்றைய அறிமும்,

    தங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      நெஞ்சுக்குள் நிற்கின்ற சிந்து - எந்
      நேரமும் இன்பத்தைத் தந்து - இது
      நீயாடும் பூங்கவிப் பந்து - இவ்
      நிலமேயுறும் வளமேதரும் மனமேயிதை வலமேவரும்
      நெய்கின்ற பா..காட்டும் தங்கம் - நீ
      உய்கின்ற பா..தீட்டும் சிங்கம்!

      வஞ்சுக்குள் நானுண்ட தேனை - இங்கு
      வார்த்திடும் உன்னெழில் மோனை - ஈர்த்து
      மஞ்சத்துள் ஆழ்த்துமென் ஊனை - உன்
      வரவேஉயிர் வரமேயென உயர்வேதரும் ஒளியேயென
      வற்றாத பாட்டாற்றில் நீந்தும் - தமிழ்ப்
      பற்றோடே யாப்பேட்டை ஏந்தும்!

      Delete
    2. ஐயா வணக்கம்!

      சிந்துவின் ஓரடி மட்டுமே தந்துள்ளீர்!
      காலம் இருக்கும் பொழுது மற்றொரு அடியையும் எழுது அன்புடன் வேண்டுகிறேன்.

      Delete
    3. ஐயா வணக்கம்.

      ஏந்தும கல்விளக் கொன்று – அது
      ஏற்றுக விஞர்கள் இன்று – அவர்
      என்றுமும் நல்வழி நின்று – தமிழ்ச்
      சரமாகவே வரமேவியுன் கரமாகவே கவிபாடவே
      எங்கள் விழிஅதைக் காணும் – அதை
      என்றன் மொழிகண்டு நாணும்!

      சாந்தின் மணம்கமழ் கின்ற – தீச்
      சாறாய் எழுந்திடு கின்ற – பாச்
      சார தியாயெமை வென்ற - நல்
      உறவேயுனை மறவேனென திறமேநினைந் துடனேமனம்
      சந்தத் தினில்விழுந் தோடும் – உம்
      செந்தமி ழையெண்ணிப் பாடும்!

      நன்றி

      Delete
    4. ஐயா வணக்கம்.


      பொறுத்திடுங்கள்.

      நாளை நடக்க இருக்கும் விழா தொடர்பாகக் காலையில் பணிக்குச் செல்லும் அவசரம். கவனிக்க வில்லை.

      இதோ முழுமையும்…

      வண்ணத்தி னைக்கொஞ்ச மள்ளியே – கவி
      வார்க்குமுங் கைத்திற னுள்ளியே – தினம்
      வேண்டுத மிழ்மகள் பள்ளியே – சொலின்
      வனமேயுனில் தினமேமனம் வருமேமது பெறுமேயது
      வாக்கில டக்கிடத் துள்ளுமே – மட
      வானுனுக் கேனென எள்ளுமே!

      எண்ணப்ப றவைக்குச் கொஞ்சம் – மொழி
      ஏழ்மையி னாற்வந்த பஞ்சம் – வள
      மேந்துமும் பாக்களில் தஞ்சம்- இனி
      நெஞ்சேசொலெ அஞ்சேலென மஞ்சேமழைப் பிஞ்சே‘என
      தேக்கம கற்றிடச் சொல்லுதே! - எனைத்
      தேற்றிமும் பாப்படை வெல்லுதே!


      நன்றி.

      Delete
    5. ஈற்றடியைத்“ தேற்றியும்“ எனப் படிக்க வேண்டுகிறேன்.
      பிழைக்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
  5. ஐயா! நாள் தோறும் எங்களை கவிதை மழையில் நனைய வைத்து திக்குமுக்காட செய்கிறீர்கள். இந்த வார வலைச்சரம் எங்களுக்கு ஒரு புதுமை அனுபவமே. அதற்கு நன்றிகள் பல. இன்றைய அறிமுக கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      புவிமழை போன்று பொழியும் புலமைக்
      கவிமழை கண்டு களித்தீர்! - சுவைமழை
      நல்கும் நறுந்தமிழின் நற்றாளை நண்ணுகிறேன்
      மல்கும் கவிதை வளம்!

      Delete
  6. வணக்கம் ஐயா!
    இன்று எழுத வழியில்லாமல் செய்து விட்டீர்கள். காரணம் சிந்துப்பாடல்களை இன்னும் எனக்கு கற்பிக்கவில்லை ஆதலால்..
    இன்றைய அறிமுகப் பதிவர்கள் நான் வணங்க வேண்டியவர்கள்.
    தங்களின் கவிதை மிகவும் ஈர்த்தது இன்றும் நன்றிங்க ஐயா.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      காவடிச் சிந்துவின் பூவடிப் போக்கறிந்து
      பாவடி பாடிப் படைத்திடுவாய்! - மாவடி
      இன்றி முதலில் எழுதிடுவாய்! உள்ளுயிர்
      ஒன்றி உணர்ந்ததை ஓது!

      Delete
    2. வணக்கம் ஐயா!

      ஓரடி மட்டும் எழுதிப்பார்த்திருக்கிறேன்.
      சரியா இருக்கா பாருங்க.

      பூவினை நாடிடும் வண்டு -உனைக்
      கண்டு-மலர்ச்
      செண்டு-மனம்
      பூத்திடும் தேனினை உண்டு-புகழ்
      மேவிடும் சீர்வரும் நாவினில் பாதரும்
      சோலையில் ஆடிடும் நெஞ்சம் -கவிச்
      சாலையில் பாடியே கொஞ்சும்.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  7. அய்யா வணக்கம்,
    தங்கள் சிந்துப்பா விற்கு எம் வணக்கம்,
    இன்றைய அறிமுக தளங்கள் நான் விரும்பி வாசிப்பவை, அன்பின் இனியாவின் இனிய கவிதைகள் பல சுவைத்ததுண்டு,,,,
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
    தங்களுக்கு நன்றிகள்,

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      சொன்ன கருத்தால் சுவையுற்றேன்! பாப்படித்து
      இன்னும் எழுதுவாய் என்றென்றும்! - பின்னும்
      மலர்ச்சரம் போன்று வளர்தமிழ்ச் சீரால்
      வலைச்சரம் வீசும் மணம்!

      Delete
  8. வணக்கம்
    ஐயா
    இன்றைய அறிமுகத்தில் உள்ள பதிவர்களின் பதிவுகள் எனக்கு ஒரு வழிகாட்டி.. அவர்களைப்பற்றிய அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வழிகாட்டும் இன்றமிழ் வாணர்கள் தீட்டும்
      மொழிகாட்டும் முன்னேற்ற வாழ்வை! - விழிகாட்டும்
      பொண்ணின் அழகாகப் பண்ணின் சுவைதந்தேன்
      மண்ணின் மணத்தை வடித்து!

      Delete
  9. பாரதியின் பாதையில்...

    மதுரை மாடத்து மணி விளக்கு
    மங்காத கவிகூடத்து ஒளியாய் வாழ்க!
    கற்றணை சிறக்க கவிபாடும்
    ரெட்டணைப் புலவர் வாழியவே!
    கண்ணில் மின்னும் காவியக் கவி
    மண்ணில் மான்புற வாழியவே!
    அறிமுக அறிஞர்கள் அனைவருக்கும் அன்பு நல்வாழ்த்துகள்.
    நன்றி!*
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      மதுரைத் தமிழின் மணமுரைத்த வேலு!
      புதுவைப் புதல்வன்! பொழியும் - மதுமழை!
      வல்ல பணியை வடிவாய்ப் புரிந்திங்குப்
      பல்லாண்டு வாழ்க படர்ந்து!

      Delete
  10. வணக்கம் ஐயா!

    காவடி சிந்தொன்று பாடி - மலர்
                 சூடிச் - சுவை
                 கோடி - வலை
    காட்டிலே நற்கவி தேடி - தந்த
    கவிஞர்அவர் கலைஞர்அவர் வலைஞர்அவர் மகிழ்வேதரும்
    நற்பணிக் கேஎல்லை இல்லை - உன்
    சொற்சுவைக் கேஈடும் இல்லை!

    பாவடி யைப்பாடிக் காட்டும் - உணர்
                 வூட்டும் - உரம்
                 கூட்டும் - நல்ல
    பாவலர் சேர்ந்திட மீட்டும் - நற்
    சுவையேதரும் இனிதாமிதும் இதைபோலொரு நிகழ்வேஇலை!
    பார்கொள்ளு மேமிக்க பெருமை! - உடன்
    சேர்ந்திடு மேஉன்றன் அருமை!

    அற்புதமான காவடிச் சிந்து இன்று!
    நீங்கள் பதிவர்களை அறிமுகப்படுத்தும் அழகே அழகு!..
    தினமும் எப்படியான கவிதை இன்று வரப்போகிறது
    என்று ஏங்க வைக்கிறீர்கள் வலைச்சரத்தில்!
    மிக மிக அருமை! நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

    நானும் கற்கவில்லையாயினும்
    நீங்கள் எழுதியதைப் பார்த்து முயன்றுள்ளேன்!
    திருத்தம் தந்துதவுங்கள்! நன்றி!

    தேர்ந்(து)இட்ட ஐம்பதிவர் தேனேதான் உம்படைப்பும்
    சேர்த்திட்டேன் இங்கென்வாழ்த் தே!

    இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும்
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      காவடிச் சிந்துக்குள் கட்டிய சீரெல்லாம்
      பூவடி போந்து பொலிந்தனவே! - மாவடியோன்
      கண்ணன் கழற்றுணை கன்னல் கவியோங்க
      வண்ணம் வழங்கும் வளர்த்து!

      Delete
    2. வணக்கம் சகோ!

      காற்றுங் குழற்றுழை செல்லவே - இசை
                   சொல்லவே- இடர்
                   வெல்லவே-மொழிக்
      காதல் பெருகுது மெல்லவே - நறுங்
      கனிமேவிய கவியேசெவி யணியேஇள மதியேபுவி
      கன்னித் தமிழ்வளங் காட்டினாய் - குரு
      கண்டு மகிழ்கொடி நாட்டினாய் !


      அருமை சகோ.

      வாழ்த்துகள்.

      Delete
    3. வணக்கம் யோசெப் ஐயா!

      அடடா...! உடனேயே அருமையானதொரு காவடிச் சிந்தில்
      என்னை வாழ்த்திவிட்டீர்களே!..
      சந்தம் பாடுவதில் சமர்த்தர் ஐயா நீங்கள்!
      மிக்க மிக்க நன்றி!
      இன்று வலையுலகில் சஞ்சரிக்க முடியாத
      ஒரு நிலை எனக்கு! அதனாலேயே இங்கு
      கருத்துப் பகிர்வதிலும் தாமதம்!
      மீண்டும் என் உளமார்ந்த நன்றி ஐயா!

      Delete

    4. வணக்கம்!

      சிந்துக் கவிகொண்டு செப்பிய சீருக்குத்
      தந்து மகிழ்கின்றேன் தண்ணன்றி! - வந்தெழுதும்
      பாட்டெல்லாம் கன்னல் தமிழணியும் பட்டென்பேன்!
      ஊட்டும் உணர்வை உயிர்க்கு!

      Delete
    5. வணக்கம் சகோ.

      ஆசானின் கருத்துப்படி இது குறைப்பாடல் அல்லவா?

      இதோ அதன் முழுமை....!

      ..காவடியோ நொண்டியோ....எனக்குத் தெரிந்தவரை.....

      காற்றுங் குழற்றுழை செல்லவே - இசை
                   சொல்லவே- இடர்
                   வெல்லவே-மொழிக்
      காதல் பெருகுது மெல்லவே - நறுங்
      கனிமேவிய கவியேசெவி யணியேஇள மதியேபுவி
      கன்னித் தமிழ்வளங் காட்டினாய் - குரு
      கண்டு மகிழ்கொடி நாட்டினாய் !

      வேற்றுப் புலமெனும் போதிலும் – தமிழ்க்
                   காதலும் – வள
                   மாதலும் –பல
      விந்தை புரிகுது மேதிலும் – அது
      வளரப்புகழ் படரக்களி கிளரச்சுவை மலரத்தரு
      வாசமிங் கெங்கிலும் வீசுமே – மனம்
      வெல்லிள திங்களைப் பேசுமே!


      தங்கள் பாராட்டுக்கு நன்றி.

      Delete
  11. அருமையான அறிமுகங்கள்
    அன்பின் பாரதியின் பாதைகள்
    அறிந்த உறவுகள்
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பாரதி பாதையில் பாடும் குயில்களின்
      சீரொளி கண்டு செயற்புரிந்தேன்! - பாரதிர்
      வண்ணம் கவிதைப் படைநடத்தும் வாணரின்
      எண்ணம் இனிக்கும் இசை!

      Delete
  12. தேன் மழையில் தித்திக்கும் பலா என - சிறப்பான அறிமுகங்கள்!..
    இன்றைய தளங்கள் அனைத்திற்கும் - தங்களுக்கும் நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தேன்மழை கண்டீர்! செழித்த கவி..விளைய
      நான்விதை நட்டேன்! நலம்மேவும்! - வான்கதிரால்
      நீங்கும் இருளன்றோ? நீடுலகில் என்றென்றும்
      ஓங்கும் தமிழென்றே ஓது!

      Delete
  13. கவிதை வடிவிலேயே புதுமையான வலைச்சரப்பூ கண்டு வருகிறோம் அருமை இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      மரபு கவிமணக்க மாண்பு மணக்க
      பரவும் தமிழைப் படைத்தேன்! - விரவும்என்
      அன்பை உணர்ந்திடுவீர்! அற்றைக் கவியழகின்
      நன்மை உணர்ந்திடுவீர் நன்கு!

      Delete
  14. புதுவை பூங்குயிலே- ஓயாத
    பொங்கு தமிழியலே
    முதுமை வயப்பட்டேன்-பலநாள்
    முடியாத துயர்பட்டேன்




    வெண்பா வேந்தேநான்-பதில்
    விரைவாக அளிக்கத்தான்
    பண்பார்தாச பாரதியே-என்றும்
    பணிவன்பாம் நேசருக்கே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      துயரென்றும் உன்னைத் தொடாது! பாட்டின்
      வயலென்று உன்னை வடிப்பேன்! - புயலென்று
      வாழ்ந்த வரலாற்றை ஆழ்ந்து நினைவேந்து!
      வீழ்ந்து வணக்கும் வினை!

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வண்ணப்பா தன்னில் வடித்தவென் பேர்காண
      எண்ணங்கள் எல்லாம் இனிக்குமே - தண்ணரிய
      பாப்புனைந்தீர் நாப்படிய காப்புதமிழ் தோப்பினிலே
      யாப்புரைக்கும் வாக்கும் இனிது!


      பொன்னான பாக்களையே பூவாக்கிச் சொரிகின்றீர்
      புகழோடு வாழ்வீரே என்றும்
      மின்னும்சீர் வண்ணத்தில் மொழிநெய்யும் அழகிற்குள்
      மீளாது காண்போர்கள் நெஞ்சும்
      பின்னும்சொல் அதன்பின்னே போகின்ற எண்ணத்தில்
      பிறக்கின்ற இன்பங்கள் கொஞ்சும்
      என்னையோர் பொருட்டாக்கி எழுத்திற்குள் சேர்த்தீரே
      என்நன்றி இன்றல்ல என்றும்!

      கவிமாலை தொடுத்து இனியாவை இணைத் தீரே ஒரு பொருட்டாய் எண்ணி நன்றி! என்று வேறு வார்த்தையே வரவில்லை வயடைத்து நிற்கின்றேன் மிக்க நன்றி! ஐயா வாழ்த்துக்கள் ..!

      Delete
    2. வணக்கம்!

      சிந்துக் கவிபாடித்துத் தீட்டிய பாக்கண்டேன்!
      முந்தும் எனக்குள் மொழியுணர்வு! - சந்தமுடன்
      தந்த நடையருமை! தங்கக் கருத்தேந்தி
      வந்த சுவையருமை! வாழ்த்து!

      Delete
  16. சீரிய காவடி சிந்தில்
    சிறப்பான பதிவர் அறிமுகம்,
    கண்டு, மனம் உவந்தேன் நன்று!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      சீரிய காவடிச் சிந்தில் பாடியுள்ள
      நேரிய சிந்தனையை நெஞ்சேந்தும்! - பாரதிநான்
      துள்ளிக் குதிக்கின்றேன்! துாய கருத்துகளை
      அள்ளிக் குடிக்கின்றேன் ஆழ்ந்து!

      Delete
  17. கவிமழை தொடர்கின்றது....நாங்களும் நனைந்து களிக்கின்றோம்...அருமை அருமை...

    அனைத்துக் கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தொடரும் கவிமழையில் தோழர் நனைந்தார்!
      படரும் இனிமையினைப் பற்றி! - சுடரும்
      மனமேந்தி இங்கு மகிழ்ந்துரைத்த சொற்கள்
      வனமேந்தும் பூக்கள் மணம்!

      Delete
  18. வாழ்த்துப்பா மாலையைக் கண்டு-பூச்
    செண்டு-தனைக்
    கொண்டு-நானும்
    வந்தேன் மகிழ்வினை உண்டு - சோலை
    மலர்சூடும் மணமோடும் மதுவோடும் தமிழுாளும்
    மாமன்னன் என்றுன்னைப் பாடும் - மனம்
    பாமன்னன் என்றுன்னை ஆடும்!

    தஞ்சம் இனித்தமிழ் என்று -மனம்
    சென்று-புவி
    வென்று - கவிச்
    சங்கம் அமைத்ததும் நன்று - நாளும்
    தமிழ்பாடி நலம்சூடி விளையாடி வருங்கோடி
    எண்ணங்கள் தந்திடும் செம்மை - உன்
    வண்ணங்கள் காத்திடும் எம்மை!

    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
  19. பூவோடிணைந்த நாராக என்னையும் மணக்க வைத்தமைக்கு மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      பாவாக வாழும் பசுந்தமிழ்ப் பாவலரே!
      பூவாக உம்மின் புகழுரைத்தேன்! - தேவார
      மாக இனிக்கின்ற தேன்வலை கொண்டவரே!
      தாகம் தரும்உம் தமிழ்!


      Delete
  20. வணக்கம் கவிஞர் அண்ணா !

    தாயுள்ளே தந்திட்டால் தாகம் - தமிழ்த்
    தாரகை சூடுமே தேகம் - உயிர்க்
    கூட்டுக்குள் பூச்சர யாகம் - என்
    இளம்பாபிலும் சுரம்கூடுமே இனியாவையும் இதமாக்குமே
    என்னென்று சொல்லித்தான் பார்ப்பேன் உயிர்
    மண்ணுக்குள் சேர்ந்தாலும் காப்பேன்

    அழகிய சிந்துப் பாடல்கள் அத்தனையும் அருமை அறிமுகப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete