Friday, August 7, 2015

கணினி கற்போம்!




வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்



கணினி கற்போம்!



அறுசீர் விருத்த அணிவகுப்பு

1.
கணினி மின்கலை கற்றிடும் பேற்றினைக்
          களிப்புறக் கற்றிடுவீர்!
அணியும் பொன்னகை அழகினைப் போல்ஒளி
          அடைந்திட அறிவுறுவீர்!
பணியும் ஓங்கிடப் பயன்பல தேங்கிடப்
          பைந்தமிழ்ப் பண்புறுவீர்!
பிணியும் நீங்கிடப் பெருமையைப் தாங்கிடப்
          பீடுடன் தமிழ்காப்பீர்!


பாட்டின் இலக்கணம்:


குறிய வீற்றுமாக் கூவிள முவ்விள
காயொடுங் குறிகொள்ளே! [விருத்தப் பாவியல் பக்கம் - 9]
  
குறிலீற்றுமா + கூவிளம் + விளம் + விளம் + விளம் + காய்
முதல் சீரிலும் ஆறாம் சீரில் மோனை வரும்.

காய்வரும் இடத்தில் மாங்காய் மட்டுமே வைத்து எழுதுவார் உள்ளார்.


----------------------------------------------------------------------------------------------


2.
நாடு நலமுற வேண்டின்
     நற்றமிழ்க் கலைகளைக் கற்பீர்!
ஒடு நதியென நன்மை
     ஒளிர்ந்திட உளத்தினை ஏற்பீர்!
தேடு கணிப்பொறி தன்னில்
     தென்மொழி திகழ்ந்திடச் செய்வீர்!
பாடு கவிதையில் துாய
     பசுந்தமிழ் மணந்திட வைப்பீர்!


பாட்டின் இலக்கணம்:

ஒன்று மூன்றுடன் ஆறு
மா!விளம் பிறவிடம் உறுமே! [விருத்தப் பாவியல் பக்கம் - 10]
  
குறிலீற்றுமா + விளம் + மா + விளம் + விளம் + மா
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


திண்டுக்கல் தனபாலன்

வலைப்பூ: திண்டுக்கல் தனபாலன்

3.
திண்டுக்கல் தனபாலர் தெரியாதார் யாரிங்கே?
             வலையின் சித்தர்!
கண்டுச்சொல் உரையாளர்! கணிப்பொறியின் கலைநுட்பம்
             கற்ற சிற்பி!
பெண்ணுங்கொள் அழகாக மின்னுங்கொள் வலைப்பக்கம்!
             குறளின் பேற்றை
உண்ணுங்கள் சுவையாக மண்ணுங்கொள் வழியீந்தார்!
             உயர்ந்து வாழ்க!



பாட்டின் இலக்கணம்:


முதனாகும் காயாகிப் பின்னவை,மா
தேமாவாய் முடியும் அன்றே! [விருத்தப் பாவியல் பக்கம் - 9]
  
காய் + காய் + காய் + காய் + மா + தேமா
முதல் சீரிலும் ஐந்தாம் சீரிலும் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


தமிழ்வாசி பிரகாஷ் - மதுரை

வலைப்பூ: தமிழ்வாசி

4.
வலையின் வழியே தமிழ்படிக்க
      வளமாய்ப் பதிவைத் தருகின்றார்!
சிலையின் அழகாய் ஆக்கங்கள்
      கலையின் தன்மை உரைத்தனவே!
மலையின் வன்மை! வயல்பசுமை!
      மண்ணின் பெருமை வழங்கினவே!
அலையின் அணியாய்த் தொடர்ந்திடுவோம்!
      அன்னைத் தமிழை வளர்த்திடுவோம்!



பாட்டின் இலக்கணம்:


இருமா காய்ச்சீர் அரையடிகாய்
இவையே மற்ற அரையடிக்கும் [விருத்தப்பாவியல் பக்கம் - 8]
  
மா + மா + காய் + மா + மா + காய்  
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


அன்பு வேண்டுகோள்

தமிழ்வாசி பேரைத் தமிழ்படிப்பாய் என்றோ

தமிழ்பேசு எனச்சொல்! தழைத்துத் - தமிழோங்கும்!

அன்பால் அளித்த அரிய கருத்தினை

உன்பால் உணர்ந்தால் உயர்வு!

---------------------------------------------------------------------------------------------- 


அப்துல் பாசித்

வலைப்பூ: ப்ளாக்கர் நண்பன்

5.
மின்வலை நண்பன் என்று
     நன்வலை கட்டும் அப்துல்
மின்கலைக் கல்வி நுட்ப
     விந்தையை விரிக்கும் அன்பன்!
இன்வலை ஆக்கம் யாவும்
     எழிற்றமிழ் மாட்சி என்பேன்!
பொன்வலை பக்கம் கண்டு
     போற்றியே படிப்போம் வாரீர்!



பாட்டின் இலக்கணம்:


சீர்விள மாச்சீர் தேமாச்
சீரிணைந் திரட்டும் இங்கே! [விருத்தப்பாவியல் பக்கம் - 7]
  
விளம் + மா + தேமா + விளம் + மா + தேமா
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.


அன்பு வேண்டுகோள்


வலைநண்பன் என்றே வடிவாய்ப்பேர் இட்டால்

கலைநண்பன் என்றே கதைப்பேன்! - இலையென்றால்

எங்கும் தமிழழகைப் பொங்கும் புலவன்என்

அங்கம் துடிக்கும் அதிர்ந்து!


---------------------------------------------------------------------------------------------- 


சசிகுமார்

வந்தே மாதரம்

6.
மின்னார் வலையின் நுட்பம்
     விளைக்கும் இப்பூ! வியக்கின்றேன்!
தன்னேர் இல்லா வண்ணம்
     தழைக்கும் இப்பூ! தமிழ்காக்கும்!
பொன்னேர் உழுத அழகாய்ப்
     பொலியும் இப்பூ! புவியினிலே
தன்பேர் ஓங்கும் வினையைத்
     தாிக்கும் இப்பூ! சாற்றுகவே!



பாட்டின் இலக்கணம்:


மாச்சீர் ஐந்து காய தொன்று
வண்டார் குழன்மாதே! [விருத்தப்பாவியல் பக்கம் - 11]
  
மா + மா + மா + மா + மா + காய்  
முதல் சீரிலும் ஆறாம் சீரில் மோனை வரும்.


---------------------------------------------------------------------------------------------- 


பிரபு கிருஷ்ணா

வலைப்பூ: கற்போம்

7.
கற்போம் கணினிக் கலையைக்
     கன்னல் தமிழ்மொழி காக்க!
நற்பேர் படைத்த வலைப்பூ
     நவிலும் நலவழி பூக்க!
நற்றேன் அளிக்கும் சுவையாய்
     நல்கும் பதிவினை ஆக்க!
சொற்போர் நடத்தும் கவிநான்
     சொன்னேன் சிறப்பை இனிதே!


பாட்டின் இலக்கணம்:



கடையது மாவிள மாச்சீர்  
கலந்தது வெண்டளை என்ப [விருத்தப்பாவியல் பக்கம் - 10]
  
மூன்றும் ஆறும் மாச்சீர்.
ஒவ்வொரு அரையடியும் இயற்சீர் வெண்டளை பெறும்.
முதல் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வரும்.



---------------------------------------------------------------------------------------------- 

57 comments:

  1. ஐயா வணக்கம்.

    1)
    கலைக ளாயிர மாயிரம் கண்டவள் களிப்புடன் காட்சிதந்தாள்!
    வலையில் நர்த்தன மாடிடப் பாடிட வண்றமிழ் வார்த்தளித்தீர்!
    குலையும் யாப்பினை மீட்டிட ஈட்டிய உம்மதி கூர்ந்திருக்கும்!
    அலையும் வந்திடத் தந்திட அக்கடல் அமைதியாய் அங்கிருப்பேன்.!

    தொடர்கிறேன்.

    நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      2)

      சின்ன குருவியும் எங்கும்
         சேர்த்திடு மிரைகளைக் காத்தே
      உன்னிக் கிடக்குமப் பிள்ளைக்
         குவந்தே அளித்திடக் காணக்
      கன்னல் தமிழெனும் இன்பம்
         கருதியெ டுத்தெமக் களிக்கும்
      உன்றன் பணிநினைந் தேன்நான்!
         உவகையி னின்பமா னந்தம்!

      நன்றி ஐயா!

      தொடர்கிறேன்.

      Delete
    2. வணக்கம்.

      3)

      கண்ணுற்ற கவிப்பெருக்கில் கால்நனையும் மீன்கடிகள்
         கருதல் இன்பம்
      மண்ணுற்ற விதையைப்போல் மாண்பறிந்து மனம்பதிக்க
         மண்டும் இன்பம்
      விண்ணுற்ற ஒளிபெருக வீழிருளாய் அறியாமை
         வீழ்தல் இன்பம்
      பண்ணுற்ற பாடலினைத் தமிழில்நீர் பூட்டுவதைப்
         பார்த்தல் இன்பம்!

      நன்றி ஐயா!

      தொடர்கிறேன்

      Delete
    3. வணக்கம்.

      4)

      ஒன்றாம் வகுப்பின் அரிச்சுவடி
         ஓதும் பிள்ளை யினைப்போல
      இன்றிங் குன்றன் அறிமுகங்கள்
         இணையக் கணினி ஆளுமைகள்
      சென்று கற்கச் சிறகுகளைச்
         சிறுவன் பெறுவேன் வானத்தில்
      ஒன்ற ஒவ்வோர் வழிகாட்டும்
         ஒவ்வோர் பதிவும் நிறைகுடமே!

      நன்றி ஐயா.

      தொடர்கிறேன்.

      Delete
    4. வணக்கம்.

      5)

      காலையில் கதிரின் பாட்டுக்
         கண்களின் பாயும் நேரம்
      பாலையில் பனிப்பூங் கொத்தில்
         படர்ந்திடும் ஒளியின் ஈரம்
      சோலைவான் பறவைக் கெல்லாம்
         செய்தியைச் சொன்னோன் ‘என்னை
      வேலைபோ‘ என்றான் ‘இன்னும்
         வெளுத்துவா நீபோ‘ என்பேன்!

      நன்றி ஐயா.

      தொடர்கிறேன்.

      Delete
    5. வணக்கம்.

      6)

      அச்சம் களைந்து பாக்கள்
         ஆக்கும் கரங்கள் ஆற்றலிற்காய்
      இச்சை கொளுமென் நெஞ்சே
         இருபோ பார்ப்பாய் இவ்வெழுத்தை
      உச்சம் தொடுதல் வேண்டாம்!
         உளியிற் தெறிக்கும் ஓர்துகளாய்
      மிச்சப் படட்டும் சொற்கள்
         மேனி சிலிர்க்கும் மிகமகிழந்தே!

      நன்றி ஐயா.

      தொடர்கிறேன்.

      Delete
    6. வணக்கம்.

      7)

      குறைகளைக் கொண்டிவண் வீணே
         குதித்திடும் சொற்களைத் தானே
      பறையெனக் கொட்டுகின் றேனே!
         பிழையெனின் நீக்கிடத் தானே!
      சிறையினில் சொற்களின் வாட்டம்
         சோர்ந்திருந் தோன்தளைப் பூட்டை
      உறையெடு வாளினாற் சாய்த்தீர்
         உன்றமி ழின்றமிழ் வாழ்க!

      (இவண் – இங்கு)

      நன்றி ஐயா.

      நிறைகிறேன்.

      Delete
    7. வணக்கம்!

      1.
      காலை என்விழி கமழ்ந்திடும் வகையினில்
            கவிதந்தீர்!
      கோலை நன்மலர் சுற்றிடும் வண்டெனச்
            சொக்குகிறேன்!
      ஆலை போல்வினை ஆற்றியே அருந்தமிழ்
            அளிக்கின்றீர்!
      மாலை பற்பல வழங்கியே உன்திறன்
            வாழ்துகிறேன்!

      Delete

    8. வணக்கம்!

      2.
      நல்ல கவிகளைப் பாடி
         நறுமணம் வீசிடும் சோசப்!
      வல்ல புலமையின் செல்வர்!
         வளர்தமிழ் உழுதிடும் பொன்னேர்!
      சொல்ல இனித்திடும் வண்ணம்
         சூட்டிய பாக்களைக் கண்டேன்!
      வெல்ல விருந்தென உண்டேன்!
         விஞ்சிய ஆற்றலைக் கொண்டேன்!

      Delete

    9. வணக்கம்!

      அரும்புலமை ஒளிர்கின்ற அன்புடைய சோசப்பார்
            அளிக்கும் பாக்கள்
      பெரும்புலமைக் கம்பனெனப் பீடுடைய சீரேந்திப்
            பெருமை ஊட்டும்!
      வரும்புலமை வாணரெலாம் வாயாரத் தாம்பாட
            வளமை சூட்டும்!
      தரும்புலமை எழுத்தெல்லாம் தண்டமிழின் தாசருக்கே
            இன்பம்! இன்பம்!

      Delete
    10. வணக்கம்!

      4.
      உண்மை! உண்மை! இவர்வலையுள்
         ஓங்கும் கணினித் தொழில்நுட்பம்!
      தண்மைத் தமிழால் தாலாட்டித்
         தந்தேன் பெருமை! உயர்புலமை
      திண்மை கொண்டே அருங்கவியே
         செம்மை சேர்க்கும் உன்பாக்கள்!
      வண்கை வாணர் போலிங்கு
         வண்ணத் தமிழை வழங்கினையே!

      Delete
    11. திண்மை கொண்ட அருங்கவியே

      என்று படிக்குமாறு வேண்டுகிறேன்

      Delete
    12. வணக்கம்!

      5.
      பொங்கிடும் புலமைக் கிங்கே
         போட்டுள தடைகள் உண்டோ?
      இங்கிடும் பாட்டுக் கெல்லாம்
         இணையுள பொருளும் உண்டோ?
      மங்கிடும் உலகை மாற்ற
         மாண்புடன் எழுதும் வேந்தே!
      தங்கிடும் உன்பா நெஞ்சுள்
         தழைத்திடும் இன்பம் தந்தே!

      Delete

    13. வணக்கம்!

      6.
      மேனி சிலிர்க்கும் வண்ணம் விளைத்த விருத்தம்
            மிகுசுவையே!
      தேனீ யாக மாறித் தேனை உண்டு
            திளைத்தனனே!
      ஞானி யாகப் பாக்கள் நல்கும் எங்கள்
            நறுங்கவியே!
      ஏணி யாக யாப்பின் இல்லம் காண
            எழுதினையே!

      Delete
    14. வணக்கம்!

      7.
      நிறையுடன் தந்த கவிதை
         நெஞ்சினைப் பற்றும்! உயிரைச்
      சிறையிடச் செய்யும்! படைப்பின்
         சிறப்பினை நெய்யும்! படித்தே
      முறையுடன் பாக்கள் எழுத
         முயன்றுநாம் நல்வழி கண்டோம்!
      இறையவன் ஈந்த அருளே!
         இன்றமிழ்த் தாய்ஒளி சீரே!

      Delete
    15. ஐயா வணக்கம்.

      சீரிற் றிரளுரு பாருற் றிடநடை
            சுடுமணற் கடலினிலே
         சிறைப்பட் டிருதமிழ் சிதைபட் டிடுமென
            சிறுமையிற் றுடலினிலே
      காரிற் றொருமழை பேரற் றிறங்கிட
            கடைமடை உடைபடுமே!
         களரிற் றுறுமது வளரத் தருவரங்
            கவிபுவி நடையிடுமே!
      தாரிற் கனிகுலை வேரிற் பழுமரத்
            தினிமையும் பெருகிடவே
         தடையற் றதுமதி உடைபட் டதுவிடர்
            தரணியு முருகிடுமே!
      நீரிற் றிரைகளை நீர்விட் டதனுயிர்
            நிறமிதென் றறமுறைக்கும்
         நிதியுனிற் கவிபா ரதிதாச நின்றன்
            நெடுபடை மறமுரை(த்)தேன்!


                  நன்றி.

      Delete
  2. ஐயா! கணினி தொழில் நுட்பம் பற்றி பதிவிடும் பதிவர்கள் பற்றிய அறிமுகம் அருமை. பின்னூட்டத்தை கவிதை நடையில் எழுத விரும்பினாலும், நான் ஒன்று கம்பன் வீட்டுக் கட்டுத் தறியல்லவே? அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்களில் திருவாளர்கள் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ், அப்துல் பாசித்,
    சசிகுமார் ஆகியோரது வலைப்பூக்கள் எனக்கு பரிச்சயமானவை. திரு பிரபு கிருஷ்ணா அவர்களது வலைப்பக்கத்திற்கு செல்லவேண்டும். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கம்பன் கவிகளைக் கற்றுணர்ந்தால், நற்கவிதைக்
      கொம்பன் என..நீ குதித்திடலாம்! - நம்..தமிழின்
      வன்மை வளத்தை வடிக்க எழுத்தேது?
      நம்மை நவின்றேன் நயந்து!

      Delete
  3. போற்றிப் பாதுகாத்து வைத்துக்
    கொள்ளவேண்டிய பதிவு
    பாதுகாத்து வைத்துக் கொண்டேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      விருத்த வகைபாட மேவும் மனத்துள்
      பெருத்த சுவையைப் பிணைக்கும்! - பொருத்தமுடன்
      சொற்கள் சுழற்றும் சுடர்க்கவியே! உன்னெழுத்து
      நற்கள் அளிக்கும் நயந்து!

      Delete
  4. இணையத் தமிழை இன்புறத் தந்தீர்
    நினையும் உள்ளத்தில் உயர இருப்பீர்
    மனையும் மாட்சி மாண்புடன் பெற்றே
    ஐந்திணைக் கவியரசே வாழ்க!

    அறிமுக அன்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      வேலு வழங்கிய விந்தைத் தமிழ்படித்து
      மேலும் எழுத விருப்போங்கும்! - வாலறிவான்
      நற்றாள் தொழுது நனிபயன் பெற்றிடுவேன்
      பொற்றாள் தமிழைப் புனைந்து!

      Delete
  5. தலைவாழை இலையிட்டு -
    கனித் தமிழை கவித் தமிழை
    கன்னல் தமிழை கணினித் தமிழை
    காவியத் தமிழாய் விருந்து வைத்தீர்..

    கன்னித் தமிழாள் களி கொண்டாள்
    கவிப் பேரேறு உமைக் கண்டு!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தலைவாழை போட்டுத் தமிழளித்தேன்! என்றன்
      கலைத்தாழை நெஞ்சம் களிக்க! - மலையருவி
      யாகக் கவியருவி! அன்னை மொழிதந்த
      தாகம் குறையும் தணிந்து!

      Delete
  6. வணக்கம் ஐயா,
    முத்தழிழ் ஆனவள் ஐந்த மிழானாள்
    மூப்பில்லா கண்ணியவள் கணிணியில்
    கோலோச்சும் மாட்சியினைப் பாபடைத்தீர்
    அறிமுக அன்பர்கள் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் வணங்குகிறேன் உம்மையே
    நன்றி.










    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      மாட்சி மணக்கு மலர்ப்பாக்கள்! வண்டமிழின்
      ஆட்சி மணக்கும் அரும்பாக்கள்! - காட்சிக்குள்
      நின்று மணக்கும்! நினைவுக்குள் எந்நாளும்
      நன்று மணக்கும் நடந்து!

      Delete
  7. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். இணையத்தில் இத்தனை அருமையான பாக்கள் படித்திட்டாலும், கவிப்பா வடிக்கத் தெரியவில்லை எங்களுக்கு..

    கவிதைகள் சாரலாய் தொடங்கி, மழையாய் மாறி அருவியாய் கொட்டத் தொடங்கிவிட்டது....நாளையும் உளதே கவிவெள்ளம் பெருக்கெடுத்து ஓடப் போகின்றது. நாங்களும் நீந்திடக் காத்திருக்கின்றோம்...

    அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      நீந்திக் களிக்கின்றேன்! நெஞ்சத்துள் செந்தமிழை
      ஏந்திக் களிக்கின்றேன் எந்நொடியும்! - காந்தமென
      உள்ளத்தைக் கவ்வும் உயர்கவிகள்! இன்பமெனும்
      வெள்ளத்தை பாய்ச்சும் விரைந்து!

      Delete
  8. வணக்கம் !

    எண்ணம் தனிலே பெருகும்
    இன்பக் கருத்தால் போதை !
    பண்ணில் படரும் உணர்வோ
    பாரில் சுவைத்த கீதை !
    வண்ணத் தமிழே !அழகே
    வாழ்க !வசந்தம் பொங்கும் !
    கண்ணன் அருளால் கவிமேல்
    காதல் உலகில் தங்கும் !

    வாழ்க வளமுடன் !
    இனிய நற் பாவால் இதயம் மகிழ்ச் செய்தாய் என் குருவே
    உன் புகழ் ஓங்கட்டும் ! இன்றிந்த வலையிலே வலம் வந்த
    அன்பு உள்ளங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .

    ReplyDelete
    Replies
    1. எண்ணம் இனிக்கும்நற் பாக்கள்
         இங்கே படைத்தீர்!நன் றாக!
      வண்ணம் மிளிரும்சீர் கண்டேன்!
         வாழ்க! வளர்க!பல் லாண்டு!
      கிண்ணம் மதுவைநன் குண்டு
         கிடக்கும் நிலையைஎன் என்பேன்?
      மண்ணும் ஒளிரும்அவ் விண்ணும்
         வண்ணத் தமிழுக்கீ டாமோ?

      Delete

  9. வணக்கம் !

    எண்ணம் தனிலே பெருகும்
    இன்பக் கருத்தால் போதை !
    பண்ணில் படரும் உணர்வோ
    பாரில் சுவைத்த கீதை !
    வண்ணத் தமிழே !அழகே
    வாழ்க !வசந்தம் பொங்கும் !
    கண்ணன் அருளால் கவிமேல்
    காதல் உலகில் தங்கும் !

    ReplyDelete
  10. 1. வலையில் வந்துலாக் கண்டிடும் எங்களின்
    வலைச்சர மாமன்னா!
    சிலையும் கற்றிடும் செழிப்புடன் கவிமழை
    பொழிந்திடும் பாமன்னா!
    அலையும் தன்னெழில் கரையினில் அழைத்தெனை
    மகிழ்வுடன் ஆராட்டும்
    கலையில் தந்துள இக்கவி வாழ்ந்திடும்
    வென்றிடும் காலத்தே.
    நன்றிங்க ஐயா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தென்றல் வீசிய தேன்கவி கண்டுளம்
         திகைப்புறும் நிலையெய்தும்!
      இன்றென் சிந்தனை எல்லையை எழுதிட
         இன்றமிழ் மகிழ்வெய்தும்!
      அன்றுன் ஆற்றிலின் ஆழ்நிலை கண்டுநான்
         அந்தமிழ் யாப்பீந்தேன்!
      மன்றல் மாண்புறும் வண்டமிழ்ப் பாக்களை
         மழையென வழங்குகவே!

      Delete
  11. 2.
    எண்ண இனித்திடும் பாட்டு!
    எழிலதும் சேர்ந்திடும் கூட்டு!
    வண்ணம் மிளிர்ந்திட வந்து!
    வஞ்சியை அழைத்திடும் சிந்து!
    கண்ணன் திருவடி போற்றி!
    கமழ்ந்திடும் இசைநலம் காட்டி!
    மண்ணில் புகழ்ஒளி ஓங்கும்!
    மாண்புடன் மனங்களில் தேங்கும்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      யாப்பு வகைகளைக் கற்றே
         இனித்திடக் கவிதைகள் செய்தாய்!
      தோப்பு மலரெனப் பாக்கள்
         சுவையினை ஊட்டின என்பேன்!
      மாப்பூ அருந்சரம் கட்டி
         மகிழ்வுடன் தாய்தமிழ் ஈவாள்!
      காப்பு அளித்துனைக் காக்கும்!
         கட்டிடும் கவிமலை என்பேன்!

      Delete
  12. 3.
    கன்றெனவே துள்ளிவரும் சந்தங்கள் நாளுமிங்கே
    கட்டிப் போடும்!
    இன்றென்ன பாவடிவம் எழுதிடவே மனந்துள்ளி
    ஏங்கம் சிந்தை!
    இன்பூட்டும் கவிமழையில் நனைந்திடவே மனமேங்கும்
    எழுத்தும் இங்கே!
    நன்றியதை சொல்லிடவே என்னிடத்தில் சொற்களில்லை
    நனையும் கண்கள்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      கன்றெனவே துள்ளிவந்த கவியரசி நம்தென்றல்!
            கவிகள் யாவும்
      நன்றெனவே நறுந்தேனை நல்கினவே! வாழ்த்துகிறேன்!
            நான்கு காய்கள்
      குன்றெனவே இங்கிருந்து கோலமிகும் அழகூட்டும்!
            கொள்கை ஏந்தி
      மின்னெனவே பாய்ந்திடுவாய்! முன்னுள்ள பகைக்கதையை
            முடிப்பாய் நன்றே!

      Delete
  13. 4.
    மயிலும் தோகை விரித்தாடும்!
    மனதும் மயக்கும் இசையாலே!
    குயிலின் குரலாய்ப் பாட்டினிக்கும்!
    குழந்தை ஆடிக் களித்திருக்கும்!
    இயலும் இசையும் நாட்டியமாய்
    இங்கே நடக்கக் கண்டேனே!
    ஒயிலாய்ப் பொழியும் மழையாக
    ஒன்றாய் இணைந்த நெஞ்சங்கள்!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      குயில்போல் அழகாய்க் கூவுகிறாய்!
         கோலக் கவிகள் துாவுகிறாய்!
      மயில்போல் வடிவாய் ஆடுகிறாய்!
         மயக்கும் மதுவைச் சூடுகிறாய்!
      பயிர்போல் பாக்கள் படர்ந்தோங்கப்
         பதமாய் உரத்தைப் போடுகிறாய்!
      உயிர்போல் தமிழைத் தான்ஏந்தி
         உலவும் தென்றல் வாழியவே!

      Delete

  14. 5.
    தன்னலம் கருதா நேசன்
    தனிப்புகழ்ப் பாட்டின் தாசன்
    அன்பரை ஈர்க்கும் விந்தை
    அழகெனப் பாடும் சிந்தை
    என்னிலா ஆர்வம் கொண்டே
    இயக்கிடும் இசையாய் நின்றே!
    இன்றெனது ஆவல் தன்னை
    எழுதிட எழுத்தும் இல்லை!

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      பண்ணலம் வேண்டி வாழும்
         பாரதி தாசன் மீது
      விண்ணல மழையைப் போன்று
         மீட்டிய விருத்தம் கண்டேன்!
      தண்ணலத் தமிழைச் சூடித்
         தந்துள சீர்கள் தேன்!தேன்!
      மண்ணலம் யாவும் பெற்று
         மகிழ்வுடன் தென்றல் வாழ்க!

      Delete
  15. 6.
    எங்கும் எழிலின் வடிவாய் இருக்கும்
    தமிழை ஏற்றிடுக!
    பொங்கும் இன்பம் பூக்கும் மலராய்த்
    தமிழைப் போற்றிடுக
    தங்கும் இனிமை தழைக்க நாளும்
    மொழியைத் தாலாட்டு!
    மங்காப் புகழை நமக்க ளிக்கும்
    மண்ணைச் சீராட்டு!.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      எங்கும் தமிழே! எதிலும் தமிழே!
         இருந்தால் எழில்மேவும்!
      தங்கும் வளங்கள்! தழைக்கும் நலங்கள்
         தானே வந்தாடும்!
      பொங்கும் வண்ணம் புலமை பூத்தால்
         புதுமை மலர்ந்தாடும்!
      நுங்கும் தோற்க நுவலும் பாக்கள்
         இங்கே குளிர்சூடும்!

      Delete
  16. 7.
    கம்பன் புகழினைப் பாடி!
    கவிஞர் உளத்தினைப் போற்றி!
    நம்முயிர் ஓங்கிட யாப்பை!
    நலமே வழங்கிட வாழும்!
    இம்மா நிலத்தினில் தாயை!
    இயம்பிடும் என்கவி ஆசான்!
    செம்மைசேர் பாரதி தாசன்!
    செழிப்புறச் சிறப்புற வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. செழிப்புறச் சீருற வாழ்க!
      எனப் படிக்கவும்.

      Delete
    2. வணக்கம்!

      கம்பன் கவிகளைக் கற்பாய்!
         கன்னல் தமிழிடம் நட்பாய்!
      இம்மண் வணங்கும் வகையுள்
         எழில்தமிழ்த் தொண்டினைச் செய்வாய்!
      நம்மின் மழலைகள் உண்ண
         நறுந்தமிழ்த் தேனை அளிப்பாய்!
      செம்பொன் இராமன் அருளால்
         சிறப்புடன் வாழ்கவே தென்றல்!

      Delete
  17. தொழில்நுட்பச்சிற்பிகளின்
    தொலைதூர நோக்கில்
    தொடுக்கும் உதவியே
    தொடரும் வளர்ச்சி வலையில்
    தொடங்கும் உறவு! அருமையான
    தொடர் சேவை அறிமுகம் கண்டேன்!
    தொடரட்டும் பணி வாழ்த்துக்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தொழில்நுட்பம் பெற்றொளிரும் தோழர்களை எம்மின்
      எழில்நுட்பப் பாட்டால் இசைத்தேன்! - பொழில்நுட்பம்
      கற்ற கவிஞன்..நான்! கன்னல் தமிழிடத்தில்
      உற்ற அருள்..எம் உயிர்!

      Delete
  18. வணக்கம் ஐயா!..

    விருத்தப்பா அணிதொகுத்து விமரிசையாய் எல்லோர்க்கும்
           விருந்தாம் இன்று!
    அருஞ்சுவைதான் அப்பப்பா! அறிந்துண்டு ஆனந்தம்
           அடைந்தோம் நன்று!
    பொருத்தமப்பா பதிவரின்று அறிமுகமாய் ஆனோரும்
           பொறித்தேன் வாழ்த்து!
    கருத்துப்பா இட்டிங்கே உமைப்பணிந்தேன் கவிஞரையா!
           கரங்கள் சேர்த்தே!

    அருமையான அறுசீர் விருத்தங்களும் அவற்றின் இலக்கணங்களுடன்
    இன்றைய அறிமுகங்கள் மிகச் சிறப்பு ஐயா!
    தினமுமொரு விதப் பா வகைதந்து எங்களைத் திக்கு முக்காட வைக்கின்றீர்கள்!
    மிக்க மிக்க நன்றி ஐயா!

    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் அற்புத விருத்தப் பா விருந்திட்ட
    உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

    இங்கு பின்னூட்டமாய்க் கன்னல் கவிமழை பொழியும் அருமைச்
    சகோதரக் கவிஞர்களுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      விருத்தவகை உரைத்திங்கு வெல்லுதமிழ் ஓங்கிடவே
            வேளை செய்தேன்!
      பெருத்தசுவை அளித்ததெனப் பீடுரைத்தீர்! வாழ்த்துகிறேன்!
            பெருமை பொங்கப்
      பருத்தசுவைப் பாட்டெழுதிப் பசுந்தமிழின் மரபுணர்வீர்!
            பாரில் என்றும்
      கருத்தநிலை இழிவுகளைக் கழிந்தோட வைத்திடுவீர்!
            காலம் வாழ்த்தும்!

      Delete
  19. கணினியில் கலக்கும்
    பதிவர்களை பாமூலம்
    பகிர்ந்தீர்கள்! நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      கணினி கலைஞரைக் கன்னல்மொழி ஏந்தும்
      அணியில் அழகாய் அளித்தேன்! - பணியாக
      மின்..பூ தொழில்நுட்பம் மீட்டும் இவர்களுக்குப்
      பண்..பூ படைத்தேன் பணிந்து!

      Delete
  20. மிக்க நன்றி ஐயா...

    3 நாட்களாக வெளியூர் வேலை... அதனால் தாமதத்திற்கு மன்னிக்கவும்...

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      வண்டு..கள் உண்ணும் வகையாக, நம்முடைய
      திண்டுக்கல் பாலன் செழுந்தமிழை - உண்ணுவார்!
      மின்வலை யாவும்தன் கண்வலைக்குள் கொண்டொளிர்வார்!
      நன்னிலை காண்கவே நன்கு!

      Delete
  21. வணக்கம் ஐயா !
    வித்தகரை வலைச்சரத்தில் விதவிதப்பா கொண்டு
    விருத்தமழை பொழிகின்றீர் விரும்பியதை உண்டு
    இத்தரையில் தமிழின்பம் இனிமையெனச் சொல்ல
    இருக்கும்உம் பாடலினை இன்னொன்றோ வெல்ல
    சத்தியமாய் இதுபோல சரிநிகராய்ப் பாட
    சத்தில்லை சொத்தில்லை சங்கடத்தில் வாட
    புத்தியிலே பதிக்கின்றேன் புலவர்வாய் பாடு!
    புதிதறிந்து கொள்மனமே போயதனைப் பாடு

    சுவை மிக்க பாடல் எல்லாம் உண்டு மகிழ்ந்தேன். என்ன சொல்ல அத்தனையும் அருமை கவிமழையில் நனையத் தான் முடிகிறது கலக்க முடியவில்லை. நன்றி ஐயா ! வாழ்த்துக்கள் ...!
    அறிமுகங்கள் அனைவருமே சிறந்தவர்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  22. கணினியில் உள்ள தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ளும் வலைத்தள நண்பர்களைப்பற்றியும், அவர்களுடைய பதிவுகளைப் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி. வலைப்பூ எழுதுபவர்களுக்கு பல பயனுள்ள உத்திகளை இவற்றின்மூலமாக அறியமுடியும். நன்றி. நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  23. சிறப்பான பதிவர்களை சிறப்பித்தமைக்கு நன்றி!

    ReplyDelete