Saturday, August 8, 2015

மண்ணின் மணம்!



வலைச்சர நண்பர்களுக்கு வணக்கம்!

மண்ணின் மணம்!

புதுவையுள் ஓங்கிப் பொலிந்திடும் வலைகள்
     புகழினைக் கண்டுளம் பூத்தேன்!
புதுமையுள் நாட்டைப் புகுத்திடும் வண்ணம்
     போந்துள பதிவுகள் ஆய்ந்தேன்!
பொதுமையுள் உலகம் புறப்பட வேண்டிப்
     பொங்கிடும் மறவரைக் கண்டேன்!
எதுகையுள் சிறந்த என்கவி யாவும்
     எழில்தமிழ் மண்மணம் அன்றோ!

வலைத்தமிழ் வளர்க்கும் மறத்தமிழ்ப் புதுவை
     வளத்தினை வடிப்பதென் கடமை!
கலைத்தமிழ் கொஞ்சும்! கவித்தமிழ் மிஞ்சும்!
     கடல்வளம் போல்அதன் பெருமை!
இலையுறும் பசுமை! ஈடிலா வளமை!
     இசைத்திட இசைத்திட இனிமை!
மலைத்தமிழ் மாண்பைத் தலையெனக் காத்தால்
     வாழ்வினில் இலையொரு சிறுமை!

மறமியல் கற்ற மாண்புடைத் தமிழன்
     வலையியல் கற்றிட வேண்டும்!
அறமியல் கற்ற அன்புடைத் தமிழன்
     அறிவியல் ஆய்ந்திட வேண்டும்!
திறமியல் கற்ற சீருடைத் தமிழன்
     தீந்தமிழ் காத்திட வேண்டும்!
பொறியியல் கற்ற பொற்புடைத் தமிழன்
     புகழியல் புனைந்திட வேண்டும்!


பாட்டின் இலக்கணம்: எழுசீர் விருத்தம்


நால்விள மும்மா நடைபெறுங் கொடிய
நச்சுவேல் நயனமார் அமிழ்தே [விருத்தப்பாவியல் பக்கம் - 15]
 
விளம் + மா + விளம் + மா +
விளம் + விளம் + மா. 
ஐந்தாம் சீரில் மோனை வரும். 


--------------------------------------------------------------------------------------------------------


முனைவர் மு. இளங்கோவன்
வலைப்பூ: முனைவர் மு. இளங்கோவன்


முத்தமிழ் தீட்டும் மு.இளங் கோவர்
     மொழிந்துள பதிவுகள் கண்டேன்!
புத்தமுது ஏந்திக் புகழ்த்தமிழ் ஏந்திப்
     பொலிந்திடும் அழகினைக் உண்டேன்!
முத்தொளிர் வண்ணம் புத்தியுள் மின்னும்
     முதுமொழிப் பற்றினைக் கொண்டார்!
எத்திசை பாட இவர்பணி ஓங்க
     இறையவன் திருவருள் புரிக!



--------------------------------------------------------------------------------------------------------


இராஜ. தியாகராசன்
வலைத்தளம்: புதுச்சேரி

மின்னிதழ் ஒன்றை மீட்டிடும் நண்பர்
     வியன்வலை முன்னணி யாளர்!
பொன்னிதழ் போன்றே பூங்கவி யாவும்
     புனைந்திடும் நற்கவி சீலர்!
மென்னிதழ் உள்ளம் மேவிய ராசர்
     மேன்மையை உரைப்பதும் எளிதோ?
இன்னிதழ்ச் சுவையை இவர்வலை ஊட்டும்
     இனிப்புற அனைவரும் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


பேராசிரியர் அ. பசுபதி
வலைப்பூ: தேவமைந்தன்


மண்மணம் தேவ மைந்தரின் வலையை
     மகிழ்வுடன் கண்டுளம் பூத்தேன்!
தண்மணம் ஆக்கம் தமிழ்மணம் கொண்டு
     தழைத்திட இங்கதைச் சேர்த்தேன்!
ஒண்மணம் ஊட்டும் ஒப்பிலா நெறிகள்
     உலகுயர் வழிகளைக் காட்டும்!
பண்மணம் வீசும்! படர்நலம் பேசும்!
     பாங்கினைக் கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


சொ. ஞானசம்பந்தம்
வலைப்பூ: இலக்கியச்சாரல்


இலக்கியச் சாரல் எனும்சுவை வலையை
     இயக்கும்,சொ. ஞானசம் பந்தம்!
உலுக்கிய மரமாய் உதிர்ந்திடும் கனிகள்  
     ஓதிய பதிவுகள் என்பேன்!
கலக்கிய வினையாய்க் கருத்தினை ஆய்ந்து
     கமழ்ந்திடத் தந்துள ஆக்கம்
குலுக்கிய பரிசாய்க் கொண்டிட வேண்டும்
     குதித்துடன் கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


இரா. சுகுமாறன்
வலைப்பூ:  புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்


என்னுடை ஊரின் இன்றமிழ் வலைகள்
     இணைந்திடப் பணிபல ஆற்றும்!
தன்னுடைத் தோள்மேல் தமிழினை துாக்கித்
     தழைத்தட ஊர்வலம் போகும்!
பொன்னுடை மேன்மை! புதுவையின் சீர்மை!
     பூத்திடப் பதிவுகள் போடும்!
இன்னடை யாக உன்னுளம் மாறும்
     இவர்வலை கண்டிடச் செல்வீர்!



--------------------------------------------------------------------------------------------------------


கலைமாமணி
கவிஞர் தே. சனார்த்தனன்
வலைப்பூ:  கவிஞர் தே. சனார்த்தனன் கவிதைகள்


சிந்தையுள் இனிக்கும் செந்தமிழ் மணக்கும்
     தேன்மலர் சோலையே இப்பூ!
மொந்தையுள் உள்ள முதுசுவை போன்றே
     மொழிதனை அளித்திடும் இப்பூ!
சந்தையுள் உள்ள மந்தையாய் மக்கள்
     வாழ்வதை மாற்றிடும் இப்பூ!
எந்தையின் ஆக்கம்! இனமொழி காக்கும்!
     இன்றமிழ் இல்லமே இப்பூ!




--------------------------------------------------------------------------------------------------------


32 comments:

  1. எழில்மிகு புதுவை மண்ணின் மணம் தரும் இன்றைய அறிமுகப் பதிவர்கள் யாவர்க்கும் யாதவ நம்பியின் நல்வாழ்த்துகள்.
    த ம 1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      எழிலார் புதுச்சேரி ஏற்ற வலையைப்
      பொழிலார் வகையுள் புனைந்தேன்! - மொழியுணர்வு
      என்றன் கவிதையுள் நின்றொளிரும்! இன்றெனக்கு
      உன்றன் வருகை உவப்பு!

      Delete
  2. மண்ணின் வாசம்
    மரகத வைரம் போல
    மாண்புடன் மடை திறந்தீர் அந்தோ
    மாசில்லா மாகான்கள் வலையை
    மதிப்புடன் நோக்கினேன்
    மனமகிழ்வுடன்
    மாணவன் போல நானும் ஒரு
    மரம் வாழ்த்துக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      மண்ணின் மணமாய் வடித்த கவிபடித்துக்
      கண்ணின் சிறந்த கவியளித்தீர்! - எண்ணிமனம்
      கூத்தாடும்! இன்பம் குவிந்தாடும்! நெஞ்சத்துள்
      பூத்தாடும் நன்றியெனும் பூ!

      Delete
  3. வணக்கம் !

    செந்தமிழே வாழ்வென்று சேர்ந்திருக்கும் பாவலரால்
    நந்தவனம் ஆகுமே நம்வாழ்வும் !-சந்த
    வசந்தத்தின் சொந்தங்கள் வாழ்வாங்கு வாழ
    அசராமல் வாழ்த்தும் அகம்!

    செந்தேன் கவிமழை பொழியும் சந்த வசந்தத்தின்
    சொந்தங்களை இன்று இங்கு தாங்கள் அறிமுகம்
    செய்து வைத்த விதம் மனத்தைக் கவர்ந்தது ஐயா !
    அனைவர் முன்னும் அம்பாளடியாள் சிரம் தாழ்த்தி
    வணங்குகின்றேன் !வாழ்க வளமுடன் .

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அசராமல் வாழ்த்தும் அகங்கண்டேன்! இன்பம்
      பிசையாமல் உண்டேன்! பெருமை - மிசையேங்கச்
      சொற்புதுமை பூத்தாடும்! துாய புலமைக்குள்
      புற்பசுமை போந்தாடும் பூத்து!

      Delete
  4. அனைவருக்கும் வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      வாயார வாழ்த்தும் வளமார் தனபாலர்
      தாயுயரத் தொண்டைத் தரித்தவர் - நீயாா்
      எனவுளம் எண்ணாமல் ஏற்றநலம் செய்வர்!
      இனவுணர்வு ஊறும் இனித்து!

      Delete
  5. புதுவை மண்ணின் புதுமைக் கவிஞர்களின் அறிமுகம் கண்டேன். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      புதுமைக் கவிமணத்தைப் பொங்கும் புதுவை
      பொதுமைப் புவிநலத்தைப் போற்றும்! - முதுமைத்
      தேனடையாய்ச் செந்தமிழைத் தீட்டும் வலைகளை
      நானணியாய்த் தந்தேன் நயந்து!

      Delete
  6. அன்புள்ள அய்யா,

    வாழ்த்துகள்.

    தமிழ் மணம் 7.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      அன்புள்ளம் கொண்டே அருந்தமிழ் வாக்களித்தாய்!
      இன்புள்ளம் கொண்டேன்! எழில்கவிதை - மின்னுள்ளம்
      நன்மை வழிகாட்டும்! நாட்டை உயர்விக்கும்
      வன்மை வழிகாட்டும் வா!

      Delete
  7. தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      நன்றி நவில்கின்ற நன்மனம் கொண்டுயர்ந்தீர்!
      ஒன்றித் தமிழுள் உறைகின்றீர்! - பன்றியெனப்
      பொல்லார் புழுத்துள்ளார்! போயழிப்போம்! கூர்மிகு
      சொல்லால் அடிப்போம் துணிந்து!

      Delete
  8. தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
  9. தங்களின் பதிவுக்கு நன்றி ஐயா,

    ReplyDelete
  10. புதுவையில் பயிற்சிப்பட்டறை செய்தியறிந்தேன். அறிமுகப்பதிவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
    Replies

    1. வணக்கம்!

      மனம்நிறைந்த வாழ்த்துரைதீர்! வண்ணம் மணக்கும்
      வனம்நிறைந்த பூக்கள் வழங்கி! - தனம்நிறைந்த
      பேழையென இன்புற்றேன்! பெற்ற தமிழ்காத்து
      வாழையென வாழ்க வளர்ந்து!

      Delete
  11. செழுந்தமிழ் தந்த பண்கவி யாற்றி
    சிறப்புடன் நல்லறி முகம்..
    தரவிழைந் தாய் தமிழினில் நின்னை
    தரணியோர் போற்றவே புகழ்ந்து....

    அய்யா முயற்சி செய்துள்ளேன்..தவறிருப்பின் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      முயற்சி உயர்வுதரும்! முத்தமிழ் பாடும்
      பயிற்சி பயன்தரும் பாங்காய்! - அயர்வின்றி
      நாளும் தொடருக! நற்கம்பன் நுால்படித்தால்
      மூளும் உனக்குள் மொழி!

      Delete
  12. வணக்கம் ஐயா!
    புதுவைப் பதிவர்களின் அறிமுகம் கண்டேன். நன்றிங்க ஐயா.

    பள்ளியில் பயிலும் பிள்ளையாய் நானும்
    பைந்தமிழ் மொழியினைக் கற்க
    துள்ளியே நாளும் தொடர்ந்திடச் செய்ய
    சூச்சமம் கவியினல் வைத்தாய்!
    அள்ளியே பருக அமுதெனப் பாக்கள்
    அன்புடன் தந்திடும் விந்தை!
    உள்ளமே தங்கி உவகையில் பூக்கும்!
    உங்களைத் தொழுதிடும் நெஞ்சம்!.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      வீசிடும் தென்றல் பேசிடும் கவியுள்
         விந்தைகள் பலபல கண்டேன்!
      ஆசையாய் நாளும் அளித்திடும் மொழியுள்
         அமுதினை அளித்திட உண்டேன்!
      மீசையில் மின்னும் வியன்கவி கண்ட
         மேன்மையின் பெண்ணெனக் கொண்டேன்!
      ஓசையில் மிக்க உயர்கவி பாடி
         ஓங்கிய புகழினை அடைக!

      Delete
  13. இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      வாழ்த்தும் மனமுற்றீர்! வண்ணத் தமிழடியில்
      தாழ்த்தும் தலையுற்றீர்! சீர்நெறிக்குள் - ஆழ்த்துகின்ற
      ஆக்கம் அனைத்திற்கும் ஊக்கம் அளித்துயர்ந்தீர்!
      பூக்கும் இனிமை புலர்ந்து!

      Delete
  14. வணக்கம் ஐயா!

    கண்ணுதற் தெய்வம் கருணையால் வாய்த்த
      கவின்தமிழ்க் காவலர் உம்மால்
    எண்ணுதற் கரிய எழில்மிகு பாக்கள்
      இங்கெமக் கானது நன்றே!
    மண்மணம் வீசும் பதிவரும் இன்று
      மகிழ்வொடு அறிமுகம் ஆனார்!
    ஒண்கவி அரசே! உடனிரும் கற்று
      உலகினில் நம்மொழி காப்போம்!

    தங்களின் தந்தையார் உட்பட அருமையான புதுவைப் பதிவர்களை
    இனிய விருத்தப் பாவால் அறிமுகம் செய்தீர்கள்! அருமை!

    மிக்க நன்றியுடன் அறிமுகப் பதிவர்களுக்கும்
    உங்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      காட்டிய வழியில் கண்கவர் கவிதை
         தீட்டிய இளமதி பெண்ணே!
      சூட்டிய சீருள் சுரந்திடும் அமுதம்
         சொக்கிடச் செய்யுமே என்னை!
      ஈட்டிய செல்வம் நீயெனச் சொல்வேன்
         எண்ணிலாப் பாக்களை எழுது!
      பாட்டியல் யாவும் பாங்குடன் கற்றுப்
         பாரினில் வெற்றியைக் காண்க!

      Delete
  15. வணக்கம்
    ஐயா
    மண்ணின் சொந்தங்கள் பற்றி நாங்களும்அறிந்தோம் பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-“

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      தொண்டில் சிறந்த துாயமன ரூபன்நற்
      பண்பில் சிறந்த படைப்பாளி! - கண்டில்
      சிறந்த கவிபடித்ச்து சீருரைத்தார்! வாழ்கவே
      நிறைந்த வளத்துடன் நீடு!

      Delete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. வணக்கம் ஐயா !

    கவிமணம் கொட்டும் கம்பனின் மகனால்க்
    ...............காரிகை கண்டது சிறப்பு
    செவிவழி சேரும் செந்தமிழ்ப் பாவால்
    ..............செழித்தது மானிடப் பிறப்பு
    அவைதனில் மீட்கும் அகயிதழ் யாழிசை
    ..............அந்தமிழ் வாசலின் திறப்பு
    உவப்புடன் பகிர்ந்த உறவுகள் வலையும்
    ..............உணர்வுகள் கலந்தவோர் உறுப்பு !

    வணக்கம் கவிஞர் அண்ணா மண்ணின் மணம் மனதிலும் மணக்கிறது அருமை வாழ்த்துக்கள் அறிமுகப் பதிவர்கள் அபைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      இன்மனம் கொண்டே எழுதிய விருத்தம்
         இனித்திடும் மாங்கனித் தோப்பு!
      பொன்மனம் கொண்டே பூந்தமிழ் அன்னை
         பொலிவுறத் பூத்துள யாப்பு!
      என்மனம் ஆட இன்னிசை பாட
         ஏற்கிறேன் இனிமையின் மூப்பு!
      உன்மனம் ஓங்க ஊழ்வினை நீங்க
         உலகருள் கண்ணனே காப்பு!

      Delete