வாழ்க்கையை அங்குலம் அங்குலமாக ரசித்து, கற்பனையின் எல்லைக்கோட்டில் ஊர்ந்து சிந்தி அசாதாரண வாக்கிய அமைப்பின் மூலம் எளிய கவிதை எழுதும் வலைப்பதிவர்களுள் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ஆ.முத்துராமலிங்கம். நான் படித்தவரையிலும் அவரது கவிதையில் நிஜங்களுக்கு ஊடாக மனவோட்டத்தின் வெளித்தோற்றத்தை உலவவிடுகிறார். கூடவே உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தோரணையில் பூனையையோ, பல்லியையோ, ஏதாவது ஒரு ஜந்துவை உலவவிடுகிறார்.
நிசப்தம் கூடியிருந்த
அவ்விரவில் உன் கனவுகளை
விரித்துப் படுத்திருந்தேன்
இருளில் கரைந்திருந்த
நீ மெல்ல உருக்கொண்டு என்மீது
கவிழத் துவங்கினாய்
சாத்தி வைக்காத கதவைத் தாண்டிப்
பீறிட்டு வந்த அப்பூனையின் சப்தம்
நிசப்தத்தை உடைத்து விட்டு
உன்னைக் கொலை செய்திருந்தது.
இக்கவிதையை கவனியுங்கள்... ஒரு உச்சக்கட்ட (அல்லது விரக்தியின் காரணமென) கனவின் உலகொன்றில் சஞ்சரிக்கும் பொழுது யதார்த்த உலகின் இடையீடுகளை நுழைத்து கவிதையாக்கியிருக்கிறார். அதற்கு இரண்டு விஷயங்கள் இக்கவிதையில் தேவைப்பட்டிருக்கிறது. முதலாவது இழந்த, அல்லது தொடர்ந்த காதல்; இரண்டாவது குறுக்கீடான பூனை. உன்னை எண்ணிய கனவு பூனையால் கலைந்துவிட்டது என்ற ஒற்றை வரியை எவ்வளவு தூரம் அழகான சொல்வீச்சினால் இழுத்து கவிதையாக கட்டமுடியும் என்பதற்கு இக்கவிதை சாட்சியாகிறது. முறிந்து போன 'பதின்மரக்கிளை' யில் இக்கவிதை படித்த நாள் முதல் பலமுறை சிலாகித்திருக்கிறேன்!!
சட்டென்று காலத்தைக் குறைத்து நினைவுகளின் பின்னிழுப்பில் பாதை கடக்கும் பொழுது ரசனைக்கு அப்பாற்பட்ட அல்லது ரசனைக்கான நேரமில்லாத மனிதர்களின் தலையீடுதான் கீழ்காணும் இக்கவிதை..
சோம்பல் முரித்தபடி
பாதையின் இடவலம் தாவி
செல்கின்றேன்.
அதிகாலைப் பனியில் விறைத்த
உள்ளங்கையை சூடாக்கி
கன்னத்தில் பரப்புகின்றேன்
எனக்குள் இயங்கத் துவங்குகின்றது
ஒரு இரயிலின் அசைவுகள்.
சக்கரங்களின் சுவடு
பதிந்திராத தண்டவாளத்தின்
இருபுறமும் முட்டி நின்ற வானம்
நோக்கி இரயிலின் சப்தத்தோடு கத்தி
அழைக்கின்றேன் மோதித் திரும்பும்
அதிர்வோசை சக்கரங்களற்ற என் சிறு
பிராயத்து இரயிலொன்றை இழுத்து
வருகின்றது. நான் நீள்வட்டக் கயிற்றில்
இரயில் ஓட்டுபவனாய் தண்டாவாளத்தை
கடந்து செல்கையில் என் வருகையில்
வெறுப்புற்று எழுந்து செல்கின்றான்
மலம்கழித்தவன்.
இக்கவிதையில் இரு பாதைகள் உள்ளன. முதலாவது ஒரு பொருளை நினைத்து தன்னை இருப்பற்ற பாதையில் அலையவிடுவது ; இரண்டாவது இருப்பை உணர்ந்து, கழிக்க வசதியற்ற ஒருவனின் பாதையை அவலமெனச் சொல்லுவது.. இவர்கள் இருவருக்குமிடையேயான கோடுதான் கவிதையின் உட்சாரம். ஆ.முத்துராமலிங்கம் அதிகம் கவனிக்கப்படாத/ நன்கு எழுதும் கவிஞர்களில் ஒருவர். எழுதி வைக்கப்பட்ட நினைவுகளின் குவியல் எரிந்து விடுவதைப் போன்று இவரது பதின்மரக்கிளை எனும் வலை அழிந்து போனதில் அவரைக் காட்டிலும் வருத்தப்பட்டவர்களில் நானும் ஒருவன்.!!
சேரலின் காட்சிக் கவிதைகளின் மீது அளவில்லாத காதல் உண்டு. காட்சிப் படுத்துதல் என்பது சாதாரணமாகச் சொல்லாமல் வித்தியாசமாகச் சொல்லுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார். நேரடிக் காட்சியாகச் சொல்லுதல், உவமை முடிச்சிட்டு காட்சி சொல்லுதல், நிகழும்/நிகழ்ந்த காட்சிகளின் நினைவில் போதல், போன்று பலவகையிலும் இவருடைய கவிதைகள் செல்லுகின்றன. கீழ்காணும் சில சுட்டிகளைச் சுட்டிப் பாருங்களேன்...
வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்
தன்னிரக்கம் எனும் சேரலின் இக்கவிதை காட்சிப்படுத்தலின் மிகச்சிறப்பாகக் கருதுகிறேன். இவர் அமைக்கும் உயர்வு நவிற்சிகள் சிலசமயம் இயல்பு நவிற்சியைப் போன்றே தோற்றமளிக்கிறது. மிதித்தல் எனும் பொதுச்சொல்லை மையமாக்கி தனக்கும் சூரியனுக்கும் உண்டான வித்தியாசக் "காலை" சொல்லியிருந்தது ரசிக்கத் தக்கது! இயற்கையின் மீதான நம் ஆக்கிரமிப்பைச் சொல்லுகிறாரா அல்லது நம்மீதான இயற்கையின் ஆக்கிரமிப்பைச் சொல்லுகிறாரா என்பது நாமாக யூகிக்க வேண்டியது!! இன்னும்... வண்ணத்துப் பூச்சி கவிதைகள் சலிப்பான சொல்லாக அல்லாமல், நன்கு சலித்த (பொறுக்கிய) சொற்களால் எழுதிய குறுங்கவிதைகள்! இவரது மதுவனத்தில் கொஞ்சம் மயங்கிப் பாருங்கள்!!!
அவ்வளவு எளிதில் உதிர்ந்துவிடாதவர் மண்குதிரை. இவரது கவிதைகள் பேசும் சங்கேத பாஷை, மொழியற்றவனின் புரிதலுக்கும் உட்பட்டதாக இருக்கிறது. ஆ.முத்துராமலிங்கம், சேரல், பிரவின்ஸ்கா, வாசுதேவன், (விடுபட்டவர்கள் மன்னிக்க) போன்றவர்களின் கவிதைகளை மீள் வாசிப்பதைப் போல, மண்குதிரையின் கவிதைகள் மீள்வாசிப்பில் ஒரு மிகையான புரிதலையோ, சிலசமயம் மெளனம் கலந்த வாசிப்பனுபவத்தையோ உண்டாக்கிவிடுகின்றன. (சிலசமயம் முடி கொட்டிப் போவதுண்டு!!)
இதே போன்றுதான்
பாலில்லாத தேநீரில்
இளைப்பாறிக்கொண்டிருந்தேன்
ஒரு உடைந்த நிலவு
வெளியில் மிதந்து கொண்டிருந்தது
பிரிந்து போன
பிள்ளைப் பருவக் கனவைப் போல
சிதறிக் கிடந்தன மேகங்கள்
இதே போன்றொரு ஓசை கேட்டுத்தான்
என் செல்ல நாய்க் குட்டி திரும்பியதும்
எதையோ நோக்கி வந்த
சிநேகமான சுவர்ப்பல்லி
அதிர்ந்து திரும்பிப் போனது
இதே போன்றுதான்
எங்கேயோ பார்த்த
பழக்கமான பெண்ணின் முகம் போல்
பிடிபடாமல் நழுவி
நிகழ்வை சுவாரஷ்யமாக்கிச் சென்றது
அந்தப் பொழுதும்
கருத்த இருட்டில் புகைந்து போகும் நிழலைப் பிடிக்க ஒரு தாவு தாவுவோமே, அப்படியான கவிதைதான் இது. நிழலுக்குப் பதில் பொழுது. இக்கவிதையில் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம்.. ஒரு பொழுது அதாவது நிகழ்ந்த பொழுது, அதன் நுண்ணிய நிகழ்வுகளை மட்டுமே சிறைபிடிக்கிறது. அந்த நொடி, அந்த பொழுது, இயற்கை அதுவாகவே இருக்கிறது ; ஜந்துகள் அசைகின்றன. நினைவுகள் மீண்டு திரும்புகையில் கைக்ககப்படாமல் போகிறது..
கவிதைகள் படிக்கவோ எழுதவோ, ஒருங்கிணைந்த, எங்கும் அலையாத மனம் தேவை. கவிதையின் தீவிரம், அதன் தாக்கம், அப்பொழுதுதான் மனதின் மையத்தில் அழுந்த அமரும். இரவு அதற்குத் தகுந்த நேரம்... இதோ, இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் இரவு, ரம்மியமானது. மனதின் விசாலமான அறையில் எந்த விரிசல்களுமற்று வெளிச்சம் முழுக்க பரவி நன்கு உள்வாங்குகிறது. சொற்களை மட்டுமே உறிஞ்சும் மூச்சுக்காற்று பட்டு தடதடக்கிறது.. இந்த இரவின் ஒளி எப்பொழுதும் பரவட்டும்!!
மீண்டும் நாளை!!!
வாழ்த்துகள் ஆதவா..
ReplyDeleteகவிதைகளின் விளக்கங்கள் அருமை..
ஆ. முத்துராமலிங்கம் தளம் நான் அடிக்கடி செல்லும் தளம்தான் மற்றவர்கள் எனக்கு புதிது...
சேரலின் புத்தகம் குறித்த வலைப்பூவை படித்திருக்கிறேன். நீங்கள் சுட்டிய அவருடைய கவிதைகள் எளிமையான வார்த்தைகளால் அழகாக இருக்கிறது. சற்று முன்தான் அவருடைய 'சா.கந்தசாமியின் சாயாவனம்' குறித்த புத்தக விமர்சனம் படித்துவிட்டு இங்கு வந்தேன். மீண்டும் இங்கு அவருடைய கவிதைகளை வாசிக்கக் கிடைத்ததற்கு மகிழ்ச்சி.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய அனைவரையும் வாசிக்கிறேன் நன்றி ஆதவா...
வணக்கம் அதவா! வாழ்த்துக்கள். கவிதைகலின் தேர்வும் சுலப விளக்கங்களும் அருமையாக இருந்தது. தொடருங்கள்.
ReplyDelete//வெயிலை மிதித்ததெண்ணி
ReplyDeleteவருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்//
வெகுவாக ரசித்தேன் ஆதவா..
முழுவதும் இன்று தரமான படைப்புகளின் அறிமுகம்.
கொஞ்சம் நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டும்.சம்பிரதாயத்துக்காக தான் இந்த பின்னூட்டம்.
வாழ்த்துக்கள் ஆதவா, உங்கள் அறிமுகங்கள் அருமை.
ReplyDeleteநான்காம் நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுட்டிக் காட்டிய அனைத்து அறிமுகங்களும் அருமை!!
அன்பின் ஆதவா
ReplyDeleteஅறிமுகப் படுதிய கவிஞர்கள் அனைவரும் அருமையான கவிதைகளைப் படைப்பவர்கள்
சென்று பார்க்கிறேன்
நல்வாழ்த்துகள்
இன்றைய அறிமுகங்களும் அருமை... கவிதையும் விளக்கங்களும் நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்
ReplyDeleteநான் விரும்பிப் படிக்கும் கவிஞர்களின் அறிமுகங்கள் மகிழ்வைத் தருகின்றன.
ReplyDeleteபிரபஞ்சங்களின் மிகைப்படுத்தப்பட்ட கவிதைகளை எழுதிய கவிஞர்களை அறிமுகப்படுத்திய விதம் அருமை நன்றி
ReplyDeleteஎன் நண்பர்கள் கொண்டாடப்படுவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
ReplyDeleteநீங்கள் தேர்ந்தெடுத்த கவிதைகள் அருமையானவை
அனைவரின் அன்புக்கும் நன்றி!!!
ReplyDelete