Saturday, July 31, 2010

கதம்பம் - வலைச்சரம் ஆறாம் நாள்

இன்று என்னைக் கவர்ந்த சில பதிவுகளை கதம்பமாக வழங்கலாம் என ஒரு முயற்சி. கதம்பம் என்பது இன்ன வகை என்றில்லாமல் எல்லாம் கலந்த கலவை என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் இன்று சமூக நிகழ்வுகளில் பதிவுகளின் கதம்ப தொகுப்பாக இந்த ஆறாம் நாளை அமைக்கும் முயற்சி இது.


"கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது."

கண் குறைபாடுகளை சில பயிற்சிகளின் முலம் சரி செய்து வரும் ஒரு இடத்திற்கு குழந்தையை அழைத்து சென்று பயனடைந்தை இவர் அதை மற்றவரும் பயனடைய செய்யும் வகையில் எழுதியிருப்பதுதான் இந்த இடுகை.


"தேடாமலேதான்
கிடைத்து விடுகிறதோ
நம்மில் பலருக்கும்
தீராத் தேவையாகவே
இருந்துவரும் அந்தப்
பரிபூரண மனநிறைவு?"


"யாரையாவது அழைத்து உதவி செய்யுங்கள், வண்டி கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என்று சொல்லாமல் தூக்கிக் கொண்டு ஓட வைத்த அறிவு...மனிதம்."


"காதலர்களுக்கான போரில் - வாழ்ந்துகொண்டே சாகவும், செத்துக்கொண்டெ வாழவும், தினம் தினம் சாகவும் முடியும்.
இந்தக் கொடுமையை (சுகமான வலியை) அனுபவிக்க முடியாதவர்கள் தாங்களே தற்கொலை செய்துகொள்வர்"

தமிழ் வளர்ப்பில் மாநாட்டு நடத்துபவர்களை விட இவர் உயர்ந்தவர். அவரால் நடத்துவது போலி மாநாடு. ஆனால் இவர் வால்வியலூடு தமிழ் இலக்கியங்களை ஒப்பிட்டு அனைவருக்கும் தமிழ் பயிற்றுவிக்கிறார். அப்படி ஒரு பதிவுதான் இது.


இவர் பெரும்பாலும் வலைப்பதிவர்களுக்கு உதவியான இடுகைகளையே எழுதுறார். இவரின் இடுகைகள் மூலம் என் வலைப்பூவில் பல மாற்றங்கள் செய்திருக்கிறேன்.


"வீட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து
காற்றில் கலந்து வரும் இளையராஜாவின் இசை
இவற்றை எல்லாம் ஒரு நொடியில் மறக்க செய்து
பசி தூண்டும் இட்லி கொப்பரை விசில்
கண்ணாடி சன்னலில் தன்னைத் தான் கொத்துகிறோம்
என்று தெரியாமலே கொத்தும் மைனா "

கவிதைகள் புனைவதில் வல்லவர். படித்துப் பாருங்கள்


"மக்கிபோகா பிளாஸ்டிக்கயும்
மக்களெல்லாரும் உபயோப்பதால
விக்கிபோறா பூமித்தாயி
வீணாப்போகும் தண்ணியால..."

என் அண்ணன் என்று சொல்வேன். அப்படித்தான் அவரை அழைப்பேன். பல விடயங்களில் தெளிவாக இருக்கும் இவர் தண்ணீர் பிரச்சினையை ஒரு நாட்டுப்புற பாடல் போல் அமைத்து எழுதியிருப்பது தான் இந்த பதிவு.

Friday, July 30, 2010

உலகின் அழிவு - வலைச்சரம் ஐந்தாம் நாள்

உலகம் அழியும் என பலர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அது தாமாக அழியப் போவதில்லை. அதை அழிக்கும் சக்தி நமையன்றி வேறு யாருக்கு உண்டு. உலக அழிவில் முக்கிய பங்கு ஏன் பெரும் பங்கு வகிப்பது இத புவி வெப்பமாதல் (). "போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமா இருக்குல?" இந்த வாக்கியத்தை பேசாதவர்களே இருக்க முடியாது.

இதற்கெல்லாம் மனிதர்களின் அறியாமை, லாபம் மட்டும் நோக்காக கொண்டு செயல்படும் தொழிற்சாலைகள் தான் காரணம். உலகின் அழிவு கண் முன் பல முறை வந்து சென்றிருக்கிறது. பலர் சொல்லக் கூடும் அது இயற்கை நிகழ்வு மனுஷன் என்ன செய்ய முடியும்? என்று. உண்மைதான் இயற்கைக்கு முன் மனிதர்கள் ஒன்றுமற்றவர்கள். ஆனால் அந்த இயற்கையை சீற்றமடைய செய்வது நிச்சயம் மனிதர்களாகிய நாம் தான்.

இன்று குளோபல் வார்மிங் குறித்து நம் பதிவர்கள் எழுதிய பதிவுகளை இங்கே சுட்டியிருக்கிறேன். என்னளவில் நான் படித்தவை இவை. இவையன்றி நீங்கள் எங்கேனும் படித்திருந்தால் அல்லது எழுதியிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக் காட்டவும்.

பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)... - ரோஸ்விக்

பனி உருகுதல் என்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை நாம் நன்கறிவோம். அதன் விளைவுகளையும், இனி நாம் அதைத் தடுக்க என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்பதை மூன்று பகுதிகளாக வழங்கியிருக்கிறார். நிச்சயம் நாம் பின்பற்ற வேண்டியவை.


பூமிக்கு அழிவு எப்படியெல்லாம் வரக்கூடும் என்பதை விளக்குகிறார். உலகம் ஒரேயடியாய் அழிந்து போகாது. அதன் அழிவு மெல்ல மெல்ல நடக்கும் என்பதை விளக்கியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.


'காட்டு கருவேல மரம்' எவ்வளவு நச்சுத்தன்மையுடையது என்பதி சில விளக்கங்களுடன் கூறியிருக்கிறார். குளோபல் வார்மிங்கை எதிர்க்க மரம் வளருங்கள் என நாம் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் நாம் வெட்டப் பட வேண்டிய மரமிது.



"குளோபல் வார்மிங் என்ற அறிவியல் கருதுகோள் இன்று அரசியல் லாபியாக மாற்றப்பட்டு விட்டது. "

குளோபல் வார்மிங் என்ற ஒன்று அரசியலாக்கப் படுவதை முற்றிலும் எதிர்க்கிறார். சிலத் தொடுப்புகளையும் கொடுத்திருக்கிறார். இவர் குளோபல் வார்மிங்கிற்கு ஆதரவு போல் எழுதி அரசியலுக்கு ஆதாயம் தேடும் அல்லது மக்களை மடைமை படுத்தும் பதிவுகளை எதிர்க்கிறார்.


"தயங்கும் அமெரிக்கா: சுற்றுச்சூழலை பாதுகாக்க கியாட்டோ உடன்படிக்கை 1997ம் ஆண்டு பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற புவி உச்சிமாநாட்டில் உருவாக்கப்பட்டது. இதன்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் 2005ம் ஆண்டிலிருந்து செயலாக்கம் பெற்றது. இதில் இந்தியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் 185 நாடுகள் கையெழுத்திட்டன. எனினும் அமெரிக்கா இதை ஏற்க மறுத்துவருகிறது"

அமெரிக்காவின் முதலாளித்துவ குட்டு இங்கும் வெளிப்படுகிறது. உலகமே அழியும் நிலை வந்தாலும் எங்களுக்கு எங்கள் முதலாளிகள் தான் முக்கியம் அவர்களுக்குத்தான் கொடி பிடிப்போம் என்கிறது அமெரிக்கா. மிகச்சிறந்த பதிவு. படித்துப் பாருங்கள்.


"இந்த stratosphere வளி மண்டல அடுக்கில் 90 சதவீதம் ஓசோன் படலத்தால் ஆனது. ஓசோனின் வேதிப்பெயர் O3. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு பெயர் உள்ளது. (எ.கா) O - ஆக்ஸிஜன், N - நைட்ரஜன், C - கார்பன், Cl - குளோரின், H - ஹைட்ரஜன். இவற்றின் அளவுகள் கூடும் போதும், குறையும் போதும் அதன் பண்புகள் மாறும். "

அறிவியல் ரீதியாக அருமையாக விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.

இவை அனைத்தும் நாம் அனைவரும் படித்து புரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள். தவற விடாமல் படித்து விடுங்கள் நண்பர்களே.

Thursday, July 29, 2010

கவிதையாய் - வலைச்சரம் நான்காம் நாள்

இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்ல தொன்றுதொட்டே கவிதை என்றதும் அடுத்து நினைவுக்கு வருவது காதல். இதுவரை எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகள் காதலை நோக்கியே பயனித்திருக்கின்றன. சமூகம் சார்ந்த கவிதைகளை அவர்களால் எழுத முடியாது என்பது அதற்கு காரணமில்லை. அவர்களுக்கு காதலில் உள்ள ஈடுபாட்டை விட சமூகத்தின் மீதான ஈடுபாடு குறைவாக உள்ளது. இதற்கு ஏதோ ஒன்று காரணம் என சொல்லி தப்பி விட முடியாது.

இவர்களை போன்றவர்களுக்கும் சமூகப் பொறுப்பும், அதன் மீது காதலும் இருக்கிறது. அவற்றை எப்படி கவிதையாக்கலாம் பலருக்கு சொல்லலாம் என்பதை ஆக்கப்பூர்வமாக யோசித்து செயல் பட்டால் நிச்சயம் சமூகத்திற்கான எழுத்தாய் அது மாற்றம் பெறும் என்பதில் எள்ளளவு சந்தேகமும் வேண்டாம்.

கவிதைகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் பலரது கவிதைகள் படிப்பவர்களுக்க்கு புரியாது. இங்கு நான் தொகுத்திருக்கும் கவிதைகள் அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் இருக்கும்.


"உயிரே...
வாழ்வினில் காதல் செய்யாமல்,
காதலையே வாழ்வாக தந்த,
நீ கிடைக்க என்ன தவம் செய்தேனோ!!!"

தன் கணவர் ஹரியின் மீதான இவரது காதல் வெளிப்பாடுதான் இந்த கவிதை.


"உனக்காகவே நானென்று
என்னை நீ
உச்சிமுகர்ந்தாய்
அத்தருணமே
என்மனம்
சாந்தி அடையக்கண்டேன்"

இதுவும் தோழி மலிக்காவால் காதலாய் பொழியப்பட்ட கவிதை


தாய் என்பவள் உண்மையில் இவ்வுலகில் ஒரு மிகபெரிய கடவுள். மற்றவையெல்லாம் கடவுள்களே இல்லை. தன் பிள்ளை என்றில்லை எந்த பிள்ளைக்கு துன்பம் வந்தாலு கலங்கி விடும் கண்கள் அவளுடையது.

"எதற்கும் இருக்கட்டுமென
எப்பவும் மாற்று மருந்தொன்று
இருக்கும் அம்மாவிடம்."

அந்த தாய்க்காக ஒரு அழகிய கவிதை


"ராட்சத பறவைகளை
துரத்தத் திராணியற்று
மாறிய திசையில் பயணிப்பதை
தவிர்க்க முடியாமல்
கூடுகள் கலைந்த தவிப்போடு"

இலங்கைப் போரால் பாதிக்க்கப்பட்ட மக்கள் புலம்பெயர்தல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. அவர்களின் நிலையை அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இந்த கவிதை நிச்சயம் படிப்பவர்களின் மனதை கண்க்கச் செய்யும்.


"கல் தடுக்கி
கால் இடறுவது போல
என் நினைவுகளுக்குள்
நீ இடறுகிறாய்
இதயத்திறகுள் நீ
எங்கு இருக்கிறாய்
தெரியவில்லை
தூக்கி எறிவதற்கு முயல்கிறேன்
முடியவில்லை"

தனக்கு கவிதை எழுதத் தெரியாது என சொல்லிவிட்டு இக்கவிதையை எழுதியிருக்கிறார். இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்தும் காதலை அழகாய் சொல்லும் கவிதைகள்.


"தமிழ் வாழ
தமிழர்கள் இருக்கிறார்கள்..

ஆனால்
தமிழன் வாழ...?"

பிணங்களின் மீது மனிதமற்று நடந்த சுயநல மாநாட்டிற்கு இவர் 2009-ல் எழுதிய இக்கவிதை மிகப் பொருத்தம்.


"ஒரு பறவைக்கு இத்தனை திமிராயென்று
என்னை தரையோடு தேய்த்துவிடும்
நோக்கத்தில்
உங்களின் பாதங்கள் நெருங்குகின்றன.

இப்போதும் உங்களை நான்
தடுக்கும் உத்தேசமில்லை

ஏனென்றால்...

நான் பறவை இல்லை."

மரங்களின் அவசியத்தையும், அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் சொல்லும் ஒரு அற்புதக் கவிதை இது.


"நீ சேட்டை செய்கையில்
அத்தை அல்லிப்பூ செண்டாலோ
மாமன் மல்லிப்பூ செண்டாலோ
அடிப்பதில்லை..
ஏனென்றால்
இவள் எங்கள் கூட்டம்
என்று
அல்லிகளும் மல்லிகளும்
குழைந்து நிற்கின்றன !"

சென்ற மாதம், இவருக்கு ஒரு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறாள். அவளுக்காக இவர் எழுதியிருக்கும் தாலாட்டுக் கவிதை இது. பாசத்தின் வெளிப்பாடாய்.


"தன்னுயிர் காக்கும் மாந்தர்கள்
புத்துயிர் தரும் தாவரம் வளர்க்க
இன்றே புது நீதி செய்குவோம்!"

மரங்கள் இருந்த இடத்தில் மனமில்லாக் கட்டிடங்கள் நிறைந்து நிற்கும் இக்காலத்தில் மரம் வளர்க்க வேண்டும் என வலியுறுத்ஹ்டும் இக்கவிதை அழகுதான்.

பி.கு: என்னைக் கவர்ந்த இக்கவிதைகளில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டுமே இங்கு தந்திருக்கிறேன் முழுக்கவிதையையும் படித்துப் பாருங்கள்.

Wednesday, July 28, 2010

சமூகம் என்பது யாதெனில் - வலைச்சரம் மூன்றாம் நாள்

சமூகம் என்பது மக்கள் கூட்டமாக சேர்ந்து வாழும் பகுதி என்பதோடு நின்று போய் விட்டது. கூட்டமாக வாழுமிடத்தில் பிரிவினைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் ஒரு பிரிவினருக்கு பிரச்சினை என்றால் மற்றப் பிரிவினர்கள் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்குத்தானே பிரச்சினை நமக்கு வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மனப்பான்மை மட்டுமே மக்களிடம் விஞ்சியிருக்கிறது.

சமூக அமைப்பு என்பது ஒன்று கூடி வாழ்தல் என்று வரும் போது, நம்மில் ஒருவர் பாதிக்கப் படும் போது ஒன்று கூடி குரல் கொடுக்கவும் வேண்டும். இன்றைய அளவில் இன்னொருவனது பிரச்சினையாகப் பார்க்க படுவது நாளை நமக்கும் வரும் என்பது தோன்றல் வேண்டும். இது தனிமனித பிரச்சினைகளுக்கு மட்டுமல்ல பொது பிரச்சினைகளுக்கும் பொருந்தும். பொதுவில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் நம்மில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் காரணமானவர்களாகவே இருக்கிறோம். ஆனால் அது புரியாமல் விலகிச் செல்கிறோம்.

சரி இன்றைய மூன்றாவது நாளில் சமூகத்தின் மீது அக்கரை கொண்ட பதிவுகளைப் பற்றி பேசலாம்.


ஒரு சாலை விபத்து நடக்கிறது. அங்கு குழுமியிருந்த மக்கள் பேருந்து ஓட்டுனரைத் தாக்கும் நோக்கில் மட்டுமே செயல்பட்டு கலைந்து செல்க்கிறார்கள். இங்கு இந்த விபத்தின் காரணம் ஓட்டுனர் என்ற அளவில் மக்களின் புரிதல் நின்று விடுகிறது. ஆனால் இந்த தனியார் பேருந்து ஓட்டுனர்களின் வேகத்திற்கு முதலாளிகள்தான் காரணம் என்பதை இங்கு அழகாக சொல்லியிருக்கிறார். முத்லாளிகளின் லாப நோக்கு பொது மக்களை பாதிப்பதுதான் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது.


"அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )"

நமது அரசியல்வியாதிகள் மக்கள் போராடாமல் இருக்க என்னென்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதையும், நம் நாடு அமெரிக்கனிடம் அடகு வைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இறுதி வரியிலும் சொல்லி ஆதங்கப் பட்டிருக்கிறார். அனைவரும் நிச்சயம் படித்துப் பாருங்கள்.


"ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!,"

கடவுள் மறுப்பு என்பது நம் சொந்த வெறுப்புகளுக்காக இருக்கக் கூடாது. அதற்கான காரணம் என்ன என்பதை மிக ஆழமாகவும் தெளிவாகவும், அறிவியல் சாரத்தில் எழுதியிருக்கிறார். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் என எனக்குத் தோன்றுகிறது.


"மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் நல வாழ்வு திட்டங்களுக்கு, நஷ்ட ஈட்டு தொகைக்கு எல்லாம் கஜானா காலி என்ற கையை விரிச்ச மகராசி, தன்னை விட உயரமான அளவில் ஒரு லஞ்ச பண மாலையை பெருந்தன்மையா வாங்கி கொண்டு, தன் எடைக்கு மேல எடை அளவு கொண்ட கேக் வெட்டி , ரொம்ப "க(இ)ஷ்டமான" மன நிலையோட பிறந்த நாள் கொண்டாடி இருக்காங்க."

தண்ணீருக்கு நாம் தள்ளாடும் நிலையில் மக்கள் மீது பற்றற்றவர்களாய் இருக்கும் ஒரு அரசியல்வியாதியைக் குறித்த இவரது பதிவு இது.


"சாமான்யர்களான நாம் கேள்விகளில் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆட்சியாளர்களின் குழந்தைகள் சவுகர்யமாக காரில் சென்றுகொண்டிருக்கட்டும் தவறில்லை. ஆனால் முறையாகப் பராமரிக்கப்படாத வேன்களிலும், பேருந்துகளிலும் பயணிக்கும் நம் குழந்தைகளின் குறைந்தபட்ச பாதுகாப்பிற்காவது உத்திரவாதமளிக்கலாமே?"

ஆளும் வர்க்கத்தால் தனியார் பள்ளிகள் மூலம் கல்வி விற்பனை என வந்த பின் அங்கும் நடைபெறும் காஸ்ட் கட்டிங் முறையால் நாம் எவ்வாறு பாதிக்கப் படுகிறோம். படித்து பாருங்கள்.


"இன்று தொழிற்சாலைகள் நிறுவனங்கள் பல, பல கல்வி சாலைகள் ஆரம்பிப்பதன் நோக்கம் தொழில் நஷ்டத்தை ஈடுகட்ட, அல்லது லாபம் தரும் தொழிலாக கல்வி மாறியதால் வந்த விளைவு ஆகும்."

கல்வி என்பது முதலாளிகளின் மாற்றுத் தொழிலாகி போயிருக்கிறது. சில முரண்பாடுகள் இருந்தாலும் இவரது அலசல் மிக அருமையாக இருக்கிறது.


குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பிச்சையெடுக்கும் குழந்தைகளின் புகைப்படத் தொகுப்பு. ஆனால் இதற்கெல்லாம் காரணம் பெற்றவர்களும், வேலை கொடுப்பவர்களும் என இவர் நினைப்பதைதான் என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. இவர்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை ஒரு தனி பதிவாகவே விளக்கலாம். விரைவில் விளக்குகிறேன்.


நம் மருத்துவர்களின் மெத்தனப் போக்கும், உயிர்கள் வெறும் விற்பனைப் பொருட்களாகப் பார்க்கப் படுகிறது என்பதையும் தன் சொந்த அனுபவத்துடன் கலந்து எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

இன்று நான் அறிமுகப் படுத்தியவர்களுக்கு சமூகம் சார்ந்த சிந்தனைகள் இருக்கின்றன. இவர்கள் சமூகம் சார்ந்த புரிதல்களை எவ்வித தயக்கமுமின்றி மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

Tuesday, July 27, 2010

உணர்வுகள் - வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

இன்று வலைச்சரத்தில் இரண்டாம் நாள். நேற்று வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறி இன்றைய இரண்டாம் நாளைத் துவக்குகிறேன். மனிதன் என்ற உயிரினத்தைப் பொறுத்த வரை உணர்வு என்பது சாதி, மதம், தேசம், மொழி போன்றவற்றையே முன்னிருத்துகிறது. இவற்றையெல்லாம் கடந்த மனிதம் என்ற உணர்வு அற்றுப் போனவர்களாகவே இச்சமுதாயத்தில் நாம் திரிகிறோம். எது நடந்தாலும் எனக்குக் கவலையில்லை. எனக்கு மூன்று வேலை உணவும் இன்ன பிற இத்யாதிகளும் கிடைக்கின்றன.

இன்னொருவனுக்கு கிடைக்காவிடில் அதற்கு நானா பொறுப்ப்பு? என வினா எழுப்பி தப்பிச் செல்பவர்கள் தான் இவ்வுலகில் பெரும்பான்மையினர். இன்னொரு பிரிவினர் இன்னொருவனுக்குக் கிடைக்காத போது கொடுத்து உதவுபவர்கள். இவைத் தற்காலிகமானது. அதை வைத்து இவர்கள் செய்தது சரி என நியாப் படுத்த முடியாது.

அதில் மனிதமிருந்தாலும் சில வினாடிகளில் மறைந்து போகும் ஒன்றாகவே இருக்கிறது. அவனுக்கு ஏன் கிடைக்கவில்லை? என மூலமறிந்து எதிர்க்க இன்று யாருமில்லை. இதுவரை என்னைக் கவர்ந்த சிறுகதைகள் உணர்த்திய உணர்வுகளை உங்களிடம் இன்று பகிரவிருக்கிறேன்.


"மரங்களையும், மனிதத்தையும் கொன்று எதையாவது வளர்க்க முடியுமா...? வெட்டப்படும் மரங்களின் பச்சை வாடை, குருதியின் நரவீச்சைப் போல உணர்வறுத்துச் செல்வதை உணர்வார்களா...? " என மனிதத்தியும் மனிதனின் வாழ்க்கையில் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டிய மரங்களைப்பற்றியும் இவர் எழுதியிருக்கும் பதிவு.


"சமூகத்தில் புழக்கத்திலிருக்கும் மூட நம்பிக்கையான பலி கொடுத்தலை மையப் படுத்தி இவர் எழுதியிருக்கும் இந்தப் பதிவு ஏனோ என்னை பாதித்தது."


நான் அடிக்கடி சொல்லும் விடயம் தான் கடவுள் என்பது மனிதனுக்குள்ளான ஒரு குணமாக, மனிதமாக இருக்க வேண்டுமே தவிற வேறெவ்வாறும் இருக்கக் கூடாது. அந்த வகையில் இவர் கடவுளை எங்கு கண்டிருக்கிறார் பாருங்கள்.


இன்றைய பணம் தேடும் உலகில் குழந்தைகளின் மனமும், நிலையும் எவ்வாறு இருக்கின்றன? அவர்களின் எதிர் பார்ப்புகள் எப்படிப் பட்டவை என்பதை மீன்களோடு ஒப்பிட்டு அழகாய் விளக்குகிறார் தோழி அன்புடன் அருணா.



கவிதைகள் கலந்து ஒரு பெண்ணிடம் வயப்பட்டு காதலுறுவதை ஒரு அழகான புணைவாகக் கொடுத்திருக்கிறார் "ஆழிமழை" என்ற தளத்தில் எழுதி வரும் வேலா.


ஆசிரியர்களின் வக்கிரங்களுக்க்கு பல குழந்தைகள் பலியாகி கொண்டிருப்பது இப்போதெல்லாம் தினசரி செய்தியாகிப் போயிருக்கிறது. மரியாதைக்குரிய ஒரு ஆசிரியரின் செயல் குறித்து நண்பர் சே. குமார் எழுதிய சிறுகதைதான் இது.


இது ஒரு குட்டிக் கதைதான் ஆனால் ஒரு நல்ல கதை காசு வந்தால் பாசமெல்லாம் தூசாகும். அததப் புரிந்து கொள்ளும் நாள் நிச்சயம் வரும் என்பதை தந்தையையும், மகனையும் வைத்து அழகாக சொல்லியிருக்கிறார் நண்பர் பூங்குன்றன்.


வானம்பாடிகள் ஐயா. பதிவுலகில் மரியாதைக்குரிய நபர் இவர். இவரின் இந்த சிறுகதை ஒரு பாட்டியையும், வரதட்சினை பிரச்சினையையும் அழகாய் முன் வைக்கிறது. படித்துப் பாருங்கள்.


நண்பர் ஊடகன் எழுதிய ஒரு அழகிய காதல் கதை. ஆனால் இக்கதையின் கதாநாயகன் வித்தியாசமானவன். இறுதியில் தன் காதலி த்ன்னாலேயே இறந்து போகிறாள் என்பதாய் முடியும் கதை. இவர் இப்போதெல்லாம் எழுதுவதில்லை. போபால் பற்றி எழுதுமாறு கேட்டிருக்கிறேன். நிச்சயம் எழுதுகிறேன் என சொல்லியிருக்கிறார்.

இங்கு நான் அறிமுகப் படுத்தியிருக்கும் சிறுகதைகளை எழுதியவர்களும் போபால் குறித்து நிச்சயம் எழுத முன் வருவார்கள் அந்த நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நன்றி
புலவன் புலிகேசி

Monday, July 26, 2010

சுயமுகம் - வலைச்சரத்தில் என் முதல் நாள்

நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கம்!

என்னுடைய சுயமுகம் இதுதான் என்று என்னால் அவ்வளவு எளிதில் கூறி விட முடியாது. பலமுறை சுயநலம் எனும் மாயையில் சிக்கிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் தவித்திருக்கிறேன். அந்த மாயையை விட்டு வெளிவரும் முயற்சியில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். இதுவே என் சுயத்தேடலாகவும் இருந்து வருகிறது.

வலைச்சரத்தில் ஆசிரியராக எழுத சீனா ஐயா என்னை சென்ற மாதமே அழைத்திருந்திருக்கிறார். கவனக் குறைவின் காரணமாக அந்த மின்னஞ்சலைப் பார்க்காமல் விட்டு விட்டேன். அதன் பின் இந்த மாதம் என்னை வலைச்சர ஆசிரியராகும்படி கேட்டிருந்தார். அதன் பொருட்டு இன்று தொடங்கி வரும் ஞாயிறு முடியும் வாரத்திற்கு நான் ஆசிரியர் பொறுப்பேற்கிறேன்.

நண்பர் ஊடகன் மூலமே இந்த வலைப்பூ உலகிற்குள் அடியெடுத்து வைத்தேன். ஆனால் ஏனோ இப்போதெல்லாம் அவர் எழுதுவதில்லை. அவரை மீண்டும் எழுத வைக்கும் முயற்சியில் இருக்கிறேன். நிச்சயம் விரைவில் எழுதத் தொடங்குவார்.

இது வரை 150 இடுகைகளை எழுதியிருக்கிறேன். ஆரம்பத்தில் கதை, கவிதைகள் என்ற பெயரில் ஏதேதோ எழுதி விட்டு இப்போது கொஞ்சம் சமூக அவலங்கள் குறித்து எழுதத் தொடங்கியிருக்கிறேன். இது எந்த அளவு படிக்கின்ற மக்களுக்கு புரிதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி ஒரு புரிதலை ஏற்படுத்தும் அளவு எழுத முயன்று கொண்டிருக்கிறேன்.

"அப்துல் கலாம் கூட நல்ல பணக்கார குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கும் கல்லூரிக்கும் தானே சென்று அறிவுரைகள் எல்லாம் சொல்கிறார். இது போன்று பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்காக எதுவும் செய்ய வில்லையே!!!"

என்ற வாதத்துடன் நான் துவங்கிய முதல் இடுகை "பிச்சை காரனின் பிள்ளைகள்..". இந்த இடுகையை எத்தனை பேர் படித்திருப்பார்கள் எனத் தெரியவில்லை.

இந்த வலைப்பூ உலகில் அடியெருத்து வைத்து ஒரு வருடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிலையில் போபால் பற்றி பல விடயங்களைப் படித்து எனக்குள் ஒரு புரிதல் ஏற்பட்ட காரணத்தால் அதைப் பற்றி அனைவருக்கும் சொல்ல வேண்டும். அனைவரும் தெரிந்து கொண்டு அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி புரிதலை ஏற்படுத்த வேண்டும் என எண்ணினேன்.

அதன் விளைவு தற்போது புதிதாக "போபால்" என்ற பெயரில் ஒரு வலைப்பூ ஆரம்பித்து அதில் பதிவர்கள் மட்டுமல்லாமல், வாசகர்களாய் இருப்பவர்களும் இந்த விடயம் குறித்து விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளேன். இதற்கு நண்பர்களின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இது குறித்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இன்னும் எத்தனை எத்தனை அபாயங்கள் நம்மை சுற்றியிருக்கின்றன என தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப் பட்டதுதான் அந்த வலைப்பூ.

நான் எழுதிய சிறுகதைகளில் என் வலைப்பூவின் வாசகனாய் என்னைக் கவர்ந்தவை மூன்று. உழைப்பின் சுவை சொல்லும் "தேநீர்". தன்னைப் போல் தன் வேலையாட்களைப் பார்க்கும் மனம் முத்லாளிகளுக்கு வருவதில்லை என்பதை விளக்கும் "வேலைக்காரி". மனிதனின் வளர்ச்சியில் மாறுபட்டு போகும் மனிதத்தை விளக்கும் "யானையும் பாகனின் அங்குசமும்".

நான் எழுதியப் பதிவுகளில் எனக்கு திருப்திகரமாக இருந்தவை சமீபத்தில் எழுதிய போபால் குறித்த தொடர் தான். "மனிதம் இருந்தால் படியுங்கள்" என்ற தலைப்பில் ஐந்து பதிவுகளும், "இந்திய மக்கள் உயிர்களின் மொத்த விலை 2300 கோடி" என்ற ஒரு பதிவையும் இது வரை எழுதியிருக்கிறேன்.


நாளை முதல் வலைச்சரத்தில் என்னைக் கவர்ந்த பதிவர்கள் குறித்து வகைப்படுத்தி எழுதலாம் என்றிருக்கிறேன்.

நன்றி,
புலவன் புலிகேசி

Sunday, July 25, 2010

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் நிறைவு பெறும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற அருமை நண்பர் ஜோதிஜி, ஏற்ற பொறுப்பினைப் பொறுப்புடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடை பெறுகிறார். இவர் ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ இருநூற்று எண்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அனைத்துத் தளங்களையும் தேடிப் பிடித்து, அலசி ஆய்ந்து, நல்ல இடுகைகளை, நல்ல முறையில், நல்ல கருத்துகளுடன் அறிமுகம் செய்தது பாராட்டுக்குரியது. பெரும்பாலான வாசகர்கள் சுட்டப்பட்ட இடுகைகளுக்குச் சென்று படித்ததாகவும் அறிகிறேன்.

இவரது இடுகைகளை தினந்தோறும் செய்தி ஓடையின் வாயிலாகப் படிக்கும் பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிகிறேன்.

அன்பின் ஜோதிஜி - நன்றிகலந்த நல்வாழ்த்துகளுடன், வலைச்சரக் குழுவினரின் சார்பினில் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் - நன்றி ஜோதிஜி

நாளை சூலை 26ம் நாள் துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் புலவன் புலிகேசி என்ற தளத்தில் எழுதி வரும் நண்பர் முருகவேல். இவர் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். கணினித் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்பொழுது சென்னையில் பணி புரிகிறார். 23ம் புலிகேசி படத்தினைக் கண்டு களித்து நகைச்சுவையாக தனது தளத்திற்குப் பெயர் வைத்தவர். ஆனால், இவரது இடுகைகளில் நகைச்சுவை என்பது சற்றே கம்மிதான்.

நண்பரை வருக வருக - தங்கள் வரவு நல்வரவாகுக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் புலவன் புலிகேசி
நட்புடன் சீனா

வெளிச்சம் (வலைச்சரம் ஜோதிஜி 7வது நாள்)

குரு வணக்கத்தில் தொடங்கி ஆறு போல் நகர்ந்து இன்று விடைபெறும் நேரம்.

நான் வாசிக்கும் பலரும், என் இடுகையில் எழுதும் எழுத்துக்களை ஆதரித்த வர்களும், புதிய முகங்கள் பலரும் ஒன்று சேர்ந்து இந்த வலைச்சர பணியில் நல்ல அனுபவத்தை தந்தமைக்கு நன்றி. அன்பென்ற சவுக்கால் என் விவேகத் தை அதிகமாக்கிய சீனா அவர்களுக்கு முக்கிய நன்றி.தினந்தோறும் செய்தி ஓடையின் மூலமாகத்தான் தேவியர் இல்லத்தை படிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுருக்கிறது. அவர்களுக்கும், இந்த நேரத்தில் மற்ற நண்பர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றி.
எனக்குள்ளும் இன்று வரையிலும் ஏராளமான இருள் அப்பிக்கிடக்கிறது. மூளையில் இருக்கும் ந்யூரான்களில் எனக்கு முன்னால் வாழ்ந்த தலைமுறை களின் பாதிப்பு இன்னமும் இருக்கிறது. இறை வெறுப்பு, இறை மறுப்பு என்று வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அனுபவங்கள் கொடுத்த பாதிப்பில் இன்று இறை என்பது இப்போதும் தேடலாகத் தான் இருக்கிறது. நடிகர் சிவகுமார் போலவே கோவிலுக்கு செல்வதை விட என்னுள்ளேயே தேடிக்கொண்டு இருக்கின்றேன். கோவிலுக்குச் சென்றாலும் அங்கு நடக்கும் பல நிகழ்வுகள் மொத்தமாக யோசிக்க வைக்கின்றது.

அச்சத்தை உருவாக்கி பிழைப்பு நடத்தும் மனிதர்களையும், வெளியே கை ஏந்திக்கொண்டு பிழைக்க வழியில்லாமல் வாழும் மனிதர்களையும் தான் ஆதங்கமாய் பார்க்க வைக்கின்றது. இந்த இரண்டு மனிதர்களைப் பற்றியும், சமூகத்தில் உள்ள இடைவெளியையும் இன்று வரைக்கும் எனக்கு அடையாளம் காட்டிக்கொண்டுருப்பவர்கள் வால்பையன், வினவு தளங்கள்.

எதையும் கேள்விகள் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டால் குறைந்த பட்சம் அமைதி கிடைக்கலாம். அடுத்த மனிதனைப் பற்றி யோசிக்க வைக்க முடியுமா?

அதைத்தான் இருவரும் செய்து கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம், வெறுப்பு, குழுமனப்பான்மை, குறுகிய நோக்கம் போன்ற அத்தனையும் தூக்கி எறிந்து பார்த்தாலும் இருவரின் படைப்புகள் மூலம் என்னையும் என்னைச் சுற்றியுள்ள சமூகத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன். என்னால் நீக்க முடியாத இருள் என்பது என் குழந்தைகளுக்காவது வராமல் இருக்க வேண்டும்.

நான் கடந்த ஒரு வருடத்தில் வலைதளத்தில் வாசித்த பல ஆக்கபூர்வமான கட்டுரைகளுக்கு மத்தியில் இந்த பெண்மணி எழுதிய கட்டுரை என்னுள் சாகும் வரைக்கும் ஞாபகத்தில் இருக்கும். இதைவிட எளிமை சிறப்பு என்று என்னால் வேறு எதையும் சுட்டிக்காட்ட முடியவில்லை. உணர்ந்தவர்களால் படைக்கப் பட்ட படைப்பு என்பது எப்பொழுதுமே என்பது சகாவரம் பெற்றது.

மதநம்பிக்கை உள்ளவனின் எண்ணத்தில் இந்த வால்பையன் அடுத்த சம்மட்டி அடிகள் எவராலும் மறுக்க முடியாது.

"எனக்கு எல்லா மதமும் ஒன்று தான், எல்லா கடவுளும் ஒன்று தான், உங்க ளுக்கு பல பல வடிவங்களிலும், பல பல பெயர்களில் இருந்தாலும் எனக்கு குழுமனப்பான்மையை உருவாக்கி மக்களிடயே அமைதியை குழைத்து அடிச்சி கிட்டு சாவுங்கடான்னு உருவாக்கப்பட்டதே கடவுள்! அப்படிபட்ட கடவுளை என்னால் எப்படி ஏற்றுகொள்ள முடியும், இதுவரை மனித சமுதாயத் திற்கு எள் ளலவும் பயனில்லாத கடவுளை நான் எப்படி வணங்கமுடியும்!"
திருப்பூரில் பணம் கொழுத்தவர்களின் மத்தியில் வாழும் வாழ்க்கையில் பயமே அறியாதவனின் வாழ்க்கை தேவியர்கள் அறிமுகமானதற்குப் பிறகே அத்தனை பயமும் வந்தது. எழுதத் தொடங்கிய பிறகே மொத்த விவேகமும் வந்துள்ளது. சீனா போன்றவர்களால் இன்னமும் வளர்த்துக் கொள்ள வேண்டி உள்ளது என்பதை புரிந்து கொண்டேன்.

வலைச்சரம் ஆசிரியர் பணி என்பது எத்தனை முள்படுகை போன்றது என்பதை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். வலைச்சரம் தமிழ் மண மணிமகுடத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் வாசிப்பு அனுபவத்தை தேடிக் கொண்டு இருப்ப வர்களுக்கு இந்த தளம் வாழ் நாள் பொக்கிஷம்.

இலங்கை குறித்து நான் கொடுத்த தலைப்புகள் போல என்னால் நூறு அற்புத தளங்களை சுட்டிக்காட்ட முடியும். மற்ற தலைப்புகளைச் சுட்டிக் காட்ட எனக்கு உதவிய நண்பர்கள் போல் இல்லாமல் நானே உணர்ந்துபடித்த தளங்கள் அது. ஆனால் அத்தனையும் இங்கு சுட்டிக்காட்ட முடியவில்லை என்ற ஆதங்கம் அதிகம் உண்டு. பல நண்பர்களின் தளங்களையும் சுருக்கம் கருதி என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை.

நான் எழுதிய ஈழம் குறித்த கட்டுரைகள் இன்று வரைக்கும் பலருக்கும் தேட லாய் இருக்கிறது. எட்டு வருடங்கள் மீதம் உள்ள ஈழ வரலாற்றை இப்போது என்னுடைய மதிப்புக்கு உரியவர் கொடுத்த தாக்கத்தால், உதவியால் புத்தகத் திற்கான வேலைகள் நடந்து கொண்டுருக்கிறது.

அந்த புத்தகம் இதுவரையிலும் வெளியில் சுட்டிக் காட்டப்படாத ஈழ மக்களின் சமூக வாழ்க்கையை சுட்டிக்காட்டும். இது குறித்து எழுதிய முதல் வருட இறுதி கட்டுரை இது.
தேவியர் இல்லம் இடுகையை உருவாக்கித் தந்த நாகா மூலமாக இந்த நல்ல பயணம் இன்று வரைக்கும் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. அன்று முதல் இன்று வரையிலும் என் எழுத்துலக வளர்ச்சியில் தனிப்பட்ட அக்கறை காட்டு வலையுலக குருஜீ ராகவன் நைஜீரியாவுக்கு (பின்னூட்ட சுனாமி நன்றி கார்த்திகை பாண்டியன்)என்னுடைய குரு வணக்கம்.

ஏழு நாட்களும் தொடர்ந்து வந்து வாசித்த, பின்னூட்டமிட்ட, ஓட்டு அளித்த, பாராட்டிய, எண்ணங்களை பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி. படங்களை தந்த 4தமிழ்மீடியாவுக்கும் நன்றி.

ஜோதிஜி

தேவியர் இல்லம். திருப்பூர்

23.07.2010

நாம் தமிழர்

Saturday, July 24, 2010

கரும்புலி (வலைச்சரம் ஜோதிஜி 6ம்நாள்)

எழுத்தாளர் சுஜாதா தேடலை அதிகப்படுத்தியதுடன் நிறைய ஆச்சரியங்களையும் அறிமுகப்படுத்தியவர். சரித்திரம், பூகோளம், வேதியியல்,தொழில்நுட்பம், போன்றவற்றை வெகுஜனமும் படிக்கும் அளவிற்கு எழுதுபவர்கள் மிகக்குறைவு. இவர் தொழில் நுட்பம் சார்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்தாலும் இவரின் எழுத்தாற்றலும், நகைச்சுவையில் நகர்த்தும் மெல்லிய நீரோடை போல் உள்ள நடையும் நம்மை ஆச்சரியப்படுத்தும். வலைதளத்தில் தொழில் நுட்பம் குறித்து எழுதுபவர்கள் கூட பின்னோட்டத்தில் உங்களைப் போல எழுத முடியவில்லை என்று வருத்தப்பட்டுருக்கிறார்கள். வெகுஜன வாசிப்பு. மக்கள் தொலைக்காட்சி வரைக்கும் பாராட்டுரைகள் வந்தாலும் சுயம்பு போல குறுகிய காலத்தில் வளர்ந்தவர். இவரை ஜுனியர் சுஜாதா என்று அழைக்கலாம். தப்பில்லை. சொந்த பெயரைப் போலவே, பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளும் மொத்தத்திலும் சிறப்பு.
சுடுதண்ணி
வலைதளத்தில் இந்த விசயம் கிடைக்குமா என்று தேடி அலைந்து கொண்டு இருப்போம். நான் வலை உலகத்தை பார்த்த வரைக்கும் நான் பல மாதங்களாகத் தேடிக் கொண்டுருந்த ஒருவரைப் பற்றி எங்கு தேடியும் காணவில்லை. இவர் பின்னூட்டத்தை ஒரு தளத்தில் கண்டபோது கிராமத்தில் இருந்து சென்றவர். எப்படி எழுதுகிறார் என்பதை பார்க்கலாம் என்று உள்ளே நுழைந்த போது நான் தேடிக் கொண்டுருந்த நபருக்கு உதவியாளராகவே இருந்துள்ளார். இன்று இந்தியாவில் ஏற்பட்ட தொலை தொடர்புக்கு முக்கிய காரணகர்த்தாவாக இருந்த (Dr.Sam Pitroda) முனைவ்ர். சாம் பிட்ரோடா பற்றி எழுதியுள்ளார்.

பன்னிக்குட்டி ராம்சாமி. இந்த பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு எப்படி இருக்கிறது. ஆனால் நீங்கள் ஒரு தடவை இவர் இடுகைக்குச் சென்றே ஆக வேண்டும். வயிறு புண்ணாகிவிடும். ஆனால் அத்தனை சிரிப்புக்குப் பின்னாலும் நீங்கள் சிந்தித்தே ஆக வேண்டும் என்கிற அளவிற்கு வாழைப்பழ ஊசி போல் ஒவ்வொன்றையும் நாசூக்காக சுட்டிக் காட்டுகிறார்.

இவரைப்பற்றிய அறிமுகம், வலைதள பெயர் என்று ஒவ்வொன்றுமே அற்புதம் பன்னிக்குட்டி மன்னிக்க சில்பா குமார். வலையில் எவருக்கு ஆப்பு அடிக்க லாம் என்று அடிக்க காத்துக் கொண்டுருக்கும் பலருக்கு மத்தியில் மாப்பூ நீங்கள் சூப்பரரு.

இவர் தன்னைப்பற்றி பேரன்பும் பெரும் கோபமும் கொண்டவன் என்று சொல் கிறார். அதைப் போலவே இடுகையின் தலைப்பும் வெண்ணிற இரவுகள். நடுத்தர வர்க்கம் அல்லது பலவற்றையும் பார்த்து நம்மை காத்துக் கொள்ள வேண்டிய நடுங்கும் வர்க்க மாகத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறோம். ஆனால் எழுதக் கிடைத்த வலைதள வாய்ப்பைக் கூட சுகமாய் சொறிய பயன்படுத்தாமல் ஒவ்வொரு இவருடைய ஒவ்வொரு சிந்தனைகளும், நோக்கங்களும் படிப்பவரை பிடித்து உலுக்கும் அல்லது நாம் வாழ்வது வாழ்க்கையா என்று யோசிக்க வைக்கும்.

நம்முடைய அரசியல் வியாதிகள் தமிழ் வளர்க்கும் லட்சணத்தையும் கொஞ்சம் பார்த்து விடுங்களேன். எடுக்கும் எந்த துறையையும் பற்றி நோண்டி நொங்கெடுப்பது இவரின் கை வந்த கலை. கீதையைப் போலவே இவரின் ஒவ்வொரு தலைப்புகளும். வாழ்த்துகள் கார்த்திகேயன்.

நான் ஈழம் தொடர்பாக எழுதிக் கொண்டுருந்த போது பல விஷயங்களைத் தேடி அலைந்த போது இராஜராஜன் அறிமுகப்படுத்திய தளம் இது. பிரபாகரன் குறித்து நிறை குறையாக எத்தனையோ விஷய்ங்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அவர் பின்னால் உறுதியுடன் அணிவகுத்து நின்ற கரும்புலிகள் குறித்து எத்தனை பேர்களுக்குத் தெரியும். அவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அவர்களின் குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட எண்ணங்கள் வரைக்கும் இந்த தளத்தில் நீங்கள் உணரலாம். ஈழம் தொடர்பாக தேடல் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷ ஆவணம். சந்திரவதனாவுக்கு வாழ்த்துகள்.

உலகத்தில் உள்ள தமிழர்களில் ஈழ மக்களின் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பானது. அதைப் போலவே தீவுக்குள் நான்கு திசைகளாக இன்று வரையிலும் ஒற்றுமையில்லாமல் வாழும் மக்களும் தமிழ்நாட்டு தமிழ்ர்களைப் போலத்தான் வாழ்ந்து கொண்டுருக்கிறார்கள். நல்ல தமிழ் பெயர்களை கொண்ட ஈழ வலைதளங்களில் பற்பொடி பெயர்களும் இருப்பதும் ஆச்சரியமே. பெரும்பான்மையான எதிர்ப்புகளை கடந்தும் இவர்கள் இருவருமே இன்னமும் செயல்பட்டுக் கொண்டுருப்பது மொத்தத்தில் அதிசயமே. எவரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று வரலாற்று நிகழ்வுகளை படைத்துக் கொண்டுருப்பவர்கள்.

சந்துருவின் பக்கங்கள். கிருத்தியம்.

புத்தகத்தைப் பார்த்து நான் எழுதிய பல விசயங்களை ஹேமா எழுதிய இந்த தலைப்பு அவரின் திறமைக்கு மற்றொரு உதாரணம். பெயர் சொன்னால் போதும். தரம் எளிதில் விளங்கும்.

உலக வானொலி முதல் உள்ளுர் செய்திகள் அறியும் ஆவல் உள்ளவர்களுக்கும் இந்த இரண்டு இணைப்புகளும் உதவும்.

ஒன்று. இரண்டு.



கலைஞர் அடுத்து கை வைக்கப் போவது இவரைத்தான். காரணம் நீங்களே இதைப் பார்த்து விடுங்கள்.


ஒரே ஒரு முறை இவர் மேல் குத்து விட்டு நகர்ந்து விடுங்கள். காரணம் உங்கள் மனதிற்குள் இருக்கும் விசயம் தான்.

Friday, July 23, 2010

நிர்வாண அழகு (வலைச்சரம் ஜோதிஜி 5வது நாள்)

நேற்றைய 4 வது நாளில் சட்டம் தன் கடமைமையச் செய்து விடும் என்று சொல்லியிருந்தது இத்தனை சீக்கிரம் பலிக்கக்கூடும் என்று கனவிலும் கூட யோசிக்கவில்லை. உண்மைகள் என்பது நிர்வாணம் போன்றது தான். சவுக்கு என்ற தளத்தை தொடர்ந்து வாசிக்கும் போது மனதில் பயத்துடன் ஆச்சரியமும் தந்தது. முந்தைய அரசாங்கத்துடன் போராடிய நக்கீரன் போல இப்போது எவரும் இல்லை. இப்போது சவுக்கு தளத்தில் எழுதி வந்த சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதைப்பற்றி முழுமையாக எழுதுவதற்கு இந்த தளம் சரியானது அல்ல. கலைஞர் குறித்து அதிகமாக எழுதி வரும் கிருஷ்ணகுமார் அவர் புரிந்துணர்வை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றேன். இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு. இடையில் புகுந்து லாவணியை மற்றவர்கள் தொடங்கி விடக்கூடாது என்பதற்காக வலைதளத்தைக் இங்கு என்னால் குறிப்பிடமுடியவில்லை. இதன் நோக்கத்தை அவர் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவரின் உண்மையான பெயரை மட்டும் இங்கு குறிப்பிடுகின்றேன். செய்வாரா? இதை தான் நான் தொடக்கத்தில் கலைஞரை புரிந்து கொண்ட வகையில் நான் எழுதிய அய்யாவுக்கு அடி வாங்கும் தமிழன் எழுதுவது?

இடுகையில் எழுதத் தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் எது குறித்தும் கவலைப்படாமல் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதன் முழுமையான அர்த்தமாய் தன்னுடைய அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டுருப்பவர். இவர் வாழும் நாட்டில், பழகும் மனிதர்களுடன் முக்கால்வாசி நேரம் ஆங்கிலத் தில் தான் உரையாட வேண்டும். ஆனால் எழுதும் சிந்தனைகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டு ருப்பாரோ என்று யோசிக்கத் தோன்றும். வாழ்த்துகள் செந்தில்.
அறியாத பல தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்துவதுடன் தமிழ் ஆசிரியர் போலவே அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு சாதித்துக் கொண்டுருக்கும் மணிவாசகம்,
இவரை மறுபடியும் யாராவது கோபப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. இவர் எழுதிய இந்த தலைப்பு நாலைந்து நாட்கள் மனதிற்குள் திடும் திடுமென்று அடிக்க வைத்தது. கலாச்சாரம் போன்ற கருமாந்திரங்களை விட முடியாமல் சுமந்து கொண்டுருக்கும் மனம் இந்த தலைப்பில் வந்த வார்த் தைகள் அத்தனையும் நிதர்சனமாய் உரைக்க வைத்தது.

என்னோட மகளோ, மகனோ... நாளைக்கு... இங்கிருக்கும்... ஏதோ ஒரு மதம் சார்ந்த வெள்ளைக் காரனையோ... இங்கு எங்களைப் போல பிழைப்புகென்று வந்த ஆப்பிரிக்காவின் கறுப்பினத்தவனையோ... அல்லது என்னினம் என்று சொல்லிக்கொள்ளும் எவனையோ... திருமணம் செய்து கொள்வதானாலும்.... திருமணம் செய்து கொள்ளாது... துணையாகச் சேர்ந்து வாழ்வதாயிருந்தாலும்... நாலு தடவை விவாகரத்து செய்து மறுமணம் முடித்தாலும்... தனியாக இருந்தாலும்.. ஹோமோவானாலும்.. லெஸ்பியன் ஆனாலும்.. எனக்கு எந்தக் கவலையுமில்லை. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுதந்திரம்... அதையெல்லாம் விட... எனக்கு நான் எட்டித் துப்பும் வட்டத்திலிருப்பதல்ல என் வாழ்க்கை... உலகளாவியது... எல்லாரும் ஒண்ணுதான்... நம்பறதுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே... வெத்து வேட்டுன்னு தோணுமே.................................................... ..



பெண்குழந்தைகளின் முற்போக்குத்தனமான கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பல முறை தவிப்பதுண்டு. இவர் கொடுத்த சவுக்கடியை பார்த்து விட்டு உண்மையும் இது தானே என்று வீட்டில் படித்து விட்டு வக்காலத்து வாங்கினது தான் இவரின் வெற்றி? இது புலம் பெயர்ந்தவர்களுக்கு உண்டான வலி மட்டுமல்ல. இங்கும் இப்படித்தான் ஆகி விடும் போலிருக்கு???????
ரௌத்திரம் பழகிக் கொண்டுருப்பவர் கண்டதுண்டமாய் ஆக்கிவிட்டார்.
மாலன் சிவசங்கரி தலைமையில் அக்னி என்ற அமைப்பின் சார்பாக சென்னை யில் ஒரு விழா நடந்தது. கலைஞர்(சங்கத்தமிழ்)குமரி அனந்தன்(இடைக்காலத் தமிழ்) வலம்புரி ஜான் (தற்காலிகத்தமிழ்) என்று ஒவ்வொரு வரும் ஒரு மணி நேரம் பேசினார்கள். மயங்கிய அந்த பேச்சுக்குப் பிறகு பாலாசி எழுதிய இந்த தலைப்பு கிறங்க வைத்தது.

இராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் என்று படித்து இருப்போம். முழு விபரங்கள் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அற்புதமான படங்களுடன் எளிமை யான விளக்கத்தையும் தந்துள்ளார். வரலாற்றுத் தகவல்களில் ஆர்வம் இல்லாதவர்களுக்குக்கூட சுவராஸ்யம் தரக்கூடிய பல விசயங்களும் உண்டு.

இவர் திரைப்பட இயக்குநர். தமிழ் தட்டெழுத்து சிரமத்தை அவரின் ஓய்வற்ற உழைப்பைப் பற்றி பலமுறை பேசியுள்ளார். ஆனால் நிரந்தரமாய வலை உலகத்தில் எழுதுவதை நிறுத்தி விடுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. இவர் கொடுக்கும் ஓரு பின்னோட்டம் என்பது ஓன்பது இடுகைகள் எழுத உத்வேகம் கொடுக்கும். புத்தாண்டு என்பதை இவர் பார்வையில் படித்துப் பாருங்கள். ரொம்பவே வருத்தப்படுகின்றேன் ஷண்முகப்பிரியன் அவர்களே.................

திருப்பூரில் இருந்து எழுதிக் கொண்டுருப்பவர்களுக்கு முக்கிய பாலமாக இருக்கும் வெயிலான் ரமேஷ் போல வலைதளத்தில் தொழில் நுட்ப பதிவு எழுதிக் கொண்டு இருக்கும் திரு. வடிவேல் அவர்களின் மற்றொருமொரு முக்கிய மகத்தான சேவை தெரிந்த தெரியாத முக்கியமான தலைப்புகளை. தளங்களை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும்படி செய்வது. வாழ்த்துகள் வடிவேல். நீங்கள் Google Buzz ல் பயணம் செய்தால் போதும்?

சில சமயம் இவர் மாவு பிசையும் போது தண்ணீர் அதிகமாக (A) போய்விடும். ஆனா இவர் இப்படி எழுதும் போது எந்த Q வும் வந்து நிற்காது. அப்புறம் Y ன்னு வந்து நிற்பாங்க?

இன்றைய மனிதன் பெற்ற பரிணாம வளர்ச்சி என்ன தெரியுமா? பயன்படுத்து, தூக்கி எறி? எளிமையான ஆங்கிலத்தை பொறுமையாக உணர்ந்து கொள்ளுங்கள்.

2002 முதல் அலுவலக பணியின் காரணமாக சராசரியாக தினந்தோறும் 12 மணி நேரம் கணினியுடன் வாழ வேண்டிய வாழ்க்கை. இப்போது தொழில் வாழ்க்கையில் மடிக்கணினி வந்து கக்கூஸ், குளியல் தவிர கட்டிய பொஞ்சாதி போலவே உடன் இருந்தாலும் வலைதளம் என்பதை தொழில் சார்பாக பார்த்து பழகியவனுக்கு 2009 மே மாதத்தில் தான் தமிழ் வலைஉலகம் அறிமுகமானது. தொடக்கத்தில் நண்பர் கொடுத்த எச்சரிக்கையும் மீறி முதல் இரண்டு மாதங்கள் கண் வலிக்க பார்த்து பார்த்து தேடிய போது இதன் உண்மையான ரூபம் புரிந்தது. நான் உணர்ந்தவற்றை இவரும் புரிந்துள்ளார்.

Thursday, July 22, 2010

பிரபல்யம் (வலைச்சரம் ஜோதிஜி 4ம் நாள்)

எழுதிப் பார்க்கலாம் என்று ஒரு வலைதளத்தை தொடங்கி விடுகிறீர்கள். சில தலைப்புகள் பரவலாக வாசிக்கவும் செய்ய அடுத்து என்ன தோன்றும். எப்படி மற்றவர்களைப் போல நாமும் பிரபலம் ஆவது என்று நகரத் தொடங்கி கண்டதையும் எழுத நினைத்தால் என்ன ஆகும்? சில சமயம் சட்டம் தன் கடமையைத் செய்து விடக்கூடும். இது போல் வாய்ப்பு இருக்கிறதா? என்று யோசிப்பதை விட எழுதும் போது எல்லாவிசயங்களையும் கவனத்தில் கொண்டு எழுதினால் சிறப்பு.
வலைதளத்தில் எழுதுபவர்கள் சங்கம் என்று ஒவ்வொரு முறையும் கிளம்பும் போது உருவாகும் நிகழ்வுகள் ஏதோ ஒரு இடுகைக்குத் தான் உதவியாய் இருக்கிறது. ஆனால் எத்தனை பேர்களுக்கு கண்ணாவின் உழைப்பு தெரியும்? நீங்கள் இந்த ஒரு தளத்தில் நுழைந்தாலே போதும். தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு மட்டும் தான் உங்களுடையது. அந்த அளவிற்கு ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து அசாத்தியமான பணியை உருவாக்கி சாதித்து காட்டியுள்ளார். .
தமிழ்நாட்டில் இந்தியாவில் உங்கள் மாவட்டத்தில் எத்தனை பேர்கள் வலை தளத்தில் எழுதிக் கொண்டுருக்கிறார்கள் என்பது இவர் சொல்லும் கணக்கைப் பாருங்கள். மதிப்புக்கு உரியவர் எனக்கு தெரிவித்த கணக்கை விட கண் மண் தெரியாமல் தோழர்களின் தமிழ் ஆர்வம் மேலேறிக் கொண்டுருக்கிறது. ஏதோ ஒரு வழியில் கூகுள் இன்று தமிழால் மிதந்து கொண்டுருப்பதைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது. இதில் இவர் சேர்கக மறந்த திருப்பூர்.
இந்தியாவில் உள்ள அரசியல் வியாதிகளுக்கு இந்தியா என்பது விவசாய நாடு என்பதே ஏறக்குறைய மறந்து விட்டது. வலைதளத்திலும் விவசாயம் குறித்து எழுதுபவரும் மிகக் குறைவு. இந்த தளத்தைப் பாருங்கள். வீட்டுக்காவது உதவும்.
இவர் சீயான் விக்ரம் கந்தசாமி அல்ல. கோயமுத்தூர் கந்தசாமி. வயது 75. மற்றொரு சிறப்பு ஓய்வு பெற்ற ஆசிரியரும் விஞ்ஞானியும் கூட. இவர் பார்வையில் வலைதள உலகம் எப்படி இருக்கிறது தெரியுமா?

" தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப் பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன். 75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது ! "


நாற்பது வயதுக்கு மேல் நாய்ப்புத்தி என்பார்கள். அறுபது வயது என்றால் நம்முடைய உடம்பே நமக்கு எதிரியாய் தெரியும். ஆனால் இவரின் வலை தளத்தில் உள்ளே நுழைந்து மொத்த தலைப்புகளையும் பாருங்கள்.

நக்கல்,நையாண்டி, கலகல என்று எதற்கும் பஞ்சம் இல்லை. முடிந்த வரைக் கும் கிராமம் முதல், குடும்பம் வரைக்கும் அத்தனை தலைப்புகளிலும் சும்மா புகுந்து விளையாடியுள்ளார். அத்துடன் வயது என்பது ஒரு குறையே அல்ல என்பதையும் உணர்ந்து கொள்ளலாம். எத்தனை அறிவுரை சொன்ன போதும் அவரையும் பிரபல்யம் என்ற பலாப்பழம் ஆட்டிப்படைக்க ஆளைவிட்டால் போதும் என்று ஜகா வாங்கிவிட்டார்.

பிரபல்ய தல பாலாவுக்கு இதை சமர்பிக்கின்றேன்.

Wednesday, July 21, 2010

மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள் (வலைச்சரம் ஜோதிஜி 3ம் நாள்)

ஒவ்வொரு முறையும் தமிழ்மணத்தில் சில அறிவிப்புகள் வரும். கண்களை இடுக்கிக் கொண்டு அந்த சிறிய எழுத்துக்களை படிக்கும் போது ஆச்சரியமாய் இருக்கும். தெரியாத பல புதிய வார்த்தைகள். மற்ற அத்தனை திரட்டிகளிலும் விளம்பரங்கள் உண்டு. ஆனால் இன்று வரைக்கும் தமிழ்மணம் தளராத மனமாய் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் திரு. செல்வராஜ். ஆனால் செல்வராசு என்று தான் எழுதுகிறார்.
இவருடைய தளம் எனக்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தெரிய வந்தது. முடிந்தவரைக்கும் தமிழ் சொற்களை பயன்படுத்தி எழுதி வரும் எனக்கு இவருடைய இடுகையில் எழுதியுள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் இவர் பயன் படுத்தும் தமிழ் வார்த்தைகள் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

வேதியியல் துறையைச் சார்ந்தவர். தள வடிவமைப்பும் மிகச் சிறப்பு. கடைசியாக எழுதியுள்ள தலைப்பு மட்டுமே சற்று ஆதங்கமாய் படைத்துள்ளார்.

இவர் கிராமத்துவாசியாக வாழ்க்கையைத் தொடங்கி தொடர் உழைப்பினால் இன்றைய உச்சத்தை தொட்டுள்ளார். இவர் எழுதும் நடை என்பது சமகாலத்தில் எவரின் தளத்திலும் பார்க்காத ஒன்று. ஆர்ப்பாட்டம் இல்லாத அக்கறையான ஒவ்வொரு சிந்தனைகளும் ஏராளமான ஆச்சரியத்தை உருவாக்கும். அரசியல் முத்தமிழ் காவலர் அல்ல. மொழி வளர்க்கும் உண்மைத் தமிழன்.

தமிழ் படித்தால் சுய வாழ்க்கைக்கு சோறு போடுமா? இவருக்கு கற்ற தமிழே சோறும் போடுகிறது. மற்றவர்கள் உணர வேண்டிய அளவிற்கு சுய ஒழுக்கத் தையும் போதித்தும் உள்ளது. நான்கு தலைப்புகள் எழுதி விட்டு கூட்டமாய் வந்த ஈ மொய்க்கவில்லையே என்று கருதாமால் தெளிவான பாதையில் பயணித்துக் கொண்டுருப்பதற்கே முதல் வணக்கத்தை சொல்ல வேண்டும். சமகாலத்தில் ஆங்கிலத்தை நோக்கி படையெடுக்கும் அத்தனை மனிதர்களும் படிக்கப்பட வேண்டிய தளம் இது. கிராமத்தில் தொடங்கிய இவரின் பயணம் இன்றும் நம்மால் மறந்து போய்க் கொண்டுருக்கின்ற தமிழ் மொழியின் வேர்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியை அற்புதமாக செய்து கொண்டு இருக்கிறார். தள வடிமைப்பு, எளிமை, சுருக்கம், நோக்கம் என்று எல்லா விதங்களிலும் முதன்மையான முக்கிய மனிதராகத் தெரிகிறார். வலை உலகம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் வரையிலும் இவரால் படைக்கப்பட்டுக் கொண்டுருக்கும் தமிழ் இலக்கியத்திற்கு ஒவ்வொரு தமிழனும் நன்றிக் கடன் பட்டவர்கள்.

தனது பெயரையே கல்பனா சேக்கிழார் என்று வைத்துள்ளார். நூலகத்தில் யாராலும் தொடப் படாமல் தூசி அடைந்த பொக்கிஷம் போல இவரின் இடுகை இருக்கிறது. முழுக்க ஆய்வுக் கட்டுரையாகவே படைத்துள்ளார். கல்லூரியில் தமிழ் மொழி பயிலும் நண்பர்களுக்கும், குறிப்பிட்ட விசயங்களைத் தேடி அலைபவர்களுக்கும் இவரின் உழைப்பு நிச்சயம் பலன் அளிக்கும்.

இவர் இடுகை தொழில் நுட்பத்தையும் அவஸ்யம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இடுகைக்கு ஆடம்பர அலங்காரம் தேவையில்லை, ஆனால் அதுவும் முக்கியமானதே. வெகுஜன பத்திரிக்கைகளின் ஆதரவையும் பெற்ற உங்கள் போன்றவர்களின் பணி தேங்கி விடக்கூடாது. தமிழர்களால் போற்றப் பட வேண்டிய தமிழ்மகள்.
இவர் சிலப்பதிகாரத்தை மட்டும் தான் படைக்கவில்லை. ஆனால் அதற்குச் சமமான உழைப்பு அத்தனையும் இவர் இடுகையில் உண்டு. சுவராஸ்யம், எளிமை, தமிழ் குறித்த மற்ற தளங்கள், உலக அறிவு, என்று தொடங்கி இவரும் ஒரு பிரபல்ய வட்டத்தில் இருப்பதால் இவரின் உழைப்பு அத்தனையும் சரியான பாதையில் பயணித்துக் கொண்டுருக்கிறது. தீராநாதி, காலநதி போல வற்றாத வளம் கொழிக்கும் இவர் தமிழ்நதி.
சுசீலா என்ற பெயரே தமிழர்களுக்கு நன்கு அறிமுகமானதே. குரலால் நம்மை மயக்கியவரைப் போலவே இவரும் தன்னுடைய இலக்கியம் முதல் அக்கறையான நிகழ்வுகளைப் படைத்து நம்மை வாசிக்க வைப்பதே தனிச்சிறப்பு. இவர் வெகுஜன எழுத்தாளரும் கூட. பக்கவாட்டில் தெரியும் தலைப்புகளை தேர்ந்தெடுக்க உருவாக்கிய அமைப்பும் மிகச் சிறப்பு.
சமீபத்தில் நடந்த தமிழ் மொழிக்காக நடத்தப்பட்ட மாநாடு குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சிந்தனைகள் தோன்றியிருக்கும். உபி என்று தெரியாமல் அது குறித்து கேட்கப் போய் ஆளப்பிறந்தவர் கடைசியில் ஆத்திரப்பட்டே விட்டார்.

ஆனால் தமிழர்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ள கலைஞரைப் போலவே மாநாட்டில் கலந்து கொண்ட பத்ரி அவர்கள் எழுதிய இந்த தலைப்பும் அதன் பின்னோட்டமும் பார்த்து இரண்டு நாட்கள் சிரித்துக் கொண்டே இருந்தேன். தமிழ்மணம் காசி கூட குமுறியிருந்தார். அவர் சொல்வதில் நியாயம் இருந் தாலும் கூட இதை நான் இங்கு சராசரி வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு இருப்பதால் ஆச்சரியமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இந்த தலைப்பிற்கு வந்த பின்னோட்டங்கள் முழுமையும் நீங்கள் படித்தால் பொதுவான மனித குணாதியங்களையும் உணரமுடியும். இந்த வலைதளம் ஒரு கலைக் களஞ்சியம். உணர்பவர்களுக்கு உத்தமம்.

சங்ககால இலக்கிய காதல் நமக்கு இப்போது தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் தாமரையின் காதல் வரிகள் உங்களை மயக்காமல் இருக்குமா?

உங்கள் வருகைக்கு நன்றி.

Tuesday, July 20, 2010

நான்கு திசைகள் (வலைச்சரம் ஜோதிஜி 2 வது நாள்)

ஆயிரம் தலைப்புகளை கடந்து வந்து ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இன்றும் எழுதும் ஒவ்வொரு பதிவும் இளமையாய் இருக்கிறது. கோவில்,குளம், கடைத்தெரு என்று தொடங்கி இவர் செல்லும் ஒவ்வொரு இடத்தையும் புகைப்படமாய் பார்க்கும் போது நாம் அந்த இடத்திற்கே சென்ற அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் என்ற இணைப்பு இல்லாத இவரின் இடுகை யில் தொடரும் உறவுக் கூட்டம் கணக்கில் அடங்காதது. பின்னூட்டம் என்பது கடித வழி தொடர்பு போலவே வருபவரை வரவேற்பது முதல் அவர்களிடம் உரையாடுவது வரைக்கும் ஒரு குடும்ப சந்தோஷத்தை உணர முடிகிறது. அக்கா, மேடம், டீச்சர் போன்ற பல ஆகுபெயர்கள் இவருக்கு உண்டு.

புதிதாக எழுத வருபவர்களையும் ஊக்குவித்தல் இவரின் முக்கிய சிறப்பு. வாசிப்பவர்களுக்கு தொல்லை தராத நடையில் எழுதுபவர். தொடர்ச்சியாக பல புத்தகங்களும் எழுதி வெளியிட்டு பல வெற்றிக் கோடுகளைத் தொட்டவர். இந்த நிமிடம் எந்த கோவில், எந்த ஊரில் இருந்து கொண்டு என்ன மாதிரியான படங்கள் எடுத்துக் கொண்டுருப்பார் என்பது அவருக்கே தெரியுமா? என்பது புரியாத மர்மம்.
கடவுள் என்பது இல்லவே இல்லை என்பவர்கள் கூட தைரியமாக இவரின் இடுகையில் உள்ளே நுழையலாம். பல ஊர்கள், கோவில்கள், மக்களின் கலாச் சாரம் தொடங்கி சாலையில் பார்த்த ரசித்த சின்ன சம்பவங்களைக் கூட படங் களாக மாறி இவரின் வலைதளத்தில் ரசிக்க முடியும். இவரின் இடுகையில் நாம் பார்க்கும் படங்கள் நமக்கு கவிதையாய் மாற வாய்ப்புண்டு. நீண்ட காலம் நியூசிலாந்து நாட்டில் வசித்தவர். தொடக்க கால இவரின் எழுத்தில் ஆங்கிலம் படுத்திய பாடும், எழுதும் தமிழில் அதை தவிர்க்க எடுத்த முயற்சிகளும், வாங்கிய குட்டுகளும் இருந்தாலும் அத்தனையும் மீறி இன்று வரைக்கும் கீரிடம் சூட்டாத மகாராணியாக வலம் வரும் துளசிதளம்.


ஜாதகமென்பது பொய். முட்டாள்களின் முயலாமைக்கு மிகப் பெரிய உதாரணம். வளர்ந்த விஞ்ஞானத்தை பார்த்து திருந்துங்கப்பா என்கிறீர்களா? வலைதளத்தில் அதிக நண்பர்கள் தொடர்வது இவரைத்தான். இதை நீ பின் பற்றித் தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுவதும் இல்லை. இந்த கலையை வைத்துக்கொண்டு பணம் சம்பாரிக்க விரும்புவதும் இல்லை. நான் எழுதுவதைப் பார்த்து உன் ஜாதகத்தை கொண்டு வந்து என்னிடம் நிற்காதே. அது என் தொழில் அல்ல என்கிறார். நான் உணர்ந்தது இது. உன்னால் உணர முடிந்தால் சந்தோஷம். ஒரே வார்த்தை. எந்த வம்பு தும்புக்குள்ளும் சிக்காமல் பரபரப்பு படபடப்பு இல்லாமல் இன்றும் இளமையும் தீராத தாகமாய் எழுதுவது மிகுந்த ஆச்சரியம்.
வலைதளத்தில் எழுதுபவர்கள் எவ்வாறு எழுத வேண்டும்? வைக்கும் தலைப்பு க்கு என்ன முக்கியத்துவம்? போன்ற பல விஷயங்களை ஒவ்வொன்றாக சுட்டிக்காட்டிய விதம் பிரமிப்பாய் இருக்கிறது. விரும்புபவர்களும் தொடர்பவர் களும் தினந்தோறும் முண்டியடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஜாதகம் மட்டுமல்ல மண் சார்ந்த பழக்கவழக்கங்கள் என்று தொடங்கி அத்தனை துறை களையும் அற்புதமாக கையாள்கிறார். இவர் வெளியிட்டுயுள்ள பல புத்தகங்கள் இவரின் ஆளுமைக்குச் சான்று. வகுப்பறை வாத்தியார் மட்டுமல்ல. வலை உலக வாத்தியாரும் கூட.


சாகும் வரையில் உங்களிடம் ஏதோ ஒரு பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அந்த பயமே பலவற்றையும் நம்பித்தான் ஆக வேண்டும் என்ற இக் கட்டான சூழ்நிலைக்குச் கொண்டு செல்லும். நான் பெரியாரின் சீடன் என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்யும் வியாதியஸ்தர்களையும், திரைப்பட நடிக குடும்பத்தையும் நன்றாக உற்றுக் கவனித்துப் பாருங்கள். அவர்களின் குடும்ப குத்துவிளக்குகள் மண்சோறு சாப்பிடாத குறையாக கோவில் கோவிலாக அலைந்து கொண்டு இருப்பார்கள். தங்கள் குடும்ப பெண்களையே திருத்த முடியாதவர்கள் தான் சமூக மூட நம்பிக்கைச் சீர்கேடுகளை திருத்த பாடுபட்டுக் கொண்டுருப்பவர்கள். ஆனால் இவர்?

ஆத்திகம், நாத்திகம் என்று தொடங்கி இவர் தொடாத துறைகளே இல்லை. ஆயிரம் தலைப்புகள் பார்த்தாலும் சிந்தாமல் சிதறாமல் இன்றும் எழுதிக் கொண்டேயிருக்கிறார். நானும் வலைதளத்தில் எழுதுகின்றேன் என்ற பேச்சே இல்லை. கருத்துக்களை சொல்லும் விதம் படிப்பவர்களுக்கு ஏராளமான சிந்தனைகளை உருவாக்கும். இவரும் நீ இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும் இல்லை. கடவுள் மறுப்பாளர் என்பதால் காண்பவர்களை காய்ச்சி எடுப்பதும் இல்லை.

ஈழம் தொடர்பாக எழுதும் போது ரத்த அடி வாங்காமல் வந்தவர்கள் மிகக் குறைவு. இவரின் ஈழம் சார்ந்த தலைப்புகளில் உள்ளே நுழைந்தவர்கள் ரணகளப் படுத்தியிருந்தாலும் அத்தனை பந்துகளையும் அநாயசமாக அடித்து விளையாடி இன்றும் களைத்துப் போகாமல் களத்தில் வெற்றிக் கொடி நாட்டிக் கொண்டுருப்பவர். தொடர்ச்சியாக புத்தகங்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள், குறிப்பிட்ட தேதியில் இந்த விசயம் குறித்து என்ன சொல்லி இருக்கிறார்கள் என்று தேடி அலைபவர்களுக்கு இவர் ஒரு அமுத சுரபி. இவரின் தனிப்பட்ட கொள்கைகள் என்னவோ?

ஆனால் எடுத்த கொள்கையில் எழுதும் எழுத்துக் களில் சமரசம் செய்து கொள்ளாத சன்மார்க்க நெறியாளர். ளளிப் பருகினாலும் தீராத தாகத்தை தந்துகொண்டு காலம் தந்த மனிதம்.

" ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்றெல்லாம் பார்த்து அவரைப் பற்றி நாம் முடிவு செய்வதை விட அவர் எப்படி வாழ்கிறார் என்று கவனித்து முடிவு செய்வது தான் ஏமாறாமல் தடுக்க உதவும் "

கடவுள் என்பவர் உன் உள்ளே இருக்கிறார்? நீ ஏனப்பா வெளியே போய்த் தேடி கண்டவர்களிடம் சிக்கிக் கொள்கிறாய் என்பதை உள் மன ஆற்றல் மூலம் வெளிப்படுத்துகிறார் கணேசன். ஏறக்குறைய 300 தலைப்புகளுக்கு அருகே வந்து கொண்டு இருக்கிறார்.

" சாமி,,பூதம்,மாடசாமி,முனுசாமி,எல்லைச்சாமி எதுவும் வேண்டாம். நீ நம்பும் எந்த உணர்வும் உனக்குள்ளே தான் இருக்குது. அதப்பாருடா மொதல்ல " என்று இவரின் எழுத்துக்கள் நம் கழுத்தை பிடித்து மட்டும் தள்ளவில்லை. சமயத்தில் உந்து சக்தியாய் நம் முன் வாழ்ந்து கொண்டுருக்கும் கழுகு மூலம் உதாரணம் காட்டுகிறார். ஆற்றல் என்பது எங்கிருந்து தொடங்குகிறது, வாழ்வில் நல்ல பாதையை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் பெற வேண்டிய அனுபவம், சிரத்தைகள், எண்ணங்கள் இவரின் எழுத்தைப் படிக்கும் போது உருவாகக்கூடும். இவரின் எழுத்துக்கள் சிலருக்கு ஆச்சரியம் பலருக்கு அதிசயம். கொஞ்ச பேருக்கு ஆ..........வ். காரணம்