Wednesday, July 27, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-3



கேட்டலும் கவனித்தலும்
சீனப் பேரரசன் ட்சூ மஞ்சத்தில் சயனித்திருந்தான். மெல்ல அவன் கைகளை வருடியபடி, அவன் ராணி பேசத் துவங்கினாள்.

“அரசே! நம் மகனுக்கு இந்த வசந்தத்தின் துவக்கத்தில் பதினேழாம் பிராயம் முடிந்து பதினெட்டு தொடங்கிவிடும். வில் வித்தையிலோ, வாள் வீச்சிலோ அவன் நிபுணன் ஆகி வருகிறான் என்றும் நேற்று நீங்கள் தானே சொன்னீர்கள்?

“ஆம் ராணி. அதெற்கென்ன வந்தது?”

"நம் பிரதம தளபதியின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பதவியை இன்னமும் நாம் நிரப்பவில்லையே"...

"தகுந்த வீரனுக்காய் பார்த்து வருகிறேன். என் தேசத்தில் வீரர்களுக்கா பஞ்சம்?"

"உண்மை அரசே. அந்தப் பதவியில் பணிபுரிய டியூ மிக்க ஆவலாய் இருக்கிறான்

"என்ன? இளவரசனா?” அரசன் கண்கள் யோசனையில் இடுங்கின.

"என்ன யோசிக்கிறீர்கள்? போன படையெடுப்பில் அவன் தன் வீரத்தை பறைசாற்ற வில்லையா?"

"சேனாதிபதியின் பணியில் வீரம் மட்டும் போதாது கண்ணே!. அரசனின் பொறுப்புகளை விடக் கடினமானவை அந்தப் பதவியின் தகுதிகள்."

அவன் விருப்பப்படி பதவிகொடுப்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாதா?"

"நான் தீர்மானிக்க விரும்பவில்லை ராணி. நான் பாசம் மிகுந்த தகப்பன் மட்டுமன்று. தேசம் காக்கும் மன்னன் கூட.

"நீங்கள் இல்லையென்றால் டியூவுக்கு பதவி கொடுப்பதை யார் தீர்மானிப்பது?"

" என் குரு பான்க்கு.. மிங்கிலிக் காட்டில் வசிக்கும் என் குரு பான்க்கு"

"பின்னர் அதையாவது உடனே ஏற்பாடு செய்யுங்கள். என் மகன் ஆவல் மேலிட காத்திருக்கிறான். என் கண்மணியை ஏமாற்றாமல் படைத் தலைமையை அவனுக்கு அளியுங்கள்"

"பார்ப்போம்

++++

சிரம் நிலம் தொட குருவை பேரரசன் ட்சு வணங்கினான்.
"என்னைக் கடைத்தேற்றுங்கள் தேவனே!

"வா சக்ரவர்த்தி திருமகனே.. இந்தக் கிழவன் நினைவு கூட உனக்கு இருக்கிறதா? இந்த தகதகக்கும் சூரியன் யார்?"

"இந்தக் கிரீடத்தின் பாரம் பெரும் பாரமாகிவிட்டது குருவே. என்ன செய்வேன்.. இவன் என் ஒரே மகன் டியூ."

"நன்று நன்று. நான் செய்ய வேண்டியது ஏதும் உண்டா?"

"ஆம் பிரபு. இளவரசன் சேனாதிபதியாக ஆவலாயிருக்கிறான்.

"பின் என்ன? பதவியை தர உனக்கு என்ன தடை?”

"அதல்ல குருவே! இவனுக்கு அந்த பதவிக்கான தகுதி இருக்கிறதா என நீங்கள் தான் சோதித்து சொல்ல வேண்டும்

"நீதி மாறாத தன் சீடனை பெருமிதமாகப் பார்த்தார் குரு பான்க்கு.

"நல்லது. இவனை இங்கே விட்டுச் செல். சோதித்துச் சொல்கிறேன். நீ போய்  வா. இவன் நாடு திரும்ப நாளாகலாம்."

"தங்கள் சித்தம்.". அரசனின் ரதம் உருண்டு மறைந்தது.

அடுத்த நாள் காலை இளவரசனை அழைத்த குரு சொன்னார்,
இளைஞனே! நீ இப்போதே இந்தக் காட்டின் உட்பகுதிக்கு தனியாகச் செல். உன் உணவையும் நீயே தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். காட்டில் ஒலிக்கும் அத்தனை சப்தங்களையும் கவனமாய்க் கேட்டுவந்து எனக்கு எதையும் விடாமல் சொல்ல வேண்டும்"
.
"அப்படியே பிரபு!"  இளவரசன் காட்டுக்குள் சென்றான்.
 நாட்கள் சென்றன. பலவித சப்தங்களையும் கேட்டான். 
பின் ஒருநாள் குருவின் இருப்பிடம் திரும்பினான்.

"வா! இராஜகுமாரா! என்னென்ன சப்தம் கேட்டாய்?"

இளவரசன் விவரிக்க ஆரம்பித்தான்.

"சிங்கத்தின் கர்ச்சனை, புலிகளின் உறுமல்,யானைகளின் பிளிறல், நரிகளின் ஊளை, மரநாய்களின் சிறுகுறைப்பு, மான்களின் கனைப்பு, மயில்களின் அகவல், கிளிகளின் கீச்சிடுதல், குயில்களின் கூவல், காக்கைகளின் கரைதல்,"

"அப்புறம் ?"

"ஆந்தைகளின் அலறல்... பாம்புகளின் சீறல்"....

"அப்புறம்?"

"சி.. சில்வண்டுகளின் ரீங்காரம்."

"அவ்வளவு தானா?"

"காட்டினூடே வீசும் காற்றின் ஹூங்காரம். ஓடைகளின் சலசலப்பு . 
உருளும் சருகுகளின் மொடமொடப்பு."

"இன்னும்..... இன்னும்??"
...
"வேறொரு சப்தமும் கேட்டதாய்த் தெரியவில்லை குருவே
இளவரசனின் குரலில் சின்ன சலிப்பு ஒலித்ததோ ?

"சரி குழந்தாய் நாளை மீண்டும் காட்டின் உள்ளே செல். கேட்காத சப்தங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆழ்ந்து கேட்டு வா.  கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்"

தளர்ந்த நடையுடன் சென்ற இளவரசனைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
காட்டினுள் சென்ற இளவரசனுக்கு மீண்டும் மீண்டும் பழைய ஒலிகளே காதில் பாய்ந்தன.

"என்ன இது? குரலிழந்து போய் விட்டீர்களா சப்த தேவதைகளே?..
கேள்.. தீர்க்கமாய்க் கேள். ஆழ்ந்து ஆழ்ந்து உடம்பே காதாக, உற்றுக் கேள்.
கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்...

ஆம்.. கேட்கும்... கேட்பேன்... கேட்பேன்...

கேட்டது.

இதுவரை அறிந்திராத ஞானம் நிரம்பி, தளும்பி வழிந்தது.

அமைதியாய் ஆசிரமத்தில் நுழைந்த இளவரசனைக் கண்டார் குரு 
அவன் நடையின் அமைதி, அவன் கண்களின் புதுஒளி.. 
குருவுக்கு தளும்புவது யாதெனப் புலப்பட்டது.

"இன்னும் என்ன கேட்டாய்?"

"கேட்காதனவற்றைக் கேட்டேன் குருவே!"
.
"ஆதவனின் கிரணங்கள் நிலத்தைச் 'விர்ரும் விர்ரும்' என சூடேற்றும் ஒலியதிர்வைத் துல்லியமாய்க் கேட்டேன்.
புல்லின் நுனி பனித்துளியை 'களுக்' என விழுங்கிய மிடற்றைக் கேட்டேன்.
காலையில் காட்டுமலர் விகசித்து மலர்ந்த போது  அதன் இதழ்கள் உரசிக் கொண்ட ஒலியை கேட்டேன்"

சரும மடலில் எழுத்தாணி கொண்டு குரு எழுத ஆரம்பித்தார்.
 நாட்டின் சேனாதிபதியை தக்க கவுரவத்துடன் வரவேற்குமாறு.....  

  
.இனி பதிவற்குல தாரகைகள் ...

இனி உலகம் நம் கையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் வண்ணமயமான வலைப்பதிவு. முகப்பிலேயே அழகான பாதங்களை கொலுசுடன் ஸிலைட்ஷோ காட்டுகிறார். எந்திரப்பறவையிலிருந்து பப்பாளியின் பயன்கள் வரை நல்ல பதிவுகள். இன்னமும் நிறைய எழுதுங்கள் குணசேகரன் !

கே.பி.ஜனா  சிறிய பதிவுகளாய் சில அழகான கவிதைகளையும் ஒரு பக்க கதைகளும் பதிவிட்டிருக்கிறார்.  .

முத்துச் சிதறல்  ஷார்ஜாவில்,வசிக்கும் மனோ ஸ்வாமினாதன் அவர்களின் வலைப்பூ. சினிமா விமரிசனம், சமையல் குறிப்புகள், கைவினை, சிறுகதை,மருத்துவக் குறிப்பு எனக் கலக்கும் சகலகலாவல்லி. எளிமையான நடை வசீகரிக்கின்றது.

கீதமஞ்சரி : ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கீதாவின் வலைப்பூ. 32 பதிவுகளே வெளியிட்டிருக்கும் இந்த புதிய பதிவருக்கு வானவில்லும் வலைச்சரமும்  வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றன. இவரின் சிறுகதைகள் ஆற்றொழுக்காய்
செல்கின்றன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா  மதுரையைச் சேர்ந்த சகோதரர் ரமணியின் ரம்மியமான வலைப்பூ . கவிதைகளில் இயல்பான ஆர்வமும் காட்டும் இவரின் எழுத்தில் கொஞ்சம் உபதேசம்‌ அரைஸ்பூன் கூட. சில ஆச்சரியமான வரிகள்  அசத்துகின்றன. இவரின் பின்னூட்டத்தை எதிர்பார்த்தபடி ஒரு கோஷ்டியே வலைபூவில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது(நான் உட்பட). உங்களை உறிமுகம் செய்வதில் வானவில் பெருமைக் கொள்கிறது.

காச்‌யபன் நாக்பூரில் வசிக்கும் இந்த தோழர் செம்மலர், மற்றும் தீக்கதிர் பத்திரிகைகளில் பலகாலம் பணிபுரிந்தவர். இவரின் பதிவுகள் தகவல் களஞ்சியங்கள். பல நிகழ்வுகளை நுணுக்கமான விவரங்களுடன் எழுதும் இவரின் நினைவாற்றல் ஆச்சரியம் அளிப்பது. தயவுதாட்சண்ணியம் இல்லாமல் தன் கருத்தை சொல்லும் இவர் பதிவுகளை ஒரு முறை கண்டிப்பாய் பாருங்கள்.

ஹரணி பக்கங்கள்  தஞ்சை கரந்தையைச் சேர்ந்த ஹரணி அவர்களின் வலைப்பூ. அழகான நடையில் பல நோக்குகளிலும் இவரின் எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன.சாணக்ய நீதி ஸமுச்சயம் முதல் ஓலைச்சுவடியின் வகைகள் வரை பலவும் இவர் கைவண்ணத்தில். ஹரணி சார் ! நிறைய எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம். 

ஆஹா பக்கங்கள் . எம். அப்துல் காதர் அவர்களின் வலைப்பூ. நடைமுறை சம்பவங்களை எளிமையாய் நகைச்சுவையோடு சொல்லும் இவரின் எழுத்து.  எனக்கு பிடித்த பதிவர்களில் காதர் பாயும் ஒருவர்.

Picture: With thanks to GOOGLE IMAGES 

30 comments:

  1. மௌனச்சத்தம் அழகு. தெரிந்த சிலவும் தெரியாத சிலவும்....தெரிந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  2. மோகன்ஜி,

    இன்று சில (எனக்கு)புதிய பதிவர்களை கொடுத்த புண்ணியம் உங்களுக்கு.

    நன்றியும், வாழ்த்துக்களும்!

    ReplyDelete
  3. தெரிஞ்ச+தெரியாத அறிமுகங்களுக்கு நன்றி..

    ReplyDelete
  4. என்னையும் ஒரு பொருட்டாக மதித்து
    அறிமுகம் செய்தமைக்கு நன்றி
    உப்பைக் கொஞ்சம் குறைக்க முயல்கிறேன்
    மோதிரக் கை குட்டு கொஞ்சம்
    சுகமாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  5. சப்த கதை நல்ல சப்தமாக இருந்தது...

    அறிமுகங்களுக்கு நன்றி....

    ReplyDelete
  6. "கேட்டலும் கவனித்தலும்" நன்று. அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  7. ஆழமான பயனுள்ள கதைப் பகிர்வும், அழ்கான அறிமுகங்களும் அருமை. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. உண்மை ஸ்ரீராம் ! சொன்னதினும் சொல்லாதது, கேட்டதினும் கேட்காதது,பார்த்ததினும் பார்க்காதது எல்லாமே நமக்கு தேவை தானே.

    பேச்சு வெள்ளி
    மௌனம் தங்கம் என்பார்கள்.
    கவனித்தல் பிளாட்டினம் எனக் கொள்க.

    எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுக்கப் படுகிறது.
    யாரும் கவனிக்க சொல்லிக் கொடுப்பதில்லை.

    நல்ல கவனிப்புத் திறனை வளர்த்துக் கொண்டால் நமக்கு ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும்.
    உறவுகள் பலப்படும்

    ReplyDelete
  9. மிக்க நன்றி சத்ரியன்

    ReplyDelete
  10. நன்றி அமைதிச் சாரல்

    ReplyDelete
  11. அன்பின் ரமணி சார்! உங்களை நான் ஏதும் சொல்லாமல் யார் சொல்லுவதாம்? நல்ல பதிவுகள் மேலும் கொடுத்து எங்களை ஆனந்தப் படுத்துங்கள் சகோதரரே!

    ReplyDelete
  12. மிக்க நன்றி பத்மநாபன்!
    கூர்ந்து கவனிக்கும் போது புரிதல் என்பது முழுமையாய் நமக்குள் ஏற்படுகிறது.

    அடுத்த முறை தங்கமணி ஏதும் பேசும்போது 'காது' கொடுத்து கேளுங்கள்!

    ReplyDelete
  13. மிக்க நன்றி மாதேவி!

    ReplyDelete
  14. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்!

    உங்கள் அறிமுகங்களுக்குப் பிறகு தமிழ் வலையுலகில் யாரும் மிச்சம் இருப்பதாய்த் தோன்றவில்லை!
    பேசாமல் தெலுங்கு வலைப்பூக்களை அறிமுகம் செய்யலாம் என யோசிக்கிறேன் !

    ReplyDelete
  15. மௌனத்தின் குரல் எத்தனை அழகு. அழகிய அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  16. அப்பாதுரை சொன்னது…

    நல்ல கதை. நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
  17. நன்றி அப்பாதுரை சார்!

    ReplyDelete
  18. ஸ்ரீராம் சொன்னது…

    சத்தமான மௌனம். இந்த நிலை எல்லோருக்கும் கிடைக்குமா? விகடனில் சமீபமாக இது சம்பந்தமாக வாசித்த தேவதச்சன் கவிதை மிக அழகாக இருந்தது நான் எல்லாம் சிப்பாயாக இருக்கக் கூட முடியாது!!

    அது இருக்கட்டும்..ஆழ்ந்த கவனிப்பு, அதனால் புத்திகூர்மை என்றெல்லாம் வைத்துக் கொண்டால் கூட இளவரசன் சேனாபதியாக இந்த ஒரு டெஸ்ட் போதும்னு நினைக்கறாரா குரு?

    ReplyDelete
  19. அன்பு ஸ்ரீராம் !
    கூர்ந்து கவனித்தால் என்பதை ஒரு திறனாய் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    மனைவி பேசும் போதோ குழந்தைகள் ஏதும் சொல்லும் போதோ குருட்டு யோசனைகளில் இருந்து மீண்டு கவனிப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?

    குறிப்பாய் தங்கமணி பேசும்போது நம் எதிர்வினை என்ன? விவசாயிகளாய் மாறி,( 'AGREE'CULTUREங்க!) ஊங்கொட்டிக் கொண்டு மட்டும்தானே இருக்கிறோம்? என்ன சொல்கிறாள் என்று ஆழ்ந்து கவனிப்பதுண்டா?
    கவனிங்க சாமி!

    கதையின் ஓட்டத்திலேயே இளவரசனின் வீர தீரங்களை சொல்லியிருக்கிறேன். வீரமும் தீரமும் கூர்ந்துநோக்கல் திறன் சேரும் போது
    பூரணமான தகுதியாகிறது என்பது இந்த மோகனகுருவின் துணிபு!

    ReplyDelete
  20. மனோ ஸ்வாமிநாதன் சொன்னது…

    வலைச்சரத்தில் என்னைப்பற்றியும் என் வலைப்பூவைப்பற்றியும் அழகாகக் குறிப்பிட்டதற்கு என் இதயங்கனிந்த நன்றி!!

    ReplyDelete
  21. மனோ மேடம்! உங்களுக்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  22. நன்றி வெங்கட்!

    ReplyDelete
  23. ஏற்கனவே அறிமுகமான, அறிமுகமில்லாம பதிவர்களின் பட்டியல்..
    பகிர்வுக்கு நன்றி.

    தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  24. தன் பையனா இருந்தாலும் கேட்ட உடனே தளபதி, சேனாதிபதின்னு பதவி கொடுக்காம இருந்த அந்த ராஜா பெரிய ஆள் சார்! :-)

    ReplyDelete
  25. நல்ல கதை.
    அறிமுகங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  26. அருமையான கதைப் பகிர்வோடுகூடிய பதிவர்கள் அறிமுகம்.
    மிக்க நன்று வாழ்த்துக்கள் பதிவர்களுக்கும் உங்களுக்கும்...........

    ReplyDelete
  27. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இந்திரா!

    ReplyDelete
  28. இந்த அரசன் நாம் சிபிச் சக்கரவர்த்தி போன்ற அம்சமான அரசன். இம்ஸையான அரசன் அல்ல ஆர்.வீ.எஸ்!

    ReplyDelete
  29. மிக்க நன்றி குமார்

    ReplyDelete
  30. நன்றி அம்பாளடியாள்!

    ReplyDelete