மெட்ராஸ் தமிழன்
கண்ணனுக்காக
வேல் கண்ணன்
சித்தர்கள் இராச்சியம்
டங்கு டிங்கு டு
மனதோடு மட்டும்
    மெட்ராசில் இருக்கும் கிக் சென்னையில் இல்லை.
நான் காதலித்த மண்ணை சீநாய், சேநாய், ஷெனாய் என்று என் உள்ளூர் நண்பர்கள் பலவாறாகச் சிதைப்பது பழகிவிட்டது என்றாலும், மொழிவெறியால் மரணித்த மெட்ராஸ் என் நெஞ்சில் என்றும் நிலைக்கும். மொழிவெறியர் இன்னும் 'காபி' 'டீ' குடிப்பதேன்?
அதற்காகவே 'மெட்ராஸ் தமிழன்' பிடித்திருக்கிறது. தவிர, பம்பாய் பற்றி மெட்ராஸ் தமிழன் எழுதியிருக்கும் கட்டுரைகள் மிகச் சுவையானவை.
கல்லூரி முடித்த green bean வாலிபன் ஊர் விட்டு முதன்முறையாக பம்பாய் போகிறான். வேலையில் சேர்வதற்காக. 'பம்பாயில் இங்கே தங்கலாம்' என்று ரயில் பயணிகளிடம் தெரிந்துகொண்ட ஒரு இடத்தை அடைகிறான்.
    "நான் சூட்கேஸுடன் மாடிப்படியில் ஏறி அங்கு கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் சென்று "நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு இங்கு வேலை கிடைத்திருக்கிறது. தங்குவதற்கு இடம் வேண்டும்" என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "இடமெல்லாம் இல்லை" என்றாரே பார்க்கலாம். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அடக்கடவுளே! இடம் இல்லையாமே! இப்போது என்ன செய்வது? எங்கே தங்குவது? இவ்வளவு பெரிய ஊரில் யாரையுமே தெரியாதே! நாளைக்கு வேலையில் வேறு சேர வேண்டுமே! என்ன செய்வது?"
இப்படித் தொடங்கும் இவருடைய சலாம் பம்பாய் தொடர் கட்டுரை is a must read.
சில இடுகைகளில் நகைச்சுவை, சில அதிர்ச்சி, சில நெகிழ்ச்சி என்று இவர் எழுதியிருப்பதில் ஏறக்குறையப் பாதிக்கு மேல் சென்னை நினைவுகள். கருத்தும் நடையும் சுவாரசியத்தை அளவோடு பொட்டலம் கட்டித் தருகின்றன. சென்னையைக் காதலிக்கும் கீயில் தொடங்கி ம்ல் முடியும் பெயர் கொண்டவர், இவருடையக் கட்டுரைகளைப் படித்ததும் சென்னையை வெறுக்கத் தொடங்கிவிடுவார் என்பதே என் கலக்கம்.
என்னைக் கவர்ந்த மெட்ராஸ் தமிழன் இடுகைகளில் சில:
"1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும்." - இது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்ற பத்தியத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் நெஞ்சைக் கிள்ளும் கட்டுரையிலிருந்து.
"ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார்." வீடு - இந்தக் கட்டுரையை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
பாகிஸ்தான் போரையொட்டிய இன்னொரு கட்டுரை ஐ.என்.எஸ். விக்ராந்த் பற்றியது. இந்த வருடத்துக் கட்டுரைகளில் தேடிப்பிடித்துப் படியுங்களேன்? விக்ராந்த்தை காப்பாற்றிய இன்னொரு சென்னைத் தமிழரின் சாகசங்களைப் புரிந்து கொண்டு சிலிர்க்கலாம்.
    "எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்".
கணவர்கள் இப்படி எண்ணுகிறார்களா? மனதோடு மட்டும் பதிவில் தாம்பத்தியம் பற்றிய இடுகைகளை விரும்பிப் படித்து வருகிறேன். ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களை அனாயாசமாகத் தொடுகிறார் பதிவர் கௌசல்யா ராஜ். அந்தரங்கம், கள்ளக்காதல், மனைவி என்று பகுத்து வழங்கியிருக்கும் அத்தனை பதிவுகளையும் படிக்க வேண்டும். படித்தால் 'கணவன்' என்ற பகுப்பை ஏன் தவறவிட்டார் என்ற கேள்வி உங்களுக்கும் எழலாம் :).
கள்ளக்காதல் என்ற பெயரே சரியில்லை என்று தோன்றுகிறது. கழிசடைத்தனத்துக்குக் 'காதல்' என்ற பெயர் சூட்டுவானேன்? உண்மையிலேயே மனங்கனிந்த காதல் என்றால், அதைக் குற்றமாக்குவானேன்? காதல் ஏற்பட்டால் ஏற்பட்டது தான். கள்ளத்தனம் எங்கே வந்தது? ஒரு இடத்தில் இல்லாத அன்பும் நேசமும் இன்னொரு இடத்தில் ஏற்படுகிறது என்ற யதார்த்த நோக்கு அவசியமென்று நினைக்கிறேன். திருட்டு கொள்ளை எனும் குற்றப்போர்வையில் அதை மூடுவானேன்? பிள்ளைகள், பெற்றோர், சமூகம், குடும்ப மானம், கலாசாரம், பண்பாடு எனும் peripheral and often meaningless காரணங்களைக் காட்டி குற்றமாக்காமல், காதல் உண்டானால் முடிவெடுக்கத் தேவையான முதிர்ந்த அறிவு பற்றி மேலும் எழுதுவார் என்று நினைக்கிறேன். everyone needs a second chance, for we live only once.
குழந்தைகள் வளர்ப்பு பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். பாலியல் ஈர்ப்பு பற்றி இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளை நடுநிலைப் பள்ளியில் பாடமாக வைக்கலாம். இன்றைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தக் கட்டுரைகளை (பதிவாசிரியர் அனுமதியுடன்) தளமிறக்கி வீட்டிலோ பள்ளியிலோ சேர்ந்து படித்துக் கலந்துரையாடலாம். பெண்ணின் மார்பை வெறிக்கும் ஆணின் விடலைத்தனம் குறைய வாய்ப்புண்டு. காரணமில்லாமல் ஆணைக் கண்டு அஞ்சும் பெண்ணின் மனப்பாங்கு மறையவும் வாய்ப்புண்டு.
மேற்சொன்னக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் 'மனதோடு மட்டும்' பதிவின் ஏறத்தாழ ஐம்பது கட்டுரைகளை அவசியம் படிக்கவேண்டும். புத்தகமாக வரவேண்டிய கட்டுரைகள்.
இத்தகையக் கருத்துக்களை "இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு" ஏற்றவாறு இடக்கரடக்கலோ இனிப்புப் பூச்சோ ஏதோ ஒரு மறைக்குள் வைத்து எழுத வேண்டியிருக்கிறது. (ஏன்?). எழுதுவது பெண் என்றால் உடனே stereotype செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து இத்தகைய topicகளில் எழுதுவது can be stressful. time consuming. exhausting. எனினும், தொடர்ந்து எழுதும் கௌசல்யா ராஜ் பாராட்டுக்குரியவர்.
தன் ஓய்வு நேரத்தில்(?) இன்னொரு பொன்னான செயலைச் செய்கிறார் சமூக உணர்வுள்ள கௌசல்யா ராஜ். பசுமை விடியல் என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். உங்கள் குடும்ப அல்லது சமூக விழாவில் இந்த முயற்சி பொருந்துமா பாருங்களேன்?
    'நந்தவனத்தாண்டி பாடல்கள்' வழியாக இந்தப் பதிவு அறிமுகமானது என்று நினைக்கிறேன். விசித்திரமான பெயரும் ஒரு காரணம். பதிவும் பெயரும் புரிந்ததும் பழக்கமாகிவிட்டது.
பதிவர் சத்தியமூர்த்தியின் கவிதைகளில் சொல்லப்படும் சிக்கல்கள் நாம் தினம் உணர்பவை. கற்பனைச் சிறகுடன் தொடுவானில் பறக்கும் உணர்வுகளைப் பற்றி இவர் அதிகம் எழுதாதது என்னைக் கவர்கிறது. தினசரிச் சிக்கல்கள் என்றாலும் சிந்திக்க வைக்கும்படி எழுதுகிறார். உதாரணமாக:
    அவனைக் கொண்டு போய் நீ
    அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
    பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
    ...
    அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
    நீ தான் விடவில்லை.
    இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.
கவிஞர்களுக்கேயுரிய கோபமும் தாபமும் தணலாய் வெளிப்படுகிறது சமூகச் சாம்பல் மூடிய இவரது கவிதைகளில். கர்த்தர் வருகையின் சமீபம் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்? இந்தக் கவிதையின் தரை தொடும் யதார்த்தம் உங்கள் பொறுமை எல்லைக்குள்ளும் புகுந்து புறப்படுகிறதா? பாலசுப்ரமணியம் கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    "அதிகாலையில் கர்லாகட்டை சுற்றுபவர்களும் இராவில் கல்லுடைப்பவர்களும்
    பச்சைமுட்டைகளை விரும்பிக் குடிக்கிறார்கள்"
எனத்தொடங்கும் இவரின் 2011 வருடத்து 'இரவில் கல்லுடைப்பவர்கள்' என்ற கவிதையைத் தேடிப் படித்துப் பார்த்து, என்ன புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்களேன்? ஒவ்வொரு புரிதலும், பிரமிப்பூட்டும் விதத்தில் வேறுபடும் என்பது மட்டும் நிச்சயம்.
இது போன்ற சில கவிதைகளைப் படித்தப் பிறகே இவர் பதிவின் தலைப்பு உறைக்கத் தொடங்கியது. வாழ்வியல் சிக்கல்களை விளங்காத இசையாகப் பார்க்கிறாரா சத்தியமூர்த்தி? அல்லது வாழ்வியல் இசையை விளங்காத சிக்கலாகப் பார்க்கிறாரா?
புத்தகப் பித்து போல. நிறைய நூல் விமரிசனங்களும் எழுதியிருக்கிறார். இதைப் படித்த நாளிலிருந்து புத்தகத்தை வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். 'சிவாஜிகணேசனின் முத்தங்கள்' என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருக்கும் கவிதைப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது - தலைப்புக்காகவேனும்.
டங்கு டிங்கு டுவிலிருந்து வெளியேறுவதற்குள் அரசியல் கவிதை கவிதை அரசியலானது பற்றிய இந்தப் பதிவையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.
    "பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர். முற்றிலும் புதிய நாட்டில், புதியதோர் உலகை நாடிச் சென்றார்கள். சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழவேண்டி தொலைதூரத்தில் எங்கோ இருக்கும் செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கி நடந்தனர். சிலர் மாட்டுவண்டிகளிலும், சிலர் குதிரை வண்டிகளிலும், சிலர் ரதங்களிலும், சிலர் பல்லக்குகளிலும், பெரும்பான்மையான சாமானிய மக்கள் நடந்தும் பயணம் செய்தனர். பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து நடத்திச் செல்ல, உக்ரசேனர், வசுதேவர், அக்ரூரர் மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் ரதங்களில் தங்கள் குடும்பங்களோடு பயணம் செய்ய, இளைஞர்களில் பலரும் குதிரைச் சவாரி செய்து வந்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான கால்நடைகள் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள், குதிரைகளும் அவைகளால் தூக்க முடிந்த அளவுக்குப் பொதியைத் தூக்கிச் சுமந்து பயணம் செய்தன. வேடுவர்களும், நாகர்களும் மற்றவர்களும் கூடவே பயணம் செய்தனர். அவர்களைப் பின் பக்கமிருந்து சாத்யகி தலைமையில் மற்ற யாதவ இளைஞர்கள் பாதுகாவல் செய்து வந்தனர்."
பழைய DeMille படங்களின் panorama கண்முன் விரியவில்லை?
பன்திறப் பதிவர் கீதா சாம்பசிவம் எழுதி வரும் பல பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'கண்ணனுக்காக'. மகாபாரதப் புராணத்திலிருந்து கண்ணனை ஒட்டியப் பல குணச்சித்திரங்கள், கதைகளை வைத்துத் தொடராக எழுதி வருகிறார். கண்ணன் தன் இனத்தோடு மதுராவை விட்டு துவாரகைக்குப் பெயரும் படலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.
ருக்மிணியின் திருமணம், யாதவர்களின் புலம்பெயர்தல் இரண்டிலும் கண்ணன் என்னும் தலைவனின் strategy, leadership, carpe diem மற்றும் citizenship பண்புகளை அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். கடவுள் என்ற நினைப்பே வராமல் படிக்க முடிகிறது. ஒரு இனத்தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது. மதுராவிலிருந்து கடைசிப் பூச்சியும் கிளம்பிய பின்னரே தான் அங்கிருந்து வெளியேறுவதாகச் சொல்வதுடன், தன் இனத்தை இன்னார் இன்ன விதத்தில் தலைமை தாங்கிப் பாதுகாப்புடன் வழி நடத்தவேண்டும் என்று கண்ணன் விவரிப்பதாக இவர் எழுதியிருப்பதைப் படிக்கையில் புல்லரிக்கும்.
கீதா சாம்பசிவத்தின் magnum opus, கண்ணனுக்காக. புத்தகமாக வெளிவர வேண்டும்.
ஸ்வேதகேதுவின் சரிவு, ருக்மிணியின் திருமணம் பற்றிய இடுகைகள் விறுவிறுப்பானவை. ருக்மிணியின் திருமணப் படலம் - தனியாகத் திரைப்படம் எடுக்கும் அளவுக்கானத் திரைக்கதை என்பேன்.
ரைட். ஸ்வேதகேது யாருன்னு இவங்க பதிவைப் படிச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன். அது சரி, ஷாயிபா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ..யாரு? ..தப்பு.. இவங்களுக்கு ஒரு பா. தாடியும் கிடையாது. ஓகே, ஷாயிபா யாருன்னு தெரியணும்னா இதைப் படியுங்க :)
now, ருக்மணியா ருக்மிணியா?
    மேல்தட்டு இலக்கியம், பெரும்பாலும் கவிதைகள், எழுதும் வேல்கண்ணனின் பதிவுக்குள் எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை. வெளியேற முடியவில்லை என்பது மட்டும் தெரியும்.
இலக்கிய வாசனையை விரும்பி நுகர்வோருக்கு இவர் இடுகைகள், வாடா இலக்கியப்பூ.
சமீபத்தில் வேல்கண்ணனின் இந்தக் கவிதை வரிகளை அடிக்கடி அசை போட்டிருக்கிறேன்:
    "பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை
    உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்
    எனக்கான இரவுகள்."
இன்னொரு முறை படியுங்கள். கடந்து போவது புரியும். கவிதையை இங்கே படிக்கலாம்.
இன்னொரு கவிதை என்னை மிகவும் பாதித்தது என்பேன். இதில் கவிஞர் படம் பிடித்திருக்கும் காவேரி அக்காவைப் போல் நிறைய பேரை நானறிவேன். அவர்கள் காவேரி அக்காக்கள் என்பது அந்தக் கணத்தில் புரியாமல் போனதே என்று அடிக்கடி வியக்கிறேன். காவேரி அக்கா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
    "மச்சத்தின் இருத்தலில் சொல்லிவிட முடியும் பெண்ணின் குணங்களை
    என்றவனை வாய்பிளந்து பார்த்தாள்
    யோனி தைக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணொருத்தி".
இந்தக் கவிதையின் தாக்கம் வருடக்கணக்காய் எனக்குள். இவரின் மச்ச பலன் படித்து நீங்களும் அவதிப்பட விரும்புகிறேன்.
சில வருடங்களுக்கு முன் போகன் எழுதிய சித்தர்கள் (அகத்தியர்?) பற்றிய ஒரு இடுகையின் பின்னூட்டதிலிருந்து அறிமுகமானவர் பதிவர் தோழி என்று நினைக்கிறேன். மாணவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் 'தோழி', சகட்டு மேனிக்குப் பதிவுகள் எழுதித் தள்ளுகிறார். யோசிக்க வைக்கிறது. சூட்சுமச் சொல்லா? நாமெல்லாருமே மாணவர்கள் தானா? இவரும் சொற்சித்தர் போலிருக்கிறது என்ற நினைப்புடன் இவரது இடுகைகளைப் படிக்கத் தொடங்கினால், மீண்டு வர வெகு நேரமாகும். சொல்லிவிடுகிறேன்.
காயகல்பம், ரசவாதம், பில்லி சூனியம், வசியம், சாவுத் தவிர்ப்பு (சித்தர்கள் சாவதில்லை என்று சித்தர்களை நம்புவோர் நம்புகிறார்கள்), மாயம், ரசமணி, குண்டலினி என்று பல exotic topicகளில் இலக்கியத் தரத்தோடு நிறைய எழுதுகிறார். என்னுடைய விபரீதச் சிறுகதைகளுக்கான ஆராய்ச்சித் தளங்களில் இவரது பதிவும் ஒன்று. படிக்கத் தொடங்கினால் பிரமிக்கத் தொடங்குவீர்கள். நிச்சயம்.
esoteric சமாசாரம் என்றாலும் இவர் இடுகைகளில் குறிப்பிடும் தமிழ்ப்பாடல்கள் பலவும் மிகவும் ரசிக்கத்தக்கவை. இவருடைய சித்தர் பாடல்கள் பற்றிய அறிவு மிக ஆழமானது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். பெண் சித்தர்கள், ஈழத்து சித்தர்கள்... எவரையும் விட்டுவைக்கவில்லை. கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று அறியும் முறையை அகத்தியர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறார். படித்துப் பாருங்கள்.
சித்தர்கள் கைபடாத சிக்கலே இல்லை போலிருக்கிறது. மாதவிடாயிலிருந்து மரணத்தேதி வரை அத்தனையும் தொட்டிருக்கிறார்கள் போல. இவருடைய பதிவுகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கலாம்.
ஜீவ சமாதி என்ற மிக நுட்பமான விஷயம் பற்றி இவர் எழுதியிருப்பதை இந்த இடுகையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு தொடராக விறுவிறுப்பும் சில்லிப்பும் உண்டாகும்படி அருமையாக எழுதியிருக்கிறார்.
ஜீவ சமாதி என்ற concept எனக்குப் புரிகிறது. இதைப் பற்றி நசிகேத வெண்பாவில் எழுதியிருக்கிறேன். சற்றே futuristic போல் தோன்றும் இந்த ஜீவசமாதி தந்திரம், அடிப்படையில் மிகத் தொன்மையானது என்று நம்புகிறேன். தன் உயிரைத் தானே அடக்கும் திறன். தன் உயிரை.. தன் ஆன்மாவை அறிந்தால், தானே அடக்க முடியும். சித்தர்கள் தங்கள் ஆன்மாவை அறிந்தவர்களாவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. அல்லது தங்கள் ஆன்மாவை அறிந்தவர்கள் சித்தர்களாவர் என்றுப் பரவலாக நம்பப்படுகிறது.
தோழி எழுதியிருக்கும் நூற்றியெட்டு சித்தர்களின் ஜீவ சமாதிகளின் தொகுப்பை படியுங்கள். ஜீவ சமாதி இருக்கும் ஊரருகே வசித்தால் ஒருமுறை ஜீவ சமாதியில் நுழைந்து பார்த்துவிடுங்கள். இரவு பனிரெண்டு மணிக்கு மேல் தனியாகப் போவது உத்தமம்.
இன்றைய shout outன் நாயகர்: 'ஆரண்ய நிவாஸ்' ஆர். ராமமூர்த்தி. உங்க அப்பன் வீட்டு ரோடா? போல் நறுக் நறுக் என்று நாலு வருடங்களாக நிறைய எழுதிவருகிறார்.
➤➤5. கதம்ப முறுக்கு