Wednesday, December 19, 2012

வலைச்சரத்தில் மூன்றாம் நாள்!-காரஞ்சன்(சேஷ்)


வலைச்சர வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்! கடந்த இரு நாட்களிலும் கருத்துரை வழங்கி என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் நல்லிதயங்களுக்கு என் உளமார்ந்த நன்றி! இந்த நாள் நம் அனைவருக்கும் மகிழ்வளிக்கும் நாளாக அமையட்டும்!

இன்று உங்களுடன் ஒரு படக்கவிதையை பகிர்ந்துள்ளேன்.



                                                       நிஜமல்ல நிழல்!


                                          கையில் மலரேந்தி
                                          கண்மூடி நிற்கின்றாய்!
                                           நிழலாய்க் கரமொன்று
                                          நீள்கிறதே உன்முன்னால்!
                                              வாழ்க்கைப் பயணத்தில்
                                         வழியெங்கும் நிழல்வலைகள்!
                                         வீழாமல் இருப்பதற்கு 
                                         விழித்திரு கண்ணே நீ!
                                                                                      -காரஞ்சன்(சேஷ்)
பட உதவி: கூகிளுக்கு நன்றி!


 II) படித்ததில் பிடித்தது
 



தினமணி கதிர் அக்டோபர் 7 ம் தேதி இதழில் வெளிவந்த இந்தக் கதை மாறும் சமூக மதிப்பீடுகள் குறித்த மிகவும் சிறந்த வெளிப்பாடு....வாசியுங்கள்...

என்னுடைய சிறிய தகப்பனார் கோயில் குளமெல்லாம் போகமாட்டார். ஆனா பாதயாத்திரை யார் போனாலும் அடிக்கடி போவார். அதுக்கு அவருடைய விளக்கம்: ""நடையன் போடாம இந்த மண்ணுல நடக்கனும்டா அப்பத்தான் இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருக்கிறது புரியும். எந்தவித இடைவெளியும் இல்லாம, ஈர்ப்பு சக்தியின் உணர்வோட, தாயோட தொப்புள்கொடியோட சேருறது போல இருக்கும். அனுபவிக்கணும்டா, காலே வலிக்காதுடா. கல்லு குத்துறதலையும் ஒரு சொகம் இருக்குடா'' அப்படிம்பார்.
 
நான் எடம் வாங்குனவுடனே அவர் சொன்னார், ""எடம் முழுக்க கான்க்ரீட் போட்றாத. மரஞ்செடி போக, நடக்க ஏதுவா மண் பாத இருக்கட்டும்டா. அதுல நடந்து பாரு. நமக்கு சொந்தமான மண்ணுல வெறுங்காலோட நடடா. அப்ப ஒரு கர்வம் வரும் பாரு, உலகே ஆண்டுபுட்டாப்லே'' தலையாட்டினேன். பேரன் பேத்தி ஆசையோடயே இருக்கிற எங்க தாயார் சொன்னார்: ""நம்ம குடும்பம் தழச்சு பேரப்புள்ளலாம் ஓடி ஆடி திரியறாப்ல வீடு கட்றா. விசாலமா இருக்கணும்டா; சூரியனும் வாயுவும் தங்கு தடை இல்லாம நுழையணும்டா'' தலையாட்டினேன். அம்மான் மகளான என் மனைவி சொன்னாள்: ""ஏங்க வீடு கட்றப்ப, வாச விரிவா இருக்கனுங்க, முன்னாலையும் பின்னாலையும். முன்வாசல்ல அக்கம்பக்கதோட பேசறாப்லையும், மார்கழி மாசம் பூக்கோலம் போடறாப்லையும், பின்னாடி அரிசி பருப்பு காய வைக்றாப்லையும் இருக்கட்டுங்க. ரொம்ப ஒசத்தி கட்டவேணாங்க, மாமா அத்தைக்கெல்லாம் வயசாகிட்டே போகுது. அவங்க சுளுவா நடமாடனுங்க''தலையாட்டினேன்.
வாழ்க்கையிலே பல மாதிரி கஷ்டநஷ்டமெல்லாம் அனுபவிச்சவரு எங்க அம்மான். அவர் சொன்னார், ""மாப்ளே கட்றதுதான் கட்றீங்க, ஒரு மாடி வீடும் சேத்து கட்டி விட்ருங்க. அதுக்கு தனி பாதை வச்சுருங்க. ஏன்னா, இடம் ஊருக்கு வெளியே தள்ளி இருக்கு. மேல ஒரு துணைக்கு குடி வைக்கலாம்ல. வருமானத்துக்கு இல்லாட்டியும், ஒரு நல்ல மனுசாள குடில்ல வச்சா, அவசர ஆத்திரத்துக்கு இருப்பாகள்லே. நீங்களும் அடிக்கடி ஊரு பேருன்னு அலையிறவரு. அப்புறம் நாளைக்கு ஏதும்னாலும், ஒரு கைச்செலவுக்கு தோதா இருக்கும்ல'' தலையாட்டினேன். 
கவிதையும் தத்துவமுமாய் வாழும் என் நண்பர்சொன்னார்: ""டேய் நிலமோ வீடோ, நம்ம ஐம்புலனும் ஆட்சி செய்யிற இடமா இருக்கணும்டா. கண்ணுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இதமா, கெட்ட வாடை இல்லாம, காற்று நேரடியா உடம்புல படர மாதிரியும், சுவையான தண்ணி ஆதாரமும் இருக்கும் வகையிலே சூழ்நிலைய அமைச்சுக்கணும்டா. சத்தம் அதிகம் இல்லாம, சுத்தமா இருக்கணும். வீட்டுக்குள்ளே நல்லா பசியும் ஆறணும். அதே நேரத்துல மனசும் ஆறணும்டா'' தலையாட்டினேன்.
 
பின்புறத்துல கேணி வெட்டுனா, தண்ணி சில அடியிலயே வந்துருச்சு. இனிப்புன்னா இனிப்பு அப்படி ஒரு இனிப்பு. நிலையா இருக்கணுமுன்னு நல்ல நாள் பாத்து நிலையும் வச்சு, கட்டடம் கட்டறவங்களுக்கு விருந்தும் வச்சோம். இடத்துக்கு நட்ட நடுவுல வீடு கட்டி, முன்னாடியும் பின்னாடியும் வாசல் வச்சு, மாடி வீடும் கட்டி, சொந்த பந்தமெல்லாம் வரவழச்சு , பால் காய்ச்சி குடி போன நாள்ல இருந்த முழுமையான உணர்வு, இதுவரைக்கும் திரும்பவும் அமையலை.  
உடல் உழைப்பு அதிகம் இல்லாத குடும்பத்துல பொறந்தவன் நான். எனக்கு தெரிஞ்சதெல்லாம் கணக்கு .. கணக்கு .. கணக்கு ... மூளை உழைப்புன்னு வேண்ணா சொல்லிக்கலாம். நல்லா வருமானமும் வந்துச்சு. ஆனா மனசோரத்துல, ஒரு உறுத்தல், நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது என்னனா, அடுத்தவங்க உடல் உழைப்புலயே வாழறோமே, விளைச்சல் செய்யிறவங்களவிட நாம வசதியா வாழறோமே அப்படின்னு. கோயில் குளமுன்னு தானம் தர்மமும் என்னால முடிஞ்ச அளவு செஞ்சு பார்த்தேன். மனசாறலை. வயல்ல இறங்கி வேலை செய்யிறதுக்கு பழக்கப்படாத உடம்ப வச்சுக்கிட்டு என்னால அதுக்கு ஒண்ணும் பண்ண முடியல.
சரி நம்மால முடிஞ்சது, மரஞ்செடிகொடியாவது வீட்ட சுத்தி வளப்போம்னு முடிவு செஞ்சு தோட்டம் போட்டேன். தென்னை மரம் மாதிரியெல்லாம் வேணுவளர்த்து நம்மால ஏற இறங்க முடியாதுன்னு, மாமரம், வாழைமரம் வச்சு காய்கறிச்செடிபோட்டேன். என் மனைவி சில பூச்செடியும், துளசிச்செடியும், கற்பூரவள்ளி, மணத்தக்காளி செடிகளும் வளர்த்தா. ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னு. ஆலமரம் வளக்க இடமில்லாட்டியும், வீடு முன்புறம் ஒரு வேப்பங்கன்று நட்டு வச்சேன்.


தெனமும் முன் வாசல்ல அரிசி மாவு கோலம் போட்டு எறும்புக்கு தீனி வச்சோம், பின் வாசல்ல மூதாதையர் நினைவா காக்கைக்கு சோறு வச்சோம். சொந்தபந்தங்களுக்கும், திருவிழா படையலுக்கும் வாழை இலையில விருந்து வைப்போம். அப்பல்லாம் எம்பையன் நுனி இலைதான் ம்பான். மத்த நாள்ல காய்கறி சாப்பிட அடம் புடிக்கிற பய, நம்ம தோட்டத்துல அவன் தண்ணி ஊத்தி வெளஞ்ச காய்கறின்னா உடனே சாப்புடுவான். துளசி இலய பிச்சு பிச்சுத் திம்பான். வாய்ப் புண்ணு வந்தா மணத்தக்காளியும், சளி புடிச்சா கற்பூரவள்ளியும் பக்குவம்மா ஆக்கி தருவா எம்மனைவி. சட்டுன்னு கேக்கும்.
ஒரு தடவ, வேப்ப மரத்தடியில அவன் ஒன்னுக்கு போறத பார்த்தேன். ""டேய் நான் ஆசையா வெதச்சு வளத்த மரத்துல ஒண்ணுக்கு அடிக்கிறியேடா, நியாயமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான், ""அப்பா நான் பாடத்துல படிச்சிருக்கிறேம்ப்பா, யூரின்ல யூரியாங்க்ற உப்பு இருக்காம்ப்பா. அதனால, நான் ஒண்ணுக்கு அடிக்கிறதுனால, வேப்பமரம் நல்லா வளர உரந்தான் போடறேன்''
எங்க தகப்பனார் , "".....இச்சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருள்ளானே'' என்று ஆழ்வாரை பாடியதுமாய், நான், ""எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'', என்று பாரதியை பாடியதுமாய், என் மகன், ""மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?'' என்று ஜேசுதாசை பாடியதுமாய் கழிந்த சொகமான நினைவுகள் பசுமரத்தாணி போல அப்படியே இருக்கு.
அவன் கை நெறைய சம்பாரிக்கிறான். எம்பையன் எங்க மேல வச்சிருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், எள்ளளவும் குறைச்சல் இல்ல. எம் மருமக எங்க வீட்டுக்கு வந்திருக்கிற வாழ்வரசி. எங்களுக்கு மகள் இல்லாத குறைய போக்க வந்த குணவதி. நல்லா படிச்சவ. பேரனும் பேத்தியுமா ரெண்டு பேரப்புள்ளைங்க, ""அய்யா அய்யா'', ""அப்பத்தா அப்பத்தா''ன்னு உசிரா சுத்திச்சுத்தி வருதுங்க. பிள்ளைங்க முழு நேர பள்ளிக்கூடம் போறவரைக்கும், வீட்ட மட்டும் கவனிச்சுகிட்டிருந்த மருமக, இப்ப அந்த பள்ளிக்கூட நேரத்துக்குள்ள வேலைக்கும் போயிட்டு வரா.
எம்பையன ஒருநாள் கூப்பிட்டு பேசுனேன், ""இங்க பாருப்பா நான் நிறைவா என் கடமையெல்லாம் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன். நீயும் நல்லா இருக்க. இந்த வீடு உட்பட மத்ததெல்லாம் உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். இந்த காலகட்டத்துக்கு எது செüகரியமோ அத பாத்து செஞ்சுக்கப்பா. உங்களோட எதிர்காலத்துக்கு எது தோதோ, அதபத்தி நீயே முடிவு பண்ணிக்கப்பா''
எங்களையும் சேத்து மொத்த குடும்பமாய் போய்வறதுக்கு தோதா ஒரு பெரிய காருக்கு, அட்வான்ஸ் கட்டிட்டு எம்பையன் சொன்னான்,""அப்பா இன்னும் ஒரு மாசத்துல கார் டெலிவரி கொடுத்துருவாங்க. கார் நிப்பாட்ட எடம் வேணும்ப்பா. அதனால ஒரு பக்கம் தோட்டத்த சுத்தம் செஞ்சிட்டு, கார் ஷெட் போட்ருவோம்ப்பா. இன்னொரு விஷயம், நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே ப்ரஷ் காய்கறி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்துருச்சு. வேணுங்கிறத போன்ல சொல்லிட்டா போதும். எப்ப வேண்ணாலும் வீட்லே வந்து குடுத்துருவாங்க'' . தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""ரொம்ப வருசமா மாடி வீட்ல வாடகைக்கு இருந்தவங்க அடுத்த மாசம் காலி பண்ண போறாங்களாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூச்வல் பண்ட் கம்பெனிக்காரங்க, ஒரு ஆபீசுக்கு இடம் வேணுங்றாங்க. நல்ல அட்வான்சும், வாடகையும் தரேங்றாங்க. அத வச்சே நம்ம வீட்டையும் கொஞ்சம் மராமத்துபண்ணிடலாம்ப்பா. மேல்வீட்ட கொஞ்சம் ரீமாடல் செஞ்சா போதும். அதுவும் அவங்களே செஞ்சுக்கிறாங்களாம்''. தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""ஏம்பா வீட்டை இடத்துக்கு நட்ட நடுவுல கட்டினீங்க? எதுக்கும் பயன்படாம சுத்தி காலி இடம் வேஸ்டா கிடக்குது. வீட கொஞ்சம் ஒரு பக்கமா கட்டி இருந்தா, நாலு கடை கட்டி வாடகைக்கு விட்ருக்கலாம். சரி அது போகட்டும். அந்த ஏ.டி.எம் - மாமரம் இடத்துல, நான் ஆலோசகராக இருக்கிற பேங்க்காரங்க, ஒரு ஏ.டி.எம் சென்டர் வச்சுக்கிறேங்றாங்க. நல்ல வாடகையும் தருவாங்க. அந்த சென்டருக்கு ஷிப்ட்டு முறையில இருவத்துநாலுமணி நேரமும் செக்யூரிட்டி போட்ருவாங்க. நமக்கு வருமானத்துக்கு வருமானம். பைசா செலவு இல்லாம செக்யூரிட்டியும் அமைஞ்சுரும். நாங்க இல்லாதப்ப, நீங்க மட்டும் தனியா இருக்கிறப்ப, உங்களுக்கும் ஒரு பாதுகாப்புக்கும் ஆச்சு. மரத்துப்பக்கம் பூச்சி அட்டையெல்லாம் வேற வருது''. தலையாட்டினேன்.
எம்பையன் சொன்னான், ""அப்பா நமக்கு நெறைய பணம் சேந்துருக்கு. எனக்கு மேலும் பேங்க்ல லோன் எவ்வளவு கேட்டாலும் தருவாங்க. இப்பல்லாம் லேண்ட்ல இன்வெஸ்ட் பண்றதுதான் பெஸ்ட். அதனால புயூச்சர்ல நல்ல ப்ராஸ்பெக்ட் இருக்கிற இடமா பாத்து இன்வெஸ்ட் பண்ணபோறேன்''. அதுக்கு நான், ""அதுல பயிர் விளைவிக்க போறியா இல்ல தோட்டம் கீட்டம் போட போறியா?'' ன்னேன்.
எம்பையன் சொன்னான், ""இந்த பழைய வீட்ட மெயின்டைன் பண்றது கஷ்டமா இருக்கு. எம் பொண்டாட்டியும் வேலைக்கு போறா. நீங்களும் தனியா இருக்கீங்க. என் ப்ரண்ட் ஒருத்தன் ஆர்கிடெக்டா இருக்கான். அவன் ஒரு யோசன சொன்னான். இந்த வீட்ட இடிச்சிட்டு, பெரிசா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிறலாம். நமக்கு ரெண்டு வீடு கீழ் ப்ளோர்ல, நம்ம தோதுக்கு எடுத்துக்கிட்டு மத்தத வித்திரலாம். இல்லாட்டி வாடகைக்கு விடலாம். கோடி கணக்குல லாபம். அதேநேரத்துல, ரெண்டு அருமையான மாடர்னான அப்பார்ட்மென்ட் வீடு பைசா செலவு இல்லாம கிடைச்சுரும். அதுவரைக்கும்நாமஎல்லோரும் உங்க மருமக ஆபீஸ் குவார்டர்ஸ்ல தங்கிக்கலாம்'' வாழ வந்தவ வீட்டுக்குத்தானே நாம வாழப்போறோம்ன்னு நினைச்சுக்கிட்டேன் நான், ""அதுக்காக செலவழிச்சு கட்டின வீட்ட இடிக்கனுமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன், ""இந்தவீடுகட்ட நீங்க செலவழிச்சத, இந்த காலத்து பண மதிப்போடவட்டியும்சேத்தாக்கூட, வீட இடிக்கிற செலவு அதிகமாஇருந்தாலும்இருக்கும்ப்பா'' ன்னு சொல்லி லேசா சிரிச்சான்.
நண்பரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு, பக்கத்துல இருக்கிற கோயில் குளம் பாத்துட்டு வரலாம்னு, வெளியூர் போய் இருந்தேன். போக, வர டிரைவரோட கார் ஏற்பாடு பண்ணி, நானும் என் மனைவியும் தங்குறதுக்கு, அந்தந்த ஊர்லலாம் ஒரு குறையும் இல்லாம வசதியும் பண்ணி கொடுத்தான் எங்க மகன். தொடர்புல இருக்கிறதுக்காக ஒரு புது செல்போனும் வாங்கி கொடுத்தான்.
அப்ப ஒருவாட்டி, எம்பையன் போன்ல சொன்னான், ""அப்பா அப்பார்ட்மென்ட் கட்டறத பத்தி அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி, அந்த வேப்ப மரம் இருக்கில்ல, அந்த இடம் நல்ல விஷன்ல இருக்காம்ப்பா. அங்க அட்வர்டைஸ்மென்ட் போர்டு வைக்கலாம்னு அட்வர்டைஸிங் கம்பெனி ஆளுங்க கேக்குறாங்க. அத வச்சா நம்ம இடம் பிரகாசமாவும், ஒரு நல்ல லேண்ட் மார்க்காவும் ஆயிரும். சைடு வாக்குல தூசியும் வராது. அவங்க போர்டு வச்சுக்க எடுத்துக்கப்போற இடம் ரொம்ப சின்னது. ஆனா, மாச மாசம் கணிசமா வாடகை தருவாங்க. ஆனா ஒரு சின்ன பிரச்னை. அந்த வேப்ப மரம் வியூவ மறைக்குதாம். அத வெட்டிரலாம்பா. அதையும் அவங்களே பண்ணிக்கிறாங்களாம். அதுக்குரிய ஈடையும் கொடுத்துறாங்களாம். அப்புறம் அம்மாவுக்கும் உங்களுக்கும் உடம்பெல்லாம் சுகமாத்தானே இருக்கு'' தலையாட்டினேன்.



எழுதியவர் சுப.திருப்பதி.
(மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட என் நண்பருக்கு நன்றி!)
 
III) சிந்திக்க:
ஓடிக்கொண்டிருப்பதால் ஒல்லியாக உள்ள முள்!
 
இன்று சில பதிவர்களின் பதிவுகளைப் பார்ப்போமா?
 
1. தனது சொல்லாற்றலால் மரபுக் கவிதைகள் படைத்துவரும் புலவர் சா. இராமாநுசம் ஐயா அவர்கள் சொல்லுதல் யார்க்கும் எளிய என்பதை  எப்படி விளக்குகிறார் எனப் பாருங்கள்.
 
2. அரசன் சே அவர்கள் அழகை ஆராதிக்கிறார் இப்படி!
 
3. வானம் எனக்கொரு போதிமரம் என்பது போல் வானும்-நானும் கவிதை படைத்துள்ளார் சீனி அவர்கள்!
 
4. காத்திருப்பு குறித்து திருமதி உஷா அன்பரசு அவர்களின் கருத்தைக் கேளுங்களேன். முக்கியமான மூன்று சொற்கள் மற்றுமொரு முக்கியப்பதிவு!
 
 
6.  பழையன கழிதலும் புதியன புகுதலும் பற்றி-சேக்கனா M. நிஜாம் அவர்களின் ஏன் இந்த மாற்றம் !? பழசை நாம் வெறுக்கின்றோமா !?
 
7. நலம்தரும் சொல்லைக் காண வாருங்கள்! திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைப் பக்கத்திற்கு!

இன்றைய பகிர்வுகள் பிடித்திருக்கிறதா? பகிருங்கள் உங்கள் கருத்துக்களை!
மீண்டும் நாளை சந்திப்போம்!

என்றும் அன்புடன்
காரஞ்சன்(சேஷ்)





 
 

42 comments:

  1. நீண்ட நிறைவான பதிவுகள் அதற்க்கு மேல் மகுடமாக ஐயா புலவர் ராமநுசம் அவர்களின் கவிதைகள் என்பத்தியொரு வயதுக்குப் பின்னரும் எழுச்சியுடன் உள்ளது படிக்கும்போது மகிழ்ச்சியாகவும் உள்ளது,மேலும் உஷா அன்பரசு அரசன் சீனி,கோமதி அரசு அவர்களின் படைப்புகளை பாராட்டியமை நன்று

    ReplyDelete
  2. சகோ...!

    நல்ல பகிர்வுகள்....

    அதில் என்னையும் இணைத்தது....

    மிக்க
    நன்றி சகோ...!

    தொடர்கிறேன்!

    ReplyDelete
  3. தங்களின் வருகைக்கு நன்றி திரு கவியாழி கண்ணதாசன் அவர்களே!

    ReplyDelete
  4. நன்றி திரு சீனி அவர்களே!

    ReplyDelete
  5. அருமையான கதை
    பதிவாக்கித் தந்தமைக்கும் நான் தொடரும்
    அருமையான பதிவர்களை சிறப்பாக அறிமுகம்
    செய்தமைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. தங்களின் வருகைக்கு நன்றி திரு ரமணி சார்! நேற்று உங்களின் எது கவிதை? பதிவை அறிமுகம் செய்திருந்தேன்! எனக்குப் பிடித்திருந்தது! நன்றி! தொடருங்கள் ஐயா!

    ReplyDelete
  7. கவிதையும் கதையும் அருமை.
    கதை உணர்த்தும் நீதி:
    கண்ணை விற்று சித்திரம் வாங்கும் நிலை தான் இப்போது நடக்கிறது.

    கதை எழுதிய சுப. திருப்பதி அவர்களுக்கு பாராட்டுக்கள். மின்னஞ்சல் மூலம் பகிர்ந்து கொண்ட உங்கள் நண்பருக்கும் அதை எங்களிடம் பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    இன்று நீங்கள் குறிபிட்டு உள்ள பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
    என் மார்கழியின் சிறப்பு பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  8. தங்களின் வருகைக்கு நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! தங்கள் வருகை தொடரட்டும்! நன்றியுடன்

    ReplyDelete
  9. சிறப்பான கதை.

    நிறைவான அறிமுகங்கள்.

    சிலர் எனக்குப் புதியவர்கள். படிக்கிறேன்.

    நட்புடன்

    வெங்கட்
    புது தில்லி.

    ReplyDelete
  10. பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி !

    எனது ஆக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்த அன்புச்சகோதரர் சேசாத்ரி அவர்களுக்கு மீண்டும் எனது நன்றி !

    எல்லாப் புகழும் இறைவனுக்கு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. நலம்தரும் சொல்லைக் காண வாருங்கள்! திருமதி இராஜராஜேஸ்வரி அவரிகளின் வலைப் பக்கத்திற்கு/

    நலமாக நயமாக அறிமுகப்படுத்தியதற்கு நிறைவான நன்றிகள் ,,

    ReplyDelete
  12. பகிர்ந்த கதை மனதில் வீடு கட்டி அமர்ந்துகொண்டு நிதர்சனத்தை உணர்த்தியது .. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  13. திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  14. நண்பர் திரு வெங்கட்நாகராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  15. தங்களின் வருகைக்கு நன்றி திரு சேக்கனா M நிஜாம் அவர்களே!

    ReplyDelete
  16. நன்றி திருமதி மாதவி அவர்களே!

    ReplyDelete
  17. அன்பின் நண்பருக்கு என் வணக்கங்கள் ... தமிழ் கூறும் நல் படைப்பாளர்களுடன் என்னையும் இணைத்து அங்கீகரித்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் ..

    ReplyDelete
  18. கதை நன்று! பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  19. கதை நன்று! பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. நன்றி திரு. அரசன் சே அவர்களே! தொடருங்கள்!

    ReplyDelete
  23. தங்களின் கருத்துரைக்கு நன்றி திருமதி உஷஆன்பரசு அவர்களே!

    ReplyDelete
  24. நன்றி திருமதி உஷா அன்பரசு அவர்களே!

    ReplyDelete
  25. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .அறிமுகம் செய்த நட்புக்கு
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !...

    ReplyDelete
  26. இன்றும் பலர் தெரிந்தவர்கள் அனைவருக்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. தங்கள் கதையும் கவிதையும் சிறப்பு.
    Vetha.Elangathialakam.

    ReplyDelete
  27. மூன்றாம் நாளாகிய இன்று அனைத்தும் அருமை.

    இன்று அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    தங்களுக்கு என் அன்பான நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete

  28. அம்பாளடியாள்...
    அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் .அறிமுகம் செய்த நட்புக்கு
    மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !..//
    தங்களின் வருகைக்கு நன்றி!











    ReplyDelete
  29. திரு வைகோ ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    ReplyDelete
  30. திருமதி Vetha.Elangathialakam அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  31. வணக்கம்
    காரஞ்சன் (சேஷ்)

    இன்று அறியாத பல தளங்களை அறியவைத்த உங்களுக்கு எனது நன்றி பதிவுகளை தொடருகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  32. அருமையான சிறுகதையுடன் அழகான எழுத்துக்களை அறிமுகம் செய்துள்ளீர்கள்...

    அறிமுகமான நட்புக்களுக்கும்...
    அறிமுகம் செய்து வைத்த உங்களுக்கும்...

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. நன்றி திரு சே.குமார் அவர்களே!

    ReplyDelete
  34. நன்றி திரு ரூபன் அவர்களே!

    ReplyDelete
  35. அருமையான பகிர்வு! அருமையான அறிமுக பதிவர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. நல்ல பகிர்வுகள்....

    இனிதே தொடர வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  37. சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
  38. தங்களின் வருகைக்கு நன்றி திருமதி லக்‌ஷ்மி அம்மா அவர்களே!

    ReplyDelete
  39. நன்றி திரு சுரேஷ் அவர்களே!

    ReplyDelete
  40. சுப திருப்பதி அவர்களின் கதை அருமை,யதார்த்த நடை. அருமை. பாராட்டுக்கள்.
    எல்லாம் காலத்தின் கோலம்.
    திருப்பதிக்கு ஒரு காலத்தில் மலைக்கு நடந்து சென்று மலைஅப்பனை வணங்கினார்கள் .இன்று வண்டிகள் நம்மை சுமந்து செல்கின்றன. விமானங்கள் மலையிலேயே இறங்குகின்றன பக்தர்களை ஏற்றிக்கொண்டு. .மாற்றத்தை ஏற்றுகொள்ள மனம் பழக்கிகொண்டால் ஏமாற்றங்கள் என்றும் இருக்காது.

    ReplyDelete