Sunday, May 19, 2013

வலைப்பதிவு உலகம்

முன்பொரு காலத்தில் மனிதர்களுடன் உரையாடல் என்பது நேருக்கு நேர் என்பதாய் இருந்தது. மேடைகளில் பேசுவது என்பது உணர்ச்சிபூர்வமாய் இருந்தது. பிறகு கடிதங்கள் வந்த போது அதனுள் உணர்ச்சிகளை எழுத்தாய் வடிக்க கற்று கொண்டோம். சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றாலும் கூட போஸ்ட் கார்டு நிரம்பும் அளவு எழுதி தள்ளினோம். இன்று எதுவும் மாறி விடவில்லை. ஆனால் சுருங்க சொல்ல கற்று கொண்டு இருக்கிறோம். 140 எழுத்துகள் மட்டுமே அனுமதிக்கிற டிவிட்டர் போதும் நம்முடைய பரிமாற்றத்திற்கு. அது தான் மணிக்கணக்கில் செல்பேசியில் பேச முடிகிறதே, அப்புறமென்ன!

வலைப்பதிவுகள் தமிழில் பிரபலமாக இருந்த காலத்திற்கும் இப்போது பெரும்பாலான ஜனங்கள் ஃபேஸ்புக் போய் விட்ட காலத்திற்கும் நடுவே பல வித்தியாசங்கள் இருக்கின்றன. சின்ன சின்ன கதைத்தல்களுக்கு ஃபேஸ்புக் இப்போது தளமாகி விட்டது. எனினும் இப்போதும் வலைப்பதிவுகள் தங்களுக்கான இடஎம் என்ன என்பதை உணர்ந்து இதை நிறைவு செய்யும் பக்குவமடைந்து இருக்கின்றன. பெரிய கம்பெனிகள் தங்களுடைய மார்க்கெட்டிங் அம்சமாகவும் தங்கள் வாடிக்கையாளர்களுடனான பொது தொடர்பு சாதனமாகவும் வலைப்பதிவுகளைப் பயன்படுத்துகின்றன. எல்லாரும் எல்லாவற்றையும் பேசலாம் என்பது குறைந்து இந்தந்த விஷயங்களுக்கான வலைப்பதிவுகள் (niche blogs) அதிக கவனத்தை ஈர்த்து வருகின்றன. இன்னொருபுறம் தனிமனிதர்களுக்கான விசிட்டிங் கார்டுகளாகவும் வலைப்பதிவுகள் (ஆரோக்கியமாய்) மாறி கொண்டு இருக்கின்றன.

பத்ரி சேஷாத்ரி
வலைப்பதிவுலகில் பெரும்பாலனோருக்கு தெரிந்தவராக இருப்பார் என்றே நம்புகிறேன். வெளிநாட்டிற்குச் சென்று வந்த அனுபவம், இந்த வலைப்பதிவு காலம் தொடங்கிய போது இணையத்தில் புதுபுது முயற்சிகளை எடுக்க இணையம் பற்றிய தகவல்களிலே திளைத்திருந்த காரணத்தினால் தொடக்கம் முதலே வலைப்பதிவு எழுதுவது எப்படி என்று தெரிந்தே இருந்திருக்கிறார். அதோடு அளவில் சிறிதாகவும் அதிக தகவல்களோடும் எழுதும் அவருடைய ஸ்டைல் கச்சிதமாக இருக்கிறது. கிழக்கு பதிப்பகம், தமிழ் அறிவுச்சூழலில் உள்ள பலரோடு தொடர்பு என்கிற பின்புலம் காரணமாக அவருடைய இடம் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது. அடுத்து இவருடைய வலைப்பதிவில் தடங்கலின்றி பதிவுகள் அரங்கேறி கொண்டே இருக்கும் ஒழுக்கம். நான் இதை எழுதி கொண்டிருக்கும் போது அவருடைய தளத்தில் 2003-ம் ஆண்டு தொடங்கி இப்போது வரை 2562 பதிவுகளை எழுதி தள்ளியிருக்கிறார். அடிக்கடி காணாமல் போகும் வலைப்பதிவர்களிடையே இந்த மாதிரியான தொடர்ந்து பதிவு எழுதும் ஒழுக்கம் முக்கியமானதாக இருக்கிறது.

அபிலாஷ் சந்திரன்
இவரைப் பற்றி கிரிக்கெட் பதிவிலும் சொல்லியிருந்தேன். 2009-ம் ஆண்டு தொடங்கி எக்கசக்கமாய் எழுதுகிறார். இலக்கியம், இணையம், உளவியல், மொழிபெயர்ப்பு, கவிதை, கிரிக்கெட், சமூகம் , சினிமா, சிறுகதை, தத்துவம் என பல தளங்களில் விரிகின்றன இவரது வலைப்பதிவுலகம். கொஞ்சம் சீரியஸான வாசிப்பினை விரும்புபவர்கள் கட்டாயம் இவரது வலைப்பதிவினைத் தொடர்ந்து வாசிக்கலாம்.

பாலபாரதி
இவர் வலைப்பதிவுலகில் பிரபலம் என்பது மட்டும் அல்ல, நிறைய பேருக்கு வலைப்பதிவுலகை அறிமுகப்படுத்திய பெருமையும் உண்டு. எனக்கு அறிமுகத்தியது உட்பட. நிறைய எழுதி வந்திருக்கிறார். பெரியாரின் வரலாற்றையும் எண்ணங்களையும் தொகுப்பதற்கு முயற்சிகள் எடுத்து இருக்கிறார். ஆட்டிசம் சில புரிதல்கள் என்பது பற்றி தொடராக எழுதி பிறகு அதை புத்தகமாக்கி இப்போது அது விழிப்புணர்வு பிரச்சாரமாக இணையத்தில் பலருக்கு பலவழிகளில் பரிந்துரைக்கப்பட்டு பரவி கொண்டே இருக்கிறது. வலைப்பதிவுலகத்தின் வலிமையை அதன் சாத்தியத்தை உணர்த்தும் முயற்சி இது.

வலைப்பதிவுலகில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சினிமா மற்றும் ஏனைய துறை பிரபலங்கள் இவர்களுக்கு இவர்களுடைய ரசிகர்கள்/வாசகர்கள் வலைப்பதிவு நடத்துவதும் அது பிரபலமாக இருப்பதும் நாம் அறிந்ததே. இதுவொரு வலைப்பதிவுலக சாத்தியம். இந்த வகையில் கவிஞர் தேவதேவனுக்கு அவரது வாசக நண்பர்கள் நடத்தும் வலைப்பதிவு கவனத்திற்குரியது.

வலைப்பதிவுலகில் ஆக்டிவ்வாக இருந்து விட்டு பிறகு பதிவிடாமல் இருந்த சிலர் இப்போது மீண்டும் வலைப்பதிவுலகிற்கு வர தொடங்கி இருக்கிறார்கள். ரவிசங்கர் தனது வலைப்பதிவில் மீண்டும் எழுத தொடங்கி இருக்கிறார்.

4 comments:

  1. முடிவில் உள்ள இரு தளங்களும் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பாலபாரதி மற்றும் ரவிசஙகர் தொடர்பவன் நான் அவர்கள் பிசி என்பது அறிவேன் ஆனாலும் மீண்டும் எழுத வேண்டும்.

    ReplyDelete
  3. நன்றி தனபாலன் & தனிமரம். தனிமரம் சொல்வதை நான் மீண்டும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete