Saturday, May 31, 2014

எங்கே தேடுவேன்?

இன்றைய தேடல் பணத்தைப் பற்றியதல்ல.
சில பதிவர்களைப் பற்றிய தேடல்.
காணாமல் போன பதிவர்களை கண்டு பிடித்துக் 
கொடுப்பவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாமா
என்று கூட யோசிக்கிறேன்.

முதலில் சில புலிகள்

பஞ்ச பூதம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் நான்

     ஆறாவது பூதம்    என்று கிளம்பியவரைக் கண்டுபிடியுங்கள்.

வலைப்பக்கத்தில் பெயரிலேயே பஞ்ச் வைத்துக் கொண்டு
எல்லோரையும் பஞ்ச்  செய்பவர் இவர்.

பகுத்தறிவு என்றால் காத தூரம் ஓட வேண்டும் என்று
விரும்புபவர் இவர்.

வில்லுக்கு மட்டும் அல்ல கடும் சொல்லுக்கும்  விஜயன்
என்று புகழ் பெற்றவர்.

இவர்கள் எல்லாம் பின்னூட்டப் புலிகள். அவர்களது 
பக்கத்தில் அதிகமாக எழுத மாட்டார்கள். இதோ இவர்களை
உங்கள் சார்பாக அழைக்கிறேன்.

கொஞ்சம் சத்ரியன் அருமைநாயகம் அண்ணாச்சியை
ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லாம் வரனும். எழுத வரனும்.
அப்போதான நாங்க பின்னூட்டம் போட முடியும்.

எழுத வேண்டும் என்று நான் விரும்புகிற இன்னும் சில
பதிவர்களும் உள்ளார்கள்.

ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க  என்ற அமர்க்களமான
தலைப்போடு ஆரம்பித்து துபாயின் பொருளாதார நிலைமை
பற்றி எழுத ஆரம்பித்தவர் ஏனோ நிறுத்தி விட்டார்.

மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் மனதில் பதியும்
வண்ணம் எழுதக்கூடிய எங்கள் தென் மண்டலப்
பொதுச்செயலாளர் தோழர் சுவாமிநாதனை வலைப்பக்கத்திலும்
எழுதச் சொல்லுங்கள்.

மனதைத் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரரானாலும் கூட
வலைப்பக்கத்தில் மட்டும் ஏனோ எழுதுவதில்லை. அவரையும்
ஒரு அதட்டல் போட்டு இங்கே எழுதச் சொல்லுங்கள்

சரி நீங்களும் தேடுங்கள், நானும் தேடுகிறேன்.
கிடைத்தால் பதிவுலகிற்கு நல்லது.
நாளை பார்ப்போம்

Friday, May 30, 2014

இசையில் தொடங்குதம்மா



இசைக்கு உருகாதோர் எவருமுண்டோ?

அப்படி யாரும் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றைய தினத்தை இனிய இசைக்கான நாளாக அமைக்க விரும்புகிறேன்.

இசையின் இலக்கணம் எதுவும் அறியாதவன் நான். கேட்கப் பிடிக்கும், ரசிக்கப் பிடிக்கும். கர்னாடக சங்கீதமும் ரசிப்பேன், கானா பாடலும் ரசிப்பேன். சில ராகங்களை அடையாளம் காண முடியும். ஸ்ருதி விலகினாலா அல்லது தாளம் தவறினாலோ ஏதோ உதைக்கிறது என்ற அளவில் மட்டும் இசையறிவு நின்று போகிறது.

வார்த்தைகளை சாகடிக்கிற இன்றைய இரைச்சல் சங்கீதத்தை, அர்த்தமற்ற வரிகளை விட்டு முற்றிலுமாக விலகி நிற்கிறேன்.

முதலில் ஒரு பாடலைக் கேட்போம்.

இளையராஜாவின் இசை வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பவன் நான். அதனால் முன்னுரிமை இளையராஜாவின் பாடலுக்கே. இசையமுதம் என்ற இந்த தளத்தில் பல பாடல்களின் ஒலி வடிவம் உள்ளது. அதிலே இப்போது நான் உங்களுக்கு வழங்குவது சிறைச்சாலை படத்தின் செம்பூவே பாடல். Interlude என்று அழைக்கப்படுகிற பாடல் வரிகளுக்கு இடையே வரும் இசைக் கோர்வைகளுக்கு இளையராஜாவைப் போல் சுவாரஸ்யம் கொடுத்தவர்கள் யாருமே கிடையாது. இந்தப் பாடலிலும் வரிகளுக்கு இடையே வரும் இசை உங்களை மெய்மறக்கச் செய்யும்.

பாடலைக் கேட்டு விட்டீர்களா?

சரி ராஜாவின் நேர் காணலை இங்கே  படியுங்கள்.

ராஜா பற்றி நாசர் நெகிழ்ந்திருந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை இப்போது கொஞ்சம் படிக்கவும் செய்யுங்களேன்.

நான் இளையராஜாவின் ரசிகன்தான். ஆனாலும் அவரால் பல முறை எனக்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. எப்படி என்பதை இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆஹா, இசை பற்றி என்று சொல்லி விட்டு இளையராஜா பற்றியே சொல்கிறானே என்று யோசிக்கிறீர்கள் அல்லவா? இசையும் ராஜாவும் வேறு வேறு அல்லவே. ஆனால் இன்று இளையராஜாவோடு மட்டும் நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.

எம்.எஸ்.வி ஏன் கண்ணீர் வடித்தார் என்று எஸ்.பி.பி  சொன்னதைத் தெரிந்து கொண்டு அதற்குக் காரணமான பாடலையும் பார்த்து மகிழவும்.

இந்தியாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சவுத்ரி சலீல் சவுத்ரி பற்றி  இசை விமர்சகர் ஹாஜி எழுதியதை படிக்கும் போது அவரின் பன்முகத் திறமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கொஞ்சம் ஹிந்துஸ்தானி இசை பற்றியும் கூட நாம் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் மலையாள திரை இசை பற்றிய ஒரு கட்டுரை கட்டுரை கூட நாம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. 

ஆனால் இங்கே ஒரு தமிழன் ஹிந்துஸ்தானி இசையை நக்கல் செய்ய
ஒரு விரிவான விவாதம் நீண்டிருக்கிறது. பின்னூட்டங்களை அவசியம்
படிக்கவும். கட்டுரையை விட அவை மிகவும் முக்கியமான பகிர்வு.

அருண் நரசிம்மன் எனது பிரியத்துக்குரிய இசை இளம் மேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸின் ஒரு கச்சேரிக்கு எழுதியுள்ள விமர்சனம் இங்கே உள்ளது. அவரது வலைத்தளத்தில் இன்னும் பல விமர்சனக் கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம்.

காதில் அடைத்துக் கொள்ள பஞ்சு கொடுத்து ஒருத்தர் இசை நிகழ்ச்சி நடத்தினாராம். ஏன் என்று அவர் வாயாலேயே சொல்வதை றேடியோஸ்பதி தளத்தின் பேட்டியில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழனின் இசை அடையாளமான பறை இசையின் பெருமையை விரிவாகவே இங்கே மா.அமரேசன் எழுதியிருக்கிறார். நாடி நரம்புகளையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் அந்த இசையை சாவு மேளம் என்றும் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது வருத்தத்திற்குரியது. அந்த நிலையை மாற்ற இன்று முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் போன்ற இடதுசாரி முற்போக்கு இயக்கங்களின் பங்கு மகத்தானது.

எங்கள் சங்கத்திலும் மாநாடுகளின் ஒரு பகுதியாக நடைபெறும் மக்கள் ஒற்றுமை கலை விழாக்களிலும் இப்போது பறை இசை நிகழ்ச்சி தவறாமல் இடம் பெறுகிறது. சென்ற ஆண்டு சென்னையில் நடந்த எங்கள் தென் மண்டல மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பிரச்சாரப் பயணத்திலும் தப்பாட்ட நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.

இதோ அந்த புகைப்படங்கள்






ஆனால் இந்த கலைக்கு உரிய அங்கீகாகரம் வழங்க வேண்டிய அரசே
ஒதுக்கி வைத்த கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்த ஒரு கலைஞனின் குமுறலான ஒரு கடிதத்தை படியுங்கள்.

கம்பீரமான பறை இசையின் முழக்கத்தோடு தமிழர்களின் வீர 
விளையாட்டுக்களான சிலம்பாட்டத்தையும்  இன்னொரு கலை
வடிவமான புலியாட்டத்தையும்  இந்த இரண்டு காணொளிக்
காட்சிகளில் கண்டு ரசியுங்கள்.

இவை எங்கள் சங்க மாநாட்டுப் பேரணியின்போது எடுக்கப்பட்டது.
நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும்.
நாளை சந்திப்போம்.
 


Thursday, May 29, 2014

கத கேளு, கத கேளு,

இளையராஜாவின் குரலில் இரண்டு பாடல்கள் மேலே சொன்ன
தலைப்போடு துவங்கும்.

கத கேளு, கத கேளு மைக்கேல் மதனகாமராஜன் கதய
நல்லா கேளு 

என்று ஒரு பாடல்,

கத கேளு, கத கேளு, கரிமேட்டுக் கரிவாயன் கத கேளு

கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கதையை ரசித்து 
வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான் தேர்தல் வாக்குறுதி
என்ற பெயரில் சொல்லப்படுவதையும் கதையாகக் கேட்டு
ரசித்து மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அந்த கதையை விட்டு விட்டு வேறு கதைகளை இப்போது
பார்ப்போம். 

இந்த பதிவர்கள் அறிமுகம் என்று நான் சொன்னால் அதற்காக
நீங்கள் என்னை அடிப்பதே பெரிய கதையாகி விடும். அதனால்
நான் ரசித்த கதைகள் என்று சொல்வது சரியாகும். அல்லது
இணையத்திலும் செயல்படுகிற பதிவர்கள் எழுதி இணையத்தில்
உள்ள சிறுகதை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும். 

வறுமையில் தவிக்கும் பெற்றோர் சண்டை போடக்கூடாது
என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் குழந்தையின் 
வேண்டுதல் நிறைவேறினாலும் குழந்தை ஏன் கடவுள் மீது
கோபமாய் உள்ளது என்பதை சிவகாசிக்காரனின் பக்கத்தில்
பாருங்கள்.

அப்பத்தா  செத்துப் போனதுக்கு இந்த்ப் பெண்ணிற்கு கோபம்
என் வருகிறது என்று திருமதி தேனம்மை லட்சுமணன் 
சொல்வதையும் படியுங்கள்.

ஒரு மாவீரனை சாதாரண சுடலை முத்தாக மாற்றியது யார்?  
என்று தோழர் மாதவராஜின் கதையைப் படித்தால் தெரியும்.
உங்கள் கண் முன்னாலும் பல முன்னாள் மாவீரர்கள் 
தோன்றுவார்கள். இதில சத்தியமா அரசியல் எதுவும் இல்லீங்க.

லிபரல் பாளையத்தில் மூன்று ஆண்டுகள் முன்பாக நடைபெற்ற
தேர்தலில்   ஆதவன் தீட்சண்யா வெற்றி பெற வைத்த ஏழு அ
கட்சி வேட்பாளர்களுக்கும் 7 ஆ கட்சி வேட்பாளர்களுக்கும்
தற்போதைய தேர்தல் முடிவுகளுக்கும் யாதொரும் தொடர்பில்லை
என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

அடிமைகளுக்கு தாய்மொழி இல்லை என்று நாடறிந்த 
பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் காக்கா  மூலம் நமக்கு
சொல்கிறார். சுதந்திரத்தின் அருமையை உண்ர்த்துகிறார்.

இப்படிப் பட்ட  தைரியமான அதிகாரிகள் இருந்தால் எப்படி
இருக்கும் என்ற ஏக்கம்  உங்களுக்கு வருமளவு எழுதியுள்ளார்
எங்கள் முன்னோடி காஷ்யபன்.

எனது மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளதாக எனது
அறிமுகத்தில் சொல்லியிருந்தேன். அதில் ஒரு சிறுகதையை
இங்கே படியுங்கள்.  இது நூற்றுக்கு நூறு அரசியல் கதைதான்
என்று சொல்வதில் தயக்கமே இல்லை.

சரி நாளை வேறு ஒரு கருப்பொருளோடு சந்திப்போம்

 

Wednesday, May 28, 2014

கவிதை அரங்கேறும் நேரம்

இனி மின் வெட்டு இல்லை
என்றோர் தலைப்புச் செய்தி.

ஆதவன் வந்திடாத
முன் காலைப் பொழுதில்

இருளும் புழுக்கமும்
சூழ்ந்த அறையில்

கொட்டும் வியர்வையில்
கண்களைச் சுருக்கி

படித்து முடித்தேன்
அச்செய்தியை.

இப்போது இங்கே
மின் வெட்டு.

இன்றைக்கு சங்கப் பணியாக விருத்தாசலம் செல்லவுள்ளதால்
காலையிலேயே  பதிவெழுதிடலாம் என்றால் ஐந்து மணிக்குப் 
போன மின்சாரம் இப்போதுதான் வந்தது.

பக்கம் பக்கமாக பேசுவதை விட பத்து வரி கவிதை மூலம்
உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிமையானது. வலிமையானது.

இன்றைய களம் கவிதை.

இயற்கையின் சுழற்ச்சியாய் வருவதை தீட்டு என்று சொல்லி
மூன்று நாட்கள் ஒதுக்கி வைப்பதைக் கண்டு அறச்சீற்றத்துடன்
தேனம்மை லட்சுமணன் இங்கே கொதித்துள்ளார்.

தன் வாழ்வை பணயம் வைத்து நமக்கு சோறிடும் விவசாயியின்
வலியை இனியவன் இங்கே அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.
மணமக்களை வாழ்த்திய ஒரு கவிதையையும் கூட நீங்கள்
பார்க்கலாம்.

ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறாததால் உருவான கோபத்தில்
பொங்கியுள்ளது மோகனன்.

உங்கள் கவிதைகளை பகிர்ந்து கொள்ளும் நல்லதொரு தளமாக 
லங்காஸ்ரீ கவிதைகள் உள்ளது. அதிலே பாலையும் தண்ணீரையும்
பிரித்துக் கொள்வது உங்கள் பொறுப்பு. அங்கே சென்றால் உங்களுக்கே
காரணம் புரியும்.

இந்தியா அதிர்ந்த நிர்பயா சம்பவத்தின் வேதனையை, வலியை,
அரசுகளின் அலட்சியத்தை கண்டு தோழர் இரா.தெ.முத்து
எழுதிய கவிதை இது. நிலைமை இன்னும் மாறவில்லை என்பது
பெருந்துயரம்.

அதே புதுடெல்லியில் காரணமே இல்லாமல் கொல்லப்பட்ட
வட கிழக்கு மாநில இளைஞனின் வேதனையை இங்கே 
கவின்மலர் கொட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் கவிதை
வடிவாக.

தென்றல் வலைதளத்தின் ஒரு அழகிய காதல் கவிதையோடு 
விடை பெறுகிறேன்

சரி, நாளை சந்திப்போம்

 

 


Tuesday, May 27, 2014

கோச்சடையான் - முடிவாக சொல்வது என்ன?

மக்களவைத் தேர்தல், ராஜபக்சே வருகை போன்றவற்றை விட 
பரபரப்பாக இணையத்தில் விவாதிக்கப்படுகிற ஒரு விஷயத்தைப்
பற்றி இங்கே பார்ப்போம்.

முன்னெல்லாம் ஒரு திரைப்படம் வெளி வந்தால் அதற்கடுத்த
வாரப் பத்திரிக்கையில்தான் விமர்சனம் படிக்க முடியும். ஒரே
நாளில் நான்கைந்து படங்கள் வெளியானால் அவை தியேட்டரை
விட்டு வெளியேறியதற்குப் பின்பு கூட விமர்சனம் வரும்.

இப்போதெல்லாம் படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே முகநூலில்
உடனடியாக ஸ்டேட்டஸ் வந்து விடுகிறது. அன்றிரவே வலைப்பக்கத்தில்
பிரித்து மேய்ந்து விடுகிறார்கள்.  சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டு
இருக்கும் போதே "மரண மொக்கை, மாட்டிக் கொண்டோம்" என்று
என் மகன் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தான்.

வரும், ஆனா வராது என்ற வடிவேலுவின் காமெடிக்கு இலக்கணமாக
திகழ்ந்த கோச்சடையான் பற்றி நம்ம பதிவர்கள் போட்டுள்ள
விமர்சனம் பற்றி பார்ப்போம்.



பிளேடிபீடியாவில் கார்த்திக் சோமலிங்கம் சொல்வது "உயிரற்ற பொருட்கள், உயிரோட்டத்துடன் தத்ரூபமாக இருக்கின்றன - இதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்! ஆனால், உயிருள்ள ஜீவன்கள் தான் உயிரற்று பரிதாபமாக நடமாடுகின்றன!"

தமிழ் சினிமாவுக்குபுதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அது நிஜ உருவங்களை நிழலாமட்டுமே காட்டுகிறது என்பது இன்றைய வானத்தின் அழுத்தமான 
கருத்து.

அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி என்று நம்மை சிரிக்க வைக்கிறார் கோவை ஆவி

மேக்கப் என்ற பெயரில் மாவுக்கலவையை முகத்தில் பூசிக்கொண்டு, சின்ன உடலில் பெரிய தலையோடு நடிப்பது புதிய முயற்சி என்றால், கொஞ்சம் எசக்குபிசக்காக, தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே மொக்கையாக இருந்தாலும், கோச்சடையானில் ரஜினி செய்திருக்கும் motion capture முயற்சியை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.  மொத்தத்தில் ஆகச்சிறந்த படமெல்லாம் இல்லை என்றாலும் மொக்கைப்படமும் இல்லை.  கேலி கிண்டல்களை எல்லாம் உடைத்து நல்ல பொழுதுபோக்கு படமாகத்தான் வெளிவந்திருக்கிறது கோச்சடையான். கண்டிப்பாக அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். பார்க்கலாம் என கமலைக் கொஞ்சம் நக்கலடித்து ரஜனியை பாராட்டுகிறார்      டான் அசோக்

கோச்சடையானின் ஸ்டன்ட் காட்சி உண்மையில் கலக்கல் கிராபிக்ஸ் தான். வாழ்த்துக்கள் சவுந்தர்யா. அடுத்து ராணாவின் காட்சி. க்ளைமாக்ஸ் காட்சி பயங்கர அப்ளாஸ் மழை.. ரஜினியின் ஒவ்வொரு பஞ்சும் கத்தி கூர்மையாய் வந்து விழுகிறது.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடிய வசனங்களும் நிறைய.. என்பது ஹாரியின் கருத்து

எம்.ஜி.ஆர்.-சிவாஜியை போல் வயதானவராக இருந்து இளைஞனாக வேடம் போடும் முறையை தாண்டி; அடுத்தக் கட்ட வளர்ச்சிப்போல், இன்றைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு வயதான நோயாளி நடிக்காமலேயே இளம் மாவீரனைப் போல் மாயாஜாலத்தில் மக்களை ஏமாற்றலாம் என்கிற முறை மிக மோசமான முன் உதாரணம் என்று வே.மதிமாறன் கண்டிக்கிறார்.

ஆசியாவின் முதல் மோஷன் கேப்சரிங் திரைப்படத்தைவிட நிக்கில்டன் சேனலில் வரும் நிஞ்சா ஹட்டோரி சூப்பராக சுவாரஸ்யமாக இருக்கிறது. ஒருவேளை நிஜ ரஜினியையே வைத்து கே.எஸ்.ரவிக்குமார் ராணாவை இயக்கியிருந்தால் வேற ரேஞ்சுக்கு போயிருக்கலாம். அறிமுக இயக்குனர் சிம்புதேவனுக்கே ஒரு வரலாற்றுப் படத்தில் ரிஸ்க் எடுக்கும் தில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்டாருக்கு ஏன் அச்சமென்று தெரியவில்லை. புதிய டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும்போதே அதை ரொம்ப டம்மியாக கொண்டுவந்தால், அந்த தொழில்நுட்பம் மீதே ரசிகர்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி வேலைக்கெல்லாம் கமல்தான் சரிபட்டு வருவார். வெகுஜன ரசிகனுக்கு புரியாதவாறு அறிவுஜீவித்தனமாக எதையாவது செய்து கையை சுட்டுக் கொண்டாலும் கலக்கலாக புது டெக்னாலஜியை எஸ்டாப்ளிஷ் செய்வார்
என்று டான் அசோக்கிற்கு முற்றிலும் மாறான கருத்துக்களை முன்வைப்பது புதிய தலைமுறை யுவகிருஷ்ணா 

சரி முடிவாக என்ன சொல்வது?

அதற்கு முன்பாக எனது வலைப்பக்கத்தில் பதிவு செய்ததை
இங்கே பகிர்கிறேன்.
 
படத்திற்குப் போக
பணம் கேட்ட மகனிடம்
"பரிட்சைக்கு போகும் போதே
படம் பார்க்கும் திட்டமா?"
உரத்த குரலில்
திட்டத்தான் ஆசைப்பட்டேன்.
பரிட்சை முடியும்
முதல் நாளே
படம் பார்க்க பரவசப்பட்டு
பரிட்சையை கோட்டை விட்ட
கதை மறந்தாயா நீ
என மனசாட்சி
என்னைக் குட்ட
பணத்தை அளித்தேன்
மௌனமாக.
 
அவன் இன்று சென்றது கோச்சடையானுக்குத்தான். 
 
அவனிடம் கேட்டேன். "நோ கமெண்ட்ஸ்" என்று நழுவி விட்டான்.
 
என் மனைவியின் தங்கை மகனும் போயிருந்தான். அவனிடமும்
கேட்டேன். 
 
"செமையா இருக்கு. சூப்பர், சான்சே இல்லை" என்றெல்லாம்
வர்ணித்தான். 
 
ஆக டெக்னாலஜி, திரைக்கதை, இயக்கம் இது பற்றியெல்லாம்
தெரியாத, கவலைப்படாத நான்காம் வகுப்பு போகும் பசங்களுக்கு
பிடிக்கிறது.