Wednesday, September 17, 2014

பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.
- பாரதி




எழுத்தில் ஆண் பெண் பேதம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்ற போதும், பெண்ணியல்பு சார்ந்த நுண்மன உணர்வுகளை துல்லியம் பிசகாது வெளிப்படுத்துவதிலும், பெண்ணியல் சிந்தனைகளை அவற்றின் வீரியம் குறையாது வழங்கும் எழுத்துவீச்சிலும் பெண் படைப்பாளிகள் சிலர் சிறந்து விளங்குகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

பெண்ணியம் என்றாலே ஆணாதிக்கத்தை எதிர்ப்பது என்ற ஒற்றைச் சிந்தனை மட்டுமே ஊறித்திளைத்திருக்கும் மனங்களுக்கு மத்தியில் பெண்களின் உரிமைகள்சலுகைகள் பற்றிய தெளிவையும்பெண்ணின் உடல்மனம்தொழில்குடும்பம்சூழல் சார்ந்த பிரச்சனைகளையும்அவற்றைத் தவிர்க்கும் ஆக்கபூர்வ சிந்தனைகளையும்நிர்வாக செயல் திறனையும்,  முன்னேற்றப் பாதைக்கான வழிமுறைகளையும் எடுத்துரைக்கும்பெண்மனம் சார்ந்த பல பிரத்யேக சிந்தனைப் பகிர்வுகளை முன்வைக்கும் பதிவுகளை இன்று பார்ப்போம்.

'பெண் என்றவுடன் உடல் சார்ந்த சிந்தனைகள் வராமல்மனம்சார்ந்தஅறிவு சார்ந்ததிறன் சார்ந்த  சிந்தனைகள் முன்னே வருமளவிற்கு ஆண்களின் அக உலகம் அமைந்திருக்கிறதா? அப்படிப்பட்ட ஆணை நாம் வளர்த்திருக்கிறோமா? ஆணை விடுங்கள். பெண்ணையாவது இந்தப் புரிதலோடு வளர்த்திருக்கிறோமா..?' தோழி உமா மோகன் அவர்களின் இந்தக் கேள்விகளுக்கு தலைகுனியாமல் பதில் சொல்ல நம்மால் இயல்கிறதா? போகவேண்டிய தூரத்தை நினைவில் பொதிந்தபடி விந்தை மனிதர்களை தலைநிமிர விடலாமா' என்று அவர் வீசும் வினாவின் விசை நமக்கான கடமையையும் சமுதாயப் பொறுப்புணர்வையும் சடக்கென நினைவூட்டுகிறது.  

மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா என்ற கவிமணியின் பாடற்படி, ‘நான் ஒரு பெண் அதனால் பீடுடன் வாழ்கிறேன்’ என்று சொல்லவேண்டிய ஒரு பெண், ‘நான் ஒரு பெண், அதனால் பீதியுடன் வாழ்கிறேன்’ என்று சொல்லப்படும் நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளாள். உலகளாவிய பாலியல் வன்முறை குறித்து ஆழம் இதழில் வெளிவந்த திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களின் கட்டுரை அத்தகைய தவறுக்கான தண்டனை குறித்த ஒரு விவாத மேடைக்கு நம்மை அழைக்கிறது. 

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை 
- பாரதி.

குற்றவாளி உருவாவதற்கு முன்னமே, அதன் காரணிகளை தடுப்பதே மிக அவசியமானதும், உடனடித் தேவையும் ஆகும். மனதளவில் பாலியல் வன்முறையை வெறுக்கும் ஆணும் கூட ஏதேனும் ஒரு வகையில்ஆண் என்ற ஆதிக்கம்/ சலுகை பெறும் உணர்விலிருந்துமுழுமையாக விடுபட்டவனில்லை. எனவே, சமூகத்தை மாற்றியமைக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில யோசனைகளை இங்கே தர விரும்புகிறேன் என்ற முன்னுரையோடு ஆண்களுக்கான பத்து யோசனைகளை முன்வைக்கிறார் மாற்று தளத்தில் திரு.சிந்தன் ரா அவர்கள்.

நல்ல உத்தியோகங்களில் அமர்ந்து சுய பொருளாதார மேம்பாட்டை அடைந்து இருக்கின்ற பட்சத்திலும் அவ்வாறு ‘வளர்ந்திருக்கிற பெண்ணை மணமுடிக்க ஆண்கள் தயங்குகின்றனர். இன்னும் ஆண்களுக்கு சுயத்தோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற பெண் தம் வாழ்வை ‘பயமுறுத்துகிற ஒருத்தியாகவே தெரிகிறாள் என்று துணிவுடன் தன் கருத்தைப் பதிக்கிறார் தோழி மணிமேகலா.

ஒரே நேரத்தில்வீட்டையும் கவனித்துக் கொண்டு செய்யும் பணியையும் சிறப்பாக செய்வதென்பது இரட்டைக் குதிரை சவாரி போன்றது. இரண்டின் கடிவாளமும் கையில் சரியாக இருப்பது முக்கியம். ஒன்றை லூசாக விட்டுவிட்டாலும் அது நம்மை குப்புறத் தள்ளிவிடும். பணிக்குச் செல்லும் ஆணை விட கட்டாயமாக பணிக்குச் செல்லும் பெண்ணுக்கு எல்லா இடங்களிலும் பொறுப்புகளும் வேலைகளும் அதிகம்தான் என்கிறார் தோழி தேனம்மை லெக்ஷ்மணன்.

பெண்ணை வெறும் கைப்பாவையாக வைத்திருந்த காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான பெண்களின் வளர்ச்சி முன்னேற்றத்தை எடுத்தியம்பும் தோழி பவளசங்கரி, 'நவீன இந்தியாவில் பெண்களின் நிலையில் பெரும் முரண்பாடுகள்தான் இருக்கிறது. ஒருபுறம் வெற்றியின் உச்சத்தை விரைவாக எட்டும் அவர்கள் மறுபுறம் தம் சொந்த குடும்ப உறுப்பினர்கள் மூலமாகக்கூட பலவிதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள்' என்ற சுடும் யதார்த்தத்தை முன்வைக்கிறார். 

ஒரு காலத்தில் அதீதமாய் அடக்கியாளப்பட்டிருந்த காரணத்தால், விடுதலை கிடைத்ததும் கரைகள் உடைத்த காட்டாற்று வெள்ளமாய்ப் பயணிக்க முனைகின்றனர் இவர்கள். தறிகெட்ட காட்டாற்று வெள்ளம் அழிவையே தரும் என்பதை உணராமல் போனதேனோ? என்ற ஆதங்கத்துடன் பெண்ணியம் குறித்த தன் பார்வையைப் பதிகிறார் தோழி ஹூஸைனம்மா. இவரது இக்கட்டுரை அமீரகத் தமிழ்மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்ற கட்டுரை என்பது சிறப்பு. 

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் என்றார் பாரதி. இங்கே ஹெச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட மனைவியை ஒரு கொலைக் குற்றவாளி போன்று வீட்டுச்சிறையில் அடைத்துவைத்து அவளை உடலாலும் மனத்தாலும் வாட்டும் விந்தைக் கணவனை என்னவென்று சொல்வது? மருத்துவர் பூங்குழலி அவர்களின் ஆதங்கப்பதிவு மனம் அழுத்துகிறது. 

நான்கு பெண்கள் இணைந்து உருவாக்கியுள்ள நான்கு பெண்கள் தளம் பெண்களுக்கான விஷயங்களைப் பேசுகிறது. சமீபத்திய ஒரு ஆய்வறிக்கையின்படி, உலகத்திலேயே அதிகமான அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாவது நம் இந்தியப் பெண்கள்தான்: 87%! இந்தியப் பெண்கள் எப்போதுமே ஏதோ ஒருவகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்கிறார் எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான திரு.சேதன் பகத். இந்தியப் பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்க அவர் முன்வைக்கும் ஐந்து யோசனைகளைப் பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள். 

ஒரு குடும்பத்தின் அச்சாணியென முக்கியப் பொறுப்பை வகிக்கும் பெண் தன் ஆரோக்கியத்தில் கவனம் வைப்பது வெகு அவசியம் அல்லவா? பல பெண்கள் அழகைப் பேணுவதில் எடுக்கும் சிரத்தையில் ஒரு பங்கைக்கூட தங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் எடுத்துக் கொள்வதில்லை. திருமணமாகி ஒரு குழந்தை பெறும்வரை தங்கள் உடலமைப்பில் கவனம் வைப்பவர்கள் ஒரு குழந்தை பிறந்தபின் வாழ்க்கையே முடிந்துபோய்விட்டது போல் உடலளவிலும் மன அளவிலும் தளர்ந்து போய்விடுகின்றனர்.   

பொதுவாகவே கர்ப்பம் உறுதிசெய்யப்படும் நாளிலிருந்து பிரசவமாகும் நாள் வரை மட்டுமல்ல, அதன் பின்னர் குழந்தையைப் பராமரிக்கும் நாட்களிலும் பெரும்பான்மையான இளந்தாய்மார்களுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பல பிரச்சனைகள் எழக்கூடும், அவற்றையெல்லாம் சமாளித்து மீளும் வழிகளைப் பற்றிப் பரிந்துரைக்கிறது தாய்மை ஒரு இனிய பயணம் என்னும் தளம். பெரியவர்கள் துணையின்றி வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் தனித்து வாழும் தம்பதியினருக்கு ஒரு வரப்பிரசாதம் இத்தளம்கர்ப்பிணிகள் விமானப்பயணம் செய்யலாமா என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறது இப்பதிவு.

குழந்தைப்பேற்றுக்குப் பின் பல பெண்களுக்கு வயிறு தொளதொளா என்று ஆகிவிடும். அதற்கு முறையான உடற்பயிற்சி செய்தால் தளர்ந்துபோன வயிற்றுத்தசைகள் இறுகி, மீண்டும் கட்டுக்கோப்பான உடலைப் பெறலாம். அதற்கான எளிய  உடற்பயிற்சிகள் இங்கே.

பெண்களுக்கு உடலியல் சார்ந்த மற்றுமொரு பிரதான பிரச்சனை வெளியிடங்களில் சரியான கழிவறை வசதியின்மை. கூச்ச சுபாவத்தின் காரணமாகவும், பல பொது இடங்களில் கழிவறை வசதி இல்லாத காரணத்தாலும் பெண்கள் சிறுநீரை அடக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதையும் அதனால் உண்டாகும் உடல்நல பாதிப்புகளையும் பற்றி தோழி அகிலா எழுதியுள்ள விழிப்புணர்வுப் பதிவு இது. அனைவரும் அவசியம் படித்துத் தெளியவேண்டிய விஷயமும் கூட.

இன்றைய பதிவுகள் பயனுள்ளவையாய் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். நாளை வேறொரு தலைப்பிலான பதிவுகளைக் காண்போம்.


உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா 
– பாரதி.


54 comments:

  1. வணக்கம்
    சகோதரி

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒவ்வொரு பதிவரையும் பற்றி மிக அழகாகன விளக்கத்துடன்... அசத்தியுள்ளீர்கள் அறிமுகப்பக்கம் ஒரு ரவுண்டு போயிற்று வருகிறேன்... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் அறிமுகப் பதிவர்கள் தளங்களுக்குச் சென்று தகவல் அறிவித்தமைக்கும் அன்பான நன்றி ரூபன். வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
    2. அன்பினிய கீதா,

      மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், இனிய தோழி. என் கட்டுரையும் தங்கள் பார்வையில் பட்டிருப்பதில் உண்மையில் உற்சாகமாக இருக்கிறது. மற்ற அனைவரின் படைப்புகளையும் வாசிக்கும் ஆர்வம் உங்கள் யதார்த்தமான முன்னுரையில்.. அவசியம் வாசிக்க வேண்டிய பதிவுகள். அறிமுகத்திற்கு நன்றி.

      அன்புடன்
      பவளா

      Delete
    3. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பவளசங்கரி.

      Delete
  2. எழுத்துக்களை ஆண் எழுத்து, பெண் எழுத்து என்று பிரித்துப் பார்ப்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். ஆனாலும்கூட உணர்வு நிலைகளில நின்று சில நுட்பமான விஷயங்களை எழுத்தில் வடிக்க அந்தந்தப் பாலினரால்தான் முடிகிறது. இங்கே பெண்களின் பாதுகாப்புக் குறித்த கவலை கொண்ட, முன்னேற்றம் பற்றி அக்கறை கொண்ட, உடல்நலத்திற்கான பயிற்சி கற்றுத் தந்த இத்தனை பதிவுகளையும் கண்டதும் நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்புதான் மனதில் ஓங்கி ஒலித்தது. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்துப்பதிவுகளையும் உள்வாங்கி வாசித்திருக்கிறீர்கள் என்பதை உங்கள் கருத்துரை மூலம் அறிகிறேன். நன்றி கணேஷ்.

      Delete
  3. ஆழ்ந்த உணர்வுகளை நெஞ்சில் பதியவைக்கும் படைப்புகள் தருவதில்
    பெண்கள் இன்னும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
    மிகவும் அருமையான படைப்பாளிகளை சுமந்து வந்த இன்றைய சரம்
    வாசம் மிகுந்தது.
    வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. ஆமோதிக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மகேந்திரன்.

      Delete
  4. ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்து திறமையான தளங்களின் அணிவகுப்பு பயன்மிக்கவை..பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மேடம்.

      Delete
  5. பயனுள்ள பதிவுகளைப் பதிவினில் தொகுத்தளித்தது பாராட்டுக்குரியது.
    அறிமுகமாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. சிறப்பான அறிமுகம் கொடுத்துள்ளமைக்கு மிக்க நன்றி பூங்குழலி. எனக்குத் அறிவித்தமைக்கு நன்றி ரூபன், ராஜி, வலைச்சரம். :)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தேனம்மை.

      Delete
  7. நன்றி கீதமஞ்சரி. பூங்குழலி என்று டைப் செய்துவிட்டேன் :)

    ReplyDelete
  8. இந்தப் பதிவே - பதிவுகளின் விளக்கமும், அறிமுகம் செய்துள்ள விதமும் - அருமை கீதா. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    தகவலுக்கு நன்றி ரூபன், மற்றும் ராஜி மேடம். :-)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி ஹூஸைனம்மா.

      Delete
  9. பெண்ணின் பெருமையைப் போற்றும் பதிவர்கள்!
    எண்ணியே இட்டனை ஏற்பு!

    இன்றைய பதிவு மிக அருமை! அறியாத பதிவர்கள் அனைவரும்!
    அறியத்தந்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும் கீதா!

    அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் அறியாத பதிவர்கள் என்றால் வியப்பாக உள்ளது. வாசித்துப் பாருங்கள் இளமதி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      Delete
  10. மிகவும் அருமையான அரிதான பயனுள்ள அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    தங்களுக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    அன்புடன் கோபு [VGK]

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி கோபு சார்.

      Delete
  11. தன்னுடைய ஒவ்வொரு செயலிற்கும் அடுத்தவரின் பாராட்டுக்களை அங்கீகாரமாக நினைக்கும் நிலை விடுத்து, தன் செயல் எண்ணி சிந்தை குளிரும் பக்குவத்தையும் நெறிமுறைகளையும் வளர்த்துக் கொண்டால் அன்றி பெண்ணானவள் இந்த சமுதாயத்தில் வெறும் தோற்றப்பொருள் ஆவதை தவிர்க்க முடியாது.
    இன்றைய பதிவுகள் சிறப்பானவை, நன்றி தோழி.

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் அறியவேண்டிய ஏற்கவேண்டிய அருமையான கருத்து. நன்றி தோழி.

      Delete
  12. அனைத்து தளங்களும் மிக்க பயனுள்ள தளங்கள். உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
    இன்றைய நாளில் அறிமுகமாகியிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி ப்ரியசகி.

      Delete
  13. . அருமையான பயனுள்ள தகவல்கள் அடங்கிய தளங்களை இன்று வழங்கி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்கீதமஞ்சரி.

    இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி மேடம்.

      Delete
  14. அனைவரது தளங்களும் அறிந்தவை மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டுபவை .அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!நம்ம அகிலா மேடம் ப்ளாக் வைத்திருப்பது இப்போதான் அறிந்துகொண்டேன் .அவர்களது பதிவு நீங்க குறிப்பிட்டது மிக அத்யாவசியமான முக்கியமான ஒன்று.பகிர்வுகளுக்கு நன்றி கீதா .

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஏஞ்சலின்.

      Delete
  15. மிக அருமையான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  16. நல்ல விசயங்களைப்பற்றிய நல்ல அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கில்லர்ஜி.

      Delete
  17. மிக அருமையான ஆக்கப்புர்வமான கருத்துக்களுடன் அறிமுகப்படுத்திய விதம் மிகவும் அருமை.
    அனைத்துப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றி அருணா செல்வம்.

      Delete
  18. சிறப்பான பகிர்வுகள் இன்றைய வலைச்சர நாள் மகிழ்ச்சி மிகுந்த
    நாளாக அமைந்துள்ளது !பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வதை
    விடவும் செயலில் கண்டு மகிழும் வண்ணம் வளர்ச்சியடைந்து வருகின்றார்கள்
    என்பதை இப் பகிர்வும் உணர்த்தியுள்ளது ! வாழ்த்துக்கள் தோழி வாழ்த்துக்கள்
    அனைவருக்கும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துரை கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றி தோழி.

      Delete
  19. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வெங்கட்.

      Delete
  20. ஆழம் இதழில் வெளிவந்த எனது கட்டுரையை அறிமுகம் செய்துவைத்திருப்பதற்கு நன்றி, கீதா.
    நான்கு பெண்கள் தளத்தில் வந்த கட்டுரையும் நான் எழுதியதுதான். எனது இரண்டு கட்டுரைகள் ஒரே நாளில் அறிமுகம் செய்ததற்கு நன்றி.
    தகவல் சொன்ன திரு ரூபனுக்கும் நன்றி!
    அன்புடன்,
    ரஞ்சனி

    ReplyDelete
    Replies
    1. \\நான்கு பெண்கள் தளத்தில் வந்த கட்டுரையும் நான் எழுதியதுதான்\\ மிக்க மகிழ்ச்சி மேடம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி.

      Delete
  21. பயனுள்ள பதிவுகளை அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்.
    அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி முனைவரே.

      Delete
  22. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  23. பெண்களைப் பற்றிய பல outdated கருத்துக்களுக்குச் சொந்தக் காரர்களில் பலரும் பெண்களே என்னும் என் கருத்தினைப்பதிவு செய்கிறேன் இங்கு குறிப்பிட்டு எழுதி இருக்கும் பெண்கள் ஒரு சிலரே அறிமுகமானவர்கள். அவர்களும் ஏனைய பல தளங்களுக்கும் போய் வாசிக்க வேண்டும் என்பதும் என் தாழ்மையான கருத்து. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் மனந்திறந்த கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  24. நல்ல பகிர்வுகள் .நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆசியா.

      Delete
  25. அட்டகாசமான தொகுப்பு அக்கா! வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மைதிலி.

      Delete