Wednesday, September 9, 2015

வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்

இனிய காலை வணக்கம் !

அரங்கனைக் காண நாம் ஒவ்வொரு வீதியாய் சுற்றி வருகிறோம். என்னோடு இணைந்து நீங்களும் வருவதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.



சப்தப்ராகாரத்தில் ஏழாம் பிராகாரம் சித்திரை வீதிகள் தான்.  சித்திரைத் தேரும் பங்குனி கோரதமும் இந்த வீதிக்கான பெருமைகள். அவை மட்டுமா..

உடையவர் என்றழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் பிரதான சிஷ்யரான கூரத்தாழ்வான் திருமாளிகையும்,  உடையவரின் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகையும் இந்த வீதியில் தான் (கீழச் சித்திரைவீதி) உள்ளன.

மனித நேயம் மட்டுமே உண்மையான வழிபாடு என்பதை அப்போதே வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்பெருமானார் என்கிற உடையவர். அவரது குருவான பெரிய நம்பி ஸ்வாமியும் அப்படித்தானே இருந்திருப்பார்.. மாறனேர் நம்பி என்கிற பிராம்மணர் அல்லாத ஒருவருக்கு இறுதிச் சடங்கை அவர் செய்ததால் ஊரார் அவரை விலக்கி வைத்தனர்.

பெரிய நம்பி ஸ்வாமியின் திருமகள் அத்துழாய் இதைக் கண்டு மனம் பொறுக்காமல் ஒரு முறை அரங்கன் வீதி வரும்போது “என் தகப்பனார் செய்தது சரியென்றால் நீங்கள் இந்த இடம் விட்டு நகரக் கூடாது.. “ என்று வேண்ட அரங்கன் அப்படியே நகராமல் நின்று விட்டாராம்/ ஊர்க்காரர்கள் வந்து மன்னிப்பு கேட்டபின்னரே நகர முடிந்ததாம்.

பதிவுகளில் வீண் வம்பிற்கு இடந்தராமல்.. பிறர் மனம் புண்படாமல்.. அழகழகான கருத்துகளைப் பதிவு செய்து வரும் அற்புதமான பதிவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.

இதோ இன்றைய பதிவர்கள்...



ஹரணி பக்கங்கள்  என்கிற தலைப்பில் பதிவிடுகிறார்  தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த பதிவர்..தமிழ் பால் மாறாத காதல் கொண்டவர்.
சிறுகதைகள்.. நாவல்.. கட்டுரைகள்.. கவிதைகள் என பல தளங்களில் இயங்கி வரும் இவர் பல பரிசுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர்.

வலை வீசுதலில்
மீன்கள் சிக்குகின்றன
ஒரு போதும் 
நதியல்ல..

இலக்கிய ரசனையை அவர் நம்மோடு பகிரும் பதிவுகளைப் படித்து மகிழ உங்களை அழைக்கிறேன்.



பறத்தல்- பறத்தல் நிமித்தம்  நிலாமகளின் எழுத்துக் கூடு. இங்கே எண்ணப் பறவைகள் அடைபடுவதில்லை. அதன் சிறகுகளை விரித்துப் பறக்கும் பிரபஞ்சக் கூடாகவே அமைந்திருக்கிறது. எழுத்து குறித்த கவனிப்பும் நேர்த்தியும் சக மனிதர் மீதான கம்பீரப் பார்வையும் கொண்ட எழுத்தாளர் இவர். கவிதைகள் இவரின் சிறகுகள்.. கதைகள் இவர் அமரும் கிளை. ஏனோ தானோவென்று எழுதிப் பழகும் சராசரி வேடிக்கை மனிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது இவரின் பலம்.  பறவை வடிவிலொரு பரமன்  பறவையின் மொழியைத் தேடி அலைந்து கண்டுபிடித்தும் விடுகிற அதிசயத்தைப் படித்து ரசியுங்கள்.





எண்ணிய முடிதல் வேண்டும்  ஸ்ரீரங்கம் பற்றி சொல்லிக் கொண்டு ஸ்ரீரங்கத்து எழுத்தாளரை எப்படிச் சொல்லாமல் விடுவது..  பிரபல எழுத்தாளரின் மகள் என்கிற பெருமை ஒரு புறம்.. இவரே பிரபலம் என்கிற சுயபலம்..ஷைலஜா அவர்களின் எழுத்தாற்றல் பல பரிசுகளை அவருக்கு வாங்கித் தந்திருக்கிறது.
சமூகம்.. ஆன்மீகம் என்று எந்தத்துறையைத் தொட்டாலும் பரிமளிக்கிற எழுத்து வித்தை அவரிடம். பழக மிக எளிமை.. அன்புள்ள அப்பா அப்பாவை அவர் கொண்டாடுகிற இந்தப் பதிவைப் படியுங்கள்.



கற்றலும் கேட்டலும்  வலைப்பூவிலும் முகநூலிலும் சக்கைப் போடு போடும் இவர் நவீன ஆண்டாள்.. தமிழ் தன் அத்தனை வார்த்தைகளையும் இவரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. பாக்களில் எவ்வளவு வகை உண்டோ அவ்வளவும் இவரிடம் வரிசை கட்டி நிற்கிறது.  எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் புளியமரத்தின் கிளைகளில் தொங்கிக் கொண்டு எம்மை மங்களாசாசனம் செய்யும் என்று முன்பு நம்மாழ்வாரைக் கேட்பார்களாம். அவர் பாசுரங்களின் இனிமையும் பெருமையும் அப்படி. இந்த நவீன ஆண்டாளுக்கும் இத்திறமை எம்பெருமான் அருளாய் இருக்குமோ.. முகநூலுக்கு வந்து இவர் பாக்களின் ருசியை அனுபவியுங்கள்..  சிறுகதைகள் முயற்சியிலும் இவர் சளைக்கவில்லை என்பதற்கு உதாரணமாய் பிரமி !


இனி ஒரு முகநூல் கவிதை...  குறிப்பிடத்தக்க கவிதாயினிகளில் ஒருவரான இவர் எழுத்துக்களில் இயல்பாய்ச் சொல்வது போல வந்து விழும் வார்த்தைகளினுள்ளே ஒளிந்திருக்கும் நம்மைத் திடுக்கிடச் செய்யும் அற்புதம்..



தீரா வேட்கையுடன் 
நீந்தி வருகிறதோர் நீரரவம் 
நிதானமாய் பற்றி அருந்துகிறது 
நிலைப்பெருங்கடல் ….

கனிமொழி.ஜி.



நாளை சந்திப்போம்...

28 comments:

  1. அனைத்தும் தொடரும் சிறந்த தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. இரண்டாம் நபர் புதியவர். மற்ற இருவரின் தளங்களும் அறிவேன். அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றியும் வணக்கமும்

      Delete
  3. ஷைலஜாவைத் தவிர மற்றவர்கள் புதுசு. நிலாமகளைச் சிலரின் பதிவுகளின் பின்னூட்டங்களில் பார்த்திருக்கேன். பதிவுகள் படித்தது இல்லை.

    ReplyDelete
    Replies
    1. அருமையான படைப்பாளி..

      Delete
  4. எனக்கு அனைவரும் புதியவர்கள்தான்! இனி தொடர்கிறேன்! அனைவருக்கும் நன்றிகள்!!

    ReplyDelete


  5. பழைய நண்பர்கள் வெகு காலம் கழித்து ஒருவரை ஒருவர் சந்திக்க நேரிடில்
    எங்கே, பழைய நினைவுகள் மறக்க முயற்சித்து மறக்க இயலாதவை மீண்டும் உயிர் பெற்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுமோ என்ற அச்சம்
    உருவாவது இயல்பே.
    இருப்பினும் உண்மை நட்பின் இலக்கணமே வேறு:
    அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு.
    நல்ல நண்பர்கள் அறிவுரை தரும் ஆசான் மட்டும் அல்ல.
    மறக்கும், மன்னிக்கும் மறுபிறவி எடுக்க உதவி செய்யும் மாதவனும் ஆவர்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. பிரமி கதை இயல்பாக எவர் ஒருவர் வாழ்விலும் நடக்கக் கூடியதே.
      கதை சொல்வதில் ஒரு செயற்கையோ அல்லது வார்த்தை விளையாடல் இல்லாதது எனைக் கவர்ந்த ஒன்று. முன் இருக்கும் பின்னூட்டத்தின் முகப்பு வரிகள் விட்டுப்போனது.
      சுப்பு தாத்தா.

      Delete
    2. நன்றி சுப்பு தாத்தா அவர்களே

      Delete
  6. அரங்கனின் தேர் தரிசனத்தோடு
    அருமையான பதிவர்களின்
    அறிமுகம்...! பாராட்டுக்கள்..!!

    ReplyDelete
  7. பெருமாள் - அங்கேயே நின்று - எது சரியென்று உணர்த்திய சம்பவத்தை அறிந்து மனம் நெகிழ்ந்தது..

    கோபாலன் கோல் கொண்டு நின்றிருந்தால் மந்தைகள் திருந்தியிருக்கும்.. ஆனால், அவன் குழல் கொண்டு அல்லவா நிற்கின்றான்!..
    மந்தைகள் தானும் - மதி மயங்கிக் கிடக்கின்றன!..

    பெருமாளே சரணம்!..

    ReplyDelete
    Replies
    1. அவன் அறிவான்.. சரணம் புகுவது மட்டுமே நமக்கு..நன்றி

      Delete
  8. தங்களை அதிகம் வலைத் தளத்தில் காண முடியாவிட்டாலும் வலைச் சரத்தின் வாயிலாக ,தங்கள் எழுத்துகளை முன்னுரை விளக்கமாக கண்டு களிக்கிறேன்! நான் தங்களின் நீண்ட நாள் இரசிகன் என்பதை
    அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி!வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் வணக்கம் அய்யா

      Delete
  9. அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள், தங்கள் தொகுப்பு அருமை,,,, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மகேஸ்வரி பாலசந்திரன் !

      Delete
  10. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  11. சிலநாட்களாக இணையம் பக்கம் வரவில்லை! வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு வாழ்த்துக்கள்! சிறப்பான பதிவர்களை ஸ்ரீரங்க நாத சரிதத்துடன் அறிமுகம் செய்தது புதிய உத்தி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்பிற்கு நன்றி தளிர் சுரேஷ்

      Delete
  12. வலைச்சர ஆசிரிய வாரத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.. இன்றைய பதிவைப் பகிந்ததற்கு மிகவும் நன்றி. நல்ல பதிவுகளை

    அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  13. அறிமுகங்கள் கண்டு மகிழ்ச்சி. அரங்கன் தரிசனம் கண்டேன். நேற்று கும்பகோணத்திற்கு மூன்று கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் காணச் சென்றதால் தாமதமான வருகை. வாய்ப்பிருப்பின் எனது தளம் வருக. நாளை சந்திப்போம்.
    http://www.drbjambulingam.blogspot.com/2015/09/blog-post_9.html

    ReplyDelete
  14. உங்கள் ரசிக மனம் ரசிக்கிறேன்...

    ReplyDelete
  15. //மனித நேயம் மட்டுமே உண்மையான வழிபாடு என்பதை அப்போதே வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்பெருமானார் என்கிற உடையவர். அவரது குருவான பெரிய நம்பி ஸ்வாமியும் அப்படித்தானே இருந்திருப்பார்.. மாறனேர் நம்பி என்கிற பிராம்மணர் அல்லாத ஒருவருக்கு இறுதிச் சடங்கை அவர் செய்ததால் ஊரார் அவரை விலக்கி வைத்தனர்.// என்ன ஒரு அற்புதமான மனிதர்..... எழுத்தின் வல்லமை அற்புதம்பா ரிஷபா...

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா..

    ReplyDelete
  16. அனைவருக்கும் இனிய பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    ReplyDelete