Sunday, September 13, 2015

வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்



கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

ஆண்டாள்.. திருப்பாணாழ்வார் ஐக்கியமான மூலஸ்தானம்.. 108 திருப்பதிகளில் முதன்மை..

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு....

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.


இவரைப் பேசும் அரங்கன் என்றே அழைப்பார்கள்.  பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி மடுத்து நிறைவேற்றித் தரும் நம்பெருமாள் மிக சௌலப்யமும் (எளிமையும்) கூட.

அந்த நாளைய கதை இது.  ஆசார்யர்களில் ஒருவரான நம்பிள்ளையின் சொற்பொழிவு ரங்க மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் கோஷ்டியோ என்று சிலாகிப்பார்களாம். பெருமாளுக்குப் பின் செல்லும் பக்தர்கள் கூட்டம் போலவே இவர் பின்னும் அந்தளவுக்கு செல்வார்களாம்.

அத்தனை பேர் கவனமும் உபன்யாசத்தில். மூலஸ்தானத்தில் யாருமில்லை. திருவிளக்குத் தூண்டுவான் (விளக்கு அணையாமல் நெய் ஊற்றிப் பார்த்துக் கொள்பவர்) மட்டுமே. அவரும் பேச்சில் மயங்கி சந்நிதியை விட்டு விலகி வந்து எட்டிப்பார்த்து கேட்டு ரசிக்கும் நேரம்..
யாரோ அவர் முதுகருகில் நின்று நம்பிள்ளையின் பேச்சைக் கேட்பதாகத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் .. அரங்கன் ! தன் அர்ச்சை நிலையை விட்டு எழுந்து வந்து கவனித்துக் கொண்டிருந்தாராம்.
திருவிளக்குத் தூண்டுவான் கைக் கோலால் தட்டி சொன்னாராம். “போய்ப் படும்”
என்ன ஒரு சுதந்திரம்.. அவன் அடியவருக்குக் கூட !

இனி இன்றைய பதிவர்கள்..



பூ வனம் ஜீவியின் வலைப்பூ. எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக்களம் என்று பறை சாற்றும் இவரது எழுத்துக்கள் ரசனைக்குரியவை.
இரு கவிஞர்கள்.. இரு நினைவுகள் பதிவில் அவர் விவரிக்கும் சுவாரசியமான நிகழ்வைப் பாருங்களேன்..

"எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப்  புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்'என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே கையெழுத்திட்டார்.   முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.



கீத மஞ்சரி அவர்களின் கழங்காடு கல்லெனவே பாடலைப் பாருங்களேன்.. தமிழின் இனிமை என்ன அழகு.. மொழிபெயர்ப்பிலும் வல்லவரான இவரது தளம் சுவாரசியமான பல பதிவுகளைக் கொண்டது. பதிவர்களில் பிரபலம் இவர்.. அறிமுகப்படுத்தவில்லை.. படித்து ஆனந்தித்தைப் பகிர்கிறேன்..

சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம். 
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.

நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து


பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.



அடுத்த பதிவர்..  ஊஞ்சல்  கலையரசி அவர்கள்.. சமூகப் பிரக்ஞையுடன் பதிவிடும் இவரது பதிவுகள் எல்லா வகை ரசனைகளையும் பகிர்ந்து தருபவை.

காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.  பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது என்கிற பதிவைப் படித்ததும் எனக்கும் ஒரு திடுக்கிடல். இத்தனை நாள் அறியாத தகவல் இது. ஆனால் என் அம்மா.. மற்றும் பலரும் சமையல் ஆனதும் சாதம்.. துளி பருப்பு வைத்து காக்கைகளுக்கு உணவிட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். நீத்தார் கடன் போதும் வெறும் சாதம் மட்டுமே வைப்பார்கள். உப்பு சேர்ப்பதில்லை. ஆனால் உப்பு பறவைகளுக்கு ஆகாது என்பது மனதில் பதியவே இல்லை.
பல சுவையான பதிவுகளின் சொந்தக்காரர் இவரும்.


இனியாவின் வலைப்பூ இது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. 

பலாப்பழத்தை வெட்டாமலே அதன் சுளைகளை அறிய பழம்பாடல் ஒன்று பகிர்ந்திருக்கிறார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பதிவில்.

'பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !

வாழ்த்துகள் இனியா !

இன்னும் பல பதிவர்கள்.. பலர் வெளிச்சத்தில்.. சிலர் இன்னும் பரவலாய் அறியப்படாமல்.  இந்த முறை வலைச்சர ஆசிரியராய்த் தேர்வானபோது அறியப்படாத பதிவர்களைப் பற்றியே அதிகம் எழுத எண்ணினேன்.

நான் வலைப்பூவை விட்டு ஒதுங்கி முகநூலில் மூழ்கிப் போனதால் டச் விட்டுப் போனது. இன்னொன்று எனக்குப் போதிய அவகாசமும் இல்லை. இது என் குறையே. அதனால் என் முழு திருப்திக்கு என்னால் இந்த ஆசிரியர் பதவிக்கு நியாயம் சேர்க்க முடியவில்லை. எனக்குப் பின் வரும் வலைச்சர ஆசிரியர்கள் இந்த என் மனக் குறையை ஈடு கட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இனி இன்றைய முகநூல் கவிதை..


Meera Blossom என்கிற பெயரில் எழுதி வரும் மீரா லக்ஷ்மன்..

பச்சை கோடுகள்
இலைகளென்றும்
சிவப்பாய் இருப்பவை
பூக்களென்றும்
மஞ்சளெல்லாம்
பழங்களாகவும்
காய்கள் எங்கே என்று
கேட்ட என்னிடம்
எல்லாம் பழமாகிட்டு அத்தம்மா
என்றாள் குட்டிமீரா.
கிறுக்கிய சுவரோவியம்
அவளை போலவே அழகாய் இருக்க...
அழகுடா அம்முவென
தலைகோதி முத்தமிட்டேன்.
பாப்பா மரம் நல்லாக்கு என
மழலையாய் கொஞ்சி
இரட்டிப்பாய் இட்ட முத்தம்
கன்னத்தில்
சுவரோவியத்தை மிஞ்சும்
எழிலோவியமாய்!!


வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.
இந்த ஒரு வாரம் என்னோடு உடனிருந்த உங்களுக்கும்.. அன்பு நன்றி. !



Saturday, September 12, 2015

வலைச்சரம் - இரண்டாம் பிராகாரம் - 6ம் நாள்



ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்

பெரிய ஜீயர் என்றழைக்கப்படும் ஸ்ரீ மணவாள மாமுனிகள் அரங்கனுக்கே ஆசார்யன் என்கிற பெருமை பெற்றவர். ஒரு வருட காலம் அரங்கன் தம் உற்சவங்களை எல்லாம் நிறுத்திக் கொண்டு இவருடைய திருவாய்மொழி காலட்சேபத்தை (சொற்பொழிவை) கேட்டு மகிழ்ந்தாராம். இறுதி நாளன்று ஒரு பாலகனாய் வந்து மேலே சொன்னதை குரு வாழ்த்தாய் அருளினாராம்.

வேதநூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியுமுறங்கிப் போகும் நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும் பசி பிணி மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே

ஆழ்வார் பாசுரத்தின் அழகைப் பாருங்கள்.  வேதம் சொல்லிய 100 வயதுக் காலம் ஒருவர் வாழ்வதாய்க் கொண்டால் அதில் எப்படி எல்லாம் வீணாகிறது என்கிற தவிப்பு.. பேதை.. பாலகன்.. அது ஆகும் என்று பருவங்களைப் பிரிக்கிறார்.  இளைஞனாய் இருக்கும் காலத்தை ‘அது’ என்றே குறிப்பிடுகிறார்.
ஒரு இளைஞன் எப்படி உருவாகிறானோ அதுவே அவன் பிற்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால்.. யவ்வன அவஸ்தையை.. அது என்று நயமாகக் குறிப்பிட்டு காட்டுகிறார்.

என் ப்ரிய எழுத்தாளர் லா.ச.ரா.  அவர்கள் வார்த்தையைக் கேட்போமா..

ஒரு நல்ல புத்தகம் தூண்டி உன்னை ஆழ்த்தும் சிந்தனையும் சொகுஸுதான்.
நீ படிக்கும் புத்தகத்தில்
ஏதோ ஒரு பக்கத்திலோ
அதில் ஒரு வாக்கியத்திலோ  சொற்றொடரிலோ பதத்திலோ
அல்லது இரு பதங்களிடையே தொக்கி
உன்னுள்ளே நின்று கொண்டு உன்னை இடறி  நிறுத்தும்
அணு நேர மோனத்திலோ
நீண்ட பெருமூச்சிலோ
உன் கண்ணில் பனிக்கும் கண்ணீர்த் துளியிலோ
அந்தத் தருணத்தோடு நீ ஒன்றிப் போய்
உன்னை அடையாளம் கண்டு கொள்வது
அதுவே சொகுஸுதான்.. பெரிய சொகுஸு !


இனி இன்றைய பதிவர்கள்...



பால கணேஷ்  என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்துகிறவர்.. இவருக்கு அலுப்பு என்பதே வராதா.. இவ்வளவு சுறுசுறுப்பாய் செயல்படுகிற இவரது ஆற்றலில் நூறில் ஒரு பங்கு எனக்கு வாய்த்திருந்தாலும் எவ்வளவோ சாதித்திருப்பேன்..
பதிவுகளில் இன்னதுதான் என்கிற வரையறைக்கு உட்படாதவர்.. இவரது வாசிப்போ அளவில்லாதது.. அந்த நாள் சமாச்சாரங்கள் முதல் இந்த நாள் லேட்டஸ்ட் டெக்னிக் வரை இவருக்கு எல்லாமே அத்துப்படி.
இவரை நான் அறிமுகம் செய்யவில்லை..இங்கே.  யாரேனும் ஒருவருக்கு இவரைத் தெரியாமல் தற்செயலாய் விடுபட்டிருந்தால்.. அந்தக் குறை நீங்க வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தைகள்.
மேய்ச்சல் மைதானம் இவரது இன்னொரு தளம்.  நகைச்சுவையில் வல்லவரான இவர் சூழலை கலகலப்பாக்குவதில் சகல கலா வல்லவர்.

நான் பேச நினைப்பதெல்லாம்  சென்னைப் பித்தன் அவர்களின் வலைத்தளம்.
பதிவர்கள் பலர் பதிவிடுவதைக் கைவிட்டு விடும் இந்நாட்களில் இப்போதும் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட சில பதிவர்களில் இவரும் ஒருவர். வலைத் தளத்தில் மூழ்கி இருப்பதை நையாண்டி செய்தே ஒரு பதிவிட்டிருக்கும் இவரைப் போன்றோரால் இன்னமும் பதிவுலகம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது. வணக்கம் சென்னைப் பித்தன் ஸார்.

சும்மா இருக்க முடியுமா.. சாதிக்கப் பிறந்தவர்களால் ?  5 வலைப்பூக்களுக்கு சொந்தக்காரரான தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் பதிவுலகம் நன்கறிந்த படைப்பாளி. முகநூலிலும் இவரது எழுத்துக் கொடி பறக்கிறது. கவிதை.. பயணம்.. சமையல்.. விமர்சனம் இப்படி இவர் தொடாத எழுத்து இல்லை.
வாழ்த்துகள்..




தீதும் நன்றும் பிறர் தர வாரா  ரமணி அவர்களும் பிரபல பதிவர். இப்போதும் இவரது வலைத்தளம் சுறுசுறுப்பாய் இயங்குகிறது.  ஒவ்வொரு தலைப்பிலும் கவி புனையும் இவரது திறமைக்கு மயங்காதவர்கள் யாரேனும் உண்டோ ?!

மேலே சொன்னவர்கள் சிலர்தான். இம்மாதிரியான உற்சாகமான பதிவர்கள்தான் வலைத்தளம் சிறப்பாகச் செயல்பட காரணமாய் இருப்பதோடு வாசிப்பவரையும் தூண்டி எழுத வைப்பவர்கள்.
ஒரு சிலரை மட்டும் குறிப்பிட்டிருக்கிறேன் என்று எண்ண வேண்டாம்.  ஒரு காலத்தில் வலைத்தளம் மிகவும் ஈர்ப்புடன் இருந்தது. அதன் ஜீவன் குலையாமல் காத்து வருகிற இவர்களைப் போன்றோர்க்கு நம் நன்றி வணக்கம் எந்நாளும் உரித்தாகட்டும்.

நாளையோடு எனது வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு பெறுகிறது.. என்னோடு  இணைந்திருந்து உற்சாகப்படுத்தும் உங்கள் பேரன்பை நாளையும் எதிர்பார்க்கிறேன் என்று அன்போடு கூறிக் கொள்கிறேன்.

Friday, September 11, 2015

வலைச்சரம் - மூன்றாம் பிராகாரம் - 5ம் நாள்

அன்பின் வணக்கம்.

ஆன்மீகம் என்பதை விட்டு கலை என்கிற நோக்கில் பார்த்தாலும் ஸ்ரீரங்கம் கோவில் நம் கண்ணுக்கு விருந்தாகவே அமைகிறது. இன்றும் பல லட்சம் மக்கள் ஆர்வமாய் வந்து போகிற ‘பெரிய கோவில்’ என்றே அழைக்கப்படுகிற ஸ்ரீரங்கம் கோவிலினுள்ளே சிற்பக் கலைக்கு சாட்சியாய் சேஷராயர் மண்டபத் தூண்கள்.


ஒற்றைக்கல்.. எத்தனை உயர.. அகலம்.. எந்த ஒட்டு வேலையும் இல்லை. அதில் வடிக்கப்பட்ட சிற்பம்.. குதிரை வீரன்.. எத்தனை நுணுக்கங்கள்.. அழகிய வேலைப்பாடுகள். பிரமிப்பில் வார்த்தைகள் வராது நேரில் பார்த்தால்.

இந்தப் பிராகாரத்தில் தான் பார்த்தசாரதி சந்நிதியும் உள்ளது. கண்ணன் தேரோட்டியாய்.. அர்ஜுனனுக்கு. தேரில் கண்ணன்.. எதிரே அர்ஜுனன்.. கண்ணனின் வலது கையில் சங்கு.. இடது கையில் சக்கரம் என்று இடம் மாறிய உற்சவர் விக்ரஹம். 

பொதுவாய் விஷ்ணுவின் வலது கையில் ஸ்ரீசுதர்சனம் என்கிற சக்கரம்.. இடது கையில் பாஞ்சசந்யம் என்கிற சங்கு.. இங்கோ ஏன் இடம் மாறியது.. அழகான விளக்கம்..

கண்ணன் இப்போது தேரோட்டி.. வலது கையில் சங்கிருந்தால் தான் யுத்த பூமியில் முழங்க இயலும்.

வைணவர்களுக்கான சமாச்ரயணம் என்கிற முத்திரை பதிக்கும் சடங்கிற்கு  இடம் மாறியிருந்தால் தான் வலது தோளில் சக்கரக் குறியும் இடது தோளில் சங்கையும் பதிக்க முடியும். கண்ணன் ஆசார்யன் அல்லவா.

இந்த சந்நிதிக்கு நேர் எதிரே ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி. கண்ணன் இடம் மாற்றி வைத்ததால் எதிரே இருக்கும் சுதர்சனர் தம் உக்கிரம் தணிந்து கட்டுப்பட்டு இருப்பதாகவும் ஐதீகம்.

கோவில்களோ.. வெளி இடங்களோ.. எங்கே பயணம் மேற்கொண்டாலும் அந்த இடத்திற்கான சுவாரசியமான தகவல்களைக் கேட்டறிந்து பார்வையிடுவது கூடுதல் இன்பம் என்கிற நோக்கில்தான் சில தகவல்களை உங்களோடு பகிர்கிறேன்.

இனி இன்றைய பதிவர்கள்..



சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்  சுப்பு தாத்தா முந்தைய வலைச்சர பதிவிற்கு பின்னூட்டமிட.. அதற்கு பதில் தர.. அந்த மூன்று வார்த்தைகள் எப்படி ஒரு அழகான பதிவாகவே மாறி விட்டது.. பாருங்கள்.  பதிவர்களில் சுவாரசியமாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு பல்லாண்டு பாடலாம்.





திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தெரியாத பதிவர் இருக்க முடியாது. வலைச்சரத்தில் என்னைப் பற்றி அந்த வார ஆசிரியர் குறிப்பிட்டிருந்தால் என் வலைப்பூவிற்கு வந்து தகவல் தெரிவித்துப் போகும் பண்பாளர். எனக்கு மட்டுமல்ல.. இப்படி எல்லாப் பதிவர்களுக்கும் இனியவர்.  சுறுசுறுப்பாய் இயங்கும் இவர் என்றும் பதினாறாய் இருக்க பிரார்த்தனை.


வல்லிசிம்ஹன் அவர்களும் சுறுசுறுப்பாய் பதிவிடும் பதிவர்களில் ஒருவர்.
கண்டது.. கேட்டது.. நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது என்கிற முகப்பு வரியுடன் அவர் தளத்தில் பல சுவாரசியமான பதிவுகளைப் படித்து ரசிக்கலாம்.

நாம் மற்றவர்களின் பதிவுகளுக்குப் பின்னூட்டம்  இட்டால் மட்டுமே அவர்கள் நம் பதிவைப் படிப்பார்களா.

எழுத்தின் தரம் எப்படி  நிர்ணயிக்கப் படுகிறது.
சென்சேஷன்?
சுவை?

இன்னும் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

இப்படி ஒரு பதிவிட்டிருக்கிறார். இது உண்மைதானா.. உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

என்னைப் பொறுத்தவ்ரை என் கண்ணில் படுகிற பதிவுகளை தவறாமல் படித்து விடுவேன். ஆனால் எனக்குப் பின்னூட்டமிடுகிறவர்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமாகிறவர் என்றால் உடனே ஆர்வமாய் போய் படிப்பேன். எனக்குத் தெரியாத எத்தனையோ பதிவர்களை நான் தெரிந்து கொள்ள இதுவும் ஒரு வகை யுக்திதான் என்பதே என் கருத்து.



நினைவின் விளிம்பில்  கவிநயாவின் வலைத்தளம். தமிழ் பிடிக்கும் படிப்பேன் எப்போதும்..எழுதுவேன்.. அப்பப்ப.. என்கிற அறிமுக வரி அவருக்கு

ஆன்மீக விருந்தளிக்கும் இவரது பதிவுகள் தமிழ் மணமும் பரப்புவதைக் காணலாம்.

கறந்து வெச்ச பாலு தாரேன்
கடைஞ் செடுத்த வெண்ணெ தாரேன்
கலந்து வெச்ச மோரு தாரேன்
கண்ணா ஓடி வா!
குளுகுளுன்னு தயிருந் தாரேன்
கண்ணா ஓடி வா!

பட்டுப் போல பாதம் வெச்சு
சிட்டுப் போல சிரிச்சுக் கிட்டு
தத்தித் தளர் நடை நடந்து
கண்ணா ஓடி வா!
தண்டை காலில் குலுங்கக் குலுங்க
கண்ணா ஓடி வா!

திராட்சக் கண்ணு மினுமினுங்க
கன்னக் குழி எனை விழுங்க
கனி வாயில் தே னொழுக
கண்ணா ஓடி வா!
கட்டி முத்தம் தாரேன் செல்லக்
கண்ணா ஓடி வா!

கால் வெரல சூப்ப வேணாம்
ஆல எலையில் படுக்க வேணாம்
அம்மா மடியில் படுத்துக்கலாம்
கண்ணா ஓடி வா!
ஆரிரரோ கேட்டு றங்க
கண்ணா ஓடி வா!


-கவிநயா

வாழ்த்துகள் கவிநயா !


இனி இன்றைய முகநூல் கவிஞர்..  திருமதி கல்பனா ரத்தன்



கிளையமர்ந்த வெயில் கீற்று 
பிடி தவறி விழுந்தது காற்றசைவில் 
இலைகளை அசைத்தசைத்து 
ஆதுரமாய் வருடுகிறது கிளை 
வெயிலுக்கும், நிழலுக்குமான வினோத நடனத்தை 
குறுங்கழுத்து சாய்த்து
ஓரக்கண்ணால் பார்க்கும் காக்கையின் நிழலை
கொத்திப் பசியாறுகிறது வெயில்.

நாளை சந்திப்போம்...

Thursday, September 10, 2015

வலைச்சரம் - நான்காம் பிராகாரம் - 4ம் நாள்

எல்லோருக்கும் வணக்கம் !

நாம் இப்போது உத்திரை வீதிகளில் உலா வருகிறோம்.  இங்குதான் உடையவர் இருந்த மடம் இருக்கிறது. கூரத்தாழ்வான் திருக்குமாரர்களான ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் திருமாளிகைகள் இருக்கின்றன. ஸ்ரீ மணவாள மாமுனிகள் சந்நிதியும் இங்குதான் இருக்கிறது. இனி அடுத்த கட்டம் கோவிலுக்குள் செல்வதுதான்.. இத்தோடு வீதிகள் முடிகின்றன.

நடுவில் கோவில்.. சுற்றிலும் நான்கு மாட வீதிகள் என்கிற அமைப்பில் திருவரங்கம் மிக அழகாய் அமைந்திருக்கிறது. உத்திரை வீதிகளின் இன்னொரு விசேஷம் ஒரு புறம் மட்டுமே வீடுகள்.. எதிரே மதில் மட்டுமே.

ஒரு பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சுவாரசியமான ஒரு தகவலைச் சொன்னார்.

இராமனுக்கும் கண்ணனுக்கும் என்ன வித்தியாசம்.. தெரியுமா ? 
இராமனிடம் போகும்போது மிக மரியாதையாய்ச் செல்ல வேண்டும் ஏனென்றால் அவர் ராஜா. கண்ணனிடம் அப்படி இல்லை.. விளையாட்டுத் தனமாய் அவனுடன் இருக்கலாம். அதுவே கண்ணனிடம் ஏதாவது தப்பு செய்தால் உடனே தண்டனைதான்.. பொறுத்துக் கொள்ள மாட்டான்.. வேடிக்கையாய்ப் பழகுவது போலிருந்தாலும். ஆனால் இராமனோ ‘தெரியாமல் செய்து விட்டான்.. மன்னிக்கலாம்’ என்பார்.. ஏனென்றால் மன்னிப்பு ராஜநீதியில் உண்டு.

இனி இன்றைய பதிவர்கள்..



வானவில்லில் தோய்வதான் கனவிலிருக்கும் தூரிகை  தியாகு அவர்களின் வலைத்தளம்.. எலிக்குஞ்சுகளோடு எனக்கு விரோதமில்லை என்கிற கவிதைத் தொகுப்பு வெளியிட்டிருக்கும் அவரது கவிதைகள் அவரது தனித்துவத்தை பறைசாற்றும்.

ஸ்நேகம்

தினம் ஒருபிடி தானியம் எடுத்து
வாசலில் இறைப்பேன்
வானத்திலிருந்து இறங்கி வந்து
கொத்தித்தின்று பசியாறி
பறந்து போகும் குருவிகள்

தினம் வாசலில் வந்து இறையும்
ஒருபிடி தானியம் போலும்
என் மனத்தின்
முல்லை மொக்கையொத்த
மென் அலகால்
வலிக்காமல் தம்மை
கொத்தித் தின்னவிட்டு
ரசனையின் பசியாற்றிப்
பறந்து போகும் குருவிகள்

வாழ்த்துகள் தியாகு..

அடுத்து என் மனதைக் கவர்ந்த எழுத்தாளர்..



இவரை நான் அறிமுகப்படுத்துவதாகச் சொன்னால் அது அதிகப் பிரசங்கம்.
வண்ணதாசன் அவர்களின் வலைத்தளமான சமவெளி இலக்கிய ரசனைக்காரர்களின் மேய்ச்சல் நிலம்.  கதைகளில் வண்ணதாசனாய்.. கவிதைகளில் கல்யாண்ஜியாய் அறியப்படும் இவர் எழுத்துக்களில் தோய்ந்து போகாத வாசகர்களே இருக்க முடியாது.

முகநூலில் இப்போது அவரது படைப்புகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன.

ஒரு கவிதையை
அதன் மூன்றாம் பத்தியில் இருந்து
வாசிப்பது போல இருந்தது
ஆலங்கட்டிகள் முந்திய தினம் விழுந்த
ஒரு பிற்பகலில் நாம் சந்தித்தது.
நான் உனக்கான தேநீரைக்
கொதிக்கவிட்ட போது
நீ என் அறையின் மீன் தொட்டிக்குத்
தண்ணீர் மாற்றிகொண்டிருந்தாய்.
நீ தேநீர் பருகும்போது
முற்றத்தில் உதிர்ந்த இலை மேல்
ஊர்ந்தபடி இருந்த புழுவுடன் காட்டினேன்.
மழை தினங்களில் அணிந்த
என் காலணி ஜோடியில் படர்ந்திருக்கும்
பூஞ்சாண் குறித்து நீ பேசத் துவங்குகையில்
உன்னை முத்தமிடும் இச்சை
எனக்குக் கனன்று வந்திருந்தது.
இலையை விட்டு இறங்கிய புழு
இப்போது நகர்ந்துகொண்டிருந்தது
வாசிக்காமல் விட்ட கவிதையின்
முதல் இரு பத்திகளின் மேல்.



தற்செயலாய்க் கண்ணில் பட்ட இன்னொரு பதிவர் இவர்.. பிரியத்தின் இசை
இவரது வலைத்தளம். வழிகாட்டி வெளிச்சம் கவிதையில்

தனது சிறகுகளைப் பிடுங்கி
தினம் ஒன்றெனெ
நாட்காட்டியில் சொருகத்தொடங்குபவளின்
வானம் கரைந்து புள்ளியாகிறது  

என்கிற வரியில் அதன் அர்த்தச் செறிவில் ஒரு திடுக்கிடல்.  சுஜாதா செல்வராஜ் அவர்களின் பதிவுகள் எண்ணிக்கையில் அளவோடிருந்தாலும் அவரது எழுத்தில் ஒரு உயிரோட்டம்..






கைகள் அள்ளிய நீர் திரு சுந்தர்ஜி அவர்களின் வலைத்தளம்.. முகநூலிலும் இவர் பிரபலம். வாசிப்பில் மிக முன்னோடியாய் நிற்கும் இவரது பயண அனுபவங்கள் அவருடன் செல்ல மாட்டோமா என்று ஏங்க வைக்கும். கதை.. கவிதை.. கட்டுரை.. மொழிபெயர்ப்பு.. இசை.. என சகல கலா வல்லவர்.

இவரைப் படிக்க ஆரம்பித்தால் நம் பிரமிப்பிற்கு பஞ்சம் இருக்காது..

இந்த நாற்காலி
யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
அதன் இருக்கை யாரும் அமரா
வெற்றிடத்தைப் பருகியபடி இருக்கிறது.
உங்கள் பார்வைக்குத் தப்பிய கண்ணாடியில்
தன் முகத்தை நீண்ட நாட்களுக்குப் பின்
பார்த்து ரசிக்கிறது.
பின்னும் முன்னும்
பேசப்படாத வார்த்தைகளையும்
பேசப்பட்டவைகளையும்
அசை போடுகிறது.
பரபரப்பின் வெம்மையைத் துறந்து
நிதானத்தின் துள்ளலைப்
பூசிக்கொண்டிருக்கும்போது
உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
எந்த இசையும் ஒலிக்கப்படாத நிசப்தத்தை
அது அனுபவிக்க விடுங்கள்.
இங்கிருந்து நாளையோ மறுதினமோ
அது அகற்றப்படும் வரை
இந்த ஏகாந்தத்தை
அது அணிந்து மகிழட்டும்.


இது நாற்காலியைப் பற்றிய கவிதை மட்டுமல்ல என்பதை தேர்ந்த வாசகன் சுலபமாய் யூகித்து விடக் கூடும்.  நீங்களும் வாசிக்க அவரது வலைத்தளத்திற்கும் முகநூலுக்கும் அழைக்கிறேன்.

எழுதத் தெரிந்த கை ஓய்வெடுப்பதில்லை.. அதன் மேடை எதுவாயினும்.. வலைத்தளமோ.. முகநூலோ.. தமது எண்ணங்களை.. படைப்புகளைப் பகிர்ந்தபடியேதான் இருக்கிறார் ஒரு படைப்பாளி.  வாசிப்பின் சுவை அறிந்த நாம் தேடிப் பிடித்து படிப்பதில் இருக்கிறது நம் ரசனையை மேம்படுத்தும் சூட்சுமம்.

நாளை தொடரலாமா..

Wednesday, September 9, 2015

வலைச்சரம் - ஐந்தாம் பிராகாரம் - 3ம் நாள்

இனிய காலை வணக்கம் !

அரங்கனைக் காண நாம் ஒவ்வொரு வீதியாய் சுற்றி வருகிறோம். என்னோடு இணைந்து நீங்களும் வருவதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி.



சப்தப்ராகாரத்தில் ஏழாம் பிராகாரம் சித்திரை வீதிகள் தான்.  சித்திரைத் தேரும் பங்குனி கோரதமும் இந்த வீதிக்கான பெருமைகள். அவை மட்டுமா..

உடையவர் என்றழைக்கப்படும் ஸ்ரீராமானுஜரின் பிரதான சிஷ்யரான கூரத்தாழ்வான் திருமாளிகையும்,  உடையவரின் ஆசார்யர்களில் ஒருவரான பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகையும் இந்த வீதியில் தான் (கீழச் சித்திரைவீதி) உள்ளன.

மனித நேயம் மட்டுமே உண்மையான வழிபாடு என்பதை அப்போதே வாழ்ந்து காட்டிய வள்ளல் எம்பெருமானார் என்கிற உடையவர். அவரது குருவான பெரிய நம்பி ஸ்வாமியும் அப்படித்தானே இருந்திருப்பார்.. மாறனேர் நம்பி என்கிற பிராம்மணர் அல்லாத ஒருவருக்கு இறுதிச் சடங்கை அவர் செய்ததால் ஊரார் அவரை விலக்கி வைத்தனர்.

பெரிய நம்பி ஸ்வாமியின் திருமகள் அத்துழாய் இதைக் கண்டு மனம் பொறுக்காமல் ஒரு முறை அரங்கன் வீதி வரும்போது “என் தகப்பனார் செய்தது சரியென்றால் நீங்கள் இந்த இடம் விட்டு நகரக் கூடாது.. “ என்று வேண்ட அரங்கன் அப்படியே நகராமல் நின்று விட்டாராம்/ ஊர்க்காரர்கள் வந்து மன்னிப்பு கேட்டபின்னரே நகர முடிந்ததாம்.

பதிவுகளில் வீண் வம்பிற்கு இடந்தராமல்.. பிறர் மனம் புண்படாமல்.. அழகழகான கருத்துகளைப் பதிவு செய்து வரும் அற்புதமான பதிவர்களுக்கு நமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.

இதோ இன்றைய பதிவர்கள்...



ஹரணி பக்கங்கள்  என்கிற தலைப்பில் பதிவிடுகிறார்  தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த பதிவர்..தமிழ் பால் மாறாத காதல் கொண்டவர்.
சிறுகதைகள்.. நாவல்.. கட்டுரைகள்.. கவிதைகள் என பல தளங்களில் இயங்கி வரும் இவர் பல பரிசுகளுக்கும், தொகுப்புகளுக்கும் சொந்தக்காரர்.

வலை வீசுதலில்
மீன்கள் சிக்குகின்றன
ஒரு போதும் 
நதியல்ல..

இலக்கிய ரசனையை அவர் நம்மோடு பகிரும் பதிவுகளைப் படித்து மகிழ உங்களை அழைக்கிறேன்.



பறத்தல்- பறத்தல் நிமித்தம்  நிலாமகளின் எழுத்துக் கூடு. இங்கே எண்ணப் பறவைகள் அடைபடுவதில்லை. அதன் சிறகுகளை விரித்துப் பறக்கும் பிரபஞ்சக் கூடாகவே அமைந்திருக்கிறது. எழுத்து குறித்த கவனிப்பும் நேர்த்தியும் சக மனிதர் மீதான கம்பீரப் பார்வையும் கொண்ட எழுத்தாளர் இவர். கவிதைகள் இவரின் சிறகுகள்.. கதைகள் இவர் அமரும் கிளை. ஏனோ தானோவென்று எழுதிப் பழகும் சராசரி வேடிக்கை மனிதர் கூட்டத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பது இவரின் பலம்.  பறவை வடிவிலொரு பரமன்  பறவையின் மொழியைத் தேடி அலைந்து கண்டுபிடித்தும் விடுகிற அதிசயத்தைப் படித்து ரசியுங்கள்.





எண்ணிய முடிதல் வேண்டும்  ஸ்ரீரங்கம் பற்றி சொல்லிக் கொண்டு ஸ்ரீரங்கத்து எழுத்தாளரை எப்படிச் சொல்லாமல் விடுவது..  பிரபல எழுத்தாளரின் மகள் என்கிற பெருமை ஒரு புறம்.. இவரே பிரபலம் என்கிற சுயபலம்..ஷைலஜா அவர்களின் எழுத்தாற்றல் பல பரிசுகளை அவருக்கு வாங்கித் தந்திருக்கிறது.
சமூகம்.. ஆன்மீகம் என்று எந்தத்துறையைத் தொட்டாலும் பரிமளிக்கிற எழுத்து வித்தை அவரிடம். பழக மிக எளிமை.. அன்புள்ள அப்பா அப்பாவை அவர் கொண்டாடுகிற இந்தப் பதிவைப் படியுங்கள்.



கற்றலும் கேட்டலும்  வலைப்பூவிலும் முகநூலிலும் சக்கைப் போடு போடும் இவர் நவீன ஆண்டாள்.. தமிழ் தன் அத்தனை வார்த்தைகளையும் இவரிடம் கொடுத்து வேடிக்கை பார்க்கிறது. பாக்களில் எவ்வளவு வகை உண்டோ அவ்வளவும் இவரிடம் வரிசை கட்டி நிற்கிறது.  எல்லா திவ்யதேச எம்பெருமான்களும் புளியமரத்தின் கிளைகளில் தொங்கிக் கொண்டு எம்மை மங்களாசாசனம் செய்யும் என்று முன்பு நம்மாழ்வாரைக் கேட்பார்களாம். அவர் பாசுரங்களின் இனிமையும் பெருமையும் அப்படி. இந்த நவீன ஆண்டாளுக்கும் இத்திறமை எம்பெருமான் அருளாய் இருக்குமோ.. முகநூலுக்கு வந்து இவர் பாக்களின் ருசியை அனுபவியுங்கள்..  சிறுகதைகள் முயற்சியிலும் இவர் சளைக்கவில்லை என்பதற்கு உதாரணமாய் பிரமி !


இனி ஒரு முகநூல் கவிதை...  குறிப்பிடத்தக்க கவிதாயினிகளில் ஒருவரான இவர் எழுத்துக்களில் இயல்பாய்ச் சொல்வது போல வந்து விழும் வார்த்தைகளினுள்ளே ஒளிந்திருக்கும் நம்மைத் திடுக்கிடச் செய்யும் அற்புதம்..



தீரா வேட்கையுடன் 
நீந்தி வருகிறதோர் நீரரவம் 
நிதானமாய் பற்றி அருந்துகிறது 
நிலைப்பெருங்கடல் ….

கனிமொழி.ஜி.



நாளை சந்திப்போம்...

Tuesday, September 8, 2015

வலைச்சரம் - ஆறாம் பிராகாரம் - 2ம் நாள்

காலை வணக்கம் நண்பர்களே...

நாளை கோபுரங்கள்.. சுற்றுக் கோவில்கள் கும்பாபிஷேகம் ஸ்ரீரங்கத்தில்..
அந்நாட்களில் சோலைகள் நிறைந்த ஊர்.. நடுவே கோவில்.. சுற்றிலும் மதில்கள்..

மதிள் சூழ் தென்னரங்கம் என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருவரங்கத்தின் மதில்களுக்குள் கடைசி வீதி அடையவளைந்தான்..
இங்குதான் வெளிஆண்டாள் சந்நிதி என்றழைக்கப்படும் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் சந்நிதி உள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து வந்த ஆண்டாள் வந்திறங்கிய இடம்.

அடுத்த முறை வாய்ப்பு கிட்டும்போது வந்து பாருங்கள்.. அர்ச்சகரும் சொல்வார்.. ஆண்டாளின் திருமுகம் நம்மை நேரடியாய்ப் பார்க்காமல் ஒரு புறம் சற்றே திரும்பி உள் வீதியில் மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கனைப் பார்க்கும் கோணத்தில் அமைந்திருக்கும்.  ஆச்சர்யம் இல்லையா.. ! இதோ வெண்ணைத்தாழி அலங்காரத்தில் ஆண்டாள்..



சப்தப்ராகாரத்தில் அடையவளைந்தான் சேர்த்தி இல்லை. ஆனால் ஆண்டாள் சந்நிதி அமைந்து வீதியை பெருமைக்குரியதாக்கி விட்டது.

இனி இன்றைய நமது நண்பர்கள்...



மஹா சுமன்  எண்ணங்கள் பல வண்ணங்கள் என்கிற தலைப்பில் தமது எண்ணங்களைப் பகிர்ந்து வுருகிறார்.  இவரை எனக்கு முகநூல் மூலம் தான் முதலில் அறிமுகம். எழுத்தில் இவர் சளைப்பதில்லை.. அதேபோல நட்பைப் பேணுவதிலும். இவர் ரசித்த படைப்பாளிகளைப் பற்றி இவர் பகிர்ந்த பேரன்பிற்கு வார்த்தைகள் இல்லை பாராட்ட.  தானும் எழுதி பிறரையும் ஊக்குவிக்கும் இவர் முதல் தர ரசிகர்.
மௌனக்கலை பயில்வதில்தான் எத்தனை நன்மைகள்..




மூங்கில் காற்று திரு டி.என் முரளிதரனின் வலைத்தளம்.

வலைப்பூவில் எழுதுபவன் நோக்கம் படைப்புத் திறனை வெளிப்படுத்துவது மட்டுமன்று. யாரும் படிக்க வேண்டியதில்லை எனது ஆத்ம திருப்திக்காகத் தான் எழுதுகிறேன்.பார்வையாளர்களைப் பற்றிக் கவலை என்று ஒரு சிலர் சொன்னாலும்  நமது படைப்புகளை பிறர் படிப்பதாலும்  அங்கீகரிப்பதாலும் மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதே உண்மை .விவேக் ஒரு திரைப்படத்துள் சொல்வது போல யாரும் இல்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்.
   நமது பதிவுகள்   நிறையப் பேரை சென்றடைய வேண்டும் என்று விரும்புவது அதற்கான முயற்சிகள் எடுப்பதும்   தவறில்லை. 


நெத்தியடியாய் சொல்லி நிறைய டிப்ஸ்களை வழங்கியிருக்கும் இவர் பல சுவாரசியமான பதிவுகளுக்கு சொந்தக்காரர்.   சலிக்காமல் எழுதி வரும் இவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


இவரது வலைத்தளத்தில் போய் உங்களுக்குப் பிடித்த ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து படிக்க அழைக்கிறேன்.. இன்ன விதமாகத்தான் எழுதுவது என்று வட்டம் போட்டுக் கொள்ளாமல் வானமே எல்லை என்று எழுதும் இவரது ஏதேனும் ஓரிரு பதிவுகளை மட்டும் குறிப்பிடுவது சரியில்லை என்று உணர்வதால் இப்படி அழைக்கிறேன்.






விமலன்   வெகு இயல்பான எழுத்து நடை.  வாசகனை அன்னியப்படுத்தாமல் கைப் பிடித்து அழைத்துப் போகும் இவர் வாசிப்பது கதையா.. அல்லது நாம் அன்றாடம் பார்க்கும் நிஜமா என்று யோசிக்க வைத்து விடுவார். சிட்டுக் குருவி இவரது வலைத்தளம். 6 தொகுப்புகளுக்குச் சொந்தக்காரர்.

ஒரு சொல் ஒரு ஓசை  என்ன ஒரு இயல்பாய் மனதை ஈர்க்கிறது.. ஒங்கள நான் மாப்ளைன்னு கூப்பிடட்டுமா.. மனசு கனத்துப் போகும் தருணம் அது.






இந்திராவின் கிறுக்கல்கள்  நான் மிகவும் ரசிக்கிற எழுத்துக்காரர்.
தூரங்கள் என்னும் தொலைவுகள்  என்கிற பதிவில் அவர் சொல்லிப் போயிருப்பது அப்படியே எனக்கான.. ஏன் நம்மில் பலருக்கான மனநிலையும் தானே.
எதையுமே யோசிக்காமல், அந்நேர மனமாறுதலுக்காக மட்டுமேயென சிம்மக்கல் தொடங்கி  மாட்டுத்தாவணி வரை நடந்தே சென்ற நாட்கள் இருக்கின்றன. ஆனால் வழி நெடுக எதை ரசித்தேன் என்று யோசித்தால் விடை பூஜ்ஜியம் தான். திண்டுக்கல் மலைக்கோட்டை உச்சியில் மேகங்களை வேடிக்கை பார்க்கவென நான் தேர்ந்தெடுத்த பாறையும், திருச்சி வழியிலிருக்கும் சிவன்கோவில் மண்டபத் தூணில் கன்னம் வைத்து உணர்ந்த அந்த ஜில் தன்மையும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயுளுக்கும் நினைத்துச் சிலிர்க்கும் அம்மாதிரியான தருணங்களை, மீண்டும் சந்திப்பதற்கு வெகுநேரமாகிவிடப் போவதில்லைதான். ஆனால் பட்டாம்பூச்சியிலிருந்து மீண்டும் கூட்டுப்புழுவாக மாறும் இவ்வியந்திரத்தனம் அதற்கான நேரங்களை எப்போதும் திருப்பித் தருவதில்லை.
நினைத்த மாத்திரத்தில் நனையும் மழையும், நினைத்த மாத்திரத்தில் நமக்கே நமக்கென சந்தோசமாய் கிளம்பும் பயணங்களும் வரம்.


என்ன அழகாய் எழுத்து.. வாழ்த்துகள்..
வலைச்சரத்திற்காக நான் இப்போது மீண்டும் ஒவ்வொரு வலைத்தளமாய் நுழைந்து பார்க்கிறேன்.  மனசுக்குள் ஒரு வேதனை கவ்விக் கொள்கிறது.. எத்தனை பேர் இப்போது எழுதுவதை அதாவது அவரவர் வலைத்தளத்தில் எழுதுவதை விட்டு விட்டார்கள் என்று அறிய நேரும்போது ஒரு வித சங்கடம்..
நண்பர் கே.பி.ஜனார்த்தனன் சொல்லுவார்.. முகநூலில் எழுதினால் என்ன.. அதையே கூட நீங்கள் உங்கள் வலைப்பூவிலும் பதியலாமே.. உயிர்ப்போடு வைத்திருக்கலாமே என்று.
ஏதாவது ஒரு வகையில் வலைப்பூவுடன் தொடர்பிருந்தால் அதுவே ஒரு தூண்டுதலாகிப் பிறகு வலைத்தளத்திற்காகவே புதிதாய் எழுதத் தோன்றும் அல்லவா..

முகநூல் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் ஃப்ராங்ளின்குமார்.. இவரது கவிதைகளில் காட்சியும்.. புகைப்படங்களில் கவிதையும் விரியும். 

விடுவிக்க முடியா
தீரா வனம்
விரிந்து கொண்டேயிருக்கிறது
புல்லாங்குழலுள்.

இதோ அவரது புகைப்படக் கவிதை..


தொடர்வோம் நாளை...