Friday, November 30, 2012

சப்தப்ராகாரம் - ஆகாயம்




ஸ்ரீரங்கம் கோவில் உட் பிராகாரங்களில் மேலே வரையப்பட்ட அந்த நாளைய ஓவியங்கள் பிரமிப்புக்கும் ஆராய்ச்சிக்கும் உரியவை.

கீழே வைத்து வரைந்தாலே சொதப்புகிற எனக்கு எப்போதுமே ஆச்சர்யம் அவற்றைப் பார்க்கும்போது... எப்படித்தான் அளவு தப்பாமல்.. துல்லியமாய்.. வரைந்தார்களோ.. அதுவும் அண்ணாந்து பார்த்தால் கழுத்து சுளுக்கிக் கொள்ளும்.. சாரம் கட்டி.. ஊஞ்சல் போல.. படுத்த வாக்கில் தான் வரைந்திருக்க வேண்டும்.. என்ன அழகு.. என்ன அழகு..

பராமரிப்பின்றி பல ஓவியங்கள் மறைந்து வருகின்றன.. அந்த நாள் சரித்திரம் அவற்றில் பதிவாகி இருக்கும்.. நிறைய விஷயங்களை நாம் இழந்து வருகிறோம்.. இப்படித்தான்..

இனி இன்றைய பதிவர்களைப் பார்ப்போமா..

சிட்டுக்குருவி விமலனின் கைவண்ணத்தில் சிறகடிக்கிறது..  கவிதை.. சிறுகதை என்று இவரும் தனித்துவமாய் தமக்கென்று ஒரு பாணி வைத்துக் கொண்டு எழுதி வருகிறார்..

கரை சேரா அலை அரசன் - அரியலூர் என்று பார்த்ததும் எனக்குள் ஒரு உற்சாகம்.  என் ஒண்ணாப்பு அங்கே பக்கத்தில் விக்கிரமங்கலத்தில் தான் ஆரம்பித்தது. அம்மா இல்லா வீடு கவிதையில் என்ன அழகாய் மனசைத் தொடுகிறார் பாருங்களேன்.

என். உலகநாதன் நிஜமாகவே என் உலகநாதன் தான் ! எப்படி என்று கேட்கிறீர்களா.  என் சிறுகதைக்கு அவரது வாசகர் கடிதம் விகடனில் முன்பு பிரசுரம். அப்புறம் அவரே பெரிய எழுத்தாளராகி தொகுப்பும் போட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

என் மனதில் இருந்து ப்ரியா ஓவியமும் அழகாய் வரைகிறார்.. உடனே போய்ப் பாருங்க..

சிவகுமாரன் கவிதைகள் இந்த கவிச்சித்தனின் மனசு கவிதை மயமாய் நிற்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது..

இந்திராவின் கிறுக்கல்கள் விளையாட்டா எழுதற மாதிரி காட்டிகிட்டு சட்டுனு சீரியசா எழுதி அசத்தற இவங்க சொல்லிக்கிறது ‘இம்சிக்கிறேன்னு’..

மனதில் ரசனை இருந்தால் காண்பதெல்லாம் ரம்யம்தான் என்று சொல்கிற மாதேவி பதிவுகளில் தான் ஸ்ரீலங்காவின் அழகிய பகுதிகளை பார்த்தேன்..

பழனி.கந்தசாமி அவர்களின் கருத்துக்களோடு நீங்கள் ஒத்துப் போகிறீர்களோ இல்லையோ.. மனதில் பட்டதி துணிச்சலாய் எழுதும் அவர் எழுத்துக்களுக்கு ஒரு வசீகரம் இருக்கவே செய்கிறது.

வானம் வெளித்த பின்னும் ஹேமாவின் கவிதைகளில் ஈர்க்கப்படாதவர்கள் யார்.. பதிவர்களில் கவிதைக்கென்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அதில் நிச்சயம் இவங்க பேரும் உண்டு.  இன்னொரு தளமான உப்பு மடச் சந்தியில் சீரியசான பதிவுகள்..

ப.தியாகு வின் கவிதைகள் வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகையில் கொட்டிக் கிடக்குது.. கவிதை ரசிகர்களுக்கு நல் விருந்து நிச்சயம்..

வசந்த மண்டபம் வைத்திருக்கும் மகேந்திரனின் கவிதைகள் வார்த்தைகளில் எளிமை.. கருத்திலோ ஆழம்..மண்வாசனையோடு மணக்க மணக்க எழுதும் இவர் பதிவுகளில் ரசனை தன்னால் வரும்.

பூசலம்பு எழுதவே மாட்டேங்கிறாங்கன்னு சிலரை நினைச்சு வருத்தப்பட்டேன்ல.. அதுல இவங்களும் உண்டு..

இந்த ஆசிரியர் பொறுப்பு எடுத்ததில் தான் தெரிய வருகிறது.. நான் படித்துக் கொண்டிருந்த பலர் எழுதுவதை நிறுத்தி பல மாதங்களாகி விட்டது..

எதனால் இப்படி நேர்ந்ததோ.. சிலர் ரொம்ப ஆர்வமாய் தினம் ஒரு பதிவு போடும் அதே வேளையில் சிலர் எழுதுவதே அபூர்வமாகிற இந்த விசித்திரம் வாழ்வில் ஒரு வேடிக்கைதான்.

சிலரின் வலைப்பகுதிக்கு போகவே முடியவில்லை.. ஏதேதோ கேட்டு மிரட்டுகிறது.. பவர் கட் நடுவில், சுற்றிக் கொண்டே இருக்கும் அவஸ்தை..

இதனால் என் நினைவில் பதிந்த சிலரின் பதிவுகளைப் பற்றி எழுத முடியவில்லை..

விளையாட்டு போல ஐந்து நாட்கள் ஓடிவிட்டன.. இன்னும் இரண்டே நாட்கள் தான்..  அதற்குள் இன்னும் கொஞ்சம் பேரைப் பார்க்கணும்..

பார்ப்போம்..

Thursday, November 29, 2012

சப்தப்ராகாரம் - காற்று



ஸ்ரீரங்கம் கோவில் உள்ளே சுற்றி வரும் போது சந்திரபுஷ்கரணியை பார்க்கலாம்.  இதன் அருகிலேயே பரமபத வாசல்.. தன்வந்தரி ஸந்நிதி.. கோதண்டராமர் சந்நிதி எல்லாம் இருக்கு..

இப்போது பூட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இதற்குள்ளே போகலாம். சுற்றி வரலாம்.  புன்னை மரம் (ஸ்தல விருட்சம்) உண்டு.. படத்தில் தெரிகிறதே.. அதே மரம்.  ஸ்ரீரெங்கநாதர், ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு (தாயார் சற்று குள்ளம்) புன்னைப் பூ பறிக்க இயலாமல் தவித்தபோது, கிளையை சற்று தாழ்த்தி தருவதாக ஸ்லோகம் இருக்கு.. பெருமாளும் தாயாரும் ஏகாந்தமாய் உலவும் இடம்  என்று ஐதீகம். உள்ளே போய் அமர்ந்தால் சகலமும் மறந்து .. ”நான்”  மறந்து ’உள்ளே ’ லயித்துப் போகலாம் அழகாய்.  உபரியாய் குளத்தின் காற்று ஜில்லென்று மேலே வீசும்.

காற்று போல
சொல்லித் தருபவர் யார்..
வாழ்க்கை ரகசியங்களை..!
காற்றை நேசிக்கிறேன்
எப்போதும்.

காற்று காதில் சொல்லிப் போகும் எத்தனையோ விஷயங்களைத்தான் நாம் கதையாகவோ, கவிதையாகவோ ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

இயக்கம் நின்றால் பின் படைப்புக்கு ஏது வழி??

இன்று நாம் பார்க்கப் போவது காற்றைப் போலவே ஸ்பெஷலான பதிவர்களை.  ( மதிப்பிற்குரிய இவர்கள் பெயர்களை ‘அவர்கள்’ என்று அடைமொழி இடாமல் போட்டிருக்கிறேன்.. அது அன்னியப்படுத்துகிற மாதிரி உணர்வதால்)

மனசளவில் இன்னும் குழந்தைமையை தக்க வைத்துக் கொண்டிருக்கிற வரை வாழ்க்கை இனித்துக் கொண்டுதான் இருக்கும்... இல்லியா..



நம் வலைத்தளத்தில் நம் மனதில் வந்ததை பதிவிடலாம். என்ன வேண்டுமானாலும். அதே போல பிறர் பதிவுகளைப் பார்த்து கருத்து சொல்லலாம்.  

ஆனால் எந்த அளவு நம் பதிவுகளை ரசித்து எழுதுகிறோமோ, அதே அளவுக்கு பிறர் எழுதுவதையும் உள் வாங்கி விரிவான அலசல்.. நுண்ணிய பார்வை என்று இதயம் தொடும் பின்னூட்டங்களைத் தரும் இவர் எழுத்திலும் அதே அழுத்தம்.. ஆழம்..

கதம்ப உணர்வுகள்  மஞ்சு பாஷிணியைத்தான் சொல்கிறேன்.  அவர் பின்னூட்டம் பார்த்தாலே இன்னும் இன்னும் எழுதத் தோன்றும். உலகம் அன்பு மயமானது என்று எப்போதும் சொல்லாமல் சொல்கிற நல் ஆத்மா.

கற்றலும் கேட்டலும் ராஜி..  ஆர்வமாய் இவர் எழுதும் பதிவுகளும் சரி.. தான் ரசித்ததை மனம் விட்டு பாராட்டும் விதத்திலும் சரி.. உயர்ந்து நிற்பவர்.  எழுத்து.. இசை என்று சகல கலா வல்லி.

எண்ணிய முடிதல் வேண்டும் ஷைலஜா..  ஸ்ரீரங்கத்து தேவதை..!  அப்பாவின் பிதிரார்ஜிதம் பரிபூர்ணமாய் நிரம்பி இருக்கிறது. அப்புறம் என்ன.. ஜமாய்க்க கேட்பானேன்.. எழுத்து சிலம்பில் எளிதாய் வீடு கட்டி நிற்பவர்.

மைத்துளிகள் வெள்ளமாய் பெருக்கெடுத்தால் எப்படி இருக்கும்.. மாதங்கியின் வலைத்தளம் போனால் தெரியும்.  ஞானம் பேசும் பக்கங்கள்.  ஒரு பக்கம் துப்பாண்டி.. இன்னொரு பக்கம் தத்துவம்.. குழந்தைமையும் ரிஷித்துவமும் அற்புதமாய் கை கோர்த்து நிற்குமிடம்.

பறத்தல் பறத்தல் நிமித்தம்  நிலாமகள்.. இரண்டு பெயர்களுமே அபாரம். வாழ்க்கை சிலருக்கு தன் ரதத்தை வழங்கி விடுகிறது.. கவிதையும் கதையும் எழுதுகிறவர்களின் எழுத்தில் கவிதைகளில் ஒரு கதை ஒளிந்திருக்கும். கதையிலோ உரை நடை மீறி ஒரு கவிதைத் தன்மை அழகு சேர்க்கும். எழுத்து ரதத்தில் சாரத்தியம் செய்கிற அற்புதத் தம்பதி.இப்போது போல கடவுளின் ஆசி என்றும் தொடரட்டும் இவர்களுக்கு.

 காகித ஓடம்  பத்மா.. கருப்பொருள் இவருக்கு சுலபமாய்க் கிட்டி விடுகிறது கவிதை எழுத.  ரசனையுடன் கவிதைகளை வாசிக்கலாம் இந்தப் பக்கம் போனால்.

மணிராஜ்  இராஜராஜேஸ்வரி எழுத்துக்களில் நம் மனம் அடையும் ஆன்மிக புத்துணர்வுக்கு எல்லையே இல்லை. வண்ணக் களஞ்சியமாய் தம் பதிவுகளில் அந்தந்த இடத்திற்கே அழைத்துச் சென்று விடுகிறார்.

அமைதிச்சாரல்  இவங்களைப் புகழணும்னா அது பக்கம் பத்தாது. இன்னொரு சகல கலா வல்லி.  எழுதவும் அதை விட வாசிக்கவும் பிடிக்கும்னு இவங்க சொன்னதுல எனக்கும் உடன்பாடு.. அதனாலேயே கூடுதல் பிரியம் இவங்க எழுத்துல.

கிருஷ்ணப்ரியா  தஞ்சை கவிதை.. கதை கவிதை.. என இவரும் எழுத்துப் பங்களிப்பில் சளைத்தவர் இல்லை.  நேர்த்தியான எழுத்துக்கு சொந்தக்காரர்.

முத்துச்சரம்  இவரது பன்முகத்தனமை பிரமிக்க வைக்கும். இவரது எழுத்து காட்சிகளைக் காட்டும் என்றால் இவரது படங்கள் பேசும். ராமலக்ஷ்மியின் திறமைக்கு அவரது உழைப்பே ஆதாரம்.

அன்புடன் அருணா தருகிற பூங்கொத்து நம்மை இன்னும் சிறப்பாய் எழுதத் தூண்டும்..  எப்போது நானாக இருப்பது.. அதுவே என் பலமும், பலவீனமும்.. என்கிறார்.. நானாக நானில்லை என்று இவர் பதிவுகளை வாசித்து மகிழ்ந்து.. நெகிழ்ந்து போகும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..

குறை ஒன்றுமில்லை   மனம் முழுக்க நிறைவுதான்.. எளிமையாய்.. மனம் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரர். பதிவுகளுக்கு வைக்கிற தலைப்புகளில் கூட மிரட்டல் இருக்காது.. இவரது ஆப்ரிக்கா பயணம் பதிவுகள் மிக சுவாரசியம்.

கீத மஞ்சரி  யின் எழுத்துக்கள் உயிரோட்டமாய் இருக்கும் என்பதற்கு என் அம்மாச்சியும் மகிழம்பூக்களுமே சாட்சி.. பூவின் வாசம் வீசும் எழுத்துக்களை இங்கு நுகரலாம் வாங்க.. கதை, கவிதை கட்டுரை என எழுத்தின் சகல வடிவங்களிலும் ஆளுமை கொண்டவர்.  இவருக்கு வரும் பின்னூட்டங்களில் இவரைப் புகழாத பிற பதிவர்களே கிடையாது என்பதே இவர் எழுத்துத் திறனுக்கு சாட்சி.

ஹுஸைனம்மா  வலியைக் கூட வரமாக்கித் தந்திருக்கிறார்.. இந்தப் பதிவில்.  ஆண் எனும் பித்தளையோ, குடும்பம் எனும் செம்போ, சமூகம் எனும் வெண்கலமோ, எதுவானாலும், பெண் எனும் ஈயம் பூசப்பட்டாலன்றி, இவை யாவும் பயன்படுத்த லாயக்கற்றவைகளாகி விடும்.. என்று தம் மனதில் பட்டதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் இவரது பதிவுகள் எல்லாமே அழுத்தமானவைதான்.

முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் கைவண்ணத்தில் ஜொலிக்கும் பதிவுகளை ரசிக்கலாம். எத்தனை விருதுகள் வாங்கி இருக்கிறார்.. ஏயப்பா.. திருஷ்டி கழிக்கணும்.

கோவை2தில்லி முதல் பனி அனுபவத்தை அழகாய் சொல்லி இருக்கிறார்..  சமையல் .. பயணம்.. கைவைத்தியம்..விமர்சனம் என்று இவர் தொடாத பக்கங்கள் இல்லை.. 

இதுவரை நாம் பார்க்கிற அனைவருமே பல்வேறு திறமைகளுக்கு சொந்தக்காரர்களாய் இருக்கிறார்கள்.. கவனித்தீர்களா..

இத்தனை வல்லமை உடைய இவர்களின் இன்னொரு பரிமாணம் இவர்களது எளிமை.. சக பதிவர்களின் படைப்புகளை வாசித்து.. ரசித்து.. அழகாய் பின்னூட்டமும் போடுகிறார்கள்.

அன்பின் வலைத்தளமாய் இயங்குகிற இந்த அற்புதம் எந்நாளும் நீடிக்க வேண்டும்..

இன்னும் சில பதிவர்களின் வலைத்தளங்கள் எப்போதாவதுதான் எழுதப் படுகின்றன.. திறமையான அவர்களின் எழுத்து நீண்ட இடைவெளியின்றி தொடரப்படுமானால் நமக்கும் சந்தோஷமாய் இருக்கும்..

சித்ரா.. சாகம்பரி.. மிடில் கிளாஸ் மாதவி.. இப்படி சிலர்..

தொடர்வோம்.. 

Wednesday, November 28, 2012

சப்தப்ராகாரம் - நெருப்பு


பல வருடங்களுக்கு முன் ஸ்ரீரங்கம் கோவில் மூலஸ்தானத்தில் தீ பிடித்துக் கொண்டதாம். மூலவர் நெருப்பில் தகதகத்திருக்கிறார். போராடி அணைத்திருக்கிறார்கள். பிறகு மூலவரை புதிதாய் வடிவமைத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் பல எதிர்ப்புகளைச் சமாளித்து வந்திருக்கிறது. பிற படையெடுப்புகள்.. ஊருக்குள்ளேயே சங்கடங்கள் என்று.. ஆனாலும் இன்னமும் கோவில் அதன் அழகை இழக்காமல் இன்னும் பக்தர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.


சேஷராயர் மண்டபம் ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குப் பக்கம் இருக்கிறது.
பாருஙகளேன்.. ஒவ்வொரு தூணும் எவ்வளவு உயரம்..  அதிலும் சிற்ப வேலைப்பாடுகள்.. இணைப்பே இல்லாமல் ஒற்றைத் தூண்..  குதிரை வீரன், அதன் மேலிருந்து புலியை, யாளியை வேட்டையாடுவது போல..  எங்கிருந்து இவ்வளவு கற்களைக் கொண்டு வந்து.. எப்படித் தூக்கி நிறுத்தினார்களோ..
இதன் அருகே தான் ஆயிரங்கால் மண்டபமும்.

அப்படியே கிழக்கு வாசல் வழியே வெளியே வந்தால்.. கிழக்கு சித்திரை வீதி..
எங்கள் சுஜாதா குடியிருந்த வீதி.. ( நானும் தான்!)


மீசை இல்லாத சுஜாதா என்ன அழகு பார்த்தீர்களா..
அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் எப்போது படித்தாலும் சுவாரசியம்.  அவரிடம் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது.. ‘சிறுகதை சுமாரா எழுத வருது.. பெருசா நாவல்.. தொடர் எழுதத் தெரியல’ என்றதும் அரை மணி குழந்தைக்கு சொல்வது போல சொல்லிக் கொடுத்தார்.  அன்றுதான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.. அலட்டல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று.

அதே போல என்னைக் கவர்ந்த இன்னொரு பிதாமகர் லா.ச.ரா அவர்கள்.
அவர் எழுத்தில் வரும்... ஒரு கதையில்.   ‘நெருப்பு’ன்னு எழுதி அதை வாசிச்சா சுடணும்னு.  அந்த அளவு எழுத்தில் ஒரு தவம் இருக்கணுமாம்..

என் சிறுகதை ஒன்று இலக்கிய சிந்தனையில் மாதப் பரிசு வாங்கியது. ( கல்கி பிரசுரம்- “ஏன்” தலைப்பு ) அந்த வருடம் வெளியாகித் தேர்வான 12 சிறுகதைகளில் இருந்து ஆகச் சிறந்த கதையைத் தேர்ந்தெடுக்க லா.ச.ரா அவர்கள்.  ஒவ்வொரு கதைக்கும் அவரது விமர்சனத்தோடு.

இரண்டு பக்கங்களுக்கு என் கதையை அவர் பாராட்டியதை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. ஏதோ ஒரு தயக்கத்தில் அவரை நேரில் பார்ப்பதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். என் பிசகுதான் அது. கடைசியில் இனி பார்க்கவே முடியாத தொலைவில் அவர் போய்விட்டார்.

கடைசி வரியில் ஒரு மோதிரக் குட்டும் கிடைத்தது அவரிடமிருந்து.
'இன்னும் கொஞ்சம் அழுத்தமா எழுதணும்’

பாரதியின் அக்னிக் குஞ்சு எல்லோர் மனசுலயும் இருக்கு. ஆனால் சிலரிடம் அது கனல்கிறது. சிலரிடம் நீறு பூத்து அடங்கிக் கிடக்குது. வாய்ப்பு கிட்டாத பலர் அடையாளம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.  இந்த உண்மை புரிவதால் தான் யாரையும் தாழ்வாய் நினைக்கத் தோன்றுவதில்லை.

இனி இந்த வாரம் நாம் சில பதிவர்களைச் சந்திக்கலாமா..

மோகன் ஜி யின் எழுத்துககளில் கிறங்கிப் போகாதவர்கள் உண்டா?! இந்தப் பதிவை (துங்கா) அவரது பதிவுகளில் சிறந்த 10 தேர்ந்தெடுக்கச் சொன்னால் நான் தேர்வு செய்து விடுவேன். விறுவிறுவென்று என்ன ஒரு சரளமான.. ஆனால் அதே நேரம் அழுத்தமான நடைக்கு சொந்தக்காரர்.

வை;கோவின் எந்தப் பதிவு என்று குறிப்பிட்டு சொல்வது..  அவரது திறமைக்கு அவர் எப்போதோ பத்திரிகைகளில் கொடி கட்டிப் பறந்திருக்க வேண்டும். உடம்பெல்லாம் உப்புச் சீடை அவரது மாஸ்டர் பீஸ்களில் ஒன்று.  இவரது எளிய, இனிய பழகும் தன்மையினால் பலர் இவரது அன்புக் கோட்டைக்குள் குடி புகுந்து விட்டார்கள். இவரது எழுத்துதிறன் எனக்கு எப்போதும் உற்சாகம் தரும். சோர்வு வந்தால் இவரை நினைத்தால் போதும்.. சொல்லிக் கொள்ளாமல் ஓடிப் போகும்.  அவரது அன்பில் திளைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது என் பூர்வ ஜென்ம புண்ணியம்.

பாரதிக்குமார் நெய்வேலி.. கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம், குறும்படம் சொல்லிக் கொண்டே போகலாம்.. இவரது திறமைகள் குறித்து. ‘போட்டுத்தள்ளு’ சிறுகதை ஒரு சாம்பிள்தான்.

சமுத்ரா இவரும் எழுதாத.. தொடாத சப்ஜெக்ட் இல்லை என்று சொல்லலாம்.
அறிவியல் தேடலில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே போனால் முத்துக்கள் எடுக்கலாம்.

தீராத விளையாட்டுப் பிள்ளை க்கு எந்த சப்ஜெக்டும் விளையாட்டுத்தான்.. அதாவது எழுத்து விளையாட்டு. இவரது மன்னார்குடி டேய்ஸின் ரசிகன் நான்.

வீடு திரும்பல் மோகன்குமாருக்கு பதிவிடுதல் கின்னஸ் சாதனை.  கலகலப்பான பதிவுகளுக்கு நான் காரண்டி..

ஆரண்ய நிவாஸ்  சிறுகதை எக்ஸ்பர்ட் என்றே சொல்ல வேண்டும்.  பல தரப்பட்ட சுவாரசியங்களுக்கு சொந்தக்காரர்.  இவரது திறமைகளுக்கு எங்கோ இடம் பிடித்திருக்க வேண்டும். ஆர்ப்பாட்டமில்லாத அமைதி, எழுத்து வியாபாரம் இல்லாத தன்மை இவற்றால் வலைப்பக்கம் போதும் என்று ஆனந்தமாய் இருக்கிறார்.

வெங்கட் நாகராஜ் இவரது பயணக் கட்டுரைகள் மிக சுவாரசியம். தில்லி செய்திகளை இவரது பதிவுகளில் படிக்கும் போது எப்படி இவருக்கு நேரம் கிடைக்குது என்கிற ஆச்சர்யம் வரும். சலிக்காமல் பயணம் செய்யும் இவர் ஒரு உலகம் சுற்றும் வாலிபர்.

ஹரணி  கதை, கவிதையுடன் சிந்தனையைத் தூண்டும் செய்திகளைப் பகிர்வதில் முன்னணியில் நிற்பவர். கடுகளவு கற்றதிலேயே இவ்வலவு அழகாய் எழுத்துக் கோலம் போடுபவர் கையளவு கற்றால் இன்னும் என்னென்ன செய்வார் என்று நாம் வியந்து நிற்கலாம்.

சுஜாதா தேசிகன் தமிழ் கூறும் நல்லுலகு வாசிக்க வேண்டிய சுவாரசிய மனிதர். ஸ்ரீரங்கம் என்றால் ஸ்ரீரெங்கனாதரும் கூடவே சுஜாதாவும் ஞாபகத்துக்கு வந்தால் அது நம் வாசிப்பின் ரசனை காட்டும் அடையாளம். சுஜாதாவே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் என்றால் வேறேன்ன சொல்ல.. வாங்க.. போய் படிக்கலாம்.

புலவர் கவிதைகள்  மரபின் ருசி அறிந்தவர் திளைக்க ஒரு பசுஞ்சோலை. தமிழ் இவருடன் கொஞ்சுகிறது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா  கவிதைகளில் இவரது முத்திரையே தனி. அதன் நேரடி த்வனி.. அதன் அர்த்த ஆழங்கள்.. நம்மை யோசிக்க வைத்து விடும்.

R கோபி பார்த்ததை, ரசித்ததைப் பகிரும் இவரின் எழுத்துக்கள்.. நம்மையும் ரசிக்க வைத்து விடும்.. அவரின் விவரிப்பை.

gmb writes  இந்த பதிவில் சொல்லி இருக்கிறதைப் பாருங்க.. உங்க பதிலைச் சொல்லுங்க.. நானும் ஆவலா இருக்கேன் நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு தெரிஞ்சுக்க.  அவரது அனுபவம் சார்ந்த பதிவுகளைப் படிக்கப் படிக்க வாழ்வின் இன்னொரு பக்கம் அழகாய்ப் புரிகிறது.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - தீதும் நன்றும் பிறர் தர வாரா, வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும். என்கிற   திண்டுக்கல் தனபாலன் வாருங்கள் நண்பர்களாவோம் என்று அழைக்கும் போதே ஒரு அன்பு வந்து விடுகிறது.. ஹீரோ போல அழகான தோற்றம் இவருக்கு எப்படி வந்தது என்று இவர் பதிவுகளைப் படித்தாலே புரியும்.. அத்தனையும் மனித நேயம் சொல்லும் கருத்துக்கள்..



அடுத்த நாளுக்குக் காத்திருப்போமா..

அதுக்குள்ளே நீங்க இதுவரை வாசிக்காத இவர்களின் பழைய பதிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படித்துப் பாருங்கள். முடிந்தால் அதற்கு ஒரு பின்னூட்டம் கொடுங்க..  பதிவர்களின் முன்னாள் பதிவுகளைத் தேடிப் பிடித்து வாசிப்பதில் ஒரு சுவாரசியம் இருக்கு..

நாம் தொடர்ந்து வாசிக்கிற பதிவர்களின் சில பதிவுகளை வாசிக்கத் தவறி இருப்போம். இப்போது அதை ஈடு கட்டி விடலாம்.   இது என் அன்பான வேண்டுகோள்..

Tuesday, November 27, 2012

சப்தப்ராகாரம் - நிலம்



இன்று பெரிதாய் நிற்கும் ராஜகோபுரம் அந்த நாட்களில் எப்படி இருக்கு பார்த்தீங்களா..

ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிராகாரங்கள் நடுவில் இருக்கிறது உங்களுக்குத் தெரியும்..

மூலஸ்தானத்தைச் சுற்றி திருவெண்ணாழி சுற்று.  பாற்கடலில் பரந்தாமன் துயில்வதைப் போல..

உத்திரை வீதி, சித்திரை வீதி, அடையவளைந்தான் என்று அடுத்தடுத்து சதுரமாய் வீதிகள்.  உத்திரை வீதியில் ஒரு புறம் மட்டுமே வீடுகள். இந்த வீதியில்தான் தை மாதம் ஓடும் தேர் இருக்கிறது.

சற்றே அகலமான வீதி சித்திரை வீதி. இங்குதான் கோரதம் என்னும் தேரும், சித்திரைத் தேரும்.

வையாளி என்னும் சிறப்பான குதிரை ஓட்டம் ஸ்ரீரங்கத்தின் ஸ்பெஷல். அதிலும் கோண வையாளி என்று குறுக்கு நெடுக்காக பெருமாளைத் தூக்கிக் கொண்டு ஓடுபவர்களைப் பார்க்கும் போது ஆச்சர்யமாய் இருக்கும். தேருக்கு முதல் நாள் நடக்கும் திருவிழா.

முன்பு சோலைகள் நிறைந்த ஸ்ரீரங்கம் இன்று பன்மாடிக் கட்டிடங்களால் நிரம்பி வழிகிறது.  நிலம் விற்கும் விலை குதிரை விலை.. யானை விலை.. !

நிலம்.. பஞ்ச பூதங்களில் ஒன்றாய்..

இந்த மண் எத்தனை பேரைத் தாங்கி இருக்கிறது.. எத்தனை சாதனையாளர்கள்.. போராட்டக்காரர்கள்.. மனித நேயர்கள்..

நிலத்தில் நட்ட செடி மரமாகி பல வருடங்களுக்கு (நட்டவர் யாரோ..) பயன் தருகிறது.. 

‘இமயம் சரிகிறது’ என்று மரண செய்தி சொல்லும் போஸ்டர்களை அவ்வப்போது பார்க்கும்போது, பூமிக்கு மேலே நிற்கும் போது அவர்களின் வாழ்க்கைப் போக்கும், புதைந்ததும் விலாசம் தொலைகிற விசித்திரமும் சொல்லாமல் சொல்கிற கதைகள்தான் எத்தனை.. எத்தனை..

இருக்கும் நாட்களை அன்பில் கழிக்கும் ஜீவன்கள் எந்த நாளிலும் நினைவு கூரப்படுகிறார்கள். முகஞ்சுளித்து நகரும் ஆத்மாக்கள், இருக்கும் போதே விலகிப் போக வைத்து விடுகிறார்கள்.

அன்பைச் சொல்வோம்.. எந்நாளும்.





இனி நம் மனம் கவர் பதிவர்களைப் பார்க்கலாமா..

தஞ்சாவூர் கோபாலி என்று செல்லமாய் அழைக்கப்படும் தஞ்சாவூர் கவிராயர் தமது கவிதை, கதை, கட்டுரை, பேட்டி என பன்முகத் திறமைகளில் ஜொலிப்பவர்.  எழுத்தில் வாசிப்பவனை ஈர்த்து அப்படியே இழுத்துப் போகும் சாமர்த்தியசாலி.
எப்போதாவதுதான் பிலாகில் வருகிறார் என்கிற குறையைத் தவிர.. வரும்போது எழுத்து விருந்து நிச்சயம் என்கிற மகிழ்ச்சியில் இதோ..
பெரிய எழுத்து  நிஜமாகவே பெரிய எழுத்துத் தான் அவருடையது.


அடுத்து   பூ வனம்   ஜீவி ஸாரை எனக்கு சமீபமாய்த்தான் அறிமுகம்.  உடன் அவரது பழைய பதிவுகளைத் தேடிப் போனால்.. ஆஹா.. அங்கே எனக்கு இலக்கிய விருந்து காத்திருந்தது. கவிதைகளும்.. ரசனையுமாக.. அவரது பழைய பதிவுகளில் நான் இப்போது சஞ்சரிக்கிறேன் உற்சாகமாய்.

உள்வாங்கி படிக்கும் மனிதர்களைக் கண்டால் எனக்கு பிரமிப்பு. ஜீவகீதம் என்னால் பலமுறை வாசிக்கப்பட்ட தொடர். கல்கியில் வந்ததை தாத்தா பைண்ட் செய்து வைத்திருந்தார். ஓவியங்களுடன் வாசிப்பதில பரம சுகம் உண்டு. தில்லானா மோகனாம்பாளை கோபுலு சித்திரங்களுடன் இன்னமும் ரசிக்கிறேன்.

இதோ வருகிறார் அப்பாதுரை..  ஒரு பிலாக் வைத்து மேய்ப்பதே சிரமம். நான்கு குதிரைகளை ஓட்டிக் கொண்டிருக்கும் எழுத்து சூரியன்.  மூன்றாம் சுழி  ம்ம்.  எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும் என்று எப்போதாவது சொல்லியிருக்கிறேனா?  இல்லையெனில் இப்போது சொல்கிறேன். எனக்குச் சிறுகதைகள் பிடிக்கும்.  இப்படிச் சொல்கிறவரை எனக்குப் பிடிக்காமல் போகுமா..

இவரைப் பார்க்கணும் என்று எத்தனை நாளாய்த் தவம்.. போட்டோ பார்த்ததும் ஜென்ம சாபல்யம் ஆனது..   காமெடியில் இவரை பீட் பண்ண ஆளே இல்லை என்று சொல்லலாம். எழுத்தில் நகைச்சுவை மிளிர இவர் எழுதும் பதிவுகளைப் படித்து மிரண்டிருக்கிறேன்.. இப்படி எல்லாம் எழுத முடியுமா என்று.   சேட்டைக்காரன்  இவரைத்தான் சொல்கிறேன் என்று யூகித்தவர்கள் விலாசம் அனுப்பினால் என் சிறுகதைத் தொகுதி ஒன்று கூரியரில் அனுப்புகிறேன்.

நகைச்சுவையில் பிதாமகர் இவர்.  அதே போல சீரியஸ் ரைட்டிங்கும். என்னைப் பிரமிக்க வைத்த எழுத்தாற்றல் இவரிடமும்.  அத்தனை பெரிய எழுத்தாளர்...பழகுவதற்கு எத்தனை எளிமை..   கடுகு  பல புனை பெயர்களுக்குச் சொந்தக்காரரான இவரை வாசிப்பது நம் வாசிப்பனுபவத்தை மெருகேற்றும்.

கதை கவிதை என நேர்த்தியாய் எழுத்துத் தேர் ஓட்டி வரும் இவரை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  எழுதுவது அவ்வப்போதுதான் என்றாலும் தரமான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பதில் இன்னொரு கருத்துக்கு இடமில்லை.  ராகவன்  கவிதைகளும் தனி அனுபவம். போய்ப் படிங்க..


கேரக்டர் எழுதுவதில் இவரை மிஞ்ச ஆளில்லை..  எழுத்து இவரிடம் மண்டி போட்டு அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்..
பாமரன் பக்கங்கள்  இவரின் பரம ரசிகனாய் நான் இருப்பதில் எனக்கு கூடுதல் சந்தோஷம்.

முள்ளும் இருக்கு, நிழலும் இருக்கு வாழ்வு போல..
ஹ்ம்ம்..  இவர் எழுத்தில் வாழ்க்கை இருக்கு.. வடிவும் இருக்கு..
ஏன் ஸார் எழுத்துல இடைவெளின்னு மனசு கெஞ்சுது இப்பல்லாம்..
கருவேல நிழல்  பா.ரா. ஸாரின் பரம ரசிகர் வட்டத்தில் கொஞ்சம் எட்டி நின்று ரசிக்கும் கற்றுக்குட்டியாய் நான்.


இவருக்கு என்னதான் தெரியாது என்று தெரிந்து கொள்ள ஆசையாய் இருக்கு.. சொல் புதிது.. பொருள் புதிது.. சுவை புதிது.. சொல்லிக் கொண்டே போகலாம்..இவர் பதிவுகளில் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வட்டத்தில் அடைக்க முடியாதபடி பல ரசனைகளின் கூட்டாஞ்சோறாய்.. ஒவ்வொன்றுமே அதனளவில் சிகரமாய்.. 
சுந்தர்ஜி மோதிரக்கை குட்டிற்கு ஏங்கும் மனசு எனக்கும்.


இது பொறுப்பதில்லை என்று இவர் எழுதும் வரிகளில் தெரிகிறது பாரதியின் அக்கினிக் குஞ்சு.  சமகாலப் பிரச்னைகள் குறித்த இவரது அலசல் வாசிப்பவருக்கு யோசிக்கத் தூண்டும்.  எரிதழல்  வாசன் ஸாரின் கைவண்ணத்தில் தீவிர எழுத்துக்களின் சங்கமம்.

மின்னல் வரிகள் பால. கணேஷ் அனுபவ நடைவண்டி பயணிக்காத பிரதேசம் இல்லை. பழகுவதற்கும் இனிமையான அவர் எழுத்துக்களில் எப்போதும் இளமையின் நர்த்தனம்.


இவர்களை நான் அறிமுகப்படுத்தவில்லை.. உங்களோடு சேர்ந்து நானும் ரசித்ததைப் பகிர்கிறேன்..



தொடரலாம்..  நாளை.,

Monday, November 26, 2012

சப்தப்ராகாரம்- நீர்


வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு இந்த வாரம் எனக்கு.. உங்களை அன்போடு வரவேற்கிறேன்..




எனக்குக் கொஞ்சம் தயக்கம் தான். ஆனால் முன் மொழிந்த திரு. வை.கோ. என் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை.. என்மேல் நான் வைத்திருப்பதை விட அதிகம் !

திரு. வை.கோ.வின் பேரன்பிற்கு நன்றி.

திரு. சீனா ஸாருக்கு நன்றி என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிப் போக முடியாது. கடைசி நாள் அவர் சொல்லப் போகும் வார்த்தைகளுக்கான டென்ஷன் கவுண்ட் டவுன் இப்போதே ஸ்டார்ட் எனக்குள்.

பஞ்ச பூதங்களில் இந்த வாரம் நீரில் ஆரம்பிக்கலாமா..

ஸ்ரீரங்கம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது அகண்ட காவிரி.. அதன் நடுவில் பள்ளி கொண்ட ரெங்கன்..

கங்கையில் புனிதமான காவிரி நடுவுபட்டு

பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம்தன்னுள்

எங்கள் மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டு

எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.

ஆழ்வார்கள் அத்தனை பேரும் பாடிய பூலோக வைகுண்டம். பக்கத்திலேயே ஜம்புகேஸ்வரர். அவரும் நீருக்குள் தான் இருக்கிறார். மூலஸ்தானத்தில் காவிரி சுரக்கிறது இன்றும்.

அவ்வப்போது அரசியல் விளையாட்டில் காவிரியில் மணல் ஓடினாலும்.. இயற்கை இன்னும் கருணையோடு இருப்பதால் நீர்வரத்தும் இருக்கிறது.

அம்மாமண்டபம் அல்லது காவிரிப் பாலம் போனால் ஜில்லென்று காற்று தழுவிப் போகும்.

காவிரிக்கு நிறைய புராணக் கதைகளும் உண்டு. இந்த நாள் கதைகளும் உண்டு. ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்று எழுதினாலே காவிரியைத் தொடாமல் எழுத முடியாது.

பதிவராய் ஆரம்பித்ததே ஒரு விளையாட்டுத்தான். பிலாக் பற்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு அரிச்சுவடி போதித்த ரேகா ராகவன் ஸார்..(கணினியில் இவர் காட்டுகிற உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்) என்னை அவ்வப்போது உற்சாகப்படுத்தி எழுத வைத்து விடுகிற கே.பி. ஜனா ஸார் (கதை, கவிதை, கட்டுரை என்று கலக்கல் பதிவர் இவர்) இருவருக்கும் நன்றி சொல்வது அவர்களைச் சங்கடப் படுத்தும்.

தமிழின் நின்று போன, இப்போதும் வருகிற எல்லா வார, மாத இதழ்களிலும் எழுதி விட்டேன். வலைத்தளத்தில் எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். பத்திரிக்கைகளில் வாசகர் கடிதம் சில நேரம் பிரசுரிப்பார்கள். சில சமயம் அதுவும் இருக்காது. எழுதியது பிடிச்சிருக்கா.. இல்லியா தெரியாது. ஆனால் இங்கோ வெளியிட்ட பத்தே நிமிடத்தில் சரசரவென பின்னூட்டங்கள்.. அடுத்த படைப்புக்கு தூண்டுதலாய்..

 என் பதிவுகளை வாசித்து பின்னூட்டமிட்ட அத்தனை பேருக்கும் இதோ வலைச்சரம் மூலம் நன்றி சொல்கிறேன்.

எழுத்தில் சிறுகதை எனக்குப் பிடித்த தளம். கொஞ்சம் சீரியஸ் ரைட்டிங்க்தான் என்று சொல்வார்கள். ஆனால் நான் எழுத ஆரம்பித்தது விளையாட்டாய். எனக்கு நகைச்சுவை வரவில்லை என்கிற குறை உண்டு. போட்டோக்களில் கூட சிரிப்பதில்லை என்கிற விமர்சனம். அதை எப்படியாச்சும் உடைக்கணும்னு எழுதிய கதைகள்.. "அந்தர சுந்தரன் "  .."ஒரு தலை ராகம்"     இன்னும் சில.

கவிதை எனக்கு எழுத வரவில்லை என்று ஒரு விமர்சனம். (கதையே எழுத வரல.. என்கிற என் மனக் குறை நல்ல வேளையாக அவர்களுக்குத் தெரியவில்லை.) அவ்வப்போது சில கவிதை முயற்சிகளும் செய்து கொண்டிருக்கிறேன். எப்படியாச்சும் எதையாவது உருப்படியா எழுதிடுவேன் என்கிற நம்பிக்கை..

என்னை பிரமிக்க வைக்கிற சில பதிவர்கள்.. எல்லோரையுமே பிரமிக்க வைத்திருக்கிறார்கள் என்று இத்தனை நாட்கள் பிறர் ஆசிரியராய் இருந்த வலைச்சரங்கள் சொல்லி விட்டன. அதைத் தாண்டி அவர்களை இனிமேலும் புதுசாய் நான் என்ன அறிமுகம் செய்யறது.. ஹேட்ஸ் ஆஃப். அத்தனை பிரபல பதிவர்களுக்கும். ஆனாலும் என மனம் தொட்ட சிலரை உங்களோடு சேர்ந்து இன்னொரு தரம் ரசிக்கிறேன்.. சொல்லாமல் விட்டதால் மற்றவர்கள் மனம் தொடவில்லை என்று அர்த்தமில்லை.. 16 மணி நேர பவர் கட்டில் பிலாக்கிற்கு எழுதுவது என்பது அகடிதகடனா சாமர்த்தியம். (ஹப்பாடி.. புதுசா யாருக்கும் புரியாம ஒரு வார்த்தையை போட்டாச்சு)

என் பதிவுகளில் எதை சொல்ல.. எதை விட.. அதனால் சிரமம் பார்க்காமல்.. எப்போ நேரம் கிடைக்குதோ.. அப்போ என் பிலாகிற்கு வந்து பழைய பதிவுகளைப் படிச்சுப் பாருங்க.. பாராட்டணும்னு கட்டாயம் இல்ல.. மனசுல பட்டதை தைரியமா சொல்லுங்க.. ஆப்டர் ஆல்.. நம் வாழ்க்கை இத்தோடு முடிவதில்லை.. அதைத் தாண்டிய நேசம் பகிர்வதில்தான் இருக்கு.  எனக்கும் பிடிச்ச என் பதிவுகள் சிறுகதைகளில் சில..

1.  மனிதம்

2.  கனவாகி

3.  செங்கிப்பட்டிக்கு ரெண்டு டிக்கட்   (கல்கி வைரவிழாப் போட்டியில் பரிசு)

4.சூடிக் கொடுத்த சுடர்க் கொடி

இனி வரும் நாட்களில் நமக்குப் பிடிச்ச பதிவர்களைப் பார்ப்போமா..

உங்களோடு இந்த வாரம் என்று முடிவானதில் கூடுதல் மகிழ்ச்சியில்..

யுவராணி தமிழரசன் ரிஷபனிடம் பொறுப்பினை ஒப்ப்டைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற யுவராணி தமிழரசன் தான் ஏற்ற பொறுப்பினை சரியாக நிறைவேற்றி - மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள் : 7

அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 65

அறிமுகப் படுத்திய பதிவுகள் : 65

பெற்ற மறுமொழிகள் : 242

யுவராணி தமிழரசனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

சென்று வருக யுவராணி தமிழரசன் 

நல்வாழ்த்துகள் யுவராணி தமிழரசன் 

இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைவு தெரிவித்த நண்பர் ரிஷபன அவர்களை வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

இவர் இயற்பெயர் ஸ்ரீநிவாசன். புனைப் பெயர் ரிஷபன். சிறுவயது முதலே வாசிப்பில் ஈடுபாடு. எழுதத் துவங்கி தமிழின் எல்லா வார, மாத இதழ்களிலும் படைப்புகளை  பிரசுரித்திருக்கிறார். பல போட்டிகளீல் பரிசுகளும் பெற்றிருக்கிறார். சிறுகதையில் அதிகம் நாட்டமுடையவர். வசிப்பது ஸ்ரீரங்கம். திருச்சியிலேயே வேலை. பாரத மிகுமின் நிலயத்தில் நிதி மற்றும் கணக்குப்பிரிவில் பணி புரிகிறார்.

நண்பர் ரிஷபனை ஆசிரியப் பொறுப்பினில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நல்வாழ்த்துகள் ரிஷபன் 

நட்புடன் சீனா 


Sunday, November 25, 2012

நேசிப்போம்! -- (கிறுக்கல்கள் - 7)

               கடவுளின் கருணையில் கொடுக்கப்பட்டவை அனைத்தும் விசித்திரமானவை. வாழ்க்கையின் அர்த்தமே விசித்திரமாய் தோன்றிடும் பல சமயம். சந்தோஷத்தருணங்களை நினைவூட்டுகையில் அழுகை வரும் சில சமயம், வருத்தமான தருணங்கள் சிலதை நினைத்தால் சிரிப்பு வரும். சந்தோஷம், அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு அனைத்தும் விளக்கமுடியாத மனித உணர்வுகள். 
                 இங்கு "நான்" என்று எதுவுமே இல்லை, எல்லாமே "நாம்" தான். யாருமின்றி இங்கு "நான்" மட்டும் தனித்திருக்க இயலாது. மனித உணர்வுகள் ஒவ்வொன்றும் நம்மையும் நம்மோடு இருப்பவர்களையும் சார்ந்தது. நாம் காட்டும் கோபமும், வெறுப்பும், பேசும் வார்த்தைகளும், செய்யும் செயல்களும் ஒருவரை காயப்படுத்துமெனில் அதில் நாம் அடைவது என்ன? அப்படி செய்து எதை சாதித்துவிடப்போகிறோம்? 
            நம்மை நாம் ரசிப்போமெனில் பிறரையும் நேசிக்கத்தோன்றும்! பிறரையும் நேசித்தோமெனில் அனைத்தையும் ரசிக்க ஆரம்பித்துவிடுவோம். நாம் தளர்ந்து சோர்வுருகையில் நமது சூழலை உற்று நோக்கினாலே தளர்வுகள் நீங்கிவிடும். 

கோபம் கூட 
அழகு தான் 
மீண்டும் பேசிச் சிரித்திட 
நேரம் தேடுகையில்! 
வெறுப்பு கூட 
நல்லது தான் 
தனிமையை ஒதுக்க 
போரடுகையில்! 

 கடந்து செல்லும் காலமும், அதில் விழுங்கப்படும் வயதும் என்றும் திரும்பப்போவதில்லை. நாம் கடக்கும் பாதையில் நம்மை நேசிப்போம்! முழுமையாய் அனைத்தையும் நேசிப்போம்!



~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--6

எதிர்பார்ப்புகள்! என்றுமே நம்மை வீழ்த்தத்துடிப்பவையே!எதிர்பார்த்தது நடக்காவிடில் அதை ஏற்றுக்கொள்ள மனம் தடுமாறும். முதற்புள்ளி வைக்கும் முன்னே சந்தோஷமான முற்றுப்புள்ளிக்கு கனவு காண்பதை விட சிறந்த முதற்புள்ளிக்கு முயற்சி செய்வோம்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


26.           "அறிவைப் பகுத்து அறிவோம்" என்று அறிவைப்பற்றிய மிக அருமையான அலசலையும் அதன் வெவேறு வளர்ச்சி காலகட்டங்களையும் சொல்லியிருக்கிறார் தண்ணீர் பந்தல் வே சுப்பிரமனியன் அவர்கள்!
 --
27.             வாழ்க்கையின் எதார்த்தத்தையுன் இன்றைய அவசர உலகத்தில் நாம் தொலைத்த பழைய தருணங்களை மிட்பவையாய் "பனைமரத்திடலும் பேய்களும்!' என்று அனுபவக்கவிதையை பதிந்திருக்கும் கீதமஞ்சரி அவர்கள்!

28.            தானம் என்றால் என்ன? தானத்தில் சிறந்த தானம் எது? என்று அலசி கூறி இருக்கிறார் கடம்பவனக் குயில் அவர்கள்!

29.             "தனிமையும் தவிப்பும்" என்று தனிமையில் இருக்கையில் மாரடைப்பு வந்தால் எப்படி சமாளிப்பது என்று நதிக்கரையில் சமீரா அவர்கள் சொல்லி இருக்கியார்கள்.

30.              உழைப்பின் பெருமையை எட்டுக்கால் பூச்சியும், எரும்பும் சொல்வது போலான ரசிக்கும்படியான அழகிய கவிதையை பதிந்திருக்கும் மோ.சி.பாலன் அவரகள்.

~~~~****~~~~


வணக்கம் தோழமைகளே!
             இன்று அனைவருக்கும் சந்தோஷமான செய்தி, இன்றோடு நான் ஏற்ற வலைச்சர ஆசிரியர் பொறுப்பு நிறைவடைகிறது! அதனால் இன்று  எனக்கான நேரமிது சில நன்றிகளுக்கும் மன்னிப்புகளுக்காகவும்!!! ஒரு மாதமாக நடந்து முடிந்த பரிட்சை, மின்வெட்டு, வீடு மாற்று வேலை, மெதுவான இணைய இணைப்பு இதற்கு மத்தியில் ஏதோ என்னால் முடிந்த அளவிற்கு திருப்திகரமாகவே செய்துள்ளேன் என்கிற நம்பிக்கையில் வலைச்சரத்திலிருந்து விடை பெறுகிறேன்! எனது பதிவுகளில் ஏதேனும் தவறுகள் பிழைகள், குறைகள் இருந்திருந்தால் [கண்டிப்பாக இருக்கும்! ஒரு கருத்தினைச் சொல்லும் பதிவு அனைவரையும் திருப்தி படுத்திவிடாது ஒவ்வொருவரின் கண்ணோட்டமும், எதிர்பார்ப்பும் ஒவ்வொரு மாதிரி] என்னை மன்னியுங்கள் தோழமைகளே!
                   வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தது மட்டுமின்றி தினம் வலைச்சரம் வந்து என்னை ஊக்கப்படுத்தியும் சில சொந்த வேலை காரணமாக  முடியாத நேரத்தில் கேட்டவுடன் நான் அறிமுகப்படுத்திய பதிவர்களின் அண்மைய பதிவினிற்கு சென்று தகவல் கொடுத்துதவிய,  திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும், இத்தகைய நான் எதிர்பார்க்காத வாய்ப்பினை எமக்களித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், அவ்வப்போது எனது பதிவுகளை சிரமம் பார்க்காமல் தமிழ்மணத்தில் இணைத்துக்கொடுத்த திரு.திண்டுக்கல் தனபாலன் அண்ணா அவர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்!
                        எனது பதிவுலக பயணத்தின் முதற்புள்ளியும், ஆரம்பமும் ஆனா எனது தோழி சிவரஞ்சனி சதாசிவம் -கு எனது நன்றிகள் என்றென்றும்! பொழுதுபோக்காய் ஆரம்பித்து பின்னாளில் எனது கிறுக்கலையே கொஞ்சம் செதுக்கி உயிர்பித்துக் கொடுக்க தூண்டுபவையான கருத்துரைகளை கொடுத்து, ஒரு விருதினையும் [எனது பாதையின் முதல் மைல்கல்!] கொடுத்து என்னை இந்த பதிவுலகிற்கு அறிமுகப்படுத்திய திரு. ரமணி ஐயா  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!
                        நீங்களின்றி இந்த பதிவுலகம் இல்லை! எனது சக பதிவர்களே எனது பதிவுலக பயணத்தில் என்னோடு துணைவந்தும் எனது கிறுக்கல்களை ரசித்து அவ்வப்போது வண்ணத்தீட்டல்களால் என்னை ஊக்கப்படுத்திப்போகும் அழகிய ஓவியங்களே தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
         மேலும் என்னை அறிந்தும் அறியாமலும் பல பதிவர்கள் என்னை இந்த வலைச்சர பயணத்தில் தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி எனது பயணத்தை இனிதாக அமைத்து தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மட்டுமின்றி ஒரு சிறு சிறப்பு அறிமுகம்! அதை ஏற்றுக்கொள்ளும்படி அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!
  1. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் - சிரித்து மகிழுங்கள்! - யார் முட்டாள்?
  2. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் -  யாரது???? - மனிதனின் மிகப்பெரிய எதிரி யார்?
  3. இராஜராஜேஸ்வரி அவர்கள், -ஆன்மீக உலா - தகதகக்கும் தங்கக்கோவில்!                                                                                                                                                        
  4. 2008rupan அவர்கள், - தீண்டட்டும் - என் சுவாசக்காற்றே! 
  5. 99likes அவர்கள், - தொழில் நுட்பம் 
  6. lakshmi அவர்கள், - சமையல் அறை! சாப்பிடலாம் வாங்க!
  7. Siva Ranjani அவர்கள் - வருடிவிட்டுப்போகிறது - கிளிஞ்சல்களும் மயிலிறகுகளும்!
  8. சேக்கனா M.நிஜாம் அவர்கள், - தேட வேண்டியது! பசுமை எங்கே? இயற்கை எங்கே? 
  9. Jaleela Kamal அவர்கள்,  - - சமையலறை - சாப்பிடலாம் வாங்க!
  10. மகேந்திரன் அவர்கள், - நம்பிக்கையை தேடி! - சிற்றிறகை விரித்துவிடு!
  11. கவியாழி கண்ணதாசன் அவர்கள், - அலசுங்கள் - மனிதனா? மனிதமா?
  12. இரவின் புன்னகை அவர்கள், - காதல் வலி - உயிர் முடிச்சு!
  13. உ ஷா அன்பரசு அவர்கள்,- நாமும் சொல்லுவோமே!- அந்த மூன்று சொற்களை நீங்களும் சொல்லுவீங்களா?
  14. கோவை2தில்லி அவர்கள்,- தீருவதில்லை - ஆடைகளின் மீது மோகம்!
  15. சிகரம் பாரதி அவர்கள், - காதல் துளி- நீ-நான்-காதல்!
  16. s.suresh அவர்கள்,- மனம் மயக்கும் ஹைக்கூ கவிதைகள்!
  17. angelin அவர்கள், - சுவாரஸ்யமான மீண்டும் பள்ளிக்கு போகலாம்:))) அந்த நாள் ஞாபகம்:)
  18. NIZAMUDEEN அவர்கள் - சிந்திக்க! - சில சிந்தனைகள்!
  19. அம்பாளடியாள் அவர்கள்,- பெண்ணை கொஞ்சம் - மணப்பெண் தேவை!
  20. Ranjani Narayanan அவர்கள் - அறிந்து கொள்வோம் - பூமி தினம்! 
  21. Sury Siva அவர்கள், - வேண்டியது- சந்தியில்!
  22. Seshadri.e.s அவர்கள், - எதார்த்தம் - முதியோர் இல்லம்!
  23. ரமணி அவர்கள், - நிஜம் - வசந்த வாழ்வு எளிதாய்ப் பெற!
  24. வெங்கட் நாகராஜ் அவர்கள், - நாவின் ருசிக்கு அல்ல - ப்ரூட் சாலட்!
  25. ezhil அவர்கள், - விடை தேடுவோம் - ரூபாய் நோட்டையா தின்னப் போறீங்க?
  26. kovaikavi அவர்கள், -  படித்துப்பாருங்கள் - கவிதை பாருங்கள்!
  27. பால கணேஷ் அவர்கள், - ருசித்திடுங்கள் - மொறு மொறு மிக்ஸர்!
  28. தி.தமிழ் இளங்கோ அவர்கள், இன்றும் அன்றும் - தங்கம் விலை- 86 வருட பட்டியல்!
  29. Sasikala அவர்கள், காதல் - காதல் தூது!
  30. Asiya Omar அவர்கள், - சமையலறை - சாப்பிடலாம் வாங்க!
  31. வே.சுப்பிரமணியன் அவர்கள், அறிவோம் - தன்னைத் தானறிதல் 
  32. சந்திரகௌரி அவர்கள் -  தொலைத்தது என்ன?- அறுபடும் வேர்களும் அந்நியமாகும் உறவுகளும்!
  33. அருணா செல்வம் அவர்கள்- யோசிப்போமே! - பெண்ணின் பெருமை!       
  34. Semmalai Akash அவர்கள் - காதல் பேசுகிறது! - முதல் பார்வை!  
  35. சே.குமார் அவர்களுக்கு நன்றி[அவரது வலைப்பூவினை அறிய முடியவில்லை! யாரேனும் சொல்லுங்கள்!]        
                      பிராஜக்ட் விஷயமாக நேற்றய திடீர் பயணத்திற்கும், தடையில்லாத மின் இணைப்பையும், அதி வேகமான இணைய இணைப்பையும் எமக்களித்து எனது ஒரு வார கால வலைச்சர பயணத்தை எளிதாக்கிய எனது கல்லூரி இன்று விடுமுறை  அதற்கு மத்தியிலும் மாட்டிகொண்டு விழிக்கிறேன் வீட்டில் மிதமான இணைய இணைப்போடும், மின்வெட்டோடும். அனைத்திற்கும் மத்தியில் திரட்டிய அறிமுகப்பதிவு இது, இங்கு அறிமுகப்படுத்தபட்ட அனைவரும் ஒரு வார காலமாக எமக்கு கருத்துரைத்து ஊக்கப்படுத்தியவர்கள்! இதில் நான் அறியாத பதிவர்களின் அறிமுகத்திற்காக அவர்களது அண்மைய பதிவுகளை மட்டுமே படித்து அறிமுகம் செய்ய முடிந்தது! தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் என்னை மன்னிக்கவும் தோழமைகளே!
                    அனைவரிடமும் இருந்து விடைபெறுகிறேன் (வலைச்சரத்தில் மட்டுமே). இத்தகைய வாய்ப்பினால் நான் அறியாத ஏராளமான பதிவர்களை கண்டறிய முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி! இந்த ஒரு மாத காலமாக சக பதிவர்களின் பதிவுகள் குவிந்துகிடக்கின்றன மெயிலிலும் டேஷ்போர்டிலும், அதுபோக புக்மார்க்ஸ்-ம் நீண்டு விட்டது. இனி வேறென்ன வேலை?? இதோ வந்துட்டேன்!!!!!!!!!

நமக்கும் காலமுண்டு! -- (கிறுக்கல்கள்-6)

முதுமை!
இதயத்தில் அச்சத்தை
விதைத்துவிட்டு,
நாடி நரம்புகளை
தளர்த்திவிட்டு,
உறக்கத்தை களவாடுமே!

உறக்கத்தை தேடும்
உயிர் சுவாசத்தின்
பயணத்தில் நாம்
என்ன செய்கிறோம் 
அவர்களுக்காக?
நாம் எதை தொலைக்கிறோம்
அவர்களின்றி?

பெரியவர்களின் அனுபவம் கற்று
கதை கேட்டு
பக்குவப்படுத்தி பதபடுத்தப்பட்ட
மழலைகள் இன்று
உறவுகளும் அன்பும் 
அறியாது!

குழந்தை பராமறிப்பு பற்றி
அம்மா சொல்லிக்கொடுப்பது போய்
கூகிளிடம் மன்றாடுகிறோம்!
எதை சொல்வது
எதை விடுவது
என்று அறியாது
வார்த்தைகளின்றி நான்! 

நாம் என்ன செய்துவிட்டோம்!
தட்டுத் தடுமாறி ஏறுமுன்னே
நகரத் துணியும் பேருந்தில் ஏறி
நின்று நிதானிக்க 
தள்ளாடுபவர்களுக்கு
இடம் கொடுக்க கூட 
ம் வருவதில்லை நமக்கு!

கடல் கடந்த பயணத்தில்
காலம் கடந்து நாம்
வரும் வரை
நம் இடத்தில் பணியாட்கள்!
அன்பும் அக்கரையும்????

அனைத்தும் இருந்தும்
ஒன்றோடு ஒன்றாய்
பாரமாய் இருப்பதால்
அகதிகளாய்
முதியோர் இல்லத்தில்!

சில வசதிக்காரருக்கும்
வசதிப்படாததால்
வீட்டின் மூலையில்
கிழிசலாய்!

அனுபவிக்கையில் 
கசந்து போகிற பயணத்தில்
சிலருக்கு துணையாய்
"துணை" மட்டும்
சிலருக்கு நினைவுகள்
மட்டுமே மீதமாய்!

காலச்சக்கரம்
சுழன்று கொண்டிருக்க
அனைவரும் இருக்கையில்
ஒருவருக்கொருவர்
பேசி காயப்படுத்திக்கொண்ட
வார்த்தைகளும் 
செய்தவை யாவும் 
நெஞ்சுக்கூட்டுக்குள் 
இருகிக்கிடக்க!
இன்று யாரும் 
இல்லாத போது
உனக்கென நான்,
எனக்கென நீ ஆக
"துணை"-ஐ மட்டும்
துணை கொண்டு
வாழத்துணிகிறார்கள்!

எதை தேடுகிறது 
என்று அறியாது
எதையோ தேடி 
சிக்கித் திண்டாடும்
உயிர்சுவாசத்தின்
பயணத்தை அனுபவிக்க
நமக்கும் காலமுண்டு!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--5

கேட்கத் துணிந்து சொல்ல மறப்பது "நன்றி"! சொல்வதை கேட்டு கேட்க மறப்பது "மன்னிப்பு"! இந்த இரண்டினையும் சொல்ல வேண்டிய நேரத்தில் உகந்தவர்களிடம் சொல்லுதல் உறவினை மேலும் பல படுத்தும்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!


21.                "பேசக்கூடாது" என்று சொல்லி விட்டு நாம் எப்படி பேசுகிறோம் என்று நகைச்சுவை கலந்த ரசிக்கும்படியான பதிவினை பதிந்திருக்கிறார் மின்னல் வரிகள் பால கணேஷ் அவர்கள்

22.                மிக சிரமப்படுத்தும் விழாக்கால இரயில் பயணம் எதற்காக? யாருக்காக? என்று எளிய நடையில் எதார்த்தத்தை கவிதையாக பதிந்திருக்கும் குருச்சந்திரன் அவர்கள்

23.                அஜாக்கிரதையாக செய்யப்படும் ஹெல்த் செக் அப் மற்றும் அதனால் வரும் பின் விளைவுகள் பற்றி "உயிருடன் விளையாடாதீர்கள் ப்ளீஸ்" என்று பதிந்திருக்கிறார் நிகழ்காலம் ezhil அவர்கள்

24.                   விந்தையான பிறப்பும் இறப்பும் அதில் இடைப்பட்ட காலத்தினையும் மிக அழகான சொல் பிரயோகிப்போடு "புலப்படாத மாயை" என்று கவிதையாக பதிந்திருக்கிறார் செய்தாலி அவர்கள்

25.                  இயற்கைக்கும் செயற்கைக்கும் மத்தியில் இந்த நவீனத்தோடு நாம் தொலைந்து போவதை "நாமும் நவீன யுகமும்" என்று அழகிய கவிதையில் செதுக்கி இருக்கிறார் ப.தியாகு அவர்கள்


~~~~****~~~~

தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!

Friday, November 23, 2012

"சந்தோஷம்"- என் பார்வையில்! -- (கிறுக்கல்கள்-5)

    வாழும் வாழ்க்கையின் அர்த்தங்கள் யாவையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை இங்கு. அவரவர் வாழ்க்கையின் அர்த்தங்களை அறியவே அவரவர்களுக்கு இந்த ஆயுள் போதவில்லை. "கற்றது கையளவு கல்லாதது கடலளவு" என்ற போதிலும் எதை அடைந்துவிட்டதாய் கர்வம் ஏந்தி சில மனித இதயங்கள் துடிக்கின்றனவோ? 
              அன்பான வார்த்தைகள், அரவணைப்பான ஆறுதல்கள், உரிமையான தேற்றல்கள், இறுக்கமான உறவுகள், ஈரம் காயாத  சந்தோஷங்கள், இப்படி அனைத்தையும் அடையத்துடிப்பதை விட கொடுத்து ரசிப்பதின் சந்தோஷம் அலாதியானது.இருப்பவனுக்கு மத்தியில் இல்லாதவனாய் வாழத்தெரிந்தவர்களுக்கும், இருப்பவனாய் இருந்தும் இல்லாதவனாய் வாழத்தெரிந்தவர்களுக்கும் மத்தியில் அடிமையாய் மண்டியிட்டு அகப்பட்டுக்கிடக்கும் "சந்தோஷம்" கொண்டாடும் எளிமை ஏழ்மையென சித்தரிக்கப்பட்டு சிதைக்கப்படுவது இல்லாதவனுக்கு மத்தியில் இருப்பவனாய் கர்வம் கொண்டு வாழத்துடிப்பவர்களிடம்!
       மனித உறவுகளின் பந்தமும் சில சமயம் சூழ்ச்சிகளாலும் வன்மங்களாலும் சூழப்பட்டபோதும் இன்னும் இழப்பதையும் இறுக்கிப்பிடித்து  பந்தப்படுத்துவது நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் மட்டுமே. வாழ்க்கையின் அரிய அர்த்தங்களை கையில் அகப்படுத்தி வசதிக்காரருக்குமே வசப்படுத்தாது, காண்பவர்களுக்கும் கேட்டவர்களுக்கும் கொடுத்துவிடாது, உணர்வுகளுக்கு உரிமை கொடுத்து உள்ளத்தில் ஈரம் கொண்டு உதிரும் உதிரத்திலும் உயிர் கண்டு நேசிக்கத்தெரிந்தவனது உதிரத்தில் தானாய் அகப்பட்டுக்கொண்டு சில்லிடுமே "சந்தோஷமாய்"!
      நாம் நாமாக இருப்போம்!

~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--4

எதை சாதித்துவிட்டாலும் பணிந்திருப்பது மட்டுமே நிலையான வெற்றியைக் குறிக்கும். "நான்" என்பது " நான் தான்" என்றாகிவிட்டால் பின் "நாம்" என்பதும் "நான்" என்றாகிவிடும். "என்னால் மட்டுமே முடியும், முடிந்தது!" என்று சொன்னால் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!

16.                          வெங்கட் நாகராஜ் அவர்களுடைய ஃப்ரூட் சாலட்-ஐ கொஞ்சம் ருசித்துப்பாருங்கள் ருசி(இது நாவிற்கான ருசி அல்ல) மனதில் ஒட்டிக்கொள்ளும் "கரை நல்லது" என்று அவரது பயண அனுபவத்தை ரசிக்கும்படியாக சொல்லி இருப்பது அழகு!

17.                        முனைவர்  நா.இளங்கோ அவர்களது மலையருவியில் தான் எப்படி புத்தககாட்டிற்குள் தன்னை தொலைத்தார் என்பதை பற்றியும், மேலும் சில சமயம் பேசும் வார்த்தைகள் உள்ளிறங்கும் விஷமாய் போவதை பற்றியும் மிக அழகாக கவிதை நடையில் சொல்லி இருக்கிறார்.

18.                       கோவை கவி அவர்களின் தளத்தில் அழகான கவிதைகளை "கவிதை-பாருங்கள்" என்று பதிந்திருப்பதோடு, இந்த அவசர உலகத்தில் நாம் தொலைத்த பரம்பரியத்தையும் அதை சார்ந்த சந்தோஷங்களை பற்றியும் "தொலைத்தவை எத்தனையோ" என்று பல பகுதிகளாக பதிந்திருக்கிறார்!

19.                        கவியாழி கண்ணதாசன் அவர்களது கவிதை மழையில் நனைவது அருமை அதில் முதுமையின் ஏக்கம் பற்றியும் கோவிலிக்குள்ள இருப்பது யார்? என்பதை பற்றியும் நிதர்சனத்தை நிழலாடக்காட்டி இருக்கிறார்!

20.                       சீனி அவர்களது கவிதைகளுள் நமது இதய சிற்பிக்குள்ளும் முத்தெடுக்கதூண்டும் "தெரியாது?"-ம், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையேயான வாழ்வின் அர்த்தங்களை கருவாக்கிய "கலங்காதிரு.." -ம் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.

~~~~****~~~~


தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!



Thursday, November 22, 2012

கரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்! ---- (கிறுக்கல்கள்-4)

               அக்டோபர் 1 "தி ஹிந்து" நாளிதழின் ஓப்-எட் பக்கத்தில் ஒரு செய்தி படிக்க நேர்ந்தது. அதை பற்றி இங்கே பகிர விரும்புகிறேன். அந்த செய்தி ஒரு அமைச்சரின் கோரிக்கையும் அதை பற்றிய ஒரு அலசலும். அவரது கோரிக்கை என்னவென்றால் திருமணமான ஒவ்வொரு ஆணும் தனது மனைவியின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து மாதாமாதம் குறிப்பிட்ட சதவிகித தொகையை கணக்கில் செலுத்திவிடவேண்டும். 
                எதை மனதில் வைத்து இப்படி ஒரு எண்ணம் அவருக்கு தோன்றியதோ தெரியவில்லை. ஆனால் இது சரியானது தானா??? இந்த அவசர உலகத்தில் பணம் விளையாடாத இடமே இல்லை. சில சமயம் சில நேரத்தில் சில இடங்களில் உறவுகளே பணத்தால் பந்தப்படுகிறதோ என்கிற நிலை வருகையில் திருமண பந்தம் ஒன்று தான் இன்னும் அன்பினில் ஒட்டிக்கொண்டிருக்கிறதோ என்று தோன்றும். அதையும் இப்படி பணத்தால் அளந்துவிட முடியும் என்றால் இனி வாழ்வின் எத்தனை அர்த்தங்களை நாம் தொலைக்கப்போகிறோமோ??
              அந்த செய்தியை படிக்கும் சில தினங்களுக்கு முன் அதே "தி ஹிந்து" நாளிதலில் மற்றொரு ஆர்டிகலையும் படித்தேன் "A must for wives-Financial Literacy". அதில் ஒரு முழுமையான குடும்பம் திடீரென குடும்பத்தலைவரை இழக்கையில் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை முன்வைத்து அலசுவதாக இருந்தது அந்த பதிவு. வலைச்சரம் இந்த பிரச்சனையின் வீரியத்தை பலரிடம் கொண்டு சேர்க்கும் என்கிற நம்பிக்கையில் இங்கு பகிர்கிறேன். 
                 பெண்கள் பலரும் கல்வி கற்று, பல துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதித்திருந்தும் இன்னும் பல திருமணமான பெண்கள் படித்திருந்தும் வேலைக்குச் செல்லாதவர்கள், படிக்காதவர்கள், வேலைக்குச்செல்ல அனுமதிக்கப்படாதவர்கள், என பலர் இருக்கிறார்கள். இன்னும் சமையலறைக்குள்ளும், கணவர் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குள்ளும் பதுங்கிக்கிடக்கும் பெண்கள் பலர் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி ஒரு வட்டத்திற்குள் புதைந்து போகும் அவர்களது வாழ்க்கை சுதந்திரம் வீட்டையும் கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வது மட்டுமே, வெகு சிலர் மட்டுமே வீட்டின் நிதித் துறையிலும் பங்கு கொள்கிறார்கள். மற்றவர்கள்? 
                     ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கணவரை இழக்கும் நிலை ஏற்படுகையில் ஒரு கூட்டுக்குள் தொலைத்த காலத்திலிருந்து தன்னை மீட்டு நிதானித்து நிலைக்க போராடுகிறார்கள் பெண்கள். இதை நான் கடந்த பாதையில் சிதறிக்கிடந்த கூட்டுக்கிளிகள் பலரை கண்ட அனுபவத்திலேயே கூறுகிறேன். கணவர் இருந்தவரை வரவு, செலவு, கடன், சேமிப்பு என எதிலும் பங்கு கொள்வதில்லை. பின் விநாடிகளில் அனைத்தையும் இழந்துவிட்டு வருடங்களாய் மீளப்போராடி மீண்டவர்களும் உண்டு! மாண்டவர்களும் உண்டு! தனித்து தவித்திருக்கையில் கொடுத்தவனென்றும், வாங்கியவனென்றும், தெரிந்தவனென்றும், தெரியாதவனென்றும் வாயிற் கதவை தட்டுகையில் திணறிப்போகிறார்கள். இதற்கு காரணம் உரிமை கொடுக்கப்படாததா? எடுக்கப்படாததா? என எதுவாகினும் வீழும் விநாடியை தவிர்த்திட கொஞ்சம் உரிமை கொண்டு கரங்கள் இணைப்போம் வீட்டின் நிதித்துறையிலும்!


~~~~****~~~~

வாழ்க்கையை சுவாரஸ்யமாக்க!!!--3

வாழ்க்கையில் பல விஷயம் நாம் நினைப்பது போல் நடந்துவிடுவதில்லை, பிடிக்காதது கிடைத்துவிட்டது என்று வெறுத்து ஒதுக்குவதை விட கிடைத்ததை ரசித்துப்பார்த்தால் பிடித்துவிடும். கொடுக்கப்பட்டதை பிடிக்காது என்ற பார்வைக்கு அப்பால் வைத்து சுவாசித்துப்பார்க்கையிலேயே நுழைந்துவிடும் நமக்குள்ளும் பிடித்தவையாய்!

~~~~****~~~~

 இன்றைய அறிமுகங்கள்!



11.                 angelin அவர்கள்
"கல்யாண சமையல் சாதம் காய் கறிகளும் பிரமாதம்" என்ற பாட்டு தான் ஞாபகத்துக்கு வருகிறது! இங்க யாருக்கும் கல்யாணம் இல்லீங்க! அருமையான சமையல் குறிப்புகளோடு கிராப்ட் வர்க் குறிப்புகளும் கொடுத்து அசத்தும் angelin அவர்கள்!

12.                  ரிஷ்வன் அவர்கள்
தொடர்கதைகளோடும், சிறுகதைகளோடும், கவிதைகளோடும் நின்றுவிடாமல் ஈரடி குறளையும் கவிதையாக்கி எழிய நடையில் செதுக்கி தரும் ரிஷ்வன் அவர்களின் பதிவுகள் இதோ! 

13                 ரமணி அவர்கள்
வார்த்தைகளில் புதிர் பொதித்து வாழ்க்கையின் பல அர்த்தங்களை விளக்கி விளையாட இவருக்கு மிகப்பிடிக்கும்! 

14.                 தி.தமிழ் இளங்கோ அவர்கள்

அவசியமான பல தகவல்களையும், அவசர உலகத்தில் அனாவசியமாய் போன அவசியங்களையும்[கவனிக்கப்படவேண்டியதையும்] மிக  எதார்த்தமான வார்த்தைகளால் பதிந்து வருகிறார்!

15.                 Asiya Omar அவர்கள் 

அருமையான சுவையான எளிமையான சமையல் ரெசிபிகளுக்காக கீழுள்ள  Asiya Omar அவரது லிங்குகளை சொடுக்குங்கள்
http://asiyaomar.blogspot.in/2012/10/blog-post_31.html
http://asiyaomar.blogspot.in/2012/10/almond-rice-kheer.html
http://asiyaomar.blogspot.in/2012/04/blog-post_18.html


~~~~****~~~~

தவறுகள் பிழைகள் ஏதேனும் இருந்தால் மன்னித்துவிடுங்கள் தோழமைகளே! மீண்டும் நாளை சந்திப்போம்!