வாசிப்பின்பம் குறித்த பகிர்வுகள்!
ஒன்றைப்பற்றி அல்லது ஒருவரைப்பற்றி 'விமர்சித்தல்' என்பது எல்லோருக்குமே எளிதில் கைவரக் கூடிய செயலாய் இருந்த போதும், சரி தவறுகளை யோசித்தும், விருப்பு வெறுப்புகளுக்கும் உண்மைகளுக்குமிடையிலான இடைவெளி மீதான உள்ளார்ந்த அக்கறைகளோடும் வெளிவரும் விமர்சனங்கள் மட்டுமே எப்போதும் நம்பத்தகுந்தவையாய் இருக்குமென்பது என் திடமான எண்ணம். அதே போல் 100, 200 பக்க புத்தகங்களை ஒரே மூச்சில் விடாமல் வாசிப்பதை விடவும், வாசித்ததை கனம் குன்றாமல் பிறர் அறியத் தருதலும், விமர்சித்தலின் வழியாய் பிறரையும் வாசிக்கத் தூண்டலும் சற்று கடினமானது என்றே நினைக்கிறேன். என்றாலும் வலையில் சிலருக்கு இந்த ஆற்றல் வெகுஇயல்பாய் அமைந்திருப்பதை காணமுடிகிறது!
அந்த சிலரில் ஆசீப் அண்ணாச்சி முக்கியமானவர். அவரின் சாத்தான் குளத்து வேதத்தில் 'எனக்குப் பிடித்த சிறுகதைகள்' என்ற தலைப்பில் முத்துலிங்கம், வண்ணநிலவன், அறிவுமதி போன்றோரின் சிறுகதைகளை தன் பாணியில் விமர்சித்திருப்பார். அதில் முத்துலிங்கம் எழுதிய 'ஐவேசு' என்ற நகைச்சுவை சிறுகதையை அவர் விமர்சித்திருந்த விதம் வெகு சுவாரசியமாயிருந்தது. அதே போல பிரபஞ்சனின் கதைத்தொகுப்பான சித்தன் போக்கு நூலுக்கு அவர் எழுதியிருந்த விமர்சனமும் நன்றாயிருந்தது!
ஜமாலனின் கடினமான நடைக்கு பயந்தோ என்னவோ அவர் தளத்திற்கு நான் அடிக்கடி செல்வதில்லை. தற்செயலாய் அவர் தான் வாசித்தவை பற்றிய குறிப்பில் புதுமைப்பித்தனின் ஆற்றங்கரைப் பிள்ளையாரை படிக்க நேர்ந்தது. உண்மையில் அதனை விமர்சனம் என்பதை விடவும் திறனாய்வு என்று கூறுதல் பொருந்தும். ஏற்கனவே அந்த கதையைப் படித்திருந்த போதும் இதில் இத்தனை சொல்லப்பட்டிருக்கிறதா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தி மீண்டும் வாசிக்கத் தூண்டியது. அவர் தன் எழுத்துருவின் அளவை சற்றுப் பெரிதாக்கினால் பரவாயில்லை!
எப்போதாவது ஒரு முறை எட்டிப்பார்க்கும் வலைப்பூக்களில் ஒன்றான டிசே தமிழனின் வலைப் பதிவில் என்னால் கவனம் சிதறாமல் படிக்க முடிந்தது சாருநிவேதிதாவின் "கடல் கன்னி " என்ற மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பின் மீதான இந்த விமர்சனம். மரியா லூயிசாவின் 'மரம்' பற்றிய கதைக்கும் இவர் கொடுத்திருந்த விமர்சனமே கதையைப் படித்து முடித்தாற் போல திருப்தியளித்தது!
அய்யனாரின் எழுத்துக்கள் கதை, கவிதை, கடிதம், கட்டுரை, புனைவு, புத்தக மற்றும் திரைப்பட விமர்சனங்கள், என எல்லா வடிவங்களிலும் பிரம்மிப்பூட்டுபவையாய் இருக்கின்றன. புத்தகங்கள் பற்றிய இவரின் விமர்சனங்களில் அபி கவிதைகள் பற்றிய குறிப்பும் யுவனின் கானல்நதி குறித்த பதிவும் என்னை ஈர்த்தவை.
"நகுலனின் மொத்த நாவல்களும் கைக்கு கிடைத்தபோது சிறிது பதட்டமாகத்தானிருந்தது அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருந்த சில கவிதைகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.இந்த மொத்த எழுத்தையும் படிக்கும்போது ஒரு வெளியில் தன்னைத்தானே தொலைக்க நேரிடுமோ என்கிற பயம் நிகழ்ந்தேவிட்டது..."
என்ற பலத்த பீடிகையோடு தொடங்கிய "மனதின் பைத்திய நிழல்" நகுலன் நாவல்களை கடைகடையாய் தேடவைத்த இடுகை!
தமிழ்நதியின் "சூரியன் தனித்தலையும் பகல்" கவிதைத் தொகுப்பிற்கு சுகுணாதிவாகர் "சொற்கள் நிரம்பிய தனிமையும் தனிமை நிறைந்த சொற்களும்" என்ற தலைப்பில் விமர்சனம் எழுதியிருந்தார். தலைப்பைப் பற்றி மட்டுமே சிறிது நேரம் யோசிக்க வேண்டியிருந்தது. மிகச்சிறந்த விமர்சனம் அது. நெகிழவைக்கும் கவிதைகளில் ஒன்றான "அற்றைத் திங்கள்" கவிதைக்கு
"பறம்புமலையில் உடைந்து சிதறிய பாரிமகளிரின் கண்ணீர்த்துளிகள் நூற்றாண்டுகளைக் கடந்துவந்து தமிழ்நதியின் கவிதைகளையும் ஈரப்படுத்துகின்றன"
என்று அவர் சொல்லியிருந்தது மேலும் நெகிழ வைத்தது.
சித்தார்த் மீள்வாசிப்பை வேண்டி நின்ற இரு நூல்கள் என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரனின் 'மணலின் கதை' மற்றும் யுவனின் 'ஏற்கனவே' சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியிருந்த விமர்சனமும் நல்ல பதிவென சிலாகிக்கத்தக்கது.
இவர் இப்படிக் கூட எழுதுவாரா என்ற ஆச்சரியத்துடன் முழுமையாய் வாசிக்க வைத்தது தம்பியின் "சதுரங்கக் குதிரை"
"மிகவும் வசீகரித்த புத்தகமொன்றைப் பற்றி குறிப்பெழுதவென உட்காரும்போது எங்கிருந்து தொடங்குவதென்ற கேள்வியெழும். முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்க முடியாது. காரணம்,..."
என்று தொடங்கி அருந்ததிராயின் புகழ்பெற்ற "The God of small things" புத்தகம் பற்றிய சுவாரசியமாய் விரிவாய் குறிப்பெழுதியிருந்தார் நிவேதா. அவரின் குட்டிக் குட்டி எழுத்துருக்கள் தான் சிரமப்படுத்துகின்றன.
மலர்வனம் லக்ஷ்மி மாற்றான் தோட்டத்து மல்லிகை என்ற பிரிவில் தன் வாசிப்பனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார். அசோகமித்திரனின் 'ஒற்றன்' நாவலும், அம்பையின் 'சிறகுகள் முறியும்' தொகுப்பும் விமர்சிக்கப்பட்டிருந்த விதம் அருமை.
"உயிர் கொண்டு திளைத்தல்" என கவித்துவமான பெயரில் பதிவெழுதும் நளாயினியின் கவிதை விமர்சனங்களும் நன்றாயிருக்கின்றன. பெண்ணியாவின் 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை" மற்றும் ஈரோடு தமிழன்பனின் 'கவின்குறுநூறு' பற்றிய விமர்சனங்கள் நல்ல பதிவுகள்.
|
|
back from hometown.. hehehe..
ReplyDeleteஇன்னைக்கு போஸ்ட் ரொம்ப சீரியஸா இருக்கே??
வலைச்சரத்தில் என்னையும் நினைவு கூர்ந்ததற்கு நன்றி.
ReplyDelete//ஜமாலனின் கடினமான நடைக்கு பயந்தோ என்னவோ அவர் தளத்திற்கு நான் அடிக்கடி செல்வதில்லை.//
நீங்களுமா? எனது ஆரம்பகால எழத்துக்கள் எனக்கே புரியாது.. இப்ப எவ்வளவோ தேவலாம்.
//அதனை விமர்சனம் என்பதை விடவும் திறனாய்வு என்று கூறுதல் பொருந்தும். //
அது ஒரு பகுதிதான். யாருக்கும் புரியவில்லையோ என்று மற்றொரு பகுதியை வெளியிடவேயில்லை. பரவாயில்லை அந்த மட்டிலுமாவது ஒத்துக் கொண்டுள்ளீர்கள்.
//நீங்களுமா? எனது ஆரம்பகால எழத்துக்கள் எனக்கே புரியாது.. இப்ப எவ்வளவோ தேவலாம்.//
ReplyDelete:))))
///யாருக்கும் புரியவில்லையோ என்று மற்றொரு பகுதியை வெளியிடவேயில்லை//
ReplyDeleteஆமாங்க ஜமாலன்.. ஏசு கிறிஸ்து பத்தியெல்லாம் சொல்றேன்னு சொல்லிட்டு அம்போன்னு விட்டுட்டீங்க போல?