07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 5, 2007

கடந்து செல்லவியலாத பெயர்கள்

வாழ்வின் மீதான அயர்ச்சி பெருகுமொரு நாளில் இந்தப் பதிவினைத் தொடுகிறேன். மூளை செயலற்றுக் கிடக்கவே விளைகிறது. ஆனால், செயலற்றவர்களை உலகம் மறந்துவிடுமென்ற குரூர உண்மை சாட்டையெறிந்து இயங்கவைக்கிறது.

கடந்த பதிவில், கவிதைகளையே பிரதானமாக எழுதிக்கொண்டிருப்பவர்களின் பக்கங்களைப் பட்டியலிட்டிருந்தேன். கவிதையும் உரைநடையும் கலந்து எழுதுபவர்களைப் பற்றி இந்த இடுகையில் எழுதலாமென்றிருக்கிறேன். 'இவர்கள் இன்னார்'என்ற வகைசெய்துகொள்வது ஒரு வசதிக்காகவேயன்றி, உண்மையில் பார்க்கப்போனால் எழுதுபவர்களை அவ்விதம் வரையறைக்குட்படுத்துவது கடினமே. உதாரணமாக கவிதை குறித்த உரைநடையை எதற்குள் அடக்குவது?

'குற்றவுணர்வின் மொழி'என்ற பெயரில், மொழிவசீகரம் மிக்க கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பொன்றை அண்மையில் வெளியிட்ட பாம்பாட்டிச்சித்தன், தமிழ்மணத்தில் குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர். நடைவழிக் குறிப்புகள் என்று பெயரிடப்பட்டிருக்கும் இவரது வலைப்பூவிலிருந்து பிறமொழிக் கவிஞர்களான இர்விங் லேட்டன், ராபர்ட் ஃபிராஸ்ட், ஓர்ஹான் பாமுக், ழாக் ப்ரெவர், விஸ்லவா சிம்ப்போர்க்ஸ்கா (கேள்விப்பட்டதேயில்லை இல்ல? நானுந்தான்:)) ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் மற்றும் அவர்களால் எழுதப்பட்ட சில கவிதைகளின் தமிழாக்கம் என நாமறியாத புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. 'புதுக்கவிதை-2 'எழுத்து'ம் அதன் நீட்சியும், புதுக்கவிதை-3 நவீன விருட்சம் ஆகிய இரு கட்டுரைகளும் தமிழ்க்கவிதை வரலாற்றை அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு வழிகாட்டத்தக்க தகவல்களைக் கொண்டமைந்த ஆழமான கட்டுரைகளாகும். இவ்விரண்டு கட்டுரைகளுக்கும் முன்னதான பதிவைத் தேடினேன். கிடைக்கவில்லை. தீவிர வாசிப்பு மற்றும் மிகுந்த உழைப்பினால் மட்டுமே இத்தகைய கட்டுரைகள் சாத்தியமாகின்றன. வில்லியம் ஃபாக்னர் நோபல் பரிசு பெற்றபோது அவரால் வழங்கப்பட்ட உரையின் தமிழாக்கமானது(தி.க.சி) நவீனத்துவம் - எழுத்தின் இறைத்துவம் என்ற தலைப்பில் அண்மையில் இடப்பட்டுள்ளது. அவரது உரை, எக்காலத்து எழுத்தாளர்களுக்கும் பொருத்தமாயிருப்பதை வாசித்து வியந்தேன்.

ரேகுப்தி என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதிவரும் 'நிவேதா'வின் பதிவுகள் தீவிர இலக்கிய வாசகர்களுக்குரிய கட்டிறுக்கமான மொழியைக் கொண்டமைந்திருக்கின்றன. இவரது பத்திகள் பொதுவாக ஒரு கவிதையுடன் ஆரம்பிப்பதைக் காணலாம். மொக்கைப் பதிவுகளை எதிர்பார்த்து நீங்கள் இங்கு போனால் நிச்சயம் ஏமாற்றமடைவீர்கள். கவிதைகள், பத்திகள், நூல்நயம் எனப் பன்முகத்தன்மையான பதிவுகளை வழங்கிவரும் நிவேதாவின் கட்டங்கள் மற்றும் வட்டங்களுக்குள் வாழ்தல் என்ற பத்தியும் அகமெங்கும் பொழியும் முன்பனிக்கால மந்தாரங்கள் என்ற கவிதையும் எனக்குப் பிடித்தவை. சமரசங்களற்ற உன்னதத்தை நோக்கிய பயணமாக இவருடைய நடையைக் கூறலாம்.

தமிழ்மணத்தின் தலையாய கலகக்காரர் யாரென்று கேட்டால் அஞ்சலிப் பாப்பாகூட சரியான பதிலைச் சொல்லிவிடுவாள். சுகுணா திவாகர் என்ற பெயருக்கு 'சீரியஸாக'எழுதும் அனைவரும் தொடுப்புக் கொடுத்து வைத்திருப்பதொன்றே அவரது எழுத்தாளுமையை எடுத்துரைக்கப் போதுமானது. பதிலுக்கு முதுகு சொறிதல், பதில் மொய் என்ற விதத்தில் உங்களில் எவரும் இதை எடுத்துக்கொள்வதைப் பற்றி நான் கவலையுறவில்லை. அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து வாசிக்கும் (அவரால் முதுகு சொறியப்படாத) எவருக்கும் இதே விமர்சனங்களே இருக்கும். மிதக்கும் வெளியை வாசித்து வெளியில் வந்ததும் புதிதாக ஏதாவது கெட்டவார்த்தைகளை நீங்கள் கற்றுக்கொண்டிருப்பீர்கள். (அவரிடம் கேட்டால்... அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு 'கெட்டவார்த்தை'என்றால் என்ன என்பார்) இவரால் எழுதப்பட்ட 'தேவதைகளும் குசு விடும் என்பது உங்களுக்குத் தெரியாதா...?'என்ற கவிதை வரிகளை இன்னமும் எங்கள் வீட்டில் சிலாகித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். புனிதமென சமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எதிர்த்துக் கேள்வி எழுப்பும் இவரது துணிச்சலுக்காகவே இவரை வாசிப்பதுண்டு. பெரியாரியம், சிற்றிதழ் அரசியல் எனப் பரவலான விடயங்கள் குறித்து எழுதிவரும் சுகுணா திவாகரை நீங்கள் http://sugunadiwakar.blogspot.com/, http://suguna2896.blogspot.com/, http://thuroki.blogspot.com/, http://midakkumveli.blogspot.com/ என நான்கு தளங்களில் வாசிக்கலாம். இவருடைய கட்டுரைகள், வாசி்த்தபிற்பாடும் உள்நின்று பேசிக்கொண்டிருப்பவை.

பின்நவீனத்துவகாரர், கவிதைப் புலி என்றெல்லாம் அழைக்கப்படும் அய்யனார் தமிழ்மணத்திற்குள் உறுமிவந்தது... மன்னிக்கவும் உள்நுழைந்தது சற்று பிந்தித்தான். ஆனால் தன் பதிவுகள் வழியாக முந்திச்செல்கிறார். பின்நவீனத்துவம் என்றால், ஒரு மாதிரி குழப்பிக் குழப்பி எழுதி வாசிப்பவர்களை மண்டைகாய வைத்துவிடுவது என்பதே எனது புரிதல். அய்யனாரின் எழுத்துக்கள் எனக்குப் புரிவதால் அவை பின்நவீனத்துவம்தானா என சந்தேகமாக இருக்கிறது. போர்ஹேயின் எழுத்துக்களில் மஞ்சள் நிற புலி உலவுமாம். இவரின் எழுத்துக்களில் பெரும்பாலும் பெண்கள் உலவுகிறார்கள். 'ஏண்டீ! அவனைக் கைவிட்டே....?'என்ற ரீதியில் நிறைய எழுதுவார். இவரும் கெட்டவார்த்தைகளை அநாயாசமாகக் கையாள்வதில் வல்லவர். ஒருவித மாய உலகத்திற்குள் இவருடைய எழுத்துக்கள் எடுத்துப்போய்விடும். உலக சினிமா மற்றும் புத்தகங்களுக்கு எழுதும் மதிப்புரைகள் எனக்குப் பிடிக்கும். நீ என்னைவிட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா என்று என்னை நெகிழ்த்திய இந்தப் பதிவையும், இந்தக் கவிதையில் பேசப்பட்டிருக்கும் உண்மைக்காக அதனையும் சொல்லிச் செல்கிறேன். மிகுதியை நீங்களே வாசித்துக்கொள்ளுங்கள்.

மலின சமரசங்களுக்குட்படாத எழுத்துக்களைக் கொண்ட இன்னொருவர் அதிகம் எழுதுவதில்லை. http://peddai.net/ என்ற இணையப்பக்கத்தில் 'பெட்டை'என்ற பெயரில் பதிவுகளை இடும் இவர், எழுந்தமானத்திற்கு எழுதாமல் எப்போதாவதுதான் எழுதுவார். வாழ்வழிதலின் வலி என்ற பதிவானது எங்களிடமிருந்து பறிக்கப்பட்ட கவிஞர் எஸ்போஸின் மரணத்திலிருந்து தொடங்கி இன்றைய அரசியல் நோக்கி விரிந்து செல்கிறது. பாப்லோ நெரூதாவை மகத்தான கவிஞன் என்போர் அவசியம் வாசிக்கவேண்டிய பதிவு இந்தப் பக்கத்தில் இருக்கிறது. வாசித்த பிறகு உங்கள் முகம் மாறுவதைப் பார்க்க எதற்கும் பக்கத்தில் ஒரு கண்ணாடி வைத்துக்கொள்வது நல்லது. http://peddai.blogspot.com/ என்ற வலைப்பூவிலும் நீங்கள் இவரின் படைப்புகளைக் காணலாம்.

பழந்தமிழிலக்கியங்களைப் படிக்கவேண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்து (யாராச்சும் கேள்வி கேட்டுட்டா என்னா பண்றது..?) அதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிற சோம்பேறிகளுக்கென்றே இணையத்தில் சில 'எளிய இலக்கியப்' (பொருட்பிழையோ... நல்ல இலக்கியம் எளிமையாக இருக்காதோ...) பக்கங்கள் இருக்கின்றன. அவ்வாறு தான் வாசித்தவற்றை 'இது நல்லாருக்குங்க'என்று தமிழ்மணத்தில் தருபவராக சித்தார்த் இருக்கிறார். http://angumingum.wordpress.com/ என்ற பக்கத்தில் இவருடைய ஆக்கங்களைக் காணலாம். சங்கத்தமிழின் துளி காண இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.

சித்தார்த்தைப் போலவே இலக்கிய ஆர்வம் மிக்கவர் மஞ்சூர் ராசா. http://manjoorraja.blogspot.com/ என்ற பக்கத்தில் தனது பதிவுகளை இட்டுவருகிறார். "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." - என்ற பாவேந்தரின் வரிகளை முன்னிறுத்தி, பல வலைப்பதிவாளர்களை இணைத்து நடத்தப்பட்டுவரும் முத்தமிழ் குழுமத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார். இங்கும் இவரை வாசிக்கலாம்.

தமிழ்மணத்தில் நல்ல சிறுகதைகள் வாசிக்கக் கிடைப்பதில்லை என்று எனக்கொரு குறையுண்டு. அல்லது சில குறிப்பிட்ட பெயர்களையே தொடர்ந்து செல்லும் எனது கண்களுக்கு அவை தட்டுப்படாமலும் இருந்திருக்கலாம். மறுகரையில் யாழ்ப்பாணம் என்ற இந்தக் கதையை வாசித்ததும் மனசிற்குள் என்னவோ கரைபுரண்டது. பழைய காயமொன்றில் ஏதோவொரு திடப்பொருள் இடித்துவிட்டதைப் போல வலியுணர்ந்தேன். அ.இரவியின் கதைகளில் இதே நனவிடை தோயும் பாணி இருக்கும். அதேபோலவே இழந்துபோன நண்பனுக்காக எழுதிய தவறவிடப்பட்ட கையசைப்பு என்ற கவிதையும் வாசித்துமுடித்ததும் வலிதந்தது. சருகு என்ற பெயரில் வலைப்பூவமைத்து எழுதும் நிலவனின் ஞாபக நிழல்கள், வாசிக்கும் எல்லோரையும் பற்றிப் படர்ந்து நீள்வதாக ஒரு பிரமை.
இன்னும் 'சுட்ட' உண்டு. ஆனால், நீ..... ள..... மா.... ன... பதிவுகளிலிருந்து தப்பியோடிவிடுபவர்களில் நானுமொருத்தி என்பதனால் இப்போதைக்கு நிறுத்திக்கொண்டு அடுத்த பதிவில் சந்திக்கிறேன். 'அப்பாடா...!'என்று யாராவது சொன்னீர்களா என்ன...? செவிகளில் விழுந்தமாதிரி இருந்தது.

No comments:

Post a Comment

தமிழ் மணத்தில் - தற்பொழுது