வணக்கம் - இது வலைச்சரம்
வணக்கம் நண்பர்களே!
வலைச்சரத்திலிருந்து நீண்டநாட்களாக வழுகி வழுகிச் சென்றுகொண்டிருந்தேன். சிந்தாநதியிடமும் பொன்சிடமும் வழக்கிற்கு ‘வாய்தா’கேட்பதுபோல தவணைகள் கேட்டுத் தப்பித்துக்கொண்டிருந்தேன். மறந்துவிடுவார்கள் என்று கொஞ்சம் ஒளிந்திருந்து பார்த்தால், முத்துலட்சுமி வலைச்சர வழிகாட்டற் குறிப்பு அனுப்பி நினைவூட்டிவிட்டார். வலைச்சரம் தொடுக்க வராமலிருந்தமைக்கு நேரமின்மை மட்டுமல்லாது வேறொரு உள்ளுறைந்த காரணமும் இருந்தது. அதாவது, ‘இவருடைய படைப்பு எனக்குப் பிடித்திருந்தது’எனச் சுட்டும்போது, ‘மற்றவர்களுடையது பிடிக்கவில்லை’ என்பதும் அதில் ஒளிந்திருக்கிறதல்லவா? மற்றவர்களுடையது தரமாக இருந்தும் நான் வாசிக்காதிருந்திருக்கலாம். ‘இன்றைய நாள் இடுகை’களில் தோன்றுவதை மட்டும் வாசிக்கிறவளாயிருக்கலாம்… ஒரே சுவடுகளைத் தொடர்கிறவளைப்போல, ஒரே பெயர்களைப் பின்தொடர்ந்து செல்கிற பழக்கம் எனக்கிருக்கலாம். இன்னோரன்ன காரணங்களால் விடுபடும் பெயருக்குரியவர்களை மறைமுகமாகப் புண்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியிருந்தது.
இருப்பினும் உங்களுக்கே தெரியும்… தலைமறைவாக இருப்பது, குறிப்பாக தமிழ்மணத்தில் - அதிக நாட்களுக்குச் சாத்தியப்படாதென்று. ஈற்றில் மாட்டிக்கொண்டது நானா அல்லது வாசிக்கப்போகும் நீங்களா என்பது இவ்வார இறுதியில் தெரிந்துவிடும்.
என்றாலும், விதி வலியது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இல்லையெனில், வலைச்சரம் தொடுக்கவிருக்கும் இந்நேரம் பார்த்து பூனை குட்டியைத் தூக்கிக்கொண்டு அலைவதுபோல நான் பெட்டியைத் தூக்கிக்கொண்டு, எனது உறவுக் 'கிராமத்தை'அழைத்துக்கொண்டு வேறிடம் பெயரவேண்டியேற்பட்டிருக்காது. வந்து சேர்ந்த இடம் வசதிதான் என்றாலும், இணையத் தொடர்பு இன்னமும் வராதது 'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல'என்று சொல்வார்களே... அப்படித்தானிருக்கிறது. 'நாளை இணைப்புக் கொடுக்கிறோம்'என்ற வாக்குறுதியில் எந்த 'நாளை'க் குறித்தார்களென நான் குழம்பிக்கொண்டிருக்கிறேன். இணையத் தொடர்பகம் ஒன்றில் காற்றையல்லாது வெப்பத்தை விசிறியடிக்கும் மின்விசிறியின் கீழமர்ந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன்.
வலைச்சரத்தில் எங்கள் பக்கத்தையும் அறி(அறு)முகப்படுத்தலாம் என்று முத்துலட்சுமியால் அனுப்பப்பட்ட வலைச்சர வழிகாட்டியில் சொல்லப்பட்டிருந்தது. நான் தமிழ்நதி. இளவேனில் என்ற பக்கத்தில் கொஞ்சக் காலம் தொடர்ச்சியாக கிறுக்கிக்கொண்டிருந்தேன். இப்போது எப்போதாவதுதான் எழுதப் பொழுது வாய்ப்பதால் நீங்கள் தப்பித்தீர்கள்.
வாசிக்கக் கிடைத்ததில் பிடித்தமான இடுகைகளை கவிதை, கதை, கட்டுரை, நூல்நயம் என்றவாறு சுட்டலாம் என நினைத்திருக்கிறேன். குழம்பு வைக்கப்போய் சாம்பாராக முடிந்த கதையும் உண்டு. தனித்தனியாக வருமோ அல்லது ‘கும்பலாக’கூடிவருமோ என்பது எனது நேரத்தையும் எழுதும் நாளின் தன்மையையும் பொறுத்தது.
வலைச்சரம் தொடுக்க வாய்ப்பளித்த சிந்தாநதிக்கும் வழிகாட்டிய முத்துலட்சுமிக்கும் வாசித்து என்னை தூஷிக்க - மன்னிக்கவும் - விமர்சிக்கவிருக்கும் என் நண்பர்களுக்கும் நன்றி.
சுட்டப்படாதனவெல்லாம் கெட்டனவல்ல; சுட்டியும்
சுவையாயிராவிடில் என்னில் பிழை
|
|
வாழ்த்துக்கள்...தமிழ்நதி...
ReplyDeleteவாழ்த்துக்கள் தமிழ்நதி :)
ReplyDeleteவாங்க வாங்க.
ReplyDeleteவாழ்த்து(க்)கள்.
வாழ்த்துக்கள் தமிழ்நதி!
ReplyDeleteகாத்திருக்கிறோம்
வரவேற்புக்கு நன்றி இரண்டாம் சொக்கன், நாகை சிவா, துளசி கோபால், முபாரக். இப்போ "வாங்க வாங்க"ன்றீங்க. பதிவு போட்டு முடிஞ்சப்புறம் என்ன 'வாங்க'ப் போறீங்களோன்னு நினைக்க கொஞ்சம் பயமாத்தானிருக்கு:)
ReplyDeleteபெரிய தலைங்கல்லாம் வந்து வரவேற்கிறாங்க கொஞ்சம் பெரிய ஆள்தான் போல
ReplyDeleteநம்மளும் வரவேத்துடுவோம்
வாங்க தமிழ்நதி!!