Tuesday, April 30, 2013

ப்ளேட்பீடியா - 2 - காமிக்ஸ் எனும் காண்வழி ஊடகம்!

காமிக்ஸ் புத்தகங்கள் என்பது குழந்தைகளுக்கானது மட்டும் அல்ல - மிக எளிமையான இந்த விஷயம், பெரும்பான்மையோருக்கு சற்றும் புரிபடுவதில்லை. விளக்கினாலும் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. இருந்தாலும் விளக்குகிறேன்! 'பாடப் புத்தகம்' என்ற வார்த்தை ஒன்றுதான்! ஆனால், ஒன்றாம் வகுப்பில் படித்த பாடத்தையா பத்தாம் வகுப்பிலும் படிக்கிறீர்கள்? +2 வில் படித்ததையா கல்லூரியிலும் படிக்கிறீர்கள்? டிவியில் எப்படி சானல் மாற்றி உங்களுக்கு பிடித்த சானலைப் பார்க்கிறீர்களோ, அதே போல காமிக்ஸ் என்ற ஊடகத்தின் வாயிலாக வெளிவரும் பல்வேறு இதழ்களில் உங்கள் வயதிற்கேற்றதை தேர்ந்தெடுத்துப் படித்துக் கொள்ளலாம்! சித்திரக்கதை என்றாலே கேவலமாக நினைக்க வேண்டிய அவசியம் இல்லை! காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கான பொம்மைப்பட புத்தகம் என்பது மிகவும் தவறான எண்ணம்!

இந்த மாதிரி அட்டை, காமிக்ஸ் ரசிகர் சண்முகம் அவர்களின் கைவண்ணம்! காமிக்ஸ் மீதான காதலால் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளில் பல வாசகர்கள் இறங்குவதுண்டு!

டிவி, சினிமா போன்ற காண்வழி (காட்சி வழி!) ஊடகங்களைப் போல், காமிக்ஸ் (சித்திரக்கதை) என்பதும் ஒரு காண்வழி ஊடகம்தான்! வெறும் எழுத்தில் உள்ள கதைகளைப் படிப்பதை விட, அதனுடன் சித்திரங்களும் கைகோர்க்கும் போது அது மிகவும் சுவையானதொரு வாசிப்பு அனுபவத்தை அளிக்கிறது. எழுத்தில் பக்கம் பக்கமாய் விவரிக்க வேண்டிய பல சங்கதிகளை, ஒரே ஒரு சித்திரம் எளிதாய் பேசி விடும்! நான் பலரை கவனித்திருக்கிறேன், காமிக்ஸ் புத்தகத்தை கையில் எடுத்தால் பரபரவென்று படித்து கீழே வைத்து விடுவார்கள். அப்படிச் செய்வது ஒரு முழுமையான வாசிப்பு அனுபவத்தை ஒருபோதும் தருவதில்லை. எழுத்தில் உள்ளவற்றைத் படிப்பதோடு நில்லாமல், சித்திரங்களையும் உன்னித்துப் பார்த்து, ரசித்து கதையை புரிந்து கொள்வதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

காமிக்ஸ் வாசிப்பவர்கள் என்ற மிகச் சிறிய வட்டத்தினுள்ளே, காமிக்ஸ் பதிவர்கள் என்ற மிக மிகச் சிறிய வட்டம் இருக்கிறது! வலைப்பதிவர்களில் அறுதிச் சிறுபான்மையினரும் அநேகமாக காமிக்ஸ் பதிவர்கள்தான்! அவர்களில் சிலரை வலைச்சரம் மூலமாக 'காமிக்ஸ் வாசமில்லா வாசகர்களுக்கு' அறிமுகப்படுத்தி வைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்!

1. திரு.S.விஜயன் - http://lion-muthucomics.blogspot.com :
விஜயன் - சிறு வயதில் இருந்தே மனதில் பதிந்த பெயர்! லயன் / முத்து காமிக்ஸின் ஆசிரியர்! வலைப்பூ துவக்கிய 15 மாதங்களில் 4 லட்சம் ஹிட்ஸ், 400 பின்தொடர்வாளர்கள், வெறித்தனமான வாசகர்கள், ஒவ்வொரு பதிவிற்கும் 200, 300-ஐத் தாண்டும் பின்னூட்டங்கள் என ரகளையான புள்ளிவிவரங்களைக் கொண்டது விஜயன் அவர்களின் தமிழ் காமிக்ஸ் வலைப்பூ! இதில் விசேஷம் என்னவென்றால் இவருடைய வலைப்பூ தமிழ்மணம் உள்ளிட்ட எந்த ஒரு திரட்டியிலும் திரட்டபடுவதில்லை என்பதே! தமிழ் வலையுலகின் பிரபல பதிவர்களையும் பொறாமைக் கொள்ளச் செய்யும் வகையில் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி பெற்று கொண்டிருக்கும் வலைப்பூ இவருடையது!

'இரும்புக்கை மாயாவி புகழ்' முத்து காமிக்ஸின் நிறுவனர் திரு.சௌந்தரபாண்டியன் அவர்களை தமிழ் காமிக்ஸ் உலகின் பிதா என்று அழைக்கலாம் என்றால் அவர் புதல்வர் திரு.S.விஜயன் அவர்களை தமிழ் காமிக்ஸ் உலகின் பிதாமகன் என்று தாராளமாக அழைக்கலாம்! அமெரிக்க / பிரிட்டிஷ் காமிக்ஸ் கதாபாத்திரங்களோடு நில்லாது, புகழ்பெற்ற பல ஃபிரான்கோ / பெல்ஜியன் வகை காமிக்ஸ் இதழ்களை தமிழில் அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும்! XIII, டெக்ஸ் வில்லர், பேட்மேன், ப்ளூபெர்ரி, லக்கி லூக், லார்கோ வின்ச் போன்ற சர்வதேசப் புகழ் பெற்ற பல நாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார்!

திரு.S.விஜயன் அவர்களின் வலைப்பூவில் இருந்து ஒரு பதிவு உங்கள் பார்வைக்கு!

அசுரர்களின் தேசத்தில்..!:
பிரான்கோ - பெல்ஜியப் படைப்பாளிகளையும் சரி ; அவர்கள் வழங்கிடும் படைப்புகளை நேசமாய் ரசிக்கும் வாசகர்களையும் சரி - ஒற்றை வார்த்தையில் வர்ணிப்பதென்றால்  - "அசுரர்கள்" என்று சொல்லிடலாம்! நம் மாமூலான தேடலை மாத்திரமே மையப்படுத்திக் கொண்டிராமல்; அந்த பட்டை பூட்டிய குதிரைப் பார்வைக்கு சின்னதாய் ஒரு விடுப்புக் கொடுத்து விட்டு நம் பார்வையை அகலச் செலுத்தும் போது தான் - அந்த காமிக்ஸ் அசுரர்கள் உருவாக்கியுள்ள புதையல்களின் முழுத் தாக்கம் லேசாகப் புலனாகிறது ! எத்தனை எத்தனை கதைக் களங்கள் ; எத்தனை எத்தனை ஸ்டைல்கள் ; கற்பனைகளின் எல்லைகள் இத்தனை அசாத்தியமானவைகளா என்று வாய் பிளக்கச் செய்யும் ஒரு display!

2. முத்து விசிறி - http://muthufanblog.blogspot.com :
தமிழ் காமிக்ஸை இணைய உலகில் அறிமுகப் படுத்தியவர்களில் முதன்மையானவர். 2005-இல் இவர் தமிழ் காமிக்ஸ் குறித்த வலைப்பூ ஒன்றை துவக்கியதைத் தொடர்ந்து, எண்ணற்ற மற்ற காமிக்ஸ் ஆர்வலர்களும் இவர் வழி இணைந்தனர்!

இரும்புக்கை நார்மன்!!!:

''ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு Breaking Point உண்டு'' - கமல்ஹாசன் டு நாசர் படம் : குருதிப் புனல். இந்தக் கதையில் உள்ள வசனங்களை கவனிக்கவும். பிற்காலத்தில் கமல்ஹாசன் இந்த வசனத்தை தனது குருதிப் புனல் படத்தில் உபயோகித்திருப்பார்.

3. ரஃபிக் ராஜா - http://www.comicology.in/ & http://www.ranicomics.com/
முத்து விசிறி வலைப்பூ துவக்கிய அதே காலகட்டத்தில் - தமிழ் காமிக்ஸை, தமிழ் பேசும் வாசகர்களைத் தாண்டி எடுத்துச் சென்றதில் மிக முக்கியமானவர் ரஃபிக்! அவருடைய ஆங்கில வலைப்பூவை அறிமுகப்படுத்துவதை வலைச்சர விதிமுறைகள் அனுமதிக்காது என்பதால் அவரின் தமிழ் வலைப்பூவில் இருந்து ஒரு பதிவு - பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்! :)

ராணி காமிக்ஸ் - அழகியை தேடி - 01 ஜுலை 1984:

ராணி காமிக்ஸின் முதல் இதழான இதில் அப்பட்டமான நிர்வாண காட்சிகள் ஏராளம். அழகிய மங்கைகள் நேரம் கிடைக்கும் போது எல்லாம், ஆண்கள் சட்டை கழற்றுவதை போல மார்பு கச்சையை கழட்டி விட்டு நடமாடுவதை, தமிழக ரசிகர்கள் எவ்வகையில் ஒப்புக்கொள்வார்கள் என்று அறியாமல், ஓவியங்களை ஒரிஜினல் காட்சிகளுடனே திரு.ராமஜெயம் வெளியிட்டு இருந்தார். ஒரிஜினல் சித்திரங்களை சேதபடுத்த கூடாது என்ற எண்ணம் இந்திய அளவில் காமிக்ஸ் பதிப்பகத்தினரினிடம் ஒன்றும் புதியது இல்லை எண்றாலும், தமிழில் இப்படி பிரசுரவமாவது முதல் முறை என்பதால் திரு.ராமஜெயம் பல தரப்புகளில் குட்டு வாங்கி இருக்க கூடும். அதன் பிரதிபலிப்பு இதற்கு அடுத்து வந்த இதழ்களில் நடந்த சென்ஸார் மூலம் நாம் அறியலாம். ஆனாலும், பெற்றோர்கள் இந்த புத்தகத்தை எப்படி ஒதுக்கி இருந்தாலும், இளம் சிறார்களிடம் ராணி காமிக்ஸை பெரிய அளவில் பிரபலப்படுத்த ஒரு காரணியாக, இந்த முதல் இதழ் மாறி இருக்கலாம், என்று இப்போது நாம் நினைவு கூறலாம்.

4. கிங் விஸ்வா - http://tamilcomicsulagam.blogspot.com :
மற்றுமொரு சீனியர் காமிக்ஸ் பதிவர். தமிழ் காமிக்ஸ் பற்றிய எண்ணற்ற தகவல்களைத் திரட்டி பதிவுகளாக இட்டு வருகிறார் விஸ்வா!


தமிழின் மிகச்சிறந்த கதைசொல்லியாகிய திரு.வாண்டுமாமா!:
வாண்டுமாமா (எ) திரு வி.கிருஷ்ணமூர்த்தி தமிழில் பல புனைப்பெயர்களில் எழுதி இருக்கிறார். கௌசிகன் என்ற பெயரே மிகவும் அறியப்படும் மற்றுமொரு பெயராக இருந்தாலும், இந்த மூன்று பெயர்களைத் தவிர (வாண்டுமாமா, கௌசிகன், வி.கிருஷ்ணமூர்த்தி) குறைந்தபட்சம் வேறு ஐந்து பெயர்களிலாவது எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பெயருக்கும் ஒரு சிறப்பான காரணம் உண்டு. சிறுவர்களுக்கான சித்திரக்கதைகளும், கதைகளும் எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், இளைஞர்களுக்காக எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலும் எழுதுவதை இவர் வழக்கமாக கொண்டிருந்தார். உதாரணமாக மூன்று மந்திரவாதிகள், சிலையை தேடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது வாண்டுமாமா என்ற பெயரிலும், டையல் ஒன் நாட் நாட், அறிவின் விலை ஒரு கோடி போன்ற சித்திரக்கதைகளை எழுதும்போது கௌசிகன் என்ற பெயரிலுமே எழுதி இருப்பார். இன்று வரையிலும்கூட இதனை அறியாதவர்கள் பலர்!

5. கனவுகளின் காதலன் - http://www.kanuvukalinkathalan.blogspot.com:
அழகு ததும்பும் தமிழ் எழுத்துக்கு சொந்தக்காரர். பிரெஞ்சு / இத்தாலிய மொழிகளில் வெளிவரும் காமிக்ஸ் கதைகளை தனது பதிவுகளின் மூலம் அறிமுகப்படுத்தி வருகிறார்.

வதனமோ சந்த்ரபிம்பமோ - 6:

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

6. சௌந்தர் - http://tamilcomics-soundarss.blogspot.com :
புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில், திரைமணம் விமர்சனங்களால் களைகட்டும் அல்லவா? சில பதிவர்கள் கடமையாக ஆபிஸுக்கு கட் அடித்து திரைப்பட விமர்சனம் எழுதுவார்கள் அல்லவா! அதைப் போல ஒவ்வொரு (தமிழ்) காமிக்ஸ் இதழ் வெளியாகும் போதும் சௌந்தர் கடமை தவறாமல் முதல் நாளன்றே சுடச்சுட விமர்சனப் பதிவிடுவார்!

தோற்கடிக்கப்பட்ட டைகர்!:
டைகர் கதையை நம் வாசகர்கள் அனைவரும் பல முறை மீண்டும் மீண்டும் படித்திருப்பார்கள். ஒவ்வொரு வசனமும் மனதில் தங்கிப் போனவை. புதிய வெளியீட்டில் எந்தெந்த இடங்களில் வசனங்கள் மாற்றப் பட்டுள்ளது, எந்தெந்த இடங்களில் பழைய வசனங்கள் சிறு மாறுதல்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை முந்தைய வெளியீட்டைப் பார்க்காமலேயே டைகர் விசிறிகளால் எளிதாகக் கண்டறிய முடியும்

பின்குறிப்பு: இவ்வாரம் முழுவதும் அலுவல் ரீதியான பயணம் மேற்கொண்டிருப்பதால் வலைச்சரத்தில் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. பதிவில் சற்றே ஜீவன் குறைந்திருப்பின் நண்பர்கள் மன்னிக்கவும்!

Monday, April 29, 2013

ப்ளேட்பீடியா - 1 - வணக்கம் வலைச்சரம்!

வணக்கம், எனது பெயர் கார்த்திக்! பிறந்தது மதுரையில், வளர்ந்தது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தவாறு காலம் தள்ளுவது பெங்களூரில்!

வலைப்பூ துவக்குவதற்கு முன்னர் கடைசியாக தமிழில் எழுதியது +2 பொதுத்தேர்வில்தான்! அதற்குப் பிறகு தமிழில் எழுதுவது என்றால் விண்ணப்பப் படிவங்களில் பெயரும் முகவரியும் எழுதுவது என்பதோடு நின்று விட்டது. கிட்டத்தட்ட 16 வருடங்களாக தமிழ்நாட்டுக்கு வெளியில் வசித்து வருவதால் இப்போது அந்த வாய்ப்பும் இருப்பதில்லை. இவ்வாறு முழுவதுமாய் விட்டுப் போன எழுத்துப் பழக்கம் கடந்த ஆண்டு வலைப்பூ துவக்கியதில் இருந்து வெகுவாய் முன்னேற்றம் கண்டுள்ளது.

அதாவது, முன்பு இரண்டே இரண்டு விரல்களின் துணையுடன் பேனா பிடித்து முகவரி மட்டும் எழுதிக் கொண்டிருந்த நான், தற்போது பத்து விரல்கள் கைகோர்க்க(!) பக்கம் பக்கமாய் டைப்பிக் கொண்டிருக்கிறேன்! :)


எனது மனதுக்கு பிடித்தமான (தமிழ்) காமிக்ஸ் பற்றி எழுதும் நோக்கில் கடந்த ஆண்டு ப்ளேட்பீடியாவை துவக்கியிருந்தாலும், அத்தோடு நில்லாமல் கொஞ்சம் பொழுதுபோக்கு, கொஞ்சம் அனுபவங்கள், கொஞ்சம் தொழில்நுட்பம் என கலந்துகட்டி பதிவிட்டு வருகிறேன்! நகைச்சுவை (அல்லது அறுவை) இழையோடும் பதிவுகள் - இதுவே ப்ளேட்பீடியாவின் அடிநாதம்.

நான் இதுவரை இட்ட 98 பதிவுகளில் இருந்து சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்குவது என்பது அப்படி ஒன்றும் லேசான காரியமாக இருந்திடவில்லை! அவையனைத்துமே அதியற்புதமான பதிவுகள் என்பதால் அல்ல! என்னுடைய பதிவுகள் பலவற்றை பின்னோக்கிப் பார்க்கையில், எனக்கே படிக்க சகிக்கவில்லை என்பதுதான் உண்மையான காரணம்! :) இருந்தாலும் மனதை திடமாக்கிக் கொண்டு தேர்ந்தெடுத்த ஒருசில பதிவுகள் மட்டும் உங்களின் கீழான பார்வைக்கு - அதாவது கீழே பாருங்கள் என்ற அர்த்தத்தில்! :)


1. காமிக்ஸ்:
"காமிக்ஸ் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல" என்ற உண்மையை இணைய வாசகர்களின் மனதில் அழுத்தமாய் பதிவு செய்யவே தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகள் இட்டு வருகிறேன். சில சாம்பிள் பதிவுகளை கீழே பார்க்கலாம். குறைந்த பட்சம் பதிவுகளுக்கான இணைப்புகளின் அடியில் இருக்கும் மேற்கோள்களையாவது படிக்க முயலுங்கள்! :)

துப்பாக்கியை உபயோகிக்காமல் வெறும் உடல் பலத்தையும், கத்தி வீசும் திறனையும் காட்டுவது "Casino Royale" ஜேம்ஸ்பாண்டை நினைவுபடுத்துகிறது! லார்கோவின் ப்ளேபாய் காட்சிகள் நமது ஓவியர்களால் மூடி மறைக்கப்பட்டுள்ளன - இருந்தாலும் வசனங்கள் கொஞ்சம் தாராளம்! கதை நெடுக நிகழ்காலத்தையும், கடந்தகாலத்தையும் பின்னிப்பிணைத்த விதம் அட்டகாசம்!

1b. தமிழ் பேசிய பேட்மேன் - திகில் காமிக்ஸ்! (Jul 12, 2012):
பேட்மேன் ஒரு வழக்கமான ஹீரோ அல்ல, அவரின் வில்லன்களும் அப்படித்தான்! கைகலப்போடு நில்லாமல் மனோரீதியாகவும் மோதிக்கொள்வார்கள்! மன உளைச்சல் தரும் வில்லன்கள், மனநோயாளி எதிராளிகள், ஹிப்னாடிச வில்லன்கள், போதை மருந்துக் கும்பல்கள் என ஒவ்வொரு கதையும் மிக மிக வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும்!

1c. வன்மேற்கின் வஞ்ச நெஞ்சங்கள் - வெஸ்ட்டர்ன் - ஒரு மாறுபட்ட கிராபிக் நாவல்! (Sep 23, 2012):
கதைநாயகன் நாதன் சிஸ்லிமின் 14 வயது இளம்பிராயப் பார்வையில் விரிவதாய் அமையும் இந்தக் கதை Spaghetti வெஸ்டர்ன் படங்களின் ஆரம்பக் காட்சிகளுக்கு சற்றும் சளைத்ததில்லை! வறண்ட, பரந்த பாலைப் பரப்பில் ஊர்ந்து வந்து வ்யோமிங்கில் உள்ளதொரு சிறு நகரில் நிலை கொள்ளும் அந்தப் புகை வண்டி நம்மை ஒரு கனத்த கதைக்குள் இட்டுச் செல்கிறது!

1d. முத்து காமிக்ஸ் - 40வது ஆண்டு மலர் - டெலிபோன் டைரக்டரி சைஸில் ஒரு காமிக்ஸ்! (Apr 3, 2013):
ஜேம்ஸ் பாண்ட் போன்ற நளினமான(?) முரட்டுத்தனம் கொண்ட உளவாளி வேடத்தில் நடித்திட நாற்பது வயதை கடந்து, காதோரம் நரை தட்டிய நடிகர்தான் பொருத்தமான தேர்வாக இருந்திடுவார் இல்லையா? அப்படியொரு நாயகர்தான் வேய்ன் ஷெல்டனும்! பணத்திற்காக ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் முரட்டுத்தனமும், தெனாவட்டும் கலந்த ஒரு துடிப்பான நபர்!

1e. காமெடி கௌபாய், கில்லாடி கௌபாய்! (Apr 4, 2013):
இந்த டெக்ஸ் வில்லர் இதழின் வடிவமைப்பு, டெக்ஸ் காமிக்ஸை 'உருவாக்கும்' இத்தாலிய பதிப்பகத்திற்கு மிகவும் பிடித்துப் போனதால்; இதை மிலன் நகரிலுள்ள காமிக்ஸ் மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப் போகிறார்களாம்! இந்தியாவிலிருந்து வெளியாகும் ஒரு காமிக்ஸ் இதழுக்கு (அதுவும் தமிழில்!) இந்த கௌரவம் கிடைத்திருப்பது பெருமை சேர்க்கும் சங்கதிதானே?

2. அனுபவப் பதிவுகள்:
நான் மிகவும் அனுபவித்து(?!) எழுதிய பதிவுகள் எவை என்று நீங்கள் பட்டியலிடச் சொன்னால் அவற்றில் கீழ்க்கண்ட அனுபவங்களும் நிச்சயம் இடம் பெறும்!

2a. மழுங்கிய மனிதர்கள் - 1 - இரயில் பயணங்களில்! (Jun 10, 2012):
ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் போது, தாங்கள் மட்டும் உட்காராமல், தமது பெட்டி படுக்கைகளையும் இருக்கைகள் மேல் வைத்துக்கொண்டு சாவகாசமாக அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள்! இது என்ன மாதிரியான ஒரு பழக்கம் என்று எனக்கு புரியவில்லை! வாய் விட்டு கேட்ட பிறகே பாதி மனதுடன் கொஞ்சமாக பெட்டியை நகர்த்தி விட்டு இடம் கொடுப்பார்கள்!

2b. சலூனில் சில Sci-Fi சிந்தனைகள்! (Jun 10, 2012):
காதை சுற்றியுள்ள முடியை வெட்டும் போது காதை மடக்கி, கிருதாவின் மேல் வைத்து அழுத்திப் பிடித்து வெட்டுவார்கள் - எழுந்து ஓடி விடலாம் போலிருக்கும். பேசாமல் ஒரு வாய், ஒரு ஒரு மூக்கு போல; ஒரே ஒரு காது மட்டும் மூக்குக்கும் வாய்க்கும் இடைப்பட்ட பிரதேசத்தில், மீசைக்கு பதிலாக வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ என Sci-Fi ரேஞ்சில் சிந்தனைகள் ஓடும்!

2c. பல் பிடுங்கிய பதிவர்! (Jul 28, 2012):
பல்லை பிடுங்க ஆயத்தமான டென்ட்டல் சர்ஜன், தொண்டையை செருமிக்கொண்டு கேட்டார் - 'புடுங்கறதுக்கு முன்னாடி ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க' என்றார்! 'நீங்க பல்லை தானே புடுங்கப்போறீங்க, நாக்கை இல்லையே?' என மனதில் நினைத்தவாறு, 'நைட்டு டின்னர் சாப்பிடலாமா டாக்டர்?' என்று கேட்டேன், 'குடிக்கலாம்' என்றவாறு வேலையை ஆரம்பித்தார்.

2d. சிக்கலில் சிக்கிய பதிவர்! (Jan 6, 2013):
அது வரை சினிமாவில் மட்டுமே பார்த்திருந்த ஆபரேஷன் தியேட்டரை முதன் முறையாக நேரில் பார்த்தேன்! சர்ஜனின் அசிஸ்டெண்டுகள் வேக வேகமாக என் முன்புறத் துணியை விலக்க எத்தனிக்க, கொப்புளத்தை நசுக்காமல், வேறு எதையாவது நசுக்கி விடுவார்களோ என்ற பயத்தில் - 'பின்னாடி, பின்னாடி' என்று பதறியவாறு திரும்பிப் படுத்தேன்!

2e. ஒரு கைராசி வைத்தியரின் நம்பிக்கை நோயாளிகள்! (Feb 24, 2013):
உள்ளே நுழையும்போதே அந்த சிடுமூஞ்சி வரவேற்பாளரிடம் தவறாமல் ஒரு டோக்கனை வாங்கி விட வேண்டும்! அதில் இருபதோ, அறுபதோ - கூட்டதிற்கேற்ப ஏதோ ஒரு வரிசை எண் எழுதப் பட்டிருக்கும்! 'இப்போ எந்த நம்பர் போயிருக்கு?!' என்று நீங்கள் கேட்டீர்களானால் 'கூப்பிடுவாங்க, வெயிட் பண்ணுங்க!' என்று பிடி கொடுக்காமல் ஒரு பதில் வரும்!

3. சினிமா:
கோடிகளைக் கொட்டி எடுக்கும் படங்களைப் பற்றி பைசா செலவில்லாமல் எழுதலாம் என்பதால் சினிமா விமர்சனம் எழுதுவது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக மாறிவிட்டது! இருந்தாலும் என்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே விமர்சனம் எழுதுவது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன்!

3a. ஹரிதாஸ் - அர்த்தமுள்ள தமிழ் படம்! (Feb 24, 2013):
இது போன்ற கேரக்டர்கள் என்றாலே முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு இலக்கின்றி சிரிக்கும் வழக்கமான சினிமா மேனரிசத்தை உடைத்தெறிந்து நிதர்சனத்தை தன் நடிப்பில் காட்டுகிறார்! தன்னிலை மறந்து தன் திறமையை வெளிக்காட்டும் அந்த குதிரைப் பந்தயக் காட்சி உணர்வுகளை உரக்க மீட்டும் ஒரு வலிய ஆக்கம்!

4. தொழில்நுட்பம்:
போரடிக்கும் தொழில்நுட்பப் பதிவுகள் பல தரப்பினரையும் சென்றைடைய வேண்டுமானால் அதில் சற்று நகைச்சுவையை கலந்தாலே போதும்! ப்ளேட்பீடியாவில், ஹிட்ஸ் எண்ணிக்கை அடிப்படையில் இன்றளவிலும் முதலிடத்தில் இருக்கும் பதிவு இதுதான்!

டிக்கெட் பதிவு செய்ய வேண்டிய நாள், காலையில் சீக்கிரமாக - குறைந்தது ஏழு மணிக்காவது எழுந்து கொள்ளுங்கள். பல் துலக்கி விட்டு, அப்படியே லைட்டாக ஒரு பாக்கியராஜ் டான்ஸ் போட்டால், கைகளும் விரல்களும் தயார் நிலைக்கு வந்து விடும். சூடாக காபியோ டீயோ குடித்து விட்டு அவசர காரியங்கள் 'ஒன்றோ', 'இரண்டோ' இருந்தால் அதையும் முடித்துக்கொள்ளுங்கள்.

5. கவிதைகள்:
ஆர்வக் கோளாறில் எழுதிய கொலைவெறிக் கவிதைகள்! :)

ட்விதைகள் - 1 - பிய்த்துப் போட்ட காதல் வரிகள்! (Jul 04, 2012):
♂ ♥ ♀
பல மணி பேசிக் களைத்த அவள்
சில நொடி நான் பேசவும்
நாளை பேசலாம் என கைபேசி துண்டித்தாள்!
நாளையும் பேசுவாள், நானும் கேட்பேன்...

6. இதர பதிவுகள்:
சமூகப் பிரச்சினைகள், அரசியல் பற்றி அதிகம் எழுதியதில்லை. இருந்தாலும் LKG சேர்க்கை, வட இந்திய மீடியாக்களின் இன வெறி என ஒரு சில சமூகம் சார்ந்த பதிவுகள் எழுதி உள்ளேன்!

6a. LKG படிக்காதவனும், LKG அட்மிஷனும்! (சென்னை & பெங்களூர்) (, 2012):
குழப்பம் இத்தோடு நிற்பதில்லை! பல பள்ளிகள் Pre-KG முதலே குழந்தைகளைச் சேர்த்தால் மட்டுமே LKG-இல் அட்மிஷன் தருகின்றன! பெங்களூரில் Pre-KG என்பதை ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு வகையில் வரையறுத்து, ஒவ்வொரு பெயரில் அழைத்து பெற்றோரின் தலையில் எஞ்சியிருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் பிய்க்க வைக்கின்றன!

6b. இனவெறியைத் தூண்டுகிறதா டைம்ஸ் ஆஃப் இந்தியா? (Jul 11, 2012):
குறிப்பாக TOI இணையதளத்தில் "Comment Moderation" மிகுந்த பாரபட்சத்துடன் செயல்படுவதால் - இது போன்ற வெறுப்பை தூண்டும் தலைப்புகள் கொண்ட செய்திகள் வெளியாகும்போது, நச்சை கக்கும் நூற்றுக்கணக்கான இனவெறிப் பின்னூட்டங்கள் தமிழர் மீதான வெறுப்பை உமிழ்கின்றன! அதை படித்து எரிச்சலாகும் நம்மவர்களும் பதிலுக்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

பொறுமையாக படித்த அனைவருக்கும் மிக்க நன்றி! பொறுமை - உங்களுக்கு இது அவசியம் தேவைப்படும். ஏனெனில் இந்த வாரம் முழுக்க எழுதப் போவது நான்தானே?! ;)

வலைச்சரத்தில் எழுத வாய்ப்பளித்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும், வலைச்சர குழுவினர்க்கும் நன்றி! பேசாமல் தமிழ்வாசி எஃபெக்டில், என் (வலைப்) பெயரை "காமிக்ஸ்வாசி கார்த்திக்" என மாற்றிக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்! :)

அன்புடன்,
கார்த்திக்

Sunday, April 28, 2013

”நண்பர்கள் ராஜ்” இடம் இருந்து கார்த்திக் சோமலிங்கா பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற “நண்பர்கள் ராஜ்” தான் ஏற்ற பொறுப்பினை மிகுந்த ஈடுபாட்டுடனும் ஆர்வத்துடனும் நிறைவேற்றி - நம்மிடமிருந்து  மனநிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் இந்த வாரத்தில் சுய அறிமுகம், யூத் பதிவர்கள், பெண்கள், அதிரடி மன்னர்கள், வியக்க வைக்கும் பதிவர்கள், என்னமா எழுதுறாங்க, நன்றி நவிலல் என்ற ஏழு தலைப்புகளில் பதிவுகள் இட்டுள்ளார்.  பெற்ற மறுமொழிகளோ நூற்றி எண்பத்தேழு. அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களோ முப்பத்தேழு.  அறிமுகப் படுத்தப் பட்ட பதிவுகளோ 40. 

“நண்பர்கள் ராஜ்”  -  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் பெங்களூரினைச் சார்ந்த நண்பர் கார்த்திக் சோமலிங்கா. 

பெங்களூரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணி புரிந்து வரும் கார்த்திக் கடந்த ஓராண்டாக bladepedia.com  என்ற வலைப்பூவை நடத்தி வருகிறார். காமிக்ஸ் மீது இருக்கும் அளவற்ற ஈடுபாடால், தனது வலைப்பூவில் தமிழில் வெளி வரும் காமிக்ஸ் இதழ்கள் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார். காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கானது என்ற பொதுவான / தவறான எண்ணத்தை மாற்றி, காமிக்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட தனது வலைப்பூ மிகச் சிறிதளவேனும் உதவியாய் இருந்தால் அது தனக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் என்று குறிப்பிடுகிறார் கார்த்திக்.

நணபர் கார்த்திக்கினை வருக ! வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் “ந்ண்பர்கள் ராஜ்” 

நல்வாழ்த்துகள் கார்த்திக் சோமலிங்கா 

நட்புடன் சீனா 

உங்கள் அன்புக்கு நன்றி நண்பர்களே

ஒரு வாரம் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து உள்ளங்களுக்கும்.நன்றி நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உலாவந்தாலும் கடந்த ஒரு ஆண்டாக பெரிதாக எழுதுவது இல்லை.நேரம் இன்மை, ஆர்வம் குறைந்தமை பேஸ்புக்கில் கும்மி போன்ற பல காரணங்கள் சொல்லாம்.

Saturday, April 27, 2013

என்னமா எழுதுறாங்கய்யா பதிவு

இன்று  சில பதிவர்கள் பற்றி பார்ப்போம் என்னமா எழுதுறாங்கய்யா இவங்க

பன்னிக்குட்டி ராமசாமி பதிவுலகில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை தல எழுதிய எல்லா பதிவுகளும் ரசிக்கவைப்பவை விஜய் பத்தி ஏதோ சொல்லுறார் இங்கே டாகுத்தர் விஜய்யும் நானும்

Friday, April 26, 2013

நான் வியக்கும் பதிவர்கள்

பதிவுலகில் நான் பார்த்து வியந்த சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தை இன்று பார்போம் 

Thursday, April 25, 2013

பதிவுலகில் அதிரடி மன்னர்கள்

வணக்கம் நண்பர்களே இன்று பதிவுலகின் அதிரடி மன்னர்கள் என்ற தலைப்பில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பார்ப்போம்.அதிரடியாக பலவிடயங்களை எழுதக்கூடியவர்கள்

Wednesday, April 24, 2013

பதிவுலகில் கலக்கும் பெண்கள்

வணக்கம் நண்பர்களே இன்றைய அறிமுகத்தில் பதிவுலகில் தங்கள் எழுத்துக்களால் கலக்கும் நான் அறிந்த பெண்பதிவர்கள் பற்றி பார்ப்போம்.

Tuesday, April 23, 2013

பதிவுலகில் கலக்கும் யூத் பதிவர்கள்

அனைவருக்கும் வணக்கம் பதிவுலகில் நான் ரசித்த சில பதிவர்கள் பற்றி பல வித தலைப்புக்களில் அலசுவோம் அந்த வகையில் முதலில் பதிவுலகை கலக்கும் நான் ரசித்த யூத் பதிவர்கள் பற்றி பார்போம். அது என்ன யூத் பதிவர்கள் வயசில் சின்னவர்கள் கிட்ட தட்ட என் வயதை ஒத்த பதிவர்கள்

Monday, April 22, 2013

சொல்லிக்கொள்ளும் படி ஒன்னும் பிரபலம் இல்லை

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றேன். சிலர் என்னை அறிந்திருப்பீர்கள் எனது பெயர் கே.எஸ்.எஸ்.ராஜ் நண்பர்கள் என்ற தளத்தின் மூலம் பதிவுகளை எழுதிவருக்கின்றேன் என் தனிமையின் சந்தோசங்கள் சோகங்களின் கிறுக்கல்கள் எனது பதிவுகள்.

Sunday, April 21, 2013

அப்பாவி தங்கமணி, ஆசிரியர் பொறுப்பை ராஜ்க்கு தருகிறார்!

வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த அப்பாவி தங்கமணி வலைப்பூ புவனா கோவிந்த் அவர்கள் தம் பணியை மிகச் சிறப்பாக செய்து நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடைபெறுகிறார்.

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:), தங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:), சுட்டது...:), எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:))), உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))..., பிரகாஷ்ராஜ் இன் காபி வித் அப்பாவி...:)))  ஆகிய அருமையான தலைப்புகளில் பதிவர்களையும், இடுகைகளையும் அறிமுகம் செய்து சுமார் 130-க்கும் மேலே மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.

புவனா கோவிந்த் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "நண்பர்கள்" வலைப்பூ K.S.S. ராஜ் அவர்களை அழைக்கின்றேன். இலங்கையில் பிறந்து, அங்கே வாழ்ந்து வரும் இவர் தனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவாக எழுதி வருகிறார். 

ராஜ் அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் புவனா கோவிந்த்!
நல்வாழ்த்துக்கள் ராஜ்!

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

Saturday, April 20, 2013

பிரகாஷ்ராஜ் இன் காபி வித் அப்பாவி...:)))

"இன்னைக்கி நம்ம செட்டுக்கு வர போற கெஸ்ட்..."
"அதையேன் நீ சொல்ற... நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதெப்படி நீ சொல்லலாம்"
"சார் நான்..."
"நோ நோ நோ... நீ சொல்ல கூடாது. அதையேன் நீ சொல்ற. நானே சொல்றேன்" என ஆடியன்ஸ் பக்கம் திரும்பியவர் "ஹாய் செல்லம்..." என்றார்
"இனி நான் சொல்ல வேண்டியதே இல்லைனு நினைக்கிறேன். ஆமாங்க, பிரகாஷ்ராஜ் சார் தான் இன்னைக்கி நம்ம கெஸ்ட்"
"ஹா ஹா ஹா ஹா ஹா..."
"ஐயோ பயமா இருக்கு சார்"
"உன் போஸ்ட் படிச்சே மக்கள் தைரியமா இருக்கறப்ப என் சிரிப்பா பயமா இருக்கு?"
"சார் அது..."
"என்ன சொன்ன என்ன சொன்ன? பயமா உனக்கா?"
"சார்... அதில்ல சார்"
"அதில்லைனா வேற என்ன... ம்... சொல்லு சொல்லு கமான்"
"சார்..."
"இப்ப இப்ப.... இப்ப சொல்லணும்"
"ஐயோ... என்னை நீங்க பேச விட்டா தான சார் சொல்ல முடியும்"
"ஒரு நாள் உன்னை பேச விடாம பேசினதுக்கே உனக்கு இவ்ளோ டென்சன் ஆகுதே. எவ்ளோ நாள், எவ்ளோ பேர பேச விடாம நீ டென்சன் பண்ணி இருப்ப...ம், இப்ப புரியுதா அந்த கஷ்டம் என்னனு. அதை உனக்கு புரிய வைக்கவே யாம் இந்த திருவிளையாடலை நடத்தினோம்"
"திருவிளையாடலா இது... திரு திருனு முழிக்க வெச்சுட்டீங்க கொஞ்சம் நேரத்துல. என் அககண்ணை திறந்ததற்கு நன்றி சார், நான் திருந்திட்டேன். இனிமே மத்தவங்க பேசறதுக்கும் கொஞ்சம் அவகாசம் தரேன்"
"இது நல்ல பொண்ணுக்கு அடையாளம். என்ன செல்லம் நான் சொல்றது" என ஆடியன்சை பார்த்து கேட்கிறார், அவங்களும் கை தட்டி ஆமோதிக்கறாங்க
"சார், உங்ககிட்ட கொஞ்சம் கேள்விகள் கேக்கணும் சார்"
"கேள்வியா? நோ நோ நோ... எனக்கு பதில் சொல்லி பழக்கமில்ல செல்லம். ஒரு சேஞ்சுக்கு இன்னைக்கி நான் கேள்வி கேக்கறேன், நீ பதில் சொல்லு"
"நானா?"
"ஏன் ரிஸ்க்னு தோணுதா?"
"ச்சே ச்சே ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி யு நோ"
"ஐ டோன்ட் நோ... இன்னும் கொஞ்ச நேரத்துல பாப்போம் அதையும்"
"சரி சார், சட்டுபுட்டுனு கேள்விய கேளுங்க"
"என்ன சொன்ன என்ன சொன்ன?"
"கேள்வி கேளுங்கனு..."
"இல்ல இல்ல அதுக்கு முன்னாடி ஒண்ணு சொன்னியே... என்ன சொன்ன?"
"அதுக்கு முன்னாடி சரி சார்னு சொன்னேன்"
"இல்லில்ல... அதுக்கும் இதுக்கும் நடுவுலே நீ என்னமோ சொன்ன... என்னமோ சொன்ன நீ.... என்ன சொன்ன? சொல்லு சொல்லு சொல்லு"
"ஸ்ஸ்ஸ்ப்ப்பா.... முடியல சார்"
(மைண்ட்வாய்ஸ் : பிரகாஷ்ராஜ்க்கு கோயிலே கட்டலாம்...அப்பாவியவே பொலம்ப வெச்சுட்டாரே... ஹ ஹ ஹ...சூப்பர்)
"சொல்லு சொல்லு... என்ன சொன்ன?"
"சட்டு புட்டுனு..."
"கொலாபுட்டு தெரியும் அதென்ன சட்டு புட்டு?'
"எங்க ஊர் பக்கம் சீக்கரம்னு சொல்றதுக்கு அப்படி சொல்லுவாங்க"
"ஓஹோ... சட்டு... புட்டு... நல்லா இருக்கே. அது சரி, நீ ப்ளாக் எழுதற இல்லையா...."
"ஆமா சார்... என் ப்ளாக் பேரு அப்பாவி தங்கமணி. அதுல பாத்தீங்கன்னா..."
"வெயிட் வெயிட் வெயிட்... நான் கேட்டனா, இல்ல நான் கேட்டனா?"
"நீங்க தான சார்..."
"ப்ளாக் எழுதறயானு ஒரு வார்த்த தப்பி தவறி கேட்டா போதுமே... ஒடனே ஒரு மணி நேர பிரசங்கம் ஆரம்பிச்சுடுவியே"
"சார்..."
"சரி சரி விடு. நான் என்ன கேக்க வந்தேனா... ப்ளாக் எழுதறியே, ப்ளாக் படிக்கற பழக்கம் எல்லாம் உண்டானு"
"ஒ நெறைய படிப்பனே. படிச்சா தானே நாலேஜ் வளரும்"
"நான் என்னமோ சும்மா காமடி, மொக்கை இப்படி தான் ப்ளாக் போஸ்ட் இருக்கும்னு நெனச்சேன். நாலேஜ் வளர்ற அளவுக்கெல்லாம் எழுதறாங்களா?"
"என்ன சார் இப்படி கேட்டுட்டீங்க?"
"வேற எப்படி கேக்கணும்"
"அதில்ல சார்... சரி சொல்றேன் கேளுங்க. தங்கம் பழனி ப்ளாக்ல பாருங்க Andriod போன்ல அப்ளிகேசன்களை SD'க்கு நகர்த்த பயன்படும் மென்பொருள் பத்தி சொல்லி இருக்காரு, நல்ல டெக்னிகல் ப்ளாக்னு இதை சொல்லலாம். அப்புறம் மேவியோட தினசரி வாழ்க்கை வலைப்பூவில் 'சாப்பிடும் கடலையில் ஆணி - ஒரு எச்சரிக்கை'னு ஒரு விழிப்புணர்வு பதிவு போட்டு இருக்காரு. அப்புறம் தலைநகர்ல இருக்கற நம்ம வெங்கட் அண்ணா நாம நேர்லயே மத்யப்ரதேசை சுத்தி பாத்த உணர்வு தர்ற மாதிரி ஒரு தொடர் எழுதி இருக்கார் பாருங்க. ஹ்ம்ம், ஸ்கூல் படிக்கும் போது எனக்கு ஹிஸ்டரி இப்படி இண்டரஸ்டிங்ஆ சொல்லி குடுத்து இருந்தா நானும் ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கி இருப்பேன்"
"ஹும்கும்... வாங்கிட்டாலும்"
"அப்புறம் பயண கட்டுரை எழுதறதுல நம்ம நியூஸிலாந்து துளசி டீச்சரை அடிச்சுக்க ஆளே இல்லை, நாம நெறைய முறை பாத்த இடமா இருந்தாலும் அவங்க வர்ணனைல படிச்சதும் இன்னொரு முறை அவங்க கண்ணோட்டத்துல பாக்கணும்னு தோணும். அதே போல மனசுல ஓட்டிக்கற மாதிரி எழுதற இன்னொருத்தர் மனதோடு மட்டும் கௌசல்யா. சமீபத்துல அவங்க எழுதின 'குழந்தைகள் மீதான அதிக எதிர்பார்ப்பு ஆபத்து' அப்படிங்கற பதிவை பாத்தா உங்களுக்கே புரியும். அப்புறம் நியூஸ் அப்டேட் வேணும்னா அவர்கள் உண்மைகள் ப்ளாக் பாருங்க, சமீபத்துல நடந்த பாஸ்டன் தீவிரவாத அட்டேக் பத்தி எழுதி இருக்காங்க"
"இவ்ளோ விஷயம் இருக்கா? ஹும்ம்..."
"இன்னும் இருக்கே. புதிய தலைமுறை தொலைக்காட்சில நடந்த தமிழன் விருதுகள் பத்தி பிம்பம் ப்ளாக்ல சொல்லி இருக்காங்க பாருங்க. அப்புறம் பாஸ்டன் ஸ்ரீராம் ப்ளாக்ல Resumeல இருக்க கூடாத பத்து விஷயங்கள் பத்தி சொல்லி இருக்கார், ரெம்பவும் உபயோகமான பதிவு. இது ரெம்ப பழைய பதிவு தான், ஆனா உபயோகம்னு தோணினதால சொன்னேன்"
"வாவ்... பரவாயில்லையே வாழ்க்கைக்கு தேவையான நெறைய விஷயங்கள் இங்க இருக்கே"
"கண்டிப்பா. சின்ன வயசுல பொம்மலாட்டம் பாத்து இருப்பீங்க, இன்றைய தலைமுறைக்கு அது தெரியாமையே போயிடுமோனு அதை பத்தி எழுதி இருக்காங்க நம்ம கற்றலும் கேட்டலும் ராஜி அக்கா. அப்புறம் பாத்தீங்கன்னா, இப்ப சம்மர் லீவ் விட்டாச்சு, போர் அடிக்குதுன்னு பசங்க ரகளை, அம்மாக்கள் டென்சன். இந்த விஜிஸ் கிராப்ட் பாத்தா நெறைய கத்துக்கலாம், அதோட பசங்களுக்கு டைமும் போகும்"
"பெரிய லிஸ்ட் தான் போ... உக்காந்து உக்காந்து கழுத்தே வலிக்குது"
"அதுக்கும் இங்க தீர்வு இருக்கே"
"கழுத்து வலிக்கா?"
"ஆமா சார்... இங்க பாருங்க நண்பர்கள் உலகம்னு ஒரு வலைப்பூ, அதுல கழுத்து வலி வராமல் இருக்க என்ன செய்யணும்னு சொல்றாங்க. அதோட குழந்தைகள் அடிக்கடி தலைவலினு சொன்னா அதை எப்படி கவனிக்கனும்னு சொல்றாங்க ஹாய் நலமா வலை பக்கத்துல. இன்னொன்னு, பட் நாட் லீஸ்ட், தொண்டு கிழங்களுக்கான கணினி அப்படினு ஒரு வலைப்பூவில் நம்ம மயக்க ஊசி டாக்டர் திவாண்ணா உபயோகமான நெறைய டிப்ஸ் அண்ட் FAQஸ் எழுதிட்டு இருக்கார் (கிழம்னு நான் சொல்லல யுவர் ஆனார், திவாண்ணா வெச்ச பேர் தான்)"
"வாரே வா... நெஜமாவே நெறைய உபயோகமான விசயங்களும் வலைப்பூவில் இருக்கத்தான் செய்யுது... கிரேட்"
"நான் தான் சொன்னனே சார்" என அப்பாவி பெருமயாக இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொள்ள
"ஆனா... எனக்கு ஒரு டவுட் அப்பாவி"
"என்ன சார்... எனக்கு எப்படி அப்பாவினு பேர் வந்ததுனு தானே"
"அது தெரிஞ்ச விஷயம் தானே... அடப்பாவி அப்படிங்கற பெயர் மருவி அப்பாவி ஆய்டுச்சு இல்ல"
"சார்..." என அப்பாவி டென்ஷன் ஆக
"அத விடு... என்னோட டவுட் என்னன்னா, மத்தவங்க எல்லாம் இவ்ளோ உருப்படியான விஷயங்கள் எழுதறாங்க இல்லையா? நீ மட்டும் ஏன் எப்பவும் மொக்கை போட்டுட்டே இருக்க"
(மைண்ட்வாய்ஸ் : சபாஷ் சரியான கேள்வி)
ஒரு கணம் ஜெர்க் ஆனாலும் சமாளித்து கொண்ட அப்பாவி "சார்... மத்தவங்க இந்த நோய் வந்துட்டா என்ன பண்றது, இந்த பிரச்சனைய எப்படி சமாளிக்கறது இப்படி போஸ்ட் எழுதறாங்க. நல்ல விஷயம் தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா எங்கள மாதிரி மொக்கை போடறவங்க எழுதறத படிச்சு சிரிச்சா போதும், நோய் பிரச்சனை எதுவும் கிட்ட வராது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இல்லையா?"
"ஆஹா... உன்கிட்ட பேசி ஜெய்க்க முடியுமா அப்பாவி. மீ தி எஸ்கேப்" என பிரகாஷ்ராஜ் அபீட் ஆகிறார்
(மைண்ட்வாய்ஸ் : பிரகாஷ்ராஜாலேயே இவகிட்ட பேசி ஜெய்க்க முடியலைனா... ஹ்ம்ம்....)
:)))

நம்மள பத்தி தெரிஞ்சும் ரெண்டாவது வாட்டி வலைச்சர ஆசிரியரா இருக்க வாய்ப்பு கொடுத்த சீனா அய்யாவுக்கு மிக்க நன்றி. அதோட இந்த வாரம் முழுக்க நான் எழுதினத பொறுமையா படிச்ச உங்க எல்லாருக்கும் மிக்க மிக்க நன்றி
மீண்டும் சந்திப்போம்... அதுவரை வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் எல்லாம் கூறி விடை பெறுவது அப்பாவி தங்கமணி... நன்றி

நட்புடன்.
புவனா (எ) அப்பாவி தங்கமணி

Friday, April 19, 2013

உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))

"ஹாய் ஹாய் ஹாய்..."
 
"வெறும் வாய்ல அவல் மெல்றது கேள்விப்பட்டு இருக்கேன், நீ என்ன வெறும் வாய்ல மாடு ஓட்ற"
 
"வேண்டாம்... அப்புறம் வெறும் கால்ல உன்னை ஓட்ட வேண்டி வரும்"
 
"எப்பவும் பூசாரி தான பேய ஓட்டும்... இன்னைக்கி பேய் பூசாரிய ஓட்டறேன்னு சொல்லுது... ஹையோ ஹையோ"
 
(என்னங்க, யார் பேசறானு புரியலியா, ஒருத்தர ஒருத்தர் கால வாரிக்கற ஸ்டைல் வெச்சே தெரியலியா... நம்ம விஜய் டிவி Anchors சிவகார்த்திகேயன் மற்றும் DD என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி தான்... சரி சரி பஞ்சாயத்து களை கட்டிடுச்சு, அங்க கவனிங்க)
 
"சிவா..." என DD மோகினி அவதாரம் எடுக்க ஆயுத்தம் ஆக
 
சிவா : சரி சரி, நாம வந்த வேலைய பார்ப்போம்
 
DD : ம்... இன்னைக்கி நாம எல்லாம் இங்க ஏன் வந்திருக்கோம்னா நம்ம அப்பாவி டிவில கிட்சன் கிலேடி 2013 பைனல்ஸ் நடக்க போகுது. இதுல ஜெயக்கறவங்களுக்கு நாலு கோடி பரிசு அறிவிச்சு இருக்காங்க அப்பாவி
 
சிவா : அப்பாடா... நல்லவேளை, நான் கூட அப்பாவி கையால செஞ்ச கேசரி தான் பரிசுனு சொல்லிடுவாங்களோனு பயந்தேன்
 
DD : ச்சே ச்சே... அப்புறம் கொலை முயற்சி கேஸ் வந்துடுமல்ல
 
சிவா : வாஸ்தவம் தான்... அது சரி, யாரெல்லாம் இந்த போட்டில கலந்துக்க போறாங்க
 
DD : பெஸ்ட் கிட்சன் ப்ளாக்கர்ஸ்ல இருந்து 20 பேர் ஷார்ட் லிஸ்ட் ஆகி இன்னைக்கி பைனல்சுக்கு வந்திருக்காங்க
 
சிவா : அப்ப இது டாப் 20னு சொல்லு
 
DD : அதே தான்... ஜட்ஜ் யாருனு தெரியுமா?
 
சிவா : சுப்ரீம் கோர்ட்டா இல்ல ஹை கோர்ட்டா?
 
DD : கேட்டா மட்டும் டக்கு டக்குனு சொல்லிடுவியோ... யோவ் நான் கேட்டது இன்னைக்கி கிட்சன் கிலேடி போட்டிக்கு ஜட்ஜ் யாருனு
 
சிவா : ஒ...அதா, அனேகமா பறவை முனியம்மா பாட்டியோ இல்ல தாமு சாராவோ தானே இருக்கும்
 
DD : அதான் இல்ல
 
சிவா : வேற யாரு?
 
DD : சாட்சாத் நம்ம அப்பாவி தங்கமணி தான்
 
சிவா : வாட் எ மெடிக்கல் மிராக்கில். ஹும்...வர வர யார் தான் சமையல் ப்ரோக்ராம்க்கு ஜட்ஜா இருக்கறதுன்னு ஒரு வரைமுறை இல்லாம போச்சு
 
DD : விடு சிவா... நடக்கறதெல்லாம் நம்ம கைலயா இருக்கு
 
சிவா : நடக்கறது கைல இல்லம்மா, கால்ல... ஒ நீ நாலு கால் கேட்டகிரி இல்ல... நான் மறந்துட்டேன்
 
DD : இப்படியே பேசிட்டு இருந்த, அப்புறம் அப்பாவிகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்
 
சிவா : ஐயோ வேண்டா... எங்காத்தாவுக்கு நான் ஒத்த புள்ள
 
DD : ம்... அந்த பயம் இருக்கட்டும்... சரி சரி அப்பாவி வர்ற மாதிரி இருக்கு. கொஞ்சம் அடக்கி வாசி... ஹலோ அப்பாவி வாங்க வாங்க
 
"ஹாய் DD, ஹாய் சிவா" என்றபடி அப்பாவி என்ட்ரி ஆகிறாள்
 
சிவா : வாங்க அப்பாவி... நல்லா இருக்கீங்களா?
 
அப்பாவி : நல்லா இருக்கேன் , நீங்க?
 
சிவா : போன நிமிஷம் வரைக்கும் நலம் தான், இனி பாப்போம்
 
DD : அப்பாவி எனக்கு ஒரு டவுட்
 
அப்பாவி : அதான் உங்களுக்கு நெறைய வருமே DD?
 
"செம பல்பு ஹ ஹ ஹ" என சிவா சிரிக்க
 
முறைத்தபடி "அதென்ன அப்பாவினு" என DD தயக்கமாய் இழுக்க
 
அப்பாவி : பேர் தான்
 
DD : அது புரியுதுங்க... வித்தியாசமா இருக்கே
 
அப்பாவி : நானே வித்தியாசமானவ தான
 
சிவா : நான் மதுரைக்கே போறேன்
 
அப்பாவி : கூல் சிவா கூல்
 
சிவா : அது எங்கூர்ல ஆடி மாசமே ஊத்திட்டாங்க
 
DD : நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னும் பதில சொல்லலியே அப்பாவி
 
அப்பாவி : ஆகு பெயர் தெரியுமா உங்களுக்கு
 
சிவா : எனக்கு எங்க ஆத்தா பேரு தான் தெரியும்
 
அப்பாவி : அட இது இலக்கணம்
 
சிவா : நீங்க கொஞ்சம் வெளக்கனும்
 
அப்பாவி : அதாவது இயல்புலயே நான் அப்பாவியா இருக்கறதால அந்த பெயரே ஆகி நான் அப்பாவி ஆய்ட்டேன்
 
சிவா : நான் இப்ப பைத்தியம் ஆய்ட்டேன்
 
DD : அப்பாவி, தெரியாம உங்ககிட்ட கேள்வி கேட்டுட்டேன். கேப்பியா கேப்பியா கேப்பியா (என தன்னை தானே தலையில் அடித்து கொண்டார் DD)
 
அப்பாவி : சரி சரி, வளவளனு பேசாம ப்ரோக்ராமுக்கு போங்க
 
சிவா : நேரம் தான்... டாப் 20 கிட்சன் கிலேடிகள் யாருனு ஒரு இன்ட்ரோ குடு DD மொதல்ல
 
DD : அவங்க பேர் மட்டுமில்ல, அவங்க ஒரு ஒருத்தரும் ஒரு டிஷ் அனுப்பி இருக்காங்க...
 
சிவா : டிஷ்ஷா அதுல விஜய் டிவி தெரியுமா?
 
DD : ஏக்டர் விஜய்யே தெரிவாரு (என DD எரிச்சலாய் கூற)
 
சிவா : ரியல்லி?
 
DD : ஸ்ஸ்ஸ்ப்ப்பா... நிஜமாவே முடியல சிவா. உன் கூட குப்பை கொட்ரதுக்கு உன் Wife'க்கு அவார்டே குடுக்கலாம்
 
சிவா : சரி சரி சொல்ல வந்தத சொல்லு
 
DD : நான் என்ன சொல்ல வந்தேன்னா, டாப் 20ல இருக்கற எல்லாரும் ஒரு டிஷ்... வேண்டாம் நான் தமிழ்லயே சொல்றேன். 20 பேரும் ஒரு உணவு பதார்த்தம் செஞ்சு சேம்பிள் அனுப்பி இருக்காங்க. அதை நம்ம ஜட்ஜ் அப்பாவி டேஸ்ட் பண்ணி பாத்துட்டு வின்னர் யாருனு சொல்லணும்
 
சிவா : குட், இப்படி எதார்த்தமா பதார்த்தம்னு மொதலே சொல்லி இருந்தா எனக்கும் புரிஞ்சுருக்கும். அதை விட்டுட்டு டிஷ் டஷ்னு... இப்ப அந்த டாப் 20 யாருனு DD சொல்லுவாங்க
 
DD : எதார்த்தம் பதார்த்தம்... வர வர நீ டி.ஆர் மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட. சரி விடு, அந்த டாப் 20 லிஸ்ட் வித் அவங்க செஞ்ச பதார்த்தம் லிஸ்ட் இதோ...
 
1. கலிபோர்னியா மகி அருண் - புளி பொங்கல்
 
2.சிங்கப்பூர் பிரேமா - ஸ்வீட் போளி
 
3. சென்னை சங்கீதா நம்பி - ஆனியன் பிரெஞ்ச் டோஸ்ட்
 
4. சிங்கப்பூர் ஜெயஸ்ரீ சுரேஷ் - டொமேடோ பிரியாணி
 
5. பிரான்ஸ் சஷிகா - அரிசி தேங்காய் பாயசம்
 
6. சென்னை ஜலீலா கமால் - மாங்காய் ஊறுகாய்
 
7. சிங்கப்பூர் ராக்ஸ் கிட்சன் - பனீர் பராத்தா
 
8. இந்தியா கோமதி அரசு - வாழைக்காய் அப்பளம்
 
9. துபாய் கிட்சன் குயின் - வெந்தயகீரை அண்ட் வாழைத்தண்டு கறி
 
10. UK லதா மதுசூதனன் - சில்லி கார்லிக் நூடுல்ஸ்
 
11. அமெரிக்கா திவ்யா - பெசரு பப்பு கொப்பரி பூரேலு அண்ட் பெசர பப்பு கட்டு
 
12. அருப்புக்கோட்டை ராதாஸ் கிட்சன் - வெள்ளை புலாவ்
 
13. இந்தியா காஞ்சனா ராதாகிருஷ்ணன் (மீராஸ் கிட்சன்) - குதிரைவாலி (Banyard Millet) பொங்கல்
 
14. இந்தியா கீதா ஆச்சல் - சரவண பவன் சாம்பார்
 
15. ஹைதராபாத் புதுகை தென்றல் - பாலக் சூப்
 
16. அமெரிக்கா ஹர்ஷினி அம்மா - வேலண்டைன்ஸ் டே கேக்
 
17. சார்ஜா மனோ சுவாமிநாதன் - உருளைக்கிழங்கு தேங்காய் பால் குருமா
 
18. கனடா சாந்தி முத்துவேல் (7ஆம் சுவை) - பேக்ட் ஸ்வீட் பொடேடோ பிரைஸ்
 
19. துபாய் ஹுசேனம்மா - ராஜ்மா புலாவ்
 
20. அமெரிக்கா வானதி - ப்ரைட் ரைஸ்
 
சிவா :  அடேங்கப்பா உலகம் பூரா இருக்காங்க போல இருக்கே... அப்ப "கிச்சன் கிலேடி 2013 - உலக அளவில்"னு தான் சொல்லணும் போல. அப்பாவி மேடம், இனி நீங்க தான் ஒரு நல்ல தீர்ப்பா சொல்லணும்
 
அப்பாவி : இருங்க டேஸ்ட் பண்ணி பாத்துட்டு தானே சொல்லணும்
 
சிவா : அதானே பாத்தேன்... கொஞ்சம் எங்களுக்கும் மிச்சம் வெயுங்க
 
அப்பாவி : பாப்போம் பாப்போம்... (என உணவு வகைகளை நோட்டம் விட்டவர்) என்னப்பா இது, எல்லாரும் நாலு ஸ்பூன் தான் சேம்பிள் அனுப்பி இருக்காங்க
 
சிவா : நாலு ஸ்பூன் இருக்கறதால தான் அது சேம்பிள், நாலு ப்ளேட் இருந்தா அதுக்கு பேர் பார்சல்
 
அப்பாவி : ஒகே ஒகே... லெட் மீ டேஸ்ட் இட் (என ஒன்றொன்றாய் டேஸ்ட் செய்கிறார் அப்பாவி)
 
சிவா : நமக்கு எதுனா மிச்சம் இருக்கும்னு நெனக்கற
 
DD : இருக்குமே ப்ளேட் ஸ்பூன்...
 
சிவா : இலை தழை... ஹும், தொண்டை தண்ணி வத்த பேசறது நாம, அந்த அம்மணி என்ன கட்டு கட்டுது பாரு
 
அப்பாவி : ஒகே...எல்லாம் டேஸ்ட் பாத்துட்டேன். எல்லாமே சூப்பர். இது தான் டாப்னு ஒண்ணை சொல்ல மனசு வரல. அதனால நாலு கோடிய 20 பேருக்கு வெட்டி குடுத்துடலாம்
 
சிவா : வெட்டியா?
 
அப்பாவி : ஆமா கோழிய வெட்டி தானே தரணும்
 
DD & சிவா : கோழியா? (என அதிர்ச்சியாய் பார்க்க)
 
அப்பாவி : அட ஆமாங்க... என் மதர் டங் தெலுகு யு நோ. தெலுகுல கோழிய கோடினு தான் சொல்லுவோம்.. .அதை தான் நான் மொதல்லே இருந்தே சொல்லிட்டு இருக்கேன். நீங்க தப்பா புரிஞ்சுட்டா நான் என்ன பண்ணட்டும். மீ தி அப்பாவி யு நோ
 
சிவா : இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புது...அவ்வ்வ்வ்வ்வ்....
 
:)))
 
பின் குறிப்பு : நானும் கண்ணுல விளக்கெண்ணய விட்டு தேடி பாத்துட்டேங்க. ஒரு ஆண் கிட்சன் ப்ளாக்கர் கூட கண்ணுல படல. பெண்கள் தான் கிட்சன் கில்லாடிகள்னு சொன்னா "நளன் தான் பெஸ்ட் குக் தெரியுமா"னு சண்டைக்கு வருவாங்க... என்னமோ போ அப்பாவி...:)

Thursday, April 18, 2013

எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:)))

"இல்ல மாமி, எனக்கென்னமோ இது சரியா படல" என அப்பாவி கூற

"சரியா படலனா உன் இட்லிய தூக்கி போடு, மண்டை ஒடயற அளவுக்கு சரியா படும்" என சமயம் பார்த்து வாருகிறார் கீதா மாமி

"மாமி" என அப்பாவி டென்ஷன் ஆக

"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட" என்றபடி என்ட்ரி ஆகிறார் அபுதாபி ரிடர்ன் அபூர்வ சிந்தாமணி அனன்யா

"ஹும்கும்... ஒண்ணு இப்படி தினசரி தரிசனம்... இல்லைனா வருஷம் நாலானாலும் எட்டி பாக்க மாட்டா இந்த அனன்யா" என மாமி சலித்து கொள்ள
 
 
"கீதா மாதா கி ஜே... ஆத்தா தாத்தா பாட்டி கி ஜே" என அனன்யா கிடைத்த வாய்ப்பில் கவுன்ட்டர் கொடுக்க
 
 
"என்னது?" என கீதா மாத்தா டென்ஷன் ஆனார்
 
 
அப்பாவி : ஐயோ இப்ப அதுவா பிரச்சனை? நம்ம பிரச்சனைக்கு வழி சொல்லுங்க மொதல்ல
 
 
அனன்யா : எப்பவும் இவ எழுதறது தான் புரியாது, இப்ப பேசறதும் புரியல
 
 
கீதா மாமி : அதொண்ணுமில்ல அனன்யா. நம்ம ATM ப்ளாக்கர் மீட் வெக்கணுமாம்
 
 
அனன்யா : ATM பணம் தானே குடுக்கும், இப்ப ப்ளாக்கர் மீட் எல்லாம் வெக்குதா
 
 
கீதா மாமி : நாராயணா, நான் சொன்னது அந்த ATM இல்ல, நம்ம அப்பாவி தங்கமணிய நான் செல்லமா ATMனு தான் கூப்பிடுவேன்
 
 
அனன்யா : நல்லா வெச்சீங்க செல்ல பேரு... சரி ப்ளாக்கர் மீட் தானே, ஏதோ பச்ச புள்ள ஆசப்படுது வெச்சுட்டு போகட்டும் விடுங்கோ மாமி
 
 
கீதா மாமி : விடாம நான் என்ன புடிச்சா வெச்சுருக்கேன், ATM எங்க ப்ளாக்கர்ஸ் மீட் வெக்கணும்னு சொல்றானு நீயே கேளு
 
 
அனன்யா : அப்படி எங்க வெக்கணும்ன அப்பாவி, மாமி ஏன் டென்ஷன் ஆகறாங்க
 
 
அப்பாவி : நீயே சொல்லு அனன்ஸ், இப்ப இருக்கற வெயிலுக்கு ஹில் ஸ்டேசன்ல ப்ளாக்கர்ஸ் மீட் வெச்சா நல்லா இருக்கும் தானே
 
 
அனன்யா : அதானே...அவ சொல்றதுல என்ன மாமி தப்பு?

கீதா மாமி : அனன்யா, நீ முழுசா கேக்காம பேசாத. ATM எந்த ஹில் ஸ்டேஷன் சொன்னானு கேளு

அனன்யா : அப்படி என்ன தான் சொன்ன மாமி டென்சன் ஆகற அளவுக்கு

அப்பாவி : அது வேற ஒண்ணுமில்ல அனன்ஸ், எப்பவும் ஊட்டி கொடைக்கானல்னு போர் அடிக்குதில்ல, அதான் அப்படியே பொடி நடையா இமயமலைக்கு போலாம்னு சொன்னேன், இது ஒரு தப்பா சொல்லு
 
 
"அடியேயேயேயேயேயேயேயே... நல்லா வாய்ல வந்துருமாமா" என அனன்யா அங்காளபரமேஸ்வரி அவதாரம் எடுக்க
 
 
"அயகிரி நந்தினி நந்தித மேதினி விஷ்ணு வினோதினி நந்தனுதே" என சமயோசிதமாய் பாடி சாமியை மலை ஏற்றினாள் அப்பாவி
 
 
கீதா மாமி : எனக்கென்னமோ திருச்சில ப்ளாக்கர் மீட் வெக்கறது தான் சரினு தோணுது. ஏன்னா இங்க கோபாலகிருஷ்ணன் , ரிஷபன், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி,நம்ம ஆதிவெங்கட் இப்படி பிரபலமான நெறய ப்ளாக்கர்ஸ் இருக்காங்க
 
 
அப்பாவி : ஏன் எங்க ஊர்ல இல்லையா? இராஜராஜேஸ்வரி அம்மா இருக்காக, சங்கவி இருக்காக, கணேசன் இருக்காக, எங்க ஊரு மயிலுவிஜி இருக்காக, சாமகோடங்கி இருக்காக, சம்பத்குமார் இருக்காக, வமுமுரளி இருக்காக, ஜீவாநந்தம் இருக்காக...
 
 
அனன்யா : இழுத்தது போதும், கொஞ்சம் உன் ஸ்பீக்கர ஆப் பண்ணு தாயே. ஹும்கும்... நாங்க இருக்கறது தலை நகரிலாக்கும், அங்க தான் ப்ளாக்கர்ஸ் மீட் வெக்கணும். ஒண்ணா ரெண்டா லட்சம் பேரு இருக்கோமாக்கும். சேம்பிளுக்கு சொல்றேன் கேளு RVS அண்ணாத்தே, ஆசியா, தேனம்மை லக்ஷ்மணன், மெட்ராஸ்பவன் சிவக்குமார், வீடுதிரும்பல் மோகன்குமார், எங்கள்ப்ளாக் ஸ்ரீராம், மின்னல்வரிகள் பாலகணேஷ் , தூரிகையின் தூறல் மதுமதி, எம்மாடி மூச்சு வாங்குது பாரேன். இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?
 
 
அப்பாவி : உங்க ஊர்ல வெயில் ஜாஸ்தி, எங்க ஊர் ஊட்டிக்கு பக்கமாக்கும், இங்கயே வெச்சுப்போம்
 
 
கீதா மாமி : ஒண்ணும் வேண்டாம், அசந்த நேரத்துல நீ இட்லி கிட்லி செஞ்சுட்டா எங்க நெலம என்னாகறது?

அப்பாவி : நாங்க இட்லி செஞ்சாலும் சொந்தமா செய்வமாக்கும், டீ கடைல வாங்கி தர மாட்டோம்

அனன்ஸ் : புடிச்சாளே ஒரு பாய்ண்டு (என முணுமுணுக்க)

கீதா மாமி டென்சனாய் ஏதோ சொல்ல வர, அதற்குள் ஒரு பரிட்சயமான குரல் இடையிடுகிறது

"எனக்கென்னமோ அப்பாவி சொல்ற மாதிரி இமயமலைல வெச்சுக்கறது தான் நல்லதுனு தோணுது" என்றபடி என்ட்ரி தருகிறார் நம்ம LK பிரதர்

``நம்பமுடியவில்லை....வில்லை...ல்லை...லை...``என அப்பாவி ஏக பீலிங்க்ஸ் பிழிய
 
 
"அதானே, நீ எப்பவும் அப்பாவிக்கு எதிரா தானே பேசுவ இன்னைக்கி என்னாச்சு LK" என இன்னொரு என்ட்ரி நம்ம திவாண்ணா
 
 
"நானும் அதே தான் கேக்கணும்னு நெனச்சேன் தம்பி, ஆனா நீ கேட்டுட்ட" என நம்ம வல்லிம்மா வர, இன்னும் களைகட்டியது
 
 
கீதா மாமி : முடிவா நீ என்ன தான் சொல்ற அப்பாவி

அப்பாவி : நான் கவிதை நடைல பதில் சொல்லட்டுமா

LK : இதுக்கு தான் நான் இமயமலைக்கே போகட்டும்னேன்... அப்படியாச்சும் கொஞ்ச நாள் இதுல இருந்து நாமெல்லாம் தப்பிக்கலாம்னு ஒரு நப்பாசை தான்
 
 
வல்லிம்மா : ஐயோ பாவம், ஏன் சின்ன பொண்ண அப்படி எல்லாம் சொல்ற LK (என வல்லிம்மா ஒருத்தர் மட்டும் அப்பாவிக்கு பரிந்துகொண்டு வர)
 
 
அனன்யா : யாரு சின்ன பொண்ணு... என் கண்ணுக்கு படலியே

அப்பாவி : ப்ளீஸ் ப்ளீஸ் ஒரே ஒரு வாட்டி கவிதைல பதில் சொல்லிக்கறேனே

கீதா மாமி : .அம்மா தாயே... நீ கவிதைலயும் சொல்ல வேண்டாம், கற்பனைலையும் சொல்ல வேண்டாம், உன் இஷ்டபடி இமயமலைல வெச்சாலும் சரி, இல்ல இமயத்துலையே வெச்சாலும் சரி, ஆளை விடு (என மொத்த கூட்டமும் எஸ்கேப்)
 
 
அப்பாவி : சக்சஸ் சக்சஸ் சக்சஸ்... எப்படி ஜெயச்சேன் பாத்தீங்களா. கோவைல தாங்க ப்ளாக்கர்ஸ் மீட். எங்கயா... அது சென்ட்ரல் ஜெயில்... இருங்க இருங்க ஓடாதீங்க... சென்ட்ரல் ஜெயில் பக்கத்துல இருக்கற க்ரௌண்ட்லனு சொல்ல வந்தேன். கண்டிப்பா வந்துருங்க. எப்பவா... ஏப்ரல் 1st 2014. பை பை சி யு...:)))

சுட்டது...:)

"என்னை பாத்து... என்னை பாத்து... என்னை பாத்து எப்படிடா அவன் அந்த கேள்விய கேக்கலாம்" என டைரக்டர் சாரதிமேனன் டென்சனாய் குட்டி போட்ட பூனை போல் கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டிருக்க
 
"சார் சார்... அப்படி என்ன கேட்டாங்க? யார் கேட்டாங்க?" என அசிஸ்டன்ட் மூர்த்தி தெற்கும் வடக்கும் நடந்தபடி கேட்டான்
 
"இல்லடா... அவன் எப்படி அப்படி கேக்கலாம்?" என மீண்டும் டைரக்டர் புதிர் போட
 
"நீங்க நல்லவரா கெட்டவரானு கேட்டுடாங்களா சார்"
 
"அப்படி கேட்டுருந்தா பரவாயில்லையே... அ ஆ இ ஈ உ ஊ'னு ரியேக்சன் காட்டி எஸ்கேப் ஆகி இருப்பனே"
 
"வேற என்ன சார் கேட்டாங்க...யாரு கேட்டாங்க?"
 
"அந்த சொட்ட மண்டையன் ப்ரொடியூசர் இருக்கானே... என்னை பாத்து... என்னை பாத்து... படத்தோட கதை என்னனு கேட்டுட்டான்யா..."
 
"ஹும்கும்... கோடி கோடியா கொட்றவன் கேக்காமயா இருப்பான்" என முணுமுணுக்க
 
"என்ன?"
 
"அ...அது... அதுக்கென்ன சொல்லிட்டா போச்சுனேன் சார்" என தெரியாமல் வாயை விட
 
"அப்ப உன்கிட்ட நெறைய கதை இருக்கும் போல இருக்கே... எடுத்து விடு பாப்போம்"
 
"இதென்னடா வம்பா போச்சு" என புலம்பியவர், திடீரென நினைவு வந்தவராய் உற்சாகமாய் "அது சார்... இப்பெல்லாம் கதை பண்றது பெரிய மேட்டரே இல்ல சார்"
 
"என்னைய்யா புதிர் போடற"
 
"சார்... வலைப்பூ பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதான் சார் ப்ளாக்"
 
"ஆமா கேள்விப்பட்டு இருக்கேன். நெறய பிரபலங்கள் கூட ப்ளாக் வெச்சு இருக்கறதா கேள்வி"
 
"அதே தான் சார்... ஒரு பத்து ப்ளாக் படிச்சா பதினாறு கதை தேத்தலாம் சார்"
 
"அவ்ளோ நல்லவா எழுதறாங்க?"
 
"என்ன சார் இப்படி கேட்டுடீங்க... நம்ம அமைதிச்சாரல் அக்காவோட சிறுகதைகள படிச்சு பாருங்க, அதுலயே நெறைய கதை கிடைக்கும். ஆனா அக்கா இப்ப பெரிய ஆள் ஆகிட்டதா கேள்வி. டிவி ரேடியோனு பேட்டி குடுக்க கால்ஷீட் மேனேஜ் பண்ணவே ஒரு அசிஸ்டன்ட் போட்டு இருக்காங்களாம்"
 
"ஒ... ப்ளாக் மூலமா பிரபலமா?"
 
"என்ன இப்படி சொல்லிடீங்க, நம்ம தியாவோட பேனா பேசறத கேட்டு பாருங்க. இவங்க எழுதின கதை அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தின் தமிழ் சஞ்சிகையான பனிப்பூக்கள் பதிவாகி இருக்காம்"
 
"அடேங்கப்பா கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் தமிழ் சேவையா... சூப்பர். உள்ளூர்ல யாரும் பப்ளிஷ் பண்ணலியா"
 
 
"ஏன் பண்ணாம? போன வாரம் கூட நம்ம நித்துஸ் கிட்சன் நித்யா பாலாஜி எழுதின 'லஞ்சம்'ங்கற கதை வாரமலர்ல வந்ததே"
 
 
"ஓஹோ... கிட்சன்ல சமையல் தானே செய்வாங்க.கதையுமா?"
 
"ஆமா சார். நீங்க நம்ம தமிழ்உதயம் பக்கத்துல போய் பாருங்க, எக்கசக்க கதைகள் இருக்கு. அப்புறம் தமிழ்ப்பிரியன்னு ஒருத்தர் ஆவிகதை சொல்றார் கேளுங்க.செமையா இருக்கு "
 
 
"ஏன்யா ராத்திரி நேரத்துல பீதிய கெளப்பற. வேற எதாச்சும் தொடர்கதை இருந்தா சொல்லேன். நம்ம கதைக்கு சரி வருமானு பாப்போம்"
 
 
"நம்ம சே.குமார் அவரோட மனசுல கலையாத கனவுகள்னு ஒரு தொடர் ஆரம்பிச்சு இருக்கார் பாருங்க, ஆரம்பமே அமர்களமா இருக்கு பாஸ்"
 
"சரி கதய மட்டும் வெச்சு இந்த காலத்தல ரீல் ஒட்ட முடியுமா? ஜோக்கு கீக்கு இருந்தா தானே பய புள்ளைக தியேட்டர் பக்கம் வருது"
 
"அது தான் இங்க கொள்ள கொள்ளையா இருக்கே. கீதமஞ்சரி புதுசா கலக்க ஆரம்பிச்சு இருக்காங்க, இன்னொருத்தர் இருக்கார் சேட்டைக்காரன்னு நகைச்சுவை எழுத்தாளர்களில் முதல் 10 எடத்துல இருப்பார்னா பாருங்களேன்"
 
"ஓஹோ...இவ்ளோ இருக்கா? ஆனா எனக்கு ஒரு சந்தேகம்"
 
"அதான் எப்பவும் வருமே"
 
"இதையெல்லாம் நாம சுட்டு போட்டா மக்கள் கண்டுபுடிச்சுட மாட்டாங்களா?"
 
 
"ஜோக் அடிக்காதீங்க சார். எடுத்த கதையே மறுபடி எடுத்தாலும் கண்ணு கொட்டாம பாக்கராங்களாமா இதென்ன பெரிய விசியம்"
 
 
"அப்ப எடுத்துடுவோம். சரி படத்துக்கு பேர் என்ன வெக்கறது?"
 
 
"பேர் தானே 'சுட்டது'னு வெயுங்க, புதுமையாவும் இருக்கும் உண்மையாவும் இருக்கும்...:)"
 

Tuesday, April 16, 2013

தங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:)

 
"வாவ்...சூப்பர்... ஹ ஹ ஹ... ச்சே, சான்சே இல்ல" என ரங்கமணி சிலாகிக்க

"அது என்னனு சொல்லுங்க. சான்ஸ் இருக்கா இல்லையானு நான் சொல்றேன்" என்றார் தங்கமணி

"என்ன தான் சொல்லு... எழுத்து உலகில் எங்கள அடிச்சுக்க உங்களால முடியாது"

"நான் எதுக்கு உங்கள அங்க வந்து அடிக்கணும்"

"அதான் வீட்லயே வேணுங்கற அளவுக்கு அடிக்கறேங்கறயா. நான் சொன்னது அதில்ல. எழுதறதுல ஆண் எழுத்தளர்கள அடிச்சுக்க பெண்களால முடியாதுன்னேன்"

"நெனப்பு தான்... அதெல்லாம் ஒத்துக்க முடியாது"

"நான் சொல்லி நீ எப்ப எதை ஏத்துட்டு இருக்க"

"ப்ரூபோட சொல்லுங்க ஒத்துக்கறேன்"

"ஒண்ணு என்ன அஞ்சே சொல்றேன்... இக்கட சூடு...."

"இக்கட மட்டுமில்ல குளோபல் வார்மிங்ல உலகமே இப்ப சூடு தான்"

"ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா... எப்படிம்மா உன்னால மட்டும்"

"சரி சரி ரெம்ப புகழாதீங்க... ஏதோ லிஸ்ட்னு சொன்னீங்க... ஒண்ணையும் காணோம். ஒருவேள அப்படி ஒண்ணு இல்லையோ" என கேலி செய்ய

"திஸ் இஸ் டூ மச் ஐ சே... லிஸ்ட் போடறேன் கேட்டுக்கோ"

1 .டினேஷ் பக்கங்கள் போய் பாரு... Nano Medicine பத்தி என்னமா எழுதி இருக்கார் தெரியுமா?

2. டி.என்.முரளிதரனோட மூங்கில்காற்றை சுவாசிச்சு பாரு, சிரிச்சு சிரிச்சே வயத்து வலி வந்துடும்

3. தனிமரம் வலைப்பூவில் சும்மா கலக்கிட்டு இருக்கார் 


4. கோவை ஆனந்தின் பயணம் பாரு, அதுவும் இப்ப "ஹலோ நாங்களும் இஞ்சினியர் தான்"னு ஒரு சூப்பர் சுயவரலாறு எழுதிட்டு இருக்கார்... செம காமடி தெரியுமா... :)

5. "மாற்றுபார்வை" பேர்ல மட்டுமில்ல, பதிவுகளும் பெருகேத்தமாதிரி தான் இருக்கு

"இந்த லிஸ்ட் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? இதெப்படி இருக்கு... ஹ ஹ ஹ"

"லிஸ்ட் நீங்க தான் குடுப்பீங்களா? லிஸ்ட் போடறதுல நாங்க எக்ஸ்பெர்ட் தெரியுமா?"

"ஷாப்பிங் லிஸ்ட் தானே, அது ஊருக்கே தெரியுமே"

"எல்லா லிஸ்டும் தான்... இங்க தேக்கோ"

"எங்க தேய்க்கணும்"

"அது தேக்கரதில்ல ஜென்டில்மேன்... இங்க பாருங்கனேன் ஹிந்தில"

"நமக்கு தமிழே ததிங்கதினதோம்... இதுல ஹிந்தி வேற... ஹையோ ஹையோ"

"வேண்டாம்... அப்புறம் ப்ளாக் லிஸ்ட் போடறதுக்கு பதிலா வேற லிஸ்ட் போட வேண்டி வரும்"

"சரி சரி... அதெல்லாம் பப்ளிக்ல எதுக்கு. நீ சொல்ல வந்தத சொல்லு தங்கம்"

"ம்... அந்த பயம் இருக்கட்டும். ஹியர் யு கோ"

"எங்க போகணும்" என ரங்கமணி புரியாமல் விழிக்க, தங்கமணி முறைக்க, அதன் பின் புரிந்தவராய் "ஒ... லிஸ்ட் சொல்ல போறியா. சொல்லு சொல்லு"

ஒருத்தர் இல்ல ரெண்டு பேர் இல்ல 12 பேர் சேந்து கலக்கலா எழுதிட்டு இருக்காங்க அம்மாக்களின் வலை பூக்களில், பதிவு ஒண்ணு ஒண்ணும் முத்து முத்தா இருக்குமாக்கும். இந்த வலைப்பூ பத்தி சமீபத்துல வசந்தம் வார இதழ்ல கூட எழுதி இருந்தாங்க 
 
 
மஞ்சு சுபாஷிணியோட கதம்ப உணர்வுகளில் டென்சன் அலமேலுவ பத்தி படிச்சா நம்ம டென்சன் எல்லாம் காணாம போய்டுமாக்கும் 

நம்ம பூவிழி பக்கம் போய் பாருங்க, MBBS படிக்காத டாக்டர் தான்

நெறய பெண்களுக்கு இன்னைக்கி இருக்கற பிரச்சன பிரசவத்துக்கு பின்ன வெயிட் போடறது தான், அதை எப்படி குறைக்கறதுனு ரஞ்சனி நாராயணன் அம்மா அழகா சொல்லி தராங்க
 
 
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... பாட்டி சொல்லும் கதைகள் கேட்டு பாருங்க, விடிய விடிய கேட்டுட்டே இருக்கலாம்

"இது வெறும் ஒரு சோற்று பதம் தான் யு சி... வேணும்னா சொல்லுங்க நூறு பக்க லிஸ்ட் ரெடி பண்ணி தரேன்"

"போதும்மா தாயே. ஆளை விடு"

"அப்படி விட முடியாது. இப்ப சொல்லுங்க, எழுத்து உலகில் யார் பெஸ்ட், மேல் ஆர் பீமேல்?" என தங்கமணி விடுவேனா என வம்பு செய்ய

ஒரு கணம் விழித்தவர், பின் சுதாரித்து சார்ஜ் இல்லாத செல்போனை காதில் வைத்தபடி "ஹலோ... யாருங்க. என்னது? நீங்க சொல்றது சரியா கேக்கல. சிக்னல் சரி இல்லைனு நினைக்கிறேன், இருங்க வெளிய வந்து பேசறேன்" என எஸ்கேப் ஆனார் ரங்கமணி

நாட்டமையின் தீர்ப்பு : ஆண்கள் எழுதறதுல பெஸ்ட்டா இல்லையாங்கறது அந்த ப்ளாக் ஆண்டவருக்கே வெளிச்சம், ஆனா பெண்கள சமாளிக்கரதுல பெஸ்டோ பெஸ்ட்...:)

Monday, April 15, 2013

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:)

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், அல்லாகே அந்தரிகி யூகாதி சுபகாஞ்சலு
 
என்னது? சுபா அக்காவுக்கு காய்ச்சலா?
 
ஆமா டெங்கு காய்ச்சல்
 
ஒ.. எந்த சுபா? நம்ம மன்னார்குடி சுபாவா?
 
இல்ல மால்குடி சுபா
 
ஹையோ ஹையோ அது மால்குடி இல்ல மால்காடி, அப்படினா ஹிந்தில சரக்கு ரயில்னு அர்த்தம், சுபா சரக்கு ரயில் பத்தி ஒரு பாட்டு பாடி பேமஸ் ஆனதுனால அந்த பேர் வந்தது
 
இதெல்லாம் சரியா சொல்லு, ஆனா நான் தெலுகுல ஒரு வார்த்தை சொன்னது உனக்கு புரியலையா?
 
அ...அது... சுபா அக்காவுக்கு காய்ச்சல் பத்தி கிளாஸ் எடுத்த அன்னைக்கி எனக்கும் காய்ச்சல். அதான் அது மட்டும் தெரியாம போச்சு
 
நல்லாவே சமாளிக்கற. என்ன பிரெண்ட்ஸ்? நான் யார் கூட பேசிட்டு இருக்கேன்னு புரியலையா? வேற யாருங்க, டாங்கி கெட்டா ஸ்மால் வால்...:)
 
அப்பாவி ப்ளீஸ்... உன்னை நீயே கழுதைனு சொல்லிக்கறத என்னால அனுமதிக்க முடியாது
 
உஸ்ஸ்ப்ப்ப்பா... முடியல மைண்ட்வாய்ஸ் முடியல
 
அப்பாவி, நமக்குள்ள ஆயிரம் தான் இருந்தாலும்....
 
எந்த ஆயிரத்த சொல்ற, போன வாரம் கடன் வாங்கினியே அந்த ஆயிரமா? இல்ல போன மாசம் வாங்கினயே அந்த நாலாயிரமா?
 
அப்பாவி, ஓராயிரமோ, நாலாயிரமோ, வாரணமாயிரமோ... அதெல்லாம் இப்ப எதுக்கு? இப்ப இங்க வந்த மேட்டர் சொல்லு
 
அது வேற ஒண்ணுமில்ல, வலைச்சரத்துல ஒரு வாரம் ஆசிரியர் பொறுப்பு எடுத்து இருக்கேன்
 
அதை நீ 2011லயே செஞ்சு இருக்கியே
 
வாஸ்துவம் தான், அந்த லிங்க் இதோ, இப்ப இன்னுமொரு வாய்ப்பு குடுத்து இருக்காங்க
 
ஒரு வாட்டி உன்னை கூப்டுட்டு மறுபடியுமா? அவங்களுக்கு உன்னை பத்தி சரியா தெரியலியோ
 
என்ன நக்கலா? பேசு பேசு...இன்னைக்கி முதல் பதிவு என்னை பத்தி சொல்லிக்கலாம்னு சொல்லி இருக்காங்க
 
அதான் உனக்கு அல்வா சாப்பிடற மாதிரி ஆச்சே...:)
 
சரி சரி நீ எடத்த காலி பண்ணு, நான் என் ப்ளாக் பிரெண்ட்ஸ்கிட்ட கொஞ்சம் பேசணும்
 
நீ பேசு, அதுக்கு நான் ஏன் எடத்த காலி பண்ணனும்?
 
இல்லேனா நீ நடு நடுல கமெண்ட் அடிச்சு என்னை காலி பண்ணுவியே
 
ஹி ஹி... அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. சரி சரி, நான் ஜூட் விடறேன், நீ பேசு
 
அப்பாடா, இனி நிம்மதியா பேசலாம். என்னங்க எல்லாரும் சௌக்கியமா? நான் நல்லா இருக்கேன். என்னை பத்தி சொல்லனும்னா என்னோட ப்ளாக் லிங்க் குடுத்தாலே போதும், இருந்தாலும் வந்ததுக்கு நாலு வார்த்தை சொல்லிட்டு நாலு லிங்க் குடுத்துட்டு போறேன்
 
என் இயற்பெயர் புவனா கோவிந்த், சொந்த ஊர் கொங்கு தமிழ் கொஞ்சும் கோயமுத்தூர். பத்து வருஷம் கனடாவில் இருந்தோம், சமீபத்தில் ஜாகை சொந்த ஊர் கோவைக்கு மாறியது. இப்போதைக்கு வெட்டி ஆபிசர், இன்னும் சில நாட்களில் ஒரு மேலாண்மை கல்லூரியில் பேராசிரியரா ஜாயின் பண்ண போறேன். கல்லூரி போக காத்துட்டு இருக்கேன்... பிகாஸ் கேள்வி கேக்க எனக்கு ரெம்ப புடிக்கும் யு சி...:)
 
அப்புறம் 2010ல இருந்து ஏக்டிவா ப்ளாக் எழுத ஆரம்பிச்சேன். முதல் வருஷம் எக்கசக்கமா மொக்கை போட்டு இருக்கேன். இதுவரைக்கும் 182 பதிவுகள் போட்டு இருக்கேன். நெறைய நல்ல நண்பர்கள் கிடைச்சு இருக்காங்க இங்க. அந்த வகைல ரெம்ப சந்தோஷம்
 
விகடன், திண்ணை, வல்லமை, அதீதம் போன்ற இணைய இதழ்களில் என்னோட கதைகள் / கவிதைகள் பிரசுரம் ஆகி இருக்கு. சில பரிசுகளும் வாங்கி இருக்கேன். அது மேலும் எழுத தூண்டுகோளாகவும் இருக்கு. இந்த வருடம் சிறுகதை தொகுப்பாய் ஒரு புத்தகம் வெளியிடும் எண்ணம் இருக்கு, எப்படி போகுதுனு பாப்போம்
 
என்னோட பதிவுகளில் எனக்கே பிடித்த சிலதை உங்ககிட்ட பகிர இந்த வாய்ப்பை உபயோகிச்சுக்கறேன். ஒவ்வொரு ஜோனர்லையும் எனக்கு பிடிச்ச டாப் 5 லிஸ்ட் இதோ:-
 
சிறுகதைகள்:-
 
நகைச்சுவை:-
ஜஸ்ட் ஒன் மோர் ப்ளீஸ்...
 
கவிதை:-
 
தொடர்வதைகள்... சாரி சாரி தொடர்கதைகள்..:) :-
5..................ஹி ஹி இனிமே தான் வரணும்.... இதுவரை மொத்தமே நாலு தான் எழுதி இருக்கேன், அதுக்கே 40 கதை எழுதின ரெஸ்பான்ஸ்...:) ஆனா டிராப்ட்ல எக்கசக்கமா இருக்கு, விரைவில் தொடரும்...:)
 
போதும்னு நினைக்கிறேன்... இதுக்கு மேல மொக்கை போட்டா இந்த வாரம் பூரா யாரும் இந்த பக்கம் எட்டி பாக்க மாட்டீங்க... இதோட நிறுத்திக்கறேன். இனி அறிமுகங்கள் நாளை முதல் பார்ப்போம். நன்றி
 
வாய்ப்பளித்தமைக்கு வலைச்சர பொறுப்பாசிரியர் சீனா சாருக்கு நன்றி