07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 1, 2008

வலைக்கு வசந்த் வந்த வரலாறு...!

சென்ற வாரம் சீனா அய்யாவிடமிருந்து தகவல் வந்தவுடன் முதலில் ஆச்சரியப்பட்டேன்.

அவ்வளவாக அறிமுகம் இல்லாத, பொதுவாகத் தமிழ் வலைத்தளங்களில் பிரபலமாக கருதப்படும் வலைப்பதிவுகளில் எதிலும் பின்னூட்டங்களில் கை வைக்காத ஒருவன். மூத்த பதிவர் என்று சீனா அய்யா கூறியுள்ளார். அதனை அளவுகோலாக வைத்துக் கொண்டு பார்த்தால், இத்தளத்திற்கு வருகின்ற பார்வையாளர்களின் வலை அனுபவ நாட்கள் புலனாவதுடன், எனக்கு கூடுதல் பொறுப்பும் இருக்கின்றது என்பதையும் சொல்கிறது.

முதலில் இரண்டு செயல்கள்.

அ. ஒரு பயங்கர நிகழ்வை முறியடித்து, தேசத்தின் பாதுகாப்பு நிலவரத்தைச் சுட்டிக்காட்டி, எல்லோரையும் உஷார்படுத்தியிருக்கும் கமாண்டோகளுக்கும், மாநகரக் காவல் துறைக்கும், இன்னுயிர் ஈந்த சகோதரர்களுக்கும் ஒரு Grand Royal Salute.

இந்நிலையில் ஓர் ஒழுங்கான வரிகட்டும் குடிமகனாக நாம் செய்யக் கூடியது என்ன..? நம்மால் செய்ய முடிகின்ற சின்னஞ்சிறு ஒழுங்குகளையும் செய்யத் தவறுவதை விடுத்தலே பெரும் பணி என்று தோன்றுகின்றது.

தெருவில் காற்றில் பறக்க குப்பை கொட்டுதல், எச்சில் உமிழ்தல், பாதி உணவோடு எழுந்திருத்தல்... எத்தனை செய்கிறோம்..? முதலில் இந்தச் சின்ன ஒழுங்கீனங்களைத் தவிர்க்க முயல்வோமே..!

இந்தச் சின்னச் சின்ன செயல்களால் ஏதேனும் பெரிய மாற்றம் வருமா...? என்று அங்'கலாய்ப்போர்', மீண்டும் தசாவதாரம் பார்க்கக் கடவதாக..! :)

ஆ. பரிசிலாருக்கு நன்றிகள்.

சரி. இப்போது கொஞ்சம் சுய கதை சொல்கிறேன்.

முதலில் வலைப்பதிவு என்ற சொல், எப்போது எனக்கு அறிமுகம் ஆயிற்று என்று 'கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தால்',... அப்படி ஒன்றும் சுப நிகழ்வு இல்லை அது!

கி.பி.2006ன் மத்திய மாதங்களில் ஒரு நாள், குமுதம் ரிப்போர்ட்டரில் ஒரு கட்டுரை படித்தேன். அப்போது அனல் அடித்துப் பறந்து கொண்டிருந்த 'போலி டோண்டு' பற்றியும், அவரது ஆபாச வலைப்பதிவுகள் பற்றியும் சொல்லப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று பக்கங்கள். அப்போது தான் 'வலைப்பதிவு' என்ற சொல் மூளையின் குழப்பக் கோடுகளில் பதிந்தது. ஆனாலும் ஏதும் செய்யவில்லை.

ஆகஸ்டில் பெங்களூருக்கு இடம் பெயர்ந்த போது, அலுவலகத்தின் குறை வேலை நாட்களும், சட்டென்ற கலாச்சாரத் தடுமாறல்களும், இணையத்திலேயே என்னைத் தொடர்ச்சியாகச் சுற்ற வைத்து, இருவரின் வலைப்பதிவுகள் எப்படியோ கண்ணில் சிக்கி, எனது வலைப் பிரவேசத்திற்கு அடிகோலின.

கொங்கு ராசா.

டுபுக்கு.

காவிரிக் கரையின் வளப்பமான ஒரு டவுன் சிறுவன் ஆனதால், கொங்குத் தமிழ் கொண்டு நான் மீண்டும் நுரை பொங்கி அலையடிக்கும் காவேரிக் கரையிலேயே குதித்தாடுவதைப் போன்ற சில் அனுபவத்தைத் தந்தன கொங்குராசாவின் எழுத்துக்கள்.

அவரது இந்தப் பதிவு, சிறுகதைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை அறிவதற்கு முன்பே சிறுகதைகளை எழுதும் விதத்தைச் சொல்லியது என்றால்...as they told மிகையல்ல..!

டுபுக்கு சாரைப் பற்றி நான் சொல்லி அறிய வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வாக்கியத்திலும் வெடிச் சிரிப்பு பறக்கும். சர்வசாதாரணமாக நாற்பது, ஐம்பது பின்னுட்டங்கள் வாங்கித் தள்ளுவார்; தள்ளுகிறார். எனக்கும், நகைச்சுவை எழுத்துக்கும் நாலைந்து சந்த்ராயன்கள் செல்ல வேண்டிய தூரம் என்பதால், செமத்தியான ஈர்ப்புடன் இழுத்துக் கொண்டது, இவரது பதிவு..!

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், ஜொள்ளித் திரிந்ததொரு காலம்..., நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு.

சரி, நாமும் எதையாவது செய்தாக வேண்டுமே என்று கை, கால்கள் பரபரக்கத் துவங்கியது, என் பயணத்தின் பிம்பங்கள்.

ஐந்தாவது படிக்கும் போதிலிருந்தே, 'மழை, வானம், பூமி, நிலா' என்றெல்லாம் எழுதிக் கொண்டு வந்து அம்மாவிடம் காட்டுவேன். பின் காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி பெற்று, ஏழாவது படிக்கையில் ஒரு வெண்பா ('பெண், கண், இடை, உடை') எழுதி தமிழ் வாத்தியாரிடம் காட்ட, அவர் பொறுமையாக, 'யாப்பு, இலக்கணம்' என்றெல்லாம் ஆப்பு வைக்க, அம்முயற்சிக்கு முழுக்குப் போட்டேன், அப்போதைக்கு..! பின் எட்டாவது மே லீவுக்கு திருச்சி சென்று, அப்போதிருந்த இராஜேஷ்குமார் பைத்தியத்தில் மூன்று நாவல்கள் எழுதி, டைரி நிரம்பியது. மூன்றிலும் அத்தனை கொலைகள்; இரத்தம் தெறித்து ஓடியது; ஒவ்வொரு சேபட்ரின் கடைசி வரியிலும் சஸ்பென்ஸ் (அப்போது... - தொடரும்.). அம்மா படித்து விட்டு, குடும்பக் கதை எழுதச் சொல்ல, அந்த வயதில் சிக்கவே இல்லை.

இப்படி பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், பயணக் காலங்கள், வலி நேரங்கள்... அத்தனையிலும் என் கூடவே வந்தது, செம்மொழி..!

ஆங்காங்கே கிறுக்கி வைத்திருந்த தாள்கள் எல்லாம், காலத்தோடு காற்றோடு காணாமல் போய் கரைந்தே போயின. எனவே மிச்சமிருந்ததை சாஸ்வதப் படுத்துவதற்கே வலைப்பதியத் துவங்கினேன்.

நான் வலைப்பதியக் காரணமே இது தான் என்பதால், பின்னூட்டங்களைப் பற்றிய அக்கறை இல்லை; திரட்டிகளில் வர வேண்டுமே என்ற பதற்றம் இல்லை. படித்தால் பிடிக்க வேண்டும்; பிடித்தவர்கள் மீண்டும் வர வேண்டும். Thats All.

தமிழ் இலக்கியத்தில் ஒரு மாபெரும் நிகழ்வு நிகழ்ந்தது, அதே காலக் கட்டத்தில்!

ந்து வயதில் எழுதத் துவங்கியதில் இருந்து கவிதை தவிர வேறு இலக்கிய வடிவங்களைப் பற்றி அக்கறை அற்று இருந்தவனுக்கு மற்றுமொரு பிரம்மாண்டத் தளத்தை அறிமுகப்படுத்திச் சவால் விட்டது... தேன்கூடு சிறுகதைப் போட்டிகள்..!

'பொதுவாக எம்மனசு தங்கம்; ஒரு போட்டியினு வந்து விட்டா சிங்கம்' என்ற தலைவரின் வரிகள் நமக்கு வே.வா.

அப்போது பரபரவென பற்றிக் கொண்டது தான் இந்த தீ..! சட்டென கவனம் முழுதும் சிறுகதையில் பாய, விதவிதமான தளங்களில், விதவிதமான மொழிகளில், சிறுகதைகள் வந்து விழத் தொடங்கி, இன்று எது அதிகம்..? கவிதையா, கதையா..? என்ற அடிதடியில் இரண்டும் மோதிக் கொண்டிருக்கின்றன.

என்னால் சிறுகதையும் எழுத முடியும் என்று எனக்கே எடுத்துக் காட்டிய தேன்கூடு நிர்வாகத்திற்கும், இப்போது இறைவனுக்கு அருகில் அமைதியாக சாந்தி அடைந்திருக்கும் சாகரன் சாருக்கும் நன்றிகள் சொல்லாவிட்டால், நான் மனிதன் இல்லை..!

Thank You Sagaran Sir...!

'ம்மால் என்ன செய்ய முடியும் என்று அறிவதற்காகத் தான் போட்டிகளில் பங்கெடுப்பது முக்கியமே தவிர பரிசு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அல்ல' என்ற எண்ணம் இருப்பதால், தேன்கூடு போட்டிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டேன்.

அந்த ஆர்வமே இப்போது சிறில் அலெக்ஸின் 'அறிவியல் புனைகதைப் போட்டியில்' முதல் பரிசைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பது உறுதி..!

சரி.. இதோடு நிறுத்திக் கொள்வோம்.

கடைசியாக ஒன்றே ஒன்று கூறிக் கொள்கிறேன். ஆரம்பக் காலக் கட்டங்களில் கிட்டத்தட்ட எனது அனைத்துப் பதிவுகளுக்கும் எப்படியோ வந்து கமெண்ட் போட்டுச் சென்ற மல்லிகை மேடத்துக்கு எனது நன்றிகள். 'பண்புடன் குழுமம் மல்லிகை' என்றால் அனைவர்க்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.

வெள்ளை நிறத்திலும், சாம்பல் நிறத்திலும் குட்டிகள் இருந்தாலும், அத்தனையும் ஒன்றன்றோ என்று மகாகவி கேட்டது போல், எழுதிய அனைத்தும் எனக்குப் பிடித்தவையாக இருப்பினும், சில கொஞ்சம் அதிகப் பிடித்தம். அவற்றில் சில கீழே..!

சிறுகதை :

அம்மா - தீபாவளி சிறப்புச் சிறுகதை!

அக்காவுக்கு...!

ராஜா வருகை.

இது உங்கள் கதை.

ஹாஸ்டல் டு கேண்டீன் - ஓர் என்ன(ண்ண)ப் பயணம்.

டகால் பாச்சா!

முதல் அறிவியல் புனைகதை.

நினை..வா.. நினைவா?

நான் கடவுள்.

H2SO4.

நானென்பது நீயல்லவா..

உன் குற்றமா.. என் குற்றமா..?

இணைத்த இலவசம்.

பரவசம்.. இலவசம்...!

இப்ப இன்னான்ற..?

வாசம்.

லாந்தர் விளக்கு.

அண்ணே..லிப்ட் அண்ணே..!

கொஞ்சம் உடன் அழைத்துச் செல்வீர்களா..?

"ங்கா...ங்கா.."

கவிதை :

(இது மீக் கடின வேலை. ஏனெனில் கதைக்குச் சிந்திக்கின்ற மனம் சமூக நிர்ப்பந்தங்களையும், யதார்த்தங்களையும் நினைவில் வைத்துக் கொண்டே சிந்தித்தாக வேண்டும். ஆனால் கவிதை என்பது நமது அந்தரங்கப் பரவச நிலையின் மொழி மாற்றம். ஒவ்வொரு கவிதையும் நமது ஆனந்தத் துளிகளில் ஒரு சொட்டு. எனவே தரம் பிரிப்பது என்பது நம்மாலேயே முடியாத காரியம். எனினும் கொஞ்சம் டேஸ்ட் செய்து பார்க்க..!)

இவனை இவளால்..!

ஒரு மழை நாளின் இரவில்.

உன் முகம் தொட்டு...!

எழுதிப் பார்க்க என் காதல்...!

காதல் போல் ஒரு மழைத்துளி..!

யமுனே நின்னுட நெஞ்சில்...

மதுரச் சிற்பம்.

யமுனை நதிக்கரையிலே...

கிருஷ்ணா - இராதை.

பூ - காதல் - பேரருவி. (A)

பெய்யத் தொடங்கட்டும் பெருமழை...!(A)

சென்னை - நல்லா இரு கண்ணு!

ல்லது... இனி அடுத்த பதிவுகளில் பார்ப்போமா..?

நன்றிகள்..!

14 comments:

  1. வருக வருக வசந்தமே வருக
    நல்வாழ்த்துகள்
    நல்ல தொடக்கம்

    ReplyDelete
  2. எப்பொழுதுமே
    தங்களின் எழுத்துக்களில்
    தமிழை துள்ளி விளையாடுவதை
    சுவைக்கும் சுவைஞன் நான்
    என்பதில் பெருமிதம் கொள்கிறேன்


    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. வருக வருக என்னைப்போன்ற எழுதுவதிலும் வலைப்பூவிலும் புதியவர்களுக்கு நிறைய சொல்லுங்கள்.

    \\தெருவில் காற்றில் பறக்க குப்பை கொட்டுதல், எச்சில் உமிழ்தல்\\

    மிக முக்கியமான ஒன்று. இந்த தவருகளை நாம் நமது இந்திய மண்ணில் மட்டுமே செய்கிறோம்.

    நாமே வெளிநாடுகளுக்கு செல்ல நேரிட்டால், அந்த நாட்டின் சட்டத்திற்கு பயந்தாவாது இவ்வாறு செய்வதில்லை.

    இதனை நமது வீட்டிலும் நாட்டிலும் செய்து பழகுவோம்

    \\பாதி உணவோடு எழுந்திருத்தல்\\

    இது அதைவிட முக்கியமான ஒன்று.
    முன்னதை நாம் நம் நாட்டில்தான் அதிகம் செய்கிறோம்.
    பின்னதை நாம் வெளிநாடுகளிலேயே அதிகம் காண நேரிடுகிறது.

    இந்த நிலை மாறினால் ஏழைகளுக்கும் உணவு சென்று சேர ஒரு வழி வகுக்கும்.

    முதலில் நான் செய்ய துவங்குகிறேன்.

    ReplyDelete
  4. தெருவில் காற்றில் பறக்க குப்பை கொட்டுதல், எச்சில் உமிழ்தல், பாதி உணவோடு எழுந்திருத்தல்... எத்தனை செய்கிறோம்..? முதலில் இந்தச் சின்ன ஒழுங்கீனங்களைத் தவிர்க்க முயல்வோமே..!//

    நல்ல சிந்தனை. அனைவரும் கண்டிப்பாய் செய்யவேண்டியவை.

    நடு ரோட்டை டாய்லட் ஆக்குவதும் நம் திருநாட்டில் தான்

    ReplyDelete
  5. வணக்கம் வாத்யாரே....

    ReplyDelete
  6. அன்பு துளசி கோபால் மேடம், சீனா ஐயா, திகழ்மிளிர், அதிரை ஜமால், புதுகைத்தென்றல், தமிழ்ப்பறவை, கபீஷ், பரிசல்காரர்...

    அனைவருக்கும் நன்றிகள்...!

    ReplyDelete
  7. //தமிழ் வலைத்தளங்களில் பிரபலமாக கருதப்படும் வலைப்பதிவுகளில் எதிலும் பின்னூட்டங்களில் கை வைக்காத ஒருவன்.

    நீங்கள் என் பதிவில் இட்ட ஒரு பின்னூட்டம் என் நினைவில் இன்னும் இருக்கிறது. நன்றி.

    வாழ்த்துக்கள்!
    :)

    ReplyDelete
  8. அன்பு கார்த்திக்...

    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

    அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் செய்தீர்களா..? அந்த இடங்களுக்கெலாம் போனீர்களா..?

    (பாக்கற மத்தவங்க எல்லாம் தலையப் பிச்சுக்கப் போறாங்க...!) :)

    ReplyDelete
  9. சிலவற்றுக்கு போக முடிந்தது. இன்னும் நிறைய இருக்கு. கண்டிப்பாக போவேன்.

    //பாக்கற மத்தவங்க எல்லாம் தலையப் பிச்சுக்கப் போறாங்க

    :)

    ReplyDelete
  10. நல்ல எழுத்தனுபவம் உடைய உங்கள் பதிவுகளை வாசிக்க தவறி இருக்கிறேன் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது

    ReplyDelete
  11. அன்பு கோவி.கண்ணன்...

    நன்றிகள். தங்களைப் போல் சமூக நிகழ்வுகளில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்து வைக்காததில் எனக்கும் பெரும் வருத்தம் உண்டு.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது