இலக்கியமும், TD இரண்டாம் விதியும்..!
இலக்கியம் என்றால் என்ன என்பதை, குருடன் யானையைத் தடவியது போல் சொல்வதற்கு முன் Thermo Dynamics இரண்டாம் விதியைக் கொஞ்சம் பார்க்கலாம்.
விக்கியில் சென்று தெளிவான விளக்கம் பார்த்தால் கொஞ்சம் சூடு ஏறி விடும் என்பதால், சுருக்கமாக ஒழுங்கான நிலையில் இருந்து ஒழுங்கற்ற நிலைக்கு காலத்தின் திசையில் ஒரு அமைப்பு நகர்ந்து கொண்டே இருக்கும். மேஜையின் மேலிருந்து கீழே விழும் கண்ணாடி டம்ளர் சுக்கல் சுக்கலாகச் சிதறி விடும். ஆனால் சுக்கலான துகள்கள் இணைந்து ஒரு ஒழுங்கான (ஒழுங்கான என்றால், எதிர்பார்க்கப்படும் தன்மை. அதாவது இந்தப் பகுதி இங்கு தான் இருக்க முடியும் என்று சொல்ல முடிவது.) நிலைக்கு வருவது , காலம் முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது சாத்தியம் இல்லாத ஒன்று.
கால அம்பு திசை மாறும் போது சாத்தியம் ஆகலாம்.
இரண்டு வெவ்வேறு நிறத் திரவங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஜாடியில் அவை கலக்கத் துவங்கும் போது, இரண்டின் மூலக்கூறுகளும் இருக்கும் பற்பல சாத்தியக் கூறுகளில் கலக்கும். அவற்றுள் ஒரு சாத்தியமான, மீண்டும் இரு திரவங்களும் தனித்தனியாகப் பிரிந்து நிற்பது மிக அதிக காலங்கள் எடுத்துக் கொள்ளும்.
இன்னும் சுருக்கமாக, எப்போதும் முந்திய தலைமுறைத் தாத்தாக்கள் சொல்லும்,"ஹூம்..! அந்தக் காலம் போல வருமா...? காலம் ரொம்பக் கெட்டுப் போச்சு..!" என்ற பெருமூச்சுக்கள், தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதியைக் கொஞ்சம் ஒட்டி வருகின்றது.
நாம் ஒரு படைப்பைப் படித்து விட்டு, நமது எதிர்காலத்திற்குத் தான் நகர முடியும். இறந்த காலத்திற்குச் செல்ல முடியாது. கடந்த காலத்தின் கசப்புகள் மறைந்து, மிஞ்சி நிற்பது இனிப்புகளாக இருக்கும் போது, எந்த படைப்புகள் நம்மை நிகழ்காலக் குண்டு வெடிப்புகளையும், பவர் கட்களையும் மறக்க வைத்து, கொஞ்சம் சுகமாக நினைவலைகளில் நீந்தச் செய்கிறதோ, அவை என்னைப் பொறுத்த வரை, இலக்கியங்கள்..!
அவை ஓவியங்களாக, எழுத்துக்களாக, இசையாக, பாடல்களாக, திரைப்படமாக.. எதுவாகவும் இருக்கலாம்.
இவற்றுள் எழுத்துக்களுக்கு இருக்கும் சிறப்பு, முழுக்க முழுக்க நம் கற்பனையில் அவை வடிவம் பெறுவது தான்.
நமது கற்பனையில் வந்தியத் தேவன் பிரமிக்கும் வீர நாராயணபுர ஏரி, நாம் கண்ட கொடைக்கானல் ஏரியாக இருக்கலாம்; முள் க்ரீடம் சுமக்கும் அடைக்கலசாமி வாத்தியாரின் முகம், உங்களுக்குப் பாடம் எடுத்த தங்கவேல் சார் முகமாக இருக்கலாம்; நாலுகெட்டுக்குச் சொந்தக் காரனான அப்பு, நாயர் டீக்கடையில் டம்ளர் கழுவும் சிறுவனாக இருக்கலாம்; மாஞ்சுவின் தம்பி பாச்சா, உங்கள் தெருவில் இருந்து கிளம்பி, இப்போது எல்.ஏ.வில் இருக்கும் கோபாலாக இருக்கலாம்; இன்னும் ஜமுனாவும் பாபுவும், பரஞ்சோதியும், நந்தினியும், பரதேசியும், பாரதியின் கண்ணம்மாவும், பிரதாப முதலியாரும், கணேஷ் வசந்தும், கமலாம்பாளும், செளந்தர ராகவனும், சீதாவும், விஸ்வநாதனும் , தாரிணியும் நம் கண்களுக்கெதிரே காணும் முகங்களை மாட்டிக் கொண்டு தான் நம் மனவுலகில் வலம் வருகின்றனர்.
இலக்கியம் குறித்துப் பேசும் சில வலைத்தளங்களைப் பார்ப்போம். இதில் இருக்கும் சிக்கலானது, கொஞ்சம் இலக்கியம் பற்றியும், நல்ல புத்தகங்கள் பற்றியும் பேசி விட்டு, உடனே சாக்கை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு, தெரு விலக்குமாற்றில் ஏறி அமர்ந்து 'சர்'ரென்று மேலே பறக்கும் சூனியக்காரிகள் போல் தலைக்கு மேல் அமர்ந்து கன்னா பின்னா என்று பொழிகின்றார்கள்.
எனினும் 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' என்ற தாத்தாவின் குரலைக் கைக் கொண்டு நல்லன மற்றும் எடுத்துக் கொள்வோம்.
யாழிசை ::
மதுரையில் இருந்து லேகா எழுதுகிறார். 'இயந்திர வாழ்கை நம்மை அல்லும் பகலும் ஆட்டி படைக்க ஒரே விடிவு என நான் கருதியது தமிழ் இலக்கிய வாசிப்பு...இது ஓர் இனிய இலக்கிய அனுபவ பயணம்.வாழ்வின் தேடல் குறித்து உணர செய்ய வாசிப்பு என்பது ஒரு சுகானுபவம்..' என்ற கொள்கையோடு நல்ல புத்தகங்கள் பற்றி எழுதுகிறார்.
சில பதிவுகள் ::
நீல.பத்மநாபனின் "பள்ளிகொண்டபுரம்"
வண்ணதாசனின் "நடுகை" - சிறுகதை தொகுப்பு
தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு "சிலிர்ப்பு"
அசோகமித்ரனின் தேர்ந்தெடுத்த தமிழ் சிறுகதைகள் தொகுப்பு
தகழியின் செம்மீன் காலம் கடந்து நிற்கும் காவியம்
கோபி கிருஷ்ணனின் 'உள்ளே இருந்து சில குரல்கள்'
வடிகால் ::
சென்னையிலிருந்து சிம்ம ராசிக்காரரான, பதிப்பித்தல் துறையில், பணிபுரியும் கிருத்திகா எழுதுகிறார். அவ்வப்போது கொஞ்சம் இறங்கி வந்து எழுதினாலும், இவரது இலக்கியம் குறித்த பதிவுகள் தரம்.
மௌனியின் கதை உலகம் - ஒரு பகிர்வு
சாய்வு நாற்காலி - தோப்பில் முஹம்மது மீரான் - வாசிப்பானுபவம்
எஸ். ராமகிருஷ்ணனின் - யாமம்.- உயிர்மை வெளியீடு - ஒரு பார்வை
கைகளில் சுவாசித்த புத்தகம் – குள்ளச்சித்தன் சரித்திரம்
இலக்கியவாதியின் இலக்குகள் எதுவாயிருக்க முடியும்??
வரலாறு ::
வலைச்சர ஆசிரியன் பொறுப்பேற்கும் முன்பே ஒரே ஒரு முடிவெடுத்தேன். வலைப்பூக்களை மட்டும் சொல்லிச் செல்லாமல், எடுத்துக் கொள்ளும் துறைக்கேற்ற, நாம் படிக்கும் வலைப்பூ அற்ற தளங்களையும் சொல்லி விடுவது என்று..! சீனா ஐயா கோபித்துக் கொள்ள மாட்டார் என்ர நம்பிக்கையில், அந்த வரிசையில் முத்லாவதாக, வரலாறு.காம்!
கோயில்களிலும், கோட்டைகளிலும், பழம் நூல்களிலும் தமிழின், தமிழரின் கடந்த காலத்தைத் தேடுகின்ற ஒரு குழுமத்தின், மாத இதழ். மற்ற பகுதிகளை நீங்களே சென்று படித்துப் பாருங்கள்.
சில இலக்கியப் பகுதிகள் ::
நீங்கல் சரியோ நீயே சொல்!
சொற்கள்தான் எத்தனை பொய்யானவை!
சங்கச் சிந்தனைகள் (தொடர்)
நன்றிகள். மீண்டும் அடுத்த பதிவில் பார்ப்போமா..?
|
|
நண்பர் வசந்த்துக்கு...
ReplyDeleteஇரு இலக்கியப் பக்கங்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள். நிதானமாகச் சென்று படிக்க வேண்டியவை. படிக்கிறேன்.
தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதியை இன்னும் எளிமையாகச் சொல்லி இருக்கலாமோ...?
அன்பு தமிழ்ப்பறவை...
ReplyDeleteஎனக்குப் புரிந்த அளவில் சொல்லி இருக்கிறேன். இன்னும் தேவை எனில் அடுத்த பதிவு வரை வெய்ட் செய்க. சில பேரைச் சொல்கிறேன். அவர்களைக் கேட்டுப் பார்க்கலாம். :)
//நமது கற்பனையில் வந்தியத் தேவன் பிரமிக்கும் வீர நாராயணபுர ஏரி, நாம் கண்ட கொடைக்கானல் ஏரியாக இருக்கலாம்; முள் க்ரீடம் சுமக்கும் அடைக்கலசாமி வாத்தியாரின் முகம், உங்களுக்குப் பாடம் எடுத்த தங்கவேல் சார் முகமாக இருக்கலாம்; நாலுகெட்டுக்குச் சொந்தக் காரனான அப்பு, நாயர் டீக்கடையில் டம்ளர் கழுவும் சிறுவனாக இருக்கலாம்; மாஞ்சுவின் தம்பி பாச்சா, உங்கள் தெருவில் இருந்து கிளம்பி, இப்போது எல்.ஏ.வில் இருக்கும் கோபாலாக இருக்கலாம்; இன்னும் ஜமுனாவும் பாபுவும், பரஞ்சோதியும், நந்தினியும், பரதேசியும், பாரதியின் கண்ணம்மாவும், பிரதாப முதலியாரும், கணேஷ் வசந்தும், கமலாம்பாளும், செளந்தர ராகவனும், சீதாவும், விஸ்வநாதனும் , தாரிணியும் நம் கண்களுக்கெதிரே காணும் முகங்களை மாட்டிக் கொண்டு தான் நம் மனவுலகில் வலம் வருகின்றனர்.//
ReplyDeleteஹைய்யோ........... இது சூப்பர்!!!!
அன்பு துளசி கோபால் மேடம்...
ReplyDeleteமிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்திற்கு..!
//கடந்த காலத்தின் கசப்புகள் மறைந்து, மிஞ்சி நிற்பது இனிப்புகளாக இருக்கும் போது, எந்த படைப்புகள் நம்மை நிகழ்காலக் குண்டு வெடிப்புகளையும், பவர் கட்களையும் மறக்க வைத்து, கொஞ்சம் சுகமாக நினைவலைகளில் நீந்தச் செய்கிறதோ, அவை என்னைப் பொறுத்த வரை, இலக்கியங்கள்..!//
ReplyDeleteஇது ரொம்பப் பிடிச்சிருக்கு. தெர்மொடைனமிக்ஸ் படிக்கல, ஸாரி என்னமோ எனக்கு அறிவியல்னாலே அலர்ஜி. ரொம்ப அழகா எழுதறீங்க.
அன்பு கபீஷ்...
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
அறிவியலை நமக்குப் பிடிக்கும் படி சொல்லித் தருவது கொஞ்சம் கடினமே. ஐன்ஸ்டீன் சொல்கிறார்,'Everything should be made as simple as possible, but not simpler'. எனவே ரொம்ப எளிமைப்படுத்தி விட முடியாது. எனினும் முயன்றால் வெற்றி நிச்சயமே..!