Tuesday, December 31, 2013

ஆடம்பரம் தேவையா? இசை கசக்குமா? விடை உங்களிடத்தில்!!!

ஹாய் நண்பர்களே,

அனைத்து நண்பர்களுக்கும் வலைச்சரத்தின் சார்பாக "இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்".

இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போமா....

கணக்காயன் என்ற வலைப்பூவில் 2013-இல் மிக சில பதிவுகளே எழுதியிருந்தாலும் வாசிக்க சிறப்பான கவிதைகள் உள்ளது. அவற்றில் புலவர் பாடும் பொன்மனச் செம்மல் என்ற கவிதையில் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களின் பெயர்களைக் கொண்டு கவிதை புனையப்பட்டுள்ளது. நீங்களும் வாசித்துப் பாருங்களேன். 

நான் வாழும் உலகம் என்னும் வலைப்பூ பல்சுவை பதிவுகளால் நிரம்பியுள்ளது. அவற்றில் மிக சமீபத்தில் நான் வாசித்த பதிவு வீண் செலவுகளும் ஆடம்பரமும் என்ற பதிவு. இதில் அலுவலக வீண் செலவுகள் பற்றியும், வெளிநாட்டில் நம்மவர்கள் செய்யும் ஆடம்பரங்கள் பற்றி சுவையாக பதிவிட்டு உள்ளார். நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.

அன்புடன் ஆனந்தி எனும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் இத்தளம் நான் எழுத வந்த புதிதில் நான் விரும்பி வாசிக்கும் தளம். இத்தளத்தில் எதுவென்றேன் எனும் கவிதை பதிவில் காதலும், காதல் உணர்வுகள் பற்றியும் அருமையாக எழுதியுள்ளார் இப்பதிவர். இன்னும் பல கவிதை தொகுப்புகளும், சில சமையல் குறிப்புகளும் வலைப்பூவில் உள்ளது.

பிரியசகி என்னும் வலைப்பூவில் 2013-இல் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும், குளிர்காலத்து நண்பன் எனும் பதிவில் அவர் வாழ்கின்ற குளிர்கால வசிப்பிடம் பற்றியும், குளிர் காலத்தில் என்னென்ன முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பார்கள் என்பது பற்றியும் இப்பதிவில் அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள்.

அன்பே ஆண்டவன் எனும் வலைப்பூவில் ஆன்மீக சிந்தனை பதிவுகள் அதிகம் எழுதப்பட்டு உள்ளது. அதில் செவிச் செல்வம் உனது புகழ் எனும் பதிவில் இறைவன் அருளைப் பெற என்னவெல்லாம வேண்டப்படுகின்றன என்பதை அழகாக பதிவிட்டுள்ளார். இன்னும் பல இறைவன் பற்றிய பதிவுகள் நிறைய உள்ளது. நேரம் கிடைக்கையில் வாசியுங்கள்.

என்னில் உணர்ந்தவை என்னும் வலைப்பூ கவிதைகளையும், அனுபவங்களையும், சில மொக்கைகைகளையும் தாங்கி எழுதப்படும் வலைப்பூ. இதில் அவரது அம்மா கொடுத்த மாமரம் முதல் மாம்பழத்தை கொடுத்துள்ளது. அந்த மாமரத்தை அவரது அம்மாவாக நினைத்து இது என் அம்மா எனும் தலைப்பில் பதிவாக எழுதியுள்ளார். உணர்சிக்கரமான பதிவு இது.

பழைய பேப்பர் என்னும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கப்பட்டு பல்சுவை கட்டுரைகள் எழுதப்பட்டு வருகிறது. இதில் சமீபத்தில் புதிய பாரதத்தின் ஆரம்பம் என்ற பதிவில் சமீப அரசியல் நிலை மாற்றங்கள் பற்றி ஆர்வத்துடன் எழுதியுள்ளார். இது இந்த வலைப்பூவின் 25-வது பதிவாகும். இவரைப் போன்ற புதியவர்களை ஊக்குவிப்போம் நண்பர்களே.

மனதின் ஓசை எனும் வலைப்பூ 2013-இல் ஆரம்பிக்கபட்டு ஒவ்வொரு மாதமும் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு இருந்தாலும், இசையும் கசக்குதே என்ற பதிவில் பெண்ணின் கவலை இசையை ரசிக்க மறுக்கிறது என்பது பற்றி அழகாக எடுத்து எழுதியுள்ளார். இப்பதிவில் சிறு கதை ஒன்றையும் பகிர்ந்துள்ளார். நல்ல பதிவு இது.

நண்பர்களே, இன்றைய அறிமுகங்கள் உங்களுக்கு பிடித்திருக்கும் என்றே நினைக்கின்றேன்.  நாளை மற்றுமொரு பல்சுவை அறிமுகங்கள் வாயிலாக உங்களை சந்திக்கின்றேன்.

பாடல்களுக்குள் என்ன ஒற்றுமை?

ஹாய் வணக்கம்...

இன்று அறிமுகமாய் சிலரின் பதிவுகளை பார்ப்போமா...

வெண்புரவி என்ற வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதியிருந்தாலும் சிறந்த பதிவுகள் உள்ளது. எங்கள் வீட்டில் ஆனந்த பிரவேசம் என அவர்கள் வீட்டுக்கு அருகில் சிட்டுக்குருவி குஞ்சுகள் பிறந்த கூடு பற்றி எழுதியுள்ளார்.

கலையன்பன் என்ற வலைப்பூவில் பாடல் பற்றிய தொடர்புகள் மற்றும் ஒற்றுமை பற்றி பதிவுகள் உள்ளது. மிகச் சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டிருந்தாலும் பாடல்கள் ஒற்றுமை பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிவிகை என்ற வலைப்பூவில் பதிவரின் அனுபவங்களே பதிவாக உள்ளது. மிக சில பதிவுகளே இந்த வலைப்பூவில் எழுதப்பட்டு உள்ளது. முக்கியமாக சாலை விதிகள் பற்றிய பதிவு இயல்பாக எழுதப்பட்டு உள்ளது.

இணையக்குயில் என்னும் வலைப்பூவில் கவிதைகளே பெரும்பாலும் பதியப்பட்டு உள்ளது. அவற்றில் நான் நானாகவே என்ற கவி பதிவில் நமது எண்ணங்களில் பிறர் திணிக்க கூடாது என்பதை அழகாக பதிந்துள்ளார் பதிவர்.

தென்காசித் தமிழ்ப்பைங்கிளி எனும் வலைப்பூவில் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அவற்றுள் அப்பா எனும் கவிதையில் மகள் அப்பாவின் செயல்களை வியந்தும், அறியாமல் செய்த குரும்புக்களுமாய் வரிகள் படைக்கப்பட்டுள்ளது

நதியில் விழுந்த இலை என்னும் வலைப்பூவில் கவிதை, கட்டுரை பதிவுகளாக எழுதப்பட்டு உள்ளது. அவற்றில் உருவாகும் அடிமைத் தலைமுறை எனும் கவிதை இக்கால தொழில் முறையை பட்டென தெறிக்கும் வரிகளில் சொல்லப்பட்டு உள்ளது. 

ரவி உதயன் என்னும் வலைப்பூவில் பெரும்பாலும் கவிதைகள் பதிவாக வலம் வருகிறது. இந்த வலைப்பூவிலும் இந்த வருடம் மிகச் சில பதிவுகளே எழுதப்பட்டு உள்ளது. அதில் எனக்கான பேருந்துகள் எனும் கவிதையில் காதல் பார்வையால் தவற விட்ட பேருந்து பற்றி அழகாக எடுத்துச் சொல்லப்பட்டு உள்ளது.

படலை எனும் வலைப்பூவில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் பல சுவையான பதிவுகள் எழுதப்பட்டு உள்ளது, அதில் சமீபத்தில் மண்டேலா எனும் நெல்சன் மண்டேலா பற்றிய தொகுப்பு அருமையாக எழுதப்பட்டு உள்ளது.

நாளை இன்னும் சில பதிவுகளை தொகுப்பாக பார்க்கலாம்.

Monday, December 30, 2013

என்னை அறிந்தால்... நீங்கள் என்னை அறிந்தால்....!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே,

     சென்ற வார வலைச்சர ஆசிரியராக இருந்த கோமதி அரசு அவர்களுக்கு வாழ்த்தை சொல்லி எனது வலைச்சர வாரத்தை ஆரம்பிக்கிறேன். நான் வலைச்சர ஆசிரியராக இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தேன். அதன்பிறகு சீனா ஐயாவிற்கு உதவியாக துணை பொறுப்பாசிரியராக வலைச்சரத்திற்கு பொறுப்பேற்று உள்ளேன். மற்ற பதிவர்கள் ஆசிரியராக வலைச்சரத்தில் எழுதுவதை வாசிக்கும் போது எனக்கும் சில சமயங்களில் வலைச்சர ஆசிரியராக ஒரு வாரத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஆசை வரும். ஆனால் பதிவர்கள் ஒவ்வொரு வாரமும் தவறாமல் தங்கள் வலைச்சர பணியை செம்மையாக நிறைவேற்றுவார்கள். இன்று முதல் ஆரம்பிக்கிற வாரத்திற்கு பொறுப்பேற்க இருந்த பதிவர் தவிர்க்க இயலாத காரணத்தால் பொறுப்பேற்க இயலாத காரணத்தால், நானே ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டேன். நிற்க.....

இயற்பெயர் பிரகாஷ் குமார். வலைப்பூ பெயர் தமிழ்வாசி. எனவே பதிவுலகிற்கு தமிழ்வாசி பிரகாஷ் என்ற பெயரை மாற்றிக் கொண்டேன். வாழ்வாதாரத்திற்காக மதுரை வந்த நான், எனது வலையில் மதுரை பற்றிய பல பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுள் முக்கியமாக மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் , பிளக்ஸ் பேனர் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது , டூவீலர் ஸ்டாண்டு அவலம் , மதுரையின் பசுமை பூங்கா  போன்ற சில பதிவுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

புதிய பதிவர்களுக்கும், வலைப்பூ ஆரம்பிக்க ஆசை இருப்பவர்களுக்கும் உதவியாக வலைப்பூ வழிகாட்டுதல் தொடர் எழுதியுள்ளேன். இத்தொடர் உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பல்சுவை செய்திகளை இரண்டு பேர் உரையாடும் வகையில் தனபாலு... கோபாலு... என்ற தலைப்பிலும், சின்ன பாப்பா... பெரிய பாப்பா என்ற தலைப்பிலும், லென்ஸ் ரவுண்டு என்ற தலைப்பிலும் பதிவிட்டுள்ளேன்.

சமூக சிந்தனை பதிவுகளாக கஞ்சா, சிகரெட், மது பற்றிய கேடுகளும், முகநூல் மற்றும் வலைப்பூவில் தமிழில் எழுத எளிதான மென்பொருள் பற்றியும், தொழில்நுட்ப பதிவுகளும் எழுதியுள்ளேன். தொழிநுட்ப பதிவுகள் பற்றி அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

           சரி நண்பர்களே, என்னைப் பற்றியும் எனது வலைதளம் பற்றியும் சில வரிகள் குறிப்பிட்டுள்ளேன். இனி நாளை முதல் பல தலைப்புகளில் பதிவுகளை பார்ப்போமா!!!!!!!!!

Sunday, December 29, 2013

தமிழ்வாசி பிரகாஷ் கோமதி அரசிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - கோமதி அரசு   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 67
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 72
பெற்ற மறுமொழிகள்                            :348
வருகை தந்தவர்கள்                              : 1001

 கோமதி அரசு பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். 

நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார். 
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அவரது 7 பதிவுகளீல் இரு பதிவுகள் தமிழ் மணத்தில் எட்டு வாக்குகள் பெற்றிருக்கின்றன். 
கோமதி அரசினை  அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

சில எதிர்பாராத செயல்களினால் - இணக்கம் தெரிவித்திருந்த பதிவர் நாளை முதல் பொறுப்பேற்க இயல வில்லை. அதனால் நமது வலைச்சரக் குழுவின் உறுப்பினரான தமிழ் வாசி பிரகாஷ் நாளை முதல் ஆசிரியப் பொறுப்பேற்க  அன்புடன் இசைந்துள்ளார். 
தமிழ்வாசி பிரகாஷினைப் பற்றி இங்கு அறிமுகம் தேவை இல்லை. இருப்பினும் நாளை அவர்து முதல் பதிவில் சுய அறிமுகம் செய்து கொள்வார். அவரைப் பற்றி அறியாதவர்கள் நாளை காலை வரை பொறுத்துக் கொள்ளவும்.  
தமிழ்வாசி பிரகாஷினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கோமதி அரசு
நல்வாழ்த்துகள் தமிழ்வாசி பிரகாஷ் 

நட்புடன் சீனா 

நினைவோ ஒரு பறவை அது விரிக்கும் தன் சிறகை !

இன்றைய வலைச்சரத்தில் நினைவுகளின் தொகுப்பைத் தொகுத்து இருக்கிறேன்.  எல்லோர்க்கும் நினைவுகளில்  மூழ்குவது என்றால் பிடித்த மான விஷயம் தானே. பெரியவர்கள், ’அந்தக்காலத்திலே’ என்று ஆரம்பித்தால் ஓடும் குழந்தைகளும் உண்டு. ’சொல்லுங்கள். உங்கள் மலரும் நினைவுகளை’ என்று கேட்டு மகிழ்ந்து ஆரவாரம் செய்யும் குழந்தைகளும் உண்டு.  அது போல் நீங்களும் இந்த மலரும் நினைவுகள் பதிவை ரசித்துப் படிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

சிறு வயது  பள்ளிப் பருவ நினைவுகள்!

கிராமத்து நினைவுகள்!

காதலர் இருவர் சந்தித்த நாளை சிந்திக்கும் நினைவுகள்!

எட்டுஅடி எடுத்து வைக்க முடியவில்லை. இங்கே இருக்கும் இடத்திற்கு போக, ’வண்டி வேண்டும்’, என்று கேட்கும் குழந்தைகள்! நடப்பதையே மறந்து விடுவார்களோ என்ற நிலை இப்போது .அப்போது எல்லாம் எப்படி நடப்பார்கள் எல்லோரும் ! என்று பழையகாலத்தை எண்ணும் நினைவுகள்!

 அந்த காலத்து சம்மர் கேப்  கற்றுக் கொடுத்த பாடங்கள் பற்றிய நினைவுகள்!

அந்தக் காலத்து குழந்தைப் பாடல்கள் தந்த மகிழ்ச்சியான நினைவுகள்!

பேனா, பென்சிலில் வரைந்த கடந்தகால நினைவுகள்!

பேருந்துப் பயண  நினைவுகள் !

என்று இங்கு வழங்கி இருக்கும் நினைவுகள் எல்லாம்  என் மலரும் நினைவுகளை  சிந்திக்க வைக்கிறது.

பதினைந்து வயதினிலே

’தவறு செய்து திருந்திய பையனை ஹீரோவாகக் கொண்டாடி, பரிசு கொடுத்து, தன் செல்லப் பிள்ளை போல அருகில் நிறுத்திக்கொண்டு, பிரேயரில் அத்தனை பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்திய நீங்கள், தவறே செய்யாமல் ஒழுங்காக இருக்கும் என்னை ஏன் இப்படி கௌரவிக்கவில்லை?’ இப்படி கேட்ட தன் பள்ளிப் பருவத்து மலரும் நினைவுகளைக்கூறுகிறார்,  ’உங்கள் ரசிகன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ரவி பிரகாஷ் அவர்கள்.


கிராமத்து நினைவுகள் - நீர் பாய்ச்சுதல்

//இந்தப் பாடலை எங்க ஐயா (அப்பாவின் அப்பா) பாடினார் என்றால் ரொம்ப தூரத்துக்கு கேட்கும். அவ்வளவு அழகாக பாடுவார். பள்ளியில் படிக்கும் போது இரவு நேரத்தில் டியூசன் விட்டு இருட்டில் வரும்போதே பாட்டை வைத்து யார் தண்ணீர் இறைக்கிறார்கள் என்று சொல்லிவிடுவோம். பெரும்பாலும் எங்க ஐயா இறைத்தால் சுலபமாக கண்டுபிடித்துவிடலாம்.அந்தக்குரலை வைத்தே நடுவுலார் காஞ்சரமடையில தண்ணீர் இறைக்கிறார் போல பாட்டுச் சத்தம் கேக்குது எனச் சொல்லிவிடுவார்கள்  ////
 இப்படி தன் கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் இறைக்கும் போது பாடும் பாடல்களை நினைவுகூர்கிறார்  ’மனசு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் குமார் அவர்கள்.

மலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999
//அந்த நாள் நினைவுகள் சுகமாக இருக்கின்றது இப்பவும். வாழ்க்கையினை வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜன் இந்த நினைவுகள் தான். சுவாசமாய் நிறைந்திருக்கிறது என்றென்றும்...
எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்த இறைவனுக்கு நன்றி....// .

இப்படித் தன் மலரும் நினைவுகளைச் சொல்வது ,’ கோவை நேரம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  ஜீவானந்தம் அவர்கள்.

எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!

//ஆரோக்கியத்திற்கான பயிற்சி முறைகளிலேயே உலகம் பூராவும் எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான். இதனைத் தவறென்று எந்த மருத்துவ முறைகளும் சொல்லவில்லை. சொல்லமுடியாது. தினசரி நடைபயிலுங்கள் என்றுதான் எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள். எல்லா மருத்துவத்துறைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பயிற்சி நடைப்பயிற்சிதான்.     எல்லா டாக்டர்களும் எல்லா மருத்துவர்களும்(சித்த ஆயுர்வேத யுனானி ஹோமியோ ரெய்கி அக்குபிரஷர் இன்னோரன்ன) சொல்கிறார்கள். மக்களுக்கும் தாமாகவே ஒரு விழிப்புணர்வும் வந்திருக்கிறது. //

இப்படி சொல்வது ’அமுதவன் பக்கங்கள்’ என்று வைத்து இருக்கும் அமுதவன் அவர்கள்.


சம்மர் கேம்ப்

//சம்மர் கேம்ப் என்றதும் நான் எதோ சம்மர் கேம்ப்
ஆரம்பிக்கிறேன் , அதைப் பற்றி எழுதுகிறேன் என்றோ  இல்லை எங்கோ கேம்ப் அடிக்கப் போகிறேன்  என்றோ யாரும்  அவசரப்பட்டு   யோசிக்க வேண்டாம். நான் சொல்வது   என் சிறு வயது நினைவுகளை.

நான்  சம்மர் கேம்பிற்கு சென்று கற்றுக் கொண்டு அனுபவித்து  ஆனந்தித்தது பற்றி தான் இந்தப் பதிவு. // இப்படி மலரும் நினைவுகளை சொல்கிறார் அரட்டை என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜலக்ஷ்மி பரமசிவம்.

குழந்தைகளுக்கான தமிழ் பாடல்கள் - 2

ஒன்று, யாவருக்கும் தலை ஒன்று
இரண்டு, உடம்பில் கை இரண்டு
மூன்று, முக்காலிக்கு காலி மூன்று
நான்கு, நாற்காலிக்குக் கால் நான்கு
இப்படி பழைய பாடல்களை நாம் பாடிய பாடல்களை நினைவுக்கு தருகிறார்
பூந்தளிர் என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தியானா அவர்கள்.


குரு தட்சிணை - அன்றும் இன்றும்

//இன்று குரு தட்சிணை மதிக்கப்படுகிறதா? குருவின் மேல் மரியாதையாவது இருக்கிறதா? குருவும் மாணவர் மேல் அக்கறை கொண்டு கற்றுக் கொடுக்கிறாரா? என்று பல கேள்விகள் அடுக்காய் எழுகின்றன. மனிதருக்கு மனிதர், இடத்திற்கு இடம் இவை எல்லாம் வேறுபடுகின்றன.//
இப்படிச் சொல்கிறார், ’ தேன் மதுரத் தமிழ்’ கிரேஸ் அவர்கள்.

வீடும், பூவும்

//முன்பு பேனா கொண்டு பேப்பரில் ஓவியங்கள் வரைந்த நான் இப்போது கணினியில் வரைய ஆரம்பித்து விட்டேன்.அப்படி வரைந்த ஓவியம் ஒன்று உங்களுடைய பார்வைக்கு..//

 இப்படிச் சொல்பவர், ’வெளிச்சக்கீற்றுகள்’ வலைத்தளம் வைத்து இருக்கும் ரோஷிணி.  பிரபல பதிவர்கள் ஆதி வெங்கட், வெங்கட் நாகராஜ் அவர்களின் அருமை மகள்.

கிராமத்து பேருந்து -- சில நினைவுகள்

//12 வயது வரை தனியாக பேருந்தில் பயணம் செய்ததில்லை நான். முதல்முறையாக தனியாக பேருந்தில் பயணம் செய்த போது ஏதோ மிகப் பெரிய சாதனை செய்ததைப் போன்ற ஒரு ஆனந்தம். இத்தனைக்கும் மிகப் பெரும் தொலைவெல்லாம் இல்லை. வெறும் 10கிமீ மட்டுமே. ஆனால் அந்த 10கிமீ தூர பயணத்தைப் பற்றி நாள் முழுக்க நண்பர்களிடம் பேச விஷயங்கள் இருந்தன.//

இப்படிச் சொல்வது, ’என் எண்ணங்களின் வழித்தடம்’  என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் அன்பு அவர்கள்.

இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பும் , உங்களுடன் கழித்த இந்த நாட்களும் நினைவுகளாய் என்னிடம் தங்கி மணம் பரப்பிக் கொண்டு இருக்கும்
பசுமை நிறைந்த நினைவுகள் என்றும் அழிவது இல்லை!

                                                               *      *       *
 இந்த ஒரு வாரகாலமாய் வந்து ஆதரவு தெரிவித்த அன்பு  உள்ளங்களுக்கு நன்றி.

எனக்கு மீண்டும்  வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அன்புடன் அழைத்த சீனா சாருக்கு நன்றி.

 உங்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். வரும் ஆண்டு அனைவருக்கும் நல் ஆண்டாய் மலர இறைவன் அருள்வான். உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினர்  எல்லோருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

                                              

வாழ்வை இனிதாக்குவது அன்பு. கஷ்டங்களையெல்லாம் மீளச்செய்வது அன்பு. குடும்ப வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது அன்பு. உலக வாழ்க்கையைச் சுவைக்கச் செய்வது அன்பு. அழகற்றதற்கு அழகூட்டுவது அன்பு. அன்பு பொலியுமிடம் சுவர்க்கம், அன்பு மறைந்தவிடம் நரகம். மனமே நீ அன்பில் ஊறி வளர்க. -ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்.  
                                                   வாழ்க வளமுடன்!

                                                          -------------------

Saturday, December 28, 2013

கவிதை கேளுங்கள்

கவிதை எழுதத் தெரியாது எனக்கு. ஆனால் கவிதையைப் படிக்கப் பிடிக்கும்.
இந்தப்பதிவில் பகிர்ந்து உள்ள கவிதைகள்  தாயிடம் அன்பு, தந்தையிடம் உள்ள அன்பு, பேரனிடம் உள்ள அன்பு, தாய் மகளிடம் உள்ள அன்பு பற்றிய கவிதைகள்;  காதல்,நட்பு  பற்றிய கவிதைகள்;இயற்கையை (பஞ்சபூதங்களையும்)போற்றும்  கவிதை;  சிறு வயதில் குழந்தைக்கு  சிறு வயதில் விளையாடப் பொம்மை கொடுக்காமல் பின்னால் வருந்தும் அம்மா பற்றிய கவிதை; ஆங்கிலப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கூறும் கவிதை; மனிதநேயம் காக்கச் சொல்லும் அருமையான கவிதை, பொங்கலோ பொங்கல் என்று உற்சாகக் குரல் கொடுக்கும் கவிதை.

  கவிதைகளை முழுமையாகப் படித்து மகிழுங்கள்.

1.  தாய்மை

 //ஆயிரம்கோடி எழுத்துக்கள் இருந்தும்
   வர்ணிக்க முடியாத வார்த்தைகளால்
   வேயப்பட்ட ஓர் அன்புக்கூரை,
   அம்மா!//

வழங்கியவர் :வாணிகல்கி வனிதா
வலைத்தளம் :” ஒரு நாள் ஒரு கவிதை”.



2. தாய்மை

//பிள்ளைக்காக வாழுகின்ற
  புனிதமான தாய்மைக்கு
  தலை தாழ்ந்து வணங்கி
  திருவடிகள் போற்றி//

யூத்ஃ புல் விகடனில் வெளியான கவிதை.

 வழங்கியவர்: பிரபாகர்;
 வலைத்தளம் - "வாழ்க்கை வாழ்வதற்கே”


 3 தந்தை
//ஞாலம் நம்மை என்றும் போற்றிட
   பாலமாக இருப்பவர் தந்தையே.//

 வழங்கியவர் : கவிஞர். பால இளங்கோவன் .
 வலைத்தளம்: ”தமிழ் கூடல்"


4  முகவரி தந்த தந்தை
//எத் துயர் அடைந்தும்
  மகன் உலகில் சிறக்க
  நீர் கொண்ட வேடம்
  மட்டிலடங்கா வேசங்கள்//


வழங்கியவர்: ஹாசிம் .
வலைத்தளம் -"ஈகரை தமிழ் களஞ்சியம்"

5.தமிழில் குறும்பூ

//அப்பா ஒன்று.
 அம்மா ஒன்று.
  வெற்றி ஒன்று.
  பற்றுவோம் தொடர்ந்து.//
வழங்கியவர் :கோவை கவி.
வலைத்தளம்: "வேதாவின் வலை"
 //நிற்க நடக்க 
  சிறகு விரித்து பறக்க மட்டுமல்ல
  உன்னை பாதுகாத்துக் கொள்ளவும் 
  கற்றிட வேண்டும்கண்ணே!//
  வழங்கியவர் : ராமலக்ஷ்மி.
  வலைத்தளம்: முத்துச்சரம்.

 7.கர்வக் காதல்
 கள்ளத்தனமில்லாமல்
 கர்வமாயத்தான் இருக்கிறது
 காதல்...

வழங்கியவர்  தென்காசித் தமிழ்ப் பைங்கிளி வலைச்சரம் தென்காசித் தமிழ்ப் பைங்கிளி.

8. தானேயழிந்தாலும் தாங்கிடும் நட்பு !
//அன்பென்றே உயிர்வாழும் ஆருயிர் நட்பு

  ஆணிவேராய் தாங்குமெனில் அதுவே நட்பு

  இதயத்தை நம்பியே நாணயமான நட்பு

  ஈகையேயென்னாளும் அதுவுயிர் நட்பு ! //

  வழங்கியவர்: சசிகலா .
  வலைத்தளம்: ”தென்றல்”

9. இயற்கை தரும் இனிமை

//பொறுமைக்கு மண்ணாம் நல்ல
  பெருமைக்கும் பேற்றுக்கும்
  நற்கருணைக்கும் நல் அன்னையாம்//

இப்படிப் பஞ்சபூதங்களையும்  போற்றிப் பாடுபவர்: இளமதி .
வலைச்சரம் :இளையநிலா.

 10. காலங் கடந்த பின்பு
  //மழலையின் பிறந்த நாளுக்குப்
    பரிசாய்க் கிடைத்த பொம்மை
   அழுக்காகி விடுமென்று பயந்து
   குழவியிடமிருந்து பிடுங்கிக்
   காட்சிக்கு வைத்த அம்மாக்களில்
   நானும் ஒருத்தி.//

வழங்கியவர் :கலையரசி. வலைத்தளம் :” ஊஞ்சல்”.

(20/02/2012 உயிரோசை இணைய இதழில் எழுதியது)

11. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

//புத்தாண்டு என்றொரு நாளை எதிர்பார்த்து
  காத்திருக்கும் காலப் பெருந்தகைகளே!

  நல்லதை நினைப்போம் உதவிகள் செய்வோம்
  மானுடம் வாழ மனித நேயம் காப்போம்!//

வழங்கியவர் : சுஷ்ருவா.    வலைத்தளம் : சுஷ்ருவா

 12. பொங்குக பொங்கல்

//பொங்கிவரும் பாலில்
  புத்தரிசி, வெல்லமிட்டு
 "பொங்கலோ பொங்கல்" என
  மங்கலக் குரலெழுப்பி
  மகிழ்ச்சியில் ஆழ்ந்திடுவோம்!//

வழங்கியவர் : சேஷாத்திரி.  வலைத்தளம் :காரஞ்சன்(சேஷ்)  

                                                                  

                காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம், அப்பா!
                காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை
                பாட்டினிலே காதலைத்தான் பாட வேண்டிப் 
                பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே.
                                                                
                                                               ----மகாகவி பாரதியார்.

                                                      வாழ்க வளமுடன்.
                                                     ---------------------------------



Friday, December 27, 2013

அறுசுவை விருந்து

பெண்கள்  தங்கள் எண்ணங்களை வண்ணங்களாய் மாற்றி எல்லாத் துறைகளிலும் முன்னுக்கு வந்து பேரும் புகழும் வாங்கினாலும் இல்லத்து அரசியாய்   தன் குடும்பநலம் பேணுவதில் அவளுக்கு நிகர் அவளே!

வாசலில் அழகான கோலம் போடுவது, குடும்ப உறுப்பினர்களுக்குப் பிடித்த உணவை சமையல் செய்து தேவை அறிந்து கொடுப்பது,  அதையும் அழகாய் பரிமாறுவது எல்லாம் ஒரு கலை. அதைச் சிறப்பாய் புதிது புதிதாக செய்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் வீட்டை அலங்கரிக்க தங்கள் கையால்  கலைப்பொருட்களை செய்வதில் வல்லவர்கள்- இன்று பகிரப்பட்டு இருக்கும் வலைத்தளம் வைத்து இருப்பவர்கள் அவர்கள் வலைத்தளத்தில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

*  ’ராதாஸ் கிச்சன்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும்  ராதாராணி அவர்கள் , வீட்டு வைத்தியம், கோலங்கள், சமையல் குறிப்புகள் கைவேலைகள் எல்லாம் பகிர்கிறார் . அவர் குறிப்பில் ஒரு அல்வாவும், வீட்டு மருத்துவமும் :-

குக்கர் அல்வா
அல்வா செய்வதற்கு கோதுமையை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து  கஷ்டப்படாமல் எளிதாக செய்யும் முறையை சொல்கிறார். நெய்யும் நிறைய இல்லாமல்ஆரோக்கியமாய்  ஆலிவ் எண்ணெயில் செய்ய சொல்லித் தருகிறார்.

வீட்டு மருத்துவம்
வீட்டில் எப்போதும் சுக்கு ,மிளகு,இஞ்சி,தேன்,
ஓமம்,வெந்தயம் ,வாங்கி வைத்து கொண்டால் நாமே கை மருத்துவம்செய்து பார்க்கலாம்.தற்காலிக நிவாரணம் கிடைக்கும்.சில சமயங்களில் மருத்துவ செலவுக்கு அவசியமே இல்லாமல் காப்பாற்றும்.இதில் பின் விளைவுகள் எதுவும் இருக்காது என்கிறார்.

* ’அடுப்பங்கரை’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கமலா அவர்கள் கோலங்கள்,  உணவே மருந்து எனும் சமையல் குறிப்புகள் ஆகியவற்றை வைத்து இருக்கிறார்.  அவர் குறிப்பிலிருந்து உடலுக்கு நன்மை பயக்கும் இரண்டு குறிப்புகள்:-

நெல்லிக்காய்  அவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி என்று இலக்கியத்திலும், தெய்வீக மரம் என்று புராணங்களிலும் இடம் பெற்ற நெல்லிக்காயும் அதன் மரமும் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது.
என்று நெல்லிக்காயின் மருத்துவ குறிப்பைச் சொல்லி  நெல்லிக்காய் தொக்கு, நெல்லிக்காய் உடனடி ஊறுகாய் , நெல்லிக்காய் இனிப்பு ஊறுகாய்,
நெல்லிக்காய் தயிர்ப் பச்சடி குறிப்புகளைத் தருகிறார்.
இப்போது நெல்லிக்காய் சீஸன் வாங்கி செய்து மகிழுங்கள்.
சிவப்பு அவல் கொழுக்கட்டை எளிதான சத்து மிகுந்த குறிப்பு.


* ’காகிதப்பூக்கள்’ என்ற வலைச்சரம் வைத்து இருக்கும்  ஏஞ்சலின்  அவர்களும் கைவேலை , சமையல் குறிப்பு என்று பலதுறைகளில் வல்லவராக இருக்கிறார். அவர்  சமையல் குறிப்பு இரண்டு:-
 சத்தான பொட்டுக்கடலை உருண்டை.

   என்ற பதிவில் ஏஞ்சலின் தன்னை  சமையலில் முன்னேற்றிய  பிரபல சமையல்  ராணிகளின் குறிப்பையும் தருகிறார். ஆசியா, ஜலீலா, அடுப்பங்கரை கமலா,  எல்லோரும் அதில் இருக்கிறார்கள்.  இந்த பதிவில் நிறைய சமையல் குறிப்புகள் இருக்கிறது வித விதமாய். ஏஞ்சலின் அன்பு அம்மாவின் நினைவும் இருக்கிறது.


* கோதுமை ரவை தோசை- -சமையல் குறிப்பு
 //வெறும் பாம்பே ரவா தோசை சாப்பிட்டிருப்பீர்கள். நான் சொல்லப் போவது,
கோதுமை ரவா தோசை. ஐம்பது வகை தோசை, நூறு வகை தோசை லிஸ்டில் கூட நான் கண்டதில்லை உண்டதில்லை இது தன் மகளின் கண்டுபிடிப்பு //என்கிறார்,  ninewest  என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  நானானி அவர்கள். அருமையாக நகைச்சுவையாக சொல்கிறார் சமையல் குறிப்பை.

*
சில்லி இட்லி. எப்போது பார்த்தாலும் இட்லி மட்டுமே செய்து கொடுக்காமல் வித்தியாசமாய்   மஞ்சூரியன் டேஸ்டில் செய்து இருப்பதாய் சொல்கிறார்.
’இனிய இல்லம்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  பாயிஜா காதர் அவர்கள். இவரும் வீட்டுக் குறிப்புகள், கைவேலைப்பாடுகள் எல்லாம் செய்வதில் வல்லவர்.

*
கோவைக்காய்த் துவையல்  சமையலும் கைப் பழக்கம் என்று சொல்லும் பாசமலர் தருகிறார். இவரும் பன்முக வித்தகர்.  நாலு வலைத்தளங்கள் வைத்து இருக்கிறார். இலக்கியம் , கவிதை, மற்றும் ஆங்கிலத்தில் கவிதை, ஆங்கிலத்தில் சமையல் குறிப்புகள் என்று அசத்தும் பெண்மணி.


* எவ்வளவுதான் வித விதமான சமையல் சாப்பிட்டலும் வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும், அல்லது பொரித்த அப்பளமும் இருந்தால் போதும் என்று சில சமயம் தோன்றும் . அதற்கு ’மிராவின் கிச்சனில்’சுண்டைக்காய் வத்தல் குழம்பு இருக்கிறது அருமையாக.
சுண்டைக்காய் வத்தல் குழம்பு 



* பெண்கள் மட்டும் தானா சமையல் குறிப்புகள் தர முடியும் !
’பூவையின் எண்ணங்கள் ’ வலைத்தளம் வைத்து இருக்கும்  பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களும் தன் வீட்டில் தன் மனைவி செய்யும் .
மொளகூட்டல்  இஞ்சிப் புளி சமையல் குறிப்பைத் தருகிறார் அழகாய்.
மொளகூட்டல் இஞ்சிப் புளி காம்பினேஷன் சுவையாய் இருக்கும் என்கிறார்.
இவர் தஞ்சை ஓவியங்கள்  செய்வதில் வல்லவர். தன் இன்னொரு வலைத்தளத்தில் கதை, கவிதை , கட்டுரைகள் என்று வழங்குகிறார்.(gmb writes)



                                          என் கணவர் வரைந்த ஓவியம்
*
அடடா என்ன அழகு ! ................ ’அடை’யைத் தின்னு பழகு!!
 இப்படிச் சொல்லி  அடை செய்யும் முறையை விரிவாக அழகாய்ச் சொல்கிறார் , வை.கோபாலகிருஷ்ணன் சார். இந்த அடைமாவிலேயே இன்னொரு பலகாரம் செய்யவும் அவர் சொல்லித் தருகிறார். அதன் பெயர் ”குணுக்கு”!
.
(BACHELORS களுக்குப் பயன்படும் சமையல் குறிப்பு கேட்ட )’சமையல் அட்டகாசம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் ஜலீலா அவர்கள்  நடத்திய சமையல் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு வாங்கிய குறிப்பு  இந்த அடை. கதை, கட்டுரை, ஓவியம் என்று  வலைத்தளத்தில் வழங்கி வருபவர்.


* ’வாழி நலம் சூழ’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்  அஸ்வின் ஜி அவர்கள் தன் வலைப்பூவை இயற்கை நல வாழ்வியல் நெறிகளைத் திரட்டி தரும்  வலைப்பூ  என்கிறார்.  இந்தப் பதிவில் அருமையான வளமான வாழ்விற்கு ’உணவே மருந்து’ எனும் இந்த கட்டுரையைப் பகிர்ந்து இருக்கிறார்:-

வளமான வாழ்விற்கு உணவே மருந்து -

இயற்கை உணவும் ஆரோக்கியமும் என்ற பதிவில் நாம் அன்றாடம் உண்ணும் உணவின்போது கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய வழிமுறைகளை டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,   அவர்கள்                          ’வளமான வாழ்விற்கு உணவே மருந்து’ என்ற கட்டுரையில்  சொல்கிறார்.
இந்தப் பதிவில் உள்ளது போல் உணவு உண்பதைக் கடைபிடித்தால் வாழ்வில் நலமாக இருக்கலாம்.



உண்ணும் உணவு உனக்கு கிடைத்தவகை எண்ணி உண்ணிடல் உன்கடன்.
                                                    வாழ்க வளமுடன்!
                                                   ------------------------------


Thursday, December 26, 2013

புத்தகங்களும் திரைப்படங்களும்-ஒரு பார்வை

பலருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு  நூலகம் இருக்க வேண்டும் என்பார்கள்.
சிலருக்குப் புத்தகம் படிப்பது சுவாசிப்பது போன்றது..  பயணங்களின் போதும் படிப்பது சிலருக்குப் பழக்கம். கண் மருத்துவர்கள் பயணத்தின் போது படிக்கக் கூடாது என்றாலும், படிக்காமல் இருக்க முடியாது.  ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் மிக அவசியமானது நூலகம். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாய்ப் பெற்றோர்கள் கொண்டுவர வேண்டும். நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். நல்ல விமர்சனங்களை கேட்டுப் படிக்க தோன்றும்.


இப்போது எல்லோருக்கும் இணையம்  மிகவும் அவசியம் ஆகி விட்டது. எல்லாவற்றையும் இணையத்தில் தேடிப்படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும், நூல் வெளியீடுகளும், புத்தககண்காட்சிகள் நடந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.

தனக்கும்,தன் மகளுக்கும்  வாசிப்பில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாய்ச் சொல்கிறார் ,”சிறகுகள் நீண்டன” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தாரா அவர்கள்.  வாசிப்பும் வசதியும் என்ற பதிவில் தன் சிறுவயதில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததையும், இப்போது  தனக்கு ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களையும் சொல்கிறார்:-

//இப்போது மின் புத்தகங்கள், amazon, kindle, Apple, ipad போன்ற நவீன வாசிப்புவசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சுப் புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது. 

ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சுப் புத்தகத்தைப் படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது// என்கிறார்.

//சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார்.

அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.//

இப்படி இந்தப்  புத்தகத்தை ’மதுரை அழகு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மதுரை அழகு அவர்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அதைப் படித்தால் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றும்.


//நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது. என் அன்பிற்கினியவர்களே!.
ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த நாற்பத்தைந்து முக்கிய பாடங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.
இதன் தமிழாக்கமும்,கொஞ்சமே கொஞ்சம் மசாலாத் தூவலும் மட்டும் அடியேன் செய்தது. யான்பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்!
இதை எனக்கு  மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி. //
 இப்படி  சொல்வது ,’வானவில் மனிதன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மோகன்ஜி அவர்கள்.

நாற்பத்தைந்து முக்கிய பாடங்களிலிருந்து மூன்று முத்துக்கள்! உங்கள் பார்வைக்கு :-

//மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை,குழந்தையாய் மாறித்தான்
பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின்  மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.

வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.

வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.//


திரைப்படங்கள் பார்ப்பதும் நல்ல பொழுதுபோக்காய் இருந்த காலம். தொலைக்காட்சிகள் இல்லாமல் மக்கள் பொழுது போக்க, திரைப்படங்களை பார்த்தார்கள். அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே தந்திர காட்சிகளும்,  பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் வியக்க வைக்கும்.  அப்படி அமைந்த பழைய படங்கள், இப்போது தங்கள் திறமைகளைக் காட்ட இளைஞர்கள்  எடுக்கும் குறும்படங்கள், இவற்றை விமர்சிக்கும் தளங்கள் பற்றிக்காண்போம்..

//நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள். 
அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த  ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து! 
ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார்.
அந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்//

இப்படிப் பல நமக்குத் தெரியாத அரிய தகவல்களைத் தருகிறார்,  ’பசுபதிவுகள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. பசுபதி அவர்கள். பழைய விகடன் பத்திரிக்கையில் வந்த படங்களைக்  காலத்தால் அழிக்க முடியாதபடி தன் பதிவில் -தன் களஞ்சியத்தில் தொகுத்து வைத்து இருக்கிறார். நாம் பார்த்துப் படித்து மகிழலாம்.


விவசாயி என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜா அவர்கள்.மனதைக் கனக்க வைக்கும் உலகப்படம் பார்த்தபின் தன் மனதில் தோன்றிய கதை  ஒன்றைச் சொல்கிறார்.:--
அப்படிக் கதையில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆவலா? அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்கும், இந்தியாவில் இருக்கும் தாத்தாவுக்கும் இடையில் ஏற்படும் மொழிப்பிரச்சினையை இக்கதை கூறுகிறது.  தாத்தாவுக்கும், பேரனுக்கும் பாலமாக இருப்பது பாசம் மட்டுமே!  அதை எப்படிப் பேரன் சரி செய்தான்? படித்துப் பாருங்கள். கதையின் தலைப்பு;-
திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)

//நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில் பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர் இருந்தார். ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் ” பத்து

கட்டளைகள்” (THE TEN COMMANDMENTS)  படக் காட்சிகள் பற்றி பிரமிப்போடு சொன்னார். அன்றிலிருந்து அந்த படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன். பெரியவனாகி கல்லூரி சேர்ந்த பிறகுதான்  அந்த வாய்ப்பு அமைந்தது// 
என்று சொல்வது,’ எனது எண்ணங்கள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் 
தி.தமிழ் இளங்கோ அவர்கள்..  அழகான  படங்களுடன் கொடுத்து இருக்கும் விமர்சனம் படம் பார்க்காதவர்களையும் பார்க்க வைக்கும்.

நானும் இரண்டு முறை இந்த படத்தைப் பார்த்து இருக்கிறேன்.


ஜெர்சி கர்ல்... //திரைப்பட விமர்சகர்களால் பல்வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.//



 இப்படி திரைவிமர்சனம் செய்பவர், ’மங்கை’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மங்கை அவர்கள். 

நெய்வேலி புத்தகக்கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.

வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.

இப்படி இந்த குறும்படத்தை விமர்சனம் செய்கிறார் பாரதிக்குமார். இவர் ”பாரதிக்குமார் ”என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்.
                     
                       எண்ணு, சொல், செய் எல்லோருக்கும் நன்மை தர
                       எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.

                                                         வாழ்க வளமுடன்!
                                                                 ----------------

Wednesday, December 25, 2013

இசை விருந்து

டிசம்பர் என்றாலே இசை விழா நம்  நினைவுக்கு வரும். சங்கீத சபாக்களில் எல்லாம் இசைக் கச்சேரிகள் நடைபெறும். இறைவனுக்கு இசையால் பாமாலைகள் சார்த்தி ஆராதனை செய்வார்கள், பாடகர்கள்.  பாட்டு ஞானம் உள்ளவர்கள் , இல்லாதவர்கள் எல்லோரும் கர்நாடக கச்சேரி கேட்டு மகிழ்வார்கள்.

இசை, மனதுக்கு மகிழ்ச்சி, புத்துணர்வு தரும் ; நோய்களைத் தீர்க்கும் கற்பக விருட்சம். கவலைக்கு மருந்து.  இசையாலே நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.  இசைக்கு மயங்காத உயிரினம் இல்லை எனலாம்.

திரை இசைப்பாடல்களில் காலத்தால் அழியாப்பாடல்களைக்கேட்கும் இசைப் பிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்காக இந்தப் பதிவுகள். இப்போது எல்லாத் தொலைக்காட்சிகளிலும் திரை இசைகளை குழந்தைகள் பாடுகிறார்கள். கர்நாடக  இசைப் போட்டியும் நடைபெறுகிறது. சங்கரா தொலைக்காட்சியில் பஜனை கச்சேரிகள், போட்டிகள் நடைபெறுகின்றன. சின்னக் குழந்தைகள் எவ்வளவு அழகாய்ப் பாடுகிறார்கள்.!


1.சில சமயங்களில் இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதைப் பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான் என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில் எளிய இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனது இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும்.கணேஷ கானங்கள்  என்ற பாடல் தொகுப்பில்
-இப்படி இசையாலே வேள்வி செய்து இருக்கிறார், இசை  இன்பம்   என்ற இந்த வலைத்தளத்தில். வழங்கியவர் ஜீவா வெங்கட்ராமன் அவர்கள். இந்த வலைத்தளத்தில்  எல்லாப்பாடல்களையும் கேட்டு மகிழலாம்.
* இசைக் கருவிகள்
* நடனம்
* நாட்டுப்புறப் பாடல்
* திரைப்படம்
* தொகுப்பிசை-Fusion-Album
* சுவையான தகவல்கள்
இப்படி எல்லவற்றையும் அவர் தருகிறார்.

2.  ’றேடியோஸ்பதி’ என்ற வலைத்தளத்தை வைத்து இருக்கும் கானாபிரபா அவர்கள்,   ”காதலர் தினம் 2010 ”  என்று காதலர் தினச்  சிறப்புப் படையலாக  அவருக்குப் பிடித்த  வைரமுத்து  எழுதிய காதல் கவிதைகளையும்,  காதல் பாடல்களையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அதைக் கேட்டு மகிழுங்கள். இன்னும் பலவிதமான பாடல்களையும்  கேட்கலாம்.

3.ரூபன் அவர்கள் பல திறமைகள் உள்ளவர், கவிதை, கதை, கட்டுரை என்று பலவித வலைத்தளங்கள் வைத்து இருக்கிறார். அவர் கதையும் கானமும் வழங்கி இருக்கிறார்.

இசையும் கதையும் விழியோரங்களை நனைத்த கண்ணீர்த்துளிகள்

கதையைப் படித்துப் பாடலைக் கேட்டு மகிழுங்கள். துன்பக் கண்ணீர், ஆனந்த கண்ணீராக மாறியதைப் படித்துப்பாருங்கள். கதை, பாட்டு இரண்டும் மிக நன்றாக இருக்கிறது.

அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் ’இசையும் கதையும்’,  ’கதையும் கானமும்’ என்றெல்லாம் நிகழ்ச்சிகள் இருந்தன.  ஒருவர் கதை சொல்வார்- பின் அந்தச் சூழுலுக்கு ஏற்ற  திரைப்படப் பாடல்  ஒலிக்கும்.   அது போல் ரூபன் வழங்கி இருக்கிறார்.


4.’தமிழ் இசை’ என்ற வலைத்தளத்தில்  ’தமிழ் எனும் தேனை இசை மூலம் பருக இச்சை’, என்கிறது இந்த வலை.  நான் ஆணையிட்டால் என்ற எம்.ஜி.ஆர் பாடல், (டி.எம்.எஸ் பாடியது )அருமையான பாடல்.  கிறிஸ்மஸ் முதல் நாள் அவர் இறந்து போனதை  யாரும் மறக்க முடியாது. எம் .ஜி. ஆர்  பாடிய பாடல்கள் எல்லாம் மிக நல்ல பாடல்கள்.  நிறைய தத்துவப் பாடல்கள்  பாடி அவை இன்றும் காலத்தை வென்ற பாடல்களாய் இருக்கின்றன. அவர் பாடுவது போலவே பாடிய   டி.எம். எஸ், அவருக்குப் பெருமை சேர்த்தார்.

5.’எங்கள் ப்ளாக்’ வைத்து இருக்கும் ஸ்ரீராம் அவர்கள் ,  T M S அவர்களுக்கு அஞ்சலியாக பகிர்ந்த பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கும். அவர் பாடிய முருகன் பாடலும், சினிமாப் பாடலும் இருக்கும் இதில் இருக்கும். கேட்டுப்பாருங்கள்.
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்- T M S - அஞ்சலி.

ஸ்ரீராமுக்கு  பிடித்த பாடல்கள் என்கிறார். ஆனால் நம் அனைவருக்கும் பிடிக்கும், திரு ஸ்ரீனிவாஸ் பாடல்கள். கேட்டு மகிழலாம்.

6(எனக்கும் பிடித்த ) P B ஸ்ரீனிவாச்

7. சங்கீதக்கச்சேரிகள் கேட்கும் இசைப் பிரியர்களுக்கு:-

’ஒவ்வொரு நாளும், கச்சேரி துவங்கும் நேரத்திற்கு, ஐந்து நிமிடங்கள் முன்னதாக  'நம்ம ஏரியா' வலைப்பதிவில்,அன்றைய கச்சேரிக்கு யூ டியூப் சுட்டி / இணைப்பு தருகின்றோம். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.
Our sincere thanks to Parivadini P!
முதல் கச்சேரி திரு ஓ எஸ் தியாகராஜன் அவர்களின் அற்புதமான கச்சேரி இங்கே உள்ளது. பார்த்து, கேட்டு, மகிழுங்கள்.’-  என்று சொல்கிறார் கே ஜி .கெளதமன் அவர்கள்.

8.
'சரஸ்வதி ஸ்துதி ' லதாமங்கேஷ்கர்   பாடிய பாடல்    குயில்களின் கீதங்கள் என்று தான்  ரசித்த கீதங்களை சேமிக்கும் வலைப்பூ என்கிறார் அமைதிச்சாரல் .  குயில் கீதங்கள்  எல்லாம் அருமையாக இருக்கிறது. நமக்கு வேண்டியதைக் கேட்கலாம், மகிழலாம்.

9.
’மரகதம்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் புவனேஸ்வரி ராமநாதன் அவர்கள்  என்றும் இனியவை - A M ராஜா  என்று அருமையான பழைய பாடல்களை கொடுத்து இருக்கிறார்.  அத்தனையும் இனிமை, பழைய பாடல் அபிமானிகளுக்கு.

  மார்கழி மாதம்  திருவெம்பாவை, திருப்பள்ளிஎழுச்சி கேட்க வேண்டும் என்றால்   புவனேஸ்வரி ராமநாதன்  அவர்களே பாடல் பகிர்வும் வைத்து இருக்கிறார். அதைப் பார்த்துப் படித்துக் கொண்டு, பாடலையும் கேட்டு மகிழலாம்.

10. கிறிஸ்மஸ் பாடல்கள் -1( கிறிஸ்மஸ் பாடல்கள் என்று கூகுளில் தேடினால் இந்த இரண்டு பாடல் கிடைக்கும். )
இன்று ஏசு நாதர் பிறந்த நாள். கடுங்குளிரில் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த பாலகனை(கோமகனை)ப்போற்றிப்  பாடும் பாடல். என் மகனும், மகளும் கிறித்துவப் பள்ளியில் படித்தார்கள். அவர்கள் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்படும் போது ஆடல் , பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள். இங்கு பகிரப்பட்ட இந்தப் பாடலுக்கு என் மகள் நடனம் ஆடி இருக்கிறாள். என் மகன் அடுத்த பாடலைப் பாடுவான்,   அதில் உள்ள .’இன்று நமக்கு ஒரு நற்செய்தி’   என்று தேவகுமரன் பிறந்த செய்தியைச் சொல்லுவான், அனைவருக்கும்.

அன்பின் ஒளியாக , கருணையின் வடிவாகப் பிறந்தார், தேவபிதா.
இந்தப் பாடலை பாடிய பெண்  இனிமையாகப் பாடி இருக்கிறாள் கேட்டு மகிழுங்கள்.
                                                 --------------------------------
                               அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்



                              அருள் தேவா, உன் பெருமையையே பேசுவேன். 

Tuesday, December 24, 2013

குருவே சரணம்

'குரு இல்லா வித்தை பாழ்' என்பார்கள். எல்லோருக்கும் முதல் குரு அம்மா. அப்புறம் அப்பா ; பின், பள்ளியில் ஆசிரியர்.  வாழ்க்கை நடத்திச் செல்லும் போது நல்ல வழிகாட்டிகளாய் வருபவர்கள் எல்லாம் குருதான்.
அவரவர் தேடலுக்கு ஏற்ப  குருஅமைவார்கள்.

காயத்ரீ மந்திரம்:

நம்முடைய உயிராற்றலாகவும், துக்கத்தை அழிப்பதாகவும், இன்பமே வடிவமாகவும் உள்ள சூரியனைப் போன்ற ஒளிமயமானதும்  தன்னைவிட மேலாக ஒன்றும் இல்லாததும் நம் பாபங்களை அழிக்கக் கூடியதுமான தெய்வீக பரம்பொருளை நாம் மனதில் இருத்தி தியானிப்போமாக! அந்தப் பரம்பொருள் நமது அறிவை நல்வழி யில் ஈடுபடுத்தட்டும். 

எவர் நம் அறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனைத் தியானிப்போமாக!

 இப்படி நம் அக இருளைப் போக்கி ஞான ஒளி ஏற்றுபவர்  குரு தானே! அந்த குருவாய் வந்து வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்கும் குருவைப்பற்றிய பதிவுகள்:-

1. ’குருவே சரணம்’ என்ற பதிவில் குருவின் அவசியத்தைச் சொல்கிறார்,  வாசுதேவன் திருமூர்த்தி அவர்கள்.

கடவுள் எல்லா இடத்திலும் நேரே வரமுடியாது; மனித உருவில் நடமாடும் தெய்வங்கள் நமக்கு உதவுவார்கள் என்பார்கள், அனுபவப்பட்டவர்கள். என் கணவர்,  பாடல் பெற்ற தலங்களுக்குச் செல்லும்போது  (அந்தக் காலத்தில் சரியான பஸ் வசதி இல்லாத ஊர்களுக்கு செல்லும் போது) எங்கிருந்தோ நல்ல மனிதர் வந்து சைக்கிளில் அழைத்துச் சென்றார் என்று சொல்வார்கள்.

2. முத்துப்பாண்டி என்று வலைத்தளம் வைத்து இருக்கும் தேவா சுப்பையா,  ’கடவுளின் மொழி ’  என்ற பதிவில்,  அவர் அவசரமாய்  ஊருக்குப் போக வேண்டி இருக்கும்போது, சாலை மறியலில்  மாட்டிக்கொண்டு தவித்தபோது,  முன்பின் தெரியாத மனிதர் ஒருவர் வந்து அவர் செல்ல வேண்டிய இடத்திற்கு வண்டியில் அழைத்துச் சென்று விட்டதையும்,  அவர் குலதெய்வ வழிபாட்டுக்கு செல்ல வந்தவர் செல்லாமல்  தனக்கு உதவிசெய்ததையும், அதைத்தான்  இறைவன் விரும்புவான் என்று  உதவியவர் கூறியதையும் அழகாய் சொல்கிறார். அவரது செல் நம்பர் வாங்கியவர் , பெயரைக் கேட்க மறந்து, பின் செல்லில் ’கடவுள்’ என்று போட்டுக் கொள்கிறார். தக்க நேரத்தில் உதவுபவர் கடவுள்தானே!

3. வாழ்க்கையில் நாம் நிறைய பேரைச் சந்திக்க வேண்டி உள்ளது. அவர்கள் கருத்துடன் நாம் ஒத்துப் போக முடியாமல் முரண்பட வேண்டி இருக்கும். சிலர் குதர்க்கமாய் பேசுவார்கள். அதை எப்படிச் சமாளிக்கலாம் என்று புத்தரின் அனுபவ  போதனைகளில் இருந்து  சிலவற்றை அழகாய்ப் பகிர்கிறார், ’சித்தவித்யா விஞ்ஞானம்’ என்ற வலைத்தளத்தை வைத்திருக்கும் சுமனன் அவர்கள். முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது -- புத்தரின் ஞானம்


4. சப்பாத்தி சொல்லும் வாழ்க்கைப் பாடம் - சப்பாத்தி பிசைவதிலிருந்து அதை அழகாய்ப் போட்டுச் சாப்பிடுவது வரை உள்ளதை வாழ்க்கையுடன் இணைத்து வாழ்க்கைப் பாடத்தைச் சொல்லித் தருகிறார்,மகாலக்ஷ்மி விஜயன். ( பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை) வாழ்க்கை, போரடிக்காமல் , ஒவ்வொரு நாளும் புதிதாகவும்  அழகாகவும் வாழலாம் என்கிறார்.  

5.’பிரியாவிடைகளும், பிரியங்களும்’ என்ற பதிவில், ’மகிழம்பூச்சரம்’ என்று வாசம் மிக்க வலைத்தளம் வைத்து இருக்கும் சாகம்பரி அவர்கள் பிரியாவிடைகளைப்பற்றிச் சொல்கிறார் :-
எப்போதிருந்து இந்த பிரியாவிடைகள் உருவாகுகிறார்கள்? கணவன் மனைவிக்கிடையே ஒரு ஆத்மபூர்வமான உறவு ஏற்படும்போது உருவாகலாம். அதென்ன ஆத்மபூர்வம் என்று கேட்டால், உணர்தலும் , புரிதலும் , நெகிழ்தலும் என்பதுதான்  என்கிறார்.


 6. ’கைக்கெட்டும் தொலைவில் இருந்த ஸ்ரீஅரவிந்தரை நான் உணர இத்தனை நாட்கள் கடந்திருக்கின்றன. போன வருடத்தின் ஆவணி மாத மழைநாளின் மங்கலான ஒரு முழு இரவு என்னுள் முழு நிலவு உதயமாகக் காரணமாக இருந்தது. அரவிந்தரைப் படிக்க ஆரம்பித்தேன், நள்ளிரவு கடந்த நிசப்தத்தில் அரவிந்தர் என் அருகே அமர்ந்திருப்பதாய் உணர்ந்தேன். மொழியின் துணையால் சில இடங்களையும், ஆன்மாவின் துணையால் பல இடங்களையும் நதியில் மிதக்கும் கட்டுமரமாய்க் கடந்து கொண்டிருந்தேன்.’- இப்படி சொல்வது ’கைகள் அள்ளிய நீர்’ என்ற வலைத்தளம் வைத்திருக்கும் சுந்தர்ஜி ப்ரகாஷ்.
 ஸ்ரீ அரவிந்தரின் அமுத மொழிகள்- சுபாஷிதம் 17.

7. குரு, தானே வருவார்.- இப்படிச் சொல்வது  சுவாமி ஓம்கார் அவர்கள்.
’குரு கதைகள்’ என்ற வலைத்தளத்தில்,  ’குருவைத் தேடி  என்று கதைகளைப் பகிர்ந்து வருகிறார். குரு என்பவர் எந்த தோற்றத்திலும் இருக்கலாம். உங்கள் வீட்டுக்கு வரும் குப்பை அள்ளுபவர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தை, உங்கள் செல்லப் பிராணியான நாய் என யார் வேண்டுமானாலும் உங்கள் குருவாக இருக்கலாம். குருவை உங்கள் பார்வையில் தேடாதீர்கள். அறியாமை இல்லா மனதைத் திறந்து  வையுங்கள் உங்கள் குரு தானே வருவார் என்கிறார்.

8.


ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாளின் அற்புத தத்துவம் சகலத்திடமும் சமமான அன்புதான் அவரது சாஸ்வத சத்யமான அன்புதான் அவரை உலக நாடுகளின் பேரவைக்கு ”மைத்ரீம் பஜத” என்ற கீதத்தை அருளச் செய்தது. சகல நாடுகளுக்கும் அவர் வழங்கிய இந்த கீதம் மக்களுக்கு மற்றுமோர் கீதோபதேசம். இப்படி குருவைப் பற்றிச் சொல்பவர், 'கற்றலும் கேட்டலும் 'என்ற வலைத்தளம் வைத்திருக்கும்  ராஜி.

9.குரு வாரத்தில் ஷீர்டி பாபாதர்சன் யதேச்சையாக கிடைத்த்தைப் பெரும் பாக்கியமாகச் சொல்லுபவர்,’ உலகமே ஒரு வலை, இது என் இல்லத்து வலை ’என்று சொல்லும் சூரி சிவா சார். அனைவராலும் சுப்புத் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படுபவர்.வாழ்வில் ஒரு பொருள் வேண்டும்  என்கிறார் .

 //வாழ்வில் ஒரு பொருள் வேண்டின் இறைவனைத் துதியுங்கள் . வாழ்வின் பொருள் தெரியவும் இறைவனைத் துதியுங்கள் .//
இந்த வாக்கியங்களை யார் சொன்னார். அவர் பதிவில் என்பதைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

10. அன்றாட அனுபவமே பாடம் எனக் கற்றுக் கொடுத்து வரும் அனைத்து அன்புள்ளங்களுக்கும்  நன்றி சொல்கிறார் , ’தூரிகைச்சிதறல்’ என்று வலைத்தளம் வைத்து இருக்கும் கவிக்காயத்ரி. 

எல்லாப் பதிவுகளும் மிக நன்றாக இருக்கின்றன.


நீ எங்கிருந்து எச்செயலைச் செய்துகொண்டிருந்தாலும் மனதை மட்டும் சதா சர்வகாலமும் தெய்வத்தின் திருவடியில் வைத்திரு. ----இராமகிருஷ்ணபரமஹம்சர்.

Monday, December 23, 2013

மாதங்களில் மார்கழி

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம். வாழ்க வளமுடன்.
மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனா சாருக்கு நன்றி.

எனக்கும் வலைச்சரத்திற்கும் உகந்தது, மார்கழி மாதம்தான் போலும்! 2012ல் ஜனவரி மாதம் 1 ம் தேதியில் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் பரிந்துரைக்க, சீனாசார் அன்புடன் அழைத்தார்.  அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்தவரை வலைச்சரப் பொறுப்பை ஏற்று செய்தேன்.

முந்திய வாரம்  திரு. துரைசெல்வராஜு அவர்கள் அருமையாக வலைச்சர ஆசிரியர் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

முன்பு ”வலைச்சரத்தில் நான்” என்ற அறிமுக உரையில் என்னைப்பற்றி விரிவாகப் பகிர்ந்து இருக்கிறேன். எப்படி வலைத்தளம் ஆரம்பித்தேன், என் வலைத்தளத்தின் பெயர்க்காரணம் எல்லாம் எழுதி இருக்கிறேன்.
 லிங்  கொடுத்து இருக்கிறேன்.  படித்துப் பாருங்கள்.
 2009 மே மாதம் 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன். அடிக்கடி வெளியூர்களுக்குச்  சென்றுவருவதால்  154 பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன். போனமுறை கொடுக்காத பதிவுகளை இப்போது கொடுத்து இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இதோ என் பதிவுகளில் சில:-

உலக சுகாதார தினம்’  தாய் சேய்நலம், முதியோர் நலம்
உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.உலக சுகாதார தினத்தில் தாய் சேய் நலமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று
சொல்லப்படுகிறது.

'மார்கழி கோலங்கள்' என்ற பதிவில் கோலங்கள் போடுவதால் உண்டாகும் நன்மைகளைச் சொல்லி இருக்கிறேன்.

’மார்கழியின் சிறப்பு ’  மார்கழியின் சிறப்பைச் சொல்லும் பதிவு
 மார்கழி என்றாலே  மாதவன், மகேசன் புகழ்பாடுவது, கோலங்கள், இசைவிழா இவை முக்கியம் அல்லவா?

'பாவை நோன்பு'-  மார்கழியில் நோற்கப்படும் நோன்பைப்பற்றிச் சொல்லும் பதிவு. பாவையர் மழை வேண்டியும்நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

 இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அந்தக் காலத்திலும்  உள்ளதுஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று. படித்துப்பாருங்களேன்.


ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதிஇங்கு நாங்கள் எல்லோரும் நலம், அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். ’இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டாமாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? ’என்று ஊர் நடப்புநாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்தக் காலக்கட்டங்களின் நிலை புரியும். என் சொந்தங்கள் எப்படி கடிதம் எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையா படித்துப் பாருங்கள்.

அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம்துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும். அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க, அது பல பேர் மனதில் பிரதிபலிக்கமற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள். இதையே
மனம்போல் மாங்கல்யம்’ என்றும், திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்றும்

கூறுவர். யார் சொல்லும் கருத்து இது?- படித்துப் பாருங்கள்.


 இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரைநோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரைநோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு- 
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
வெண்டைக்காய் எப்படி சர்க்கரைநோயைப் போக்கும்?- படித்துப் பாருங்களேன்.

மழை என்றாலே மகிழ்ச்சிதான்.  மழைக்காலத்தில் சூடாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு, அல்லது புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருக்காமல் மழையை  ரசிக்க பிடிக்கும். மழைக்கால என் மலரும் நினைவுகளைச் சொல்லும் பதிவு.

இன்று வலைச்சரம் வந்து இருக்கும்  அன்பர்களை வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஒருவாரகாலம் உங்கள்  அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
                                  ------
"எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி, எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்."- வேதாத்திரி மகரிஷி
                                  ------