சொல்லைப் பிளக்கும் சொற்றொடர்கள்
தமிழ் வலைப்பதிவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு சொல் பின்நவினத்துவம் மற்றும் நுண்அரசியல். தமிழில் பின்நவீனத்துவத்திற்கான அடித்தளமாக அமைந்தது 80-களில் படிகள் வழியாக வெளிப்பட்ட தமிழவனின் அமைப்பியல் அறிமுகம்தான். அமைப்பியலை பின் அமைப்பியலுக்கு எடுத்துச் சென்றவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாகார்ஜீனன். இவரது கலாச்சாரம்: அ-கலாச்சாரம்: எதிர்-கலாச்சாரம் என்கிற நூல் தமிழில் ஒரு முக்கியமான அமைப்பியல்-பின்அமைப்பியல் மட்டுமின்றி எதிர்-கலாச்சாரம் பற்றிய ஒரு முக்கிய நூலாகும். இவரது ஃபூக்கோவும் சையதும் – சந்திப்பும் விவாதமும் என்ற கட்டுரையில் சில முக்கியமான புள்ளிகள் தொடப்படுகிறது. அது மேற்குலகின் பார்வை பற்றியது. தமிழில் ஃபூக்கோவை அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவரது மொழிபெயர்ப்புகளை கொண்டு வந்துகொண்டிருப்பவர். தற்சமயம் மிஷெல் ஸெர் பற்றிய தொடர் அறிமுகங்களையும் மொழிபெயர்ப்பகளையும் கொண்டுவரும் இவர் சீ-தியரி (ctheory) என்கிற ஆங்கில இணையு இதழிலும் எழுதி வருகிறார். இவரது மொழிபெயர்ப்புகள் மற்றும் கட்டுரைகள் பதிவுலகின் மிக முக்கியமான வரவாகும். பன்முகப் பார்வைக் கொண்ட பதிவு. இந்த அறிமுகம் என்பது பிரபலமான ஒருவரை பிரபலமாக்க அல்ல. எனது வாசிப்பினை பகிர்ந்து கொள்ளவே..
பாலுணர்வெழுத்தும் தமிழும் என்கிற ஜெயமோகனின் இக்கட்டுரை பாலணர்வு பற்றிய தமிழ் இலக்கிய எழுத்துக்கள் மற்றும் எழுத்தாளர்களின் புரிதலை விளக்குகிறது. எஸ். ராமகிருஷ்னணின் யாமம் நாவல் குறித்து ஜெயமோகன் யாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு என்கிற பதிவில் அந்நாவல் குறித்து விரிவான தனது கண்னோட்டங்களை பதிவித்துள்ளார். கிருத்திகாவும் இந்நாவல் பற்றிய தனது பாதிப்புகளை இங்கு தந்துளார். எழுத்தின் அடையாளம் பற்றிய எஸ்.ராமகிருஸணனின் இப்பதிவு கீ.ரா மற்றும் கு. அழகிரிசாமி பற்றியும் பொதுவாக எழுத்தாளனின் சமூக நிலமைகளையும் விளக்குகிறது.
பெண்ணிய விமர்சகர்களில் குறிப்பிடத்தக்கவரான பெருந்தேவி சமீபத்தில் பதிவுலகிற்கு வந்தவர். புதுமைபித்தனின் கல்யாணி பற்றிய கதையை கட்டுடைத்து இவர் எழுதிய கட்டுரை ஒன்றை காலக்குறியில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அக்கட்டுரைக்குப்பின் அவரது கிருத்திகாவின் வாஸவேச்வரம் நாவல் குறித்த விரிவான அசலை இங்கு படிக்க முடிந்தது. ”பால்விழைவின் த்வனி இந்நாவலின் சிறப்பு. அதுவே இங்கு என் எழுத்தின் பொருளாகவும் அமைகிறது.” என்பதாக பெண்ணிய தன்னிலை அடிப்படையில் விவரித்துச் செல்கிறது இவரது விமர்சனம்.
என்கிற இவ்வரிகள் பெண்ணிய வரலாற்று எழுதுதலின் தேவையை உணர்த்துகின்றன. பெண்ணிய வரலாறு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஆணிய சான்றுகள் அடிப்படையிலான வரலாற்றுக்கு ஒரு மாற்று மட்டுமல்ல அதனை கொட்டிக் கவிழ்ப்பதாகவும் இருக்கும்.
நிவேதா தனது பெண்ணும் பயணியுமாயிருத்தல் என்ற பதிவில் பெண்ணிய வரலாற்று எழுதுதலின் வேறுபாட்டு நுட்பத்தை முன்வைக்கிறார். இதில் வந்த உரையாடலின் பெண்ணிய வராறு குறித்த எனது கருத்துக்களை எழுதியுள்ளேன். அருந்ததிராயின் God of Small Things பற்றிப் பேசும் பிரதிகளை மீளப் பதிதல் - 1 மற்றும் உம்பர்த்தோ ஈக்கோ பற்றிப் பேசும் பிரதிகளை மீளப் பதிதல் - 2 என்கிற இப்பதிவுகள் நாவல்களை நமக்கு சிறப்பாக அறிமுகப்படுத்தக்கூடியவை. உம்பர்த்தோ ஈக்கோவின் புகழ்பெற்ற நாவலான Foucault's pendulam பற்றி ஒரு வாசிப்பு அனுபவத்தை பகிரும் பைத்தியக்காரன் உம்பர்த்தோ ஈக்கோ பற்றிய சுருக்கமான அறிமுகங்களை தருகிறார். பதிவில் இவரது எழுத்துக்கள் வித்தியாசமான வாசகர் வட்டததை கொண்டவை மட்டுமின்றி ஆழந்த தளத்திலானவையும்கூட.
பி்ன்நவீனத்தவம் பற்றி நிறப்பிரிகைத் துவங்கி இன்றுவரை எழுதிவரும் வளர்மதி குறிப்பிடத்தகுந்த கட்டுரைகளை எழுதிவருபவர். அவரது பின்நவீனத்துவம் உரையாடலுக்கான சில குறிப்புகள் ஒரு நல்ல அறிமுகத்தை தருகிறது. இசையின் அரசியல் என்ற நூல் ஒன்றை எழுதியுள்ள இவர் சமீபத்தில் யுனஸ்கோவிற்காக "சிவா தேர்ட் ஐ" என்கிற குறும்படம் ஒன்றை எடுத்துள்ளார். அப்படம் குறித்து சுந்தரின் இப்பதிவு அறிமுகம் செய்கிறது. வளர்மதியால் எது பின்நவீனத்தவ நாவல் என்று விரிவாக நாவல்கள அலசப்பட்டுள்ளது இப்பதிவில். டிசே. தமிழன் தனது பின்நவீனத்தவம் பற்றிய புரிதலை இங்கு பதிவாக்கியுள்ளார். பின்நவீனத்துவம குறித்து ஒரு விரிவான விவாதம் சரவணனின் இந்த பதிவில் துவங்கி டிசே. தமிழனின் இப்பதிவில் தொடர்ந்தது. இப்பின்னோட்டங்கள் சில காத்திரமான தளத்திலான உரையாடலை தொடர்ந்தன. இவை அறிமுகநிலையில் உங்கள் வாசிப்பை விரிவுப்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இங்கு பேசப்பட்டுள்ளது.
நன்றி
அன்புடன்
ஜமாலன்
image curtsey Card Player Pablo Picasso
|
|
கட்டுரைகளும் அதற்கு நீங்கள் வைக்கும் தலைப்புகளும் என்னைக் கவருகின்றன. நன்றி.
ReplyDeleteநன்றி சுந்தர்.
ReplyDelete