07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, May 5, 2008

ஈழக்கவிதைகளும் நானும்

எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது. காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது. எனது வாசிப்பில் சிறந்த கவிதைகளை இங்க நான் தொகுக்கவில்லை. சிறந்தது போன்ற அடைச் சொற்களை, மதிப்பீட்டு குறியீடுகளை தவிர்க்கவே விரும்புகிறேன், என்பதால் என்னை பாதித்த கவிதைகளாக நான் கருதுபவற்றை இங்கு தொகுக்கிறேன்.


நிவேதாவின் கவிதைகள் எல்லாமே மிகச்சாதரண மொழிநடையில் அடர்த்தியான அர்த்தங்களைக் கொண்டவை. மழை என்பது ஓரு முக்கிய குறியீடாக, படிமமாக, உருவகமாக தமிழ் கவிதைகளில் வந்த வண்ணம் இருந்துகொண்டே இருக்கின்றன. மழையை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர் கொண்டு அனுபவிப்பது கவிதையின் முக்கிய தளமாக இருப்பதை உணரமுடிகிறது. சாபக்கேடும், சவக்கிடங்கும், சாத்தானின் ஆயுதமுமானதைப் பற்றி..! என்கிற இக்கவிதையில் நிவேதா மழையை ஒரு காலத்தின் நினைவாக மாற்றுகிறார். சிந்திப்பதற்கு சாத்தியமற்ற ஒரு சமூகத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்ட ஈழச் சூழல் இங்கு கவிதையாகியிருக்கிறது. சிட்டுக்குருவிகளைப் பிரசவிக்க விரும்பும் கனவுகள் இக்கவிதையில் ஒரு பிரதி எப்படி மற்றொரு பிரதியாக வேதி மாற்றம் அடைகிறது என்பதையும்.. அது ஏற்படுத்தும் உடல்சார்ந்த பாதிப்பையும் நுட்பமாக அதிசயதக்க மொழியில் வெளிப்படுத்துகிறார் நிவேதா.

பேருந்துகளின் நெரிசல்களினூடு / பிருஷ்டமுரசிய / விறைத்த வால்களை முறித்தெறிய / தீராத அவாக்கொண்டு இரட்டைப் பூட்டிட்டு / தன்னைத்தான் தாளிட்ட / என் யோனி / கவிதையின் ஸ்பரிசத்தில் / கிளர்ந்தெழுந்து கசியவாரம்பித்ததும்/ அதிசயம்தான்.


இந்த வரிகள் வெளிப்படுத்தும் அனுபவம் வாசிப்பின் இன்பம் என்பதை நுட்பமாகச் சொல்கிறது. கவிதை எழுதும் தன்னிலை பிரதியின் தன்னிலையாக மாறிவிடும் இந்து நுட்பம் அலாதியானது. உடலை தொடுவதால் அல்லது உரசுவதால் அல்ல இன்பம், அதற்கு தன்னிலையின் புரிதல் எத்தனை அவசியமானத என்பதைச் சொல்கிறது. வாசிப்பும் எழுத்தும் உடல்களுடன் உருவாகும் ஒருவகை பாலின்ப விளையாட்டைப் போன்றது என்று எனது உடலரசியல் என்ற கட்டுரையின் இறுதிவரிகளே நினைவிற்கு வருகிறது. தெலூஸ்-கத்தாரி கூறியது போல “words coming with them a story of sex and love” என்பது இதைதானோ?


வார்த்தையில் பதங்கமாகும்

வியாபகன் நுட்பமான மற்றும் ஆழ்ந்த பொருள்மிக்க வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடியவர். அவரது நீ மற்றும் நான் என்ற கவிதையில் நீ நான் என்கிற முரணி்ல் உருவாகும் மற்றமை என்பதை கவிதையாக்க முனைகிறார். கவிதையின் இறுதி வரிகள் நுட்பமானவை.

எனது குரலை மட்டுமே / கேட்டுக் கேட்டுக் கொலைமூர்க்கம் கொண்டிருக்கும் நீ /  அறிவதில்லை / வார்த்தைக்கென்று தனித்துப் பொருளில்லை என்பதை / காட்சிக்கென்று தனித்துக் குணமில்லை என்பதை / மேலும் / நான் என்றோ நீ என்றோ / எவரும் இல்லை என்பதை

இவரது அபத்தம் மிகச்சிறிய வரிகளில் ஆழ்ந்த பொருளைத்தரும் கவிதை.

வடியும் எனது ஒரு சொட்டுக் குருதியை /வாதையென்பாயா / கவிதையென்பாயா நீ?
வலி நிரம்பி வழியும் - இந்தவரிகள் சொல்வதற்கும் வார்த்தையற்று வலியாகவே மிஞ்சக் கூடியவை. writerly text என்ற சொல்லக்கூடிய படைப்புகள் இவருடையவை.

பஹீமாஜஹான் கவிதைகள் ”ஒரு கடல நீரூற்றி” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளன. இழுக்கவிதைகளுக்குள் இருக்கும் எளிமையான வார்த்தை அதன் தனிச்சிறப்பாகும். எளிமையான அதே சமயம் பன்முக அர்த்தம்கொண்ட வார்ததைகளைக் கொண்டு எழுதப்பட்டள்ளன இவரது கவிதைகள். ஆதித்துயர் என்கிற இக்கவிதை எளிய வர்த்தைகளில் துயரைச் சொல்கிறது. நிழல் மற்றும் வெயில் என்கிற முரணை பின்னிச் செல்லும் இக்கவிதை ஆதித்துயர் என்பதை துரத்திச் செல்லும் நிழல் என்கிற வேட்டை நாயாக முன்வைக்கிறது. பெண்ணுக்கு கையளிக்கப்படுவது நிழல்கள்தான். அந்த நிழல் வெயில் என்கிற தண்டனையிலிருந்து தப்பிச் செல்ல முனையும்போது அவளை விட்டு விலகி போய்க்கொண்டே உள்ளது. ஆதித்துயர் ஒரு நுட்பமான கவிதை.

இளவேனில் தமிழ்நதி சற்று உக்ரமான உணர்வுகளைக் கொண்ட கவிதைகளை தருபவர். ”சூரியன் தனித்தலையும் பகல்” என்ற தலைப்பில் இவரது கவிதை நூலாக வளிவந்துள்ளது. ஈரமற்ற மழை என்கிற தலைப்பிலேயே கவிதையின் ஈரம் / ஈரமற்றது என்கிற முரண் அமைப்பு இயக்கமாகி இறுதிவரை வளர்ந்து செல்கிறது. மழை என்பது ஒரு குறியீடாக மாறி இருவேறபட்ட தளங்களின் குறிப்பீடாக மாறிவிடும்போது, கவிதை ஈரத்தை பெண்மீதான ஒரு துயரமிக்க அனுபவமாக மாற்றிவிடுகிறது. இதே மழையை, இதே அனுபவத்தை எம். ரிஷான் ஷரீப் தனது வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...! என்கிற கவிதையில் பேசுகிறார். இரண்டு கவிதைகளையும் நுட்பமாக நோக்கினால் மழை எதிரெதிரான குறியீடுகாளாக இதில் மாறி பெண்ணிய மற்றும் ஆணிய நோக்கிலான பிரதிகளாக இவை வெளிப்படுவதை உணரலாம்.


உயிர்கொண்டு திளைக்கும்
நளாயினி தாமரைச் செல்வனின் இந்த ஓர் இன அழிப்பின் கதை. யை படங்களின் மூலம் கவிதையாகச் சொல்கிறது. படங்களின் தொடர்ச்சிக்கூட கவிதையாகும் வித்தைதான் இது. பிரபஞ்ச நதியில் திளைக்கத் தவிக்கும் தேவ அபிரா ஒரு வித்தியாசமான கவிஞனுடன் மதுவருந்தல் என்கிற அனுபவத்தை கவிதையாக்குகிறார். கவிதையைவிட இந்தநிகழ்வு தரும் பரிச்சயம் அலாதியானது.


டிசே தமிழனின் கவிதைகள் முற்றிலும் நவீன கவிதை உத்தியில் எழுதப்படும் தொல் மரபின் கதை சொல்லலைக் கொண்டவை. காலத்தை முன் பின்னாக நகர்த்தும் அக்கவிதைகள் துயரை தருவதில்லை, நம்மை அவை துயராகவே மாற்றிவிடுகின்றன. வண்ணத்துப்பூச்சியைப் புணர்ந்தவன் என்ற இக்கவிதைகளில் ”புத்தரின் ஒளிரும் குறியை அறுத்தெறிந்து” சிலிக்கனால் பெருக்கப்படாத முலைகளைக் கொண்ட யசோதரா என புத்தரின் கதை புதிய தளத்தில் எடுத்துரைக்கப்படும்போது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இவரது கவிதைகள் ”நாடற்றவனின் குறிப்பு” என்கிற நூலாக தொகுக்கப்பட்டுள்ளது,

இங்கு சொல்லப்பட்ட கவிதைகளில் ஒரு ஒற்றுமை உண்டு. இவை எல்லாம் ஈழத்தைச் சேர்ந்த கவிஞர்களால் எழுதப்பட்டவை. அவற்றின் அனுபவப் பரப்பு மிகவும் வித்தியாசமானது. அடுத்த சரத்தில் தொகுக்கும் தமிழக கவிதைகளுடன் இதனை ஒப்பிட்டால் இவற்றிற்குள் ஆழ ஓடும் அந்த துயரத்தை உணரலாம். இவற்றின் பேசுபொருளாகட்டும் வடிவமைக்கும் முறையாகட்டும் முற்றிலும் தமிழக கவிதைகளைவிட வித்தியாசமான குணத்தைக் கொண்டவை. இங்கு காட்டியிருப்பவை ஒன்றிரண்டு கவிதைகள்தான். இக்கவிஞர்களின் கவிதைகள் பலவும் நுட்பமான உணர்வுத் தளத்தில் நின்று பேசுபவை, முனுமுனுப்பவை, ஆர்ப்பரிப்பவை, அலைகளை உருவாக்குபவை.

அன்புடன்
ஜமாலன்.
இமேஜ்: Salvador Dali -The Persistence of Memory

13 comments:

  1. இந்த வலைச்சரத்தின் மூலம் வித்தியாசமான கவிதைகளைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது.

    ReplyDelete
  2. டிசே தமிழன், ரேகுப்தி, தமிழ்நதி தவிர மற்றவர்களின் கவிதைகளை நான் இந்த பதிவுக்கு முன்வரை வாசித்ததில்லை. பொதுபுத்தி சார்ந்த, நானே கட்டமைத்து கொண்ட, எனது இறுமாப்பு காரணமாக இருக்கலாம்.

    தவறவிட்ட பிரதிகளையும், அது தரும் வாசிப்பு அனுபவத்தையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஜமாலன்

    ReplyDelete
  3. நன்றி தமிழ் பிரியன்.

    //இந்த பதிவுக்கு முன்வரை வாசித்ததில்லை. பொதுபுத்தி சார்ந்த, நானே கட்டமைத்து கொண்ட, எனது இறுமாப்பு காரணமாக இருக்கலாம்.//


    இது இருமாப்பு அல்ல. வாசிப்பு என்பது தேர்வின் அடிப்படையில் வருவது. நீங்கள் வாசித்த எல்லாவற்றையும் நான் வாசிக்க முடியாது. எல்லாவற்றையும் வாசிப்பதும் சாத்தியமில்லை. இதெல்லாம் ஒரு பகிர்தல்தான்.

    //தவறவிட்ட பிரதிகளையும், அது தரும் வாசிப்பு அனுபவத்தையும் அடையாளம் காட்டியதற்கு நன்றி ஜமாலன்//

    நன்றி பைத்தியக்காரன்.

    ReplyDelete
  4. http://noolaham.net/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88

    ReplyDelete
  5. அன்பின் ஜமாலன்,

    நான் மதிக்கும் கவிஞர்களோடு,எனது கவிதையையும் உங்கள் கவிதைச் சரத்தில் இணைத்துக் கொண்டதற்கு இதயங்கனிந்த நன்றிகள் நண்பரே :)

    என்றும் அன்புடன்,
    எம்.ரிஷான் ஷெரீப்

    ReplyDelete
  6. என்னதிந்த ஒற்றுமை.! நானும் நிவேதா, டி சே தமிழன், தமிழ் நதி கவிதைகளைத் தவிர பிறரை வாசித்ததில்லை.

    நிச்சயம் இது எனக்கு மிக உபயோகமான பதிவாக இருக்கும். நன்றி.

    ReplyDelete
  7. நன்றி ரிஷான் மற்றும் சுந்தருக்கு

    ReplyDelete
  8. //எல்லோரையும்போல காதல் மற்றும் கவிதையுடன்தான் எனது காலமும் தொடங்கியது//

    ம்ம்ம்.

    சமீபகாலமாக, கவிதையை வாசிப்பதும் எழுதுவதும் அருவருப்பானது போல இருக்கிறது. இதற்கான காரணம் தெரியவில்லை. நண்பர் பைத்தியகாரன் கட்டமைத்துக்கொண்ட இறுமாப்பு என்றெல்லாம் இல்லை. விடாமல் துரத்தும் மழையிலிருந்து ஓடி ஓடி ஒளிந்த இடத்தில், மீண்டும் மழை பெய்தால் வருகின்ற எரிச்சலை உணர்கிறேன். இதை யாரையும் குற்றஞ்சொல்வதற்காக சொல்லவில்லை.

    நீங்கள் குறிப்பிட்டிருக்கிற கவிதைகள் அருமையாக இருக்கிறது. மீண்டும் கவிதை பக்கம் என்னை இழுத்து வர முயற்சிக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  9. நண்பர் ஆடுமாடுவிற்கு..

    நானும் கவிதைகளுடன் எனது பரிச்சயங்களை விட்டு பல வருடங்கள் ஆகிறது. ஈழக்கவிதைகள் குறிப்பாக சேரன் பாதிப்பில் கவிதை எழுதத் துவங்கியவன் நான். ஒரு கட்டத்தில் கவிதை என்பது மதம் சாரந்த ஒரு மொழி என்கிற கருத்தே எனக்கு இருந்தது. அதனால் இன்றைய ஒழங்கமைப்பை கலகத்தை சாத்தியப்படுத்த முடியாது என்கிற உணர்வும் இருந்தது. அந்த அடிப்படையில் ”கவிதையும் சிதைவாக்கமும்” என்று கட்டுரை ஒன்றும் எழுதி உள்ளேன். கவிதையின் உருவாக்கம் பற்றிய ஒரு விஞ்ஞானக் கருதுகோளைக் கொண்ட சமன்பாடு ஒன்றும் ஒரு கட்டுரையாக எழுதிப் பார்த்தேன்.ஆனால் சமீபத்திய வாசிப்புகள் மீண்டும் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன.

    நீங்கள் கூறிய உதாரணம் “மழை“ ஒருவகையில் சரிதான் என்றாலும், இக்கவிஞர்கள் அத்தகைய கருத்தை மாற்றும் வண்ணம் வெளிப்படுகின்றனர்.

    கவிதையை திரும்ப தொடங்கியதற்கு வாழ்த்துக்கள். நன்றி

    ReplyDelete
  10. //காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது//

    காதலும் கவிதையும் உங்களிடமிருந்து காணாமல் போனதாக நம்பமுடியவில்லை.

    ReplyDelete
  11. //காதலைப்போலவே கவிதையும் என்னிடம் இன்று காணாமல் போனது, என்றாலும், காதலின் நினைவு தரும் சுகந்தத்தைப்போல கவிதையும் ஒரு சுகந்தமாக என்னுடன் தொடர்கிறது//

    காதலும் கவிதையும் உங்களிடமிருந்து காணாமல் போனதாக நம்பமுடியவில்லை. உங்கள் எழுத்துக்களுக்குள் இழையோடும் நெகிழ்வும் உக்கிரமும் அர்ப்பணிப்பும் இதை ஏற்றுக்கொள்ளும்படியாய் இல்லை.

    எந்த ஒரு பேசுபொருளையும் அதன் மையத்திலிருந்து தள்ளிவிடாமல், அதற்கேயுரிய அர்ப்பணிப்புடன் நீங்கள் அணுகும் விதம், அறிதலைப்பற்றியும், சமூகத்துடனான உறவாடுதலைப்பற்றியும் நிறையவே கற்றுத்தருகிறது.

    சிறந்த கவிதையை வாசகனே எழுதுகிறான்/கண்டடைகிறான்” என்பதற்கேற்ப உங்கள் வாசிப்பனுபவங்கள் இருக்கின்றன.

    ReplyDelete
  12. அண்மைய காலங்ககளில் தமிழ்மணப் பக்கம் வருவது குறைந்து போயிருந்தது. ஊரில் (எந்த ஊர் என்று கேட்காதீர்கள்:) இல்லாததும் ஒரு காரணம். இனி இணையத்திலும் நிறைய வாசிக்க வேண்டுமெனத் தீர்மானித்திருக்கிறேன். செறிவான வார்த்தைகளில் சீரியஸான விசயங்களைப் பேசும் உங்கள் பதிவுகளையும் சமீபகாலமாக தவறவிட்டிருந்தேன். அதனால்தான் தாமதமாக இந்தப் பின்னூட்டம். எனது பெயரையும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் 'கவுதை'எழுதுவதாக நினைக்க வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  13. தமிழ்நதி said...

    நன்றி தமிழ்நதி.

    //ஊரில் (எந்த ஊர் என்று கேட்காதீர்கள்:)//

    அரசியல் வாசகம்போல் உள்ளது? யாதும் ஊரே யாவரும் கேளீர்தானே..

    //எனது பெயரையும் சொல்லியிருக்கிறீர்கள். நானும் 'கவுதை'எழுதுவதாக நினைக்க வைத்தமைக்கு நன்றி.//

    நல்லவேளை கவுஜை என்கிற வலையுலக பரோடியை பயன்படுத்தாமல் கவுதை என்றாவது எழுதியுள்ளீர்கள். நீங்கள் ஒரு குறிப்பிடததக்க கவிஞர் என்பதில் என்ன சந்தேகம்? அதிலும் பொதுப் பிரச்சனைகளுக்கான உங்கள் தார்மீக கோபம் தனித்துவமானது. செல்வியை நினைவுக்கு கொண்டுவரும் கவிதைகள் உங்களுடையது.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது