Thursday, October 31, 2013

கதை சொல்றாங்கோ - கூடவே கவிதையும் தத்துவமும் வருது


ஆரம்பத்துல இருந்தே ஒரே யோசனை. எப்படியாவது ஒரு தத்துவத்த உங்க கிட்ட சொல்லியே ஆகணும்ன்னு. ஐய்யய்யோ தத்துவமா, ஆத்தா, எங்கள பாத்தா உனக்கு எப்படி இருக்குன்னு பதறிடவே பதறிடாதீங்க... அப்புறம், தத்துவத்த படிக்காம எஸ்கேப் ஆகிட கூடாது பாருங்க.... நான் தத்துவம் சொல்லியே தீருவேன்...

நாம ஒருத்தர் மேல அன்பு வச்சிருக்கோம்னு வைங்க, அந்த அன்பு எப்படி பட்டதா இருக்கணும் தெரியுமா? எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம, நாம அன்பு வச்சிருக்குறவங்களோட சுதந்திரத்துலயும் தலையிடாம இருக்கணும். அப்போ தான் அந்த அன்பு கடைசி வரை நிலைக்கும்.

ஆனா நான் உங்க கிட்ட ஒரு எதிர்பார்ப்பு வச்சிருக்கேன். அது என்னன்னு சொல்லுங்க பாக்கலாம்.... சரி, நானே சொல்லிடுறேன், இப்போ நான் உங்களுக்கு இன்ட்ரோ பண்ண போற ப்ளாகர்ஸ் எல்லாரையும் நீங்க கைத்தட்டி உற்சாகமா வரவேற்கணும். அப்போ தானே அவங்களுக்கு உற்சாகமா இருக்கும், தொடர்ந்து எழுதுவாங்க...

சரி, கை தட்ட நீங்க ரெடி ஆகிட்டீங்க, இன்ட்ரோ பண்ண நான் ரெடி ஆக வேணாமா? வாங்க, ஒவ்வொருத்தரா பாப்போம்.

சிநேகம்னா நட்பு, மித்ரானாலும் நட்பு, இப்படி பெயர்லயே நட்பு நட்பு நட்பை தவிர வேறெதுவுமில்லைன்னு காற்று வெளியிடை பிரகடனப் படுத்திட்டே வராங்க இவங்க. நிறைய கவிதை எழுதியிருக்காங்க. கொஞ்சமா கதையும் எழுதியிருக்காங்க. இவங்களோட எழுத்துக்கள வாசிச்சா ரொம்பவே வித்யாசமா இருக்கு. கண்டிப்பா எல்லோரோட பார்வைலயும் பட வேண்டியவங்க இவங்க. பெண்களை பற்றி இவங்க எழுதுற விதம், அப்படியே நம்ம வீட்டு பெண்களையோ, இல்ல பக்கத்து வீட்டு பெண்களையோ பாத்த மாதிரி இருக்கு. இவங்களோட ஒரு கதை தான் இப்போதைக்கு படிச்சேன், அழ வச்சுட்டாங்க. என்னை அழ வச்ச அந்த கதையை படிச்சுட்டு நீங்களும் அழ வேண்டாமா, கிறுகிறுன்னு தலை சுத்த வச்சி, பிரசவிக்கவும் வச்ச இவங்க கதை இதோ இங்க.
குருனைக்கட்டி

இவங்க கிட்ட ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல, மூணு ப்ளாக் இருக்கு. காரணம் இவங்களோட கனவுகள அவரோட தேவைகளுக்குள்ள அடக்கி வைக்கத் தெரியாம தேவைகள கனவுகள் போல விஸ்த்தரிசுக்கிட்டதா தன்னோட கண்மணி- தமிழும் கவிதையும்ல சொல்றாங்க.  வாழ்க்கை கடல்ல மூழ்கிடாம இருக்க, நீந்திக்கிட்டே இருக்குற பல்லாயிரக்கணக்கான படகுகள்ல இவங்களும் ஒண்ணுன்னு சொல்லிட்டு, இந்த சமூகத்தின் மேல இருக்குற கோபத்த, வருத்தத்த, ஆற்றாமைய வாய்ப்பு கிடைச்சதும் எப்படி கொட்டியிருக்காங்கன்னு பாருங்க. இது மட்டுமில்ல, இன்னும் நிறைய இருக்கு.

வாழ்க்கை எனபது நீ சாகும் வரை அல்ல, மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரைனு ஒரு தத்துவத்த சொல்லிட்டு, தமிழின் தோன்றல் காதல் சார்ந்தவைனு நமக்கு தெரியப்படுத்துறார் இவர். மூணு வருசமா எழுதிட்டு இருக்கார். மனசுல தோணுற கவிதை, கதைன்னு ஒரு கலவை இவரோட வலைப்பூ முழுக்க இருக்கு. அதிகமா போஸ்ட் இல்லனாலும், இனிமேல் அதிகமா இவங்கள எழுத வைக்க வேண்டியது நம்ம எல்லோரோட பொறுப்பு. ஒரு பொண்ணோ பையனோ வயசுக்கு வரது இயற்கை, அதுவே பாலினம் மாறி வயசுக்கு வந்தா??? அதுவும் இயற்கை தான்னு நாம கண்டிப்பா ஏத்துகிட்டு தானே ஆகணும். அது பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க
குமரி


சுவாதியும் கவிதையும்ன்னு தலைப்பை பாத்தாலே இது கவிதைகளுக்கான ப்ளாக்னு உடனே நம்ம மனசுக்குள்ள தோணிரும். குட்டி குட்டியா நிறைய எழுதி இருக்காங்க இவங்க. அதுல அனுபவம் அதிகமா கலந்து இருக்கு. அனுபவம்னா எல்லோரோட அனுபவங்களும் தாங்க. படிச்சு முடிச்சதும், அட ஆமாலன்னு நாம நமக்கு நாமே சொல்லிப்போம். கவிதைன்னு நினச்சு படிக்க ஆரம்பிச்சா, தத்துவமா கொட்டி தீத்துடுறாங்க. அப்படி என்ன சொல்லியிருக்காங்கன்னு பாக்கணும்னா நீங்க ஒரு சாம்பிள் இப்போ பாக்கணும். இந்தா பாருங்க.
முகங்கள்


இவங்க கவிதைகள் எழுதுறதுக்காகவே வலைப்பூ ஆரம்பிச்சுருக்காங்கன்னு நினைக்குறேன். ரொம்ப குறைவான அளவே போஸ்ட் பண்ணியிருக்காங்க. ஆனாலும் கவிதைகள் மேல இவங்களுக்கு இருக்குற காதல் இங்க சாரல்லா பொழிஞ்சிருக்காங்க. இவங்க என்னை விட பெரியவங்களான்னு கூட எனக்கு தெரியாது. ஆனாலும் இவங்க இன்னும் நிறைய கவிதைகள் எழுதணும்னு ஊக்கம் குடுக்க வேண்டியது நம்மோட கடமை தானே. ஒரு குழந்தை வச்சு விளையாடிய காகித கப்பலையும், ஒரு இளைஞனோட பார்வைல அது தொனிக்குற விதத்தையும் இங்க விவரிச்சுருக்கார். அப்படி என்ன எழுதி இருக்கார்னு இங்க பாக்கலாம்.

நான் இப்போ டையர்ட் ஆகிட்டேன். அதனால இந்த பட்டாம்பூச்சி இப்போ ரெஸ்ட் எடுக்க போகுது. அப்புறமா பிரெஷா வேற பூக்கள்ல தேன் தேடி போகணுமே. அதனால இப்போதைக்கு ரெஸ்ட். ரெஸ்ட் ஆப் தி இன்ட்ரடக்சன் நெக்ஸ்ட்... கொர்ர்ரர்ர்ர்.....   


Wednesday, October 30, 2013

மகளிர் அணி - இது அவங்க ஏரியா


கூ... கூ... ன்னு குயில் ஒண்ணு கூவிகிட்டே இருக்கு. கீச் கீச்ன்னு அணில் எல்லாம் என்னவோ அவங்களுக்குள்ள பேசிட்டு இருக்கு. ரொம்ப கூர்ந்து பாத்தா குட்டி குட்டி உயிரினங்கள் எல்லாம் அவங்க அவங்க இருப்பை இந்த உலகத்துக்கு உணர்த்த எதோ ஒரு வகைல பேசிகிட்டு தான் இருக்குதுங்க. அப்போ நாம மட்டும் பேசாம இருந்தா எப்படி? அதான் டான்னு உங்க முன்னால ஆஜர் ஆகிட்டேன்.

சரி, வந்தாச்சு. முதல்ல எல்லோருக்கும் குட் மார்னிங். இன்னிக்கி நாள் பூரா நீங்க சந்தோசமா, உற்சாகமா இருக்கணும். அதுக்கு இப்போ நாம புதுசா ஒரு அஞ்சு பேர பாக்க போறோம். நாம இப்போ பாக்க போறவங்க எல்லோரும் பெண் பதிவர்கள். ஆமாங்க, இவங்க எல்லாம் மகளிர் அணி, வாங்க வாங்க, ரொம்ப டைம் எடுத்துக்காம அவங்கவங்க ஏரியாவுக்கு போய் ஒவ்வொருத்தரயா பாப்போமா?

முதல்ல நாம பாக்க போற வலைப்பூ நினைவலைகள். கல்லூரி ஒண்ணுல மைக்ரோபயாலாஜி துறைத் தலைவியான இவங்க, தன்னோட எண்ணங்களின் நினைவுகள்ல தொக்கி நிக்குற அனுபவங்கள தன்னோட நினைவலைகளா இங்க உலவ விட்டுருக்காங்களாம். இவங்களோட ப்ளாக் பக்கம் போனா தன் பிரெண்ட்ஸ் கூட அவங்களோட சந்திப்பு, நமக்கு உடம்புல வர்ற பிரச்சனைகள், சமூகம் பத்தி என்ன நினைக்குறாங்க, கவிதைகள்னு ஒரு மசாலா கலவை கொட்டி கிடக்கு. படிக்க எல்லாமே சுவாரசியமா தான் இருக்குன்னாலும், பதினெட்டு வருஷம் கழிச்சு அவங்க மீட் பண்ணின பிரெண்ட்ஸ் கூட எங்க போனாங்க, என்ன நடந்துச்சுன்னு விவரிக்குறாங்க பாருங்க, நாமளும் கொஞ்சம் அவங்க கூட போயிட்டு வருவோம்..
பள்ளி நண்பர்களுடன் ஒரு சந்திப்பு

பிறந்தது மதுரைனாலும் சீனாவின் பீய்ஜிங்ல வாழுறவங்க இவங்க. சீனாவை பத்தின இவங்களோட பார்வையை “அண்ணன் தேசம்” ன்னு ஒரு புத்தகமா விகடன் பதிப்பகத்தார் வெளியிட்டுருக்காங்க. புத்தகமே வெளியிட்டுட்டாங்க, அப்புறம் இவங்கள பத்தி வேற என்னங்க சொல்ல? அன்பானவங்க, பண்பானவங்க, இவங்கள நேசிக்குற ஒரு கூட்டமே இருக்கு. இவங்களோட வலைப்பூ பெயரே தமிழுக்கு ஒரு பிரேமாஞ்சலி  தான். தமிழை அவ்வளவு காதலிக்குற இவங்க மூழ்கி முத்தெடுக்கும் நிலவு கன்னி, வாரி அணைக்க காத்திருக்கும் அலைகடல்லோட சங்கமத்துல ரம்மியமான சூழ்நிலையில சீனாவை பத்தின தன்னோட பார்வை, தன்னோட பயண அனுபவங்கள், அங்க கொண்டாடப்படும் திருவிழாக்கள்னு பல விசயங்கள அழகு தமிழ்ல இங்க பதிவு பண்ணிருக்காங்க. இப்போ நாம அவங்க பார்வைல ஹாங்காங் எப்படி இருக்குன்னு பாக்கப் போறோம். வாங்க.


ஒரு பிசியோதெரபிஸ்ட்டா வாழ்க்கைய தொடங்கி, அப்புறமா குடும்ப தலைவியாகி, இசையையும், புத்தகங்களையும் தோழிகளாக்கி வாழ்க்கையை கவிதையாய் வந்துட்டு இருக்காங்க இவங்க. இவங்களோட மன எண்ணங்களை தூரிகை கொண்டு தீட்டி எண்ணத் தூரிகையா நமக்கு குடுக்குறாங்க. இவங்க ப்ளாக்ல கூட கவிதை, மருத்துவம், கல்விமுறை, நட்பு, தியானம், சந்தோசம்னு பல விஷயங்கள் கொட்டிக் கிடந்தாலும், இப்போதைக்கு மன உளைச்சல்ல இருந்து எப்படி விடுபடுறதுன்னு விளக்குரங்க பாருங்க, கண்டிப்பா எல்லோரும் படிச்சு கடைபிடிக்க வேண்டிய ஒண்ணு. கடைப்பிடிச்சுடுங்க.
மனஉளைச்சலில் (STRESS) இருந்து வெளிவர சில வழிமுறைகள்

அறிவியல் ஆசிரியையா இருந்தாலும் கவிதைகள் மேல தனக்கு இருக்குற தீராத காதலால கவிதாயினின்னு தன்னை அடையாளப்படுத்திக்குறாங்க இவங்க. என்ன தான் இவங்க இவங்கள கவிதாயினியா சொல்லிக்கிட்டாலும் இவங்களோட ப்ளாக்ல அறிவியல், முகநூல், எண்ணங்கள், நூல் விமர்சனம், சிறுகதை, கட்டுரைன்னு ஏகப்பட்ட பதிவுகள உணர்வின் நெருடல்களா பதிவு பண்ணியிருக்காங்க. இவங்க இலங்கையை சார்ந்த கவிதாயினிங்குறதால இவங்களோட எழுத்துகள்ல இலங்கை தமிழின் வாசம் நம்ம வீடு வரை அடிக்கும். அதுக்காகவே இங்க பதிவுகள தேடிப் படிக்கலாம். கவிதைகளுக்காக பல பரிசுகள வாங்கின இவங்க அப்பா பத்தி ஒரு கவிதை எழுதி இருக்காங்க. அந்த கவிதை ரொம்பவே எதார்த்தமா, உணர்வு பூர்வமா இருக்கு. அப்போ கண்டிப்பா அத படிக்கணும் தானே... வாங்க, படிங்க  
தந்தைக்கோர் கடிதம்

இவங்கள பத்தி சொல்றதுக்கு அதிகமா இல்லையாம், நடுத்தர குடும்பத்த சேர்ந்த இவங்கள எல்லோரும் எழுதுன்னு ஊக்கம் குடுத்ததால அவங்களோட சிந்தனை சிறகுகளை விரிக்க வந்துடுக்காங்க. சாதி மதம் மேல் தனக்கு ஈர்ப்பு இல்லைன்னு சொல்ற இவங்க, இவங்கள பத்தின நம்மோட எண்ணங்கள அவங்களோட பகிர்ந்துக்கவும் சொல்றாங்க. கதை சொல்லப் போறேன்னு தான் ஆரம்பிக்கவே செய்துருக்காங்க, இப்போ தொடர் கதை வேற எழுத ஆரம்பிச்சுட்டாங்க. குட்டி குழந்தையோட மனநிலை பத்தி குழந்தையாவே மாறி கதையா சொல்லியிருக்காங்க பாருங்க, வாங்க, நாமளும் குழந்தையா மாறி இந்த கதைய ரசிக்கலாம். 
பிறந்தநாள் வேண்டுதல்

சரிங்க, இப்போ நமக்கு அறிமுகமானவங்க எல்லோருக்குமே இந்த பதிவர் உலகத்துல கண்டிப்பா அவங்களுக்கான அங்கீகாரத்த நாம குடுக்கணும்ங்க. அடுத்ததா நான் காலேஜ் போய் அங்க என்னோட பொறுப்புகள பாக்கணும்ல, அதனால அப்புறமா வந்து இன்னும் கொஞ்ச பேரை பத்தி பாக்கலாம். அதுவரைக்கும் நீங்களும் வீட்ல இருந்தா வீட்டு வேலை, ஆபிஸ்ல இருந்தா அங்க உள்ள வேலையெல்லாம் பாத்துட்டு, அப்புறமா அடுத்த அறிமுகங்கள பாக்க வந்துடுங்க. இப்போ கிளம்புவோம். 

Tuesday, October 29, 2013

அறிவோம் அறிவியல்....


ஷப்பப்பப்பா..... ஒரே டென்சன் ஒரே டென்சன். காலேஜ் போனா நச்சு நச்சுன்னுறாங்க... நான் வேற நாளைக்கு தான் இனி இந்த பக்கம் வருவேன்னு சொல்லிட்டேனா, ஆனா பாருங்க, நாளைக்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்... நாளைக்கு ரெண்டு போஸ்ட் போட முடியுமான்னே தெரியல, அதான் இன்னிக்கே மறுபடியும் வந்துட்டேன்.

அதுக்காக நாளைக்கு வர மாட்டேன்னு நினைக்காதீங்க, காலைல வருவேன்ல....

சரி சரி, இப்போ எல்லோரும் கொஞ்சம் அறிவியல் படிக்கலாம், வாங்க...

செவ்வாய் கிரகத்தில பூமியை விட அதிக அளவில் பாஸ்பேட் தாது இருப்பதா ஆய்வு ஒன்று தெரிவிச்சிருக்காம். உயிரினங்கள் வாழ தேவையான முக்கியமான தாதுல பாஸ்பேட்டும் ஒன்றுங்குரதால பூமியைப் போலவே செவ்வாயிலும் உயிரினங்கள் இருக்கலாம்னு ஒரு நம்பிக்கை வருது. எப்படி ஆரம்ப காலத்துல பூமி இருந்துச்சோ அப்படிதான் செவ்வாய் கிரகமும் இருக்குறதா வி்ஞ்ஞானிங்க தெரிவிச்சிருக்காங்க. பூமியின் இயற்கை வளங்களை சுரண்டி தீர்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் அடுத்து செவ்வாய் மீது கண் வச்சிருக்கு. செவ்வாயில் மனிதன் வசிக்க முடியுமான்னு உங்களுக்கு சந்தேகம் இருந்தா இத பாருங்க.

செவ்வாய்க்கு போகலாமா?

சரிங்க, அவர் தான் செவ்வாய்க்கு போகலாம்ன்னு சொல்றார்னா இங்க ஒருத்தர் என்னனமோ சொல்றார் பாருங்க. அப்படி என்ன தான் சொல்றார்னு கேக்குறீங்களா? அவ்வ்வ்வ் நாம எல்லாம் பூமியில தோன்றவே இல்லையாம். அதாவது பூமியில உயிர் செவ்வாய் கிரகத்துல இருந்து தான் வந்துச்சாம். எப்படி எப்படின்னு நானும் தான் ஆச்சர்யமா பாத்தேன். நீங்களும் தான் படிங்களேன்

நாம் எல்லாரும் ஏலியன்கள், மார்ஸியர்கள்


உயிர் இருக்குறதெல்லாம் இருக்கட்டும்ங்க, தங்கம் எங்க இருக்கும்? அத நம்மளால பயிரிட முடியுமா? ஹையய்யோ ஷாக் ஆகிடாதீங்க. இந்த தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை மாதிரி பாறைகள்ல படர்ந்திருக்கும். இந்த தங்கம் சுரங்கங்கள்ல இருந்து தோண்டி எடுக்கப்படுது. பாறைகளில் வெடி வச்சு தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரிச்செடுக்கிறாங்க. இது நமக்கு தெரிஞ்ச விஷயம் தான், ஆனா இங்க இவங்க வேற மாதிரியும் சொல்றாங்க. அப்படி என்ன சொல்றாங்கன்னு தான் கேப்போமே

தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா

இப்போ தங்கம் விக்குற விலைல, இது எங்களுக்கு தேவையாக்கும்னு முணுமுணுக்காதீங்க, அத விட முக்கியமான ஒரு விசயத்த பத்தி இவர் சொல்றார். தங்கத்த விட முக்கியமா? ஆமாங்க, எரிபொருள், அதாங்க, இந்த பெட்ரோல் டீசல், இதெல்லாம். நமக்கு ரொம்ப ரொம்ப முக்கியம் தானே. இத எந்த நேரத்துல நாம நம்ம வண்டிகளுக்கு போடணும்னு நேரம் காலம் எல்லாம் பாக்கணுமாம். ஏன்? ஏன்? ஏன்? அட, படிச்சு பாத்து தெரிஞ்சுக்கோங்க

உங்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப போறீர்களா?


விலைவாசி இப்படியே ஏறிகிட்டு போனா ஒரு நாள் உலகம் இப்படியே அழிய வேண்டியது தான்னு சில பேர் சொல்ல நான் கேட்டுருக்கேன். கொஞ்ச நாள் முன்னாடி பூமி அழிய போகுது, பூமி அழிய போகுதுன்னு பெருசா பீதிய கிளப்பினாங்களே, அதெல்லாம் நீங்க கண்டிப்பா மறந்துருக்க மாட்டீங்க. அதுல கருந்துளை அதாவது ப்ளாக் ஹோல் அப்படின்னு ஒரு பெயர் அடிபட்டுருக்கும். இந்த கருந்துளைனா என்னது? அத வச்சு ஏன் பூமி அழிய போகுதுன்னு சொன்னாங்க? இதுக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சுருக்கமா விடை சொல்லியிருக்காரு இவரு. வாங்க படிப்போம்.

கருந்துளைகள் (black hole): ஒரு அறிமுகம்


இதெல்லாம் படிச்சுட்டு நானே தலை சுத்தி போயிட்டேன்னா பாத்துக்கோங்களேன். பட்டாம்பூச்சி ரெஸ்ட் எடுக்க ஒரு இடம் தேடி தான் அலஞ்சுது. ஆனா மாத்தி மாத்தி இதெல்லாம் படிச்சதால உடனே ஒரு கப் தேன் குடிச்சே ஆகணும். அதனால உலகத்துலயே பெரிய பூ எதுன்னு தேடி கண்டுபிடிச்சி வைங்க, நான் வந்து தேன் குடிக்குறேன். அது வரைக்கும், டாட்டா... பை பை....





என்னாச்சி? ஓ... கலக்குறாங்களா?


ஹலோ, நான் மறுபடியும் வந்துட்டேன். அப்புறம், எங்க இருந்தாலும் நம்ம வேலைய கரெக்ட்டா பண்ணணுமா இல்லையா? நமக்கு தான் இங்க வேலை இருக்கே.... அதுவும் ரொம்ப ஜாலியான வேலை...

சரி சரி, காப்பி குடிச்சவங்க எல்லாம் இங்க வந்து உக்காருங்க, டீ, போர்ன்விட்டா, கார்லிக்ஸ் குடிச்சவங்க கூட உக்காரலாம். ஆனா இது எதுவுமே குடிக்காதவங்க, முதல்ல போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க... ஏன்னா நாம இப்போ பாக்க போற சில அறிமுகங்கள நாம ரொம்ப உன்னிப்பா கவனிக்க வேண்டி இருக்கு.... அதனால தான் மனச ரிலாக்ஸ்சா வச்சுக்கிட்டு இவங்கள எல்லாம் வரவேற்கணும்ன்னு நான் ஆசைப்படுறேன்.

அவ்வ்வ்வ், ஓவர் பில்ட் அப் வேணாம் (நான் என்னை சொன்னேன்), நாம இப்போ என்னப் பண்ண போறோம்னு சொல்லுங்க?

எங்களுக்கு என்ன தெரியும், நீ தானே ஒரு வாரம் எங்க உயிரை வாங்க போற, நீயே சொல்லுனு சொல்றீங்களாக்கும்? இங்க எல்லாம் என்னைய ஆசிரியர்ன்னு சொல்லிட்டாங்களா? நீங்களும் நம்பிட்டீங்கலாக்கும்? அதெல்லாம் இல்லீங்க, இதோ மேடைல இருந்து குடு குடுன்னு ஓடி வந்து, உங்க பக்கத்து சீட்ல உக்காந்துட்டேன். வாங்க இப்போ எல்லோரும் சேர்ந்து கொஞ்சம் ட்ரைலர்ஸ் பாக்கலாம்

எண்ணங்கள எழுத்துல கொண்டு வந்து கலக்கு கலக்குன்னு கலக்கிட்டு இருக்குற சில பேர் தான் இவங்க

முதல்ல நாம பாக்க போற வலைப்பூ கவிதைக்காரன் [நண்பர்களின் கூடாரம்].  கொல்லுஞ்சொல் விடுத்து குறும்புன்னகை அணிந்து எள்ளுஞ்சொல்லையும் இமயமாய் பார்க்கும் எழுத்துக் குழந்தை இவர். இவர் எனக்கு பிடிச்ச எழுத்தாளர்... இல்லல, கவிதைக்காரர், அவ்வ்வ்வ் எல்லாம் கலந்த கலவை. இவரோட ப்ளாக்ல ஏகப்பட்ட பதிவுகள் முத்து முத்தா கொட்டிக் கிடக்கு. ஆனாலும் திரட்டிகள் எதுலயும் இணைக்கப்படாததால இது புதைஞ்சு போன பொக்கிசமா மாறிடுச்சு. வாங்க, வாங்க, நாம இப்போ இத தோண்டி எடுத்து, ஊரை விட்டு வந்த ஒரு உழைப்பாளியின் குழந்தையாய் எப்படி எல்லாம் தன்னோட உணர்வுகள கொட்டுறார்னு பாப்போம்.
அப்பாவும் தென்னைமரங்களும்

அடுத்தது அகரமிட்டு சிகரம் தொடு . எண்ணங்களின் எழுத்துக்களை தேடும் தமிழ் பித்தன்னு தான் தன்னையே அறிமுகப்படுத்திக்குறார். இவர் கிட்ட இருந்து நமக்கு ஒரு பாராட்டு கிடைக்காதான்னு ஏங்க வைக்குற சிறந்த ரசனையாளர், விமர்சகர்... ஹைய்யோ, நான் ஏதாவது உலறுறேனான்னே தெரியல, அவ்வளவு மரியாத எனக்கு இவர் மேல. இவரோட வலைப்பூவுக்குள்ள போனாலே நாம கொஞ்சம் நடைமுறை தமிழ மறந்துடுவோம். ரசிச்சதாகட்டும், மேற்கோள் காட்டுறதாகட்டும், கவிதை எழுதுறதாகட்டும் பிச்சு உதறிடுறார். தேன் நிலவுக்கு போனவர்களின் பயணமும், தேடலும், சிந்தனையும் கொஞ்சல்களையும் நாமளும் ரசிக்கணுமா? அப்போ இத படிங்க
தேன் நிலவு

சிலரோட கவிதைகள படிக்கும் போது நாமளும் அப்படியே அந்த கவிதை பொருளா மாறிடுவோம். ஆரம்ப காலத்துல இவரோட கவிதை படிச்சுட்டு அதுவும் ரெண்டு மூணு தடவ படிச்சுட்டு (அப்போலாம் நான் ரொம்ப மக்கு, இப்போ கொஞ்சம் மக்கு) எப்படிண்ணே... இப்படின்னு கேட்டுட்டே இருப்பேன். அட, பில்ட் அப் போதும், ஆள சொல்லுன்னு நீங்க சொல்றது கேக்குது, அவர் தான் இந்த பூமிக்கு சொந்தக்காரர். நம் முன்னோர் நமக்கு பத்திரமாக விட்டுச் சென்ற இந்த பூமியை நம் சந்ததிக்கு நாம் பத்திரமாக விட்டுச் செல்ல கடமைப் பட்டவராவோம்னு நம்மோட கடமைய நமக்கு உணர்த்துறார். நிறைய கவிதைகள் இருந்தாலும், மனநலம் பாதிக்கப்பட்டவங்க பார்வைல இவர் என்ன சொல்ல வரார்னு நீங்களே படிச்சு பாருங்களேன்.
மனநலம் பாதித்தவர்கள் பார்வையில் 

படித்தது எனக்காக, பகிர்வது உங்களுக்காகன்னு தான் Sherkhan அறிமுகத்தையே ஆரம்பிக்குறார் இவர் . இதுல இருந்து உங்களுக்கே புரிஞ்சிருக்குமே, தான் ரசிச்ச விசயங்கள இங்க ஏராளமா நம்மோட பகிர்ந்துக்குறார்னு. இங்க கிடைக்காத தகவலே இல்லங்குற மாதிரி சினிமா விமர்சனம்ல இருந்து கம்ப்யூட்டர் பத்தின தகவல் வர எல்லாமே ரொம்ப ரொம்ப கொட்டிக் கிடக்கு. இப்போதைக்கு இலவசமா ஆயிரக்கணக்குல தமிழ் புத்தகங்கள எப்படி தரவிறக்கம் பண்ணறதுன்னு தனக்கு தெரிஞ்ச தகவல பகிர்ந்திருக்கார். வாங்க வாங்க, நீங்களும் இத பாத்து தமிழ் புத்தகங்கள டவுன்லோட் பண்ணிக்கோங்க.
இலவசமாக 1000க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்கள் தரவிறக்க

இப்போ நான் என்னோட தம்பிய பத்தி சொல்லியே ஆகணும். நான் இதுவர உங்ககிட்ட கைகாட்டினவங்கள பத்தி உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ, ஆனா தம்பி மகேஷ் பத்தி நீங்க எல்லாம் நல்லாவே தெரிஞ்சு வச்சிருப்பீங்க. நான் மறுபடியும் இந்த வலைதளத்துல எழுத ஆரம்பிக்குறது அவன் கிட்ட தான் உதவியே கேட்டேன். ஹஹா அவன் இல்லனா நான் இங்க இப்போதைக்கு வந்துருக்க மாட்டேன். விழியின் ஓவியம் -மா  அவன் இங்க அழகா தன்னோட உணர்வுகள தீட்டிட்டு இருக்கான். அவனை பத்தி நான் சொல்றத விட, அவனுக்கு என்னென்ன பிடிக்கும்ன்னு நீங்களே தெரிஞ்சுக்கோங்க.
மறக்க முடியாத நாளும், பதிவுலகில் ஆல் டைம் மை ஃபேவரெட் பெண் பதிவரும்..

இனி, நாளைக்கு இன்னும் கொஞ்ச பேர பாப்போம். இப்போதைக்கு, இதெல்லாம் படிச்சுட்டு அவங்களுக்கு ஊக்கம் குடுக்குற மாதிரி கமண்ட்ஸ்சும் குடுத்துட்டு, உங்களோட சொந்த வேலைகள், குழந்தை குட்டிகளை படிக்க வைக்குறதுன்னு வேலை இருந்தா அத எல்லாம் முடிச்சுட்டு நிம்மதியா போய் தூங்குங்க. பின்ன, நாளைக்கு காலைல நான் இன்னும் கொஞ்சம் அறிமுகங்களோட மறுபடியும் வருவேன்ல. டேக் கேர்...

Monday, October 28, 2013

மருத்துவம் - கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்ல


எப்பவுமே, நாம ரொம்ப ஆரோக்கியமா இருக்குற வர, எத பத்தியும் கவலைப் பட மாட்டோம். ஆனா அதுவே, உடம்புக்கு ஏதாவது வந்துதுன்னு வைங்க, நாம கஷ்டப்படுறதோட இல்லாம, நம்மள சுத்தி இருக்குறவங்களையும் ஒரு வழி பண்ணிடுவோம். இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க, அப்புறம் அது பொய் தான்னு அப்பட்டமா தெரிஞ்சுடும். அதனால நாம இன்னிக்கி நம்ம நாட்ல நாம அதிகமா யூஸ் பண்ணாத, ஆனா அதிக பலன் குடுக்குற மருத்துவமுறைகள் பத்தி தெரிஞ்சுக்க போறோம்.

சித்தவைத்தியம்ங்குறது தமிழ் வைத்தியம்ன்னு சொல்லுவாங்க. நம்ம முன்னோர்கள் பயன்படுத்திட்டு இருந்த தொன்மை வாய்ந்தது இந்த மருத்துவம். இந்த மருத்துவமுறை இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய், சீனி, முதலியக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக்கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். இந்த மருத்துவ முறையில உடன் பருமனை எப்படி றைக்குறது?ன்னு சொல்லித்தராங்க.
உடல் பருமனை குறைக்க வழி
இனி, நாம வீட்ல எப்பவும் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்குற மிளகுவோட மருத்துவ குணம் பத்தி தெரிஞ்சுப்போமா?

ஏன்னா, பத்து மிளகு இருந்தா எதிரி வீட்ல கூட விருந்து சாப்பிடலாமாம். அந்த அளவு அதுகிட்ட நச்சை முறிக்குற சக்தி இருக்கு. அப்போ கண்டிப்பா இன்னும் அத பத்தின டீடைல்ஸ் வேணும்ல... வாங்க, பாப்போம்.
மிளகு - ஒரு முழுமையான மருந்து

ஹச்... ஹச்ன்னு தும்மல் வருதா? அப்போ ஏதாவது பண்ணியாகணுமே???? என்னப் பண்ணலாம்? இத படிக்கலாம், படிச்சு தெரிஞ்சுக்கலாம், தெரிஞ்சுகிட்டு அத அப்படியே பாலோ பண்ணலாம்.
ஜலதோஷம் - பாட்டி வைத்தியம்

எந்த மருந்து எந்த நோயை ஆரோக்கியமான நிலையிலுள்ள மனிதனிடத்தில் தோற்றுவித்ததோ, அதே மருந்து அந்த நோயுள்ள மனிதனுக்கு கொடுத்தா அந்த நோயை தீர்க்கும்னு சொல்றது ஹோமியோபதியோட அடிப்படை தத்துவம். மனித உடல்ல நோய் வந்தா மனசும் பாதிக்கப்படும். அப்போ பாதிக்கப்பட்ட உடம்பு, மனம் ரெண்டையும் சேர்த்து குணப்படுத்துறது தான் ஹோமியோபதி மருத்துவம். இயற்கைக்கு மாறான செல்களினால் ஏற்படும் புற்றுநோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த, அழிக்க ஹோமியோபதி மருத்துவம் ஆற்றல் உள்ளதா இருக்கு. மனச்சோர்வு, பரபரப்பு ஏற்படுத்தாமல், இதமான இயல்பான அளவில் வலியைக் குறைத்து உடலுக்கு தெம்பூட்டும் சிகிச்சையை அளிப்பதோடு பக்கவிளைவுகளையும் ஹோமியோபதி மருத்துவம் ஏற்படுத்துவதில்லை. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு வல்லமையையும் அதிகரிக்கிறது. மற்ற ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஹோமியோபதி மருந்துகளைச் சாப்பிடலாம். உடல், மன உறுதி இவற்றைச் சார்ந்த நோயாக புற்றுநோய் இருப்பதால் ஹோமியோபதி மருந்துகள் மூலம் புற்று நோய்க்கான போராட்டத்தை ஒரு நோயாளி வெல்ல முடியும்ன்னும் சொல்றாங்க.

இத பத்தின விரிவான விளக்கத்த இங்க பாக்கலாம்.
மனித நலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம் 


இது கொஞ்சம் புதுசுங்க. மருந்துகளின்றி மனித இனம் காப்போம், மருந்துகளிடமிருந்து மனித உயிர்களை மீட்போம்னு சொல்ற தாரக மந்திரம் ஒண்ண கேட்டுருக்கீங்களா? ஆமா, அக்குபஞ்சர் மருத்துவம் அப்படி தான் சொல்லுது. நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம். இயற்கைச் சக்திகள் இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள், தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் 'அருட்கொடை'னு தான் சொல்லணும். இத பத்தி மேலும் தெரிஞ்சிக்கணும்னா இத படிங்களேன்.
வலிகள் என்றால் என்ன? அவை ஏன் ஏற்படுகின்றன?

சரி, சரி, மருத்துவ முறைகள் எதுவா இருந்தா என்ன? நமக்கு நோய் குணமாகணும். அதானே நமக்கு வேணும். என்ன நான் சொல்றது சரி தானே... ஆமான்னு தலையாட்டுரவங்க எல்லாம், எல்லாத்தையும் மறக்காம மனசுல வச்சுக்கிட்டு, தேவைப்படுறப்போ யூஸ் பண்ணி பயனடையணும். சரியா?

நான் அப்புறமா வரேன்.

பூக்களாகிய உங்கள் முன், படப்படப்புடன் இந்த பட்டாம்பூச்சி...


ஹாய், ஹாய், ஹாய்.... மனசு டிக் டிக் டிக்ன்னு அடிச்சுட்டே இருக்கு. ஏன்னு கேக்குறீங்களா? இந்த பதிவர் வட்டதுக்கே நான் புதுசு. நான் இங்க மறுபடியும் ஒரு அங்கீகாரத்த தேடி வந்து ஒரு மாசம் தான் ஆகுது. அதனால நானே இப்போ என்னை அறிமுகப்படுத்திக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். அதுக்குள்ள எனக்கு இப்படி ஒரு பொறுப்பு குடுத்துருக்குறது நீங்க (தமிழ்வாசி பிரகாஷ் அண்ணாவும், சீனா ஐயாவும்) என் மேல வச்சிருக்குற நம்பிக்கைய காட்டுது. அந்த நம்பிக்கையை வீணாக்கிட கூடாதுங்குற பிரார்த்தனையோட என்னை பத்தின அறிமுகத்த நான் ஆரம்பிக்குறேன்.

பெரிய அளவுல என்னை பத்தி அறிமுகப்படுத்திக்க இப்போதைக்கு ஒண்ணும் இல்லீங்க. ஆனா வருங்காலத்துல பெருசா சாதிக்கணும்ன்னு ஒரு வெறி இருக்கு. இப்போதைக்கு நான் ஒரு ஆராய்ச்சித் துறை மாணவி. அதாங்க, பி.ஹச். டி பண்ணிக்கிட்டு இருக்கேன். வீட்ல அன்பான அப்பா, சண்டை எல்லாம் போடாத தம்பி (என்ன கொடுமை பாத்தீங்களா), அவ்வளவு தாங்க. கிராமத்து வாழ்க்கைய அணுஅணுவா ரசிச்சு வாழ்ந்துட்டு இருக்கேன்.

வலைப்பூ ஆரம்பிக்கணும்னு ஆசை எல்லாம் ரொம்ப இல்ல என்கிட்ட. காரணம், அப்படினா என்னனே தெரியாது எனக்கு. மனசுல படுறத முகநூல்ல கொட்டிட்டு அப்படியே போயிட்டு இருந்தேன். அப்புறமா, ஒரு வழியா வலைப்பூ ஒண்ணு ஆரம்பிச்சு, அதுல கவிதைகள மட்டும் போஸ்ட் பண்ணிட்டு இருந்தப்போ அத வந்து எட்டிப்பாக்க கூட யாரும் இருக்க மாட்டாங்க. திண்டுக்கல் தனபாலன் அண்ணா மட்டும் தான் அப்பப்போ வந்து கமன்ட் போட்டுட்டு இருப்பார். ஒரு கட்டத்துல ரொம்ப வெறுத்து போய் நான் வலைப்பூ பக்கம் வர்றதே இல்ல.

இப்போ தான் ஒரு மாசம் முன்னாடி, திடீர்னு ஒரு ஆசை. சரி, மறுபடியும் நாம வலைப்பூ-ல எழுதினா என்னன்னு. ஆனா இந்த தடவை கொஞ்சம் வித்யாசமா கவிதை மட்டுமில்ல, மனசுல தோணுற எல்லாத்தையும் எழுதுவோம்னு முடிவு பண்ணிட்டு, தம்பி மகேஷ் உதவியோட, மறுபடியும் வந்தேன். ஒன்னரை வருசமா ஆறாயிரம் விசிட்டர்ஸ்ல இருந்த என்னோட ப்ளாக், இப்போ ஒரு மாசத்துக்குள்ள மேலும் பதினோராயிரம் விசிட்டர்ஸ் கூடி பதினேழாயிரம் விசிட்டர்ஸ்ஸ சம்பாதிச்சு குடுத்துருக்கு. இதுக்கெல்லாம் நான் முதல்ல உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்.

பொதுவா நான் எது எழுதினாலும் நானே ரசிச்சா தான் எழுதுவேன். என்னால எல்லோர் மாதிரியும் சட சடன்னு கவிதைகள கொட்டிட முடியாது. அப்படி நான் எழுதின சில கவிதைகள உங்க பார்வைக்கு வைக்கலாம்னு நினைக்குறேன். நீங்க கண்டிப்பா படிங்க, படிச்சுட்டு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க. காரணம் உங்களோட ஊக்கம் தானே எங்கள எல்லாம் இன்னும் நல்லா எழுத தூண்டும்...

அம்மா அப்படினாலே எல்லோருக்கும் ஸ்பெசல் தான். அதுவும் எனக்கு என் அம்மான்னா ரொம்ப ஸ்பெசல். அம்மா பத்தி நிறைய எழுதி இருக்கேன், ஆனாலும் அதுல ரெண்ட மட்டும் இப்போ உங்க பார்வைக்கு வைக்குறேன்...

நீ என் அம்மா தானா?
வந்தாள் அம்மா....!

அம்மா கடவுள் தான், ஆனா அம்மான்னா யாருனே தெரியாத ஒரு பொண்ணுக்கு அம்மா எப்படி பட்டவளா இருப்பா? தெரிஞ்சுக்கணும்ல, அப்போ இத படிங்க...

உணராத பந்தம் இவள்...!

என் அம்மா அப்பாவோட காதலை பாத்து பாத்து வளர்ந்தவ நான்.. என்கிட்ட எப்படி நீ காதல இப்படி எழுதுறன்னு கேக்குறவங்க கிட்ட எல்லாம் நான் ரோல் மாடலா கை காமிக்குறது என்னை பெத்தவங்கள தான். அப்படி என்னதான் நீ காதல பத்தி சொல்ல வர்றன்னு கேக்குரவங்களுக்காக இந்த கவிதைகள்...

சாரலடிக்கும் நேரம்
உன்னிடம் ஒரு யாசகம் 

எல்லோரும் பாசிடிவாவே தான் எழுதுறாங்க. ஆனாலும் காதல் தோல்வியால் தற்கொலை பண்ணிகிட்ட மனம் எவ்வளவு தகிக்கும்னு யோசிச்சு தான் இந்த கவிதைய எழுதினேன்..

இன்னுமோர் அக்னி பிரவேசம்
இதெல்லாம் விடுங்க, எல்லோருக்குமே கண்டிப்பா மனசுல சோகம் இருக்கும், எதோ ஒரு வகையில நம்மை பற்றிய ஒரு பயம் இருக்கும். அப்படி என் மனசுல நான் என்ன உணர்ந்தேன்னு நீங்க தெரிஞ்சுக்க வேணாமா? இதோ படிச்சு பாருங்களேன்

பயமறியா விடியல்

அப்படியே மனசுல தோணுறத எல்லாம் கிறுக்கிட்டு இருந்த எனக்கு கொஞ்சம் இடைவெளிகள் தேவைப்பட்டது. ரொம்ப நாள் எதுவுமே எழுதாம இருந்த நான் ஒரு நாள் நண்பர் கார்த்திக்கோட கவிதைக்கு பதில் எழுத, அதுவே ஒரு கவிதையா மாறிடுச்சு. மறுபடியும் நான் எழுத காரணமான அந்த கவிதைய நீங்க பாக்க வேண்டாமா?

நிலவு வழி தூது

அத தொடர்ந்து அதே மாதிரி நான் எழுதிய இன்னொரு கவிதை இது

சங்கமிக்கும் பார்வைகள் (கடற்காதல்)


சரி, இப்போ உங்களோட உளவியல் தோட்டத்துல பூத்த வலைப்பூக்கள்ல இருந்து பல்சுவை தேன் குடிக்க கிளம்பிடுச்சு இந்த பட்டாம்பூச்சி....

ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்..... அதென்ன பட்டாம்பூச்சின்னு கேக்குறீங்களா? நான் ஏன் என்னை பட்டாம்பூச்சின்னு சொல்லிக்குறேன்னா, அதுக்கு காரணம் அப்புறமா சொல்றேன். இப்போ, நீங்க என்ன பண்றீங்கனா நான் ரசிச்சு ரசிச்சு எழுதின கவிதைகள்னு என்னோட வலைப்பூல ஏராளமா கொட்டிக் கிடக்கு. நேரம் இருக்குறப்போ ஒண்ணொண்ணா படிச்சு பாருங்க. நான் அப்புறமா வந்து, வலைப்பூவுல இருக்குற என்னோட நண்பர்கள், தோழிகளை உங்களுக்கு அறிமுகப் படுத்துறேன். புதுசாவோ, இல்ல நமக்கு அறிமுகம் சரியா இல்லாதவங்களையோ நமக்குள்ள நாமே அறிமுகப்படுத்திக்குறது தானே முறை. அதனால அதுவரைக்கும் காத்திருங்க...

இப்போதைக்கு உங்ககிட்ட இருந்து விடைபெறுவது.... வேற யாரு, நான் தான், பட்டாம்பூச்சி காயத்ரி தேவி.... என்ற ஜி.டி... டாட்டா



Sunday, October 27, 2013

காயத்ரி தேவி எழிலிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற எழில் தான் ஏற்ற பொறுப்பினை ஈடுபாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 053
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 036
பெற்ற மறுமொழிகள்                            : 262
வருகை தந்தவர்கள்                              : 818


எழிலினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க ஆரவத்துடன் இசைந்துள்ளார் காயத்ரி தேவி. 


இவர் முதுகலை முடித்து விட்டு இப்பொழுது முனைவர் பட்டத்திற்கு படித்துக்கொண்டு இருக்கிறார். இவரைப் பற்றிச் சொல்ல பெரிதாக் ஒன்றும் இல்லை என்றாலும் அன்பான அப்பா, தம்பின்னு ஒரு சின்ன குடும்பத்துல இருக்கிற எல்லா மகிழ்ச்சியையும் (பொறுப்புகளையும்) அனுபவித்துக் கொண்டு இருக்கிறவர். இவரோட மனசுல தோணுகின்றதை  எழுதவும், இவரோட கவிதைகளுக்கு ஒரு அங்கீகாரம் தேடவும் தான் இவர் வலைத் தளம் வந்தார். இங்கு இவர் மனத்தில் இருப்பதை அப்படியே பேசுவதால் பலருக்கும் இவரைப் பிடித்திருக்கிறது. இவருடைய தளத்தின் பெயர்என்னில் உணர்ந்தவை “  

அனைத்துப் பதிவர்களின் வாழ்த்துகளோடு இவர் பணியினை நாளை காலை ஆறு மணியில் இருந்து துவங்குவார். 

இவரை வருக ! வருக ! என வரவேற்று - வாழ்த்துவதில் பெருமை அடைகிறோம். 

நல்வாழ்த்துகள் எழில் 

நல்வாழ்த்துகள் காயத்ரி தேவி 

நட்புடன் சீனா  


பெண்களே...உலகம் உங்களுக்காகவும்....

                                       பெண்களே... உலகம் உங்களுக்காகவும்....


பெண்களும் ரோஜாக் கூட்டம்தானே....
                             
                                          வலைச்சரம் 7

மன அழுத்தம் போக்கும் வழிகள்

**   மெலடியான இசையை ரசிக்கலாம்
**  மனம் விட்டுப் பாடலாம்
** அடுத்தவரைப் பற்றி புறம் பேசுதல் தவிர்த்தல்
**  உங்களை நேசியுங்கள்
** கவலைப்படுவதால் எதுவுமே நிகழாதென்பதை உணர்தல்
**  ஈகோவை (தான் எனும் எண்ணம்) விடுத்தல்
** நாமும் சிரித்து மற்றவரையும் சிரிக்க வைக்கலாம்
** குறைந்தது 7 மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் தேவை
** துன்பங்களை மனதிற்குள்ளாக புழுங்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
** பரிதாப நிலையை  உருவாக்க முயற்சிக்கக் கூடாது
** தாழ்வு மனப்பான்மையை மாற்ற முயற்சி செய்ய வேண்டும்
** மகிழ்ச்சி என்பது பணம் சார்ந்ததல்ல மனம் சார்ந்தது என உணர வேண்டும்
** பயம் விலக்க வேண்டும்
** சந்தேகம் விலக்க வேண்டும்
** மற்றவரை மன்னிப்பதால் மனது இலேசாகும்
** எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும்
** கோபம் தவிர்க்க வேண்டும்
** பொறாமை தவிர்க்க வேண்டும்
** புதிய சூழலுக்கு பயணம் செய்யலாம்
** நடனம் ஆடுவது அல்லது ரசிப்பது
** செடி கொடிகள் வளர்க்கலாம்
** வீட்டு விலங்குகள் வளர்க்கலாம்
** பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்

வலையுலகத்தில் பல்வேறு விதத்தில் கலக்கும் பெண்களின் வலைதளங்கள்
பல்சுவை கலவை    காணாமல் போன கனவுகள்-ராஜி

ஆவேசத்தின் எதிரொலி    பூச்சரம்              

தென்றலாய் கவிதைகள் தென்றல்-சசிகலா

குட்டிக் கவிதைகள்     அன்புத்தோழி

க்விலிங்      இளைய நிலா-இளமதி

ஆன்மீகப் பதிவுகள் குலம்தரும்- ஷைலஜா
 
அனுபவப் பதிவுகள்   கண்மணி அன்போடு

பல்சுவை பதிவுகள்   கதம்ப உணர்வுகள்-மஞ்சுபாஷிணி (ஃபேஸ்புக்கில் அருமையான கவிதைகளை இங்கும் தொகுக்கலாம்)

அனுபவப் பகிர்வுகள்  கோவை2தில்லி-ஆதிவெங்கட்
 வாழ்த்துக்கள் பெண்களே !!!!

என்னுடைய வலைச்சர வாழ்க்கை இன்றோடு முடிவடைவதில்லை..ஏனெனின் நான் இணைந்துள்ள பெரும்பாலான வலைதளங்கள் வலைச்சரத்தின் மூலம் அறிமுகமானவையே... அதனால் தொடர்ந்து அதனுடன் இணைந்திருக்கத்தான் போகிறேன் பின் தொடர்பவளாக....என்னுடன் ஏழு நாள்  இணைந்திருந்து ஊக்கமளித்த அத்துணை நட்புகளுக்கும் என் நன்றிகள். இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர ஆசிரியர் குழு சீனா ஐயா, தமிழ்வாசி பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

போய் வருகிறேன் நட்புக்களே.....



Saturday, October 26, 2013

நட்பு வட்டம்

                                                               நட்பு வட்டம்


 கண்டிப்பாய் கரை சேரும் இந்த நட்பு வட்டம்....

****
 நாட்பட்ட மன அழுத்தமோ ,மன இறுக்கமோ அல்லது மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்களில் சுரக்கும் பொருட்களின் அளவு மாறுபாட்டாலோ மன நோய்கள் உண்டாகிறது அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

ஹிஸ்டீரியா (Hysteria)
     மூர்க்கமான கட்டுப்படுத்த முடியாத மன உணர்வு

ஆட்டுவிப்பு நோய்(Obsession)
      ஒருவர் மனதில் ஆதிக்கம் செலுத்துகின்ற இடையறாத கருத்து அல்லது எண்ணம்

மனத்திரிபு (Paranoia)
        சுய முக்கியத்துவம் பற்றிய திரிபுணர்வு மற்றும் தனக்கு எதிரான சதி பற்றிய திரிபுணர்வு

அதீதக் கவலை(Hypochondrial)
           தன் ஆரோக்கியம் பற்றிய அதிகமான கவலை. நன்னிலையில் இருக்கும்போது பிணி இருப்பது போன்று உணர்தலே ஆகும்

தப்பெண்ணம் (Delusion)
             மனதில் தவறான எண்ணம் கொண்டு உண்மையற்றவற்றை நம்புவது

மாறுபடுத்தி உணர்தல்(Illusions)
          எண்ணச் சிதறல்களின் தொடர்பாக பொருட்களை விபரீதமாக மாறுபடுத்தி வெளிப்படுத்துவது

மிகுபயம் (Phobia)
      பயம் காரணமாக ஒரு பொருளையோ அல்லது அந்தச் சூழ் நிலையினைத் தவிர்த்தல்.

ஒனிரோப்ரீனியா
          கனவு உலகத்தில் சஞ்சரிக்கும் நிலை

ஸ்கீஸோஃபெர்னியா
          எண்ணச் சிதறல் நோய். சமூக வாழ்க்கையிலிருந்து பின்னடைதல் ஏற்படும்

நியூரோசிஸ்
        மனதின் மாறுபாடு காரணமாக நரம்பியல் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படும்போது பல குறி குணங்கள் தோன்றும்

இதெல்லாம் குறைபாடெனத் தெரியாமலேயே அப்படியே விடும் போது நோய் தீவிரமாகி அடுத்த கட்டத்திற்கு செல்லலாம். ஆரம்ப கட்டத்திலேயே மன நல ஆலோசகரிடமோ, மருத்துவரிடமோ செல்லலாம். உடலின் குறைபாடு வலி உணர்வதால் உடனே மருத்துவரிடம் செல்கிறோம். ஆனால் மனதில் குறை ஏற்படுவது அதைவிட பெரிய வலி என்பதை ஏன் உணர மறுக்கிறோம்

****


என்  நட்பு இணைப்புகளில் எனக்குப் பிடித்த பதிவுகளின் அணிவகுப்பு..

 சந்தித்ததும் சிந்தித்ததும் -வெங்கட் நாகராஜ்

இனிமையான  ஃப்ரூட் சாலட் 

அருணா செல்வம்

குட்டிக் கதை ராணி (இப்ப கொஞ்ச நாளா குட்டிக் கதைகளை காணாமல் ஏங்கிப் போயிருக்கிறேன்)


வீடு திரும்பல்

சுய முன்னேற்றப் பதிவுகள் (Who moved my cheese - தமிழாக்கம் இன்னும் என் நினைவில்)

தமிழ்மயில் - உஷா அன்பரசு

கதைகளில் உலாவரும் அறிவான கருத்துக்கள், கவிதைகளில் செறிந்து நிற்கும் உண்மைகள்

ரஞ்சனி நாராயணன்

மருத்துவ உண்மைகள்

எங்கள் ப்ளாக்

பாசிட்டிவ் செய்திகள்

கடல்பயணங்கள்

தொழிற்சாலைகளிலே உட்புகுந்த பதிவுகள்

மின்னல்வரிகள்

 நகைச்சுவைப் பதிவுகள் (சமீபத்தில கவிதையும் எழுத ஆரம்பிச்சுட்டார் )

முத்துச்சிதறல்

சின்னச் சின்ன வீட்டுக் குறிப்புகள்

கரைசேரா அலை

இனிய கிராமத்துக் கவிதைகள்

தீபா

இயல்பான நிகழ்வுகள்

தளிர்-சுரேஷ்

குட்டி குட்டி ஹைகூக்கள்

வினையூக்கி

அறிவியல் சார்ந்த சிறுகதைகள்

மூங்கில் காற்று-டி.என்.முரளிதரன்

நிகழ்வுகள் குறித்த விவாதங்கள்


திண்டுக்கல் தனபாலன்

தன்னம்பிக்கைத் தொடர்கள்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

கவிதைகள் இவரால் மட்டும் எப்படி தினமும் முடிகிறது....
 நிறுத்தி வைத்த தொடர்கதை (வாழ்வை) தொடரலாமே ரமணி சார்


இவர்களில் பலரை பலரும் அறிவோம் ... ஆனால் புதிதாக உள் நுழைபவர்கள் இந்தத் தளங்களை சென்றடையவே இந்தப் பதிவு.



Friday, October 25, 2013

புத்தம் புது காலை

                                                   புத்தம் புது காலை



*******

மன அழுத்தம் எனும் வார்த்தை இன்றைய அவசர வாழ்வில் சாதாரணமாகியுள்ளது. மன அழுத்தம் ஏற்படும்போது அட்ரினலின் மற்றும் கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள் சுரக்கின்றன. இது இருதய துடிப்பை அதிகப்படுத்தும். மீண்டும் மீண்டும் மன அழுத்தத்திற்கு உள்ளாவதால் செரடோனின் (நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்தக் கூடியது)எனும் ஹார்மோனின் அளவு மாறுபடுகிறது.  குருதி சுற்றோட்டம்  பாதிப்படைகின்றது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. உடலின் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. மேலும் மூளையிலுள்ள செல்களின் அளவு குறையும். இதனால் ஞாபகமறதி உண்டாகும். மன அழுத்தத்தால் இருதய நோய், மன நிலை மாறுபாடு, வெறுப்பு , தூக்கம் பாதிப்பு, அதிக இரத்த அழுத்தம், தலைவலி, குடி வெறி போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பாகின்றது.
மேலும் நரம்பு மண்டலமும் பாதிப்பிற்குண்டாகி அதனால் அது தன் கட்டுப்பாட்டினை இழக்கிறது. மேலும் குடலின் இயக்கங்களும் பாதிப்படைகிறது.

மனவியலின் தந்தை என்றழைக்கப்படும் ஃப்ராய்டு கொள்கைப்படி ஒரு மனிதனின் சிறு வயதில் ஏற்படும்  நல்ல நிகழ்வுகளோ, அல்லது மறுக்கப்படும் நிகழ்வுகளுக்கோ ஏற்றார் போல் மனிதனின் குண நலன் மாறுதல் ஏற்படும் என்கிறார்.  தாயிடம் கிடைக்காத அன்பு, மல ஜலம் கழிப்பதை பண்படுத்தும் காலத்தில் ஏற்படும் விரும்பத்தகாத நினைவுகள், தன்னை உணரும் காலம் தந்தையையோ, தாயையோ போட்டியாக எண்ணி மருகுதல், பள்ளியில் நடைபெறும் தாழ்மைப்படுத்தல் போன்ற நிகழ்வுகள் இவையெல்லாம் அவர்களின் வாழ்வில் மறக்காத நினைவுகளாக ஆழ்மனதில் படிந்து பிற்காலத்தில் அவர்களின் ஆளுமைத்தன்மையை ஆக்கிரமிக்கிறது.

மேலும் அவரின் பின் வந்த எரிக் எரிக்சன் அவர்களின் கொள்கைப்படி ஒவ்வொரு பருவத்திலுமே ஏற்படும் நல்ல செயல்கள் நல்ல ஆளுமைத் தன்மையையும், எதிர்மறை நிகழ்வுகள் விரும்பத்தகாத ஆளுமைத்தன்மையையும் ஏற்படுத்தும் என்கிறார்...  உங்களின் ஆளுமையை மாற்றிக்கொள்ளவும், குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை, சுய மதிப்பை உயர்த்தவும் உங்கள் தேடுதலை விரிவுபடுத்துங்கள்

******



இன்று  சொல்லப்படுவர்கள் ஒன்று புதிய எழுத்தாளர்களாகவோ இல்லை என்றால் ஏனோ அவ்வளவாக அங்கீகரிக்கப்படாமல் இருப்பவர்கள்.... அதனால் இவர்களின் பதிவுகள் குறித்த விமர்சனம் இல்லை ...


.இப்படிக்கு இளங்கோ  
                 இவரின் பதிவில் நூல் விமர்சனங்களும், இயல்பான நிகழ்வுகளும் கொண்டது.

பலகை-கீர்த்திகாதரண்
                          கல்வி குறித்த பதிவுகள் அதிகம் உள்ளது

சிகரம்-பாரதி
             
                    எல்லா விதமான செய்திகளையும் தொட்டுச் செல்லும் பதிவுகள்

கீதாவின் வண்ணக் களஞ்சியம் 

              உள் மன தேடலான பதிவுகள்

கி.மு.பக்கங்கள்

                  நூல் மற்றும் எழுத்தாளர்கள் குறித்த பதிவுகள்
நினைவுகள்-அபயா அருணா


                     நிகழ்வுகள் குறித்த நினைவுகள்

உங்கள் எழுத்துலகம் அருமையானது வாழ்த்துக்கள்.....


இவங்கெல்லாம் நல்லா எழுதிக்கொண்டு இருந்தாங்க இப்ப கொஞ்ச  காலமா ஏனோ எழுதுவதை நிறுத்தியிருக்காங்க....
கண்டிப்பாக திரும்ப வருவார்கள் எனும் நம்பிக்கையில்....

நினைவில் சில.... கனவுகள்

                அனைத்து விதமான பதிவுகளும் சமையல் குறிப்பு உட்பட (முக்கியமா பாலாக் கீரை)

வரிக்குதிரை-அருண்குமார்

         சமூகம் சார்ந்த குறிப்பாக மலையகத்திலிருந்து தொடர்...
 
என் ஜன்னலுக்கு வெளியே-நிரஞ்சனா

              இளைய தலைமுறை பதிவுகள்

மழை கழுவிய பூக்கள் -அதிசயா

                 இனிய கவிதைகள்

வரலாற்றுச்சுவடுகள்

                      அறிவியல் ரீதியான சூழல் பதிவுகள்


உங்கள் எழுத்துலகம் தொடர வாழ்த்துக்கள்





Thursday, October 24, 2013

சமூகம் சிந்திப்போம்

                                                             சமூகம் சிந்திப்போம்





****
படித்தது..

அப்பத்தாவோடு கடலைச் செடி பிடுங்க காட்டுக்குப் போவோம். கொத்துக் கொத்தாய் செடிகளைப் பிடுங்கி மடி நிறப்பும் அப்பத்தா ஓரிடத்தில் மட்டும் செடிகளைப் பிடுங்காமல் வட்டமாய் கோடு கிழித்து நகர்ந்து போவாள். பிறிதொரு நாளில் அறிந்து கொண்டோம் பிடுங்காமல் விட்ட கடலைச் செடிகளின் நடுவே காடைக் குருவி முட்டைகளை வைத்திருந்தன என்பதை, கடலைச் செடிகளை தியாகம் செய்து காடை முட்டைகளைப் பாதுகாத்த அப்பத்தாவின் கருணை வழியும் முகத்தோடு கொஞ்சம் பேரன்களும்,பேத்திகளும் இருக்கவே செய்கிறார்கள். கடந்த ஆண்டு உத்தர்காண்ட் மானிலத்தில் பள்ளி ஒன்றில் ஓங்கி வளர்ந்த மரமொன்றை வெட்டிச் சாய்க்க அம்மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த 260 கொக்குகளின் குஞ்சுகளும் பொதைபொதையாய் நசுங்கிச் செத்தன. அதைக் கண்டு பதறி அழுத குழந்தைகளின் தோய்ந்த ஈரத்தில் தான் சூழலியலம் குறித்து எழுதியும் பேசியும் வருகிறேன்
- எழுத்தாளர் சதாசிவம்-இறகுதிர் காலம் நூல் முன்னுரையில்

****                            

இன்றைக்கு நாம சந்திக்கப் போறது சமூகம் பற்றி மட்டுமே சிந்திக்கும் வித்தியாசப் பதிவர்கள்...இவர்களில் சிலர் ரொம்ப குறைவாத் தான் பதிவிடறாங்க ..ஆனால் இவங்களோட பதிவை தொடர்ந்து படிப்பேன் .பல விஷயங்கள் தெரிந்து கொள்ளும் இல்லை.. இல்லை ...கற்றுக் கொள்ள வாய்ப்பு. நம்மை ஏதாவது ஒரு விதத்தில் சிந்திக்க வைக்கும் இவர்களின் பதிவுகள். இவர்களின் பதிவுகளுக்கு பெரும்பாலும் நான் மறுமொழி இடுவதில்லை..அவர்களின் பதிவுகளுக்குச் செல்லுங்கள் ஏன் என்று புரியும்...

இவர் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர்,கவிஞர் ஆகிய அடையாளங்களோடு ஒரு சூழல் போராளி....
 

பில் கேட்ஸ் - தனது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் எண்ணற்ற பேருக்கு வாழ்வளித்துக் கொண்டிருப்பவர்.இந்திய இளைஞர்களின் முன்மாதிரி தேர்வு. இந்த இருக்கப்பட்ட மகராசன் ஏன் ஒரு வாழைப்பழப் பஞ்சாயத்துக்கு வரவேண்டும்..? காரணம் இருக்கிறது.

இவரின் பதிவுகளில் அருமையான மொழிபெயர்ப்புகளை காணலாம் ஒவ்வொன்றும் உங்களை ஒவ்வொரு சமுதாய எல்லைக்கு அழைத்துச் செல்லும்.
அந்தக் காலத்து கிராமத்து வாசனை உணர வேண்டுமா... இந்த கிராமத்துக்குப் போலாமே

எவ்வளவோ மழைக் கவிதைகள் படித்திருப்போம்... இவரின் கைவண்ணத்தில் உள்ள வித்தியாசம் உணருங்கள்.....



. இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் சமூக ஏற்றத்தின் வெவ்வேறு தளங்களைத் தொட்டுச் செல்லும்..

 நாம் சாப்பிடும் போது நாம் உண்ணும் உணவு எங்கு கிடைக்கிறது? எப்படி கிடைக்கிறது? அதன் விலை எப்படி யாரால் நிர்ணயிக்கப்படுகிறது? அதனால் நம் உணவின் விலையில் என்ன மாற்றம் ஏற்படுத்தப்போகிறது ? என்பன போன்ற கேள்விகள் நம்முள் எழுந்துள்ளதா? இந்தத் தொகுதியைப் படியுங்களேன்.... இந்தக் கேள்வியுடன் பதிலும் பதிவிலேயே கிடைக்கும்...


இயற்கை கொடுத்துள்ள கொடையான காடுகளை அழித்தால் நமக்குத்தான் எவ்வளவு பாதிப்பு... இப்போதே அடைந்தாக வேண்டும் எனும் நம் எண்ண வேகத்தால் எப்படி அதனை அழிக்கிறோம் இதற்கு உலக அரசியலின் பங்கு என்ன என்பதையும் இந்தப் பதிவில் படியுங்கள்...  நாம் சூழல் அக்கறையாளராக இருக்க வேண்டும் என்று எண்ணினால் நம் வீட்டின் முன் வைக்கும் மரம் மட்டும் போதாது...



இவருடைய  நிலைத்தகவல் பக்கங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமூகக் கதை பேசும்.

 நாம் ஒரு கம்ஃபர்ட் ஸோனில் அமர்ந்து கொண்டு யோசித்தால் சமூகம் எந்த பிரச்சனையும் இன்றி சென்று கொண்டிருப்பதாய்த் தான் தோன்றும். அதற்காக சமூகத்தின் கடினத்திற்குள்  புகுந்து செல்ல வேண்டுமா என்றால் தேவையில்லை . இது போன்ற புத்தகங்கள் வழி காட்டும்.. இந்தப் புதினத்தை  நான் வாசிக்கவில்லை ...வாசித்தறிய இந்த புத்தக விமர்சனம் பயன்படும்... நானெல்லாம் விமர்சனம் எழுதுவதென்றால் அதிலுள்ள வரிகளைக் கையாண்டு முடித்து விடுவேன்.. இது போன்ற எழுத்துக்களைப் படிக்கும் போதுதான் உணர்வாலும், உள்ளத்தாலும் எழுச்சி பெறுவோம்.


கல்வி வியாபாரப் பொருளாக்கப்பட்டிருப்பது நமக்கு தெரிந்தாலும் அதன் தெரியாத சில கருப்பொருளைக் காட்டியிருக்கிறார் இந்தப் பக்கத்தில்...




இவரின் பதிவுகளைப் பலர் படித்திருப்பர். எழுத்து வடிவத்தால் ஈர்க்கப்பட்டுத்தான் படித்தேன். இதை எப்படி சமூகத்தோடு இணைத்தேன்... ஒவ்வொரு பதிவிலும் உள்ளீடாக இருக்கும் சமூக நிர்பந்தங்களும், ஆழமான சமூக முரண்பாடுகளையும் சொல்வதாக இருப்பதே இவரின் பதிவின் சிறப்பு. இது இப்படித்தான் இதனை மாற்றுவதும் , ஏற்றுக்கொள்வதும் வாசகனாகிய உந்தன் பொறுப்பு என்பதாகத் தான் இவரின் ஒவ்வொரு பதிவையும் உணர்கிறேன். இவரின் பதிவுகளில் வரும் புகைப்படங்களால் ஈர்க்கப்படாதோர் மிகக் குறைவு... அதைப் பார்க்கும் போது உள்ளே ஆழமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது அதனால் இப்போது உங்கள் மன நிலையை நிதானப்படுத்திக்கொள்ளுங்கள் என்பதாக உணர்கிறேன் நான்.

இந்த இரண்டு பதிவுகளைப் படியுங்கள்..மற்றதை நிறுத்தாமல் படித்து விடுவீர்கள்....



இதையெல்லாம் படிக்கும் போது  எனக்கே கொஞ்சம் சுமையாகிப் போனதான உணர்வு....


இவருடைய இந்தப் பதிவின் வாயிலாகத் தான் இவரின் மற்ற பதிவுகளுக்குச் சென்றேன். நானும் தூப்புக்காரி குறித்து எழுதினேன் . ஆனால் இந்த விமர்சனம் இன்னொரு தூப்புக்காரியைப் படித்த உணர்வு கொடுத்தது...


அடுத்து....


சமூக விழிப்புணர்வைக் கற்கும் அதே நேரத்தில் அப்படியான மக்களை இனங் கண்டு பாராட்டி வருகிறார் ஒருவர் . இவரையும் இவர் பதிவுகளும் வலைதளத்தில் பிரபலம் என்றாலும் நல்ல விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் ஏதோ ஒரு உந்துதல் நமக்குள் ஏற்படுவது நிஜம் . அப்படியான இவரின் இந்தப் பதிவுகளைப் படிக்கலாமே....



மனிதர்களைப் படிப்போம்...மனிதம் அறிவோம்...


 நாளை சந்திப்போம்.....



Wednesday, October 23, 2013

இன்று கவிஞர்கள் தினம்

இன்று கவிஞர்கள் தினம்...




இந்தப் புகைப்படத்தைப் பார்த்ததுமே உங்கள் மனதில் ஏதேனும் வரிகள் ஊற ஆரம்பித்துவிட்டதா ...அப்போ நீங்க கவிஞர் தாங்க....

 இது எங்க ஊரு மக்களுக்காக இயற்கை அளித்த கொடை சிறுவாணி ஆறு... இதனைப் பாதுகாக்கா விட்டாலும் சிதைக்காம இருக்கணுங்க... எதிர்கால சந்ததியினருக்கு நம்மால சேமிக்க முடியற உண்மையான சொத்து இது தானுங்களே....
****
படித்தது...

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.
தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள் தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.
எப்படியெல்லாம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது மற்றும் எப்படி சேமிப்பது , எப்படி பாதுகாப்பது என்று சிந்திப்போமா....
****

 நண்பர்கள் தினம், காதலர்கள் தினம் அப்படிங்கற மாதிரி கவிஞர்கள் தினம்னு ஒன்று இருக்கலாம். எனக்குத் தெரியலை...ஆனா இன்னைக்கு இந்த பதிவுல அவங்களோட தினம்...
இன்று சில கவிஞர்களைப்  பார்ப்போம்.



ப.தியாகு    இவரின் கவிதைகளோடு தான் படித்த  நல்ல கவிதைகளையும் பகிர்ந்து கொள்கிறார். இயல்பான கவிதைகள் அனைத்துமே...சின்ன வரிகளில் ஒரு ஈர்ப்புடனும்...

இதோ உங்கள் வாசிப்பிற்காக ஒன்று....


 குருச்சந்திரன் கொஞ்ச மாதமாக எழுதாமல் இருந்த இவர் தற்போது எழுத ஆரம்பித்துள்ளார் வாழ்த்துக்கள். இவரின் சமூகக் கவிதைகளில் வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதைப் போன்ற பாவனை கையாளப்படுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதோ படித்துப் பாருங்கள்.


 நம்மை  மலரும் நினைவுகளில் கொண்டு செல்லும் இந்தக் கவிதை...



இந்திரா கிறுக்கல்கள்  இந்திரா இம்சிக்கிறேன் என்று  அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர் கவிதைகள் இம்சைதான். இவரின் சமூகக் கவிதைகளின் வீரியம் என் இரவுத் தூக்கத்தைக் கெடுத்தது நிஜம்.  எங்கிருந்து வருகிறதோ இந்த வரிகளெல்லாம் இவருக்கு என எப்போதும் நினைப்பதுண்டு...

இதோ  சான்றுக்கு ஒன்று


எங்கேயும், எப்போதும், ஏதோ ஒரு தோழியின்  குமுறல் இதோ....



வெற்றிவேல்....இரவின் புன்னகை  இவரின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகள்... அவற்றிற்குரிய இலக்கணம் மாறாமல் அப்படியே... ஆனாலும் வித்தியாசமான இந்தக் காதல் நம்மை ஈர்க்கத்தான் செய்கிறது....இப்படியொரு காதலைப் பார்க்க நமக்கும் ஆசைதான்....

மற்றுமோர் ஜென்மம் உண்டெனில்   இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள். புரியும்.

மேலும் களப்பிரர் குறித்த கட்டுரை நிஜமாகவே நமது தேடுதலுக்கு தீனி போட்டே செல்கிறது தொடருங்கள்....


இளஞ்சேரல்...
 நல்ல எழுத்தாளர்.... மூன்று புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்...
இவர் முக நூலில் நிறைய கவிதைகள் பகிர்வார். இலக்கிய வாசனை கலந்ததும், கிராமிய மணம் கமழ்வதுமாய்..... ஆனால் வலைப் பக்கத்தில் பல்வேறு புத்தகங்களை விமர்சனம் செய்து வருகிறார்.... இடையே சில கவிதைகளும்...


கவிதைகளை நீங்கள் படித்து உணரவே வரிகளை நான் கையாளவில்லை....

எல்லாக் கவிதைகளையும் படித்து ரசிச்சீங்களா.... நாளை சந்திப்போம்.....








Tuesday, October 22, 2013

எங்க ஊர்க்காரங்க....

                                                     எங்க ஊர்க்காரங்க......





எங்க ஊரு கோயம்புத்தூருங்கோ.... இந்த பஸ் ஸ்டேண்ட்ல இறங்கி போனைப் போடுங்...எங்க ஆளுங்க கவனிக்கற கவனிப்பை எப்பவும் மறக்க மாட்டீங்க... என்னங்  நாஞ் சொல்றது  நிசந்தானுங்களே கோவை மக்களே...


தினமும் எனக்குத் தெரிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு பின் வலைப்பதிவர்கள் குறித்து பகிர்கிறேன். இங்கு நான் அறிமுகப்படுத்துகிறேன் எனும் வார்த்தை பயன்படுத்த விரும்பவில்லை. ஏனெனில் இங்கு பகிரப் போகும் பலர் உங்களுக்கு அறிமுகமானவர்களாயிருப்பர். சிறந்த எழுத்தாளர்களாகவும் இருப்பர். அவர்களை கற்றுக்குட்டியான நான் அறிமுகப்படுத்துகிறேன் என சொல்வது எனக்குச் சரியெனப் படவில்லை.அவர்களின் எழுத்துக்களில் எனக்கு பிடித்த சில பக்கங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே....

***   
வலைப்பதிவில் கருத்துக் கூற புதிதாய் வரும் நண்பர்கள் அவர்களின் வலைதளத்தின் பெயரையும் அங்கேயே பதிவு செய்துவிட்டால் உங்களைத் தொடர வசதியாயிருக்கும்...என்னைப் போன்ற யாகூவில் தொடர்பிலிருப்பவர்கள் கூகுள் ப்ளஸ்ஸில் நுழைந்தால் ஒரே கன்பியூசன்ஸ் ஆஃப் அமெரிக்கா.... யாரையும் பின் தொடர முடியாமல் போகிறது....

காட்டு விலங்குகள் அழிவதால் நமக்கு என்ன என்பவரா நீங்கள்? ஒரு பெரும் உயிரினம் முற்றிலும் அற்றுப் போனதால் வளமான சமவெளிப் பகுதிகளைத் தாண்டியுள்ள பிரேசிலின் கிழக்கு அமேசான் பகுதியில் பாஸ்பரஸ் 98 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளது. உயிரினங்களும் தாவரங்களும் வளர பாஸ்பரஸ் ஊட்டச்சத்து மிகவும் அவசியம். பாலூட்டிகளில் மிக அதிகமாக உள்ள இரண்டாவது மிகப் பெரிய கனிமம் பாஸ்பரஸ். தாவரங்களில் உயிரோடு உள்ள ஒவ்வொரு செல்லிலும் அது அவசியம் இருக்க வேண்டும். உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச் சத்து குறைபாடு ஏற்படும்.
***

எப்பவுமே  நம்ம ஊர்க்காரங்க எனும் போது ஒரு தனிப்பாசம் ஏற்படுவது இயல்பு...எனக்கும் அப்படித்தான்.....அப்படியாக  கோவை நட்புக்களின் பதிவுகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன்....

கோவை. மு,சரளா .... இவரின் கவிதைகளையும், கட்டுரைகளையும் படித்திருப்பீர்கள்... சமூகக் கருத்துக்களும், காதலும் இவரின் கவிதைகளின் பார்வையாய் இருக்கும். சமூகக் கவிதைகளில் இருக்கும் கோபமும் , அதன் வீச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் படித்துப் பாருங்கள்...

"ஒவ்வொரு முறையும்
உயிர்ப்பிக்கப் படுகிறேன்
பிணமாவதற்கான சாத்தியங்களோடு" என்ற வரிகளுடனான
"யுத்தத்தில் வீசப்பட்ட வார்த்தைகளில் 
இருந்து கசிகிறது அழுகிய பிணத்தின் வாடை 
உற்று பார்க்கிறோம்  அதன் 
ஓரங்களில் நெளிகிறது புழுக்கள்"
நல்லவர்கள் போர்வையில்
வல்லூறுகள் பறக்கும்
சிவந்த வானில்
சிட்டுக்குருவிகளாய் நாங்கள்


இவரைத் தெரியாதவங்க ரொம்ப குறைவு...ஆனா இவரின் உணவையும், சுற்றுலாவையும் தாண்டி உணர்வாளனாக எழுதியுள்ள இரு பதிவுகள் இதோ...




இவரின் சின்ன சின்னக் கவிதைகளிலும் , கட்டுரைகளிலும் நிரம்பியிருக்கும் சமூக அக்கறை எனக்கு மிகவும் பிடிக்கும்

சான்றுக்கு இதோ ...

இந்தக் கவிதைகள்...
தனக்குத் தானே ஏணியாய் இருப்பவனைப் பாருங்கள்...

அதிகாரமே அலங்கோலப்படுத்தும் கொடூரங்களை இங்கே தோலுறித்துக் காட்டும் கவிதை....



இவரோட பதிவுகளைப் படிக்கும்போதெல்லாம் இதையெல்லாம் தேட வேண்டும் எனும் இவரின் தேடல் எனக்கு ஆச்சரியத்தையும், அவரின் ஆர்வம் 
குறித்த கேள்வியையும் எனக்குள் எப்போதும் ஏற்படுத்தும். ஏனெனில் அவரின் பணிக்கும், தேடலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான். இந்த அறிவை நாமெல்லாம் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு....

சான்றுக்கு சில பதிவுகள்....





இவரோட பதிவுகளும்  நிறைய பேருக்கு பரிட்சயமானதாகத்தான் இருக்கும். இவரின் வித்தியாசமான எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும். முதலிலெல்லாம் ஆனந்தவிகடன் சினிமா விமர்சனம் படிப்பது போல் இப்போ ஆவியோட விமர்சனங்கள்... எல்லாவற்றையும் இங்க லிங்க் கொடுக்க முடியாதே...அழகா தொடர்ந்திட்டிருந்த தொடர்கதையைக் இப்போ காணோம்... தொடரும் எனும் நம்பிக்கையோடு....


 நகைச்சுவையாய் அவர் அவருடன் பயணித்தது குறித்து எழுதியிருப்பதைப் பாருங்க.... குழம்பிட்டீங்களா ஆவி ஆவியைச் சந்தித்ததைச் சொல்கிறேன்...


 நிகழ்வை விட புகைப்படங்கள் உங்களை ஆவியுலகிற்கே அழைத்துச் சென்று விடும்.


அதே போல முக நூல் பக்கத்தில் கவிதைகள் எழுத ஆரம்பிச்சிருக்கார்.. சின்னதா அழகா .... அதோட தொகுப்பை வலைப்பதிவிலும் போடலாம் ஆவி...


இவரின் பதிவுகள் பெரும்பாலும் சினிமாவை நோக்கியே இருப்பதால் அனைத்தையும் நான் படித்ததில்லை. ஆனாலும் இவரின் இந்தப் பதிவைப் படித்த பின் தான் இந்தப் படத்தை சென்று பார்த்தேன்...

அதிலும் இந்த வரிகள்...
இங்கிலிஷ் விங்கிலிஷ்’  
என்னைப்போன்ற 
அலட்சிய கணவன்களுக்கு,
செலுலாய்ட்  போதி மரம்


அதே போல வெளி நாட்டுப் படங்கள்  பார்க்க வேண்டும் எனும் ஆர்வத்தை தூண்டும் இவரின் விமர்சனங்கள். இதுவரை பார்த்ததில்லை என்பது வேறு..இருந்தாலும் இவரின் பதிவே படம் பார்த்த திருப்தியளிக்கும்

அதில் ஒன்று....

 நீங்களும் படித்துப்பாருங்கள்... ஆர்வம் தானாக வரும்....

இன்று இவர்கள் போதுமென்று நினைக்கிறேன்.... நாளை சந்திப்போமா.....

Monday, October 21, 2013

இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....


                                     இந்த வாரத்தில் உங்களுடன் நான்.....


                                      





தட்டில் பூக்களைக் கொட்டி வைத்து வரவேற்பார்கள்... ஏதோ என்னால் முடிந்தது இந்த ஒற்றைப் பூவைக் காண்பித்து வரவேற்கிறேன்....


வலைச்சர ஆசிரியப் பணிக்கு என்னை அழைத்த  சீனா அய்யா அவர்களுக்கு என் நன்றிகள். 

என்னைப் பற்றி வலைச்சர அறிமுகத்திலேயே அறிந்திருப்பீர்கள். கல்லூரிக் காலங்களில் பத்திரிக்கைகளில் எழுதுவதில் இருந்த ஆர்வம் காரணமாய் கல்லூரி தனிச்சுற்றான "குயிலிசை" யில் இரண்டாண்டுகள் ஆசிரியர் குழுவில் இருந்தேன்.எழுத்துலகில் என் ஆர்வத்தை உணர்ந்த  என் தோழி வலைப்பக்கத்தில் எழுதச் சொன்னாள்.  அப்படியாக எல்லோரும் மறந்து போன பெரியாரை அவரின் கடவுள் மறுப்பு எனும் கொள்கையல்லாமல் மற்ற கொள்கைகளும் தெரிய வேண்டும் என்பதாக அவரைப் பற்றி எழுதி வருகிறேன். வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருந்த என்னை "ஆனந்தம்" மாத இதழில் மக்கள் தொடர்பாளராக பணியாற்ற அழைத்தார்கள்... வலைத்தளத்தால் எனக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பு. ஆறு மாதங்களுக்குப் பின்  நிர்வாகக் காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது அந்த இதழ். இன்னமும் இணைய இதழ் ஆரம்பிக்க வேண்டும் என் ஆர்வம் என்னுள்ளே கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை என் நண்பர்கள் அறிவார்கள்..

ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் சமூக வேலைகளைச் செய்ய என் பார்வையைத் திருப்பிய தருணம் இதோ வலைச்சர  ஆசிரியர் அழைப்பு.   நம் ஆழ்மன  ஆசைகள்  ஏதாவது ஒரு விதத்தில் நிறைவேற்றப்பட்டுக்கொண்டுதான் இருக்குமோ? அதனால் தான் நேரமின்மை எனும் போதும் நிராகரிக்காமல் நேரம் கேட்டு பெற்றுக் கொண்டேன்.   அதற்கு இசைவு தெரிவித்த சீனா அய்யா அவர்களுக்கு மீண்டும் நன்றிகள்.

       "தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்
    தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்".... எனக்குப் பிடித்த பாடல் வரிகள்... அப்படியான என் தேடலில் நான் சந்தித்த  ,பாதித்த  நிகழ்வுகளை பிப்ரவரி 2012 லிருந்து பகிர்ந்து கொள்கிறேன். என் வலைப்பக்கம் குறித்து பல நண்பர்களிடம் தெரிவித்த கிட்டத்தட்ட மக்கள் தொடர்பாளராக இருந்த  நண்பர் சுப்புவிற்கும் , என் ஆர்வத்தை ஊக்குவிக்கும் என் கணவருக்கும் , என் பக்கத்தில் பல மாற்றங்களை அவ்வப்போது செய்து கொடுக்கும் என் மகன் முகிலுக்கும் என் நன்றிகள்.

 நானாக எழுதிக் கொண்டிருந்த என்னை வலைப்பதிவர்கள் இணைப்பில் கொண்டு வந்தவர்கள் சங்கவி  , கோவை நேரம்  இருவருக்கும் என் நன்றிகள்.
அக்டோபர் மாதம் 2012 -ல் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியவர் சிவஹரி அவர்கள். அவருக்கும் என் நன்றிகள். என் சமீபப்  பதிவுகளை பலர் படித்திருப்பர் . சில பதிவுகள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதன் வாயிலாக பார்வைக்கு வந்திருக்கும் ..யாரும் படித்திராத எனக்குப் பிடித்த சில பதிவுகள் இங்கே உங்கள் பார்வைக்கு.....

 என் ஆவேசம் காட்ட முடியா தருணங்களை  எடுத்துக்காட்டிய பதிவு.  சிறுமை கொண்டு பொங்குவாய் வா வா வா

பால்ய காலத்துக்கு அழைத்துச் செல்லும் நினைவில் நின்றவை

வாழ்க்கையையும் அதற்குப் பின்னான  தேடலையும் பகிர்ந்த பதிவு... வாழ்வின் தேடல் -1

அவ்வப்போது கவிதை கிறுக்கும் எனக்குப் பிடிப்பதுண்டு . அப்படியான கிறுக்கல்களில் ஒன்று இதோ நான்.... நான்

என் தோழி கீதா இளங்கோவன் அவர்களின் வலி தரும் படைப்பு அக்ரிணைகள் அதையும் கண்டு  திரு நங்கைகளின் வலி உணருங்கள். அவர்களை சமூகத்தின் அங்கமாக்க நம்மால் என்ன செய்ய முடியும்? ஆவணப்படம் ஒரு பார்வை

 நாளை சந்திப்போம்.....