வலைச்சரத்தில் முதல் நாள் - மலர்ந்தும் மலராத
➦➠ by:
ஊஞ்சல்- கலையரசி
எல்லோருக்கும் வணக்கம்!
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வலையுலகுக்குத்
தெரிந்தும் தெரியாத பதிவர் நான்….
இருந்தும் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரை செய்த திரு.கோபு சாருக்கும், அதையேற்று நியமனம் செய்த திரு. சீனா சாருக்கும், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
வலைப்பூ துவங்கிய புதிதில், விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்திய கீத மஞ்சரிக்கும், யுவராணி தமிழரசனுக்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் சாதனை என்று பெருமையாகச் சொல்லக்கூடிய செய்தி எதுவுமில்லை. அரசு வங்கியொன்றில் சீனியர் எழுத்தராகப் பணியாற்றும் எனக்குப் பிடித்த விஷயங்கள், வாசிப்பும் எழுத்தும்.
வாசிப்புப் பழக்கத்துக்கு ஆசான் அப்பா. சிறுவயதிலிருந்தே எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், பிரபலமான வார இதழ்களுக்குக் கதைகள் எழுதியனுப்புவேன். ஆனால் அவை எல்லாமே ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,’ என்ற முத்திரையுடன், போன வேகத்தில் திரும்பி வந்தன.
என் தம்பி ‘முத்துச்சிப்பி’ என்ற பெயரில், சில மாதங்கள் கையெழுத்து இதழ் நடத்தினான். அதில் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்கு என எல்லாமும் எழுதி, அதற்கேற்ற படங்களையும் அவனே வரைவான். நானும் அதில் எழுதினேன். எங்களது படைப்புக்களைப் பற்றி, ‘ஆகா பிரமாதம்!’ என்று நாங்களே வாசகர் கடிதமும் எழுதிக் கொள்வோம்!
பெரியவர்களானதும், அப்பாவை ஆசிரியராகப் போட்டு வார இதழ் துவங்கி நடத்த வேண்டும் என்பது எங்கள் கனவாக இருந்தது. அப்போது தானே நம் எழுத்து முழுவதையும் பிரசுரிக்க முடியும்? அக்கனவு காலங்கடந்து தற்காலத்தில் இணையம் மூலம் மெய்ப்பட்டிருக்கிறது!
அடுத்தடுத்துக் கதைகள் திரும்பி வந்தாலும், விடாது நானும் எழுதியனுப்பியதன் பயனாக, ஒன்று குங்குமத்திலும், நான்கு தினமணிக்கதிரிலும், இரண்டு சிறுவர் மணியிலும் வெளியாயின. இணைய இதழான நிலாச்சாரலில், முப்பது வாரங்கள் தொடர்ந்து ‘நிலவினில் என் நினைவோடை,’ என்ற தலைப்பில் மலரும் நினைவுகளை எழுதினேன். அது மின் புத்தகமாக வெளிவந்தது. அதன் பின் தமிழ் மன்றத்தில் சில மாதங்கள் வாசம்.
2011 ல் ஊஞ்சல் என்ற வலைப்பூ துவங்கினேனேயொழிய, தொடர்ந்து எழுதுவதிலும், மற்ற பதிவுகளை வாசித்துக் கருத்து சொல்வதிலும் இடையிடையே நீ…..ண்…….ட இடைவெளி!
கோபு சார் வலைச்சரத்துக்குப் பரிந்துரைத்த பிறகே, பெரும்பாலான பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன்.
அலுவலகம்+ வீட்டுப்பணி முடித்து கிடைத்த நேரத்தில், அடிக்கடி காலை வாரும் இணைய இணைப்புடன் போராடிக்கொண்டு, வலைச்சரத்தில் புதிய வலைப்பூக்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆசையுடன் வலைப்பூவொன்றை அரிதின் முயன்று தேடிக்கண்டுபிடித்து, அதன் உறுப்பினர்ப் பட்டியலைப் பார்த்தால், அங்கு ஏற்கெனவே திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் தாமரை நடுநாயகமாக வீற்றிருக்கிறது! அடுத்ததாக திண்டுக்கல் தனபாலன் சாரோ, நல்லா ஏமாந்தீங்களா? இது ஏற்கெனவே எங்களுக்குத் தெரிஞ்ச வலைப்பூவாக்கும்! என்று சிரிக்கிறார்!
இவர்களால் மட்டும் எப்படி இத்தனை வலைப்பூக்களுக்குப் போய்ப் பதிவிடமுடிகிறது என்று வியப்பாக இருக்கிறது! நான் சொல்லப்போகும் பதிவுகளைப் பெரும்பாலோர் ஏற்கெனவே வாசித்திருப்பார்கள் என்றாலும், எனக்குப் பிடித்த பதிவுகள் என்ற வகையில் அவற்றை நாளை முதல் குறிப்பிட விரும்புகின்றேன்.
கீதமஞ்சரியின் கீதா மதிவாணன் எனக்குச் சில சுட்டிகளின் இணைப்புக்களைக் கொடுத்து உதவினார். அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
இனி நான் அறிமுகப்படுத்த விரும்பும் என் படைப்புக்கள்:-
1. கவிதை
i) புது மனைவி
திருமணமான புதிதில் மனைவியைத் திருப்திப்படுத்த விழையும் கணவனின் சங்கடங்கள் நகைச்சுவையாக. (ஆறு மாதங்களுக்குப் பிறகு நிலைமை தலைகீழாகும், அது வேறு விஷயம்!)
2. அனுபவம்+கற்பனை+நகைச்சுவை கலந்த சிறுகதைகள்:-
ii) நாய்க்கடி
3. சிறுகதைகள் எனக்குப் பிடித்தவை:-
ii) அம்மாவின் ஆசை (தமிழ் மன்றபோட்டியில் முதற்பரிசு பெற்றது)
iii) திருப்புமுனை (தினமணிக்கதிரில் வெளிவந்தது)
4. பயணக்கட்டுரை
மும்பை பயண அனுபவங்கள் (நகைச்சுவையுடன்)
5. விழிப்புணர்வு கட்டுரைகள்:-
ஒரு நாள் முதல்வன் கதையாக, ஒரு வார ஆசிரியர் பதவி வலைச்சரத்தில் எனக்குக் கிட்டியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே இப்பொறுப்பை நல்லவிதமாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது.
முதன்முதல் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் என்னை, வலைச்சரத்தின் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும், வாரமுழுதும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு, ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்லாதரவு நல்கிட வேண்டுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
நாளை எனக்குப் பிடித்த பதிவுகளுடன் சந்திப்போம்,
நன்றியுடன்,
ஞா.கலையரசி
|
|
அறிமுக உரை அருமை.
ReplyDeleteதிருமதி இராஜராஜேஸ்வரி , திரு .திண்டுக்கல் தனபாலன் அவர்களைப் பற்றி சொன்னது உண்மை. அனைவரையும் உற்சாகப்படுத்தி பின்னூட்டம் இடுவதில் அவர்களை யாரும் மிஞ்ச முடியாது. திருமதி இராஜராஜேஸ்வரி ஊரில் இல்லை போலும் இல்லையென்றால் வலைச்சரத்தில் முதல் வாழ்த்தும், அறிமுகபடுத்தபட்ட வலைத்தளம் சென்று வாழ்த்தும் சொல்லும் பண்பாளர்.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள் கலையரசி.
முதல் நபராக வந்து வாழ்த்து சொல்லிப் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
DeleteVGK >>>>> Mrs. கோமதி அரசு Madam.
Delete//திருமதி இராஜராஜேஸ்வரி ஊரில் இல்லை போலும் இல்லையென்றால் வலைச்சரத்தில் முதல் வாழ்த்தும், அறிமுகபடுத்தபட்ட வலைத்தளம் சென்று வாழ்த்தும் சொல்லும் பண்பாளர். //
அவர்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் உள்ளதாகத் தெரிகிறது.
http://jaghamani.blogspot.com/2015/01/blog-post_7.html இந்தப் பதிவினைத் தாங்கள் படிக்கவில்லை என நினைக்கிறேன்.
விரைவில் அவர்களின் உடல்நிலை பரிபூரணமாக குணமாகி மீண்டும் நல்லபடியாக திரும்ப நாம் எல்லோரும் கூட்டாகப் பிரார்த்தனைகள் செய்வோம்.
அன்புடன் VGK
உடல்நலமில்லை என்று அவர்கள் எழுதியதை வாசித்தேன். ஆனால் இது நாள் வரை இன்னும் பூரண குணமாகவில்லை என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன். நம் எல்லோருடைய வேண்டுதலில் நல்லபடியாக அவர் குணமாகி வருவார்; அதில் சந்தேகம் ஏதுமில்லை.
Deleteநன்றி... நன்றி...
ReplyDeleteசுருக்கமாக இருந்தாலும் சுய அறிமுகம் நன்று...
மேலும் அசத்த வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்!
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக பணியேற்றிருக்கும் தங்களின் பணி சிறக்க வாழ்த்தி வருக வருக என வரவேற்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வரவேற்புக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteசுய அறிமுகம் நன்று.
கலக்குங்க...
வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி குமார்!
Deleteஇளங்காலைப் பொழுதில் - இனியதொரு அறிமுகம்..
ReplyDeleteவாழ்க நலம்!..
குடியரசு தின நல்வாழ்த்துகள்!..
வாழ்த்துக்கு மிகவும் நன்றி சார்!
Deleteவர வேண்டும் வர வேண்டும்
ReplyDeleteவலைச் சரத்தில் சரம்
தொடுத்தல் வேண்டும்!
புதுவை(காரை) புதுமைப் பெண்னாய்
புறப்பட்டு நீவீர்
வர வேண்டும் இலக்கியம்
சிறப்பினை
தர வேண்டும்
தர வேண்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
கவி பாடி வரவேற்று வாழ்த்தும் வேலு சாருக்கு மிகவும் நன்றி!
Deleteஎங்களது படைப்புக்களைப் பற்றி, ‘ஆகா பிரமாதம்!’ என்று நாங்களே வாசகர் கடிதமும் எழுதிக் கொள்வோம்!
ReplyDeleteஇந்த நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு வாழ்த்துகள்.
அசத்துங்கள்..
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!
Deleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteசுய அறிமுகம் அழகு. புகைப்படம் அழகாக இருக்கிறது.
ராஜி அம்மா, திண்டுக்கல் தனபாலன் இவருவரும் இல்லாத தளம் என்பதி அரிதிலும் அரிது தான்
நன்றி சகோ
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி காயத்ரி!
Deleteமுதன்முதலில் ஆங்கில நாளிதழில் எனது கடிதம் வெளியானது. தொடர்ந்து கடிதங்கள், சிறுகதைகள் எனத் தெர்டர்ந்து தற்போது தினமணி மற்றும் தி இந்து நாளிதழ்களில் கட்டுரை எழுதும் அளவு உயர்ந்தமைக்குக் காரணம் வாசிப்பும் எழுதுவதுமே. தங்களின் ஏக்கமும் எண்ணமும் புரிந்தது. தொடருங்கள். தொடர்ந்து வருகிறேன். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/
தங்களது வாழ்த்துக்கும் தொடர்ந்து வருவதற்கும் மிக்க நன்றி சார்! இடைவிடாத முயற்சியுடனும், தொடர்ந்த ஊக்கத்துடனும் செயல்பட்டு ஹிந்துவிலும் தினமணியிலும் கட்டுரை எழுதுமளவுக்கு உயர்ந்தமைக்குப் பாராட்டுகள் சார்!
Deleteவலைச்சர ஆசிரியப்பணிக்கு வாழ்த்துக்கள். எழுத வேண்டும் என்ற பலரது கனவு இப்போது வலைத்தளங்கள் மூலம் சாத்தியமாகியிருப்பது வரம் அல்லவா?!
ReplyDeleteஆமாம், இன்று எழுதத் துவங்குபவர்களுக்கு இணையம் ஒரு வரப்பிரசாதம் தான். வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி கவிப்பிரியன்!
Deleteநல்லதொரு அறிமுகம் பா. ஊஞ்சலுக்கும் சென்று குழந்தைக் கவிதையை படித்து வந்தேன். வெகு சிறப்பு. வலைச்சர பணி வளமாக அமைய வாழ்த்துக்கள். உரிமையுடன் பா.. என்று தோழமையுடன் அழைத்து விட்டேன். தங்கள் வயது எதுவும் தெரியாமல். (தோழமைக்கு வயது ஒரு தடையில்லை என்பதாலோ ?)
ReplyDeleteவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சசிகலா. என்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். தோழமைக்கு வயது நிச்சயம் தடையில்லை!
Deleteஅறிமுகம் அருமையாக இருக்கிறது... வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜனா சார்!
Deleteஅன்பின் கலையரசி - அருமையான துவக்கம் - அருமையான சுய அறிமுகங்கள் - த.ம : 3 ;
ReplyDeleteபாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சீனா சார்!
Deleteஆஹா, தாங்கள் இன்றுமுதல், இந்தவார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
ReplyDelete>>>>>
இப்பொறுப்புக்குப் பரிந்துரை செய்த தங்களின் வருகை எனக்கும் மகிழ்வூட்டுகிறது கோபு சார்!
Delete//மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வலையுலகுக்குத்
ReplyDeleteதெரிந்தும் தெரியாத பதிவர் நான்….//
அருமையானதொரு பாடல் வரிகளுடன் ஒப்பிட்டுச்சொல்லியுள்ள தன்னிலை விளக்கம் பாராட்டத்தக்கதாக உள்ளது.
காட்டியுள்ள படமும் வெகு பொருத்தமே. :)
>>>>>
பாராட்டுக்கு மிக்க நன்றி சார்! என் மகன் எடுத்த படங்களிலிருந்து என் தலைப்புக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்து கொண்டேன்.
Delete//இருந்தும் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரை செய்த திரு.கோபு சாருக்கும், அதையேற்று நியமனம் செய்த திரு. சீனாசாருக்கும், திரு.தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.//
ReplyDeleteநெருக்கடியான சூழ்நிலைகளில் மட்டும் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் என்னை மெயிலிலும் தொலைபேசியிலும் தொடர்புகொண்டு உதவி கேட்பார்கள்.
நானும் எனக்கு அறிமுகம் ஆன + மிகத்தரமான பதிவர்கள் சிலரை மட்டும் தொடர்புகொண்டு அவர்களின் சம்மதம் கேட்டு, அவருக்குப் பரிந்துரை செய்வது வழக்கம்.
அதுபோலவே தான் தங்களின் நியமனமும் மிகவும் நியாயமாக இப்போது இன்று நடைபெற்றுள்ளது.
தட்டாமல் துணிந்து மிகுந்த ஆர்வத்துடன் ஒப்புக்கொண்டு வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு நான்தான் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைச் சொல்ல வேண்டும். மிக்க நன்றி, மேடம்.
மேலும் மிகத் திறமையாளரான தங்களை இந்த வாய்ப்பு தானாகத் தேடி வந்துள்ளதில் எனக்கு எந்தவிதமான ஆச்சர்யமும் இல்லை.
YOU ARE WELL DESERVED. :)
>>>>>
ஆஹா! தங்களின் இந்த ஊக்கமூட்டும் பாராட்டுக்களைப் படித்தவுடன் ஒரு பாட்டில் டானிக் குடித்தது போல் உற்சாகமாக உள்ளது. ஒரு வாரத்துக்கு இது தாங்கும்! மிகவும் நன்றி சார்!
Delete//சிறுவயதிலிருந்தே எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால், பிரபலமான வார இதழ்களுக்குக் கதைகள் எழுதியனுப்புவேன். ஆனால் அவை எல்லாமே ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்,’ என்ற முத்திரையுடன், போன வேகத்தில் திரும்பி வந்தன.//
ReplyDeleteஇன்றுள்ள எழுத்துலகப்பிரபலங்கள் பலரின் வாழ்க்கையிலும் [பிரபல சாஹித்ய அகடமி விருது வாங்கியுள்ளவர்கள் வாழ்க்கையிலும் கூட] ஆரம்ப காலங்களில் இதுபோலவே நிகழ்ந்துள்ளதாக நான் படித்துள்ளேன்.
உங்களின் [நம்] படைப்புகள், தங்களின் பத்திரிகைக்கு வராதா என ஏங்கி அவர்கள் வருந்தும் காலமும் ஒருநாள் வரக்கூடும். கவலையே படாமல் உற்சாகம் இழக்காமல் எழுதிக்கொண்டே இருங்கோ. இதை என் சொந்த அனுபவத்தில் நான் இங்கு சொல்கிறேன்.
>>>>>
உண்மை தான் சார்! நீங்கள் சொல்வது போல் கண்டிப்பாக நேரங்கிடைக்கும் போதெல்லாம் எழுதுவேன்.
Delete//என் தம்பி ‘முத்துச்சிப்பி’ என்ற பெயரில், சில மாதங்கள் கையெழுத்து இதழ் நடத்தினான். அதில் கதை, கவிதை, நகைச்சுவை துணுக்கு என எல்லாமும் எழுதி, அதற்கேற்ற படங்களையும் அவனே வரைவான். நானும் அதில் எழுதினேன். எங்களது படைப்புக்களைப் பற்றி, ‘ஆகா பிரமாதம்!’ என்று நாங்களே வாசகர் கடிதமும் எழுதிக் கொள்வோம்!//
ReplyDeleteஉள்ளதை உள்ளபடி அழகாக ஒப்புக்கொண்டு சொல்லியுள்ளதைப் படித்து மகிழ்ந்தேன்.
நாங்களும் ஒருசில நண்பர்கள் சேர்ந்து, ஒரு காலத்தில் கையெழுத்து இதழ் நடத்தினோம் [1975-76] . அதில் ஓவியர் + பெரும்பான்மை எழுத்தாளர் நானே!
வாசகர் கடித பகுதியெல்லாம் அதில் நாங்கள் ஏதும் வைக்கவில்லை. என் அலுவலக நண்பர்கள் ஒரு 10-15 பேர்கள் மட்டும் படிப்பார்கள். வாயால் பாராட்டுவார்கள்.
இதைப்படித்ததும் எனக்கு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது. :)
>>>>>
ஓஹோ! நீங்களும் கையெழுத்து இதழ் நடத்தினீர்களா? அந்த நாள் ஞாபகம் என்றுமே இனிமையானவை தாம்! கதை, கவிதை, தொடர், துணுக்கு என எல்லாமும் இருந்து வாசகர் கடிதம் இல்லையென்றால் முற்றுப்பெறாதே! அதனால் அதையும் நாங்களே எழுதி வெளியிட்டுக்கொண்டோம். அக்கம் பக்கத்தார் இதழை வாங்கிப் படித்தது முக்கிய காரணம்.
Delete//அக்கனவு காலங்கடந்து தற்காலத்தில் இணையம் மூலம் மெய்ப்பட்டிருக்கிறது!//
ReplyDeleteஇதுபோன்ற பலரின் கனவுகளுக்கு இன்று இணையமே வடிகாலாக உள்ளது என்பதே மாபெரும் உண்மை.
>>>>>
ஆமாம் சார்! இணையம் மட்டும் இல்லையென்றால் பலரது எழுத்து வெளிவராமலே போயிருக்கக்கூடும். நம் எழுத்தைப் பற்றி உடனுக்குடன் பின்னூட்டம் கிடைப்பது இதில் இன்னொரு பெரிய நன்மை.
Delete//ஒன்று குங்குமத்திலும், நான்கு தினமணிக்கதிரிலும், இரண்டு சிறுவர் மணியிலும் வெளியாயின. இணைய இதழான நிலாச்சாரலில், முப்பது வாரங்கள் தொடர்ந்து ‘நிலவினில் என் நினைவோடை,’ என்ற தலைப்பில் மலரும் நினைவுகளை எழுதினேன். அது மின் புத்தகமாக வெளிவந்தது. அதன் பின் தமிழ் மன்றத்தில் சில மாதங்கள் வாசம்.//
ReplyDeleteபாராட்டுக்கள். வாழ்த்துகள். அப்போது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
நிலாச்சாரல் மின் இதழில் நானும் ஓராண்டுக்கு மேல் நிறைய படைப்புகள் கொடுத்துக்கொண்டிருந்தேன்.
3 ஆண்டுகளுக்கு முன்பு நிலாச்சாரல் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றபோது நானும் திரு. ரிஷபன் அவர்களும், அதற்காகவே நேரில் சென்னைக்குச் சென்று கலந்துகொண்டோம்.
அதெல்லாம் ஒரு இனிய காலம் + பசுமையான நினைவுகள்.
>>>>>
கண்டிப்பாக. முதன்முதலில் குங்குமத்தில் கதை பிரசுரமானபோது தரையிலேயே நான் நடக்கவில்லை. அச்சில் நம் எழுத்தைப் பார்ப்பது போன்ற மகிழ்ச்சி வேறொன்றுமில்லை. அதற்குச் சன்மானமாக 75 ரூபாய் கிடைத்தது. அதன் உண்மையான மதிப்பு விலை மதிக்க முடியாதது.
Delete//2011 ல் ஊஞ்சல் என்ற வலைப்பூ துவங்கினேனேயொழிய, தொடர்ந்து எழுதுவதிலும், மற்ற பதிவுகளை வாசித்துக் கருத்து சொல்வதிலும் இடையிடையே நீ…..ண்…….ட இடைவெளி!//
ReplyDeleteஇது பொதுவாக எல்லோருக்குமே ஏற்படும் பிரச்சனைதான். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் கஷ்டம் தான். அதுவும் தங்களைப்போல வேலைக்கும் சென்று, குடும்பத்தையும் கவனிக்கும் பெண்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.
சுத்தமாக எதற்குமே நேரமே கிடைக்காதுதான்.
>>>>>
நேரம் கிடைப்பதென்பது பெண்கள் எல்லோருக்குமே உள்ள பொதுவான பிரச்சினை தான். எழுத வேண்டும் என்று உள்ளுக்குள் இருக்கும் ஆர்வமும், உங்களைப் போன்றவர்கள் அவ்வப்போது கொடுக்கும் உற்சாகமும் தான் எழுத்தை முற்றிலுமாக நிறுத்தாமல் இடையிடையே எங்களை எழுத வைக்கும் கிரியா ஊக்கியாகச் செயல்படுகிறது.
Delete//கோபு சார் வலைச்சரத்துக்குப் பரிந்துரைத்த பிறகே, பெரும்பாலான பதிவுகளைப் படிக்கத் துவங்கினேன்.//
ReplyDeleteஅடாடா, என்னால் உங்களுக்குத் தொல்லை பாருங்கோ. இதில் நான் மிகவும் சிரமம் கொடுத்து விட்டேனோ எனத் தோன்றுகிறது. இருப்பினும் நாட்டுக்கு [பதிவுலகுக்கு] ஏதோ என்னால் ஆன ஓர் சிறு உதவி செய்துள்ளேன் என்பதில் மகிழ்ச்சி.
குடத்திலிட்ட விளக்கு இன்று குன்றின் மேல் ஏறியுள்ளது என நினைத்து மகிழ்கிறேன். :)
>>>>>
இந்தச் சிறு முயற்சியைக் கூடச் செய்யாமல் அப்புறம் குன்றின் மேல் எப்படி ஏறுவதாம்? உங்களால் எனக்குத் தொல்லை ஏதுமில்லை. இது எனக்கு ஒரு புது அனுபவம். இந்த ஒரு மாதத்தில் நிறைய செய்திகள் வாசித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். அதற்கு நானல்லவா தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்?
Delete//அலுவலகம்+ வீட்டுப்பணி முடித்து கிடைத்த நேரத்தில், அடிக்கடி காலை வாரும் இணைய இணைப்புடன் போராடிக்கொண்டு, வலைச்சரத்தில் புதிய வலைப்பூக்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என்ற ஆசையுடன் வலைப்பூவொன்றை அரிதின் முயன்று தேடிக்கண்டுபிடித்து, அதன் உறுப்பினர்ப் பட்டியலைப் பார்த்தால், ………….............................................................................
ReplyDelete………………………………………………………………………………….…………………………………..
இவர்களால் மட்டும் எப்படி இத்தனை வலைப்பூக்களுக்குப் போய்ப் பதிவிடமுடிகிறது என்று வியப்பாக இருக்கிறது!//
பதிவர்களில் பலரும் தங்கள் நிஜ வாழ்க்கையில் இழந்த சந்தோஷங்களை மறக்கவும், மிரட்டிவரும் பல்வேறு அன்றாடக் கவலைகளை + பிரச்சனைகளை சற்றே மறக்கவும், அடிக்கடி மனதில் வந்து இம்சிக்கும் மன வேதனைகளை மறக்கவும், இணையத்தில் பதிவுகள் வெளியிட்டு, ஓர் கற்பனையான உலகத்தில் மிதந்து மகிழ்ந்து வருகிறோம் என்பது மறக்க முடியாததோர் உண்மை.
இதுவும் நான் என் சொந்த அனுபவத்திலும், பிறரிடமிருந்து உணர்ந்த அனுபவங்களிலும் இங்கு எழுதியுள்ளேன்.
இந்த கற்பனை உலகினில் நமக்கு ஆறுதலாக பல சொந்தபந்தங்கள் சூழ்ந்து நிறைந்துள்ளதில் ஏதோ ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
ஏதோ ஒரு சின்ன சந்தோஷம் + பொழுதுபோக்கு இதில் இருக்கத்தான் செய்கிறது.
இவற்றுக்குத் தடங்கலாக எவ்வளவோ எதிர்பாராத குறுக்கீடுகளும், நெருங்கிய சொந்தங்கள் பலரால் பலவித இடையூறுகளும் செய்யத்தான் படுகின்றன.
நாம் எதிர்நீச்சல் போட வேண்டியதாகவேதான் உள்ளது.
இவற்றிலும் நமக்கு ஒருநாள் அலுப்பு + சலிப்பு ஏற்படலாம். அதுவரை நாமும் எழுதி இன்பம் காண்போம் என்பதே என் எண்ணமாக இன்றுவரை இருந்து வருகிறது. நாளை என்ன நடக்குமோ !
>>>>>
வெட்டி அரட்டை செய்யாமல் எழுதுவதும் வாசிப்பதும் உருப்படியான பொழுது போக்குகள். எழுத்தும் வாசிப்பும் கடைசி வரை நம்முடன் இருந்தால் அதுவே நாம் செய்த புண்ணியம் என்று நினைக்கிறேன்.
Deleteஇன்றைய இந்தப் பதிவினில் தங்களின் படைப்புகளும், சுய அறிமுகமும் வெகு அழகாகவே கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteநேரம் கிடைக்கும்போது தங்களின் அந்தக் குறிப்பிட்டப் பதிவுகளைப் படிக்க வேண்டும் என நானும் என் மனதில் நினைத்துள்ளேன்..
>>>>>
நேரங் கிடைக்கும் போது வாசித்துத் தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். இப்போது அவசரம் ஏதுமில்லை.
Delete//ஒரு நாள் முதல்வன் கதையாக, ஒரு வார ஆசிரியர் பதவி வலைச்சரத்தில் எனக்குக் கிட்டியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. கூடவே இப்பொறுப்பை நல்லவிதமாக நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலையும் இருக்கிறது.//
ReplyDeleteதங்களால் எதையும் அருமையாகவும், பொறுமையாகவும், அழகாகவும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனவே இதில் எந்தவிதமானக் கவலையும், தயக்கமும் தங்களுக்கு வேண்டவே வேண்டாம்.
>>>>>
தங்களின் இந்த வார்த்தைகள் ஊக்கமூட்டுவதாய் உள்ளன. தங்களின் வழிகாட்டுதலோடு கண்டிப்பாக செவ்வனே என் பொறுப்பை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. மிகவும்நன்றி சார்!
Delete//முதன்முதல் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் என்னை, வலைச்சரத்தின் வாசகர்களாகிய நீங்கள் அனைவரும், வாரமுழுதும் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு, ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்லாதரவு நல்கிட வேண்டுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். //
ReplyDeleteநிச்சயமாக தினமும் வருவோம். கருத்தளிப்போம். ஊக்கமும் உற்சாகமும் தருவோம்.
இன்று காலை முதல் இங்கு எனக்கு இணைய இணைப்பே கிடைக்காமல் பழி வாங்கிவிட்டதால், என் இன்றைய வருகையில் மிகவும் தாமதமாகிவிட்டது.
இவ்வாறு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தாமதமானாலும் தட்டாமல் தினமும் வருவேன். கருத்தளிப்பேன்.
வாழ்த்துகள்! வாழ்த்துகள் !! வாழ்த்துகள் !!!
நன்றியுடன் கோபு
ooooo
இணையப் பிரச்சினை காரணமாகத் தாமதமாய் வந்தாலும் உற்சாகமும் ஊக்கமும் நிறைந்த பின்னூட்ட மழையைப் பொழிந்து விட்டீர்கள். இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என மலைப்பாக உள்ளது. என் மகிழ்ச்சியையும் நன்றியையும் முழுதும் விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை கோபு சார்!
Deleteஇந்த வாரம், வலைச்சர ஆசிரியர் பணி ஏற்றுள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteத.ம.4
வாழ்த்துக்கும் தமிழ் மண வாக்குக்கும் நெஞ்சார்ந்த நன்றி சார்!
Deleteதங்களின் சுய அறிமுகம் அருமை வாழ்த்துகள், தொடர்கிறேன்.... நேற்று முதல்...
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள்.
தமிழ் மணம் – 5
அன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்! தங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்!
Deleteவணக்கம்
ReplyDeleteசுய அறிமுகம் நன்று... தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள்
இனிய குடியரசு தினவாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரூபன் சார்!
Deleteநல்ல தேர்ந்த படைப்பாளியான தங்களுக்கு போதுமான நேரமின்மையே தொடர்ந்து வலையுலகில் இயங்க இயலாமைக்குக் காரணம் என்பதை அறிவேன். குறைவான பதிவுகள் எழுதியிருந்தாலும் தரத்தில் முதன்மையானவை அனைத்தும். சிறுவயதில் குடும்பப் பத்திரிகை நடத்திய அனுபவம் ரசிக்கவைத்தது. இந்த ஒரு வார காலமும் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வாழ்த்துகள் அக்கா. மலர்ந்தும் மலராத செம்பருத்தி அழகு.
ReplyDeleteஎங்கே உன்னைக் காணோமே என்று பார்த்தேன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி கீதா! படம் அருண் எடுத்தது.
Deleteநல்வரவு கலையரசி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் வரவேற்றமைக்கும் மிகவும் நன்றி துளசி!
Deleteதங்களை இப்போது வலைச்சரம் மூலம் அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி! தங்களைத் தொடர்கின்றோம். அறிமுகப் படலம் அருமை. வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் சகோதரி ராஜேஸ்வரி, டிடி அவர்கள் நன்றாகத் தெரிந்தவர்கள். சகோதரிக்கு உடல் நலம் சரியில்லை என்று ஒரு பதிவில் எழுதியிருந்தார்.
அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
தங்களது அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி சார்! தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி சார்!
Deleteமிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteதொடர்ந்து சந்திப்போம்.....
வருகைக்கு மிக்க நன்றி சார்! உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி!
Deleteதங்களை இன்று தான் அறிந்தேன், அறிமுகப்படுத்திய ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி. தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க மகேஸ்வரி! தொடர்ந்து வாருங்கள்! வாழ்த்துக்கு மிகவும் நன்றி! உங்கள் அறிமுகம் கிடைத்ததில் எனக்கும் மிகவும் மகிழ்ச்சி!
Deleteதங்களின் சுய அறிமுகம் மட்டுமல்ல , பதிவுகளும் அருமை அக்கா !! வாழ்த்துகள்
ReplyDeleteஅருமை எனப் பாராட்டியதற்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி திருமுருகன்!
Deleteஅடக்கமாகவும் சுருக்கமாகவும் இருந்தாலும்
ReplyDeleteஉங்களை பற்றி மிகச் சரியாகவும் முழுமையாகவும்
புரிந்து கொள்ளும்படியாக உங்கள் சுய அறிமுகம் இருந்ததே
உங்கள் எழுத்துத் திறமைக்கு சரியான சாட்சி
தங்கள் வலைச்சர வாரம் சிறக்க
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
என் எழுத்துத்திறமையை நீங்கள் பாராட்டியதறிந்து மகிழ்ச்சியாய் இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி சார்!
Delete