07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 21, 2015

வலைச்சரத்தில் ராகங்கள்-2

கல்லூரிப்பருவத்தில் விரிவுரையாளர்கள், சீனியர் மாணவிகள் இப்படி யாராவது என்னை அழைத்துப் பாடச் சொல்லிக் கேட்பது வழக்கமாயிருந்தது. அதில் ஒருத்தர் அடிக்கடி 'மறக்க முடியுமா?' என்ற படத்தில் இடம் பெற்ற ' காகித‌ ஓடம் கடலலை மேலே' பாடலைப்பாடுமாறு கேட்பார். மிகவும் அவலமான, வேதனையைப்பிழியும் சோகப்பாடல் அது. எனக்கு சுத்தமாகப் பிடிக்காத பாடல் அது. ஏனென்றால் படம் அப்ப‌டி சோக மயமானது. இருந்தாலும் மறுக்காமல் பாடுவேன். பாடும்போது நடுவிலேயே கண்ணீர் சிந்த ஆரம்பிப்பார் அந்த‌ சகோதரி! இருந்தாலும் திரும்பவும் அழைத்து அந்தப்பாடலைப் பாடச் சொல்லி கேட்பார். பின்னாட்களில் தான் புரிந்தது என் பாடல் அவருடைய வலிகளுக்கு வடிகால் போல இருக்கிறது என்று!

இசை வலிகளுக்கு மருந்தாக ஒத்தடம் கொடுக்கிறது என்பதை அந்த இளம் வயதில் நான் உணர்ந்த நிகழ்வு இது!

இன்றைய ராகம் ஆபேரி
  
பொதுவாய் மங்கலகரமான நிகழ்வுகளில் ஆபேரி ராகத்தை இசைக்கும் வழக்கம் உள்ளது. கர்நாடக தேவகாந்தாரி என்ற ராகம் தான் இன்றைக்கு ஆபேரி என்று அழைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் இது. வட இந்தியாவில் இந்த ராகம் பீம்பிளாஸி என்று அழைக்கப்படுகிறது. இருபத்தியோரு தந்திகளைக் கொண்ட பேரியாழ் என்னும் யாழில் பண்டைய பாணர்கள் இசைத்த பண்ணே ஆபேரி. இந்த ராகத்தைத் தொட்டாலே ' ஆஹா' என்று இதழ்கள் உதிர்க்கும் என்கிறார் பாடகி சாருலதா மணி.

கவலைகள் நிறைந்து அமைதியை இழந்து தவிக்கும் மனதிற்கு அமைதியும் ஆறுதலும் தந்து குணமாக்கும் ராகம் இது. அடிநாதத்தில் இலேசான சோகம் இழையோடும்.

' ராசாத்தி உன்னைக் காணாத'  என்று ஆபேரி ராகத்தில் ஜெயச்சந்திரன் பாடிய பாடல் மிகவும் புகழ்பெற்றது. உளுந்தூர்பேட்டை என்ற இடத்தில் இந்த திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, இந்த பாடலைக் கேட்க காட்டு யானைகள் வந்ததாகவும் , பாடல் முடியும் வரை நின்று கேட்டு விட்டு போனதாகவும் செய்திகள் வெளிவந்தன.

ஆபேரி என்றாலே நினைவுக்கு வருவது புகழ் பெற்ற தியாகையரின் கீர்த்தனை 'நகுமோமு கனலேனி' தான்! பாடல் அத்தனை சுகமானது! சற்றே WESTERN STYLEல் இருக்கும் இந்தக்கீர்த்தனையை FUSION இசையாக பாடகர் கார்த்திக் அருமையாகப் பாடியிருக்கிறார்.  கேட்டுப்பாருங்கள்!





தமிழ்ப்படங்களில் அறுபதுகளில் புகழ் பெற்ற‌ பாடல் நாம் எல்லோரும் அறிந்த 'சிங்கார வேலனே தேவா!"  காறிக்குறிச்சி அருனாசலத்தின் நாதஸ்வர இசை கம்பீரமாக நம்மை உருக வைக்க, ஜானகி அந்த இசையுடனேயே இழைந்து பாடும் இந்தப்பாடலைக்கேளுங்கள்!





இளையராஜாவின் இசையில் ஆபேரியில் மயங்க வைக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. மீண்டும் கோகிலா திரைப்படத்தில் கண்ண‌தாசன் எழுதி, ஜேசுதாஸ், எஸ்.பி.ஷைலஜா இருவரும் இணைந்து பாடிய ' சின்னஞ்சிறு வயதில்' பாடலை இங்கே கேளுங்கள்!





இனி பதிவர்கள் அறிமுகம்:

1. கர்நாடக சங்கீதம் மீது தனக்கு எத்தனை காதல், எந்த அளவு கனவுகள் இருந்தன என்பதை நம் GMB  அருமையாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் இங்கே!  தன் இல்லத்தரசிக்கு கர்நாடக சங்கீதம் கற்றுத்தர முனைந்து, அது பலனற்றுப்போகவே தன் மருமகளையும் சங்கீதம் பயில ஊக்குவித்திருக்கிறார். அவர் இந்த இசைப் பதிவுகளை மிகவும் ரசிப்பாரென எதிர்பார்க்கிறேன்!!

2. யாரும் குடி புகாத வீடு எப்படி இருக்கும்? அதன் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படிப்பட்ட உணர்விருக்கும்? யாருக்காக காத்துக்கொன்டிருக்கும்? சில கனவுகளை உருவாக்கவும் சிலவற்றை அழிக்கவும் காத்துக் கொண்டிருக்கிறதாம். அகலிகன் வித்தியாசமான கற்பனையில் ஒரு அழகிய கவிதை படைத்திருக்கிறார்!!

3. சித்ரா ரவீந்திரன் தன் தளமான நம்ம வீட்டு சமையலில் பல ருசிகரமான சமையல் குறிப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார். அவரின் வாழைப்பூ குழம்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. செய்து பாருங்கள்!!

4. தானியங்களை முளை கட்டி உண்பது ஆரோக்கியமான விஷயம். எப்படி தானிய வகைகளை முளை கட்டுவது என்பதை நினைவில் விளிம்பில் கவிநயாஇங்கே தெளிவாகச் சொல்லி வழி காட்டுகிறார்!
5. பங்குகளை எப்படி வாங்குவது, எப்படி பயன் பெறுவது என்பதை விளக்கிச் சொல்லியுள்ளார் செல்லமுத்து குப்புசாமி இங்கே!

6. ஆடு வாங்கிய கதையையும் அதைப்பராமரிக்க பட்ட பாட்டையும் இத்தனை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையாகவும் வேறு யாராவது சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, அத்தனை சிறப்பாக இருக்கிறது ஆறுமுகம் அய்யாசாமி அவர்களின் எழுத்து!!

7. விமானம் நடு வானில் பறக்கும்போது சில சமயங்களில் அதிர்வுடன் ஆட்டம் காணும். அபப்டி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான அறிவியல் காரணங்களை ஒரு புறம் எழுதினால், மறுபுறம் ஒருவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்ததாக குறிப்பிட்டிருந்த குறிப்பைப் பார்த்ததும் சிரிப்பு தாங்க முடியவில்லை. நீங்களும் படித்தால் நிச்சயம் சிரித்து விடுவீர்கள். மனதில் உறுதி வேண்டும் என்ற தன் தளத்தில் மணிமாறன் அத்தனை சுவாரசியமாக எழுதியிருக்கிறார்!

8. வாழ்க்கை எத்தனை சிக்கலாக இருக்கிறது, எப்படி முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது என்பதை அழகாக எழுதியிருக்கிரார் பகீரதன் இங்கே! ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்கிற மாதிரி அவர் எழுதிய சில வரிகள்..' மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும்...'!

9. தன்னை சாதாரணமானவள் என்று சொல்லிக்கொண்டாலும் இவரின் எழுத்து அசாதாரணமாக நம்மை ஈர்க்கிறது. தினசர் வாழ்க்கையில் ஒரு பெண் எந்தெந்த விதங்களீல் சுதந்திரத்தை தொலைத்து தன்னைத்தானே சமாதானம் செய்து கொள்ள‌ வேண்டியிருக்கிறது என்பதை செத்தியடியாய் இங்கே பெண்களுக்கு சுதந்திரம் ஒரு கேடு என்று வரிசையாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சொல்லியிருக்கிறார்!

10. சின்ன வயதில் அம்மாவுடன் தோட்டத்தில் காய்கறி பறித்து, பூ தொடுத்து மனம் மகிழ்ந்த நாட்களை ஆழக்குழி தோண்டி என்று ஆரம்பித்து மிக அருமையாக எழுதியிருக்கிறார் ஜீவா வெங்கட்ரமணன் தன் என் வாசகம் வலைத்தளத்தில்!

11. கபீர் அன்பனின் சித்திரமும் கைப்பழக்கம் வலைத்தளம் முழுவதும் அவரது பல வகையான ஓவியங்கள் அடங்கியிருக்கின்றன. இங்கே கிரிக்கெட்டர் கபில் தேவ் ஒரு சாம்பிளுக்கு!

12. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி அருகேயுள்ள‌ கடம்பூரில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது கடம்பூர் கரக்கோயில். ஒரு கோவிலுக்கென்றே வலத்தளம் ஆரம்பித்து, அவ்வப்போது நடைபெறும் பூஜைகளையும் விழாக்களையும் வெளியிட்டு வருகிரார் இந்தக் கோவில் நிர்வாகி விஜய்.  108 சங்குகளில் தீபாராதனை செய்யப்பட்ட நிகழ்வை இங்கு கண்டு களியுங்கள்!!
 

58 comments:

  1. வணக்கம்
    நல்ல இரசனை மிக்க பாடல்கள்... .ரசித்தேன்.அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை....
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்து பின்னூட்டமளித்திருப்பதற்கு மனம் நிறைந்த நன்றி ரூபன்!

      Delete
  2. உண்மையில் பாடல் மனதை மிகவும் சாந்தப்படுத்துகிறது. தங்களது பதிவில் முதல் பத்தியைப் படித்ததும் அரங்கேற்றம் திரைப்படத்தில் லலிதாவின் (பிரமீளா) அப்பா மன வேதனையுடன் இருக்கும்போது துன்பம் நேர்கையில் என்ற பாடலை பாடக் கூறுவார். அதை அவருடைய மகள் பாடக் கேட்கும்போது நம் மனதையும் கலங்க வைத்து விடும். புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அரங்கேற்ற‌ம் வந்த புதிதில் பார்த்தது. அதனால் நீங்கள் எழுதியிருக்கும் காட்சி நினைவில் இல்லை. ஆனால் நீங்கள் சொன்னது போல மனதை இசைய வைப்பதும் மன வேதனைகளுக்கு மயிலிறகால் தடவிக்கொடுப்பது போல சுகமளிப்பதும் இசை மட்டுமே!

      தொடர்ந்து ரசிப்பதற்கும் இனிய கருத்துரைகள் எழுதுவதற்கும் மனமார்ந்த நன்றி!

      Delete
  3. காட்டு யானைகள் ரசனை உட்பட அனைத்தும் இனிமை...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து இனிமையான கருத்துரை வழங்குவதற்கு அன்பு நன்றி தனபாலன்!

      Delete
  4. அருமையான பாடல்.

    இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு அன்பு நன்றி வெங்கட்!

      Delete
  5. இரு தளங்கள் புதியவை... அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  6. எல்லாம் புதிய தளங்கள். இனிதான் போய் படிக்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கவிப்ரியன்!

      Delete
  7. எனது ஆல்டைம் பேவரிட் சிங்கார வேலனை மீண்டும் பார்க்க,கேட்க வைத்ததற்கு மிக்க நன்றி. எனது தளத்தையும் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி மேடம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்திட்டமைக்கும் அன்பு நன்றி மணிமாறன்!

      Delete
  8. வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மனமார்ந்த நன்றி மேடம். ஊக்குவித்து என்னை தொடர்ந்து எழுதத்தூண்டும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி சகோதரர் ஆறுமுகம் அய்யாசாமி!

      Delete
  9. ராகத்தின் சிறப்பான தகவல்கள். இனிமையான பாடல்கள். நன்றிஅக்கா.
    இன்று அறிமுகமான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் மனமார்ந்த நன்றி பிரியசகி!

      Delete
  10. ஆகா... ஆபேரி ராகத்தில் அமைந்துள்ள இரண்டு பாடல்களுமே என் ரசனைக்கு மிக உகந்தவை. அதுவும் ஜானகியம்மாவின் குரல்... சான்ஸே இல்ல.... உங்க ராக அறிமுகங்களைப் படிச்சும் பாட்டுக்களைக் கேட்டுட்டும் பதிவு அறிமுகங்களுக்கு வரவே ரொம்ப நேரமாயிடுது. இது எனக்கு புது அனுபவம் மனோம்மா.... நன்றி. அறிமுகங்களில் நிறைய எனக்குப் புதியவர்கள் இருக்காங்க, அனைவருக்கும் மகிழ்வான நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் ரசித்து நீங்கள் எழுதியிருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது! இந்த அனுபவம் உங்களுக்கு மேலும் மேலும் மகிழ்ச்சியைத்தர வேண்டுமென்று விரும்புகிறேன் பாலகணேஷ்! உங்களின் இனிமையான கருத்துரைக்கு இதயங்கனிந்த நன்றி!!

      Delete
  11. நெருக்கடியான நேரங்களிலும் - நான் மிகவும் விரும்பிக் கேட்பது -
    '' நகுமோமு கனலேனி'' - கீர்த்தனையைத் தான்!..

    அதுவும் -
    தாங்கள் அன்புடன் குறிப்பிட்டிருக்கும் சாருலதா மணி அவர்கள் குரலில்!.
    இன்றைய தொகுப்பும் - இனிமை.. அருமை!.

    ReplyDelete
    Replies
    1. எந்த மனநிலையையும் மாற்ற‌ வல்லது இசை! உங்களுக்கு ஆபேரி எப்போதும் மனதில் மகிழ்வைக்கொடுப்பதை அறிந்து மகிழ்ந்தேன். பதிவை ரசித்துப் பாராட்டியதற்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  12. அன்புள்ள மனோ சாமிநாதன்,
    எனது வலைதளத்தை வலைசரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிகவும் நன்றி. முதலில் வெளிநாட்டில் படிப்பதற்காக சென்றுள்ள என் அருமை மகளுக்காக ஆங்கிலத்தில் [ http://kalakkalsamayal.blogspot.in/ ] சமையல் குறிப்புகள் எழுத ஆரம்பித்தேன். அதனை பார்த்து விட்டு வெளி நாட்டில் வாழும் தமிழ் அன்பர்கள் சிலர் தமிழில் எழுதினால் புரிந்துகொள்ள வசதியாக இருக்கும் என கூறினார்கள். அதனால் டிசம்பர் 2013 முதல் தமிழில் சமையல் குறிப்புகளை எழுதத் துவங்கினேன். எளிமையாகவும் காய்கறிகளின் நிறம் மாறாமலும் மிக மிக குறுகிய நேரத்திலும் சமையலை செய்யும் முறையை விளக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
    தங்களது அறிமுகம் மேலும் பலருக்கு என்னுடைய வலைதளத்தை கொண்டு சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.
    தங்களின் வாழ்த்துக்கள் என்னை மேன்மேலும் தொய்வில்லாமல் தொடர்ந்து பகிர்ந்துகொள்ள ஊக்கத்தை அளிக்கிறது.
    மிக்க நன்றி!!
    தமிழ் வலைதள இணைப்பு :
    http://mannaisamayal.blogspot.in/

    ReplyDelete
    Replies
    1. சித்ரா! நீங்கள் விளக்கமாக எழுதியிருப்பதைப் படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். பொதுவாய் ருசியான, வழக்கத்தை விடவும் மாறுதலான, புதுமையான குறிப்புகள் கொடுப்பது சமையல் ஆர்வமுள்ள‌வர்களை கவர்ந்திழுக்க வசதியாக இருக்கும். இது கடந்த 10 வருடங்கள் சமையல் குறிப்புகள் கொடுப்பதில் ஏற்பட்ட அனுபவம். உங்கள் வாழைப்பூ குழம்பு மிகவும் வித்தியாசமானதாக என்னை ஈர்த்ததால் தான் அதைத் தேர்ந்தெடுத்தேன்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி!

      Delete
  13. ஆபேரி இராகம் பற்றிய தகவலுக்கு நன்றி. பாசமலர் திரைப் படத்தில் வரும் ‘மலர்ந்தும் மலாராத பாதி மலர் போல’ என்ற பிரபலமான பாடலும் இந்த இராகத்தில் அமைந்த பாடல் என நினைக்கிறேன். 'நகுமோமு கனலேனி' கீர்த்தனையையும், ‘சிங்கார வேலனே’ மற்றும் ‘சின்னஞ்சிறு வயதில்’ பாடல்களையும் இரசித்தேன். இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. 'மலர்ந்தும் மலராத' பாடலும் ஆபேரி ராகத்தில் அமைந்தது தான்! நீங்கள் எழுதியிருப்பது சரியே! பாடல்களை ரசித்ததற்கு மனமார்ந்த நன்றி!

      Delete
  14. அக்கா!.. அருமையான ராகமும் மனதைக்கொள்ளை கொள்ளும்
    பாடல் தெரிவுகளும் மிகச் சிறப்பு!
    உண்மையில் எனக்கும் அந்த முதலாவது பாடல் மிகப்பிடித்தமானது..!
    நல்ல தொகுப்பு! அறிமுகப்பதிவர்களுக்கும் உங்களுக்கும்
    இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் அன்பு நன்றி இளமதி!

      Delete
  15. வணக்கம்!
    ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
    தாங்கள் பாடும் போது அல்ல! அல்ல!
    வலைச் சரத்தில் காணொளிக் காட்சி மாலையாக
    சூடும்பொழுது இசையோடு சங்கமிக்காத இதயங்களே
    இல்லையம்மா!
    இதம் தரும் வீணை நாதம் தொடர்ந்து இசைக்கட்டும்.
    நன்றி!
    அறிமுக பூக்களை அர்ச்சனைப் பூக்களாக்கி உள்ளீர்கள்!

    இன்றைய அர்ச்சனைப் பூக்களுக்கு வாழ்த்துக்கள்!

    நன்றியுடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    ReplyDelete
    Replies
    1. கவிதைப்பூக்களால் அர்ச்சனை செய்திருப்பதற்கு மனமார்ந்த நன்றி வேலு!

      Delete
  16. சிங்காரவேலனே..பாடல் எனக்கு பிடித்த பாடல் கேட்க கேட்க சலிக்காது. மீண்டும் கோகிலாவும் அடிக்கடி கேட்கும் பாடல். இங்கு யூடியூப் திறக்கவில்லை.

    அறிமுகங்கள் அனைவரும் அறியாதவர்கள்...அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
  17. பொதுவாய் மங்கலகரமான நிகழ்வுகளில் ஆபேரி ராகத்தை இசைக்கும் வழக்கம் உள்ளது. கர்நாடக தேவகாந்தாரி என்ற ராகம் தான் இன்றைக்கு ஆபேரி என்று அழைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. கரஹரப்ரியாவிலிருந்து பிறந்த ராகம் இது///

    எனக்குத் தெரிந்தவரை, மூன்று ராகங்கள். ஆபேரி, கர்நாடக காந்தாரி, காந்தாரி.
    இவை மூன்றும் வெவ்வேறு ஜன்யத்தைக் கொண்டவை.
    ஆபேரி :
    22 karaharapriya janya
    A: S G2 M1 P N2 S
    Av: S N2 D2 P M1 G2 R2 S

    பீமள்ப்லாஸ் ராகமும் கரகரபிரியா ஜன்யமே.

    bhimpalAs

    22 kharaharapriyA janya
    A: N2 S G2 M1 P N2 S
    Av: S N2 D2 P M1 G2 R2 S
    இந்த ராகத்தில் தான் எப்படி பாடினாரோ.. பாடல்.


    கர்நாடக தேவகாந்தாரி
    28 ஹரி காமொபோஜி ஜன்யம்.


    Aa: S G3 M1 P N2 S
    Av: S N2 D2 P M1 G3 R2 S

    தேவகாந்தாரி :
    29 சங்கராபரணம் ஜன்யம்.


    Aa: S R2 M1 P D2 S
    Av: S N3 D2 P M1 G3 R2 S

    மிகவும் பிரபலமான க்ஷீர சாகர நயனா என்னும் பாடலை, ஜான் ஹிக்கின்ஸ் மற்றும் எம்.எஸ். , ஜேசுதாஸ் பாட கேட்டு இருப்பீர்கள்

    சுப்பு தாத்தா.

    www.movieraghas.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. தெளிவான விளக்கங்களுக்கு மனமார்ந்த நன்றி !

      'கானடா தேவகாந்தாரி என்றும் சொல்லப்ப‌டுகிறது' என்று மட்டுமே எழுதியிருக்கிறேன். காரணம் எனக்கும் இதில் உறுதியாகச் சொல்ல சந்தேகமிருந்தது. என் சினேகிதி ஒருவரிடம் பேசிய போது இந்த இரண்டு ராகங்களும் ஒன்று தான் என்பதில் உறுதியாக இருந்தார். கீழுள்ள லிங்க் லும் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. படித்துப்பார்க்கவும்.
      http://inioru.com/?p=35270

      Delete
  18. ஆபேரி.... என்னவொரு ராகம்! ராசாத்தி உன்ன... என்னவொரு பாடல்! மற்ற பாடல்களும்தான்.

    மதுரையில் படம் வெளியானபோது இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்க தியேட்டரில் படத்தை நிறுத்தி பாடலை ஒன்ஸ்மோர் போட்டார்கள்!

    பாலமுரளியின் நகுமோமு வை மறக்க முடியுமா?

    சுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்னாடக தேவகாந்தாரிதானே?

    இசைச்சரத்தில் இசைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் யாவரும் எனக்குப் புதியவர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //சுப்பு தாத்தா... நானொரு விளையாட்டு பொம்மையா கர்னாடக தேவகாந்தாரிதானே?///
      no.
      naanoru vizaiyaattu bommaiyaa... Raag Navarasa Kanada.
      Listen to this.
      https://www.youtube.com/watch?v=k3T5YKSkh1I by Pattmmal and D K Jayaraman

      subbu thatha.
      www.movieraghas.blogspot.com

      Delete
    2. இனிமையான கருத்துரைக்கு அன்பு நன்றி ஸ்ரீராம்!

      Delete
  19. முதலில் ’காகித ஓடத்தில்’ ஏற்றி கடலலை மேலே மிதக்க விட்டு....

    பின் இசை கேட்க ஓடி வந்த யானைகள் போலவே எங்களுக்கும் ’ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு' கேட்கச்சொல்லி, ஆபேரியில் மகிழ்வித்து.............

    சுகமான தியாகராஜ ஸ்வாமிகளின் 'நகுமோமு கனலேனி' கேட்கச்செய்து............

    அதன்பின் 'சிங்கார வேலனே தேவா!’ ’சின்னஞ்சிறு வயதில்' என அழகான திரைப்படப் பாடல்களுடன் இன்றைய இசை மயமான பதிவு மனதை மயக்குவதாக ...... :)

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக அருமையாக நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களையே மலர்ச்சரம் போல உருவாக்கி பாராட்டியுள்ளீர்கள்! என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  20. அட எப்படி உங்கள் சரம் விட்டுப் போனது!!! வந்து விட்டோம்....ஆஹா ஆபேரி! என்ன ஒரு ராகம்....கர்நாடக தேவகாந்தாரி, ஆபேரி வேறு வேறு என்றுதான் அறிந்திருக்கிறேன் சகோதரி! ஷீரசாகர சயனா...கர்நாடக தேவகாந்தாரி.......நகுமோ - ஆபேரி....பீம்ப்ளாஸ் ஆம் ஆபேரி போலத்தான் இருக்கும் ஆனால் ஒரு சினன் வித்தியாசம் தான்....ஆரோகணத்தில் மட்டுமே.....சிந்து பைரவி படத்தில் கூட ஒரு விவாதம் வருமே....ஏரிக்கரை மேலே என்ன ராகம் என்று....அது ஆபேரியா, கர்நாடக தேவகாந்தாரியா என்று.....ஆபேரி என்று சொல்கின்றார்கள். ஆனால் அது கர்நாடக தேவகாந்தாரி போலதான் இருக்கின்றது....

    அருமையான பாடல்கள்...எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள்...எப்படி இசைஅமைத்டதிருக்கின்றார்கள்!!!! கார்த்திக் பாடியது இதுதான் முதல் தடவை கேட்பது அருமையாக உள்ளது ஃப்யூஷன்....

    மிக்க நன்றி சகோதரி தொடர்கின்றோம்.......கீதா, துளசிதரன்..


    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து பதிவையும் பாடல்களையும் ரசித்துப்பாராட்டியதற்கு என் மனமார்ந்த நன்றி!

      கர்நாடக காந்தாரி, ஆபேரி, பீம்ப்ளாஸ் இவற்றைப்பற்றிய சிறு விளக்கத்தை மேலே திரு.சுப்பு தாத்தா அவர்களுக்கு கொடுத்திருக்கிறேன். படித்துப்பார்க்கவும்.

      Delete
    2. நிச்சயமாக அந்த லிங்க் பார்க்கின்றோம்...சகோதரி!

      Delete
  21. அறுமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சகோதரி நீங்களும் பாடி பதிவிட்டிருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. தொடர் சாதகம் இல்லாமல் கர்நாடக சங்கீதம் பாட இயலாது. அந்தப் பயிற்சி பாலைவனம் சென்ற பிறகு நின்று விட்டது. இப்போதெல்லாம் பாத்ரூம் சிங்க‌ர் வாய்ஸ் தான்!

      Delete
    2. ஆம்! உண்மையே! அப்போ என்னைப் போலவா...
      ---கீதா

      Delete
  22. ராக அறிமுகத்துடன் சுவையான பதிவர்களின் அணிவகுப்பு அருமை! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பு நன்றி சுரேஷ்!

      Delete
  23. கீர்த்தனையை மிகவும் ரசித்தேன் அதற்க்காக ஸ்பெஷல் நன்றி.
    ’’ராசாத்தி உன்னைக் காணாத’’ இந்த பாடலைக் கேட்க காட்டு யானைகள் வந்ததா ? ஆச்சர்யமாக இருக்கிறது. யானைக்கு மனிதனைப்போல மதம் பிடிக்கும் என நினைத்தேன் இசையும் பிடிக்கிறது 80 எமக்கு புதிதான விடயமே.

    சிங்காரவேலனே வா ! வா ! எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல்களில் ஒன்று.
    இன்றைய அறிமுகங்களுக்கு எமது வாழ்த்துகள்.

    தமிழ் மணம் –5
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    ReplyDelete
    Replies
    1. கீர்த்தனையை மிகவும் ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்வாக இருந்தது. அன்பு நன்றி!

      மனிதர்களூக்கு அடிக்கடி மதம் பிடிப்பதால் யானைக்கு அது மறந்து விட்டது போலுள்ள‌து.

      Delete
  24. இசைச்சரம் மிகவும் அருமை. பகிர்ந்த பாடல்கள் காலத்தால் அழியாத கானங்கள்.
    இன்று இடம்பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய பாராட்டிற்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றி கோமதி அரசு!

      Delete
  25. ஆபேரி ஸ்பெஷலுக்கும் என் வலைப்பூ அறிமுகத்திற்கும் மிக்க நன்றி. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மனமார்ந்த நன்றி கபீர் அன்பன்!

      Delete
  26. எனக்குப் பிடித்த பாடல்களை அவை எந்த ராகத்தில் அமைந்துள்ளன என்ற விபரங்களுடன் விளக்கிய விதம் அருமை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  27. வருகைக்கும் இனிய பாராட்டுக்களுக்கும் அன்பு நன்றி கலையரசி!!

    ReplyDelete
  28. நான் விரும்பிக் கேட்கும் சிங்கார வேலனும்... சின்னஞ்சிறு வயதிலும்...
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  29. கருத்துரைக்கு அன்பு நன்றி ,குமார்!

    ReplyDelete
  30. அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  31. பல சிறப்பான தளங்களுக்கு மத்தியில் என்னுடையதையும் அறிமுகம் செய்திருப்பதற்கு மிகவும் நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள். தகவல் தெரிவித்த ரூபன் அவர்களுக்கும் மிகவும் நன்றி!

    ReplyDelete
  32. ரொம்ப நன்றிம்மா... ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் எட்டி பார்த்தா வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். என்னை பற்றிய அறிமுகம் அழகாக இருந்தது. நன்றிகள் பல....அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சகோக்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது