போகும் பாதை தூரமில்லை....
➦➠ by:
கார்த்திக் புகழேந்தி
வணக்கம்.
வலைச்சரத்தில் ஐந்தாவது நாள் மிகுந்த தாமதத்துடன் எழுதத் துவங்குகிறேன். பயண இடைவெளிகளில் ஏற்பட்டுவிட்ட தாமதமிது. மன்னிக்கனும்.
நேற்றைக்கு ஜி.எம்.பாலசுப்பிரமணியம் சார் வலைதள எழுத்தாளர்களை நான் என்ன சுண்டைக்காய் அறிமுகம் செய்வது என்று சொன்னதற்கு வஞ்சப்புகழ்ச்சி அணியா என்று கேட்டிருந்தார்கள். ஹாஹா அது அப்படியல்ல. சுண்டைக்காய் தான் ஆர்கானிக் ஸ்மார்ட் ஸ்டோரில் கிடைக்கும் மிகச்சிறிய காய். தவிர சுண்டைப்பழம் என்று கிடையாது முற்றினால் வற்றல் தான். ஆக பழம் தின்று கொட்டை போட்ட பதிவர்கள் எனச் சொன்னது பல மூப்பு உயர்வு அனுபவங்களைக் கொண்டவர்களைக் குறிப்பிடுவதற்காகச் சொன்னது.
தவிர உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.
தளிர் சுரேஷ் அவர்கள் குறைவான பதிவர்களை அறிமுகம் செய்தாலும் நிறைவாக இருப்பதாகச் சொன்னீர்கள். உண்மைதான் நான் அதிகம் புத்தகங்கள் வாசிக்கிறவன். வலைதள வாசிப்பனுபவம் மிகமிகக் குறைவு. இனிதான் உங்கள் போன்ற பலரை வாசிக்கத் துவங்கலாமென ஐந்தாண்டுத் திட்டம் தீட்டியிருக்கிறேன். அல்லது இருபது அம்சத் திட்டமென்று கூட கொள்ளலாம்.
தேரோட்டத்தையும் பதநீர் பற்றிய செய்திகளையும் வாசித்து செய்திகள் பகிர்ந்த உங்களனைவருக்கும் நன்றியும் ப்ரியங்களும். ஒரு பயணத்தின் அனுபவக்கட்டுரை போல தொடர்கிறதோ இந்த வலைச்சர அறிமுகம். இருக்கட்டும் எதாக இருந்தாலும் ஏழாம் நாளில் அப்பமும் மீன்களும் வழங்கி பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம்.
தேரோட்டம் முடித்து நேற்றைக்கு மாலையில் பாளையங்கோட்டை தெற்குபஜாரில் உள்ள தொ.ப அவர்களின் வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. திரு பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் பெயரன் திருநாவுக்கரசு அண்ணன் அழைத்துப் போயிருந்தார். தொ.ப (தொ.பரமசிவன்) -வை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது நண்பர் உதய சங்கர் தான். உதயசங்கர் அவருடைய செயல்பாடுகள் வலைதளம் பற்றி தனியாகவே ஒருநாள் எழுதலாம். தொ.பா எழுதிய பண்பாட்டு அசைவுகள், செவ்வி, அறியப்படாத தமிழகம் ஆகிய நூல்கள் ஞானத்தின் திறப்புகள். வாசிக்கிறவர்களையும் சரி அவரது பேச்சைக் கேட்கிறவர்களையும் சரி பல சங்கதிகளால் கட்டிப் போட்டுவிடுபவர்.
அவரைச் சந்தித்து மாலையில் பேசிக் கொண்டிருந்தபோது, முதுகுளத்தூர் அருகே எடுத்த கழுமரம் (இரண்டுநாள் முன்னர் வலைச்சரத்தில் கழுமரம் பற்றி எழுதி இருந்தேன்) பற்றிய தகவல்களையும், புகைப்படத்தையும் அவரிடம் காண்பித்து மேலும் சில புதிய செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன். இரவு நெல்லையிலே தங்கிவிட்டு அதிகாலை சென்னையை நோக்கி பயணம் தொடங்கியது.
இந்த பயணக்கிறுக்கு பிடித்த மனிதர்களின் போக்கை அவ்வளவு எளிதில் முன்கூட்டியே தீர்க்கதரிசனம் செய்துவிட முடியாது யாராலும். இன்றைய தேதிக்குச் சென்னையில் இருக்க வேண்டியவன் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கணினி மையத்தில் உட்கார்ந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் எத்தனை பெரிய கிறுக்குத் தனம். ஹாஹா அதையே தான் செய்துகொண்டிருக்கிறேன். மனதுக்குப் பிடித்த மாதிரி.
நெல்லையிலிருந்து புறப்பட்ட காலையில் கோவில்பட்டிக்கு முன்பாக கி.ராவின் இடைச்செவல் கிராமத்துக்குள் நுழைந்து அதன் பழமைத் தனத்தை வேடிக்கை பார்த்துவிட்டு.. அங்கிருந்து கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்குச் சென்று சமணச் சிற்பங்களையும், வெட்டுவாங்கோயில் கட்டிடக் கலையையும் பார்த்துவிட்டு (வெட்டுவாங்கோயில் பற்றி கே.எஸ்.ஆர் வலையில் இந்த கட்டுரையில் படித்துப் பாருங்கள் ) அங்கிருந்து சிவகாசி, சாத்தூர் வழியாக மதுரையை அடைந்திருந்தேன்.
மதுரையிலிருந்து திருச்சி நோக்கிச் செல்லும் சாலையில் விராலிமலைக்கு பத்து சுமார் கிலோமீட்டர்களுக்கு முன்பாக வலதுபுறம் திரும்புகிற சாலையில் தான் அந்த ஊரைப் பார்த்தேன். கொடும்பாளூர் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்த ஊரைக் கண்டது ஆக்ஸிலேட்டர் தானாக அடங்கி அந்த ஊருக்குத் திரும்பியது. நாற்கரச் சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் ஊருக்குள் சென்றது முதலில் ஒரு சாதாரண தற்கால கோவில் ஒன்றைக் காண முடிந்தது. பழமையான மற்றும் பெரிய நந்தியைப் பார்த்ததும் லேசாக சந்தேகம். இறங்கிப் போய் பார்த்தா அது இடங்கழிநாயனார் கோவில்.
இடங்கழி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்திருக்கும் மூன்று நாயன்மார்களில் இவரும் ஒருவர். அவர் பற்றி இருக்கட்டும் முதலில் கொடும்பாளூரைச் சொல்லிவிடுகிறேன். சிலப்பதிகாரத்தில் (எழுதியவர் : இளங்கோவடிகள்) கண்ணகியும் கோவலனும் புகாரிலிருந்து மதுரைக்குச் செல்வதற்காக வந்த இடம் இந்த கொடும்பாளூர்.
கல்கியின் பொன்னியின் செல்வன் படித்தவர்கள் நினைவில் கொள்ளலாம். வேளிர் குல மகள் வானதியின் தந்தை ஆட்சி செய்தது இந்த கொடும்பாளூரைத்தான். வேளிர்கள் எல்லாம் கொஞ்சம் வலிமையுள்ள ஆசாமிகள். அதாவது இரண்டு பெரிய பேரரசுகள் இடையில் உள்ள நிலத்தில் ஆட்சி புரிகிறவர்கள் வேளிர்களாக இருந்திருக்கிறார்கள். தஞ்சை சோழப் பேரரசுக்கும், மதுரை பாண்டியப் பேரரசுக்கும் இடையே இருந்த வேளிர் கொடும்பாளூர்க்காரர். கிட்டத்தட்ட மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு இந்த ஊருக்கு உண்டு.
அப்படிப்பட்ட ஊரில் ஒரு கல்நந்தி மட்டும் இவ்வளவு பெரிதாக இருக்கிறது என்றால் பக்கத்தில் பெரிய கோயில்கள் ஏதும் இருக்கனுமே என்று சிறுமூளை பெருமூளைக்குத் தகவல் சொல்ல ஆடுமேய்க்கும் சிறுவர்களிடம் விசாரித்ததில் முள்மண்டிய பாதைகளைக் காண்பித்தார்கள். உள்ளே நுழைந்து அரைக்காத தூரம் போனால் அப்படியே மிரண்டு போய்ட்டேன்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சோழன் கட்டிய கோயில் கண்ணைப்பறிக்க வாடா மகனே வா என்று காத்திருந்தது எனக்காக. டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படம் பாருங்கள் எத்தனை கச்சிதமான கோயில். கி.பி 921ல் பராந்தக குஞ்சிரமல்லன் கட்டியிருக்கிறார். சிவனுக்கு முதுகுன்றம்
உடையார் என்று பேர். முசுகுந்தேஸ்வரர் என்று பின்னாளில் மறுகி இருக்கக்கூடும். இங்கே தான் கண்ணகி வந்திருக்கக் கூடும். ஏன் வந்தாள் என்ற கேள்விக்குச் சான்றாகி நிற்கிறது கடின பாறைத் திட்டுக்களை வெட்டி எடுத்த கோயில் கிணறு. பின்னே அவ்வளவு தூரம் நடந்துவந்தவர்களுக்குத் தாகம் இருந்திருக்குமல்லவா.
இந்த சோழர்கள் கிட்டே பெரிய நல்ல/கெட்ட பழக்கம் ஒன்று உண்டு . ஒரு கல்லை விடமாட்டார்கள் பாவிகள். அங்குலம் அங்குலமாய் கலைநயம் கொடுத்து இண்டு இடுக்கு விடாமல் கல்வெட்டு எழுதி விடுவார்கள். சரியான பராமரிப்பில்லாமல் கிடந்த முசுகுந்தேஸ்வரத்தைப் பார்த்து வருத்தங்களோடு புறப்பட்டுப் போனேன். சில மீட்டர் தூரத்திலே மூவர் கோயில் என்ற கைகாட்டிப் பலகை.. என்னை வரச் சொல்லி சுண்டி இழுத்தது. அது பற்றின விபரங்கள் நாளை....
*****
வலைச்சரத்தில் உங்களுக்கெல்லாம் நன்கு தெரிந்த மகேஷை எனக்குத் தெரியும் போது அவன் ஒரு அசாதாரணமானவன் என்பது மட்டும் புரிந்து போனது. அண்ணா அண்ணா என்று உருகும் மகேஷுக்கு இணையத்தில் தமிழ் எழுதுவதற்கான கோடு மட்டும் போட்டுக்கொடுத்தேன். அந்த கோட்டின் மீது ரோடு போட்டு. ஆறு கிலோமீட்டருக்கு ஒருக்கே டோல்கேட் அமைத்து வசூல்ராஜாவாக மாறினதெல்லாம் அவன் ஆர்வமும் ஈடுபாடும் தான்.
திருப்பதி மகேஷ் இன்று உங்களெக்கெல்லாம் தெரிந்த பயனராய் இருக்கக் கூடும். நிறைய எழுதுகிறான் என நினைக்கிறேன். நான் நிறைய எழுதுவதில்லை என்ற ஆதங்கம் அவனுக்குண்டு. நான் சத்தங்காட்டாமல் அவனையும் வாசிப்பது அவனுக்குத் தெரிந்திருக்காது. காயத்ரி தான் அடிக்கடி மகேஷ் எழுதும் பதிவுகளை குறுஞ்செய்தியில் அனுப்பி வைக்கும். காயத்ரி பற்றி வலைச்சரத்தில் ஒரு நாள் எழுதியே ஆகவேண்டும். இல்லையென்றால் கொலைமிரட்டல் விடுக்கும். சாத்வீகியான எனக்குத் தேவையா அதெல்லாம். ஆக நீங்கள் வாசித்துப் பின்னூட்டமிட்டிருந்தாலும் நம்ம மகேஷ் தளத்தையும் எனக்கும் அவனுக்குமான அன்பையும் நட்பையும் இங்கே எழுதுவதற்காகவேணும் அவன் வலையின் தொடர்புரலியை இங்கே குறிப்பிடுகிறேன். தம்பி வள்ளின்னு ஒரு கதை எழுதி இருக்காப்லயாம். நமக்குத் தொழில் போட்டி உருவாகுதோ... ;)
****
உதயன் வலையைப் பற்றி தனியே சொல்கிறேன் என்று மேலே சொல்லியிருந்தேன். அவருடைய தளத்தை நீங்கள் நிச்சயம் பார்வையிட வேண்டுமென்று அதிகாரமெல்லாம் செய்ய மாட்டேன். உண்மையில் நீங்கள் எதிர்வரும் காலத்தில் பல வரலாற்றுத் தகவல்களுக்காய் உதயனின் தளத்தைப் பார்வையிடவேண்டிய சூழல் உருவாகும். அப்படியா ஒரு தகவல் திரட்டி அவர். தமிழகத்தில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட மலைகள் ஏறி இறங்கினவர். இன்றைக்கு நான் இப்படி ஊரூராகச் சுற்ற அவரே கூட ஓரு தூரநின்ற துரோணராக இருக்கலாம். சமணம், பௌத்தம் என்று நீங்கள் கேள்விப்படிருக்கக் கூடும். களப்பிறர்கள் காலத்திலான சமணர்கள் வாழ்வுமுறை, கல்வெட்டுகள் பற்றிய புகைப்படங்கள் என்று தன் பானியில் இயங்குகிறார்.
தமிழ் நாட்டின் கம்பிக் கோலங்களை கணினியில் வரைந்து ஆவணப்படுத்தி இருக்கிறார். சாண்டில்யனின் கடல்புறா புதினத்தில் வரும் கப்பலை வரைகலையில் வடிவமைக்க வேண்டுமென்பதில் தீராதாகத்தோடிருப்பவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் தன் தளத்தை ஒரு Open Source சேமிப்பகமாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
******
வலைதளப் பிதாமகர்கள் வழங்கும் டிஸ்கி போல ஒரு தகவல்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே யமுனாம்பாள் சத்திரம் என்ற ஒரு கட்டிடத்தை உடன் வந்த உள்ளூர் நண்பர் காண்பித்தார். பிற்கால கட்டுமானத்தில் அழகுற அமைந்த அந்த கட்டிடம் இன்றைக்கு அரசு நெல்கொள்முதல் மண்டியாகச் செயல்படுகிறது. சில ஆண்டுகள் முன்பு, பள்ளிக்கூடமாகச் செயல்பட்டுவந்த அந்த சத்திரத்தின் வெளித்தோற்றத்தில் அமைந்த சிற்பங்களை படமெடுத்துக்கொண்டேன்.
நகரத்தின் நடுவே பழமையில் கொஞ்சம் சிந்தைந்திருந்தாலும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகளோடு அமைந்துள்ள இது போலான கட்டிடங்களை அரசுகள் பாழடைந்த கட்டிடங்களாக்காமல் பாதுகாத்தால் நிறைவாக இருக்குமென்று மனதுக்குப் பட்டது.
நல்லது நாளை சந்திக்கலாம்...
விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........
கார்த்திக். புகழேந்தி.
03- 07-2015.
|
|
Vazthukal
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteதங்கள் பயணக் கட்டுரைக்கும், பதிவர் அறிமுகத்திற்கும் நன்றி,
நன்றி.
>>> (ஆம் நீங்கள் நினைத்தது போலவே தான் அவர் ஒரு தேவதாசியாக இருந்திருக்கக் கூடும் ! யூகம்) <<<
ReplyDeleteயூகம் தான் என்றாலும் தயவு செய்து திருத்திக் கொள்ளவும்.
யமுனாம்பாள் - மகாராணியார்!.. தங்களின் யூகத்தைப் போல் அல்ல!..
நீடாமங்கலம் அருகே என்று நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.. ஆனால் ஊருக்குள் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் ஒரு சத்திரம் இருக்கின்றது. அதன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டு விட்டன..
காரணம் - அவை இல்லற நிலைகளைக் காட்டியதால்!..
சிதைக்குப் போகும் வரை - சிதைத்தவர்களுக்கு இல்லறம் பிடிக்காதோ- என்னவோ!?..
யமுனாம்பாள் சத்திரம் தஞ்சை மாவட்டத்தின் புகழ் பெற்ற சத்திரங்களுள் ஒன்று..
அந்த சத்திரத்திலும் பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்தது..
இப்போது சத்திரத்தின் நிலை எப்படி என்று தெரியவில்லை..
நீடாமங்கலம் ஊருக்குள் - யமுனாம்பாள் கோயில் என்று உள்ளது. அங்கே மாமரத்தின் மேடையில் தான் வழிபாடு.. தைமாத வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நிகழும். கடைசி வெள்ளியன்று திருவிழா..
இந்த நீடாமங்கலத்தில் - பிரசவத்தின் போது துர்மரணம் நிகழ்வதில்லை. அதற்குக் காரணம் - யமுனாம்பாள் - பிரசவத்தின் போது இறந்து போனது தான். அவர்களே தாயாக நின்று இந்த ஊர் மக்களை பிரசவத்தின் போது காப்பதாக ஐதீகம்..
யமுனாம்பாள் - தஞ்சையை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜி மன்னரின் மனைவியருள் ஒருவர்.
நீடாமங்கலத்திற்கு யமுனாம்பாள்புரம் எனவும் பெயருண்டு..
மகாராணி யமுனாம்பாள்!.. எங்கள் குடும்பங்களைக் காத்து நிற்பவர்..
தாங்கள் பயணப்பட்ட பாதையில் தங்களுடன் பயணிக்க வைத்து இரண்டு சிறப்பான பதிவர்களுடன் அழகான வலைச்சரம் தொடுத்திருக்கிறீர்கள்.... வாழ்த்துக்கள்.
ReplyDeleteபயனத்திலும் வலைச்சர ஆசிரியர்ஆக பொருப்பேற்று சிறப்பாக தொடர்ந்து
ReplyDeleteஎழுதும் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
இருக்கட்டும் எதாக இருந்தாலும் ஏழாம் நாளில் அப்பமும் மீன்களும் வழங்கி பாவ மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம்.//
ஹஹஹ
வள்ளின்னு ஒரு கதை எழுதி இருக்காப்லயாம். நமக்குத் தொழில் போட்டி உருவாகுதோ... ;)///
நோஓஓ. பதிவுகள் எழுதுவது எல்லாம் ஒரு
மகிழ்ச்சிக்காக மட்டும்...
உங்களுடன் பயணம் செய்த உணர்வு... பாராட்டுகள்...
ReplyDeleteஇரு அறிமுக நண்பர்களுக்கும் வாழ்த்துகள்...
முன்னுரை, சுற்றுலா, அறிமுகம் என அசத்தும் பாணி அருமை. நாளை சந்திப்போம்.
ReplyDeleteதிருப்பதி மகேஷ் சில நாட்களாகத்தான் எனக்கு அறிமுகம்! சோழர்களின் சிற்பத்திறனும் கோயில்களின் அழகும் வியக்க வைக்கின்றது. உதயன் தளத்திற்கு சென்றதில்லை நேரம் கிடைக்கையில் பார்க்கிறேன்! இரண்டுநாட்களாக கொஞ்சம் பிஸி! அதனால் தாமதமான பின்னூட்டம்! இணையம் மெதுவாக இயங்குவதால் ஓட்டிட முடியவில்லை! வருந்துகின்றேன்!
ReplyDeleteமகேஸ் நல்ல நண்பர் நன்றாக அறிவோம்.....நேரில் சந்தித்தும் ஆகிவிட்டது! அவருடன் தொடர்பிலும் உள்ளோம்....நண்பரே! வாழ்த்துகள் அவருக்கும் மற்ற பதிவர்களுக்கும்...
ReplyDeleteசோழர் கோயில் பிரமிக்க வைக்கிறது, புகைப்படம் அருமை!
வாழ்த்துகள்!