எனது TOP TWO
திருநெல்வேலிக்கே அல்வாவா ..
தருமிக்கே கேள்வியா ..
அப்டின்றது மாதிரி எல்லோருக்கும் தெரிஞ்சவங்களைப் பத்தியே மறுபடியும் உங்க கிட்ட சொல்ல வர்ரது ரொம்ப சரியான காரியம் இல்லைதான். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடிச்ச ஒன்றை உங்க கிட்ட மறுபடி மறுபடி சொல்றதுக்கு ஒரு ஆசைதான். எனக்கு மிகவும் பிடித்த இரண்டு பதிவர்கள் பற்றி சொல்லணும்னு ஒரு ஆசை. அவர்களது எண்ணங்கள், எழுத்துக்கள் நிறையவே பிடிச்சிப் போச்சு. அதனாலே அதை மறுபடி மறுபடி சொல்லி வருகிறேன். Repetition is bore அப்டின்றது தெரிந்தாலும் சொல்லிடணும்னு ஆசை.
நம்ம பதிவர்கள் எல்லார் எழுத்தையும் நான் வாசித்ததில்லை; வாசிச்ச சிலரின் பதிவுகளும், எழுத்து நடையும் புரிந்ததில்லை. ஆக, நான் வாசித்து அதில் புரிந்துகொண்ட பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்காரர்களைப் பற்றிய ஒரு குறிப்பு.
இது ஒன்றும் அவர்களை அறிமுகப்படுத்துவதற்காக இல்லை. எனக்குப் பிடித்த இவர்களின் எழுத்தைப் பற்றிச் சொல்ல இந்த ஆசிரிய வாரத்தைப் பயன்படுத்தப் போகிறேன். அவ்வளவே..இவர்களைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஊரறிந்த பதிவர்கள். அவர்களுக்கு வெளிச்சம் போட அல்ல இப்பதிவு. மாறாக அவர்களின் மேலுள்ள என் பிரமிப்புக்கு ஒரு வெளியீடு.
முதலாவது பதிவர் இளவஞ்சி. முதலில் வாசித்து நான் “விழுந்த” பதிவு அவரது நண்பர் ஒருவரைப் பற்றிய பதிவு. அவர் சொன்ன அந்த ராஜேஷ் …! என்னன்னு சொல்றது. அதை என் எழுத்தில் ஏதாவது எழுதிக் கொச்சைப் படுத்த விரும்பவில்லை.
அதன் பின் தொடர்ந்து மற்ற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தபோது ஒன்று புரிந்தது; எந்தப் பதிவுகளை மிகவும் விளையாட்டுத்தனமா நகைச்சுவையோடு ஆரம்பிக்கிறாரோ, நிச்சயம் மனுஷன் கடைசியில அழ வச்சிருவார்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதுமாதிரி பதிவுகள் நிறைய. சமீபத்தில் எழுதிய அவரது புல்லட் பற்றிய பதிவு வாசித்தவர்கள் அனைவரையும் உலுக்கியது பின்னூட்டங்களில் தெரிந்தது.
கூரானைப் பற்றிய அந்தப் பதிவும் இதுபோல் மனசைக் கலங்க வைக்கும் பதிவு. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
கொஞ்ச நாட்கள் மட்டும் பாலகுமாரனின் கதைகளில் சிறிது மோகம் கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. சாதாரண சினிமாப் பாட்டொன்றைப் பற்றிக்கூட எழுதிக் கண்களைக் கலங்க வைத்து விடுகிறாரே என்று நினைத்ததுண்டு. ஆனால் இளவஞ்சியின் பதிவுகளை வாசித்த பிறகு பாலகுமாரனின் எழுத்து மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. மனசக் கலங்கடிக்கிற இளவஞ்சியின் எழுத்தை மிஞ்சும் எழுத்துக்காகக் காத்திருக்கிறேன். இளவஞ்சி தன் மகள் முதல் நாள் பள்ளிக்குச் சென்ற அன்று நாடுதாண்டி இருந்து கொண்டு வாழ்த்து சொன்ன பதிவை என் மகள்களுக்கு அனுப்பிய போது நான் பிள்ளைகளை வளர்த்ததில் இப்படி ஒரு அழகான காரியம் செய்ததேயில்லையே என்ற கவலையும், இளவஞ்சியின் எழுத்தின் மேல் பொறாமையும் ஒன்றாய் வந்தன.
இவ்வளவு மனதைத்தொடும் பதிவுகள் தரமுடிந்த கையோடு தனி நகைச்சுவைப் பதிவுகளையும் அழகாக எழுதுகிறார். அதையும் விட மனுஷனுக்குக் கோபம் வந்தாலும் நல்லாவே எழுதுகிறார். நன்கு நினைவிருக்கிறது - அவரது ஒரு கோபப் பதிவுக்கு ‘உங்கள் ரெளத்திரமும் அழ்காக இருக்கிறது’ என்று நான் பின்னூட்டியது.
அவர் இன்னும் நிறைய்ய்ய்ய்ய்ய எழுதணும்.
உணர்ச்சிகளால் முன்னவர் என்னைக் கவர்ந்தாரென்றால் தன் தமிழ்நடையால் என்னைக் கவர்ந்தவர் செல்வநாயகி.
சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம் - தலைப்பின் இந்தக் கவித்துவமே எனக்குப் பிடித்துப் போனது. கவிதையென்றால் காததூரம் ஓடும் கற்புர வாசனை தெரியாத ஜென்மமான எனக்கும் பிடிக்கின்றன இவரது கவிதைகள். அதற்குக் காரணம் எழுத்தின் எளிமையும், நேர்மையும். உள்குத்து என்றெல்லாம் இல்லாமல் முகத்தில் அறையும் உண்மைகளை அவைகள் தாங்கி நிற்பதால் இருக்குமென நினைக்கிறேன்.
இவரது எழுத்தும் மனதில் இருந்து வரும் உண்மையான உணர்வுகளைத் தாங்கி வருவதால்தானோ என்னவோ, அந்தச் சிறுவன் ரமேஷ் என்றும் உள்ளத்தில் ஒரு ஓரத்தில் உறுத்திக்கொண்டு இருக்கிறான். அந்தப் பதிவில் சமூகக் கேவலங்களை உள்ளூட்டாக வைத்திருந்ததும் ஒரு தனி அழகு.
இளவஞ்சிக்குச் சொன்னது போல் இவரது ரெளத்திரமும் அழகு. விஜயா பற்றிய அந்தப் பதிவில் வெளிப்படும் ,ரெளத்திரமும் ‘எங்கள் சாமிகள்’ பதிவில் வெளிப்படும் கோபமும் அழகான, ஆழமான கோபங்கள்.
இவரது கோபத் தணல் அணையாது கனன்றுகொண்டே இருக்க என் வாழ்த்துக்கள்.
இன்னும் வருவேன் ...