என் பார்வையில், Top 2 தமிழ் வலைப்பதிவர்கள் குறித்துக் குறிப்பிட விரும்புகிறேன்.
Paulo coelho எழுதிய The Alchemist நூலை முதலில் படித்தவுடனும் Majidi Majidiயின் Baran திரைப்படம் பார்த்த பிறகும் அவர்களின் பிற படைப்புகளையும் அலைந்து திரிந்து தேடிப் பிடித்தேன். ஒரு படைப்பாளியின் ஒரு படைப்பைப் பார்த்த உடனேயே, அவருடன் நம்மைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்போது, அவரின் பிற படைப்புகளைத் தேடிப் பார்க்க வைக்கும் போது நாம் அவரின் ரசிகராகவே மாறி விடுகிறோம். ஒரு படைப்பின் மூலமே கூட அவரை முழுமையாக அறிந்து கொள்ள இயல்வதோடு அவரின் பிற படைப்புகளில் என்ன எதிர்ப்பார்க்க முடியும் என்பதும் தெளிவாகி விடுகிறது.
இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ தமிழ் வலைப்பதிவுகள் படித்திருக்கிறேன். ஆனால், ஓரிரு மாதங்கள் வலைப்பதிவுகளைப் படிப்பதையே நிறுத்தி விட்டுத் திரும்ப வந்தாலோ நண்பர்களுக்கு நல்ல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கும்போதோ மனதில் தோன்றி மறையும் வலைப்பதிவுகள் மிகச் சிலவே. Paulo Coelho, Majidi Majidi போல் ஒரு இடுகை கூட விடாமல் நான் முழுமையாகப் படித்த வலைப்பதிவுகள் என்று நினைவுக்கு வருவது இரண்டே இரண்டு தான். அவை
1. இராம. கி அவர்களின்
வளவு வலைப்பதிவு - தமிழ், தமிழ், தமிழ் என்ற தெளிவான எல்லை, நோக்கோடு இயங்குகிறது இந்தப் பதிவு. ஒரு இடுகையைப் படித்தாலே பதிவு எதைப் பற்றியது என்று புரிந்து போகும் அளவுக்கு consistentஆக எழுதுகிறார். தமிழ் வலைப்பதிவுலகில் மலிந்து கிடக்கும் மொக்கை, மொன்னை, மொட்டை, கும்மி, வெட்டி, ஒட்டிப் பதிவுகளுக்கு இடையில் எத்தனை பின்னூட்டம் வருகிறது என்று எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், தான் பதிய விரும்புவதைத் தொடர்ந்து அயராமல் பதிந்து வருகிறார். தொடர்வினை (meme) இடுகைகளைக் கூட எப்படி தன் ஈடுபாடுகளுக்கு ஏற்ப பயனுள்ளதாய் தர முடியும் என்பதற்கு இவரின் இந்த
சுடர் இடுகை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
"தமிழில் ஐயமா, இராம. கியைக் கேட்டுப் பார்க்கலாம்" என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு வல்லுனர் பதிவராக இருந்து வருகிறார். புத்தகமாகப் பதிப்பிக்கத் தக்க அளவுக்கும், உசாத்துணையாகச் (reference) செயல்படக் கூடிய அளவுக்கும் தகவல் செறிவு மிக்கதாய் உள்ளன இவரது இடுகைகள். வலைப்பதிவு என்னும் ஊடகம் இல்லாவிட்டால் இவரைப் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளுவது அவ்வளவு எளிதாய் இருந்திருக்காது. வலைப்பதிவு ஊடகத்தின் வீச்சை, பயனை முழுமையாகப் புரிந்து செயல்படும் ஒரு சில பதிவர்களில் இவர் ஒருவர் என்று தயங்காமல் குறிப்பிடுவேன்.
2. அஞ்சலியின்
ஒரு குட்டித் தோட்டம் பதிவு - சமூக நோக்கோடு செயல்படும் இராம. கியின் வளவுக்கு நேர் எதிர்த் திசையில் வலைப்பதிவுகளின் இன்னொரு பரிமாணத்தைக் காட்டுவதாக அமைந்து இருக்கிறது அஞ்சலியின் குட்டித் தோட்டம். அஞ்சலி எழுதும் உள்ளடக்கம் போன்றவைக்காகவே உண்மையில் வலைப்பதிவுகள தொடங்கப்பட்டன. யார் எதைப் படிப்பார்கள், யார் என்ன எழுதுகிறார்கள், பின்னூட்டம் போடுவார்களா மாட்டார்களா, இன்றைய வலைப்பதிவுலக அரசியல் நிலவரம் என்ன, திரட்டியில் தன்பதிவு தெரிகிறதா இல்லையா, இன்று என் வலைப்பதிவுக்கு எத்தனை பேர் வந்தார்கள் என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் பதிவைப் போட்டோமா விளையாடப் போனோமா வீட்டுப் பாடத்தை முடித்தோமா என்று வலைப்பதிவை ஒரு இனிய, எளிய, தனக்குப் பிடித்த பொழுதுபோக்காகக் கொண்டிருக்கிறார் அஞ்சலி.
இராம.கியிடம் இருக்கும் consistency அஞ்சலி இடமும் உண்டு. அவரின் ஒரு இடுகையைப் படித்தாலே, இந்தப் பதிவு முழுக்கவே அவர் வாழ்க்கை, விருப்பங்கள், பொழுதுபோக்குகள் குறித்தது என்று புரிந்து போகும். குழந்தைப் பதிவர் என்று எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாத இடுகைகள். அஞ்சலி எழுதிய
பொய் என்ற இடுகை என் all time favourite. தமிழ் வலைப்பதிவுலகில் நினைவில் நிற்கும் இடுகைகளில் இதுவும் ஒன்று.
தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் குழந்தைகளின் விருப்பம் அளவில்லாதது. அதற்கு வலைப்பதிவுகள் எப்படி உதவக் கூடும் என்பதற்கு, ஆந்திராவில் உள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பதிந்த ஒளிப்படப் பதிவைக் குறித்த
BBC விவரிப்பைக் காணலாம். குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதுவதைக் காட்டிலும் அவர்களே நேரடியாக எழுதுவது அவர்களின் சின்ன அழகான உலகத்தை உள்ளது உள்ளபடி எடுத்துக்காட்டு்கிறது.
அஞ்சலியின் உணர்வுகளைச் சிதைக்காமல், பூச்சிட்டு மெருகேற்றுகிறேன் என்று இல்லாமல் அப்படியே வலையில் இடும் அஞ்சலியின் அம்மாவின் திறனும் மெச்சத்தக்கது. அஞ்சலி போல் இன்னும் நிறைய குழந்தைகள் வலைப்பதிய வர வேண்டும் என்பது என் ஆசை.
உங்கள் பார்வையில் சிறந்த வலைப்பதிவர்கள் யார், ஏன் என்று
அவரவர் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
அன்புடன்,
ரவி