07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 28, 2009

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்


வலைப்பூவின் இதழோடு இதழ் சேரும் நேரம்
இன்பங்கள் ஆறாக ஊறும்.
ஆறாக ஊறினால் மட்டும் போதுமா? அது ஒரு வழி அமைத்துக் கொண்டு ஓட வேண்டும், வற்றாத நதிகளாக. அந்த காலத்தில், மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த காலத்தில், மக்கள் ஆற்றங்கரையோரம் நடந்து சென்று தான் போக வேண்டிய இடங்களுக்குப் போய் இருக்கிறார்கள். அதனால் ஆறு என்பதை வழி என்றும் சொல்வதுண்டு. மக்கள் ஆறுகளுக்கு அருகில் வாழ்ந்து வந்ததால் நாகரிகமும் ஆற்றங்கரைகளிலேயே தொடங்கியதாக அறிகிறோம்.
ஆறாவது நாளில் அடியெடுத்து வைக்கும் போது, அறிமுகங்களில் உறவுகளின் உணர்வலைகளை ஓரளவேனும் உள்வாங்கிப் பரிமாறிய நிறைவு ஏற்படுகிறது. ஆறாவது குழந்தை பெண் குழந்தை பிறந்தால்(அந்த காலமாக இருக்கும் போலிருக்கிறது, இந்த காலத்தில் ஏது ஆறாவது குழந்தை?!) ஆறா பெருகினாலும் பெருகும், இல்லாட்டி நீரா வடிச்சாலும் வடிக்கும்(செல்வத்தை தான் அப்படிச் சொல்கிறார்கள்) என்று நம்மவர்கள் கிராமங்களில் சொல்வது வழமை. இந்த காலத்தில் அதற்கான காரணத்தைக் கூட தெரிந்து கொள்ள தேவையில்லாமல் போய் விட்டது . இருப்பினும் கிராமபுரங்களில் இன்னும் ஐந்து,ஆறு என்று குழந்தைகள் பெற்றுக் கொள்கிறவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
ஆறு குழந்தைகளைப் பெற்ற தாய் குடும்பக் கட்டுப்பாடு செய்வதற்கு செவிலியரின்(தாதியர்) ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த செய்தி தெரிந்து வேறு ஊரில் வசிக்கும் அந்தப் பெண்ணின் தாய் ஒப்பாரியுடன் அலறியடித்துக் கொண்டு வருகிறார். ஏன் இப்படி அழுதுகொண்டு வருகிறீர்கள் என்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கேட்கிறார்கள். என் மகளை கொல்வதற்குள்ள வேலை செய்திருக்கிறார்கள். என் மகளை எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்? எனக்குச் சொல்லுங்கள் நான் போய் அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்கிறார். அதற்கு அக்கம் பக்கத்தவர்கள், ஒன்றும் பயம் இல்லை, ஏன் இப்படிக் கத்துகிறீர்கள், குடும்பக் கட்டுப்பாடு என்பது நீண்ட நாட்களாக எல்லோரும் செய்து கொள்ளும் வழக்கமாகிவிட்டது, உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்கிறார்கள். அப்பவும் அந்த பெண்ணின் தாயை சமாதானப் படுத்த முடியவில்லை. பின்னர் மருத்துவ மனைக்குச் சென்று தன் மகளை அழைத்து வந்து விட்டார் அந்தத் தாய். இதிலிருந்து நமக்குப் புலப்படுகின்ற செய்தி, அந்தத் தாய்க்குத் தெரிந்ததெல்லாம், முப்பதாண்டுகளுக்கு முன் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் அறுவைச் சிகிச்சையின் போது எவ்வளவு வலியைத் தாங்கிக்கொண்டு சிரமப் பட்டார்கள் என்பது மட்டுமே. மேலும், அந்த சிரமத்தையும், வலியையும் விட இன்னும் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தால் கூட வளர்த்து விடலாம் என்பது அந்தத் தாயின் ஆழ்மனதில் உறங்கிக் கொண்டிருக்கும் அழியாத எண்ணம். அதற்கு முக்கிய காரணம் கல்வியின்மை. அந்தத் தாயின் பிடிவாதத்த்தால் அவரின் பேரக்குழந்தைகளும் சிறந்த கல்வியைப் பெற இயலாமல், சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் செல்லும் நிலைதான் ஏற்படுகிறது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைக் கொண்டு வந்த நாட்களில், ஆண்களும் இத்திட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று அரசாங்கம் ஊக்குவித்தது. குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும் ஆண்களுக்கு அரசாங்கம் நிலம் கூட கொடுத்தது. பின்னர் இன்று வரை ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். ஒரு வேலை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் ஆண்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்கத்திடம் போதுமான நிலம் இல்லையோ என்னவோ?
கிராமங்களில் கள், பதநீர் போன்ற பானங்கள் இறக்கப் படுவதுண்டு. தற்போது அதற்கான விற்பனை அனுமதி கிடையாது. பதநீர் எனும் பனஞ்சாறு பனை மரத்திலிருந்து இறக்கப் படுவது. குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை இதைக் குடிக்கிறார்கள். பெரும்பாலும் இளைஞர்களும், நடுத்தர வயதினரும்(குழந்தைகளல்லாதவர்கள்) கள்ளைத்தான் விரும்பி குடிக்கிறார்கள். கள்ளில் போதை இருப்பதாக உணரப்படுவதால் குழந்தைகளுக்கு இதைக் கொடுப்பதில்லை. அவர்களுக்கு மாலை நேரத்து மயக்கம் கள் போதைதான். மாலை நேரங்களில் இளைஞர்களும், நடுத்தர வயதினரும் கொக்கு மற்றும் மடையான்களைப் போன்று படைப் படையாக கள்ளுக்கடைகளை நோக்கி பயணம் செய்வதைப் பார்க்கலாம். தென்னங்கள்,பனங்கள் என்று தென்னை மரத்தில் இருந்தும் பனை மரத்தில் இருந்தும் கள் எடுக்கிறார்கள். காலை மாலை என்று இரு வேளைகளில் இம்மரங்களின் பாளைகளை சீவி(அறுத்து) விட்டு அதில் இருந்து வடியும் சாரை, கலயம் கட்டி இறக்குகிறார்கள். இது தமிழ் நாட்டில் மட்டும் இல்லை, தமிழர்கள் புலம் பெயர்ந்த மலேசியா போன்ற நாடுகளில் புகழ் பெற்றது. இந்தக் கள்ளுக்கடைகளை எதிர்த்துதான் தந்தை பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
குடிக்கிற கள் பற்றி பார்த்துவிட்டு நாம் எழுதுகிற, பேசுகிற "கள்" பற்றி பார்க்காமல் போனால் எப்படி? என்று கேட்பது உணரப்படுகிறது. பெரும்பாலானவர்கள் ஒரு சொல்லை ஒரு வகையில் எழுதிக்கொண்டு வந்தால், அதையே மற்றவர்களும் பின்பற்றுவது நம்மிடையே வழக்கமாகவே இருக்கிறது. நம்மவர்களில் பலர் வாழ்த்துக்கள், எழுத்துக்கள், கருத்துக்கள் என்று பயன் படுத்துவதைப் பார்த்திருப்போம். அது சரியா தவறா என்று சற்றும் சிந்தித்திருக்கமாட்டோம். ஏனென்றால் பிரபலமனவர்களே அதைத்தான் பயன் படுத்துகிறார்கள் என்று சாக்கு போக்கு சொல்லி பிழைத்துக்கொள்கிறோம்.
கள் என்பது ஒரு இடைச் சொல். அவ்விடைச்சொல் வாழ்த்து, எழுத்து, கருத்து என்னும் உயிரெழுத்துக்களை(.கா : த்+=து ) இறுதியில் உடைய சொற்களின் பின்னால் வரும்போது ஒற்றெழுத்து மிக வேண்டியதில்லை. எடுத்துக்காட்டாக வாழ்த்து+கள் = வாழ்த்துகள், எழுத்து+கள் = எழுத்துகள், கருத்து+கள் = கருத்துகள் என்றே கொள்ளவேண்டும்.
இவ்விடங்களில் ஒற்றெழுத்தை மிகுத்து எழுதினால் வாழ்த்தாகிய கள், எழுத்தாகிய கள், கருத்துள்ள கள் என்று பொருத்தமற்ற பொருள்களையே தரும். ஆகவே இத்தகைய இடங்களில் ஒற்றெழுத்து மிகாமல் எழுதுவது சரி என்று கொள்கிறோம். ஒற்றெழுத்தை மிகுக்காவிட்டால் பொருட்பிழை ஏற்படக்கூடிய இடங்களில் மட்டும் மிகுத்து எழுதலாம்.
சொல் அறிமுகம் செய்தாயிற்று. வலைப்பூக்களை அறிமுகம் செய்யவேண்டும். எண்ணற்ற வலைப்பூக்களில், நம்மக்கள் எழுதி வருகிறார்கள். பல சிறந்த முன்னணி பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பற்றி இங்கு பேசவேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. அவர்களெல்லாம், பெரும்பாலான பதிவர்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. அதே நேரத்தில், இலைமறை காய்களாக இருக்கும் திறனாளர்கள் சிலரை அறிமுகப் படுத்தினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அறிமுகம்
இளவேனில் இவரது வலைப்பூ, தமிழ்நதி தென்றலாகவும், புயலாகவும் வீசுகிறார். தனது தாய்நாட்டிற்கு, தாய் வாழும் இடத்திற்கு சென்ற விசயத்தைக் கூட திக் விஜயமாகப் பதிவு செய்திருக்கிறார். இலங்கையில், தமிழர்கள் எப்படியெல்லாம் தடுத்துவைக்கப் படுகிறார்கள் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது இவரது "ஒரு பயணம்...! சில குறிப்புகள்...!" கட்டுரை. நாமும் அவரது அழகிய வலைப்பூவிற்கு பயணம் செய்து செய்து உணர்ந்து கொள்வோமே!
கிளிஞ்சல்களில் மணி செய்து கவிதைகளாகக் கோர்த்து வருபவர் திரு விஷ்ணு. கலையாத மௌனத்தை அழகாகச் சொல்லி இருக்கிறார். ஏக்கம் மட்டும் நன்றாகத் தெரிகிறது. ஒரு தோழியைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார். சொல்லவும்(கேட்கவும்) முடியவில்லை மெல்லவும் முடியவில்லை. அவர்படும் கஷ்டம் நான் சொல்லி மாளாது. நீங்களே வந்து பாருங்கள், படியுங்கள்! நிறைய கவிதைகள் எழுதி இருக்கிறார் !
தனிமையைப் பற்றி எழுதாத கவிஞர்கள் உண்டோ?திரு. மதுமதி தனிமையின் வெறுமையைத் தனது மதுரன் வலைப்பூவில் கொட்டிவைத்திருக்கிறார். இறுதியில் இட்டுச் செல்லும் நம்பிக்கையுடன் முடிக்கிறார். இன்னும் பல கவிதைகளை பதிவு செய்திருக்கிறார். நாமும் தேனீக்களைப் போல் படையெடுத்து தேனெடுக்கலாமே !
திரு முபாரக் அவர்கள், முடிவற்ற அன்பின் தேடலில் சுவாசித்துக் கொண்டிருக்கிறார். அவற்றின் தேடலில் கிடைத்த தேனமுதாய்
முடிவற்ற தேடல் எனும் கவிதையில் எதை எதையெல்லாம் தேடுகிறார் என்று பாருங்கள். எது கிடைத்ததோ, அவற்றிலும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார். கிடைத்தா என்ன? நாமும் போய் பார்ப்போமே!
கண்ணாடி மழை, குத்தி விடுமென்ற பயம் வேண்டாம். கண்ணாடி மழையில் காதல் மழையை வர வைத்து, இதமாக இருக்கிறது என்கிறார் எழில் பாரதி. சின்னச் சின்ன விசயங்களை பதிவு செய்து சிறப்பு செய்திருக்கிறார். தொடக்கமும் முடிவும் அறியா நெடுந்தூரப் பயணம் காதல் என்கிறார்! நாம யாருக்காவது காதலில் தொடக்கம், இறுதி தெரியுமா? முதலில் கண்ணாடி மழையில் பயமில்லாமல் நனைவோம்!

தொடரும்...!
அன்பன்,
ஜோதிபாரதி.
ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!
வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்


கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


மேலும் வாசிக்க...

Thursday, February 26, 2009

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

இந்த ஒரு வார வலைச்சர ஆசிரியப்பணியில் தினமும் கொஞ்சம் கொஞ்சமாக வலைச்சரத்தில் மல்லிப்பூக்களைத் தொடுத்துக் கொண்டு வருகிறேன். இந்த வலைப்பூச்சரம் மணமோடு கூடிய வாடா மல்லிப் பூச்சரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அஞ்சு, ஆறு, என்று போய்க் கொண்டிருக்கிறேன் . அதனால் கொஞ்சம் களைப்படையாமல் இருப்பதற்கு ஆறையும், அஞ்சையும் கூட்டிப்பார்த்தேன் ஆரஞ்சு கிடைத்தது(6+5=11) . அதில் நான் சொன்னது போல் 11 சுளை இருந்தது(இருக்கும்). சாப்பிட்டு, கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன்.

பழமொழி அல்லது முதுமொழி என்பது பண்டைய காலத்தில் வழங்கப்பட்டு வந்த சொல். முதுமொழி என்பதை முதுமைசொல் என்று, கெட்ட சொற்களை பயன் படுத்தி வைவதைக்(திட்டுவதைக்) கூட பெரும்பாலான இடங்களில் வட்டார வழக்கில் பயன்படுத்தும்போது பார்த்திருக்கிறோம். முதிர்ச்சியான பெரியோர் சொல் முதுமொழி என்றாலும், பிஞ்சிலே பழுத்த பழம் என்று சொல்வோம் அல்லவா அந்த வகையில் கெட்ட சொற்களை முதுமைசொல் என்று சொல்கிறாகளோ என்னவோ?

"அங்காடிக்காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால், வெங்காயம் கருவேப்பிலை என்று பாடுவாள்" இந்தப் பழமொழி சொல்வதைத் தான் வள்ளுவர் இப்படி சொல்கிறார்,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

இதை எதற்கு கூறுகிறேன் என்றால், நான் இங்கு அங்காடிக்காரி சங்கீதம் பாடுவது போல் பாடிக்கொண்டிருக்கிறேனோ என்று ஒரு சிறிய சந்தேகம். கூட்டம் இல்லாவிட்டாலும் எனது பாகவதர் சங்கீதத்தை நான் நிறுத்தப் போவதில்லை. ஆமா!

ஆழம் தெரியாம காலை விடாதேன்னு சொல்லுவோம்(ஐயோ! எனக்கு இப்ப அப்படித்தான் தோனுது). முயலாதவரை(றை) நீ கற்றுக் கொள்ள முடியாது என்றும் சொல்கிறோம். கயிற்றில் நடக்கும் சர்க்கஸ் பெண்மணி, முயலாமல் இருந்திருந்தால், கயிற்றில் நடந்து சாகசம் செய்ய இயலுமா?

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்னு சொல்றோம், ஒரு மாணவன், நான் கலெக்டர் ஆவேன்னு சொன்னா சிரிக்கிறோம். இதையெல்லாம் நெருடலான விசயங்களாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஓட்டை ஒடச ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் போல், நாமளும் நம்ம பழமொழிகளுக்குள் நிறைய ஓட்டைகள் வைத்துகொண்டு சாக்கு போக்கு சொல்லி சமாளித்துக் கொண்டு வருகிறோம். ஏறத்தாழ அரசியல் வாதிகள் அல்லது சட்ட நிபுணர்கள் மாதிரி தான் நாமளும். அது நமக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுக்கிறது.


தவறுகளின் தடயங்களை அழித்துக்கொண்டு, தற்காலிக மகிழ்வடையும் அழி ரப்பராக இல்லாமல் கூர் முனை எழுதுகோல் தடுக்கி விழுந்த இடங்களை தவறு என்று அடித்து வைத்திருந்தால் அதுவே நமக்குப் பாடமாக அமையும்.

பண்பாடு

பழமொழிகளைப் பற்றி பேசிக்கொண்டு வரும்போது இன்னொரு விசயம் ஞாபகத்துக்கு வருகிறது. அண்மைய காலங்களில்(சென்ற தலைமுறை) , மனிதர்கள் முன் ஒன்றைச் செய்ய வெட்க்கப்படுபவர்கள், விலங்குகள் பறவைகள் முதலியவற்றின் முன் அவற்றைச் சிறிதும் நாணமிலாமல் செய்வார்கள். பழங்காலத்தில் வெள்ளைக்காரர்கள் நீக்ரோக்களான, கறுப்பின மக்களுக்கு முன் எது செய்யவும் வெட்கப் பட மாட்டார்களாம். பண்டையத் தமிழ்க் காதலி ஒருத்தி தன் தாயால் விதைத்து வளர்க்கப்பட்ட புன்னை மரத்தின் அருகில் இருந்து கொண்டு தன் காதலனுடன் பேசக் கூசினாளாம். இந்த நிகழ்வு, பயிருக்கும் உயிர் உண்டு என்னும் வள்ளலார் சிந்தனையை நினைவு கூர்கிறது. தற்காலத்தில் பேருந்திலிருந்து, பெருவிரைவு வண்டி வரை நாம் காணும் காட்சிகள் நம்மை விலங்குக்ளாக்கிச் செல்கின்றனவா? அல்லது வேறா? என்கிற மிகப்பெரிய கேள்விக்குறியை நம்முள் விதைத்துச் செல்கின்றன.

அண்மையில் பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது உடன் பயணம் செய்த ஐம்பது வயது மதிக்கத்தக்க இரு தமிழர்கள் பேசிக்கொண்டு வந்ததை செவிமடுக்க நேர்ந்தது. எனக்கும் மட்டும் அது நேரவில்லை, அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் நேர்ந்தது. ஆங்கிலம் மற்றும் மலாய் மொழிகளை கலப்படம் செய்து பேசிவந்தவர்கள், தமிழைக் கலக்காதது கண்டு மகிழ்வோடு இருந்தேன். அந்த மகிழ்ச்சி எனக்குத் தொடர்ந்து வாய்க்கவில்லை. ஆங்கிலம் மற்றும் மலாய் கலந்து பேசியவர்கள் மருந்துக்குக் கூட தமிழைக் கலக்கவில்லை. மாறாக அவ்வப்போது கெட்ட வார்த்தைகளால் மட்டும் தமிழைக் காறித் துப்பினார்கள். பேருந்தில் பயணம் செய்ததில் அவ்விருவர் தவிர நான் மற்றும் இன்னொரு தமிழ் இளைஞர் பயணம் செய்தார், மற்றவர்கள் எல்லாம் சீனர்கள். அப்போது சிந்தித்தேன், இளைய சமுதாயத்திற்கு பெரியவர்கள் விட்டுச்செல்லும் தமிழ் இதுமட்டும் தானா என்று.........!?

அறிமுகம்

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல்வேறு இலக்கிய சூழலில் பயணிக்கும் கவிஞர் மாதங்கி அவர்கள் "பெரிதினும் பெரிது கேள்" என்கிறார். இயற்கையிலிருந்து எண்ணங்கள் வரை நாடிபிடித்துப் பார்த்து எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். புனைவுகளைப் புகுத்தாமல் புன்னகைக்கிறது இவரது கவிதைகள். சிங்கையில், ஞாயிற்றுக்கிழமைகளில் குட்டி இந்தியா எனப்படும் தேக்கா வெட்டவெளியில் கூடும் வெளிநாட்டு ஊழியர்களின் கனவுகள், எந்தத் தடத்தில் ஊர்கின்றன என்று பாத்திரமாகிப் பார்த்திருக்கிறார். சிறுகதைகள் பல எழுதி இருக்கிறார். அவருடைய வலைப்பூவிற்கு நாமும் பயணிக்கலாமே!

கவிஞர் கிருத்திகா, கவிதைகளை அழகுற அழகியலைக் கொண்டுவந்து, பளீரென்று உரைக்கிறார். தனது என்ன உணர்வுகளை அணைபோட்டுத் தேக்கி வைக்காமல் வடிகால் வலைப்பூவில் வகை வகையாய் விவசாயம் செய்து வைத்திருக்கிறார். அவர் எழுதிய பெண்பால் கவிதைகள் மட்டும் நம்பால் ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை. மற்ற கவிதைகளும் தான். முகமூடிக் கவிதைகள் கூட எழுதியிருக்கிறார். அதெயெல்லாம் படிப்பதற்கு முகமூடி தேவையில்லை. நாமும் அங்கு பயணித்து வடிகாலில் வலைபோடலாமே! நாம் விரும்பும் விண்மீன்கள் கூட சிக்கலாம்.

ஷைலஷா அவர்கள் தனது எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பூவில் முதுமையின் அவலத்தை தனது சருகு என்னும் கவிதையில் தோலுரித்துக் காட்டுகிறார். அடுத்த தலைமுறையின் அவமதிப்பை அவதானித்திருப்பார் போலும். எண்ணற்ற கவிதைகளை எழுதி, எண்ணிய முடிதல் வேண்டும் என்னும் வலைப்பக்கத்தில் சரம் தொடுத்து வைத்திருக்கிறார். நாமும் அம்மலர்ச்சரத்தைச் சூடி மகிழலாமே!

அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை என்று சொல்வோம், இது காதல் ஜோதி, அருட்பெருங்கோ. அழகான காதல் கவிதைகளை மெல்லிய வருடலோடு தருகிறார். காதலில் விழுந்திருப்பவர்களுக்கு பருவமழை போற்ற கவிதைகள். அனுபவித்து எழுதியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. காதலைப்பற்றிய நேர்மறையான சின்னச்சின்ன மௌன மொழிகளையும் கவிதையாக்கி வைத்திருப்பவர். நாமும் அமராவதி ஆற்றங்கரைக்குப் போய் அந்தப் பருவ மழையில் நனையலாமே!

வாங்க பேசலாம் என்று அழைக்கிறார் வா.மணிகண்டன். உணர்வுகளை ஒப்பனையில்லாமல் கவிதைகளாக எழுதி வருபவர். வலிமையான வரிகளை உள்ளிருத்தி எழுதும் பாங்கு நன்றாக இருக்கிறது. ஈழத்தில் நம் மக்கள் படும் துயரத்தை நினைத்து என்னால் கவிதை எழுத மட்டுமே முடிகிறதே என்று கசிந்துருகியிருக்கிறார். ஓர் இரவின் அகாலத்தில் அந்த மரணம் நிகழ்ந்தது என்ற கவிதையில் தனது ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார். சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். நாமும் அவருடைய வலைப்பக்கத்தை அலசிப்பார்க்காலாமே!

இன்னும் தொடருவேன்...!

அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்


மேலும் வாசிக்க...

Wednesday, February 25, 2009

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

ஒன்று, இரண்டு, மூன்று என்று இறைவனை வரிசைப்படுத்திப் பாடு என்று முருகப்பெருமான் ஒளவையாரைக் கேட்டாராம். அது மாதிரி நானும் புராணம் (பழைய கதை) பாடிக்கொண்டிருக்கிறேன். எல்லாம் இந்த ஏழு நாளைக்குத்தான் ஆட்டம். அதுக்கும் கிடைக்கின்ற நேரத்தைத் தான் பயன் படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் எப்போவாவது ஒரு பதிவு போட்டு தப்பித்துக் கொள்ளலாம். அப்படி போட வில்லை என்றாலும் கூட யாரும் கேட்கப் போவதில்லை.

மூன்றாவது நாளுடன் விருந்தையும் மருந்தையும் முடித்துக் கொள்வதாக முந்தைய பதிவில் உறுதி கூறி இருந்தேன். கொடுத்த வாக்கு தவறுவதாக இல்லை. இருந்தாலும், இனி நான் இடும் இடுகைகளை மருந்து போல் கருதாமல் விருந்தாகக் கருதுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எட்டாத எட்டு

நான்காவது நாள்,
சிங்கையில் சீனர்களுக்கு நான்கு என்றாலே ஆகாது, நான்கு வந்தால் டை(Die) என்பார்கள். நாலாவது மாடியில் வீடு வாங்கப் பயப்படுவார்கள். வாகனங்களுக்கு வாகன எண் நான்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள். இது லாட்டரி சீட்டு முதலான எல்லா விசயங்களுக்கும் பொருந்தும். ஆனால் எட்டு என்றால் அவர்களுக்குச் செல்வம். எட்டா நம்பர் எட்டாத இடத்தில் இருந்தாலும் விடமாட்டார்கள். ஆனால், நம் தமிழ் மக்கள், எட்டு வந்தால் குட்டிச் சுவரு என்று நினைத்துகொள்பவர்கள். எந்த செயலைச் செய்தாலும் எட்டு வரக்கூடாது என்று வேண்டிக் கொள்பவர்கள். இந்த விசயம் இங்கு சௌகரியமா இருக்கு. நான்கை நாங்க எடுத்துக்குறோம். எட்டை எட்டாதவர்களுக்குக் கொடுத்துவிடுகிறோம்.(சீனர்களில் பெரும்பாலானவர்கள், உயரம் குறைவானவர்கள்தான்) தமிழகத்தில் செழித்த அளவில் நூற்றில் ஒரு பங்கு கூட புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் நாத்திகம், பகுத்தறிவு, போன்ற விசயங்கள் எடுபடவில்லை அல்லது பெரியாரைப் போல் யாரும் அங்கு பிறக்கவில்லை. அயலகத்தில் இட ஒதுக்கீடு போன்ற வேறு சில விசயங்களுக்கு தேவை இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். நீங்கள் இதைத் தேவையில்லாமல் இங்கு இழுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்களா? நியாயந்தான்.

காயலாங்கடை

காயலாங்கடை! காயலாங்கடை!! என்று நம்மவர்கள் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு கார் கொஞ்சம் பழசாத் தெரிஞ்சா, இனி காயலாங்கடையில தான் போடனும்னு கிண்டாலாகச் சொல்வதைப் பார்த்திருக்கிறோம். கரகாட்டக் காரன் படத்துல பேரீச்சம்பழத்துக்கு ஆசைப்படும் செந்தில், பழைய இரும்பு வாங்குபவரிடம் காரைப் போடச் சொல்வது, அருமையான நகைச்சுவையைக் கொடுத்தது. காயலாங்கடைன்னா என்ன? என்று நம்மவர்களில் பலபேருக்குத் தெரியாது. அந்த காலத்தில் பெரும்பாலும் தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள காயல்பட்டிணம் என்னும் பகுதியில் உள்ளவர்கள் பழைய இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கும் கடைகளை தமிழகமெங்கும் வைத்திருந்திருக்கின்றனர். குறிப்பாக சென்னை மண்ணடி போன்ற பகுதிகளில் காயல் பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் பழைய இரும்பு மற்றும் பொருட்கள் வாங்கும் கடைகளை வைத்திருந்ததாகவும் சொல்கிறார்கள். அதனாலேயே பழைய இரும்பு மற்றும் பொருட்களை வாங்கும் கடையை நாம் இன்னும் காயலாங்கடை! காயலாங்கடை!! என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

பூச்சாண்டி


வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க-உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே-நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே-நீ வெம்பி விடாதே!

எத்தனை பட்டுக்கோட்டையார் வந்து சொன்னாலும் நாம் இன்னும் நம் குழந்தைகளைப் பூச்சாண்டி காட்டிக்கொண்டு தான் இருக்கிறோம். அதுல நாம அதிகமாகக் காட்டுவது பழைய இரும்பு ஈயம் பித்தளைக்கு பேரீச்சம்பழம் விக்கிறவரைத் தான். பட்டுக்கோட்டையார் சொல்றபடி செய்யலாம்னு நினைச்சாலும், பிள்ளைங்க பண்ணுகிற டார்ச்சர்ல பூச்சாண்டி காட்டலன்னா, எங்க அடங்குறாங்க? இது வெளிப்படையான கருத்து. சிலர், "என் குழந்தையை எந்த பூச்சாண்டியும் காட்டாமத்தான் வளர்க்கிறேன்" என்று சொன்னால்....! சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன். சொல்பவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தான் பழைய இரும்பு, ஈயம் பித்தளைக்கு பேரீச்சம் பழம் விக்கிறவரைக் காட்டிப் பயமுறுத்தினோம் என்றால் , இங்கு சிங்கையில் இருக்கிற தமிழர்கள் கூட பழைய பொருட்கள் வாங்கும் காராங்கூனி(Salvage அல்லது நம்ம காயலாங்கடை மாதிரிதான்) -யைத்தான் காட்டிப் பயமுறுத்துகிறார்கள் . காராங்கூனி என்பது மலாய்ச் சொல் . மலேசியா மற்றும் ஈழத்தில் யாரைக் காட்டி பயமுறுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இப்ப நான் உங்களை எல்லாம் பயமுறுத்துவது மாதிரி தெரியுது.

ஒன்பது ரூபா நோட்டு அல்ல ஐந்நூறு ரூபாய் நோட்டு(காந்தி படம் போட்டது)

பொதுவாக, நம்மவர்கள் குழுவாகச் செல்லும் போது, ஒருவர் சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்றால், மற்றவர்களும் பின் தொடர்வது வழமை. அதில் தவறொன்றும் இல்லை. நேர விரயத்தைத் குறைக்கலாம். தமிழறிஞர் பேராசிரியர் மா.நன்னன் அவர்கள் ஏழாவது உலகத் தமிழ் மாநாட்டிற்கு மொரீசியஸ் நாட்டிற்கு தமிழக அரசு அனுப்பிய குழுவில் இடம்பெற்று அங்கு சென்றிருக்கிறார். அங்கு புழக்கத்தில் இருக்கும் பணத்தாள்களில் தமிழ்மொழியும் இடம்பெற்றிருப்பது கண்டு மகிழ்ந்திருக்கிறார். அத்துடன், அவர் பார்த்த ஐந்நூறு ரூபாய்த் தாளில் "ஐநூறு ரூபாய்" என்று எழுதி இருந்ததை தவறு என்று சுட்டிக் காட்டி இருக்கிறார். அதற்கு அங்குள்ளவர்கள், இந்தியாவிலுள்ள ஐந்நூறு ரூபாய் நோட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவத்தை அப்படியே பயன் படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இதைக் கேட்டு திரு.நன்னன் அவர்கள் வெட்கத்துடன் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டாராம்.

யாரோ ஒருவர் செய்த பிழை, சரி என பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வாழையடி வாழையாக வந்துகொண்டிருப்பது வேதனையான செய்தியாக இருக்கிறது.

தொல்காப்பியச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள்.
நூறு முன் வரினும் கூறிய இயல்பே.460
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும்.461
நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா. 462
தொல்காப்பிய எழுத்ததிகாரம் குற்றியலுகரப் புணரியலில் 462-ம் நூற்பாவில் "நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா" என்கிறார் தொல்காப்பியர். அதன் படி ஐந்து+நூறு =ஐந்நூறு என்பது சரி என்று நாச்சினார்கினியர் விளக்கம் தருகிறார்.

பின்பு வந்த நன்னூலிலும் உயிரீற்றுப் புணரியலின் 192 -ம் நூற்பாவில் "ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும்" என்று கூறப்பட்டிருக்கிறது.


ஒன்றன் புள்ளி ரகர மாக
இரண்ட னொற்றுயி ரேகஉவ் வருமே
189
மூன்றனுறுப்பு அழிவும் வந்தது மாகும் 190
நான்கன் மெய்யே லறவா கும்மே 191
ஐந்தனொற் றடைவதும் இனமுங் கேடும் 192
எட்ட னுடம்புணவ் வாகும் என்ப 193

அதற்கு சிவஞான முனிவர் பின் வருமாறு விரிவுரை கூறுகிறார்.

"அடைவதும் இனமும் என்றமையின் அருந்தாப்பத்தியால் ஐந்நூறு, ஐந்தூண் என்புழி ஒற்றுத் தன்னியல்பில் நிற்றல் கொள்க". அதனால் ஐந்நூறு என்பதே சரி என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். நீங்க என்ன நினைக்கிறீங்க?

கொசுறு (கொசுறு என்றால் பிசுவுதல் அல்லது இலவச இணைப்பு மாதிரி, நாமெல்லாம் காய்கறி வாங்குனா, கடைக்காரர் கருவேப்பிலை, மல்லித்தழை சும்மா கொடுக்கிறது இல்லையா? கொடுக்காட்டியும் பிசுவி வாங்க மாட்டோமா? அதேதான் விட்டுறாதீங்க)

என்ன கொசுறுன்னு சொல்லாமலே கொசுறுக்கே விளக்கமான்னு கேட்பது எனக்குப் புரிகிறது. தமிழறிஞர் மா.நன்னன் அவர்கள், தமிழக ஆளுநராக இருக்கும் சுர்ஜித் சிங் பர்னாலாவிற்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டின் நிரந்தர ஆளுநர் பர்னாலா!

அறிமுகம்

வாங்க! வாங்க!! என்று கூவி அழைக்கிறார் ஒருவர். கணக்கு பிணக்கு ஆமணக்கு என்று சொல்லுவோம். இலக்கணம் சொல்லித் தருகிறேன் என்கிறார். இலக்கணம், தலைக்கனம் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால், இங்கு அப்படியில்லை. வெண்பா விருந்துக்கு இரு கரம் கூப்பி வரவேற்கிறார். டியூஷன் பீஸ் எல்லாம் அவர் கேட்கவில்லை. வெண்பா இலக்கணம் கற்றுக்கொண்டு வெண்பா எழுதலாம் வாங்க, அப்படிங்கிறார் அகரம்.அமுதா. கண்டிப்பாக அகர வரிசையில் இருந்துதான் தொடங்குவார்/தொடங்குகிறார். இளம் கவிஞர்கள் வெண்பா எழுத விருப்பம் உள்ளவர்கள், கவலைப்படாமல் அவருடைய பதிவுகளைப் படித்து பயன் பெறுங்கள். சந்தேகம் இருந்து கேட்டால், பதில் சொல்கிறார். வெண்பா எழுதும் நண்பா என்றழைக்கலாம். இளைஞர்தான்! பெண்கவிஞர் அல்ல!

தாயைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இருக்க முடியுமா? திரு மோகனன் அவர்கள் தனது வலைக்குடிலில் மரபுக் கவிதை பற்றி தெரிந்து கொண்டு தனது தாய்க்கு முதல் பா வடித்திருக்கிறார். அவர் எழுதி இருக்கும் மற்ற புதுக்கவிதைகளையும் படியுங்கள். இவரைத் திரைப்படத்துக்கு பாடல் எழுத அழைத்தால் அழகாக எழுதிக் கொடுப்பார் போலும். மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கற்று வைத்திருக்கிறார்.

நிலவொளியில் ஒரு வெண்ணிலா, வலைப்பூவைத் திறந்தவுடன் மிளிர்கின்றன வெண்ணிலவும் விண்மீன்களும். நிலாவே, நிறைமதியைப் பற்றி கவிதை எழுதினால் எப்படி இருக்கும்? மாதம் ஒரு பூ பூக்கும் மகிழம்பூவைப் போல் இருக்கின்றன ஒவ்வொரு கவிதைகளும். நீங்களும் அந்த சுகமான அனுபவத்தைப் பெற வேண்டாமா? இப்பவே நிலவுக்குப் பயணப்படுங்கள்! வெண்ணிலாவின் வரிகளைத் தேடி...!

பிரக்ஞையில்லாச் சமிக்ஞைகள் என்கிற வலைப்பூவில் மதி என்கிற மதன் அவர்கள் பிரிதலைப் பற்றி எழுதித் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறார். இன்னும் வலிமையான கவிதைகள் பல வார்த்து வைத்திருக்கிறார். ஒவ்வொரு கவிதையும் தீட்டப்பட்ட கூரிய கொம்பு, அதை இன்னும் தீட்டியிருக்கிறார் வண்ணமாய்! வாசிக்க போகலாமே!


அடுத்தப் பதிவில் சி(ச)ந்திப்போம்...!

அன்பன்,

ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்
மேலும் வாசிக்க...

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் என்று சொல்வார்கள். அதனால் விருந்து மருந்து போன்றவற்றைப் பற்றி பேசுவதை மூன்றாவது நாளுடன் முடித்துக் கொள்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.

விருந்துக்கும், மருந்துக்கும் உள்ள உறவுகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

விருந்தாளி வீட்டுக்கு வந்திருக்கும் போது கணவன்,மனைவி சண்டையிட்டுக் கொண்டால், அது விருந்தல்ல, மருந்து.

கிடா(கடா) வெட்டி சோறாக்கிப் போட்டா தான் விருந்து என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு வரும் விருந்தாளியை வாசலில்/முச்சந்தியில்/பேருந்து நிலையத்தில் போய் வரவேற்று வீட்டுக்கு அழைத்துவந்து அன்பு கலந்த தேநீர் கொடுத்து அவர்களை நல்ல முறையில் கவனித்து, பின்னர் அனுப்பி வைத்தால் அதுவே சிறந்த விருந்து.

அசைவம் பரிமாறப் பட்டால் அது விருந்து. சைவமாக இருந்தால் விருந்தல்ல என்கிற மாயத் தோற்றத்தை விட்டு முதல் வெளியில் வந்து விடவேண்டும்.

எதுக்கெல்லாம் விருந்து?
நான் கண்டது கேள்விப்பட்டது சிலவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆட்டு லோன் கிடைத்தால் கிடாக்கறி விருந்து. அரசாங்கம் பயிர்க்கடன், பம்புசெட்டு கடன் தள்ளுபடி செய்தால் விருந்து (கடனை ஒழுங்கா கட்டுனவங்க பாவம்), பாஸ் பண்ணுனா விருந்து பெயிலானா மருந்து, அரசியல் வாதிகளுக்கு ஏழைத் தொண்டன் வீட்டின் ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை அறுசுவை விருந்து, கல்யாணத்துக்கு விருந்து, காடாத்துக்கு மறுநாள் விருந்து, தலைவன் படம் ரிலீஸ் ஆனா விருந்து, தேர்தலுக்குத் தேர்தல் மக்களுக்கு அரசியல் வாதிகள் வைக்கும் பிரியாணி விருந்து, வேலை கிடைச்சா விருந்து, வெளிநாடு போனா விருந்து, வெளிநாட்டுலேருந்து வந்தா விருந்து. லாட்டரியில பரிசு விழுந்தா விருந்து, கடன் பட்டு பணத்துக்கு லாட்டரி அடிப்பவனுக்கு மருந்து, போட்ட மொய்ய வாங்குறத்துக்கு மொய் விருந்து, போட்ட மொய்ய திரும்ப போட பணம் இல்லன்னா மருந்து, இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

விருந்தாளியை மையமாக வைத்து நிறைய நகைச்சுவை உணர்வுகளை வெளிப்படுத்துவது நம்மவர்க்கு கை தேர்ந்த கலை. விருந்தாளி குறித்த ஜோக்ஸ் நிறைய கேட்டிருப்பீர்கள்.

ஒருவர் தனது நண்பன் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தார், அன்போடு வரவேற்ற நண்பனும் நண்பனின் மனைவியும், குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டு கொஞ்ச நேரம் கழித்து ஒரு பிளேட்டில் அல்வா எடுத்து வந்து டேபிளில் வைத்து சாப்பிட சொன்னார்கள். அவர்களின் உரையாடல் இதோ,

நண்பன் : அல்வா சாப்பிடுங்க (அல்வா சாப்பிடுங்கன்னு சொல்றாரா அல்லது அளவா சாப்பிடுங்கன்னு சொல்றாரா என்று விளங்கிக் கொள்ளமுடியாத குழரலான குரலில்)

விருந்தாளி : ( சந்தேகத்தோடு அல்வாவை அளவா எடுத்து வாயில் போடுகிறார்)

நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருக்கா?(விருந்தாளியின் பதிலை எதிர் பார்த்து நிற்கிறார் கரண்டியுடன்)

விருந்தாளி : (வாயில் போட்ட அல்வாவை மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். துப்பவும் முடியாது. துப்பினால் மரியாதை குறைவு என்று நினைத்துக் கொள்கிறார்)
நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருக்கா? நான் செய்தது. இருட்டுக் கடை அல்வா மாதிரி இருக்கும்.

நண்பனும் நண்பனின் மனைவியும் விருந்தாளியின் பதிலை எதிர் பாத்துக் கொண்டு நிற்கிறார்கள்.

விருந்தாளி : (பல், நாக்கு, உதடு எல்லாம் ஒட்டிக் கொண்ட நிலையில், நண்பனிடம் பேச முடியாமல் சைகையில் தண்ணீர் கேட்கிறார்)

நண்பன் : (தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கிறார்)

விருந்தாளி : (வாஸ் பேசினுக்குச் சென்று வாயில் விரலை விட்டு வலுக்கட்டாயமாக ஒட்டிக் கொண்ட அல்வாவை இழுத்து, வாஸ் பேசினில் போட்டுவிட்டு, வாயை கழுவி விட்டு அப்பாடா விடுதலை கிடைச்சிடுச்சு என்று நினைக்கிறார். அப்படியே ஹாலில் வந்து திரும்பவும் உட்காருகிறார்)


விருந்தாளி அல்வாவைச் சாப்பிட்டாரா துப்பினாரா என்று தெரியாத நிலையில், இன்னும் விருந்தாளியின் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த நண்பனின் மனைவி..

நண்பனின் மனைவி: அல்வா நல்லா இருந்துச்சா?

விருந்தாளி : அல்வா நல்லா தான் இருந்திச்சு....! ஒரு மாதத்துக்கு முன்னாடி.

நண்பனின் மனைவி: என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே !

விருந்தாளி :அதுவா? தப்பு என்மேலதான்....! நான் தான் ஒரு மாதத்துக்கு முன்னாடி உங்கவீட்டுக்கு வந்திருக்கணும்.....! நல்லாத்தான் இருந்திச்சு அல்வா!

கலைச்செல்வனின் விருந்தோம்பல்

கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவன் கலைச்செல்வன். ஒருநாள் திடீரென்று அவனது தொடக்கப்பள்ளி ஆசிரியர் அவனைத்தேடி அவனுடைய இல்லத்துக்கு வந்துவிடுகிறார். திண்ணையில் அமர வைக்கிறான். அவருக்கு குடிக்கக் கொடுக்க எதுவும் இல்லை என வருந்துகிறான். வீட்டில் இருப்பதோ, கொஞ்சம் பழைய சோறும் நீராகாரமும். அதை ஆசிரியருக்குக் கொடுக்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை. சாப்பிடக் கொடுக்க வேறு எதுவும் இல்லையே என்று வருந்துகிறான் கலைச்செல்வன். பாரதி சொன்ன காணி நிலத்து தென்னைமரம் போல் கலைச்செல்வனின் வீட்டுக்கு எதிரில் வெகு சில தென்னை மரங்கள் இருந்தன. ஆசிரியருக்கு இளநீர் பறித்துக் கொடுத்தால் என்ன என்று கலைச்செல்வனுக்கு தோன்றியது. அவசரமாக ஓடிப்போய் தென்னை மரத்தில் ஏறி, இளநீர் பறிக்கையில், இளநீர் கலைச்செல்வனைப் பறித்துக் கொண்டு வருகிறது. இளநீரோடு மரத்திலிருந்து கீழே விழுகிறான். பலத்த காயப்படுகிறான். உடனே ஆசிரியரும், மற்றவர்களும் கலைச்செல்வனுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கிறார்கள். அங்கு பிராணவாயு செலுத்தப்படுகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியில் ஆசிரியர் மாறா சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். அன்பு மட்டும் சாரை சாரையாக வெளிப்படுகிறது ஆசிரியரின் கண்களில் இருந்து...!
இந்த நிகழ்வு எனது மனதை மிகவும் பாதித்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இன்னொரு நெருடலான, மனசைப் பாதித்த செய்தி

திருமண விருந்துக்குசெல்பவர்கள்(இதுக்கு மட்டுமா செல்கிறார்கள்?) குடித்துவிட்டு(சரக்குதான்) பின்னர் சாப்பிடும் பழக்கத்தை சில இடங்களில் வைத்துக் கொள்கிறார்கள். இதில் கார், வேன் ஓட்டுபவர்கள்(உறவுகள்) மட்டும் விரதமா என்ன? அவர்களும் இந்த புதிய சடங்குகளில் கலந்து கொள்கிறார்கள். இவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா? இரண்டு மணிக்குக் குடிக்க ஆரம்பிப்பவர்கள், நாலரை மணி இராகு காலம் ஆரம்பிப்பதற்குள் விருந்து சாப்பாடு சாப்பிட்டு விட்டு பொண்ணு மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு காரில் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் வேறு. ஆயிரம் கனவுகளோடு இவர்களுடன் கார் அல்லது வேனில் பயணம் செய்கிறார்கள் ஆயிரம் காலத்துப் பயிர்கள்- மணமக்கள்! திருமண கோஸ்டி கார் கவிழ்ந்தது, வேன் மோதியது, பலர் படுகாயம், மணமகன் அல்லது மணமகள் உயிரிழப்பு, போன்ற செய்திகளை அடிக்கடி கேள்விப்படுகிறோம், நாளிதழ்களில் படிக்கிறோம்.

அறிமுகம்

கண்ணே மணியே என்று கொஞ்சுவது உண்டு, ஐம்புலன்களில் கண் முதன்மையானது. கண் தெரியவில்லை என்றால் இவ்வுலகில் எந்த அழகையும் ரசிக்க முடியாது. அப்படிப்பட்ட கண்ணை இப்போதெல்லாம் கணினி முன்பும், தொலைக்காட்சி முன்பும் அமர்ந்து கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியே போனால் கண்ணை இமை கூட காப்பாற்ற முடியாது. காதலுக்கு கண் இல்லை என்று சொல்லுவார்கள். கண் இல்லை என்றாலும் காதலிக்கலாம். ஆனால், கண்ணும் கண்ணும் கொள்ளை அடிப்பதைப் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கண்ணின் அருமை பெருமை தெரிந்து மருத்துவர் எம்.கே.முருகானந்தன் அவர்கள் ஹாய் நலமா? என்று அன்போடு "கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்" என்ற தலைப்பில் அலசலான கட்டுரையைக் கொடுத்திருக்கிறார். அந்தக் கட்டுரையை மட்டுமல்ல, அவருடைய மற்ற பயனுள்ள இடுகைகளையும் படித்துப் பயன் பெறுங்கள்!


நமக்கெல்லாம் முருங்கையின் மகிமையைத் தெரியும். இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் தனது முந்தானை முடிச்சு என்ற படத்தில் அதைப் பற்றி அளவுக்கு அதிகமாகவே சொல்லிவிட்டார் என்று சொல்லலாம். அவர் மருத்துவர் கிடையாது. ஒரு மருத்துவர் முருங்கைக் கீரை, மற்றும் முருங்கை மரத்தைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருமதி சந்திரவதனா செல்வகுமாரன் அவர்கள் பல மருத்துவர்களின் கட்டுரைகளை மருத்துவம் என்கிற வலைபக்கத்தில் தொடுத்து வைத்திருக்கிறார். அதில் மருத்துவர் இக்பால் அவர்களின் "முருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் பயன்கள்" என்ற தலைப்பிலான கட்டுரையைப் படித்து பயன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு கொடுக்கும் மருந்து/அளவு வேறு, பெரியவர்களுக்கு கொடுக்கும் மருந்து/அளவு வேறு. சில நேரங்களில் குழந்தைகளை பொது மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் அவர்கள் கொடுக்கச் சொல்லும் மருந்து அளவைக் கேட்க வேண்டும். திரு சேவியர் தனது கவிதைச் சாலை என்கிற வலைபக்கத்தில் அழகிய கவிதைகளை பதிவுகளாக்கிக் கொண்டிருப்பவர். கவிஞர்களின் சிந்தனைகளுக்கு எல்லை இல்லை என்பதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. திரு சேவியர் அவர்கள், "குழந்தை மருத்துவம் : பெற்றோர் கவனத்துக்கு !" என்கிற ஒரு கட்டுரையை எழுதி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டுகிறார். படித்து பயன் பெறுங்கள், அவருடைய கவிதைகளையும்தான்!

பெரியார் சொன்ன வெங்காயத்துக்கு இவ்வளவு அரிய குணங்களா? பயனுள்ள சித்த மருத்துவ குறிப்புகள் என்ற வலைபக்கத்தில் திரு சிவகுமார் சுப்புராமன் அழகாக பதிவு செய்திருக்கிறார். தொடர்ந்து இந்த பக்கத்தில் உள்ள பதிவுகளையும் படித்து பயன் பெறுங்கள்.

பெண்களில் சிலர் உடலைக் குறைக்கிறேன் என்று அரைப் பட்டினியும் குறை பட்டினியுமாக கிடப்பதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். அது தேவையா? அல்லது நியாயமா? மருத்துவ கலாநிதி வே.நாகநாதன் தனது மருத்துவம் வலைபக்கத்தில் பெண்களின் உடற்கட்டு மற்றும் உடற்கட்டுப்பாடு, அதனால் அவர்கள் படும் பாடு பற்றி தனது அறிவுரையைப் பகிர்கிறார். நாமும் படித்து பயன் அடையலாமே!


மொய் விருந்து கேள்விப் பட்டிருப்பீங்க. தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இந்த நிகழ்வு நடைபெறுவதுண்டு. பேராவூரணி பகுதியில் இது பிரசித்தம். மொய் விருந்தால் பயன் இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன. மொய் விருந்தைப் பற்றி திரு குருமூர்த்தி அவர்கள் தஞ்சாவூர் என்ற வலைபக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். படித்து தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இது மொய் விருந்தல்ல. இருப்பினும் மொய் பிடிக்கப்படும். பதிவைப் படித்த நல்ல உள்ளங்கள், பின்னூட்டப் பெட்டியில் உங்கள் மொய்யை எழுதவும்.

இங்ஙனம்,

தங்கள் நல்வரவை நாடும்,
அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்


பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்

மேலும் வாசிக்க...

Tuesday, February 24, 2009

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்



விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்வார்கள். அதனால் தான்
நான் இரண்டாம் நாளே வந்துவிட்டேன்.

விருந்தோம்பல் தமிழர் பண்பாடு, இன்றளவும் விருந்தோம்பலை நாம் கட்டிக் காத்து வந்திருக்கிறோம். வீட்டுக்கு வந்த விருந்தாளியை அமரவைத்து தண்ணீர் எடுத்துவந்து குடிக்கக் கொடுத்து பின்னர் சாப்பிடுங்கள் என்றவுடன், விருந்தாளி இருக்கட்டும் இப்பதான் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று ஓர் அழகிய பொய்யை அவிழ்த்துவிட(மதியம் வந்து சேர்ந்த விருந்தாளி காலையிலிருந்து சாப்பிட்டிருக்க மாட்டார்) இருக்கட்டும், கிளம்புங்க கொஞ்சமாச் சாப்பிடுங்க என்று கெஞ்சி, கைத்தாங்கலாக விருந்தாளியை அழைத்துக் கொண்டுபோய் கை நனைக்க வைப்பது, அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் வரை பக்கத்தில் நின்று பார்த்து பரிமாறுவது, முடித்ததும் கை கழுவ தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, துண்டு எடுத்துக் கொடுப்பது எல்லாம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பழக்க வழக்கங்கள், பண்பாடு, வழமை

வழியில் செல்லும் வறியவனுக்கும் வயிறார சோறு போடுவது நம் பண்பாடு.
இன்றைய நிலையில் நகர்புறங்களில் வாழும் நம் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும், தமிழர் பண்பாடு, விருந்தோம்பலை பறைசாற்றும் தமிழர்களின் பெருநாளாகிய பொங்கல் திருநாளைக்கூட தாய் வீட்டில் கொண்டாடும் நிலையில் தான் இருக்கிறார்கள். சிலர் அதையும் கொண்டாடுவதில்லை. புலம்பெயர் நாடுகளில் அடுத்த தலைமுறை, பொங்கல் போன்ற தமிழருக்கே உரித்தான பண்பாட்டு விழுமியங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளுமா என்பது நம் முன்னே தொக்கி நிற்கும் மிகப்பெரிய வினா.

விரைவு உணவகங்களிலும், கையேந்தி அங்காடி உணவகங்களிலும் அலைமோதும் நடுத்தர மற்றும் இளையர்கள், வீட்டு சமையல் செய்து உண்பதற்கு விரும்புவதில்லை. அனைவரும் வேலைக்குச் செல்வது ஒரு காரணமாக இருக்கலாம். இருப்பினும், இதுபோன்ற வெளிநாட்டு உணவுவகைகளை உண்பதால், தமிழர்களின் உணவு வகைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க நேரிடலாம்.

புதிதாக வெளிநாடு செல்லும் நம் இளையர்கள் பருப்பு பொடியையும், புளியோதரை பொடியையும் பொட்டலம் போட்டு எடுத்துக் கொண்டு செல்வார்கள். ஓர் ஆறு மாதம் கழித்து அவர்களை சந்தித்தால் நான் நூடுல்ஸ் தான் சாப்பிடுவேன். ரைஸ் எல்லாம் இப்ப சாப்பிடுறது இல்ல. அப்படி அன்னியத்தனமாகப் பேசுவதைப் பார்க்கலாம். எல்லோரையும் சொல்ல வில்லை. இன்னும் கொஞ்சம் பேச்சு கொடுத்தால், கே.எப்.சி,மெக்டொனால்ட், பிஸ்ஸா, பாஸ்தா, பர்கர் என்கிற வகையில் வேற்று நாட்டு உணவு வகைகளை எளிதாக ஏற்றுக் கொண்டிருப்பது தெரியும். நாமே நமது உணவு வகைகளை புறக்கணித்தோம் எனில் ஜப்பான்காரர்கள் கூட நம் சாம்பாருக்கு பேட்டன் செய்து விடுவார்கள். யாரும் சாப்பிட்டிருக்கிறீர்களோ என்னவோ ஜப்பானிய உணவு வகையில் அசல் சாம்பார் மாதிரியே ஒரு குழம்பு சிறு பானையில் கொடுப்பார்கள். ருசியும் சாம்பார் மாதிரியே இருக்கும்.

இந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைப்பது இல்லை. வேறு வழி இல்லாத இடங்களில் மேற்கத்திய, சீன, பிரெஞ்சு உணவு வகைகளைச் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவைகளையும் நாம் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். அது சில நேரங்களில், நம் பசியாற்ற உதவி செய்யும். அதே நேரத்தில் நம்முடைய இந்திய உணவு வகைகளை வீட்டில் செய்து சாப்பிடுவது நல்லது.

சிங்கையில் கட்டுமானத்துறை மற்றும் கப்பல் பட்டறையில் வேலை செய்யும் நம் தமிழ் உறவுகள் தினமும் அவர்களே சமைத்துத் தான் சாப்பிடுகிறார்கள். கண்ணு பாத்தா கை செய்யும் என்று சொல்லுவார்கள். அதுபோல் அவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் சமைக்கும் சாம்பார் கம கம என்ற வாசனையுடன், அப்பவே உட்கார்ந்து சாப்பிட நம்மைத் தூண்டும். சாம்பார் மட்டுமல்ல அசைவ உணவு வகைகளையும், சுவையுடன் சமைக்கக் கற்று வைத்திருக்கிறார்கள்(எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தாயிற்று).

இன்று இணையத்தில் பலவகையான பலகாரங்களையும், ருசியான உணவு வகைகளையும் எப்படி சமைப்பது என்று எளிமையாக, அழகாக பதிவிட்டிருக்கும் பதிவர்களின் பதிவுகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்.

ஆண் பெண் இருபாலரும் இன்றைய நிலையில் சமைக்கும் சூழல் ஓரளவுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை, வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா ஒன்றில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியது இன்னும் பசுமரத்தாணி போல் பதிந்திருக்கிறது. அவர் பேசும் போது "3000 -பேர் கலந்து கொள்ளும் இந்தத் திருமண விழாவிற்கு ஆண் சமைக்க முடிகிறது. ஐந்திலிருந்து பத்து உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஏன் ஆண் சமைக்க முடியாது?" என்று கேட்டார். அப்போது எனக்கு 16 வயது, சபாஷ் சரியான கேள்வி என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இப்ப சபாஷ் சொல்லுவியா கண்ணுன்னு நீங்கல்லாம் என்னைக் கேக்குறது எனக்குப் புரியுது. ஆணியவாதிகள்(ஆணி உள்ளவர்கள்) என்னைக் கட்டம் கட்டி அடிக்க மாட்டார்கள் என்று நம்புறேன். இன் பாக்ட் அவங்களே, அதாவது ஆணிய வாதிகளே, சமைக்க ரெடியாத்தான் இருக்காங்க. இப்ப உள்ள சூழ்நிலையில எப்ப வேலை(ஆணி) போவும்னே தெரியாது. சமையல் வேலை மட்டும் தான் லே ஆப்பு இல்லாத வேலைன்னு அவங்களுக்குத் தெரியாதா என்ன?

மலேசியாவைச் சேர்ந்த சீன ஆடவர் லிம், சிங்கையைச் சேர்ந்த சீனப் பெண்ணான இவா -வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் சிங்கையில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் லிம்-க்கு உடல் நிலை சரியில்லை. அனல் பறக்கும் காய்ச்சல். மருத்துவரைப் பார்த்துவிட்டு விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் படுத்திருக்கிறார். மனைவி இவா வேலை முடித்து விட்டு வீடு வந்து சேர இரவு எட்டு மணியாகும். ஒரு துண்டு ரொட்டியை மதியம் மாத்திரை விழுங்குவதற்காக மட்டும் சாப்பிட்ட லிம், காலையில் இருந்து வேறு எதுவும் சாப்பிடாமல் படுத்திருக்கிறார். லிம் -க்கு காய்ச்சல் மேலும் அதிகரித்துக் கொண்டே போனது. எட்டு மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பிய மனைவி இவா கணவனின் நிலை கண்டு கவலை கொண்டாள். சாப்பிட்டீர்களா என்று கேட்டாள். இல்லை என்று சொன்னதும், கொஞ்சம் பொறுத்திருங்கள் சமைத்து விடுகிறேன் என்று சொன்னாள். மகிழ்ச்சியோடு தலையசைத்த லிம், மூன்று நிமிடத்தில் மனைவி உணவு கொண்டு வருவதைப் பார்த்தவுடன் ஆச்சர்யம். அதற்குள் சமைத்து விட்டாயா என்று கேட்டார். ம்ம்! வெந்நீர் வைத்து அதில் மேக்கியைப் பிரித்துப் போட்டேன் சமையல் ரெடி என்று சொன்னாள். கண்ணீர் விட்டார். மலேசியாவில் பெண் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே சமையல் பாடம் உண்டு.

அறிமுகம்

குழிப் பணியாரம் செய்வது எப்படி என்று தனது செட்டிநாடு கிச்சனில் என்ன அழகாச் சொல்றாரு சதங்கா, அவரு செய்யிற குழிப்பணியாரம் எவ்வளவு அழகா இருக்குன்னு பாருங்களேன். நானெல்லாம் இந்த குழி பணியாரம் சாப்பிட்டு இரண்டு வருடம் ஆகுது. நீங்க எப்படி? ஆசையா இருந்தா இன்னிக்கே தொடங்குங்கள்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டை, அப்படின்னு சொல்லுவோம். நம்ம சகோதரி தூயா, தனது சமையற்கட்டில் செய்யுற எள்ளுருண்டைக்கு தேவையான பொருட்கள் ஏழைக்கு ஏத்தமாதிரி தெரியல. பணக்காரர்கள் சாப்பிடும் உணவு மாதிரியும் தெரியலை. அங்க போய் ஏழையையும், பணக்காரரையும் கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு சரியாத்தான் வரும். எள்ளு+உருண்டை = எள்ளுருண்டை

பலாப்பழம் பலர் விரும்பிச் சாப்பிடும் நம் முக்கனிகளில் ஒன்று. பலாச்சுளைக்குள் இருக்கும் கொட்டையை பொடிமாஸ் செய்வார்கள். இங்கு பொரியல் செய்திருக்கிறார் மாதவி. எப்படி செய்யிறதுன்னு கத்துக்கிட்டா, இனி பலாச்சுளையை தின்னுட்டு கொட்டையை தூக்கி எறிய வேண்டியதில்லை. பலா மூசுல(பலாப்பழத்தின் பிஞ்சு) பொரியல் செய்தால் கூட நன்றாகத்தான் நன்றாக இருக்கும்.

ஜாங்கிரி குடுத்தா ஆசை ஆசையாத் திம்போம். ஆனா அது எப்படி செய்யுறதுன்னு நம்மள்ல பல பேருக்குத் தெரியாது. சொதப்பீருவோமொன்னு கொஞ்சம் பயம் இங்கே சித்ரா எவ்வளவு அழகாச் செய்யுறாங்கன்னு பாருங்க. அதை கத்துகிட்டு நாமளும் செய்யலாமே? அறிவியல் நுட்பத்தையும் இறுதியாக, உறுதியாக சொல்றாங்க!

சுலப குணுக்கு, பெயரே சொல்கிறது, அப்ப இதைச் செய்வது எளிதாக அல்லது இலகுவாகத் தான் இருக்கும். கமலாவின் அடுப்பங்கரையில் அழகான பலகாரங்களைச் செய்து வைத்திருக்கிறார். அதைப் பார்த்தாலே சாப்பிட தோன்றுகிறது. கணினியில் இருப்பதை எப்படிச் சாப்பிடுவது? நாமளும் எப்படி செய்யிறதுன்னு கற்றுக் கொள்வோமே!

பேச்சிலர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் மைக்ரோ வேவ் அவனில் கமகமக்க சாம்பார் செய்யக் கற்றுத் தருகிறார் நம்ம புதுகைத் தென்றல். நீங்களும் படிச்சு பார்த்துட்டு செஞ்சு பாருங்களேன். மணத்திற்கும் ருசிக்கும் அவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். நன்றாகத் தான் இருக்கிறது புகை இல்லாத சமையல்.

மருந்து குழம்பு, நாம் மறந்து வரும் குழம்பு, கொஞ்சம் நினைவூட்டல் செய்ய மீரா கிச்சனில் திருமதி காஞ்சனா இராதாகிருஷ்ணன் அவர்கள் அருமையாக, அழகாகச் செய்து வைத்திருக்கிறார்கள். செய்து சாப்பிட்டுப் பாருங்கள். தேவையான பொருட்களை மறக்காமல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாமே! எனக்கும் மருந்து குழம்பு பிடிக்கும். இந்த விருந்து மருந்து குழம்புடன் நிறைவடைகிறது.


நான் அறிமுகப் படுத்திய பதிவர்களின் மற்ற இடுகைகளையும் தொடர்ந்து வாசியுங்கள். பலவகையான ருசி மிகுந்த உணவு வகைகளை செய்து பார்ப்பது மட்டுமல்லாமல் ருசிக்கவும் முடியும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். மேலுக்கு நல்லது அப்படின்னு நினைக்கிற உணவு வகைகளை அடிக்கடியும், கொழுப்புச் சத்து நிரம்ப உள்ள உணவு வகைகளை எப்போவாவதும் செய்து சாப்பிடுங்கள்.


எல்லாம் செய்து சாப்பிட்ட மனநிறைவு இருந்தால், அப்படியே இலையை வைத்துவிட்டு (அதை நான் பார்த்துக் கொள்வது தான் விருந்தோம்பலுக்கு அழகு) , பின்னூட்ட நீரோடையில் கை நனையுங்கள்.

அன்பன்,
ஜோதிபாரதி.

ஜோதிபாரதி - வலைச்சர ஆசிரியப்பணி! இடுகைகள் அனைத்தும்!

வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்

விருந்துக்கு வாங்க! -வலைச்சரத்தில் இரண்டாம் நாள்

விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்

சரியா? தவறா?-வலைச்சரத்தில் நான்காம் நாள்

பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்

கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்

பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது