07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, July 3, 2015

நெல்லைத் தேரோட்டமும் குறுக்குத்துறை படிக்கட்டுகளும்

ரொம்ப நாளைக்குப் பிறகு தாமிரபரணியில் இறங்கிக் குளிக்கும் போது, கொத்துக் கொத்தாக மீன்கள் வந்து காலை நிரவும் போது எழும் கூச்சத்தைப் போல வலைச்சரத்துக்குள்  உலாவுகிறேன். இந்தத் தன்ணீர் பழகியது போல  மீன்களைப் பழகிக்கொள்ள  இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ.

நான்காவது நாளில் வலைச்சரத்தில் எழுதுகிறேன் என்பது எனக்கே ஆச்சர்யம் தான். இருங்கள்; கொஞ்சம் நுள்ளிப்பார்த்துக் கொள்கிறேன். வலிக்கிறது அப்போ உண்மையாகவே இது நான் தான். மின்னஞ்சலும் முகநூலும் தவிர்த்து  அடுத்த திரையை திறந்து கூடப் பார்க்காத நான் தான் வலைப்பூவில் இப்படி உருப்படியான காரிய மெழுதுகிறேன்.

நேற்றைக்கு நெல்லையப்பர் காந்திமதி ஆனித் திருத்தேர் திருவிழா நிறைவுற நடைபெற்றது. 511 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரதவீதிகளில் வளையவரும் ஐந்து தேர்கள் கொண்ட பெருமையை இந்த தாமிரம்பதி தக்கவைத்துக் கொண்டுள்ளது போன்ற பல தகவல்கள்.  ஒரு ஆவணப்படம் எடுக்குமளவுக்குத் திரட்டியிருக்கிறேன்.  பொதிகை ஸ்வீட்ஸில் அத்திப் பழ அல்வா சுவைத்துப்பாருங்களென அண்ணாச்சி கொடுக்கும் போது தவிர்க்கத்தான் முடியுமா என்ன. 

கேமிராவும் கையுமாகத் திரியும் என்னைச் சொந்த ஊர்க்காரன் என்றில்லாமல் வெளியூர்க்காரனாகவே இந்த மக்கள் உபசரித்தது ஆச்சர்யம். ஹஹ... 
பொதுவுடைமையும், மார்க்ஸ் சித்தாந்தங்களும் பேசும்/ கேட்கும் ஒரு இளைஞன் கோயில் கோயிலாகத் திரிவதின் பின்னே மிச்சமிருக்கும் ஒரே உண்மை. கோவில் என்பது பக்திக்கான இடம் மட்டுமல்ல. இது ஒரு பொதுவுடைமைச் சமுதாயத்தின் முக்கிய காரணியும் என்பது தான். 

வருடத்தில் பன்னிரெண்டு மாதம் விஷேடங்கள் நிகழும் ஒரு கோவிலுக்கு ஊருக்கு வெளியே பல காணி நிலமிருக்கும். அதை குடியானவர்கள் உழுது பங்கினை கோவிலுக்கு பொருளாகவோ பணமாகவோ செலுத்துகிறார்கள். கோயில் சொத்துகளாக உள்ள கடைகள்,  வழிபாட்டு வருமானங்கள் இதன் மூலமெல்லாம் சேரும் மக்கள் சொத்தை இம்மாதிரி விழாக்களில் செலவிடுகிறார்கள்.  இங்கே உழைப்பும் ஒற்றுமையும் தான் மூலதனம்.

விழாக்காலங்களில் எல்லா ஊர்களிலிருந்தும் வந்து குவித்து சன்னதித் தெருக்களில் தார்ப்பாலின் விரித்து அதிலே குடும்பம் குட்டியுமாகப் படுத்துக்கிடந்து , “ விடிஞ்சதும் தேரைப் பார்த்துடனுமப்பா” என்றபடிக் காத்துக்கிடக்கும் சனங்களில் ஒற்றுமை காலங்காலமான பிணைப்பு. 

தடிபோடும் இனக்குழு மக்கள் தங்கள் காலங்காலமான உரிமையாகவே தேரை முண்டி நகர்த்துகிறார்கள். வடம் தொட்டு இழுக்கும் இசுலாமியர்களை யாரும் அழைக்கவே தேவையில்லை அதனைத் தங்கள் கடமையாகவேச் செய்கிறார்கள். முரசு அடிப்பவர், முட்டுக்கால் கொடுத்து சக்கரத்தை வழுகச் செய்பவர், திருமறைப் பெட்டியை குடை விசிறியோடு தலையில் சுமப்பவர், கோயில் கொத்தன், தேர் கட்டி, பந்தம் பிடிப்பவர்,  மூட்டம் போடுபவர் என்று ஒவ்வொரு சனமும் பல தலைமுறைகளாகத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பைத் தந்துகொண்டிருப்பவர்கள்.

எனக்குக் கண்ணில் பட்டதெல்லாம் பக்தி என்பதனை மீறி உழைப்பும் சேமிப்பும் ஒவ்வொருவரிடமிருந்தும்  இன்னொருவருக்குக் கைமாறுகிறது. தன் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டு ஒன்றிணைந்து வாழும் பிள்ளைகளைத் தாயும் தகப்பனுமாய் தேரில் வீற்றிருந்து காணும் நெல்லையப்பனும் காந்திமதியும் பூரித்துப் போகாமல் பின்னென்ன செய்வார்கள்.



ஆக மிகச்சிறப்பாக இந்த வருடத் தேரோட்டம் நிறைவு பெற்றது. மாலையில் தி.க.சி ஐய்யா  வாழ்ந்து மறைந்த சுடலைமாடன் தெரு வீட்டைப் பார்க்கப் போயிருந்தேன்.  இரவு நெடுநேரம் தேரில் உள்ளச் சிற்பங்களை நிழற்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். காலையில் குறுக்குத்துறை மண்டபத்தில் குளித்துவிட்டு குண்டுமாமா கடையில் இட்டலியும் காரவடையும் சாப்பிட்டுவிட்டு  வரும் வழியில் அருணகிரி தியேட்டரில் பனையோலை நிரம்ப முன்று செம்பு பதநீர் குடித்து  கண்ணயர்ந்தெழுந்தேன். சும்மாவா சொன்னார்கள் சொந்த ஊரென்பது சொர்க்கமென்று... 


                                                                            ****


வலைச்சரத்தில் பதிவர்களை அறிமுகம் செய்யத் தான் மெனக்கிடவேண்டியதாக இருக்கிறது. பிரச்சனை எழுதுவதில் இல்லை. பழம்தின்று கொட்டைப்போட்டு அந்தக்கொட்டையிலிருந்து விதையெடுத்து, மொட்டைமாடியில் தோட்டம் வளர்த்து, ஆர்கானிக் கலாச்சாரம் பேசும் பதிவர்களைப் போய் நாமென்ன சுண்டைக்காய் அறிமுகம் செய்வது அறிமுகம்.

ஆகவே நான் எழுதும் எந்த பதிவையும், பதிவரையும் அறிமுகம் என்று எடுத்துக் கொள்ளவேண்டாம்.  வாசித்த சில பதிவுகளை உங்கள் பார்வைக்கு எடுத்து வைக்கிறேன். கிட்டத்தட்ட வாட்சப்பில் எனக்கு வரும் வீடியோவை உங்கள் எண்ணுக்கும் பகிர்ந்து விடுவது போல.. அவ்வளவே.. 


                                                                      *****

செல்வா அண்ணாவின் தளம் பற்றி எழுதுவதற்கு முன் அவரைப்பற்றி எழுதிவிடத்தான் கை பரபரக்கிறது. நிறைய தட்டிக்கொடுக்கும் மனிதர்களில் நிறைய பேரைத் தட்டிக்கொடுக்கும் மனிதர் செல்வா அண்ணா. அவரது வலைதளம் செல்வா ஸ்பீக்கிங் ...

பயங்கரமான உற்சாகம். சியர்ஸ் என்ற சொல்லில் நமக்குள் உற்சாகம் விதைக்கும் குரல்.  துள்ளும் இளமையில் குறுங்கவிதைகள் என ஜாலி செய்யும் எழுத்து. புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அடியேன் அவ்வப்போது தலைகாட்டுவது எல்லாம் அண்ணன் பேராதரவில் தான்.
நிறைய ஊக்கமும் இளமையான எழுத்தும் இவரது ப்ளஸ். 

சில பதிவுகளை இங்கே வாசித்துப் பாருங்களேன்.  

ஏக்                        தோ                             தீன்  

                                                                      *****


 வா மணிகண்டன். 

நிசப்தம் வலைதளம் நிறையச் சாதனைகளுக்குச் சொந்தமானது.  கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும்  கற்கை நன்றே என்கிறது தமிழ். ஆம் தமிழென்று சொல்லித் தப்பிக் கொள்ளலாம்.. நமக்கு இம்மாதிரி நிறைய வாசகம் தெரிகிறது அது எந்த நூலில் உள்ளது யார் எழுதினது என்று கேட்டால் அவ்வையாரோ வள்ளுவரோ பாரதியாகவோ இருக்குமைய்யா இப்போ அதுவா முக்கியம் மேட்டர் என்னன்னு பாரு என்றே தப்பிப்போம். விஷயம் யார் செய்கிறார் என்பது வெளித்தெரியாமல் விஷயம் மட்டும் நிலைத்துவிடுகிறது.

வா மணிகண்டன் நிசப்தம் அறக்கட்டளையும் அப்படித்தான் அதன் செயல்கள் பரந்துபட்டது. அதன் பின்னே உள்ளவர்களை யாரும் அறிவதில்லை (வம்பெதற்கு ஒரு பெரும்பாலும் போட்டுக்கொள்வோம்).  நிசப்தம்  சப்தமில்லாமல் ஒரு சமூகப் புரட்சி செய்து வருகிறது. அது ஏழ்மைக்கு கல்வியளிப்பது. வா மணிகண்டன் ஒரு புரவலராக இருக்கக்கூடுமென நினைக்கிறேன். அதிமுக்கியமான புரவலராக அவரது எழுத்துகள்  முன்னின்று கொள்கிறது.  தொடர்ந்து வாசிக்கும் இவரது தளத்தின் முகவரியையே இங்கு தருகிறேன். மாறாக அது இது என்ற பதிவுகளை அல்ல.. 


சரி அந்த சொல்லாடல் இடம் பெற்றுள்ளது எந்த நூலென்றும் சொல்லிவிடுகிறேன். அஃது  நறுந்தொகையில் இடம்பெற்ற 35ம் பாடல். அதிவீரராம பாண்டியர் எழுதினது.   

                                                              ******

இன்று ஒரு தகவல் பதநீர் குடிக்கும் போது  பனையேறுபவரிடம் கேட்டறிந்தது. ஒரு நல்ல பனைமரம் தினமும் பத்திலிருந்து பதினைந்து லிட்டர் பதநீர் சுரக்கும். காலை பானை கட்டும் போது ஒருதரம் பாலை சீவி விட்டு மாலை ஒருதரம் சீவி விட்டுவிட்டால் மறுநாள் காலையில் பதநீர் நிரம்பி வழியும்.  

வற்றிய பனையென்றால் நாளைக்குச் சுமார் ஐந்து லிட்டர் பதனீர் சுரக்குமாம்.
தென்னைக்கு ஆயுள் முன்பெல்லாம் நூற்றி இருபது ஆண்டுகள் இருந்தது. எப்போ மனுசனுக்கு காசு பணம் மேல ஆசை வந்ததோ அத்தோட தென்னையோட வாழ்நாள் சுருங்கிப்போச்சு. இருபது இருபத்தைஞ்சு வருசத்திலே அறுவடை  முடிஞ்சு தென்னையை வெட்டி வீழ்த்திவிடுகிறார்கள். 

முக்கியமாகச் சொல்ல வந்தது இந்த பனைமரங்களுக்கு ஆயுள் எத்தனை ஆண்டுகள் என்று ஒரு பனையேறியும் சொல்வதில்லை. காலம் முழுக்க கொழிக்கும் மரம்யா அது என்பதுதான் அவர்கள் பதில்.  காந்தியிடம் ஒருதரம் தமிழ்நாட்டில் பஞ்சம் என்று செய்தி சொன்னபோது, “அவங்களுக்குத் தான் பனைமரம் இருக்கே பிறகெப்படி பஞ்சம் வந்தது”ன்னு கேட்டாராம். இங்கே காந்தியின்  நிலவியல் அறிவை வியப்பதா பனைமரத்தின் கொடுப்பினையை வியப்பதா. 


காந்தியைச் சொல்லிவிட்டு காமராஜரைச் சொல்லாமல் விட்டால் தகாது. காமராஜரைச் சந்திக்க பொதுமக்கள் பலர் சென்றபோது ஆளாளுக்குக் கையில் பரிசுப்பொருட்களைக் கொண்டு போயிருக்க ஒரு பனையேறும் தொழிலாளி மட்டும்  பதனீர் கொண்டுபோயிருந்தாராம். அவரைக் கூட்டத்திலிருந்து முன்னே அழைத்து வைத்துப் பெருமை படுத்தினாராம்.  பதனீர் என்பது உழைக்கும் வர்க்கத்தின் அமிர்தச்சுரபி.    


- கார்த்திக். புகழேந்தி .


11 comments:

  1. செல்வா ஸ்பீக்கிங் புதிய வலைதளம். நேரம் இருக்கும் போது வாசிக்கனும்.
    நிசப்தம் என்னுடைய favorite வலைதளம்.
    தினமும் எழுதுவார்.

    ReplyDelete
  2. செல்வா அண்ணாவின் தளம் பற்றி எழுதுவதற்கு முன் அவரைப்பற்றி எழுதிவிடத்தான் கை பரபரக்கிறது. நிறைய தட்டிக்கொடுக்கும் மனிதர்களில் நிறைய பேரைத் தட்டிக்கொடுக்கும் மனிதர் செல்வா அண்ணா. அவரது வலைதளம் செல்வா ஸ்பீக்கிங் ...////
    ங்கையின் சிறப்பு பற்றி எழுதிய ஒரு வரிக் கவிதைதான்.
    இருந்தாலும்
    உள்ளத்தைக் கவருகிறது.
    அதற்கு நான் இட்ட பின்னூட்டாம்.

    அது தான் தங்கை.

    வாழ்நாள் முழுதும் நம்முடன் தங்கி நிற்காத அவளைத்
    தங்கை எனக் கூப்பிடுகிறோம்.

    தங்காள் என்ற சொல் உரு மாறி தங்கை என வந்திருக்குமோ ?

    வலைச் சரம் கார்த்திக் சொல்ல வந்தேன்.இங்கு.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. சிறந்த தளங்களுக்கு வாழ்த்துகள்...

    // தன் பிள்ளைகள் ஒன்றுக்கொன்று உதவிக்கொண்டு ஒன்றிணைந்து வாழும் பிள்ளைகளைத் தாயும் தகப்பனுமாய்... // இனிக்கிறது தோழர்...

    பனைக்கு நிகரேது... வாழை மரத்தை விட சிறப்பேது... தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. நிசப்தம் என்ற ஒரு வலை.
    மணிகண்டன் அவர்கள் இங்கு தான் இருக்கிறார் என
    மணி அடித்து சொல்லியதற்கு நன்றி.


    விதியின் போக்கை
    வித விதக் கதைகளாக,
    கதைக்கவில்லை.
    விதி யின் போக்கில் நடந்த சில
    விபரீதங்களை விவரித்திருக்கிறார்.

    விதி சிலரை வீதியில் நிறுத்துகிறது.
    சிலரின் வாயிற் கதவுகளைத் திறக்கிறது.

    அங்கு பின்னோட்டம் இட இயலாது
    இங்கே இடுகிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  5. / வலைச்சரத்தில் பதிவர்களை அறிமுகம் செய்யத் தான் மெனக்கிடவேண்டியதாக இருக்கிறது. பிரச்சனை எழுதுவதில் இல்லை. பழம்தின்று கொட்டைப்போட்டு அந்தக்கொட்டையிலிருந்து விதையெடுத்து, மொட்டைமாடியில் தோட்டம் வளர்த்து, ஆர்கானிக் கலாச்சாரம் பேசும் பதிவர்களைப் போய் நாமென்ன சுண்டைக்காய் அறிமுகம் செய்வது அறிமுகம்./ இது வஞ்சப் புகழ்ச்சி அணி அல்லவே. இப்படிச் சொன்னால் எப்படி. ஒருவரை அடையாளப் படுத்த அவரிடம் நமக்கு அறிமுகம் வேண்டும் முயற்சி செய்திருக்கிறீர்களா . ? வலைச்சரத்தில்தான் உங்களைப் படிக்கிறேன் சும்மாச்சொல்லக் கூடாது. படிக்க படிக்க ஒரு ஈர்ப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. குறைவான பதிவர்களை அறிமுகம் செய்தாலும் நிறைவாக இருக்கிறது! நெல்லையப்பர் தேரோட்டம் குறித்த தகவல்கள், பதநீர் உள்ளிட்ட கொசுறு தகவல்களும் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  7. அய்யா G.M.B அவர்களின் கருத்து முற்றிலும் ஏற்கத்தக்கது.
    வழி மொழிகின்றேன். மேலும், புவி ஈர்ப்பு விசை ஒன்று இயற்பியலில் உண்டு அல்லவா?. அதைப்போன்று "வாழ்வியல் வலிமை விசை "உங்களது எழுத்தில் பிரகாசிக்கின்றது நண்பரே! தொடருங்கள் நண்பரே!
    தம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  8. நெல்லயில் நிகழ்ந்த தேரோட்டம் பற்றி தகவல்கள் சிறப்பு..
    பனையும் பதநீரும்!.. - அருமை..

    தஞ்சையில் இரவு புறப்பட்டால் - உதய மார்த்தாண்ட பூஜைக்கு முன் - திருச்செந்தூரில்!..

    விடியற்காலையில் கடற்கரை மணலில் - பதநீர் குடிப்பதே - சுகம்!..

    நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. பனைக்கு நிகர் ஏதும்மில்லை ! இன்றைய பதிவர்கள் அறிந்தவர்கள் வாழ்த்துக்கள் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  10. தேரோட்டத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. புதியவர்களின் தளங்களைக் கண்டேன், படித்தேன். பதநீர் செய்தி கேள்விப்பட்டுள்ளேன். பகிர்வுக்கு நன்றி. செவாய்ப்பிருக்கும்போது தினமணியில் வெளியான எனது முதல் பேட்டியை http://www.ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html என்ற இணைப்பில் காண வாருங்கள். நாளை சந்திப்போம்.

    ReplyDelete
  11. அருமை! தேரோட்டம்!!!

    அட நீங்களும் தாமிரபரணிக்காரர்!!!

    பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது