ஒளிபடைத்த கண்ணினாய்...
என் தமிழ்மண நட்சத்திரவாரப் பதிவுகளில் ஒன்று, என் தீவிருந்து புறப்பட்ட டைட்டானிக். இதைப்படித்த தமிழக நண்பர் ஒருவர் மடலிட்டிருந்தார். அப்பதிவு வாசித்ததின் பின் சில தினங்களுக்கு ஒரு சிறுமியின் சிரித்த முகம் தன் நினைவில் வந்தபடியே இருந்ததென்று. அது என் எழுத்தின் வலிமை என்று நான் எண்ணவில்லை, என்தேசத்தின் வலியென்றே உணர்ந்தேன். அதனை மற்றொருவருக்கும் உணர்த்த முடிந்ததே என்பதில் நிறைவு. சில தினங்களுக்கு அவருக்கு நினைவில் வந்த சிறுமியின் முகம், அதுதான் சிகப்பியின் முகம் இருபது வருடங்களாக என் நினைவில் நிற்கிறதே.
நெடுந்தீவுக்கடலில் குமுதினிப்படகில் பயனித்தவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் நடுக்கடலில் வைத்து வெட்டிக் கொல்லப்படுகிறார்கள். செய்தி தெரிந்ததும், யாழ்ப்பாணத்திலிருந்து குறிகாட்டுவான் துறைமுகத்துக்குச் சென்ற செய்தியாளர்களுடன் நானும். அப்படியொரு கோரத்தை அதுவரையில் கண்டதில்லை. கண்டவற்றைப் படமாக்கியபடியிருந்த என் கமெராத் திரையில் நெஞ்சில், பைனைட் கத்தியால் குத்தப்பட்டிறந்த அந்தக் குழந்தை தெரிந்தபோது நடுநடுங்கிப்போனேன். காட்சி மங்கலாயிற்று. என்கண்களில் கண்ணீர் முட்டிற்று. கைகள் நடுங்கத் தொடங்கிற்று. அதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. அப்படியே அருகிலிருந்த கல்லொன்றில் அமர்ந்து கொண்டேன். எத்தனை இரவுகள் பகல்கள் கழிந்த போதும் அந்தக்காட்சி அழியவில்லை. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அதைவிடப் பயங்கரமான காட்சிகளை அதிர்வின்றி, ஏற்றுக் கொள்ள, மரணத்துள்ளான வாழ்வு எம்மை தயார்படுத்தியிருந்தது.
எண்பத்தைந்தில் ஒருபொழுது, இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிப்போயிருந்த சமயம், தொடர்ச்சியாகப் பதினெட்டுமணிநேர எறிகணைவீச்சு. எத்தனைபேர் இறந்தார்கள் என உடனே சொல்ல முடியாவாறு சதைப்பிண்டங்களின் சிதறல். உதவிக்குழு ஒன்றோடு செல்கின்றேன். உடலில் அசைவு இருந்தால் சத்திர சிகிச்சைக் கூடத்துக்கு அனுப்பு, இல்லையெனில் சவக்காலைக்கு அனுப்பு, என்றவகையில் வகைப்படுத்திய பரிதாபம். ஆனால் பணியாற்றிய யாரும் சளைக்கவில்லை. வைத்தியர்கள், உதவியாளர்கள், கடைநிலைப்பணியாளர்கள், தொண்டர்கள், போராளிகள், யாரும் சளைக்கவில்லையே. ஏன் மக்களும்தான். சதைப்பிண்டங்களாய் கூட்டி அள்ளிக் கொண்டுபோய் கொட்டிக் களைக்கையில், மக்கள் வெட்டித்தந்த இளநீரை எந்தவித அருவருப்பும் இல்லாது குடிக்க முடிந்த, மரணத்துள்ளான வாழ்வின் அனுபவம் அது.
எங்கள் தாயக விடுதலைப்போராட்டத்தின் நெடும்பயணத்தில், மகிழ்ச்சி, துக்கம், இணைவு, பிரிவு, என எல்லாம் வந்துபோயிருக்கிறது. முதற்தடவை பார்க்கும் எந்த மனிதருள்ளும் என்ன சோகம் மறைத்திருக்கிறது என்பதைக் கண்டுகொள்ள முடியாதவாறு மரணத்துள் வாழப்பழகிக்கொண்டோம். ஆனாலும் என்றாவது, ஏதாவது ஒரு பொழுதில் விழித்துக்கொள்ளும் துயரம், சிலபொழுதுகள் விழிமூட விடுவதில்லை. கடந்த இரு தினங்களில் அப்படி நினைவைத் திரும்பத்திரும்பத் தோற்றுவித்த இடுகையது. அச்சம்பவம் நடைபெற்ற பொழுதுகளில் நான் புலம்பெயர்திருந்தேன். ஆனாலும் கொடூரம் அறிந்திருந்தேன். இருதினங்களுக்கு முன் சயந்தனின் சாரால் பதிவில் வந்திருந்த ஆனந்தன் அண்ணா நேற்றும் உங்களை நினைத்தேன்.அந்தப் இடுகை மீளவும் என்னைப் பாதித்தது. சாப்பிடமுடியவில்லை. தூங்கமுடியவில்லை. வலைப்பதிவுலகில் சிரித்துக் கொண்டே வரும் அந்த இளையவனின் உள்ளத்துக்குள் இப்படியொரு சோகம், ஒழிந்திருக்குமென எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?. பதிவைப் படித்தபின் எதுவும் செய்யத்தோணாவேளையில் சயந்தன் தொடர்பு கொண்டபோது சொன்னேன் “ இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களில் நிரம்பப்பிடிக்கும் வரிசையில் ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்,எனக்கு ரொம்பப் பிடிக்கும். கால் மாத்திரை, அரை மாத்திரை அளவிலெல்லாம் இசைப்புள்ளி வைத்து, ராஜா இசைக்கோலம் பண்ணியிருப்பார். எண்ணி ரசிக்கும் அந்தப்பாடலை இனி கேட்கும் போதெல்லம் எனக்கும் ஆனந்தண்ணை ஞாபகத்துக்கு வரப்போகிறார் “ என்று. அதுதான் மரணத்துள் வாழப்பழகிக் கொண்ட மனதின் திண்மை.
சயந்தனுடன் இணைந்து, சிரித்துக்கொண்டு வரும் சோமிதரனின் காற்றோடு வலைப்பதிவில் வந்த ஒரு இடுகை நிர்வாணராணுவம். இது சொல்லும் செய்திகள் பல. எங்கள் நிலத்தில் நெரிக்கப்படுகின்ற குரல்வளைகளால், ஒலிக்க முடியாமற்போன கதறலை இப் பதிவு ஒலித்ததாகவே உணர்கின்றேன். புலம்பெயர்ந்திருந்த போதும், நிலத்தோடிருக்கும் நேசத்தில், சோமியின் நெஞ்சின் வலி, வார்த்தையாகியிருப்பதை வாசிக்கலாம்.
ஈழத்தின் துயர் மட்டுமே எண்ணப்படும் என்றில்லை. ஏனென்றால் ஒடுக்கப்படும் மக்கள் உலகெங்குமிருக்கிறார்கள். ஆகையால் எண்ணங்கள் தொடரும்... தலைப்புக்கும் பதிவுக்கும் தொடர்பென்னவென்று கேட்கிறீர்களா? இந்தவாரத்தின் இறுதிவரை வந்திருந்து உறவாடுங்கள். உங்களுக்கே புரியும் அப்போது...
படம்: நன்றி, "மரணத்துள் வாழ்வோம்" ஈழத்துக்கவிதைகள் தொகுப்பு
|
|
இது வெறும் தொகுப்பு இல்லை. உணர்வுப் பூர்வமான படைப்பு ஒன்றை புதிதாகவே படைத்து விட்டீர்கள். கண்ணீர் முட்டுகிறது...இப்போதும்
ReplyDeleteசிந்தாநதி!
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி. இதுதான் எங்கள் தலைமுறையின் வாழ்வு.
அனானி!
மரண்வெளியிலும் இதுபோன்ற விடயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அறிவேன்.