07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, June 4, 2013

பசிப்பிணி மருத்துவன் இல்லம்...

போர் முரசு ஒலி கேட்கிறதே..! எதிரி படையெடுத்து
வந்து விட்டானா, அமைச்சரே?

பயப்படாதீர்கள் மன்னா! மகாராணியார் உள்ளே
மிருதங்கம் பழகிக் கொண்டிருக்கிறார்கள்..!

—————————
மந்திரியாரே…தளபதி எங்கே?

பக்கத்து நாட்டில் தளபதி வேலை காலியாக இருக்கிறது…
இன்டர்வியூவுக்கு போயிருக்கிறார்..!

-இந்த ஜோக்கைப் பார்த்தது இந்தத் தளத்தில் 

ஜோக்கு மட்டும் இல்லாமல் நிறைய தகவல்கள் நிறைந்து கிடக்கின்றன.  பொது அறிவு விஷயங்கள், பொன் மொழிகள், கவிதைகள் இப்படி!

ஒரு கவிதை இந்தத் தளத்தில்:

ஆனந்த விகடனில் வந்ததைப் பகிர்ந்திருக்கிறார். இந்தக் கவிதை என்னையும் ஏதோ செய்தது.

தாத்தா…
யானை தெரியவில்லை…
திருவிழா கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை
சொன்னது
-
‘இரு தூக்கிக் காண்பிக்கிறேன்’
யானை ரொம்ப கனம்
தூக்கிருவியா…?
என்றது குழந்தை!
-
——————–
மு.பழனிஇராகுலதாசன்
நன்றி: ஆனந்த விகடன்


-ஒரு கவிதை இப்படித்தான் படிப்பவருக்குள் ஒரு புன்முறுவலை ஏற்படுத்த வேண்டும்.

'அப்பா.
கிருஷ்ணர் ஏன் கையில் 
புல்லாங்குழல் வைத்திருக்கார்?
என்றது குழந்தை 
நான் 
'வாசிக்கத் தான்' என்றேன்.

-note that இது கவிதை அல்ல.. கடி ஜோக்.

எல்லா ஜோக்குகளும் இந்த  போலி டாக்டர், அழகான நர்ஸ், சமைக்கும் கணவன், மாமியார், அரசியல்வாதி, ராஜா,ஆபீசில் தூங்குதல், பண்டிகைக்கு வந்த மாப்பிள்ளை  இப்படி ஒரு  handful categories -க்குள் அடங்கி விடும் என்கிறார் சுஜாதா. sounds true !

இப்போது அந்த சங்கம் இந்த சங்கம் என்று ஒரு புது விதமான ஜோக்கு கிளம்பி இருக்கிறது. கடி ஜோக் என்று கூட சொல்ல முடியாது. கடி-கடி ஜோக்.

இப்படி

லவ் என்பது ஆயா சுட்ட வடை மாதிரி, ஒழுங்கா பாத்துக்கலேன்னா காக்கா தூக்கிட்டு போய்டும். ஆனா நட்பு என்பது அந்த ஆயா மாதிரி, எவனும் தூக்க மாட்டான்.

இப்படிக்கு டீக்கடையில் வடை சாப்பிட்டுக் கொண்டே யோசிப்போர் சங்கம்

தமிழன் தத்துவவாதி!

சரி...ஜோக்கு போதும்.


என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?

*********
உன் முகவரி
தேடி அலைந்தேன்
கிடைத்துவிட்டது
இப்போது
என் முகவரி
தேடி அலைகிறேன்.

இப்படி, கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகளை ஒருவர் தொகுத்துத் தருகிறார்.


இது அண்ணா இறந்த போது அவர் (அ .ரகுமான்)எழுதியது:

வெறும் தலைகளை எண்ணிய தலைவர்களிடையே
இதயங்களை எண்ணியவன் நீ
உன் எழுதுகோல்
தலை குனியும்போதெல்லாம்
தமிழ் தலை நிமிர்ந்தது.

அன்று இறந்ததோ நாம்;
புதைத்ததோ உன்னை!
நம்மைப்போல்
பைத்தியக்காரர்கள் யார்?

உடல்களைப் புதைக்கும்
உலகத்தில்
அன்று நாம் ஓர்
உயிரைப் புதைத்தோம்!

அப்துல் ரகுமான் எழுதியதில் இன்றும் என்னை பாதிப்பது இந்த வரி:

புத்தகங்களே 
சமர்த்தாய் இருங்கள் 
குழந்தைகளை 
கிழித்து விடாதீர்கள்!

இந்தக் கவிதையையும் படித்துப் பாருங்கள்:

குழந்தை என்றதும் இட்லி வடையில் வரும் 'சாதா குழந்தை டு ஸ்பெஷல் குழந்தை' நினைவுக்கு வருகிறது. நேரம் இருந்தால் படியுங்கள்:


சரி. கொஞ்சம் பேசுவோம்.


 ஆபீசில் வேலை செய்யாமல்  இதைப் படிப்பவர்கள் அப்படியே பேன்ட்ரி-க்குப் போய் ஒரு கப் டீ எடுத்துக் கொண்டு வந்து விடவும்.


 இலக்கியம் என்றால் என்ன? என்று நண்பர் ஒருவர் கேட்டார். சாரு நிவேதிதாவைக் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கிறீர்களே? என்று நினைத்துக் கொண்டேன்.இலக்கியம்  என்பது தமிழ் எழுத்தாளர்கள் இடையில் இன்று ஒரு விவகாரமான சமாச்சாரம்.எல்லாரும் தாங்கள் எழுதுவது தான் இலக்கியம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கலை என்பது படைப்பவனை மட்டுமே சார்ந்தது அல்ல... ரசிகர்களையும் சார்ந்தது.

The difference between literature and journalism is that journalism is unreadable and literature is not read.
-Oscar Wilde

இப்படி யாருக்கும் புரியாமல் எழுதுவது தான் இலக்கியமா? கேட்டால் எழுத்தாளர்கள் நம்மையே நையாண்டி செய்வார்கள்.

இதைப் புரிந்து கொள்ள நீ ஒரு ஜென் நிலைக்குப் போகவேண்டும் என்பார்கள்.
ஒரு பின் நவீனத்துவ அணுகுமுறை உனக்கு வேண்டும் என்பார்கள். காருக்குப் பெட்ரோல் இல்லையே, காபிப்பொடி இல்லையே என்பதை மறந்து விட்டு என்னைப் படிக்க வேண்டும் என்பார்கள். நீ எதைப் புரிந்து கொண்டுள்ளாய் இலக்கியத்தைப் புரிந்து கொள்ள? வாழ்க்கையைப் புரிந்து கொண்டிருக்கிறாயா? உன்னுடன் ஐம்பது வருடம் குடும்பம் நடத்திய மனைவியைப் புரிந்து கொண்டிருக்கிறாயா என்று எடக்கு மடக்காகக் கேள்வி கேட்பார்கள். 

 அய்யன்மீர், உங்கள் இலக்கியத்தைப் படித்தால் கவலை போகும் என்று வந்தால்  நீங்கள் முதலில் உங்கள் கவலைகளை மறந்து விட்டு பிறகு என் இலக்கியம் படி என்கிறீர்களே..

அன்ன தானம் செய்கிறேன்..அதற்கு முதலில் வயிறு முட்ட தின்று விட்டுவா என்று சொல்வது போலல்லவா இருக்கிறது இது?

வாசிப்பவன் எல்லாம் கடந்த ஜென் நிலையில் ஏற்கனவே இருந்தால் உங்கள் எழுத்தை ஏன் வாசிக்க வர வேண்டும்?

என்னைப் பொறுத்த அளவில் இலக்கியம் என்பது சிம்பிள்.

What is wonderful about great literature is that it transforms the man who reads it towards the condition of the man who wrote.

E. M. Forster


அவ்வளவு தான்.


"நெடிய மௌனப் பிரதேசத்தினூடே 
எரியும் நினைவுகளில் 
உட்புகுந்த 
வார்த்தை சருகு 
அல்லாடுகிறது 
எண்ணங்களின் புயலில்'

-என்றெல்லாம் எழுதினால் அது இலக்கியம் அல்ல.

இப்படியெல்லாம் எழுதினால் நீயே உன் திருப்திக்கு எழுதி பெட்டியில் மூடி வைத்துக் கொள். அல்லது draft -இல் வைத்துக் கொள். ஏன் publish செய்கிறாய்??
இவர் சொல்கிறார்:


புரிகிறதா?
அவர் என்ன மனநிலையில் எழுதினாரோ அதே மனநிலையை எட்ட முடிகிறதா? that 's all ...


 ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

-என்ன சொல்கிறார் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா?

that's it ...இலக்கியம் நம் எல்லாரிடமும் இருக்கிறது. நம் எல்லாரின் பொதுச் சொத்து அது. கண்ணாடி போட்டுக் கொண்டு கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, மீசை வைத்துக் கொண்டு பயமுறுத்தும் எழுத்தாளர்கள் சிலரின் பிரத்யேக  சொத்து அல்ல அது.


மனிதன், தான் நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த மொழியை உருவாக்கினான். மொழியின் ஆதாரமான purpose அதுதான்.காட்டில் துணியின்றி துணிவின்றி திரிந்து கொண்டிருந்த போது அவன் 'மல்லிகையே வெண்சங்காய் வண்டூத ' என்று கவிநயத்துடன் கவிதை பேசி இருக்க மாட்டான். பசிக்கிறது, எனக்கு அந்த இடத்தில் வலிக்கிறது, குழந்தையை பார்த்துக்கோ, அவனுடன் போகாதே, ராத்திரி என் வீட்டுக்கு வா என்பது போன்ற சின்னச் சின்ன தகவல்களை பரிமாறிக் கொள்வது தான் மொழி ஒன்றின் நோக்கம். இலக்கியம் கிலக்கியம் எல்லாம்  ரொம்பப் பின்னால் வந்த ஒன்று. மனிதம் கொஞ்சம் செட்டில் ஆகி பசிக்கு ஒரு நிரந்தர வழி (விவசாயம்) கண்டுபிடித்து, செக்ஸில் சலிப்படைந்து , வேட்டையாடி விரக்தியடைந்து   பொழுதுபோகாமல் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டு வெளியேறிய ஒரு மத்தியானப் பொழுதில் கண்டுபிடித்தது இலக்கியம் என்று கூட சொல்லலாம்.

ஒரு மொழிக்கு கவிதைகள் எதற்கு? இலக்கியம் எதற்கு?

 இலக்கியம் என்பது ஒரு luxury ..சாதா பஸ்ஸில் போகாமல் ஏன் ஏ சி ஸ்லீப்பர் பஸ்ஸில் போகிறீர்கள்?

வீடு சும்மா வசிப்பதற்கு தானே? அதற்கு எதற்கு decoration ? interior ?திரைச்சீலைகள்?  பொம்மைகள்? அலங்காரங்கள்....அப்படிச் செய்தால் ஏதோ ஒரு நிறைவு கிடைக்கிறது தானே? அப்படி மொழிக்கு செய்யும் அலங்காரம் தான் இலக்கியம். அந்த அலங்காரம் கன்னா பின்னா என்று இருக்காமல் சிம்பிளாக இருக்க வேண்டும். பசிக்கிறது, வீட்டுக்கு வா,உப்பு பத்தலை  போன்றவற்றை கொஞ்சம் twist செய்து எல்லாருக்கும் எளிமையாகப் புரியும்படி கவித்துவமாக கொஞ்சம் கற்பனை கலந்து சொன்னால் அதுவும் இலக்கியமே.

ஒரு உதாரணம்:

"அம்மா என்ன தான் எனக்கு காவல் இருந்தாலும் நான் அவனைத்தான் விரும்புகிறேன்" என்று சொல்வது வாக்கியம்.

குறும்பூழ் பறப்பித்த வேட்டுவன்போல் அன்னை
வெறும் கூடு காவல் கொண்டாள்

'காடை தன் கூட்டை விட்டு சென்று விட்டதை அறியாத வேடன் அதன் கூட்டை மட்டும் முட்டாள்தனமாக காவல் செய்து கொண்டு காத்திருப்பது போல என் மனம் எப்போதோ அவனிடம் சென்றுவிட, என் அம்மா என் உடம்பை மட்டும் காவல் காக்கிறாள் ' 

- இது இலக்கியம்.
நன்றி: சொக்கனின் தினம் ஒரு பா தளம்.

நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா என்று தேவயானி பாடுவது கூட கொஞ்சம் இலக்கியம் தான் ..

'காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் 
வானின் நீலம் கொண்டு வா பேனா மையோ தீர்ந்திடும்" - இதுவும் கூட .

ஏகதேச உருவக அணி கூட வருகிறது.

என்னடா? எல்லா சினிமாப் பாட்டும் இலக்கியம் ..அப்படி என்றால் வாலி வைரமுத்து தான் பெரிய இலக்கியவாதி என்று நான் சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இலக்கியம் என்பதற்கு clear -cut வரையறைகள் இல்லை.

 மத்தியான வெய்யில். உச்சி வெய்யில் மண்டையைப் பிளக்கிறது. ஒரு வழிப்போக்கன் நடந்து வருகிறான். காலையில் இருந்து ஒரு காபி கூட இல்லை. பசி காதை அடைக்கிறது. வழியில் யாரோ ஒருத்தர் அவனிடம் 'அப்பா பக்கத்து ஊரில் ஒரு தர்மப் பிரபு வந்தவர்க்கெல்லாம் அன்னதானம் செய்கிறார். அங்கே போ' என்று சொல்லிச் செல்கிறார். அவர் வழியில் நன்றாக தொண்டை வரை சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக் கொண்டே வரும் ஒருத்தரைப் பார்த்து ,

'சார், இங்க சாப்பாடு போடுறாங்களே, அந்த வீடு எங்கே' என்று கேட்டால் அது வெறும் கேள்வி.

யாணர்ப் பழுமரம் புள்இமிழ்ந் தன்ன
ஊணொலி அரவந் தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி
முட்டை கொண்டு வற்புலம் சேரும்
சிறுநுண் எறும்பின் சில்லொழுக்கு ஏய்ப்பச்,
சோறுடைக் கையர் வீறுவீறு இயங்கும்
இருங்கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றெனப்;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே


என்றால் இது இலக்கியம்....வார்த்தை புரியவில்லையே? அது எப்படி இலக்கியம் என்றால் நாம் ஆயிரம் வருசத்துக்கு முன்னே பிறந்திருந்தால் இது நமக்கு இன்று எப்படி லாலாக்கு டோல் டப்பி  நாக்கமுக்க ஹும்மாஹுனீயா எல்லாம் புரிகிறதோ அப்படித் தெற்றென விளங்கி இருக்கும்.


எல்லாரும் சாப்பிடும் சத்தம் கேட்கிறதே, எறும்புகள் எப்படி மழைக் காலத்துக்கு அஞ்சி மேடான இடம் நோக்கி தங்கள் முட்டைகளை எடுத்துச் செல்லுமோ அப்படி சிறுவர்கள் சாப்பிட்டது போக கையாலும் எடுத்துச் செல்கிறார்கள்..சும்மா சும்மா கேட்கிறானே என்று பேஜார் ஆகாதீர்கள்... வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு போல சொல்லுங்களேன்.....பசி என்னும் நோயை நீக்கக் கூடிய மருத்துவன் வீடு எங்கே தான் இருக்கிறது? பக்கமா? தூரமா?


 நன்றி:

இரா. முருகன் இதை

“Give us a straight answer, is the house
of that physician who cures hunger nearby or far away?”

என்று மொழிபெயர்ப்பு வேறு செய்திருக்கிறார். :):)

இதையே

Give us a straight answer and  tell us the way -
Is the house of the physician that cures hunger near or far-away?

என்று கொஞ்சம் திருத்தினால் கவித கவித !

 That's all and that's it....இலக்கியம்!

தீராத வயிற்று வலி ஒருவனுக்கு. ஆஸ்பத்திரி எங்கே ஆஸ்பத்திரி  எங்கே என்று வழியெங்கும் கேட்டுக்கொண்டே போகிறான். அதனுடன் இதை ஒப்பிட முடிகிறதா உங்களால்? அய்யோ ..இன்னும் ஆஸ்பத்திரி எத்தனை தூரமோ. .நர்ஸ் எல்லாம் வெள்ளை ட்ரஸ் அணிந்து வர்றாங்களே...ஆம்புலன்ஸ் எல்லாம் வரிசையா  வர்றதே...ஆஸ்பத்திரி எங்கேன்னு சொல்லித் தொலையுங்களேன்...ஒப்பிட முடிகிறதா ?

எப்படி பசியையும் பிணியையும் ஒப்பிடுகிறார் பாருங்கள்....பசி என்பதே பெரிய நோய் தானே...தினமும் மூன்று வேளை வந்து படுத்தும் நோய்.. Prevention is better than cure என்பது பசியைப் பொறுத்தவரை பொருந்தாது.!

அம்மா...அப்பாவுக்கு ரொம்ப பசிக்கிறதாம் என்று அம்மாவிடம் வந்து சொல்கிறது குழந்தை.

'டேய்..உங்கப்பாவுக்கு ரொம்பத்தான் பசி" என்கிறாள் 

"அப்பாவுக்கு அவ்ளோ பசியாம்மா"? என்கிறான் குழந்தை.

"ஆமாண்டா...என் வயித்துல இருக்கே..உன் குட்டி தங்கச்சி பாப்பா...அவ கூட அப்படித்தான் சொல்றா" என்கிறாள் அவள்.

-இலக்கியம் எல்லாரிடத்திலும் இருக்கிறது!


 இந்த பாட்டுக்கு பதிலாக அவர்  'சாப்பாடு எங்கே போடுறாங்க?' என்று சாதாரணமாகக் கேட்டிருந்தால் அது காலம் தாண்டி நிலைக்குமா? இன்றைக்கும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிற்கிறதே! அது தான் இலக்கியம்.

சரி. பசி காதை அடைக்கும் போது யார் சார் இப்படி ஊணொலி அரவம், பொய்யா எழிலிஎன்றெல்லாம் பாடுவார்கள்? என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது. பசி காதை அடைக்கும் போதும் உங்களால் கவித்துவமாகப் பேச முடிந்தால் அது இலக்கியம்!

'ஓர் ஏர் உழவனார் ' என்று ஒருத்தர்...இன்னும் அவர் எழுதிய வரியாலேயே 
அறியப்படுகிறார். வீட்டில் கரண்ட் கட் ஆகி விடுகிறது. ஏதோ ஒரு வேலையை அவசரமாக செய்ய வேண்டும். மெழுகுவர்த்தி கிடைத்து விடுகிறது. என்ன தேடியும் தீப்பெட்டி கிடைக்கவில்லை. தட்டுத் தடுமாறி முட்டி மோதி கடைசியில் தீப்பெட்டி ஒன்று கைக்கு கிட்டுகிறது. அனால் திறந்து பார்த்தால் அதில் ஒரே ஒரு குச்சி மட்டுமே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையை தன் பாட்டில் வர்ணிக்கிறார் ஓர் ஏர் உழவனார் .


இலக்கியம் என்பது நிறைய விஷயங்களின் சங்கமம். அது 100% யதார்த்தம் அல்ல. (அப்படியானால் அது சுய சரிதம்) 100% கற்பனை அல்ல ( அது புனைவு நாவல்) இலக்கியம் ரொம்ப சீரியஸ் ஆனதும் அல்ல அதே சமயம் ஒரு முழு நீள காமெடி படமும் அல்ல. இலக்கியம் ரொம்ப சிறிதும் அல்ல மிகவும் பெரிதும் அல்ல...மிக ஜன ரஞ்சகமானதும் அல்ல...மிக ஜன விரோதமானதும் அல்ல.மிகவும் சந்தோஷமானதும் அல்ல. அழுகாச்சி சீரியலும் அல்ல. ரொம்பவே பழையதும் அல்ல..புதியதும் அல்ல...முற்றிலும் தெளிவானதும் அல்ல. முற்றிலும் குழப்பமானதும் அல்ல.ரொம்ப சுவாரஸ்வமானதும் அல்ல...மிகவும் சலிப்பானதும் அல்ல. காலத்தை முற்றிலும் சாராததும் அல்ல...சார்ந்ததும் அல்ல..ஒற்றைப் பரிமாணம் கொண்டதும் அல்ல..பல பரிமாணத்ததுமல்ல. என்ன? ஹிரண்யகசிபு கேட்ட வரம் போல இருக்கிறதா? that is இலக்கியம்...:)

ஞானக் கூத்தனின் கவிதை ஒன்று:

பசித்த வயிற்றுடன்
சுற்றிலும் பார்த்தான்
பார்வையில் பட்டன பற்பல
தாவரம்
ஒன்று ஆல். ஒன்று அரசு
ஒன்று வேம்பு…
அவனுக்கு வேண்டிய
ஒன்றோ
நாற்றங்காலாய் இன்னமும்
இருந்தது.

 உயிர் போகும் சோகம் என்றாலும் அதை கவித்துவமாக அழகாக உங்களால் மற்றவர்களுக்கு சொல்ல முடிகிறதா? நீங்கள் இலக்கியவாதி!

உதாரணம்:

இறந்த பிறகு வாருங்கள்:
=======================
எனக்கு இந்த 
அடர்ந்த தனிமையே போதும் 
நீங்கள் நான் இறந்த பிறகு 
வாருங்கள்..
அப்போது என்னைப் பற்றி 
என்ன வேண்டுமானாலும் நீங்கள் 
பேசிக் கொள்ளலாம்.
நல்லவன், ஞானி 
மானஸ்தன் 
பொறுமைசாலி 
என்று என்ன வேண்டுமானாலும் 
என்னைப் பற்றி 
கற்பனைக் கதைகள் கூட புனையலாம் 
நான் தான் பேச மாட்டேனே 
வெளியே போ என்று சொல்லமாட்டேனே 
உங்களை முறைக்கக் கூட மாட்டேன்..
எனவே 
நான் இறந்த பின்பு வாருங்கள்...

- வங்காளக் கவிஞர் ஜெசிமுதீன் 
  
 இந்தக் கவிதை உங்கள் மனதில் ஒரு கலவையான உணர்ச்சிகளை (mixed  feelings )உருவாக்குகிறதா? ஒரு வார இதழ் படிப்பதில் இருந்தோ , வடிவேலு ஜோக் பார்ப்பதில் இருந்தோ , மெகா சீரியல் பார்ப்பதில் இருந்தோ,துப்பறியும் நாவல் படிப்பதில் இருந்தோ, கடி ஜோக் படிப்பதில் இருந்தோ  வேறுபட்ட ஒரு உணர்ச்சியை உணர முடிகிறதா..?

அதுதான் இலக்கியம்..

வடிவேலு கூட தான் ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருக்கும் போது கூட 
'பல்பை பஞ்சர் ஆக்கிட்டானே பரதேசி' என்று காமெடி பண்ணுகிறார். அப்படியென்றால் வடிவேலு இலக்கியவாதியா? இருக்கலாம்.ஆனால்  உண்மையிலேயே அடிபட்டு ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் வடிவேலு நிச்சயம் வேறு விதமாக இருப்பார்.

நாளை சந்திக்கலாம்.

சமுத்ரா  

18 comments:

 1. இன்றைய அறிமுக தளங்கள் அனைத்தும் புதிது...!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ஒவ்வொருத்தரைப் பற்றிய ரசனைகள் மிகவும் அருமை... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...

  ReplyDelete
 2. /// ஞானக் கூத்தனின் கவிதை ஒன்று: /// --> இதற்கு கீழ் உள்ள இணைப்பை மட்டும் மாற்ற வேண்டும்... நன்றி...

  ReplyDelete
 3. திண்டுக்கல் தனபாலன்..நன்றி..

  இப்போது சரி பார்க்கவும்.

  ReplyDelete
 4. இப்போது சரி... நன்றி...

  ஒரு பாட்டு ஞாபகம் வந்தது :

  எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ...
  அது வரை நாமும் சென்றுவிடுவோம்...
  விடைபெறும் நேரம் வரும் போதும்...
  சிரிப்பினில் நன்றி சொல்லிவிடுவோம்...
  ஓஓஒஓஒ...
  பரவசம் இந்த பரவசம்...
  என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே... கடவுள் தந்த அழகிய வாழ்வு...
  உலகம் முழுதும் அவனது வீடு...
  கண்கள் மூடியே வாழ்த்து பாடு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. நன்றி தனபாலன் ....இரா. முருகன் போன்றவர்களை நிறைய பேருக்குத் தெரிந்திருக்கலாம்.

  இங்கே அறிமுகம் செய்தவர்களில் அவ்வளவாக நிறைய பேருக்கு பரிச்சயம் ஆகாத யாரேனும் இருந்தால் அந்தத் தளத்துக்கு சென்று தகவல் கூறினால் நன்று.உதவிக்கு நன்றி.

  ReplyDelete
 6. தகவல் தெரிவித்து விட்டு தான் கருத்துரையே...

  ஒவ்வொரு தளத்தையும் ரசிக்க ஒரு நாள் வேண்டும்... சில தளங்களில் comments closed...(!)

  தமிழ்மணம் இணைத்து விட்டீர்கள்... நன்றி...

  ReplyDelete
 7. வணக்கம் சமுத்ரா!
  உங்களின் அறிமுகம் இந்த வலைச்சரம் மூலமே எனக்குத் தெரிய வந்தது.

  //என்னைப் பொறுத்த அளவில் இலக்கியம் என்பது சிம்பிள்.//

  இப்படிச் சொல்லிவிட்டு நிற்காமல் எங்களுக்கும் பல உதாரணங்களைக் காட்டி புரிய வைத்தது சுவையாக இருக்கிறது.
  திரு இரா. முருகன், திரு சொக்கன் இவர்களது தளங்கள் அறிமுகமானவை.

  நீங்கள் இங்கு மேற்கோள் காட்டியிருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றுமே ரசிக்கத் தக்கவையே.

  தொடருங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அப்துல் ரகுமான் எழுதியதில் இன்றும் என்னை பாதிப்பது இந்த வரி:

  புத்தகங்களே
  சமர்த்தாய் இருங்கள்
  குழந்தைகளை
  கிழித்து விடாதீர்கள்!

  கவித்துவமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 9. சமுத்திரா இலக்கியம் உங்கள் கருத்தில் எனக்கும் உடன் பாடு இருகிறது எளிமையாக சொல்லிவிடீர்கள் இலக்கியம் காலத்தின் கண்ணாடி அதை உள்ளபடியே காட்டுவதில் அக்கறை கொள்ள வேண்டும் எழுத்தாளர்கள் அதை விடுத்தது நவீனம் ,பின் நவீனம் ,முன் நவீனம் என்று புரியாமல் எழுதுவது சிறப்பில்லை ..........நச்சுன்னு சொன்ன உங்களுக்கு ஒரு பாராட்டு மாலை சூட்டுகிறேன்

  ReplyDelete
 10. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. மிகவும் ரசித்தேன். இலக்கியம் எது என்று சுவைபடக் கூறினீர்கள் :)

  //சரி. பசி காதை அடைக்கும் போது யார் சார் இப்படி ஊணொலி அரவம், பொய்யா எழிலிஎன்றெல்லாம் பாடுவார்கள்? என்று விதண்டாவாதம் செய்யக் கூடாது. பசி காதை அடைக்கும் போதும் உங்களால் கவித்துவமாகப் பேச முடிந்தால் அது இலக்கியம்!//

  பசி தீர்ந்த பிறகு வாட்டிய அந்தப் பசியை நினைத்துப் பாடியிருக்கலாம் :)

  ஆக மொத்தம் நானும் இலக்கியவாதி என்று அறிந்து சந்தோஷமாக இருக்கிறது :)

  பேசப்பட்ட தளங்களும் கவிதைகளும் அதைப் பற்றிய உங்கள் பார்வையும் அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
 12. அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

  நயமுள்ள கவிதைகளை அழகாக எடுத்துக் காட்டியுள்ளீர்கள். சுவைத்தேன்.

  நன்றி.

  ReplyDelete
 13. இலக்கியத்தை பற்றிய உங்கள் எண்ணங்கள் ரசிக்க வைத்தன.பகிரப் பட்ட கவிதைகளும் அருமை // இலக்கியம் நம் எல்லாரிடமும் இருக்கிறது. நம் எல்லாரின் பொதுச் சொத்து அது. கண்ணாடி போட்டுக் கொண்டு கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு, மீசை வைத்துக் கொண்டு பயமுறுத்தும் எழுத்தாளர்கள் சிலரின் பிரத்யேக சொத்து அல்ல அது.// முற்றிலும் உண்மை ஆனால் நம்மில் பலர் இதை உணர்வதில்லை

  ReplyDelete
 14. அருமை நன்றி நண்பா

  ReplyDelete
 15. //
  http://www.eramurukan.in/

  இரா. முருகன் இதை

  “Give us a straight answer, is the house
  of that physician who cures hunger nearby or far away?”

  என்று மொழிபெயர்ப்பு வேறு செய்திருக்கிறார். :):)//


  Sumudra

  http://www.eramurukan.in/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/


  I have clearly mentioned the translation of Puram 173 is by Prof.George Hart and it is available in http://learnsangamtamil.com/purananuru/

  Your smileys are dedicated to the learned professor :-)

  regards
  era

  ReplyDelete
 16. கருத்து சொன்னவர்களுக்கு மிக்க நன்றிகள்

  ReplyDelete
 17. இலக்கியம் என்பதற்கு அருமையானதோர் விளக்கம். சொல்லிய தளங்கள் எனக்குப் புதியவை. மிக்க நன்றி சமுத்ரா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது