நினைவுகளை கிளறியவை..!
அந்த விதவிதமான டைப் ஓவியங்களை ஒரு பெரிய நோட்டில் ஒட்டியும் வைத்திருப்பார். கூடை பின்னுவது, கோலம் வரைவது மட்டுமின்றி, புனைவுகள் எழுதுவதிலும் ஆர்வமிக்கவர் அவர்.
பெரிய அக்கா கதை சொல்லும் அழகே தனி. குரலில் நல்ல ஏற்ற இறக்கம் இருக்கும். அதிகம் அவர் சொல்லுவது நகைச்சுவை கதைகளாக இருக்கும். வெறும் வார்த்தை ஜாலம் செய்ய்யும் மொழி விளையாட்டு கதைகள் அல்ல அவை. அத்தனையும் காட்சிப்படுத்தப்பட்ட கதை.
அந்த அக்காவுக்கு கல்யாணம் நடந்த போது என் வயது பதினைந்து. இன்று இரண்டு வயது வந்த குழந்தைகளின் தாய் அவர். அவரின் இளவயதில் இருந்த கதை சொல்லும் குணம் இன்று இல்லை. அவரின் கல்லூரிக்காலத்துடனே அவரின் துடுக்கதனம், கதை சொல்லுவது எல்லம் குறையத்தொடங்கி இருந்தது.. இன்று சுத்தமாக கதைஇ வாசிப்பு கூட இல்லாமல் இருக்கிறார்.
கடைசியாக அவரை இரண்டு வருடங்களுக்கு முன் சந்தித்த போது.., "என்னக்கா.. இப்ப எல்லாம் ஒன்னோட குழந்தைகளுக்கு கூட கதை சொல்லுறதில்ல போலிருக்கே. டிவியில காமடி காட்சியில் கூட சிரிக்க மாட்டீங்கிறியேன்னு" கேட்டேன். அவர் விரக்தியாய் ஒரு சிரிப்பை உதிர்த்தார். அந்த சிரிப்புக்கு எனக்கு பொருள் புரியவில்லை. ஆனால்.. முரட்டு குணம் கொண்ட அத்தானுக்கு இது எல்லாம் பிடிக்காது என்று எனக்கும் தெரியும். என்ன செய்ய.. கற்பகமக்காவின் இந்த பதிவு ஏனோ.. எனக்கு சுயத்தை இழந்து வாழும் என் அக்காவை நினைவு படுத்தியது. :(
**
ஒரு காலகட்டத்தில் மடல் வழி தொடர்புகளான பேனா-நட்புகள் எனக்கு நிறைய இருந்தது. இன்றும் என் நண்பர்களில் பலர் இந்த பேனா- நட்பு மூலம் ஏற்பட்டவர்கள் தான். அப்படி ஏற்பட்ட ப்பல நட்புகளில் சிலது மட்டும் குடும்ப நட்பாக மாறி இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அப்படி ஏற்பட்ட நட்புகளில் பலரை குறிப்பிட்டு சொல்ல முடியும். இந்த பாலா இன்றும் உயிர்ப்போடு இயங்குவதுக்கு அந்த நட்புகளும் முக்கிய்ய காரணம். அது போல.. வலை உலகிலும் நட்புகள் சாத்தியம் என்பதை இந்த இரண்டு ஆண்டுகளில் உணர்ந்திருக்கிறேன். கிட்ட தட்ட ஒத்த கருத்துடையவர்களை, அல்லது தமிழ் நேசிப்பவர்களை தாயகம் விட்டு பிற இடங்களில் வாழும் போது நட்பு கொள்வது என்பதே சுவாரஸ்யமான விசயம். நிறைய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தும். அப்படியான உணர்வை வாசிக்கும் போதே தந்தது துளசியம்மாவின் இந்த பதிவு.
**
மனித மனங்கள் பற்றி யோசிக்கையில் சில சந்தர்ப்பங்களில் வியப்பும், வேதனையும் எனக்கு தோற்றுவிக்கும். எல்லா வகையிலும் பல சந்தர்ப்பங்களில் அடுத்தவர் மேல் பாரத்தை சும்மத்தி விட்டு தப்பிக்கப் பார்க்கும். இப்படி பல விதங்களில் என்னை அலைக்கழிக்கும் இந்த மனிதர்கள் மேல் ஏனோ.. எப்போதும் என்னால் அதிக பட்சமாய் அரைமணி நேரத்திற்கு மேல் கோபமாய் இருக்க முடிவதில்லை. இதோ நிவேதா வின் இந்த எழுத்துக்கள் அப்படியான பல எண்ணங்களை எனக்குள் ஏற்படுத்தியது.
**
திதி செய்ய மனமில்லை
இன்னும் வாழ்கிறாள்
மனதில் அம்மா.
-என்று நான் குறுங்கவிதையாய் எழுதியதும் என் நெருங்கிய நண்பனின் அனுபவத்தைத் தான். அந்த வரிகளில் மூழ்கி.. என் தோள் தட்டாதவர்கள் குறைவு. அம்மா என்ற சொல்.. வெறும் சொல்லாக மட்டும் பார்க்கப்படுவதில்லை என்பதை திடமாக நம்புகின்ற நபர்களில் நானும் ஒருவன்.
அளவுக்கதிகமாய் நேசித்த கணவன் இறந்து போன.. அதே வீட்டில் தானும் இறக்கவேண்டும் என்ற அசட்டு வைராக்கியத்துடன் வாழும் கிழவிகளை நான் பார்த்திருக்கிறேன். பையன்களும், பிள்ளைகளும் சொந்த ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடியேறியபின்னும், தனித்து.. தன் கடைசி நாட்களை அதே வீட்டில் எண்ணிக்கொண்டு வாழும் கிழவிகள் இங்கே நிறைய உண்டு.
ஆவி வந்த வீடு என்றெல்லாம் சொல்லபடுகின்ற வழக்கம் இன்றும் தென்மாவட்டங்களில் உண்டு.
சரி.. இது எல்லாம் சொந்த வீட்டுக்காரர்களுக்கு.., நீண்ட காலமாக வாடகை வீட்டில் வாழ்பவர்கள் நிலை..?! கிளைகள் முறிக்கப்பட்டு மொட்டையாய் நிற்கும் மரங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைகின்றன. வாடகை வீட்டினரை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது.
புலம் 'பெயர்க்கப்பட்டவர்'களின் நிலை... எழுத்துக்களினால் சொல்லிவிட முடியாத் துயரமது. நெஞ்சை அடைக்கும் அப்படியான பதிவு இது. மூஊஊஊஊஊத்த பதிவரான சந்திரமதியின்( அப்பாடா.. ம.க.ச-வை ஆரம்பிச்சாச்சு) எழுத்தின் வன்மையை இதில் உணரலாம்.
***
இன்னுமிருக்கு..