வலைப்பதிவுகளுக்கு வரும் முன்னரே மரத்தடி குழுமத்தின் இணையதளத்தில் நான் படித்து ரசிக்க ஆரம்பித்தவர்கள் துளசி டீச்சரும், ராமச்சந்திரன் உஷாவும்.
துளசியின் எழுத்தில் ஒரு அந்நியோன்னியம் இருக்கும். முதல் முறை படிக்கும் போதே நம் வீட்டிலிருக்கும் உறவுப் பெண்மணி ஒருவரிடம் பேசுவது போன்ற உணர்வு வரும். இவங்களோட ஸ்பெஷல் பயணக்கட்டுரைகள்தான். சாப்பாட்டு ஐட்டங்கள், வளர்ப்புப் பிராணிகள், தோட்டத்துல பூ பூத்தது, குளிரில் உறைந்து போன நீர்னு இவங்க பதிவுகளுக்கான பேசு பொருள் சூரியனுக்கடியிலிருக்கும் எதுவா வேணும்னாலும் இருக்கும். ஆனா சுவாரசியமா இருக்கும். அதான் இவங்க ஸ்பெஷல்.
1. இவரது சமீபத்திய பயணத்தொடர் - நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்
2. தினசரி வாழ்வில் தான் சந்தித்த சக மனிதர்களைப் பற்றிய இவரின் எழுத்தோவியம்
3. நியூசியின் வரலாற்றை எளிமையான தொடராக்கித் தருகிறார்.
உஷா வலைப்பூக்களில் மட்டுமல்ல அச்சு ஊடகங்களிலும் வெற்றிகளைப் பெற்றுவரும் எழுத்தாளர். நல்ல கதைகள், சமூக அக்கறை உள்ள பதிவுகள், அப்பப்ப நடுவுல காமெடி கலந்த பதிவுகள்னு எல்லாவிதமாவும் அடிச்சு ஆடுவாங்க. நல்ல தெளிவான சிந்தனைக்குச் சொந்தக்காரர்.
1. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்கிற அருமையான படிப்பினையைத் தன் சொந்த அனுபவத்தின் மூலம் விளக்கும்
விழிப்புணர்வுப் பதிவு.
2. பெரும்பாலான வலைப்பதிவர்களின் வாழ்க்கையை வ.ப.மு , வ.ப.பி என்றே பிரித்துவிடலாம் என்பதுதான் யதார்த்தம். இதை அருமையாகப் பகடி செய்கிறார் இந்தப்
பதிவில்.
3. இது என்னோட நேயர் விருப்பமா அவர் போட்ட
கவிதைப் பதிவு.
மதி என்று சுருக்கமாய் அறியப்படும்
சந்திரமதி கந்தசாமி - அநேகமாய் வலைப்பதிவு ஆரம்பித்த எல்லோருமே ஏதேனும் ஒரு தொழில்நுட்ப உதவியை இவரிடமிருந்து பெற்றிருக்கக்கூடும். அவ்வளவுக்குப் பிறருக்கு உதவும் இயல்பும், வலைத் தமிழ் பற்றிய தொழில்நுட்பக் கூர்மையும் உடையவர். மிகப் பரந்த வாசிப்பனுபவம் கொண்டவர். உலக சினிமாக்கள், ஜாஸ் இசை என்று பல்வேறு விஷயங்களைப் பதிந்து வரும் இவர் இயற்கை விரும்பியும் கூட.
1. வோர்ட்பிரஸ் மற்றும் தனி இணையதளம் நிறுவுதல் தொடர்பாக இவர் அண்மையில் எழுதியுள்ள
பதிவு.
2. ஈழத்து இலக்கியம் என்ற தலைப்பின் கீழ் ஈழத்தமிழ் இலக்கியத்தைப் பற்றிய ஒரு
சாளரத்தைத் திறக்கிறார்.
3. அவ்வப்போது சமீபத்தில் தன்னைக் கவர்ந்த பதிவர்களின்
பட்டியலையும் அவர்களைப் பற்றிய சிறுகுறிப்புகளையும் வெளியிடுகிறார்.
4. தன்னைச் சுற்றி நடக்கும் தமிழிலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை அக்கறையோடு பதிந்து வைக்கிறார் இந்த
இழையில்.
5. உலக சினிமா பற்றிய
இவரது பார்வை.
6. தன்னைக் கவர்ந்த இசை நிகழ்வுகளை ஒலி-ஒளிப் பதிவுகளாக்குகிறார்
இந்த இழையில்.
செல்வநாயகி - கவித்துவமான எழுத்து நடை கொண்ட இவர் பேசுவது பெண்ணியம் உள்ளிட்ட அனைத்து வகையான ஒடுக்கப் பட்டவர்களின் உரிமைப் போராட்டங்களைப் பற்றியும். தொழில் முறையில் ஒரு வழக்கறிஞரான இவர் இப்போது வசிப்பது வெளியூரிலென்றாலும் தன் உணர்வுகளை வலைப்பதிவு மூலம் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
1. உலகம் இருக்கும் கிரகத்தைவிட்டு இன்னொரு கிரகத்திற்கு இடம்பெயர்ந்தாலும் அங்கும் மதங்களையும் அதன் சண்டைகளையும் அப்படியேதான் எடுத்துச்செல்வானா மனிதன் என்கிற
இவரது கேள்விக்கான அபாயகரமான பதில் ஆமென்பதுதானே?
2. ஒரு கவிதையில் தொடங்கி ஆணித்தரமான வாதங்களுடன் விரியும்
இவரது வாதம் - பெண்கள் மூடிக்கொள்ள வேண்டும் என்கிற சர்வமத தத்துவத்தின் மீதானது.
3. ஜிகினாக் கவிஞரென்று அறிவுஜீவிகளால் அறியப்படும், சினிமாப் பாடல் எழுதுவதான கீழான தொழில் செய்வதற்காய் சற்றே தரம் தாழ்ந்ததென்று முத்திரை குத்தப்படும் வைரமுத்துவின் ஒரு அருமையான கவிதையை
இங்கே பகிர்கிறார்.
4. மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வாழும் ஒரு பக்குவமிக்க தம்பதியினரின் பேட்டியை தன் குறிப்புகளோடு
இப்பதிவில் கொடுத்திருக்கிறார்.
பத்மா அரவிந்த், இவரும் அமெரிக்காவிலிருந்து வலைப்பதிபவர். மருத்துவத் துறையில் பணிபுரிந்து வரும் பத்மா உடல் நலக் கல்வி குறித்த ஒரு வித்தியாசமான பார்வையை முன்வைக்கிறார். மனிதநேயமும் சமுதாய நலன் குறித்த அக்கறையும் விரவிய இவரது எழுத்து ஆடம்பரமில்லாத எளிய மனதைத் தொடும் எழுத்து.
1. மணமுறிவுக்கான காரணங்களை அலசுகிறார்
இத்தொடரில்.
2. தன் வாழ்க்கைத் துணையை சந்தித்த இனிய் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்
இப்பதிவில்.
3. மதங்கள், நாடுகள் என்ற எல்லை கடந்து நிற்பது ஆதிக்க உணர்வு. அதன் பல்வேறு வடிவங்களைப் பற்றிய தனது கருத்தை
தொடராக்கித் தருகிறார்.
4. நம் சமூகத்தில் அறிவுரை வழங்காத/வாங்கியிராத மனிதர்களே இருக்க முடியாது. மிகச் சுலபமாய்க் கிடைக்கும் பொருளிது. ஆனால் தவிர்க்க இயலாததும் கூட. ஆனால் அறிவுரை எரிச்சலூட்டுவதாய் இருந்து விடக்கூடாது. எப்படி இருக்கலாம் என்று சில எடுத்துக்காட்டுகள் மூலம் சொல்கிறார்
இங்கே.
இன்னமும் எனக்குப் பிடித்த பதிவர்களின் பட்டியல் பெரிது. இருக்கும் நேரமும் என் பொறுமையும் சிறிதென்பதால் இப்பட்டியலை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
இங்கே போனால் நீங்களே விடுபட்டுப் போன நன்முத்துக்களை கண்டெடுக்கலாம்.