என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும் பிறந்தவுடன் விருட்சமாக ஆகிவிடுவதில்லை. (விருட்சமாகவே பிறப்பவர்களும் உண்டு). தேடிப்பிடித்து படிப்பதில்தான் அடையாளம் காணயியலும். எனக்கு அன்றையநாளில் எவரேனும் நீரூற்றாமல் இருந்திருந்தால் என்றோ நான் இவ்வலைமண்ணில் இலைவிடாமல் மறைந்திருப்பேன்.
மோதிரக்கையுடையவர்கள் குட்டுவதினாலும் தட்டிக்கொடுப்பதினாலும் புதியவர்கள் நேர்பட வளர நிறைய வாய்ப்புண்டு. உற்சாகமில்லா வாழ்வினை வாழ யாருக்குத்தான் விருப்பமிருக்கும். எனக்கும்கூட இருந்ததில்லை. ‘அருமை’யென்ற வார்த்தைக்கு இங்கிருக்கும் மதிப்பும் வலிமையும் அளவிற்கரியது. அதற்கேங்காத ‘என்’னெந்த இடுகைகளும்கூட உறங்கியதில்லை. நான் வலையுலகிற்கு வந்து ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாகியும், இந்த மனநிலையிலிருந்து நான் மாறுபடவில்லை. இதை மாயையென்பாரும் உண்டு. மாயைக்குள் அகப்படாத கனவுகள்கூட இல்லை.
இன்று புதிதாய் (சமீபத்தில்) இக்கலை(வலை)யுலகில் காலடியெடுத்து வைத்தவர்களில் எனக்குத்தெரிந்த ஒருசிலரை காட்ட எண்ணுகிறேன்.
நான் வலையுலகில் நுழைந்தபொழுது என் வலைப்பக்கங்களை எப்படி மாற்றியமைப்பது அதிலுள்ள தொழிற்நுட்பங்கள் என்னனென்ன, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதே தெரியாமலிருந்தேன். பிறகு ஒவ்வொன்றாய் நானே முயன்று கண்டுபிடித்து மாற்றிக்கொண்டேன். அப்பொழுதும் நிறைய பதிவர்கள் இந்த தொழிற்நுட்பத்தினைப்பற்றி எழுதியிருந்திருக்கிறார்கள். நான் கண்டதில்லை. தமிழ்மண ஓட்டுப்பட்டையை எப்படி இணைப்பது என்பது பற்றி நானும்
கதிர் அய்யாவும் மிகவும் ‘ஆராய்ந்து’ செய்தோம். அவ்வளவு தெரிவின்மை எனக்குள்.
இப்பொழுது அப்படியில்லை. இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். நமது வலைப்பூவை எப்படியெல்லாம் அழகுப்படுத்தலாம் அல்லது அதில் அத்தியாவசியமானதை எப்படி இணைப்பது என்பன போன்றவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வகையில் நான் சமீபத்தில் அறிந்தவர்...
நண்பர் வந்தேமாதரம் சசிகுமார்வலைப்பூ பற்றின நிறைய தொழிற்நுட்ப விபரங்களை அவர் தனது தளத்தில் தருகிறார். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
(பிளாக்கர்) இந்த ‘வகை’யில் அவர் எழுதியுள்ளவை எனக்கும் உங்களுக்கும்கூட பயனளிப்பவை...
வலைப்பூ பற்றின தகவல்கள் தவிர பொதுப்படையான தொழில்நுட்ப உதவிகளும் இவரது தளங்களில்
(தொழில்நுட்பம்) என்கிற ‘வகை’யில்.
••••••••••
புதிய வார்ப்புபுதிய வார்ப்புதான் நான் கண்ட அளவில். அச்சப்படுத்தாமல், அடித்தடித்து தீட்டாமல் தானே உருவான வார்ப்பு. இவரின் புலமையுடன் கட்டப்பட்டுள்ள கட்டுரைகள் வெகுவாக மனதை பிசைகிறது. கொஞ்சம் இளைப்பாறக்கூட முடிகிறது. கட்டுக்குள் சிக்காத காற்றுக்கொப்பான எழுத்துக்கள் இங்கே பரவியிருக்கின்றன.
ஒத்த சொல்லு,ஒரு செயலு !!!!உங்களையும் என்னையும் சுற்றி ஏதோவொரு சூழ்நிலையில் சந்தர்ப்பவசத்தால் சூறாவளி போன்றோ அல்லது சுனாமி போன்றோ உருவாகுவது தற்கொலையெண்ணம் (இருக்கலாம்) கொஞ்சம் மனதை கெட்டிப்படுத்தினால் நாளையெனும் வசந்தம் அதை கடந்துவிடும். அந்தமுறையில் மனதினை திடப்படுத்தும் மருந்து இந்த இடுகையில். சமீபத்திய இன்னொன்றும்
மற்றும் ஒரு கொலை!!!
நிலா காய்கிறது !!!(படித்த பொழுதுகளில் கொஞ்சநேரம் அந்த இடுகைக்கு குழந்தையாய் இருந்தேன். படிப்பவரின் மனநிலைக்கேற்ப மூன்றில் ஒரு கதாபாத்திரம் ஒட்டிக்கொள்ளும். என்வயதிற்கேற்ப என்னுடன் வந்தது குழந்தை வேடம். மிகையில்லை. படியுங்கள் உணரலாம்.)
•••••••••••
பிரேமா மகள்நான் தற்சமயம் கண்ட மற்றொரு தளத்திற்கு சொந்தக்காரர். எள்ளலும், துள்ளலும் நிறைந்த பெண்மணி எழுத்துகளிலும். சமீபத்தில் வலையுலகில் சுற்றிவந்த ‘பெண் பார்த்தக் கதை’ தொடரிடுகையை, இவரை
பெண் பார்த்த கதையை மையமாக வைத்து நகையுடன் கலந்துள்ளார்.
இவரிடம் நான் கண்ட எண்ணங்கள்..
கதவை திற. காற்று வரட்டும்(தன்னுடைய அனுபவத்தையும் ஆற்றாமையையும் இவ்விடுகையில் பதிந்துள்ளார். கொஞ்சம் புத்தியை இந்த இடுகையின் மூலமும் பெற்றேன். உண்மையை உணரவேண்டியதுதான் நமது செயல்)
இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?(நாகரீக குகைக்குள் புகுந்து தாமே மூடிக்கொண்ட கதவினை விடுவிக்கத்தெரியாமல் அதற்குள்ளேயே வாழக்கற்றுக்கொண்டுவிடும் நகரத்து பெண்மணி பற்றின இடுகை. தனது அனுபவத்தின் வாயிலாக எழுதியிருக்கிறார்.)
•••••••••••••
எவ்வாசல் நுழைந்தேனும் நுகரக்கூடிய தளம் இங்கேயொன்று காணப்பெற்றேன். இத்தளம் புதிதல்ல ஆயினும் புதிதாய் காண்பவர்களுக்கு அப்படித்தான். அது
மூலிகை வளம். கே.பி. குப்புசாமி என்பவர் இத்தளத்தில் நிறைய முலிகைப்பயிர்களை அடையாளம் கண்டு பயிர்செய்துள்ளார்.
உடல் நலத்திற்கு இங்கே இயற்கை விதைத்திட்ட விதைகள் ஏராளம். அதை இனம் கண்டறிந்து பயன்படுத்த தவறுவது நமது தவறே. உடலில் உண்டாகும் எப்பிணியாயினும் அதற்கான மருந்தை இங்கே நம்பூமி தன்மேல் எழுதிவைத்திருக்கிறது. ஒவ்வொரு மூலிகைச் செடிக்குமான அத்தனை தகவல்களும் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. பிரதியெடுத்து பாதுகாக்க வேண்டியன ஒவ்வொன்றும்.
இதை (
குண்டுமணி)
இதை (
அத்தி)
இதை (
இலந்தை) இப்படி எதற்கான மருத்துவ குணங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு தேவை...???. பாருங்கள் வேறொன்றும் நான் சொல்லப்போவதில்லை.