ஆமேர் கோட்டையை சுற்றிப் பார்க்கலாமா!
➦➠ by:
ஆதி வெங்கட்
சரம் – மூன்று மலர் - மூன்று
எங்களுடன்
நண்பரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் வந்திருந்தனர். எல்லோரும்
அரட்டை அடித்துக் கொண்டே பாதி வழியை கடந்திருந்தோம். அதிகாலையிலேயே
தில்லியிலிருந்து கிளம்பி விட்டதால் எல்லோருக்கும் பசி எடுக்கத் துவங்கியது. என்னதான் பயணித்துக் கொண்டே இருப்பது
பிடிக்குமென்றாலும், உணவு உட்கொள்ளவும் மற்ற விஷயங்களுக்கும் நடுவில் சற்றே
வண்டியை நிறுத்தத்தானே வேண்டியிருக்கிறது.
ஜெய்ப்பூர்
செல்லும் வழியில் உள்ள ஒரு சாலையோர தங்கும் விடுதியில் காலை உணவை எடுத்துக் கொள்ள
நினைத்தோம். இங்கு பஃபே முறையில் வேண்டியதை போட்டுக் கொள்ளலாம். பாலுடன்
கார்ன்ஃப்ளேக்ஸ், இயற்கையான பழ ரசங்கள், பிரெட்-ஆம்லெட் என்று பலவிதமான உணவுகள்
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன. Unlimited - எவ்வளவு
வேண்டுமானாலும் சாப்பிடலாம் - ஆளொன்றுக்கு 180/- ரூப்யாயோ என்னமோ
வாங்கிக் கொண்டார்கள் அப்போது. என்னைப் பொறுத்த
வரையில் பயணத்தில் முடிந்த வரை வாய்க்கு பூட்டு போட்டுக் கொள்வேன் என்பதால் நான்
பழரசம் மட்டும் அருந்தினேன்….:)
காலை
உணவினை முடித்தபிறகு அவ்விடத்தில் மனதைக்கவரும் அழகிய புல்வெளியும், குழந்தைகள்
விளையாட ஊஞ்சல் போன்றவையும் இருந்ததால் எல்லோரும்
சற்றே இளைப்பாறினோம். குழந்தைகள் ஊஞ்சலில் விளையாட, பெரியவர்கள் அமர்ந்து பேசிக்
கொண்டிருந்தோம்.
ஆமேர் கோட்டையின் ஒரு பகுதி
தொடர்ந்த
எங்கள் பயணத்தில் ”AMER
FORT” “AMBER PALACE” என்று சொல்லப்படுகிற ஆமேர்
கோட்டையை சென்றடைந்தோம்.
ஆமேர் கோட்டை-வேறொரு கோணத்தில்...
ஜெய்ப்பூரை
சுற்றி பல கோட்டைகள் இருந்தாலும் இந்த கோட்டை புகழ்பெற்றது. ஜெய்ப்பூர்
நகரைச் சுற்றி ஒரு
பாதுகாப்பு அரண் போல சுற்றுச் சுவர்களை கொண்டது. ராஜா ஜெய்சிங்
அவர்களின் காலத்தில் கட்டபட்ட ஆமேர் கோட்டையில் DIWAN I AM, DIWAN I KHAS, SHEESH MAHAL என்று
சொல்லப்படுகிற கண்ணாடி மாளிகையும், பலவிதமான அறைகள், அகழிகள்
என்று சுற்றிப் பார்க்க நிறைய இருந்தன. பெரிய பானை ஒன்று
கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. தங்களது முன்னோர்களை இறப்புக்கு பின்
இது போன்ற பானைக்குள் வைத்து புதைத்திருக்கிறார்கள்.
இங்கேயே
கோட்டையைச் சுற்றி யானையில் வலம் வரலாம். வெளிநாட்டவர்களும், சுற்றுலா
வாசிகளும் என ஏகப்பட்ட கூட்டம். நாங்களும் சுற்றி பார்த்து புகைப்படங்களை எடுத்துக்
கொண்டு அங்கிருந்து கிளம்பி ஜெய்ப்பூர் நகருக்குள் வரத் துவங்கினோம்.
சரி
இன்றைய அறிமுகங்களைக் கவனிப்போம்! சுற்றிக் காட்டும் ஆர்வத்தில் வலைச்சர ஆசிரியர்
பொறுப்பை மறந்தால் எப்படி!
திரைப்படங்கள்
குறித்த தனது பார்வை, ஆவிப்பா, அனுபவங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்
எங்கள் ஊரைச் சேர்ந்த கோவை ஆவி. சமீபத்தில் கோவாவில் நடந்த திரையுலக
கொண்டாட்டம் பற்றிய அவரது பதிவு இன்றைய அறிமுகப் பதிவாக! - International Film Festival of India (IFFI 2014) - A short glance
அள்ள
அள்ளக் குறையாத ஆன்மீகத் தகவல்கள் வேண்டுமெனில் நீங்கள் வர வேண்டிய இடம் “ஆலோசனை”. கண்ணனை நினை மனமே என்று சொல்லும் திருமதி பார்வதி
இராமச்சந்திரன் அவர்களின் பதிவு இன்றைய அறிமுகப் பதிவுகளில் ஒன்றாக இங்கே!
திருமதி ராஜலஷ்மி
பரமசிவம் அவர்களின் அரட்டை தளம் உண்மையிலேயே பொழுதுபோக்குக்கான பலதரப்பட்ட
விஷயங்கள் கொண்ட ஒன்று. இவர்களின் சில
பதிவுகளில் வரும் கதாபாத்திரங்களான ராசியும் விஷ்ணுவும் அலாதியானவர்கள். இன்றைய அறிமுகப் பதிவாக உறவுகளுக்கு formula உண்டா?
எனும் பதிவினை படித்துப்
பாருங்களேன்!
அரசியல், சமூகம், தொழில்நுட்பம், நகைச்சுவை, என்று
பலதரப்பட்ட விஷயங்களை அள்ளி அள்ளித் தரும் வலைத்தளம் மதுரைத் தமிழன் அவர்களின் அவர்கள் உண்மைகள் தளம். இவரின் பூரிக்கட்டை மிகவும் பிரபலம்….:) இன்றைய அறிமுகப்
பதிவாக முகப்புத்தக நகைச்சுவை பதிவு ஒன்று இங்கே.
முனைவர்
ஜம்புலிங்கம் ஐயாவின் தஞ்சைப் பெரிய கோவில் சோழர் கால ஓவியங்கள் குறித்த பகிர்வு
இன்றைய மற்றுமோர் அறிமுகப் பதிவாக இங்கே!
என்ன நண்பர்களே,
இன்றைய அறிமுகப் பதிவுகளை அவர்களது தளத்தில் படித்து, கருத்துரையும் இடலாமே –
நீங்கள் இதுவரை படிக்க வில்லையெனில்!
நாளை
மீண்டும் சந்திப்போம்,
ஆதி
வெங்கட்
திருவரங்கம்.