07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஆதி வெங்கட். Show all posts
Showing posts with label ஆதி வெங்கட். Show all posts

Sunday, January 11, 2015

தில்லி ஸ்பெஷல் – 7


சரம்மூன்று! மலர்பதினான்கு!


அன்பின் நட்புகளே,

கடந்த ஒரு வாரமாக தில்லியின் சுற்றுலாத் தலங்கள் சிலவற்றையும், பண்டிகைகளையும் பார்த்தோம். வலைச்சர வாரத்தின் கடைசி நாளான இன்று தில்லியில் இன்னும் சில பார்க்க வேண்டிய இடங்கள் உள்ளன. அவற்றை பற்றிப் பார்க்கலாம்.
 


லஷ்மி நாராயண் மந்திர் மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு, B.K.BIRLA என்பரால் அமைக்கப்பட்ட இந்தக் கோவில் பிர்லா மந்திர் என்றும் அழைக்கப்படும். தில்லியின் ”மந்திர் மார்க்” பகுதியில் அமைந்துள்ளது. மார்பிள் கற்களாலான மகாவிஷ்ணு இங்கே அருள்புரிந்து கொண்டிருக்கிறார். கரோல் பாக் அருகிலேயே அமைந்துள்ள இந்தக் கோவில் தில்லியின் சிறப்பம்சங்களுள் ஒன்று. இது எங்கள் வீட்டின் பின்புறச் சாலையில் தான் அமைந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.


தில்லி உயிரியல் பூங்கா:- (CH)சிடியா (G)கர் என்று அழைக்கப்படும் இது 214 ஏக்கர் பரப்பளவில் தில்லியின் பிரதான பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 1959ம் வருடம் அமைக்கப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலி, ஒட்டகச்சிவிங்கி காண்டாமிருகம் போன்ற ஏராளமான மிருகங்களையும், பறவைகளையும் கண்டுகளிக்கலாம். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறுவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.


JANTAR MANTAR:- ராஜா இரண்டாம் ஜெய்சிங் அவர்களால் அமைக்கப்பட்டு பாராளுமன்ற சாலையில் அமைந்துள்ள இந்த ஜந்தர் மந்தரில் கிரகங்களின் துல்லிய நிலையை கண்டறியும் யந்திரம் அமைக்கப்பட்டுள்ளன. இதே போன்று இந்தியாவில் ஜெய்ப்பூர், மதுரா, வாரணாசி, உஜ்ஜைன் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படும்.


அக்ஷர்தாம் கோவில்:-  உலகிலேயே மிகப்பெரிய ஹிந்து கோவில் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 86,342 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலை நீங்கள் அவசியம் ஒருமுறையாவது பார்க்கத் தான் வேண்டும்.
 


இது போக தில்லியில் பார்க்க வேண்டியவை என்றால் கரோல் பாக், கன்னாட் பிளேஸ், சாந்தினி செளக் போன்ற ஷாப்பிங் ஏரியாக்கள். 


கரோல் பாகில் மிகப்பெரிய ஆஞ்சநேயர் சிலை உள்ளது. காலடியில் இருக்கும் ராட்சதனின் வாயில் நுழைந்தால் உள்ளே கோவில் இருக்கும். மேலே மெட்ரோவில் பயணித்துக் கொண்டே ஆஞ்சநேயரைப் பார்க்கலாம். இது போக தலைவர்களின் சமாதிகள், அருங்காட்சியகம் போன்றவை உள்ளன. 

தில்லி மெட்ரோவில் பயணித்தால் அந்த அனுபவமே அருமையாக இருக்கும். வருடங்கள் பல ஆனப் பின்னும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.


வர்த்தக கண்காட்சி:- வருடந்தோறும் தில்லியின் பிரகதி மைதான் என்ற இடத்தில் குழந்தைகள் தினமான நவம்பர் 14 முதல் 27 வரை டைபெறும் இந்த கண்காட்சியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள்.

பட்டம் விடும் திருவிழா:- ஆகஸ்டு மாதம் வந்துவிட்டாலே எல்லோரும் பட்டம் விட ஆரம்பித்து விடுவார்கள். சுதந்திர தினத்தன்று பட்டம் விடும் போட்டியும் நடைபெறும். பல லட்ச ரூபாய் வரை பரிசுகள் அறிவிக்கப்படும்.


உணவுகள்:- இங்கு பால் தரமாக இருக்கும். அதனால் பாலில் செய்யப்பட்ட பெரும்பாலான இனிப்புகளே இங்கு காணப்படும். தோடா, பேடா, ரசகுல்லா, ரசமலாய், காஜூ கத்லி போன்று ஏராளமான வகை உண்டு.

தஹி பல்லே பாப்டி, கோல் கப்பா, டிக்கி, பனீர் பக்கோடா என்று நொறுக்குத் தீனி வகைகளும் இங்கு அதிகம்…


கோடைக் காலங்களில் அதிகபட்ச வெய்யிலும், குளிர்காலங்களில் அதிகபட்ச குளிரும் கொண்ட ஊர் இது…:) அந்தந்த வெப்பநிலைக்கு ஏற்ப காய்கறிகளும், பழங்களும், துணிமணிகளும் கொட்டிக் கிடக்கும் இங்கு. பல மாநிலத்தவர்கள் வசிக்கும் இடமாதலால் பலவிதமான மொழிகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆக மொத்தம் நல்ல அனுபவிக்கத் தெரிந்தவர்கள் இங்கு வசிக்கலாம்….:)

சரி! வலைச்சரத்தின் இறுதிநாளான இன்று சில அறிமுகங்களைப் பார்க்கலாம்.

எண்ணங்கள் தளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகிர்வுகளை தந்திருக்கும் கீதா மாமி மார்கழியின் சிறப்பான திருப்பாவைக் கோலங்களை பகிர்ந்து வருகிறார் பாருங்கள்.

திருச்சியைச் சேர்ந்த தமிழ் இளங்கோ ஐயாவின் தளமான எனது எண்ணங்களில் தங்கள் வீட்டுக்கு விருந்தாளிகளாக வந்துள்ள பூனைக்குட்டிகளையும், அதற்கு நண்பனாக மாறியுள்ள நாய்க்குட்டியை பற்றியும் இங்கே பகிர்ந்து இருக்கிறார்.

கற்றலும் கேட்டலும் தளத்தில் தோழி ராஜி கணினியாயணம் பற்றி எழுதி இருக்கிறார் பாருங்கள். அழகான எழுத்துக்கு சொந்தக்காரரான இவர் தொடர்ந்து பல கதைகளை தர வேண்டும் என்பது என் விருப்பம்.

கீதமஞ்சரி அவர்களின் அழகுத் தமிழ், வாசிக்க எப்போதுமே இனிமையாக இருக்கும். இவர் உறவுகளின் உன்னதத்தை எடுத்துச் சொல்லி இருக்கிறார் பாருங்கள். சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆஸ்திரேலிய காடுறை கதைகளின் மொழிபெயர்ப்பாக ”என்றாவது ஒரு நாள்” நூல் வெளியாகி உள்ளது.

ஸ்கூல் பையன் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் சரவணன் அவர்களின் காதல் போயின் சிறுகதையை வாசித்துப் பாருங்களேன்.

இரண்டு வாரங்களாக தொடர்ந்து ஆசிரியப் பணியாற்றி என்னால் முடிந்த அளவு தரமான பதிவுகளாக தந்திருக்கிறேன் என்ற நம்பிக்கையில் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். ஆதரவு தந்த அன்புள்ளங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். வாய்ப்பளித்த சீனா ஐயாவுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். எனக்கு பெரிதும் உதவியாகவும், உறுதுணையாகவும் இருந்த என்னவருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். தொடர்ந்து எனது பக்கமான கோவை2தில்லியில் சந்திப்போம் நட்புகளே…. நன்றி.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.


மேலும் வாசிக்க...

Saturday, January 10, 2015

தில்லி ஸ்பெஷல் – 6



சரம்மூன்று! மலர்பதிமூன்று!


நேற்று வரை சுற்றுலா செல்லத் தகுந்த இடங்களைப் பார்த்தோமல்லவா! இன்று தில்லியில் கொண்டாடப்படும் பண்டிகைகள் சிலவற்றை பற்றிப் பார்க்கலாம். பல மாநிலத்தவர்கள் வசிப்பதால் அவரவர்களின் கலாச்சாரப்படி குடும்பத்தில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டாலும், பொதுவாக வட இந்தியர்கள் தில்லியில் கொண்டாடும் பண்டிகைகள் சில


ஹோலி:-ஹோலி    என்றுவட இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகை, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் ஆரம்பிக்கப் போகிறது என்ற அறிவிப்புடன் பொதுவாக மார்ச் மாதத்தில் வரும். நரகாசுரனை  கொன்ற நாளை எப்படி தீபாவளியாக கொண்டாடுகிறோமோ அதே மாதிரி ஹோலிகாஎன்ற அரக்கியை வதம் செய்த நாளைத்தான் அந்த அரக்கியின் பெயரிலேயே பண்டிகையாக சந்தோஷமாக கொண்டாடுகிறார்கள். .  . .     

இப்போதும் ஹோலிக்கு முதல் நாளான சோட்டி ஹோலி அன்று மாலை முச்சந்தியில் காய்ந்த சருகுகள், விராட்டி, விறகுகள் எல்லாவற்றையும் கோபுரமாக அமைத்து நூலால் கட்டி வெளியில் விளக்குகள் ஏற்றி வைத்து வணங்குவார்கள்.  பின்பு அதை எரித்து விடுவார்கள். சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக வண்ணங்களை ஒருவர் மீது மற்றவர் பூசி மகிழ்வர்.



ரக்ஷா பந்தன்:- ராக்கிப் பண்டிகை என்று சொல்லக்கூடிய ரக்ஷா பந்தன் சகோதரப் பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆவணி மாத பெளர்ணமியில் வரும் இந்த பண்டிகையன்று ஒரு பெண்ணானவள் தன்னுடைய சகோதரர்களுக்கோ அல்லது சகோதரனாக நினைப்பவருக்கோ மஞ்சள் கயிறை கட்டி விடுவர். அந்த கயிறை கட்டிக் கொண்ட ஆணோ அந்த பெண்ணிற்கு பாதுகாப்பாகவும், உறுதுணையாகவும் இருப்பேன் என்று உறுதி செய்து கொள்கிறான். ராக்கி கட்டி விட்ட சகோதரிக்கு பரிசுப்பொருளும் பணமும் தருவர்.



KARVA CHAUTH:- கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமியின் அடுத்த நான்காம் நாள் இந்த பண்டிகை வட இந்தியப் பெண்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தன் கணவனின் நீண்ட ஆயுளுக்காகவும், நலனுக்காகவும் காலை சூரியோதயம் முதல் மாலை சந்திரோயதம் வரை விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இரவு சந்திரனை சல்லடை வழியே பார்த்து விட்டு கணவனிடம் ஆசி பெற்ற பின்னரே விரதத்தை முடித்து உணவு உண்பர். எனக்கு பிடித்த பாடல் ஒன்று உங்களுக்காக.....




இது ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண்களால் KARVA CHAUTH எனவும், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண்களால் ”சத்” பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை ஒட்டி கண்ணாடி வளையல்கள் ரக வாரியாக கொட்டிக் கிடக்கும். ஒரு டஜன் 70லிருந்து 7000 வரை கூட விற்கப்படும்….:)


ராம் லீலா:- நவராத்திரியின் இறுதி நாளான விஜய தசமியன்று தீமையை நன்மை வெல்வதாக வட மாநிலங்களில் ராம் லீலா எனப்படுகிற ராவண வதம் சிறப்பாக கொண்டாடப்படும். ஆங்காங்கே மைதானத்தில் பட்டாசுகளால் ராவணனின் பொம்மை செய்யப்பட்டு அது எரிக்கப்படும்


வருடந்தோறும் இதே நாளன்று தில்லியில் ராம் லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில்  குடியரசுத் தலைவர், பிரதம மந்திரி ஆகியோர் கையால் அம்பு எய்யப்பட்டு ராவண வதம் நடைபெறும். ராவணனுடன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரும் ஒருவர் பின் ஒருவராக எரிக்கப்படுவர். வானிலும் வாண வேடிக்கை இடம்பெறும்.


ஹோலிப்பண்டிகை ஸ்பெஷல்:- இந்த பண்டிகையின் சிறப்பாக குஜியாஎன்ற இனிப்பை எல்லோரும் சாப்பிடுவார்கள். . நம்ம ஊர் சோமாசி மாதிரி தான். உள்ளே பூரணமாக பால்கோவாவுடன் முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, சோம்பு முதலியவற்றை சேர்த்திருப்பார்கள்


அதே போல் பாங்க்என்ற ஒருவகை கீரையை பாலிலோ, அல்லது பக்கோடா போன்றோ ஏதோ ஒரு வகையில் அன்றைய தினம் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்தக் கீரையின் சிறப்பு என்னவென்றால் அதைச்  சாப்பிட்டவுடன் ஒன்று சிரித்துக் கொண்டே இருப்போம், அல்லது அழுது கொண்டே இருப்போம்  இதைப் பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்


அதே போல் பாப்பட்என்று சொல்லப்படும் மசாலா அப்பளத்தை சுட்டும் சாப்பிடுவார்கள்.


SHIKANJVI:- கோடைக் காலங்களில் வட மாநிலங்களில் அலுமினிய சம்படம் போன்று வண்டியில் வைத்துக் கொண்டு சிலர் காணப்படுவர். அவர்கள் தயாரித்து தரும் பானத்திற்கு பெயர் தான் SHIKANJVI. 

எலுமிச்சை சாறில், கருப்பு உப்பு, இஞ்சிச் சாறு, புதினா போன்றவை கலந்து ஐஸ் போட்டுத் தருவது தான் இது. அடிக்கிற வெய்யிலுக்கு புத்துணர்வை தரக்கூடியது.

படங்கள் உதவி - கூகிள்

ஜல்ஜீரா:- இதுவும் கோடையில் பருகப்படும் பானம். எலுமிச்சையுடன் சோம்பு, மிளகு, இஞ்சி, கறுப்பு உப்பு போன்றவை கலந்து தரப்படும்.

என்ன நட்புகளே! பண்டிகைகளையும், உணவுகளையும் தெரிந்து கொண்ட பிறகு இன்றைய அறிமுகங்கள் யாரென்று பார்க்கலாமா?

சொல்லுகிறேன் என்ற தன்னுடைய தளத்தில் மூத்த பதிவரான காமாட்சி அம்மா தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களையும், சமையலையும் கதையாக சொல்லுகிறார். இவரது மாலாடு ரெசிபியை பார்த்து செய்து பாருங்கள். அருமையாக வரும். நான் தீபாவளிக்கு இதைத் தான் செய்தேன்.

ரஞ்சனி நாராயணன் என்று தன்னுடைய பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் ரஞ்சனிம்மா ரசனையான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் அரியலூர் அடுக்கு தோசையை வாசித்திருக்கிறீர்களா?

துளசிதளத்தின் உரிமையாளர் துளசி டீச்சரை தெரியாதவங்க பதிவுலகில் மிகவும் குறைவு தான். நியூசிலாந்தில் வசிக்கும் இவர் உலகம் சுற்றுபவர். சமீபத்தில் இந்தியாவுக்கு வந்ததில் நான்கு வாரங்களில் மூன்று மாநிலங்களைச் சுற்றியுள்ளார். நாமும் அவரோடு சுற்றுவோமா? முதல் பகுதி இங்கே

நாச்சியார் தளத்தில் வல்லிம்மா இந்த மார்கழியின் சிறப்பாய் ஆண்டாள் அருளிய பாவைப் பாடல்களை அதன் அர்த்தத்துடன் பகிர்ந்து வருகிறார். ஒரு பாடல் உங்களுக்காக இங்கே

பாட்டி சொல்லும் கதைகள் என்ற தன்னுடைய தளத்தில் சிறுவர்களுக்கான நீதிக்கதைகளை பகிர்ந்து கொண்டு வருகிறார் ருக்மணி சேஷசாயி அம்மா. தற்போது 1961ல் கலைமகளில் வெளிவந்த தியாகச்சுடர் என்ற சரித்திர கதையொன்றை தொடராக பகிரத் துவங்கியுள்ளார்.

இந்த ஐவரில் காமாட்சி அம்மாவைத் தவிர மீதி நால்வரையும் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

நாளை நிஜமாகவே வலைச்சரத்திலிருந்து விடைபெறும் நாளாதலால் தில்லியின் வேறு சில விவரங்களையும், அறிமுகங்களையும் பார்க்கலாம்....:)

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்

திருவரங்கம்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது