07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, September 13, 2015

வலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்



கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை
உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை
அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே

ஆண்டாள்.. திருப்பாணாழ்வார் ஐக்கியமான மூலஸ்தானம்.. 108 திருப்பதிகளில் முதன்மை..

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு....

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபறி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருளுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ர உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

கொடுக்கப்பட்டுள்ள 16ல் 1 மற்றும் 6 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பூலோக வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.


இவரைப் பேசும் அரங்கன் என்றே அழைப்பார்கள்.  பக்தர்களின் வேண்டுதல்களைச் செவி மடுத்து நிறைவேற்றித் தரும் நம்பெருமாள் மிக சௌலப்யமும் (எளிமையும்) கூட.

அந்த நாளைய கதை இது.  ஆசார்யர்களில் ஒருவரான நம்பிள்ளையின் சொற்பொழிவு ரங்க மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. நம்பிள்ளை கோஷ்டியோ நம்பெருமாள் கோஷ்டியோ என்று சிலாகிப்பார்களாம். பெருமாளுக்குப் பின் செல்லும் பக்தர்கள் கூட்டம் போலவே இவர் பின்னும் அந்தளவுக்கு செல்வார்களாம்.

அத்தனை பேர் கவனமும் உபன்யாசத்தில். மூலஸ்தானத்தில் யாருமில்லை. திருவிளக்குத் தூண்டுவான் (விளக்கு அணையாமல் நெய் ஊற்றிப் பார்த்துக் கொள்பவர்) மட்டுமே. அவரும் பேச்சில் மயங்கி சந்நிதியை விட்டு விலகி வந்து எட்டிப்பார்த்து கேட்டு ரசிக்கும் நேரம்..
யாரோ அவர் முதுகருகில் நின்று நம்பிள்ளையின் பேச்சைக் கேட்பதாகத் தெரிந்தது. திரும்பிப் பார்த்தால் .. அரங்கன் ! தன் அர்ச்சை நிலையை விட்டு எழுந்து வந்து கவனித்துக் கொண்டிருந்தாராம்.
திருவிளக்குத் தூண்டுவான் கைக் கோலால் தட்டி சொன்னாராம். “போய்ப் படும்”
என்ன ஒரு சுதந்திரம்.. அவன் அடியவருக்குக் கூட !

இனி இன்றைய பதிவர்கள்..



பூ வனம் ஜீவியின் வலைப்பூ. எழுத்தும் வாசிப்பும் என்பது இரு மனம் கலக்கும் வித்தைக்களம் என்று பறை சாற்றும் இவரது எழுத்துக்கள் ரசனைக்குரியவை.
இரு கவிஞர்கள்.. இரு நினைவுகள் பதிவில் அவர் விவரிக்கும் சுவாரசியமான நிகழ்வைப் பாருங்களேன்..

"எல்லோருக்கும் தெரிந்த கண்ணதாசன்கள் இருவர்.  ஒருவர் அரசியல் கண்ணதாசன்; மற்றொருவர் இலக்கிய கண்ணதாசன்.  ஏனோ அரசியல் கண்ணதாசனை விட இலக்கிய கண்ணதாசனைத் தான் எனக்கு மிகவும்  பிடிக்கும்.  அதனால் இலக்கிய கண்ணதாசன் என்று கையெழுத்திட்டுத் தர வேண்டுகிறேன்.." மடமடவென்று மனசில் மனனம் செய்து வைத்திருந்ததை கொஞ்சம் கூடத் தயங்காமல் சொல்லி விட்டேன்.  என்ன சொல்லி விடுவாரோ என்று லேசான உதறலும் இருந்தது.

"அப்படியா?" என்று கண்ணதாசன்  புன்முறுவல் பூத்ததே அழகாக இருந்தது.  காரின் முன்பக்கம் நகர்ந்து கார் பானெட்டின் மீது ஆட்டோகிராப்  புத்தகத்தை வைத்து  'இலக்கிய கண்ணதாசன்'என்று தெளிவாக எழுதி அதற்கு கீழே கையெழுத்திட்டார்.   முகம் சுளிக்காமல் நான் விரும்பியதை அவர் நிறைவேற்றிக்  கொடுத்தது மனசுக்கு  சந்தோஷமாக இருந்தது.  என் தோளில்  லேசாகக் கைவைத்தபடி ஆட்டோகிராப் புத்தகத்தையும் பேனாவையும் என்னிடம் தந்தபடியே, "ஒண்ணுதெரியுமா? ரெண்டு கண்ணதாசன்களுமே பொய்" என்று அவர் புன்முறுவலுடன்  சொன்ன பொழுது திகைப்பாக  இருந்தது.



கீத மஞ்சரி அவர்களின் கழங்காடு கல்லெனவே பாடலைப் பாருங்களேன்.. தமிழின் இனிமை என்ன அழகு.. மொழிபெயர்ப்பிலும் வல்லவரான இவரது தளம் சுவாரசியமான பல பதிவுகளைக் கொண்டது. பதிவர்களில் பிரபலம் இவர்.. அறிமுகப்படுத்தவில்லை.. படித்து ஆனந்தித்தைப் பகிர்கிறேன்..

சிறுநதியொன்றின் சன்னப் பிரவாகத்தில்
என் விருப்பமின்றியே கொண்டு சேர்த்தது காலம். 
கரடுமுரடாய்க் கிடந்து முரண்டுபிடித்த என்னை
வாரியணைத்தும் வருடிக்கொடுத்தும்
வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது ஆறு.

நிலைகொண்டால் பாசத்துக்காளாகி பாழாவாய்,
ஓடிக்கொண்டிருந்தால் மட்டுமே உருப்படுவாய்
என்று செவியோரம் போதித்தபடி
ஓடிக்கொண்டிருக்கும் அதன் கூடவே
உருண்டோடி உருப்பெறுகிறேன் நான்.
ஈரிரண்டு எடுக்கவே இலந்தை பழுக்கவேயென்று
கழங்காடும் சிறுமியரின் கையிலாடிமுடித்து


பேருவகையோடு மாளுவேன் ஒருநாள்.



அடுத்த பதிவர்..  ஊஞ்சல்  கலையரசி அவர்கள்.. சமூகப் பிரக்ஞையுடன் பதிவிடும் இவரது பதிவுகள் எல்லா வகை ரசனைகளையும் பகிர்ந்து தருபவை.

காகத்துக்கும், குருவிக்கும் மோர் சாதத்தில் உப்புப் போட்டுப் பிசைந்து வைக்கிற பழக்கம் எனக்கு எப்படி ஏற்பட்டது என நினைவில்லை.  மனிதரைப் போல பறவைகளுக்கும், உணவில் உப்பிருந்தால் தான் சுவைக்கும் எனத் தவறாக நினைத்து விட்டேன்.  பறவைகளுக்கு உப்பு கூடவே கூடாது என்கிற பதிவைப் படித்ததும் எனக்கும் ஒரு திடுக்கிடல். இத்தனை நாள் அறியாத தகவல் இது. ஆனால் என் அம்மா.. மற்றும் பலரும் சமையல் ஆனதும் சாதம்.. துளி பருப்பு வைத்து காக்கைகளுக்கு உணவிட்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். நீத்தார் கடன் போதும் வெறும் சாதம் மட்டுமே வைப்பார்கள். உப்பு சேர்ப்பதில்லை. ஆனால் உப்பு பறவைகளுக்கு ஆகாது என்பது மனதில் பதியவே இல்லை.
பல சுவையான பதிவுகளின் சொந்தக்காரர் இவரும்.


இனியாவின் வலைப்பூ இது. தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. 

பலாப்பழத்தை வெட்டாமலே அதன் சுளைகளை அறிய பழம்பாடல் ஒன்று பகிர்ந்திருக்கிறார்.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் பதிவில்.

'பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !

வாழ்த்துகள் இனியா !

இன்னும் பல பதிவர்கள்.. பலர் வெளிச்சத்தில்.. சிலர் இன்னும் பரவலாய் அறியப்படாமல்.  இந்த முறை வலைச்சர ஆசிரியராய்த் தேர்வானபோது அறியப்படாத பதிவர்களைப் பற்றியே அதிகம் எழுத எண்ணினேன்.

நான் வலைப்பூவை விட்டு ஒதுங்கி முகநூலில் மூழ்கிப் போனதால் டச் விட்டுப் போனது. இன்னொன்று எனக்குப் போதிய அவகாசமும் இல்லை. இது என் குறையே. அதனால் என் முழு திருப்திக்கு என்னால் இந்த ஆசிரியர் பதவிக்கு நியாயம் சேர்க்க முடியவில்லை. எனக்குப் பின் வரும் வலைச்சர ஆசிரியர்கள் இந்த என் மனக் குறையை ஈடு கட்டுவார்கள் என்று நம்புகிறேன்.

இனி இன்றைய முகநூல் கவிதை..


Meera Blossom என்கிற பெயரில் எழுதி வரும் மீரா லக்ஷ்மன்..

பச்சை கோடுகள்
இலைகளென்றும்
சிவப்பாய் இருப்பவை
பூக்களென்றும்
மஞ்சளெல்லாம்
பழங்களாகவும்
காய்கள் எங்கே என்று
கேட்ட என்னிடம்
எல்லாம் பழமாகிட்டு அத்தம்மா
என்றாள் குட்டிமீரா.
கிறுக்கிய சுவரோவியம்
அவளை போலவே அழகாய் இருக்க...
அழகுடா அம்முவென
தலைகோதி முத்தமிட்டேன்.
பாப்பா மரம் நல்லாக்கு என
மழலையாய் கொஞ்சி
இரட்டிப்பாய் இட்ட முத்தம்
கன்னத்தில்
சுவரோவியத்தை மிஞ்சும்
எழிலோவியமாய்!!


வலைச்சரம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.
இந்த ஒரு வாரம் என்னோடு உடனிருந்த உங்களுக்கும்.. அன்பு நன்றி. !



28 comments:

  1. அனைவருக்கும் வாழ்த்துகள். ஶ்ரீரங்கம் குறித்த ஏழு செய்திகளுக்கும் நன்றி. தேவைப்படும்போது அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாமா, உங்கள் அனுமதியுடன்?

    ReplyDelete
    Replies
    1. ஏழுமலையான் கூடவா காபிரைட் உரிமை கொண்டாடுவார் என நினைக்கிறீர்கள்:?

      அரங்கனின் அருள் அனந்தம் . அற்புதம்.
      ஆனந்தம்.அவனது திருவடி அடைந்தார் அனைவருக்குமே அவன்
      சொந்தம்.

      சுப்பு தாத்தா.
      www.subbuthathacomments.blogspot.com

      Delete
    2. அவை எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்தவைதான். தாராளமாகப் பயன்படுத்தலாம்.

      Delete
    3. வாட் ஸ் அப் ? !!!!

      அப், டௌன் , ஈஸ்ட் வெஸ்ட் நார்த், சௌத், எங்கேயுமே
      பெருமாள் தானே !!

      சுப்பு தாத்தா.

      Delete
  2. வணக்கம்!! இந்த வாரம் முழுவதும் ஸ்ரீங்கத்தை பற்றி அதிக தகவல் தொரிந்துகொண்டமைக்கும்! சிறப்பான பதிவர்களை அறிமுகபடுத்தியமைக்கும்! அழகாக வழங்கி சிறப்பித்த தங்களுக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்!!!!

    ReplyDelete
    Replies
    1. முதலில் இருந்து எனக்குத் துணையாய் இருக்கும் உங்கள் பேரன்பிற்கு நன்றி பூபகீதன் !

      Delete
  3. அற்புதமான திரு அரங்க சேவை!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. வாழும் பூமியின் பெருமையைப் பகிர எனக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த வலைச்சரத்திற்குத்தான் முதல் நன்றி

      Delete
  4. ரிஷபன் சார்! தன்யனானேன். ஆயிரத்திற்கு மேலாக தடம் பதித்தவரின் அன்புச் சீராட்டல்.
    வைகோ சார் தெரியப்படுத்தவில்லை என்றால் ஒரு நன்றி சொல்லக்கூட வாய்ப்பில்லாது போயிருக்கும்.
    ரொம்ப ரொம்ப நன்றி சார்!

    ReplyDelete
  5. ஆஹா அனைவரும் நான் தொடரும் பதிவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள், தங்கள் பணிக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. அரங்கனின் சிறப்புகளுக்கு நன்றி ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. ஹைய்யோ!!! ஏழு ஏழாய் எத்தனை ஏழு! அனைத்தும் அருமையான தகவல் பொக்கிஷங்கள்!

    நன்றிகள் ஏழுமுறை சொல்லிக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

      Delete
  8. ஆஹா! இன்ப அதிர்ச்சி! நிலாச்சாரலில் ரிஷபன் சார் கதைகள் பலவற்றை நான் வாசித்திருக்கிறேன். வலைச்சர முதல் நாள் சுய அறிமுகத்தில் அவர் சொன்ன குஞ்சம்மா போய் வாசித்துச் சிலாகித்தேன். ஆயிரம் கதைகளுக்கு மேல் எழுதிய பிரபல எழுத்தாளர் மூலம் நான் அறிமுகமாவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிகவும் நன்றி ரிஷபன் சார்! இதை எனக்குத் தெரியப்படுத்திய கோபு சாருக்கும் மனம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பு நிறை வாழ்த்துகள்

      Delete
  9. மிக அருமையான பதிவுகள் அறிமுகங்கள். நன்றி சொல்லும்போது எவ்வளவு எளிமையாக உங்களைக் காட்டிக் கொண்டீர்கள் ரிஷபன் ஜி. இந்த ஏழு நாட்களும் அரங்கனோடு
    இருந்த உணர்வு.
    அவன் எப்போதும் என்னுள்ளே இருக்கிறான் என்று மறந்து போகிறேன். எட்டிப் பார்த்தானோ பிரவசனத்தை அருமை அருமை.
    ஏழின் மகிமை இன்று உணர்ந்தேன். மிக மிக நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. சிரிரங்கம் 7 பற்றிய தகவல் அருமை தேவைப்படும் போது உங்களின் பெயரோடு பயன்படுத்துக்கின்றேன். இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் சார்! மீண்டும் சந்திப்போம் !

    ReplyDelete
    Replies
    1. தனிமரம் அன்பு நன்றி

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஏழு ஏழாய் எத்தனை தகவல்கள்..... உங்கள் மூலம் நானும் சிலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி ரிஷபன் ஜி!......

    இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  13. தாமத வருகைக்கு வருந்துகிறேன். எனக்குப் பிடித்த, நான் மிகவும் வியந்து ரசிக்கும் எழுத்தாளரான தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது ரிஷபன் சார். கலையரசி அக்கா குறிப்பிடுவது போல் நிலாச்சாரல் மூலம்தான் தங்கள் அறிமுகம் கிடைத்தது. சின்னச்சின்ன வாழ்வியல் நுணுக்கங்களையும் சிறுகதைகளாக்கி மனம் நெகிழச்செய்யும் தங்கள் எழுத்தும் ரசனையான கவித்துளிகளும் எப்போதும் என்னை வியக்கவைப்பவை. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்று என்னோடு அடையாளங்காட்டப்பட்டுள்ள அனைத்துப் பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள். தகவல் தெரிவித்த கோபு சாருக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. மகிழ்வும் நன்றியும்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது