27/10/2014 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்:

சதங்கா

வழக்கம் போல்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!

பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 30, 2014

கணிதம் எனும் அமைச்சன்


Ramanujan by me :)

கணிதம் என்றாலே, 'கூட்டிக் கழிச்சுப் பார்த்தா கணக்கு சரியா வரும்' என்ற பிரபல திரைப்பட வசனம் நம்மில் பலருக்கு ஞாபகத்திற்கு வரலாம்!  உண்மையும் கூட.  'எங்கிருந்து வந்தோம், எங்கே போகிறோம்' என்று சித்தாந்தத்தை சிந்தித்தால் இது புரியுமோ என்னவோ.  சரி, இன்று நாம் பார்க்கவிருப்பது நமது பதிவர்களின் கணிதம் குறித்த பார்வை.  வழக்கம் போல ஒரு சிறிய உரையுடன் ...

நல்லா கணக்கு பண்றவங்கள (தப்பர்த்தம் பண்ணக் கூடாது :)) நமது ராஜாக்கள் அமைச்சர்களாக அமைத்துக் கொள்வார்களாம்.  சோழர்கள் வேளாண் வல்லுநர்களையும், பாண்டியர்கள் வணிகர்களையும் அமைச்சர்களாகக் கொண்டிருந்தார்கள் என்பது வரலாறறிந்த உண்மை!

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற சொற்றொடரைக் கேட்கையில் கணியன் பூங்குன்றன் நினைவில் வருகிறார்.  இவர் பெயரில் இருக்கும் 'கணியன்' என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா?

'The Man Who Knew Infinity' என்ற சொற்றொடரைத் தட்டினால், ராமானுஜரை அள்ளி வழங்குகிறது இணையம்.  'கொடிது கொடிது இளமையில் வறுமை'.  அதுவும் தன்னிடம் ஒரு சிறப்பான சக்தி இருந்தும், பொருளாதார சிக்கலினால், பெரிதும் ஆளாக முடியாமல் எத்தனையோ மேதாவிகள் தவித்திருக்கிறார்கள்.  அவர்களில் ராமானுஜனும் ஒருவர் என்றால் மிகையாகாது!  ஆனால், அவர் செய்த புண்ணியம், நண்பர்களும், ஆசிரியர்களும் அவருக்கு உதவி, உலகம் சுற்ற வைத்து, பின்னாளில் உலகமே போற்றியது.  இருப்பினும், இளமையின் வறுமை, உடல் ரீதியில் தன் வேலையைக் காட்டி, இளம் வயதிலேயே அவர் மரணிக்க நேர்ந்தது மிகப் பெரிய கொடுமை.  கணித மேதை ராமானுஜனுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்!

கணித மேதை ராமானுஜன் - ஜெயபாரதன் அவர்களின் தளத்திலிருந்து 2009ல் எழுதியதென்றாலும், இன்று வரை மறுமொழிகள் பெற்ற/பெறுகின்ற‌ பதிவு.

யூக்ளிட் (கணிதவியலின் தந்தை) -  க்ரேக்கர்களின் கணிதம் பற்றி பல நுண்ணிய தகவல்களுடன் மாணவன் பதிந்திருக்கிறார்.

கணித மேதை காஸ் - ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1 இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின் கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது.  கல்வித்தேடல் தளத்திலிருந்து!

கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயண பிள்ளை - செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  எனக்கு இப்படி ஒரு ஆசிரியர் கிடைக்கவில்லையே என்று நம்மை எண்ண வைக்கும் பதிவு.

கணித மேதைகள் - சோமசுந்தரம் ஹரிஹரன் அவர்கள் தளத்திலிருந்து,  மூன்று கணித மேதகள் பற்றி சிறு குறிப்புகள் கொண்ட பதிவு.  மேதைகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கவிதை ... கணிதம் - தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்கள் தளத்திலிருந்து ஒரு குட்டிக் கவிதை.  ரெண்டே வரிகளில், 'அட சூப்பர்' என சொல்ல வைக்கிறது!

வேத கணிதம் - தே.அன்பழகன் அவர்கள் நடத்திவரும் தளத்திலிருந்து.  தளம் முழுதும் கணிதம்.  எண்களின் மகத்துவம், கிழமையை அறிதல், கணிதப் புதிர்கள் என ஏராளம் உள.  அவசியம் அனைவரும் பார்க்க/படிக்க வேண்டிய பதிவுகள்.

கணக்கதிகாரம்
15ம் நூற்றாண்டில் கொறுக்கையூரைச் சேர்ந்த காரி என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்.  தமிழும் கணிதமும் கலந்து செய்த கலவை இந்நூல்.  வெண்பா, நூற்பா, கட்டளைக்கலித்துறை விருத்தம் ஆகிய பாடல் வகைகளால் ஆன நூல்.  இதன் பிரதி Project Madurai தளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்.  கணக்கதிகாரம் பற்றி நம் பதிவர்களின் பதிவுகள் சில.

http://peramuwin.blogspot.com/2011/04/blog-post_28.html
http://kuzhalinnisai.blogspot.com/2014/10/blog-post_96.html
http://venkatesh1586.blogspot.com/2012/04/blog-post_5533.html
http://balasailam.blogspot.com/2012/12/blog-post_17.html

இன்றைக்கு கணக்குப் போட்டாச்சு, நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!!!

மேலும் வாசிக்க...

Wednesday, October 29, 2014

நகைச்சுவை எனும் அரசன்

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்! - பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையினால், ஐயோ!
பருந்துஎடுத்துப் போகிறதே பார்! ..
‍ - கவி காளமேகம்
(தில்லைக் கூத்தரசர் திருவிழாவைப் பார்த்து இகழ்வதுபோல் புகழ்ந்து பாடியது)

சிவன் கோவில் மடப்பள்ளியில் பணி.  மடப்பள்ளியில் தினம் நெய்தோசையும், பொங்கலுமாக உண்டு, ஒருநாள் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருக்கையில், தேவி வந்து காளமேகத்தின் நாவில் எழுதி, நீ பெரிய புலவனாவாய் என்றராம்.  இவ்வாறு வாரியார் அவர்கள், கவி காளமேகம் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார் தனது ஒரு உரையில்!


நகைச்சுவை அரசன், '23ம் புலிகேசில வர்ற ராஜா?' மாதிரியா என்று கேட்டீர்கள் என்றால், இருக்கலாம்.  தவறில்லை. ஆனால், நாடே சிரிப்பா சிரிச்சுப் போயிடும் :)

'வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்' என்பது நாம் நன்கு அறிந்த பழமொழி.  சிரிப்பதற்கு, தற்போதைய அவசர யுகத்தில் இடம் இருக்கிறதா ?  நகைச்சுவை என்பது எந்த நிலையில் இருக்கிறது?  முதலில் நமக்கு எங்கே நேரம்?  காலையில் எழுந்ததில் இருந்து ஓடு ஓடு ஓடு என்றிருக்க உட்கார்ந்து யோசிக்க, சிரிக்க எல்லாம் எங்கே நேரம்?  இப்படினு நாம நிறைய பேர் இருக்க, நகைச்சுவையாளர்கள் இல்லாமலில்லை இன்றும்.  ஒரு குழுவிலோ, திருமண நிகழ்விலோ, திருவிழாவிலோ கூடினால், ஒவ்வொரு குழுமத்திற்கு ஒன்றிரண்டு நகைச்சுவையாளர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.

நம்மில் வெகு சிலருக்கு நகைச்சுவை இயல்பாகவே வரும்.  சிலருக்கு, பயிற்சியின் மூலம் கைவரப் பெறும்.  பலருக்கு, சுட்டுப் போட்டாலும் வராது.  நானெல்லாம் கடைசி ரகம்.  பள்ளி காலங்களில் 'வெண்மதி' கண்ணன், கல்லூரி காலங்களில் 'டொம்பா' கண்ணன், வேலையிடத்தில் 'பான்ட்' ரமேஷ், 'கலக்கல்' ஜெய் என்று வெகு சிலர்.  இன்றும் நகைச்சுவை எனும் போது இவர்களை நினைக்காமல் நான் இருந்ததில்லை.

துளசி தளம்: நகைச்சுவை சிலருக்கு சரளமா வரும் என்றேனல்லவா. அதில் முக்கியமாக நம் நினைவிற்கு வருபவர், மூத்த பதிவர் (வயசுல அல்ல, எழுத்துல! அப்புறம் அங்குசத்தத் தூக்கிட்டு அடிக்கவந்துறப் போறாங்க‌!) துளசி டீச்சர்.  அன்றைக்கு எப்படி துள்ளலா நகைச்சுவையோடு எழுதினாரோ இன்றும் அப்படியே.  இவர் பற்றி அறிமுகம் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  அவருடைய நகைச்சுவை உணர்விர்க்காக மீண்டும் இங்கே!  ஒரு பதிவு என்றெல்லாம் சொல்லி இவரை நிறுத்த முடியாது. அதனால் அவர்கள‌து தளத்திற்கே சுட்டி.

The Think Tank: ஃப்லோல அடுத்து நம்ம டுப்புக்கு அவர்கள்.  இவரையும் அறியாதார் யாரும் இருக்க முடியாது.  என்னே இவரது நகையுணர்வு எழுத்து நடை!

இட்லி வடை: அடுத்து வருவது இட்லிவடை.  பதிவுகளில் கொஞ்சம் நகைச்சுவை, ஆனால் ப்ரொஃபைல் பார்த்தால், படித்தால் சிரித்துக்கொண்டே இருக்கலாம்

தானைத் தலைவி அவர்கள்.  புரட்சித் தலைவி இல்ல போல :)  அருமையாக வீட்டு உறவுகளுக்குள் நடக்கும் நையாண்டிகளை அழகாக எழுத்தில் கொண்டுவருகிறார்.

மீனாவுடன் மிக்சர்: ‍ ரிச்மண்டில் இருந்து மீனா சங்கரன்.  தொலைந்த சென்னையாக இருக்கட்டும், பக்கத்து வீட்டு மாமி ஆகட்டும், அரை நிஜாரில் ஓடும் ஆங்கிலேயர்களாக இருக்கட்டும், வெள்ளிக்கிழமை ஏன்டா வருகிறது என்று புலம்புவதாகட்டும், இவருக்கு வரும் இயல்பான நகைச்சுவை அபாரம்!  இவர் எழுதி நாளாச்சு, இந்தப் பதிவின் மூலமா அவர் எழுத்தைத் தொடர அழைக்கிறேன்.

பாத்ரூம் பாடகரும் எனது காலையும் - வெங்கட் நாகராஜ் அவர்களின் பதிவு.  சேவலுக்கு பதில் இவரது ஆல்ட்டர்னட் அலார்ம் என்னவென்று பாருங்கள்.

இந்தப் பதிவிற்காக நகைச்சுவைப் பதிவுகளைத் தேடு தேடு என்று தேடியதில், மிகச் சிலவே கிடைக்கின்றன.  பலர் நகைச்சுவை என்று எழுதினாலும், புத்தகத்தில் இருந்தோ, முகநூலில் இருந்தோ, வாட்ஸாப்பில் இருந்தோ எடுத்து ஜோக்ஸ் ஆகப் பதிந்திருக்கிறார்கள்.  அவற்றைத் தவிர்த்து, கிடைத்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் இன்று.  நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்!மேலும் வாசிக்க...

Tuesday, October 28, 2014

ஜெமோ (GMO) எனும் ஓரசுரன்

B.T.Tomato (கருப்புத் தக்காளி)
Photo Credit: Google
சமீபத்தில் பரவலாக‌ உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் மூன்றெழுத்து GMO (ஜெமோ).

'ஜெமோ'விற்குள் இறங்குமுன், பசுமைப்புரட்சி குறித்து சிந்தித்தல் நலம் பயக்கும்.  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் பாரத நாடே பஞ்சம் பட்டினியில் தவிப்பதைத் தவிர்க்க, அன்றிருந்த அரசியல் தலைவர்கள் வேளாண் வல்லுநர்களோடு இணைந்து இத்திட்டத்தைக் கொண்டு வந்ததாக அறிகிறோம்.

எல்லாத் துறைகளிலும் இருக்கும் Pros & Cons, 'ஜெமோ'விலும் இல்லாமலில்லை.  மரபணு மாற்று விதைகள், உயர்ரக‌ ரசாயணம், பூச்சிக் கொல்லிகள், மேலதிக மகசூல். இவை, இதன் சிறப்புக்களாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன.  இதெல்லாம் தேவையேயில்லை, இவை நம் மண்ணின் வளத்தை இன்றில்லை என்றாலும் நாளை குலைத்துவிடும் என்று இயற்கை வழி விவசாயிகள் போராடுகின்றனர்.

GMO உலகையே ஆட்டி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அமெரிக்காவின் மான்ஸான்டோ நிறுவனம், வித்திலிருந்து, விருட்சம் வரைக்கும் தன் கைகளுக்குள் வைத்திருக்கிறது.  ஏன்?  நாளைய விவசாயம் இவர்களிடம் எனும் நிலையும் ஓங்கி வருகிறது.

GMO நன்மையே என நவீன விஞ்ஞானமும், பண முதலைகளும் சொல்லிக் கொண்டிருக்க, மரபணு மாற்று காய்கனிகளால் மனிதனுள் பல மாற்றங்கள் ஏற்படுவதாக அடித்துக் கூறுகின்றனர் இயற்கை வழி விவாசயம் செய்யும் பலர்.  இது பல கேடுகளை விளைவித்து, நாளைய சமுதாயத்தை சத்தின்றி நடைபோட வைக்கும் என்றும் பதறுகிறார்கள்.  உதாரணத்திற்கு ஒரு காணொளி Seeds of death.  தயவுசெய்து நேரம் ஒதுக்கி கவனித்துப் பாருங்கள்.

GMO ஒரு புறம் எனில், ஊரே பீட்ஸா, நூடுல்ஸ், பர்கர் என்று இன்னொரு புறம். நமக்கு இன்னும் Non GMO குறித்த விழிப்புணர்வு போதவில்லை என்றே தோன்றுகிறது.  இது குறித்து நம் பதிவர்கள் என்ன நினைக்கின்றார்கள் எனத் தேடியதில் மிக சொற்பமான பதிவுகளே காணக்கிடைக்கின்றன.  அதுவும் ஒரு சில வருடங்கள் முன்னர் எழுதியவை.  இதோ ...

நடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: எம்.எஸ். சுவாமிநாதன் பேட்டி.  - அட்ரா...சக்க எனும் தளத்திலிருந்து.  இதில் பலரின் மறுமொழிகளும் சிந்திக்க‌ உகந்தவை.

பசுமை புரட்சி என்னும் மாய வலை - முத்துக்கிருஷ்ணன் அவர்களின் தளம்.  இவரைத் தொலைக்காட்சி நிகழ்சிகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்.  நன்றாகப் பேசக்கூடியவர்.

பசுமைப் புரட்சி..!!! - கலைவேந்தன் வடுவூர் தளத்திலிருந்து.  தான் எழுதியதல்ல எங்கேயோ படித்தது எனப் போட்டிருக்கிறார்.  இருப்பினும் வாசிக்க உகந்த பதிவு.

பசுமைப்புரட்சியின் உண்மைக் கதை - சங்கீதா ஸ்ரீராம் அவர்களின் தளத்திலிருந்து.  இவர் எழுதிய புத்தகத்திற்கு, எழுத்தாளர் 'ஜெமோ' அளித்த முன்னுரையின் ஒரு சிறு பகுதி ... "ஆகவேதான் சங்கீதா ஸ்ரீராமின் ‘பசுமைப்புரட்சியின் கதை’ என்ற இந்த நூல் எனக்கு என் வாழ்க்கையை விளக்கும் மிக அந்தரங்கமான, கொந்தளிப்பான ஒரு வாசிப்பனுபவமாக அமைந்தது. பசுமைப்புரட்சியைப்பற்றிய பெரும்பாலான ‘நவீனதொன்மங்களை’ இந்த நூல் மிக விரிவான ஆதாரங்களுடன் மறுக்கிறது. பசுமைப்புரட்சி நல்லது என்று இன்று கொஞ்சம் நிதானமான எவரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் ‘பசுமைபுரட்சிதான் இந்தியாவில் பட்டினியை இல்லாமலாக்கியது’ என்று சொல்வார்கள். ‘இப்ப அது எப்டி இருந்தாலும் அப்ப அது நன்மைக்காகத்தான் வந்திச்சி சார்’ என்பார்கள்"

பி.டி. கத்தரிக்காய் குறித்த பீதியும், அறிவார்ந்த விவாதமும் - GMOவிற்கு ஆதரவாக தனது கண்ணோட்டம் தளத்திலிருந்து ரவி ஸ்ரீநிவாஸ்.  பதிவை படிக்கவே ஆச்சரியமாக இருக்கிறது.  கண்மூடி நம்புகிறோமா நாமெல்லாம்.  நம்மாழ்வார், பாலேக்கர் செய்த செய்துவரும் பணியை எந்த ஆதாரத்துடன் இவர் மறுக்கிறார் எனத் தெரியவில்லை.  இருப்பினும் எல்லாவற்றுக்கும் ஒரு மாற்றுகருத்து இருக்கத் தானே செய்யும்.

GMOவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இயற்கை வழி விவசாயம் தான் சிறந்தது என்று போராடும்/போராடிய பாலேக்கர், நம்மாழ்வார் போன்றோரின் கருத்துக்களை சிந்திப்போமாக!

நம்மாழ்வாரும்,எஸ்.கே.ஸாலிஹூம் - நேர்வழி எனும் தளத்திலிருந்து அதன் ஆசிரியர், நம்மாழ்வார் அவர்களின் வானகத்திற்கு விஜயம் செய்ததை விவரித்திருக்கிறார்.

நன்றி!  நாளை வேறொரு பதிவினில் சந்திப்போம்!!
மேலும் வாசிக்க...

Monday, October 27, 2014

வணக்கம் கூறி ஆரம்பிப்பது உங்கள் ...


Photo Credit: Google
சீனா ஐயாவின் அழைப்பை, தனிமடலில் பார்த்து வியந்தேன்.  'மறுபடியுமா ?' என்று :)  சில ஆண்டுகள் முன்னர் வலைச்சர ஆசிரியப் பணிக்குப் பின் மீண்டும் அழைப்பு இப்பொழுது.  நன்றிகள் பல சீனா ஐயா!

இதற்கு முன்னர் இருந்த ஆசிரியர்கள் எல்லாம் கலக்கி சென்றிருக்க, அடிவயிற்றில் ஒரு பீதி வரத்தான் செய்கிறது.   அவர்கள் செய்து சென்ற அதே சிறப்பான பணியைத் தொடரவும், மற்றும் உங்களோடு ஒரு வார காலம் உரையாடவும் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திகொள்கிறேன்.  தங்கள் பேராதரவினை அடியேனுக்கும் வழங்குமாறு கேட்டு, எனது சுயதம்பட்டத்தில் இருந்து ஆரம்பிக்கிறேன் ஆசிரியப் பொறுப்பினை!

ஆரம்பத்தில் கவிதைகள் என்று எழுதி வந்ததெல்லாம் இன்று மீண்டும் வாசிக்கையில், அன்று என்னே ஒரு நகைச்சுவையுணர்வு நமக்கு என்று இன்று தோன்றியது :)) கவிதை கிறுக்கல் என்று சொல்லிக்கொள்வோம் :)

கதைகளும், கட்டுரைகளும், விரல்விட்டு எண்ணக்கூடிய சில இன்றைக்கு வாசிக்கையிலும் அன்றிருந்த அதே புத்துணர்வு மீண்டும் கிட்டியதில் மெத்த மகிழ்ச்சி.

இவற்றிலிருந்து சில சுட்டிகள் உங்கள் பார்வைக்கு ...நெல்லி மரம் ! - ஒரு 'நச்' திருப்பம் கொண்ட கதைப் போட்டிக்கு எழுதி அனுப்பியது. 'நச்' இன்னும் இருக்கும் என்று நினைக்கிறேன்!

கட்டழகி ... - இதுலயும் ஒரு 'நச்' திருப்பம் வைத்து எழுத எண்ணினேன், இருக்கிறதா என்று தான் தெரியவில்லை!

மெட்ரோ ... - ஜி.யு.போப் அவர்கள் தான் இக்கதைக்குத் தூண்டுகோல்

வீராப்பு - காளைக்கும் மனிதனுக்கும் உள்ள பந்தம்

அடை மழை ! - அம்மாவும் பெண்ணும் ஒரு அரைப்பக்கக் கதையில்

யோகம் பயில் - சமீபகால Status வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது.  வரவேற்கவேண்டியது!

பழமொழி 400 - நாம் இன்றைக்கும் பயன்படுத்தும் பல பழமொழிகள் எங்கிருந்து வந்தது என்ற தேடலில் கிடைத்தவற்றைப் பதிந்தது!

தமிழ்த் தாத்தா யார்? - யார் ?  அப்படி என்ன அவர் தமிழுக்குச் செய்தார் ?  என் சிற்றறிவுக்கு எட்டிய சில துளிகள்!

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை - தன்னை அறிதலின் தேடலில் விளைந்த சிறு துளிகள்!

தயிர்சாதம் (டே!) - பள்ளி கல்லூரி கால மதிய உணவு குறித்து யோசிக்கையில் விளைந்த பதிவு. இது அன்றைய நிலை. நல்ல வேளை, பீட்ஸா பர்கர் எல்லாம் அபோதில்லை :)

பாதயாத்திரைப் பயணம் - கண்டம் விட்டு கண்டம் கடந்த நம்முன்னோர் பயன்படுத்திய போக்குவரத்து மார்க்கம் நடராஜா சர்வீஸ் மட்டுமே. பின்னாளில் கலங்களும், சக்கர வாகனங்களும், ஊர்திகளும், விமானங்களும் என பரிணமித்தோம். இந்த அவசர யுகத்தில் நம்மால் எவ்வளவு தூரம் நடக்க முடியும் என்று செயல்பாட்டில் இறங்கியதில் இருந்து ...

போதுமென நினைக்கிறேன், இன்னும் ஒரு வாரத்துக்கு நீங்க இந்த பக்கம் வரவேண்டுமல்லவா :)

இறுதியாக,

2008 ல் வலைச்சர ஆசிரியப் பணியின் போது இட்ட‌ முதல் பதிவு

வலையும், வலைச்சரமும், நானும் !

அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அன்பான நன்றி!மேலும் வாசிக்க...

Sunday, October 26, 2014

குமார் - சதங்காவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சே.குமார்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சதங்கா   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

பெயர் சதங்கா, தற்போதைய வாசஸ்தலம் அமெரிக்கா.  பள்ளிக் காலத்திலிருந்தே இவருக்கு எழுத்தில்  ஆர்வம் உண்டு. இவருடைய 'வழக்கம்போல்' என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள்  எழுதி, 'ரிச்மண்ட் தமிழ் சங்கம்' தளத்திலும் எழுதி வருகிறார்.  யூத்ஃபுல் விகடன் வந்த சமயங்களில் இவரின் பல படைப்புகள் அவற்றில் பிரசுரமாகியிருக்கிறது.  அதீதம் இதழிலும், தென்றல் இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாகியிருக்கின்றன.  தற்போது அதிகம் எழுதுவதில்லை என்றாலும் தமிழ் மீது தீராத காதல் இவர்க்கு!

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  சதங்காவினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் குமார் 

நல்வாழ்த்துகள் சதங்கா 

நட்புடன் சீனா

 

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது