07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, September 19, 2007

வண்ண மாலை 1 - பக்தி மாலை

நம்பிக்கையா ? மூட நம்பிக்கையா ? என்ற ஆராயாமல் பார்த்தால் பக்தி கூட தன்னலமற்றது என்று சொல்ல முடியும். இறைவன் என்ற பெயருடன் தொடர்புபடுத்தி எல்லோரையுமே ஒரு குடும்பமாக அடக்கிவிட முடியும் என்று நினைப்பதால் பக்திக்கு மவுசு என்றுமே உண்டு. மதங்களை ஏற்படுத்திக் கொள்ளாவிட்டால், மதத்தின் பின்னால் நிற்காவிட்டால் பக்தியை குறை சொல்ல எவருமே தேவைபட்டு இருக்க மாட்டார்கள். எனவே மதம் என்ற ஒற்றை சொல்லுக்குள் கட்டிவைத்து சுறுக்குவதை தவிர்த்துப் பார்த்தால் பக்தி உன்னதமான உணர்வுதான். எல்லா மதங்களும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது என்பதை நிராகரித்தாலும் எல்லா மதமும் இறைத்தத்துவம் ஒன்றை வைத்துக் கொண்டிருக்கின்றன என்பதால் மதங்களைச் சாடும் போது கூடவே இறைவுணர்வையும் சாட வேண்டிய கட்டாயத்திற்கு மதநம்பிக்கைக்கு எதிரானவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

நான் பக்திக்கு எதிரானவன் அல்ல. மூடநம்பிக்கைக்கும், மதவெறிகளுக்கும் எதிரானவன் என்று சொன்னால் 'ஆம்' என்று சொல்வதில் தயக்கம் இல்லை. மதங்கள் காட்டும் இறைவனைத் தானே துதிக்கிறார்கள் என்று நினைத்தாலும் சிலரின் இறைவுணர்வு என்பது மதங்களைக் கடந்தே இருக்கிறது என்பதையும் அறிந்து அவர்களை பாராட்டுகிறேன். அதற்காகவே அவர்களுடன் தனிப்பட்ட நட்பும் கொள்கிறேன். அவர்களது மெய்சிலிர்பை வியந்திருக்கிறேன். பக்தியை அறியாமை என்று சொல்லிவிடவும் முடியாது எதோ ஒன்றின் பால் பற்று கொண்டு சகோதரத்துவத்திற்கு பாடபட முயல்கிறார்கள் என்றும் பக்தியை விட்டுவிட முடியாது என்பதால் சில சமயங்களில் மதநம்பிக்கைக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் என்று கடிந்து கொள்வதும் உண்டு. பக்தி அவர்களை சூழ்நிலை கைதியாக்கி வைத்திருக்கிறது என்று ஆறுதல் பட்டுக் கொள்வேன். மூடநம்பிக்கை முட்டுக் கொடுப்பவர்களிடம் உண்மையான பக்தி என்பது இல்லை என்பதையும், சிலர் மாற்றுமதக் நம்பிக்கையை தூற்றுவதையே தொழிலாக கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் இருப்பது பக்தி என்ற பெயரில் பகல் வேசம் போட்ட மதவெறிதான். நமது பதிவர்கள் பக்தி ரசம் சொட்ட சொட்ட எழுதுபவர்கள் அனைவருமே மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுப்பது இல்லை. அப்படி சில பதிவர்களின் சில இடுகைகளை பக்தி மாலை ஆக்கித் தருகிறேன். முதலில் பக்தி என்றால் பக்திதானே என்று நினைத்திருக்கிறேன். பின்பு நிறைய இடுகைகளை படித்ததும் தெரிந்தது இங்கும் சைவம் / வைணவம் என்று எல்லைக்குள் நின்று எழுதுகிறார்கள் சில சமயங்களில் மாற்றாகவும் எழுதுகிறார்கள்.


பெருமாளுக்கே கொசுவர்த்தி கொளுத்தி வைத்த பிரகலாதன் : நம்ம கே.ஆர்.எஸ் தாங்க அவர். எனக்கு தெரிந்து இவர் எவரையும் ஒரு சொல் கூட கடிந்து கொண்டதை படித்தது இல்லை. 2005ல் வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதாக ப்ரொபைல் சொல்கிறது. இவர் கோகுலத்தில் நுழைந்தது 2006ல் நிறைய காலடி தடங்களை பதித்தது போல் இடுகைகளை பதித்து இருக்கிறார். கே ஆர் எஸ் நிறைய வைணவ சார்பு இடுகைகளை இட்டிருந்தாலும் முருகன் பாடல்களை அவ்வப்போது நிறைய தகவல்களை தருகிறார். இவர் எழுதிய அனைத்துமே சிறப்பானவை தான். குறிப்பாக புதிரா புனிதாமா என்ற தலைப்பில் சிந்தனை தூண்டும் கேள்விகளுடன் சிறப்பாக எழுதி இருப்பார். திராவிட வேதம்! தமிழ் மறை நாதம்! படித்துப் பாருங்கள் சுவையாக இருக்கும். இவரின் தமிழ் மற்றும் வடமொழி, தெலுங்கு புலமைகள் இவரின் தனித் திறமையாகவே இருக்கிறது. இவரும் வைணவம் சார்ந்த பக்தி இலக்கியங்களையே பெருவாரியாக எழுதிக் குவிக்கிறார்.


பதிவர் சங்கர் குமார் (அ) விஎஸ்கே ஐயா : இவரைப்பற்றி பலருக்கும் தெரியும், நான் பதிவுலகில் நுழைந்த போது இவர் பதிவில் வைத்திருந்த முருகன் படம் வெகுவாக என்னை ஈர்த்தது, அதன் பிறகு அவரது பதிவுகளை படிக்க ஆரம்பித்ததும் தமிழ் இவரிடம் துள்ளிவிளையாடுவதை அறிந்து கொண்டேன். இவரது இடுகைகள் பெரும்பகுதி சைவம் சார்ந்த பக்தி பாடல்களுக்கு பொருள் விளக்கம் தருகிறார். குறிப்பாக திருப்புகழ் மற்றும் முருகன் தொடர்புடைய பாடல்கள், மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்கான பாடல்களை அந்தந்த திருநாளில் நினைவு வைத்து எழுதிப் போடுகிறார். பிராமணராக இருந்தாலும் பிராமண சங்கத்தில் சேராது , அமெரிக்க தமிழ்ச்சங்கத்தில் நான்கு ஆண்டுகள் தலைமை பொறுப்பேற்று இருக்கிறார்.இசைஞானியின் திருவாசகம் உருவாக முதன்மை பங்காற்றி பொருள் செலவில் கையை சுட்டுக் கொண்டு இருக்கிறார் :). எனது நண்பர் என்பதால் இதற்கு மேல் சொன்னால் புகழ்ச்சியாக போய்விடும் :)

பதிவர் குமரன் : வலைப்பூக்களை மலைப்பூக்கள் அளவுக்கு பூக்க வைத்து ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட தனித்தனி வலைப்பூக்களை வைத்திருந்து வகைப்படுத்தி இவர் எழுதுவதைப் படிக்கும் போது வியப்பு வருகிறது. இவர் ஒரு கதை சொல்லியும் கூட, சிறிய கதைகள் மூலம் பக்தி இலக்கியங்களை எளிதில் விளங்க வைப்பவர். இவர் 90 விழுக்காடு வைணவம் பற்றிய பாடல்களுக்கு விளக்கம் சொல்லி வருகிறார். தமிழ் ஆர்வலர் என்ற வரிசையில் இவருகென்று தனி இடம் உண்டு. பின்னூட்டங்களுக்கு மிக தெளிவாக இவர் மறுமொழி இடுவதை பலநேரங்களில் பார்த்து வியந்திருக்கிறேன்.

ஞான வெட்டியான் ஐயா : உடல்நிலையையும் பொருட்படுத்தாது,, சித்தர் பாடல்கள் பலவற்றை ஆவனப்படுத்தி அவற்றிற்கு எளிய விளக்கங்களை கொடுத்து இருக்கிறார்.

பதிவர் ஜிராகவன் : வலையுலக வாரியார் என்றே இவருக்கு மற்றொரு பெயர் இருக்கிறது, இளைஞர் முற்போக்கான கருத்துக்களை எவருக்கும் பயமின்றி எடுத்து சொல்லும் நக்கீரர். நாளும் திருநீறு அணிந்ததலும் 'மாட்டு சாணி என்றாலும் அதுவும் ஒரு மலம் தானே' என இவர் அண்மையில் விடுத்த அதிரடி பின்னூட்டம் வியப்பில் ஆழ்த்தியது. முருகன் பாடல்களை மிக அழகாக இலக்கிய கட்டுரையாக்குவதை படித்து மகிழ்ந்திருக்கிறேன். இவரின் தமிழ்பற்றும் என்னை நெகிழ்வுறச் செய்கிறது. வழிபாட்டு முறைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு மாற்றம் ஏற்பட வேண்டும் வெளிப்படையாக கருத்து சொல்லுபவர் .

மற்ற பதிவர்களான வெட்டிப்பயல் பாலாஜி, பாதிவுலக பித்தாநன்ந்தா நாமக்கல் சிபி மற்றும் மதிப்பிற்குறிய சுப்பையா வாத்தியார் ஐயா போன்றோரும் பெண்களில் குறிப்பாக கீதா சாம்பசிவம் அம்மாவும், சித்திர ராமாயணம் வழங்கிய வல்லி சிம்ஹன் அம்மாவும் சிறப்பாக ஆன்மிக பதிவர்களாக உலா வருகிறார்கள்.


இந்து மதம் தவிர்த்து பிற பக்தி மாலைகள் கடந்த ஓராண்டில் குறிப்பிடதக்க அளவில் பதிவில் இடம் பெறவில்லை. மாற்று மதத்து சகோதரர்கள் அவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.

11 comments:

  1. இறையுணர்வு பற்றியும் ,பக்திப் பதிவுகளைப் பற்றியும் சிறப்பாக
    ஆய்வு செய்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

    எல்லா ஆறுகளும் கடலை நோக்கித்தான் செல்கின்றன. ஆறுகளுக்குப் பல பெயர்கள் உள்ளன. கடலை அடைந்தவுடன் அவைகள் தங்கள் அடையாளத்தை இழந்துவிடும்.

    இறைவன் ஒருவன்தான். அவரவருக்குத் தெரிந்த வழிகளில் அவரை வழிபடுகிறோம்.

    அத்தனை மதங்களுமே ஆறுகளைப் போன்றவைதான்
    இறைவன் என்னும் கடலை நோக்கித்தான் அத்தனை
    ஆறுகளுமே பயணிக்கின்றன!

    SP.VR.சுப்பையா

    ReplyDelete
  2. காலைல நெட்ல உக்கார முடியாம இருக்கு. அதோட பலன்...ஒங்க பதிவு உட்பட பல பதிவுகள் கண்ணுல படாமப் போயிருது. இன்னைக்குப் பிடிச்சாச்சு.

    பக்திங்குற சொல்லுக்கும் அன்புங்குற சொல்லுக்கும் வேறுபாடு கிடையாது. ஆனா பக்தீங்குறதப் பயம்னு புரிஞ்சிக்கிறப்பதான் பிரச்சனையே வர்ரது. அத மக்கள் மனசிலிருந்து எடுத்துட்டாலே போதும்.

    ரவியைப் பத்தி என்ன சொல்றது. அவரோட பதிவுல சண்டை போடுறதே நானாத்தான் இருக்கும். :))) அவ்வளவு அழகாச் சொல்வாரு.

    வி.எஸ்.கே அவர்களைப் பத்திச் சொல்லனுமா? திருப்புகழ்த் தேனைத் தெளிய எடுத்துத் தரும் தேனீ.

    குமரன் எதைத் தொடலைன்னு எனக்குத் தெரியலை. எத்தனை நூல்கள்.. எத்தனை பதிவுகள்.

    ஞானவெட்டியான் ஐயாவின் பதிவுகளும் விரும்பிப் படிக்கின்றவையே. புதுப்புதுத் தகவல்கள் கிடைக்குமே.

    வெட்டிப்பயலை மற்ற ஆன்மீகப் பதிவர்கள் லிஸ்டில் சேர்த்ததைக் கண்டிக்கிறேன். :) அவர் ஒரு ஆன்மீகச் செம்மல். என்னைப் பலமுறை கேள்வி கேட்டு யோசிக்க வைத்திருக்கிறார். அவர் ஒரு பக்திமானும் கூட.

    சிபி தொடங்கி வைத்த முருகன் பாட்டுகளையும், சுப்பையா ஐயா, கீதாம்மா, வல்லீம்மா ஆகியோரின் பதிவுகளையும் கண்டிப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  3. சுப்பையா ஐயா,
    உங்கள் கருத்து ஏற்புடையதே...!

    //அத்தனை மதங்களுமே ஆறுகளைப் போன்றவைதான்
    இறைவன் என்னும் கடலை நோக்கித்தான் அத்தனை
    ஆறுகளுமே பயணிக்கின்றன!//

    ஆறுகள் எல்லாமும் கூவமாக மாறி கடலையும் அசுத்தப்படுத்துவதுதான் ஏற்கமுடியாததாக இருக்கிறது.
    :)

    ReplyDelete
  4. //G.Ragavan said...
    காலைல நெட்ல உக்கார முடியாம இருக்கு. அதோட பலன்...ஒங்க பதிவு உட்பட பல பதிவுகள் கண்ணுல படாமப் போயிருது. இன்னைக்குப் பிடிச்சாச்சு.
    //

    ஜிரா,

    படிச்சதும் இல்லாம அருமையாக கருத்தும் சொல்லிட்டிங்க... இன்னும் சில பக்தி மான்கள் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. அவர்கள் என்னை பொருத்தருள்க என்று இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

    நன்றி !

    ReplyDelete
  5. வலைச்சர வண்ணமாலை தொடுத்து
    வளாமான பலபதிவர் நடுவே
    எனக்கும் ஓர் இடம் கொடுத்து
    என்னையும் சிறப்பித்தது
    என்னே உந்தன் மாண்பு!

    மிக்க நன்றி, கோவியாரே!

    அலுவலில் தமிழ்மணம் பக்கம் வரமுடியாமல் தடுத்து இருக்கிறார்கள்.

    அதனால், இப்ப்பதிவை உடனே பார்க்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வலைச்சரம் தங்களையும் கோர்த்து தனக்குப் பெருமை தேடிக் கொண்டிருக்கிறது.
    வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. கோவி. கண்ணன்,

    தங்களின் அன்பான சொற்களுக்கு நன்றி.

    திருவாசகம், அபிராமி அந்தாதி, முருகனருள், திருநீற்றுப்பதிகம், கோளறுபதிகம், சகலகலாவல்லிமாலை, கற்பூர நாயகியே கனகவல்லி, லிங்காஷ்டகம் போன்ற வைணவம் அல்லாத அடியேன் பதிவுகளையும் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். 90% வைணவம் என்பது இவற்றைச் சேர்க்காமல் என்றால் சரி. :-)

    ReplyDelete
  7. அன்பு கோவி!

    நான் கீழே கொடுத்துள்ள உரல் காயத்ரி எழுதிய குறுந்தொகை பற்றியது!

    http://gayatri8782.blogspot.com/2007/09/2.html

    எனக்கு மிகவும் பிடித்தது உடன் உங்கள் நினைவும் , அன்பர் VSK, குமரன் மற்றும் ஜி.ரா ஆகியோரின் நினைவும் வந்தது நிச்சயம் இது அவர்களின் கண்ணிலும் படும்,
    (உங்கள் பதிவு இன்னும் படிக்கவில்லை படித்து பின்னூட்டுகிறேன்)


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  8. //நான் பக்திக்கு எதிரானவன் அல்ல. மூடநம்பிக்கைக்கும், மதவெறிகளுக்கும் எதிரானவன் என்று சொன்னால் 'ஆம்' என்று சொல்வதில் தயக்கம் இல்லை. //

    நானும் பலமுறை கண்டிருக்கின்றேன்,
    பக்தி உணர்வு பற்றிய தங்களின் பதிவு அருமை!


    ஜி.ரா சென்ன அனைத்துக் கருத்துக்களுக்கும் ஒரு ரிப்ப்ப்ப்பீட்டே!


    அன்புடன்...
    சரவணன்.

    ReplyDelete
  9. //VSK said...
    வலைச்சர வண்ணமாலை தொடுத்து
    வளாமான பலபதிவர் நடுவே
    எனக்கும் ஓர் இடம் கொடுத்து
    என்னையும் சிறப்பித்தது
    என்னே உந்தன் மாண்பு!

    மிக்க நன்றி, கோவியாரே!

    அலுவலில் தமிழ்மணம் பக்கம் வரமுடியாமல் தடுத்து இருக்கிறார்கள்.

    அதனால், இப்ப்பதிவை உடனே பார்க்க முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வலைச்சரம் தங்களையும் கோர்த்து தனக்குப் பெருமை தேடிக் கொண்டிருக்கிறது.
    வாழ்த்துகள்!
    //

    விஎஸ்கே ஐயா,

    பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவது, மாற்றுகருத்து சொல்ல வேண்டிய இடத்தில் மாற்றுகருத்து சொல்வது என்பது எனது கொள்கை. :)

    இது நினைவு கூர்ந்து பாராட்ட வேண்டிய இடம். எனவே எனது வலைச்சரத்தில் நீங்கள் இல்லையென்றால் மணக்காது.

    தாமதமாக வந்தாலும் மறக்காமல் கருத்து தெரிவித்தற்கு நன்றி.

    ReplyDelete
  10. //குமரன் (Kumaran) said...
    கோவி. கண்ணன்,

    தங்களின் அன்பான சொற்களுக்கு நன்றி.

    திருவாசகம், அபிராமி அந்தாதி, முருகனருள், திருநீற்றுப்பதிகம், கோளறுபதிகம், சகலகலாவல்லிமாலை, கற்பூர நாயகியே கனகவல்லி, லிங்காஷ்டகம் போன்ற வைணவம் அல்லாத அடியேன் பதிவுகளையும் பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். 90% வைணவம் என்பது இவற்றைச் சேர்க்காமல் என்றால் சரி. :-)
    //

    குமரன்,
    மீதம் 10 விழுக்காட்டை நான் அறிந்திருக்கிறேன். அது நீங்கள் மேற்சொன்னவைதான். :)

    ReplyDelete
  11. //உங்கள் நண்பன்(சரா) said...
    //நான் பக்திக்கு எதிரானவன் அல்ல. மூடநம்பிக்கைக்கும், மதவெறிகளுக்கும் எதிரானவன் என்று சொன்னால் 'ஆம்' என்று சொல்வதில் தயக்கம் இல்லை. //

    நானும் பலமுறை கண்டிருக்கின்றேன்,
    பக்தி உணர்வு பற்றிய தங்களின் பதிவு அருமை!


    ஜி.ரா சென்ன அனைத்துக் கருத்துக்களுக்கும் ஒரு ரிப்ப்ப்ப்பீட்டே!


    அன்புடன்...
    சரவணன்.
    //

    சரா,
    மிக்க நன்றி.

    நீங்கள் குறிப்பிட்ட மேல் சுட்டியை இன்னும் படிக்கவில்லை. படித்துவிட்டு அங்கேயே கருத்து சொல்வேன்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது